அந்தரங்கக் காரியதரிசி

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 4,031 
 

(1957 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேன்மை தங்கிய ஸர் மோகன்லால் அவர்கள் வியாபாரத் தலைநகரமான பம்பாயில் குறிப்பிடக் கூடிய மிகப் பெரும் புள்ளிகளில் முதன்மையானவர். அவருக்குச் சொந்தமாக எத்தனையோ பண்டகசாலைகள் இருந்தன. அவற்றுக்குக் கணக்கு வேண்டும் என்று விரும்பினால், தூக்க முடியாத கனமான அவரது சாவிக் கொத்தைத் தான் கேட்க வேண்டும்.

அவர் மாபெரும் கம்பெனி ஒன்றின் பூரண உரிமையாளர். ஆறு கம்பெனிகளுக்கு மானேஜிங் ஏஜண்ட். முப்பத்தாறு கம்பெனிகளுக்கு டைரக்டர். இருன்னும் எத்தனை எத்தனையோ கம்பெனிகளுக்குப் பங்குதாரர். இவற்றுக்கெல்லாம் ஒரு புள்ளி விவரம். தயாரிக்க வேண்டும் என்று வந்தால், என்னதான் கஜ கர்ணம் போட்டாலும் பிறர் உதவியின்றி அவரால் தனியாகத் தயாரிக்க முடியவே முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் பொதுநல வாழ்விலும் பெரும் அக்கறை கொண்டிருந்தார். ராஜாங்க. சபையிலிருந்து நகர பரிபாலன சபை வரை அவர் அங்கம் வகிக்காத சபை கிடையாது; உற்சாகத்துடன் பங்கு எடுத்துக் கொள்ளாத கூட்டங்கள் கிடையாது. அரசாங்க ஆதரவுள்ள கமிட்டிகளும் சரி, அரசாங்க. ஆதரவற்ற கழகங்களும் சரி, அவர் பெயரின்றிச் சோபித்ததில்லை; முன்னுக்கும் வந்ததில்லை. பிரஸி டென்ஸி அஸோஸியேஷன், ராடிகல் லீக், உலகச் சமாதானப் பிரியர் சங்கம், உலகப் போர் வெறியர் ஸ்தாபனம், சமூகச் சீர்திருத்தக் கழகம், வியாபார அபிவிருத்தி சங்கம், உள்நாட்டு வியாபாரிகள் சேம்பர், அயல்நாட்டு வியாபாரிகள் அஸோஸியேஷன், துணி, மணி, கரும்பு, வெல்லம், சர்க்கரை, கீரை, பருப்பு, கடலை முதலிய பொருள் விற்போர் பாதுகாப்புச் சங்கம், தக்ளி அபிவிருத்தி மன்றம், கைத்தறிக் கமிட்டி, மில் முதலாளிகள் க்ஷேம சங்கம், தொழிலாளர் அபிவிருத் திக் கழகம், ஒத்துழையாமைப் போர் வீரர் படை, ஒத்துழைப்புப் போர் வீரர் படை – இவைபோன்ற இன்னும் எத்தனை எத்தனையோ ஸ்தாபனங்களுக்கு அவர் தலைவர், உபதலைவர், காரியதரிசி, உப காரியதரிசி, கூட்டுக் காரியதரிசி, துணைக் காரியதரிசி, பொக்கிஷ தார், அங்கத்தினர், போஷகர், ஸ்தாபகர் என்று ஏதா வது ஒரு பதவி வகித்து வந்தார்.

அதோடு, தாம் எடுத்துக் கொண்ட பணியைக் குற்றங் குறையின்றித் திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்ற ஒரே நல்ல நோக்கத்துடன், அந்த அந்த விஷயங்களில் தேர்ச்சி அடைந்தவர்களாகத் தேர்ந்தெடுத்து ஒரு பெரும் பட்டாளத்துக்கே உத்தியோகம் போட்டுக் கொடுத்திருந்தார். அத்தனை பேருடைய அறிவையும் ஆற்றலையும் சாதுரியமாகப் பயன்படுத்திக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதில் ஸர் மோகன்லாலுக்கு உள்ள திறமையை என்னவென்று புகழ்வது? அதன் பலனாக, அவரது பணமும் புகழும் காட்டாற்று வெள்ள மாகப் பெருகிக் கரைபுரண்டு ஓடலாயின.

சில காலமாக ஸர் மோகன்லாலுக்கு ஒரு பெரும் குறை. விலைமதிக்க முடியாத அவரது பொழுது, கால் காசுக்குப் பிரயோசனமில்லாத சின்னஞ் சிறு குடும்பக் காரியங்களில் வீணாகி வந்தது. அப்பப்பா; அதனால் எத்தனை காரியங்கள் ஈடேறாமலே போய் விட்டன! கணக்கில் அடங்காத கல்யாணம், கார்த்திகைகள், மாப்பிள்ளை அழைப்புகள், இறுதியாத்திரைகள் ஆகி வை அவர் கலந்து கொள்ள இயலாமற் போனமையினால் சோபிக்காமல் போய் விட்டன. அதுமட்டுமா? உற்றார்- உறவினர்களின் துயரங்களைத் துடைத்தெறியும் பெருமையையும் அவர் அடைய முடியாமல் போய் விட்டது. எத்தனையோ தேவைப்பட்டவர்கள் அவரிடம் பொருளுதவி நாடி வருவார்கள். அவர்களுக்குப் பொருளுதவி செய்வது முன்னே, பின்னே இருந்தாலும், தமது பெருமை உயரக்கூடிய வகையில் ஆறுதல் அளித்து நாலு வார்த்தைகள் எழுதக்கூட அவருக்கு நேரம் இல்லை. அவர் சமீபத்தில் புதுமணம் புரிந்து கொண்டிருந்த இளம் மனைவி உடல்நிலை – மனநிலை இரண்டும் சரியில்லாமல் பிரபல டாக்டர்களின் மேற்பார்வையில் டும்மஸ் என்னும் ஊரில் இருந்தாள். அவளது மனநிலையை ஒரு நிலைப்படுத்தி வைப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவையாவது ஸர் மோகன்லால் உணர்ச்சி நிறைந்த கடிதங்கள் எழுதி வந்தால் நலமா யிருக்கும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறி யிருந்தார்கள். ஆனால் இக் காரியத்துக்குத் தான் எத்தனை இடையூறுகள்! இப்படிச் செய்ய முடியