அந்த நாள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 3,926 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மல்லிகா காலண்டரைப் பார்த்தாள்.

1960 மே மாதம் பன்னிரண்டாம் தேதி.

ஒருவாரக் கப்பல் பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் அடியெடுத்து வைத்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. பயணக் களைப்பு இப்பொழுது இல்லை;

ஆனால் மனத்தில் களைப்பு இருக்கிறது. இருக்கிறது.

கப்பல் ஏறி கடல்கடந்து சிங்கப்பூருக்கு வருவோம் என்று மல்லிகா நினைத்துப் பார்த்தவள் அல்ல. அப்படி ஒரு கனவோ கற்பனையோ கடந்த காலத்தில் அவள் மனத்தில் தலை காட்டியதே இல்லை.

புரவியில் ஏறி போர்க்கொடி ஏந்திக்களத்திற்குச்சென்ற சில வீரப் பெண்ணரசிகளைப் பற்றிப் படித்திருக்கிறாள் ஆதிரியை என்ற முறையில் அவர்களைப் பற்றி பாடம் சொல்லித் தந்திருக்கிறாள். இப்பொழுது அவள் கப்பலேறி வந்தது கூட ஒரு தீரச் செயல் தானோ?

வீர தீரம் என்று சொல்லிக் கொள்ள மல்லிகாவின் மனம் கூசியது, லட்சியவேகம் அல்லது தாகம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

மல்லிகாவின்இந்தப்பயணத்தில் லட்சியம்புதைந்திருக் கிறது. இருபது வயதே நிரம்பிய இளம்ஆசிரியை என்றாலும் அவளிடம் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகம் என்று சூழ்ந்திருந்தவர்கள் பாராட்டுவது உண்டு.

புதிய இடத்தில் அதெல்லாம் பலிக்குமா?

பெரியவர் ஆறுமுகத்தோடு மல்லிகா நாகப்பட்டினத் தில் கப்பலேறியபோது வழியனுப்ப வந்தவர்கள் வாய் வார்த்தையின்றி அழுதழுது கண்ணைக் கடலாக்கிக் கொண்டார்கள்.

அவர்களை அவள்தான் தேற்ற வேண்டியிருந்தது “மாமாவின் கடைசி ஆசையை நான் நிறைவேற்ற வேண்டாமா? அந்த ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்க வேண்டாமா? கோடை விடுமுறையில் தானே போகிறேன். வேலை முடிந்தால் திரும்பி வந்துவிடமாட்டேனா? இதற்குப் போய் அழுது வெடித்தால் எப்படி?” என்று அத்தனை பேரையும் தேற்றியபடி பயணத்தைத் தொடங்கினாள்.

ஆறுமுகம் ஆதரவாகப் பேசி அவர்களை அமைதிப் படுத்தினார். அவருடைய வங்குசா கடைக்குப் பின் வீட்டில் மல்லிகாவுக்கு வசதியாக இடம் ஒதுக்கித் தந்திருந்தார். “மல்லிகா இரண்டொரு நாளில் ஆக வேண்டியதைச் செய்து விடலாம் ஆளுக்கு ஆள் சொல்லி வைத்திருக்கிறேன். இந்தச் சிங்கப்பூரில் அவன் எந்த மூலையில் இருந்தாலும் கண்டு பிடித்துவிடலாம். நீ அவனைப் பார்க்கத்தான் போகிறாய்- கவலைப்படாதே, மகளே!” என்று இங்கு வந்த நிமிடத்திலிருந்து ஆறுமுகம்ஆறுதலாக உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சவாலான ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறாள் மல்லிகா.

மரணசாசனம் போல் கடைசி நேரத்தில் வேதாசலம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பக்கம் பக்கமாக எழுதிக்கொடுத்த குறிப்பை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாள். அதை உரிய வனிடம், உறவு முறைக்காரனிடம் அவள் சேர்க்கவேண்டும்.

அது முடியுமா? நடக்குமா?

ஒருமாதமோ ஒன்றரை மாதமோ கோடை விடுமுறை முடிவதற்குள் அந்தக் கடமையை முடித்துவிட்டுப்போகும் வைராக்கியத்தில் மல்லிகா வந்திருக்கிறாள்.

“அம்மா, மல்லிகா…சிங்கப்பூரில் நம்மவர்கள் மத்தியில் என் பெயரைச் சொன்னால் போதும் மதிப்பு மரியாதைக்கு குறைவில்லை மொழி, கலாசாரம், நல்ல காரியம் என்று எதிலும் முன்னால் நின்றவன் நான். யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். அப்படிப்பட்ட எனக்கு மாறாத, மறையாத அவப்பெயரையும் களங்கத்தையும்ஏற்படுத்திவிட்டான், நான் பெற்ற பிள்ளை மணிவாசகனை லட்சியவாதியாக வளர்த்து ஆளாக்க நான் எவ்வளவோ பாடுபட்டேன்… ஆனால் சமூக விரோதியாகத் தலையெடுத்தவன் தலைமறைவாகிவிட்டான்.

“தமிழைப்பரப்பிக்கொண்டிருப்பவரின்பிள்ளை தான் தோன்றியாக, தறுதலையாகப் போய்விட்டானே என்று அங்கே பேச ஆரம்பித்தார்கள். தறிகெட்டுப் போய்விட்டது என் மனம். அந்தச் சமயத்தில்தான் உன் அத்தை மரணப் படுக்கையில் கிடைக்கும் செய்தி வந்தது…” என்று கடந்த கால நடப்புகளைத் தங்கை மகள் மல்லிகாவிடம் மறைக்காமல் சொன்னார் வேதாசலம்.

அவருடைய சரித்திரம் சிங்கப்பூர் இந்தியர்களுக்கும் பிற சமூகத்தினர் யாவருக்கும் தெரியும் ஆயிரத்து தொள்ளா யிரத்து முப்பதுகளில் சிங்கப்பூர் மண்ணில் அடியெடுத்து வைத்தார். நல்ல காளைப் பருவம் அப்பொழுது.

இளமையிலேயே பொதுநலம் சமூக சேவை, மொழி, கலாசாரம் என்ற ஆர்வம் வேதாசலத்திற்கு. சிராங்கூன், தஞ்சோங் பகார், செம்பவாங் என்று அநேகமாக எல்லாவட்டாரங்களிலும் சில வருடங்களில் செல்வாக்கை நிலைநாட்டிக் கொண்டுவிட்டார். சிலிகி ரோடிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தமிழ்ப் பத்திரிகையுடன் வேதாசலத்திற்குத் தொடர்பு அதிகம். பெரும்பகுதி நேரத்தை அங்கு செலவிடுவார். அத்துடன் தமிழ் வகுப்புகளை நடத்துவதில் அதிக நேரத்தை ஒதுக்கியிருந்தார்.

பலவருட சிங்கப்பூர் வாழ்க்கைக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பவேண்டிய கட்டாயம். நெருக்குதலுக்குப் பணிந்து ஊருக்குப் போன வேதாசலம் மாப்பிள்ளையானார் முன்னேற்பாடாக எல்லாவற்றையும் செய்து வைத்திருந்தார்கள். மணப்பெண் மீனாட்சியை அவருக்கு ஏற்கெனவே தெரியும். தனக்கு இலட்சிய மனைவியாக அவள்இருப்பாள் என்பதில் அவருக்குப் பூரண நம்பிக்கை.

மணவாழ்க்கை வசந்தமாகத் தொடங்கியது அதே சமயம் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை வேதாசலத்திற்கு. இளம் மனைவியிடம் ஒரு நாள் மனம் விட்டு விவாதித்தார்.

தன்வாழ்க்கை சிங்கப்பூரை மையமாகக் கொண்டு விட்டதால் மீனாட்சியும் தன்னுடன் புறப்பட்டு வந்து விட வேண்டும் என்றார் அவர் உடனடியாக அவள் சொல்லத் தயங்கினாள்.

பெரியவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது மீனாட்சியின் எண்ணம்.

“உன் ஆசை நியாயமானது தான். ஆனால் வீட்டில் ஓசை கொடுத்தார் வேதாசலம்.

போதைக்கு அது ஆகக்கூடிய தல்ல. கர்ப்பமாக இருக்கும் பெண்ணைக் கடல்கடந்து அழைத்துக்கொண்டு. போய் உன்னால் கவனித்துக் கொள்ள முடியாது தலைப்பிரசவம் இங்கு நடப்பதுதான் நல்லது…வேண்டுமானால் பிறகு அழைத்துக் கொண்டு போயேன்…” என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்கள்.

வேதாசலத்திற்குக் கொஞ்சம் அதிர்ச்சி. ஆனால் மறுபுறம் மகிழ்ச்சி. தந்தையாகப்போகிறோம் என்ற ஆனந்தம். பெரியவர்கள் சொல்வது முறையானதுதான். மனைவியையும் மகனையும் ஒரு சேர சிங்கப்பூருக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டார். மகன்தான் பிறக்கப் போகிறான் என்ற நம்பிக்கை அவருக்கு.

மீனாட்சியின் பேறுகாலம் வரை இருந்துவிட்டுப் போகும்படி வீட்டில் வற்புறுத்தினார்கள். வேதாசலத்திற்குப் பொறுமை இல்லை.“வேலைகளை அப்படியப்படியே போட்டு விட்டு வந்திருக்கிறேன். நான்இல்லாமல்அங்கே பல கடமைகள் முடங்கிப் போயிருக்கும் மேலும் சுணங்கினால் அவரவர்கள் தேட ஆரம்பித்து விடுவார்கள்” என்று சமாதானம் சொல்லிவிட்டுச் சிங்கப்பூருக்குக் கிளம்பிவிட்டார்.

மகன் பிறந்த செய்திவந்தது.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் வேதாசலம் மணிவாசகன் என்று பெயர் வைக்கச் சொல்லிக் கடிதம் எழுதினார் “பெயர் வைத்தாயிற்று, பிள்ளையைப் பார்க்க எப்பொழுது வரப்போகிறீர்கள்?” என்று மீனாட்சி கேட்டு எழுதினாள்.

அதற்கு முறையாகப் பதில் எழுத முடியாதபடி பொது நலப்பணிகள் வேதாசலத்தைச் சூழ்ந்து கொண்டுவிட்டன. இந்தமாதம், அடுத்தமாதம் என்று பயணம் புறப்பட எத்தனையோ முறை முயன்றார் திட்டம்தள்ளிக்கொண்டே போயிற்று

ஆறுவருடம் போன வேகம் தெரியவில்லை மனைவி யையும் மகனையும் பார்ப்பதற்குக் கப்பலேறினார், வேதாசலம் மனத்தில் அலைமோதும் ஆவல். மகனைப்பற்றி ஆயிரம் கற்பனைகள் இலட்சியவாதியாக மணிவாசகனை உருவாக்க வேண்டும்; தலைவனாக மகன் தலையெடுக்கவேண்டும். கலாசாரக் காவலனாக அவன் நிமிர்ந்து நிற்கவேண்டும்…

ஒரு தந்தையின் நியாயமான ஆசைகள்தான் நிறைவேற்ற வழி திறந்திருக்கிறது. விருப்பம் போல் மகனை வளர்த்து ஆளாக்கும் நோக்கத்தில் அவனையும், தன் மனைவியையும் சிங்கப்பூருக்கு அழைத்துவரும் திட்டத்தில் வேதாசலம் ஊர் சென்றடைந்தார்.

மழலைப்பருவத்தைத் தாண்டி ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் பிராயத்தில் இருந்தான் மணிவாசகன் பாலர் பாடப்புத்தகங்களுடன். காட்சி தந்த மகனைப் பார்த்து பூரித்துப் போனார் வேதாசலம்.

இதுதான் சரியான பருவம் சிங்கப்பூரில் தமது காணிப்பில் ஒரு நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டால் பையன் அறிவாளியாகப் பெயரெடுத்து விடுவான் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது அவருக்கு.

வேதாசலம் பயணத்திற்கு அவசரப்படுத்தினார், மீனாட்சியை. மாமனார் குடும்பத்தில் சுபகாரியங்களும், பாகப்பிரிவினை, பரிவர்த்தனை என்று சில வேலைகளும் காத்திருந்ததால் வேதாசலத்தை யாரும் விடுவதாக இல்லை.

இரண்டு மூன்று மாதங்கள் நகர்ந்தன மகனும், மனைவியும் அருகில் இருந்ததால் சிங்கப்பூர் வாழ்க்கையை மறந்திருந்தார். ஒரு வழியாகக் குடும்பக் கடமைகள் முடிந்து மனைவியைப் பயணத்திற்குத் தூண்டிய போது, வாயும் வயிறுமாக இருக்கும்பெண்ணை கப்பலில்அழைத்துப்போக வேண்டாம் என்று ஆட்சேபக் குரல்.

அதிர்ந்து போனார் வேதாசலம் மீனாட்சி மீண்டும் தாயாகப் போகிறாளா? இந்தமுறை ஒருபெண் பிறக்கப் போகிறாளா? விழித்தார்ஆசாமி மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் மனைவியை ஊரிலேயே விட்டு விட்டு மறுபடியும் தனியாளாகத் திரும்பிச் செல்லவேண்டுமா?

வாதிட்டுப் பார்த்தார் வழக்கம்போல் பெரியவர்கள் அணை போட்டுவிட்டார்கள், வேறுவழியில்லாததால் ஒரு சமரச ஏற்பாட்டுக்கு வந்தார் “மீனாட்சி வேண்டுமானால் பிறகு சிங்கப்பூருக்கு வரட்டும். மணிவாசகனை கையோடு அழைத்துப் போய்விடுகிறேன் என்பார்வையில் வைத்திருந்து அவனுக்குப் படிப்புச் சொல்லித் தரவேண்டும்” என்றார் வேதாசலம்.

எதிர்ப்பு இருந்தாலும் அவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை எண்ணப்படி மகனை அழைத்து வந்து விட்டார் செல்லப்பிள்ளையாக சிங்கப்பூரில் வளரத் தொடங்கினான் மணிவாசகன் வேதாசலத்தின் பொதுப்பணியும் தடையில்லாமல் தொடர்ந்தது.

எவ்வளவோ நடந்துவிட்டன. இப்பொழுது எல்லாமே பழங்கதை மல்லிகா அவற்றை அசைபோட்டுப் பார்க்கிறாள். வேதாசலம் அவளிடம் எதையும் மறைக்கவில்லை.

ஒரு புதிய அத்தியாயம் மல்லிகாவைக் கொண்டு தொடங்கும் என்ற நம்பிக்கையுடன், நப்பாசையுடன் தம் காலத்தை முடித்துக் கொண்டுவிட்டார் வேதாசலம்.

மல்லிகா காலண்டரைப் பார்த்தாள்.

1960 மே மாதம் பதினைந்தாம் தேதி சில நாட்களாகக் காத்திருந்து களைப்பு ஏற்பட்டுவிட்டது.

சோர்ந்து விடவேண்டாம் என்று ஆறுமுகம் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இடையிடையே அவள் வெளியிடங்களுக்குப் போய் வர ஏற்பாடு செய்தார் பூமலை, டைகர்பாம்கார்டன் என்று பார்க்க வேண்டிய இடங்களுக்கு மற்றவர் துணையுடன் மல்லிகாவை அனுப்பி வைத்தார்.

ஆயினும் அவள் மனம் அவற்றில் ஒட்டவில்லை.

மணிவாசகனைப் பற்றிய தகவல் கிடைக்குமா என்ற கேள்விதான் மனமெல்லாம் ஒப்படைக்க வேண்டிய புதையலைச் சுமந்து கொண்டிருப்பது போன்ற உணர்வின் அழுத்தம் அவளுக்கு.

அந்த அளவுக்கு வேதாசலம் மல்லிகாவிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் இல்லாத ஒருவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிவைப்பது புனிதமான ஒரு கடமை. ஆசிரியையான அவளுக்குத் தார்மீக நியாயங்கள் தெரியும்.

மணிவாசகனை வேட்டையாட ஆறுமுகம் விரிவான வலையை விரித்திருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியாதது அல்ல. நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே அறையில் உட்கார்ந்திருக்கும் மல்லிகாவின் மனத்தில் படச்சுருள் விரிகிறது.

“மணி… மணி… மணி!”

மணிவாசகனை எல்லோருமே இப்படித்தான் அழைத் தார்கள். சீனர்கள், அக்கம் பக்கத்து மலாய்க்காரர்களுக்கு அப்படி அழைப்பதுதான் சுலபமாக இருந்தது. வேதாசலம் ஆட்சேபிக்கவில்லை தம்பிள்ளையிடம் மற்றவர்கள்காட்டும் அன்பைக் கண்டு அகமகிழ்ந்து கொண்டிருந்தார்.

சீக்கிரத்திலேயே சில திருப்பங்கள்.

மணிக்கு நண்பர்கள் நிறையபேர் கிடைத்து விட்டார்கள். சீனப்பிள்ளைகள்பலர்அவனை எப்பொழுதும் மொய்த்தார்கள். போகிற போக்கைப் பார்த்தால் பையன் சீனமொழியை வெகுவிரைவில் கற்றுக் கொண்டு விடுவானோ என்று வியந்து கொண்டிருந்தார் வேதாசலம்.

மகனின் வளர்ச்சியைப் பார்த்து மனைவியும் மகிழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாயிற்று.

அந்த ஆசை நிராசையாகி விடும் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லை.

மகளின் பிறப்பை எதிர் பார்த்திருந்தவருக்கு மரணச் செய்தி வந்தது, பிறந்த குழந்தை இறந்துவிட்டது.

தாயைக் காப்பாற்ற முடிந்ததில் நிம்மதி. நடந்து போனது கடவுள் சித்தம் என்று ஒரு வழியாக அவரைச் சாந்தப்படுத்தும் கடிதம் வந்தது தேற்றிக் கொண்டார்.

மீனாட்சியின் நலத்திற்கு அவ்வப்போது எழுதிக் கேட்டுக் கொண்டார். நோய், நொடி, என்று சதா ஓய்ந்து போய்விடுகிறாள் என்று ஊரிலிருந்து எழுதியபடி இருந்தார்கள்.

சோர்வும் விரக்தியும் சூழ்ந்தாலும் அவர் இங்கே சுறுசுறுப்பாகத் தமது சமூக, கலாசாரப் பணிகளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

மீனாட்சியை தாமதிக்காமல் அழைத்து வந்து வேண்டும் என்ற யோசனை வலுத்தது. மகன் அருகில் இருந்தால் மனைவிக்குத் தெம்பு வரலாம் என்ற நம்பிக்கை அவருக்கு.

மணியை நண்பர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு மனைவியை அழைத்துவரும் நோக்கத்தில் கப்பலேறினார் வேதாசலம்.

போன இடத்தில் நம்பிக்கை பொடிபட்டுப் போயிற்று. மீனாட்சி துவண்டு போயிருந்தாள். வாளிப்பான உடல்வாகு அவளுக்குத் திரும்புமா? மனத்தைக் குடைந்தது கேள்விச் சரம்.

இடம் மாறினால் உடல்தேறலாம் என்று எடுத்துச் சொன்னார் எதிர்ப்பு அதிகரித்தது.

நாட்டுவைத்தியம்கைப்பாகமான பத்தியம், கட்டுப்பாடு வேண்டும். கிராமத்திலேயே மீனாட்சி இருந்தால்தான் நல்லது என்று வைத்தியரும், குடும்பக் குடிபடைகளும் ஒருமித்த குரலில் முழங்கிய போது வாயடைத்துப் போய்விட்டார் வேதாசலம்.

ஓரிரு மாதம் தங்கியிருந்தார்.

மணியின் நினைவு வாட்டியது. தம் பார்வையில் இல்லாமல் அவன் எப்படி இருப்பானோ என்ற கவலை வந்துவிட்டது.

திரும்பிவிட்டார். கால ஓட்டத்தை சக்கரச் சுழற்சிக்கு உவமை சொல்லியிருப்பது எவ்வளவு பொருத்தம்!

வேகமாக ஆண்டுகள் ஓடிவிட்டன.

விடலைப் பிள்ளையாக வளர்ந்துவிட்டான் மணி என்கிற மணிவாசகன்.

அதேவேளையில் மீனாட்சிக்கு வளர்ச்சி வயதில் மட்டுமே; உடலில் உச்சக்கட்டத் தளர்ச்சி. சொல்லப் போனால் அவள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள் கிராமத்தில்.

நாளாவட்டத்தில் இருமுனைத் தாக்குதல், வேதாசலத்திற்கு.

ஊரில் படுக்கையில் விழுந்து விட்ட மனைவியைப் பற்றிய கவலை அரிக்க ஆரம்பித்தது.

அதே சமயம் மணியைப் பற்றிய மன அழுத்தம்.

விடலையாக வளர்ந்து விட்டவன் விட்டேற்றியாக இயங்க ஆரம்பித்து விட்டான்.

“வேதாசலம், உங்கள்பெயரைப்பையன்ஒரேயடியாகக் கெடுத்துவிடுவான் போலிருக்கிறதே?” என்று சில நண்பர்கள் அவரிடம் சொல்லிக் காட்டத் தொடங்கினார்கள் அவன் பேச்சும், நடப்பும், வித்தியாசப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டினார்கள். இன்னின்ன குழுக்களில்குழ்பல்களில் அவன் காணப்படுகிறான் என்று எச்சரிக்கப்பட்டார் வேதாசலம்.

அவற்றை ஒதுக்கித்தள்ள அவரால் முடியவில்லை

மணியின்வயது அப்படிப்பட்டதுதான்அவன்திறமை சாலியாக வளரவேண்டும் என்ற ஆசையில் சுதந்திரம் கொடுத்துச் சகவயதுப் பிள்ளைகளுடன் இனம், சமூகம், மொழி என்று பேதம் பாராமல் பழக விட்டவர் அவர்தான். அதில் தவறு இல்லை. தடம் மாறிப் போகாமல் அன்றாடம் மகனை அவர் கண்காணித்து வந்திருக்க வேண்டும் எங்கேயோ, எப்படியோ, ஒரு தவறு நடந்து விட்டது.

மணிவாசகன் வீட்டில் தென்படுவது அரிதாகிவிட்டது. கண்ணில் பட்டால் அல்லவா கண்டித்துப் பேசலாம்.

அந்த நேரத்தில் தான் உச்ச கட்டமான ஒரு நெருக்கடி ஏற்பட்டது.

உடனே அவர் ஊருக்குப் புறப்பட்டு வந்தால்தான் மீனாட்சியை உயிரோடு பார்க்கலாம் என்ற செய்தி வந்தது. மீனாட்சி உடல் தேறும் நம்பிக்கை இல்லை என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்.

கட்சி முறையாகக் கணவரையும், மகனையும் பார்க்க ஆசைப்படுகிறாளாம்…

கடிதத்தைப் படித்துவிட்டு வசமிழந்து போனார் வேதாசலம். கலங்காத மன உரம் அவருக்கு உண்டு.

லட்சிய சித்தம்படைத்தவர்தான். ஆனால், கண்கூடான ஓர் இழப்பை எதிர்நோக்கும் போது கவலையும் கண்ணீரும் கட்டுமீறிப் பொங்குவது இயற்கை. அந்தச் சோதனையைத் தான் வேதாசலம் சந்தித்தார்.

மணிவாசகனுடன் கப்பலில் புறப்பட விரைவாக ஏற்பாடு செய்தார். மகனிடம் மீனாட்சியின்கவலைக்கிடமான நிலையை விவரித்தார்.

பயணத்தேதி. அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட வேதாசலம் மகனின் படுக்கையைக் கவனித்தார்.

மணிவாசகனைக் காணவில்லை.

காலையிலேயே களேபரம் அண்டையிலுள்ள அனைவரும் கூட்டம் போட்டு விட்டார்கள்.

சுருட்டி வைக்கப்படிருந்த படுக்கையில் ஒரு துண்டுச் சீட்டு.

ஊருக்குவர விருப்பம் இல்லை என்று எழுதியிருந்தான் தன்னை எதிர்பார்க்கவோ, தேடவோ வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தான்.

அது தாங்கமுடியாத அதிர்ச்சியாக இருந்தாலும் அவருடைய பயணம் நின்று விடவில்லை.

ஒரு சிறகை இழந்த பறவையைப் போல் உணர்ந்தார் வேதாசலம்.

போன இடத்தில் மறு சிறகையும் இழக்க வேண்டிய கொடுமை.

மகன் வரவில்லையா என்று வினவிய மீனாட்சிக்கு விடைசொல்ல முடியவில்லை. அடுத்தடுத்த கப்பலில் அவன் புறப்பட்டு வருவான் என்று சமாதானம் சொல்லிவைத்தார். மரணப்படுக்கையில் இருந்த மீனாட்சி அமைதி பெறவில்லை.

சிலவாரங்களில் மீனாட்சியின் கதை முடிந்துவிட்டது அந்த முடிவு வேதாசலத்தின் மனதைப் பாதிக்க ஆரம்பித்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை படுக்கையில் சிலநாள் விழுந்தவர் பாதிமனிதராகி விட்டார். மணிவாசகனிடம் சேர்க்கச் சொல்லி சிங்கப்பூர் நண்பர்களுக்குப் பல கடிதங்களை எழுதினார். நண்பர்களின் பதில் வந்தது. மகனிடமிருந்து எதுவும் இல்லை.

வேதாசலம் நம்பிக்கை இழந்துவிட்டார்.

மனைவியின்பிரிவால் ஏற்பட்ட பேரிடியுடன் மகனின் புறக்கணிப்பால் நேர்ந்த புயலும் சேர்ந்து கொண்டுவிட்டது.

மறுபடியும் கப்பல்ஏறநினைத்தார். மகனால் அவமதிப்பை ஈடுகட்ட முடியுமா? பழைய மரியாதையுடனும் மதிப்புடனும் சிங்கப்பூரில் தம்மால் நிமிர்ந்து நிற்கமுடியுமா?

பலவீனப்பட்டுப்போனார்தங்கையின்குடும்பத்தினரே அப்பொழுது அவருக்கு ஒரே ஆதரவு.

அண்மையில் ஒருநாள் மல்லிகாவை அருகில் அழைத்தார்.

“மரண சாசனம் என்று வைத்துக் கொள்ளுங்கள்… கல் கனியுமோ, பாறை உருகுமோ எனக்குத் தெரியாது. என் மகன் மனிதனாக வேண்டும் என்பது கடைசி ஆசை. வம்சவேராக குடும்பத்தின் பெயரை அவன் சொல்வானோ, மாட்டானோ… சமூக உபதேசியாக இருந்தவன் மகனுக்குக் கடைசி உபதேசம் செய்ய விரும்பினேன், எல்லாம் இதில் அடக்கம்: எப்படியாவது அவனிடம் சேர்த்து விடுவாயா, மல்லிகா?”

கண்ணீர்மயம்.

சிங்கப்பூரில் வாழ்க்கையை செம்மாப்புடன் கொள்ள நினைத்திருந்தவர். பிறந்த மண்ணோடு மண்ணாகக் கலந்து போனார்.

மல்லிகா காலண்டரைப் பார்த்தாள்.

1960 மே மாதம் பதினேழாம் தேதி

சிங்கப்பூருக்கு வந்து ஒரு வாரம்ஆகிவிட்டது. ஆனால் வந்தவேலை முடிவது போல் தோன்றவில்லை.

பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கலாமா என்று யோசனை தோன்றியது. அவசரப்படுவது நல்லது அல்ல. ஆனமட்டும் முயன்று பார்த்துவிடலாம் என்றார் ஆறுமுகம். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை.

அவசரமாக மல்லிகாவிடம் ஓடிவந்தார் அவர்.

“மகளே, புறப்படு… மணிப்பயலின்இருப்பிடம்தெரிந்து விட்டது. என் சீன நண்பன் ஒருவன் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டான். அவன் வாசலில் பேச்சா வண்டியுடன் காத்திருக்கிறான். வாம்மா… அந்த நோட்டுப் புத்தகத்தைப் பத்திரமாக எடுத்துக் கொள்…”

மூச்சு முட்ட முட்ட அவள்செய்ய வேண்டிய பணியைச் சொல்லி முடித்து பேச்சாவில் ஏற்றி அனுப்பினார். பேச்சா ஓட்டும் ஆ ச்சூ அவருக்கு மட்டுமல்ல, வேதாசலத்திற்கும் வேண்டியவர். விவரத்தை ஆறுமுகம் சொல்லியிருந்ததால் கடந்த சில நாட்களாக மணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்தச் சீனக் கிழவரும் ஈடுபட்டிருந்தார்.

இன்றுதான் காரியம் கைக் கூடியது.

ரெட்ஹில்ஸ் வட்டாரத்தில் ஒருவீட்டில் சில சீன சகாக்களுடன் மணி தங்கியிருக்கிறான், தற்சமயம் என்பதை ஆ ச்சூ சொன்னார்.

அவருடைய பேச்சாவில் சில நாழிகைப் பயணத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தரரள் மல்லிகா. மனத்தில் துணிவு மேலோங்கியிருந்தது.

ஆ ச்சூ வீட்டைச் சுட்டிக் காட்டி விட்டு வண்டியை இரண்டு வீடுகளுக்கு அப்பால் நிறுத்திக் கொண்டார்.

அவள் தைரியமாகப் போகலாம், ஆபத்து எதுவும் ஏற்பட்டால் அவர் ஓடிவந்து காப்பாற்றுவார் என்று ஆறுமுகம் சொல்லி அனுப்பியிருந்தார்.

அந்தத் திட்டம் இதோ செயலுக்கு வந்தாயிற்று. அந்தப் பழைய வீட்டுக்கதவைத் தட்டினாள் மல்லிகா.

நாலைந்து நிமிடங்களுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது திறந்தவன், தான் தேடி வந்தவன்தான் என்பதை முதல் பரர்வையிலேயே உறுதிப்படுத்திக் கொண்டாள் மல்லிகா. வேதாசலத்தின் சாயல் அப்படடியே ஒட்டிக் கொண்டிருந்தது அவன் முகத்தில், தோற்றத்தில்.

“யார்? என்னவேண்டும்?” என்றான் மணிவாசகன் எதிர்பாராத, அதிர்ச்சி கலந்த வியப்புடன்.

“உங்களைப் பார்க்கத் தான்?” என்றாள் அவள்.

“நீ யார்? எதற்காக என்னைப் பார்க்கவேண்டும்?” அவன்தொடுத்த கேள்விகள் அவளை உற்சாகப்படுத்தின. தன்னைப் பற்றி நிரம்பச் சொல்லவேண்டும், அவன் அப்பாவைப் பற்றி அதிகம் பேச வேண்டியிருக்கிறது உள்ளே போய் பேசுவதற்கு அவன் அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள்.

மணி வெறுப்படைந்தான். யாரோ ஒருத்தியை அந்த குகைபோன்ற வீட்டில் அனுமதித்து விவாதிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது. என்று நினைத்தான். மல்லிகாவை மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான்.

“மாமா இறந்து போனது தெரியும் இல்லையா? அதாவது உங்கள் அப்பாவின் மரணத்தைச் சொல்கிறேன்… அவர் கண்ணை மூடும் போது காலடியில் இருந்தவள். அவர் கொடுத்ததை ஒப்படைத்துவிட்டுப் போகக் கப்பலேறி வநதவள். நான்…”

மல்லிகா சுருக்கமாகச் சொன்னாள்.

மறுநிமிடம் கதவை விரியத் திறந்து வைத்து அவளை உள்ளே வரச் சொன்னான் மணிவாசகன்.

அவளை உட்காரும்படி கைகாட்டிவிட்டு, “அப்பா…? என்று குரலை இழுத்தான்.

“மாமா போயிட்டாங்க…. அத்தை செத்துப் போன ஏக்தத்திலேயே மாமாவும் மனம் உடைஞ்சு பாயிலே விழுந்தாங்க… உங்களுக்குப் பல பேர் கிட்டே கடிதம் கொடுத்தனுப்பினாங்க… ஒரு பதிலும் இல்லை போனமாசம் மாமா இறந்துட்டாங்க… அவங்க கடைசியா எழுதிக் கொடுத்தது இது. இதை எப்படியாவது உங்ககிட்ட சேர்த்திடணும் என்பது மாமாவின்கடைசி ஆசை. வேறு யார் வருவாங்க? கடவுள் விட்ட வழி என்கிற துணிச்சலோட நான்தான் கப்பல்லே புறப்பட்டுவந்தேன்… இது தான் மாமா கொடுத்தது வாங்கிக் கொள்ளுங்க…”

மல்லிகா அந்த நோட்டுப் புத்தகத்தை மணிவாசகனிடம் ஒப்படைத்தாள்.

அதைப் பெற்றுக் கொண்டான். அவன் உடலில் நடுக்கம் தெரிந்தது.

“ஒரு பெண் பிள்ளை கப்பலேறிப் போய் காணாமல் போனவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறதாவது… அப்படி இப்படின்னு ஊரில்பலபேர்பேசினாங்க. எப்படியோகடவுள் துணையில் நான் வந்த காரியம் நிறைவேறிட்டது. மாமாவின் கடைசிஆசையைநிறைவேற்றிட்டேன். இனி நான் ஊருக்குப் போகலாம்” என்றாள் மல்லிகா.

அவன் வாய்திறக்க வில்லை.

கையில் அந்த நோட்டுப் புத்தகம் நடுங்கியது.

“மாமாவின் மரண சாசனம் உங்கள் கையில்.. எதுவும் நீங்கள் சொல்வதானால் இரண்டொரு நாளில் சொல்லலாம், நான் ஊருக்குப் புறப்படுவதற்குள்…” என்று கூறினாள் மல்லிகா. மணிவாசகனிடம் தான் தங்கியிருக்கும் இடத்தைச் சொல்லி விட்டுப் புறப்பட்டு விட்டாள்.

ஆ ச்சூவின் பேச்சாவண்டி வெளியே சற்றுத் தொலைவில் அவளுக்காகக் காத்திருந்தது.

மணியைப் பார்த்து விட்டு வெற்றிகரமாக அவள் திரும்புகிறாள் என்பதைப் புரிந்துகொண்டு புன்னகை புரிந்தார் ஆ ச்சூ.

பேச்சாவில் அமர்ந்த மல்லிகா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

மல்லிகா காலண்டரைப் பார்த்தாள்.

1960 மே மாதம் பத்தொன்பதாம் தேதி.

மணிவாசகத்தைப்பற்றிய சிந்தனை வட்டத்தில்வளைய வந்து கொண்டிருந்தாள். அவனிடமிருந்து எதிரொலி எதுவும் வருமா?

சில நிமிடச் சந்திப்பில் அவள் அவன் மனத்தில் பதிந்திராவிட்டாலும் வேதாசலத்தின் கடைசிக் கடிதம், அந்த மரண சாசனம் அவன் மனத்தைப் பாதித்திருக்காதா? அதனால் அழுத்தமான திருப்பம் அவனுள்ளே ஏற்பட்டிருக் காதா?

மல்லிகா பலவாறு பலகோணங்களில் சிந்தித்துப் பார்த்தாள். ஆறுமுகம் இடையிடையே எட்டிப்பார்த்து, “அந்தப்பயல்உன்னைத் தேடி வரத்தான்போகிறான், மகளே… எனக்கு அந்த நம்பிக்கை வந்தாயிற்று…” என்றார் குகை வீட்டில் அவனைச் சந்தித்து வந்த விபரங்களை அன்றைக்கே ஒன்றுவிடாமல் அவரிடம் மல்லிகா எடுத்துச் சொன்னாள். தாமும் அவளுடன் அவனைப் பார்க்க வந்திருக்கலாம் என்றாலும் தம்மைஅவனுக்குப் பிடிக்காது என்பதால் தான் தவிர்த்துக் கொண்டார்.

மணிவாசகன் என்ன செய்து கொண்டிருப்பான்?

மனக்கண்கள் திறந்திருக்குமா?

திறந்துவிட்டதால்திணறல் ஏற்பட்டிருந்தது அவனுக்கு.

அந்தக் குகைவீட்டில் சகாக்கள் யாருமின்றி தனித்துவிடப்பட்டிருந்தவன் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக தவித்துக் கொண்டிருந்தான்.

வேதாசலம் என்ற ஒரு பண்பாளரின் உருவத்தை மனத்தில் நிறுத்திப் பார்த்தான்.

அவர் உருவம் உணர்வு பெற்று உயர்ந்து கொண்டே போவதுபோல் உணர்ந்தான்.

அவருடைய மரண சாசனத்தைத் திரும்பத் திரும்பப் படித்திருந்ததால் மனப்பாடமாகி விட்டது மணிவாசகனுக்கு அப்பாவே வாய்விட்டுப் பேசுவது போல் இருந்தது. “மகனால் வெறுத்துப் புறக்கணிக்கப்பட்ட ஒரு தந்தையின் மரணசாசனம். தாயே கோயில், தந்தை சொல்லே மந்திரம் என்பது பழமொழி அதை வாழ்க்கையாக்கி மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தேன் சொந்த மகனின் வாழ்க்கைப் பாதையும் அப்படியே அமைய வேண்டும் என்று பாடுபட்டேன்.

ஆனால் அந்தப் பாதை மாறிவிட்டது தகப்பனாக நீ அங்கீகரிப்பதும், ஏற்காததும் உன் விருப்பம் ஏனென்றால் இனி நாம் இந்த உலகில் சந்திக்கப் போவதில்லை. கடைசி நிமிடம் வரை உன்னைக் காணத்துடித்த தாயைத் தவிக்கச் செய்த பிள்ளை நீ. அந்தக் கோயில் மண்ணாகிவிட்டது.

அந்த மண்ணோடு இணைய நானும் இதோ தயாராகிக் கொண்டிருக்கிறேன். உன்னை மீண்டும் இங்கே சிங்கப்பூரில்நான்வளர்த்த கலாச்சாரப் பயிரை நீ வரவழைப்பதற்காக இதை நான்எழுதி வைக்கவில்லை. அங்கே பாதுகாப்பாய் என்று கனவு கண்டேன். உன் உலகம் வேறாகிவிட்டது சுற்றமோ, கிளையோ வேண்டாம் என்று கெட்டவர்களுடன் சுற்ற ஆரம்பித்துவிட்டாலும், ஒருநாள் வரும்.

அப்பொழுது தாய்,தந்தை, தாங்கக்கூடிய உறவினர்யார் இருக்கிறார்கள் என்ற தனிமை விரக்தி துரத்தும்.

“தத்துவமெல்லாம் எதற்கு? நான் நூறுமுறை எழுதியிருப்பேன் இதற்குமேல் எழுத உனக்கென்று யாரும் இந்த உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. உன்னால் ஒதுக்கப்பட்ட நான் ஒரே ஒரு காரியத்தை விட்டுச் செல்கிறேன். பூர்வீக நிலம், உடமை என்று எச்சமிச்சமாக இருப்பவற்றை விட்டுச் செல்கிறேன். அதை நீ என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். மல்லிகாவின் மடியில் தலை வைத்து என் ஜீவியத்தை முடித்துக் கொள்ளுமுன்நான் சொல்ல முடியா விட்டாலும் சுருக்கமாக இதை எழுதிமுடித்துவிட்டேன்.

வேதாசலம் என்ற பெயரில் உனக்கு ஒரு தந்தை இருந்தார் என்பதையும். மீனாட்சி என்ற தாய் கோயில்போல் இருந்து மறைந்தாள் என்பதையும் நினைப்பதும் மறப்பதும் உன்னைப் பொறுத்தது.

சிங்கப்பூரில் என் பெயரைச் சொல்ல, அவசியமானால் தான் தயார் என்றுமார்தட்டிக் கொண்டு வீராங்கனையாக அங்குவர விரும்புகிறாள் உன் அத்தை பெண் மல்லிகா. அவளால் அது முடியும் ஏனென்றால் அவள் உலகம் அறிந்த ஆசிரியை. என் ஆன்மாவும், உன் தாயின் ஆன்மாவும் உனக்காக ஆசி தேடியபடி இருக்கும்…”

திரும்பத் திரும்ப அதே ஒலி; எதிரொலி.

மணிவாசகன் தவித்தான். மனம் துடித்தது. துவண்டது. அப்பா என்று அழைக்க அவனுக்கு யாரும் இல்லை. அம்மா என்றும் ஓலமிடத்தான் முடியும. யாரும் அவனை அரவணைக்கப் போவதில்லை அவன் நிலையைப் பார்த்த சகாக்கள் வியந்தார்கள். உட்பிரிட்ஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டியதுதானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு.

பாறையாக இருந்தவன் அல்லவா?

மல்லிகா காலண்டரைப் பார்த்தாள்.

1960 மே மாதம் இருபதாம் தேதி.

சிங்கப்பூருக்கு வந்து பத்துநாள் ஆகிவிட்டது. ஊரில் ஜுன் மாதம் பள்ளிக்கூடம் திறந்து விடுவார்கள். திடம் ரஜுலா கப்பலுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டாள்.

மறுபடியும் மணிவாசகனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவன் எதுவும் பேசவோ, சொல்லவோ நினைத்தால் வரலாம் என்று முகவரி தந்துவிட்டுத்தானே வந்தாள்!

அடிமனத்தில் அன்பு, நேசம் என்ற மனிதாபிமான உணர்வுகள் கொஞ்ச நஞ்சமாவது இருந்தால் அவன் விழிப்படைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஜன்மத்தில் அவன் மாறப்போவதில்லை.

வந்த வேலை முடிந்துவிட்டது. அவ்வளவுதான் என்ற சிந்தனையோடு அவள் காலண்டரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது வேகமான காலடி ஓசை கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினாள் மல்லிகா.

“அம்மா… மல்லிகா… அவன் வந்துவிட்டான்! என்றார் ஆறுமுகம் மூச்சு இறைக்க, இறைக்க…

யார்? மணியா?

அவள் கேட்கவில்லை.

அவரே சொன்னார். “உன்னைப் பார்க்க வந்திருக்கிறான், மணி…உள்ளே அனுப்பட்டுமா? என்றார்.

வியப்பில் மலர்ந்து போனாள், “வரச் சொல்லுங்கள்…” என்று ஆர்வத்தோடு எழுந்து நின்றாள்.

மறுநிமிடம் அவளருகில் வந்து மவுனமாக நின்றிருந்தான் மணிவாசகன்.

உட்காரச் சொன்னாள்.

அதற்குத் தனக்கு அருகதை இல்லை என்பது போல் கலக்கத்துடன் , அவமானத்தில் கூனிக் குறுகியவன் போல் நின்றான். பேசத் தோன்றவில்லை.

“மாமாவின் கடைசி ஆசையை நிறைவேத்திட்டேன்.. நான் ஊருக்குக் கிளம்ப ஏற்பாடு செய்திருக்கிறேன், ஏதாவது சொல்ல நினைச்சா சொல்லுங்கள்… அங்கே உங்களுக்காக ஏதாவது நான் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள்… செய்கிறேன்…” என்றாள்.

அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் மணியின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

“மல்லிகா, என்னை நீ மன்னிப்பியா?” என்றான்அவன். அந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை.

“உங்களை மன்னிக்க நான் யார்?”

அப்பா,அம்மா இல்லாத அனாதை… அரக்கனாக இருந்தவனுக்கு இரக்கத்தின் விலை இப்பத்தான் தெரிஞ்சது. கோயில், மந்திரம் எதுவுமே எனக்குக் கிடைக்காது. தாய் இல்லை…. தகப்பன் இல்லை… கேடுகெட்ட அனாதை’ நான். இப்பத்தான் அதை உணர்ந்திருக்கேன்… தாயன்பில் வளராது போனதால் எனக்கு நானே தேடிக்கிட்ட தண்டனை… அப்பாவின் மரண சாசனம் என்னை மனிதனாக்கிவிட்டது. ஆனால் இப்ப சொந்த பந்தம் இல்லாத அனாதையா நிக்கிறேனே…”

அவன் அழுது வெடித்தான்

“எதுக்காக இப்படிக் கலங்குறீங்க?” என்று மல்லிகா தேற்ற முயன்றாள்.

“இனி அழுகைதான் எனக்கு மிச்சம் என் கண்ணீரைத் துடைக்க யார் இருக்கிறாங்க?” என்றான்.

“நீங்கள் ஆண்பிள்ளை… இப்படி ஆடிப் போகலாமா?” “ஆனால் அனாதை ஆதரவு, அரவணைப்பு எதுவுமே எனக்குக் கிடையாது அப்பாவின் கடைசி வாசகங்கள் என் கண்ணைத் திறந்திருக்கு. இருந்தும் பார்வையே பறிபோன மாதிரி ஆயிட்டது…” என்று புலம்பினான்…

“ஏன்? நான் இல்லையா? உங்களை ஆதரிக்க யாரும் இல்லேன்னு ஏன் நினைக்கிறீங்க?” என்று பரிவோடு கேட்டபடி அவனை ஊடுருவிப் பார்த்தாள் மல்லிகா.

“நிஜமாகவா மல்லிகா? அப்பா விரும்பினபடி, அவர் பாதையிலே லட்சிய மனிதனா நான் நடக்கணும்கிற துடிப்பு இப்ப ஏற்பட்டிருக்கு… நீ அதுக்குத் துணையிருப்பியா, மல்லிகா?” உடைந்து போனான் அவன்.

அவள் அமைதியாக அவனைப் பார்த்தாள். புன்னகை புரிந்தாள்.

“மல்லிகா… அவசரப்பட்டு நீ கப்பலேறிடக் கூடாத…அதுக்கு உறுதி சொல்லுவியா? எனக்கு வழிகாட்டுவியா? அப்பாவின் லட்சியத்தை இந்த மண்ணில் நிறைவேற்ற நீ உதவுவாயா?”

மல்லிகாவின் மவுனமே அனைத்திற்கும் இசைவு கூறுவதாக இருந்தது.

– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *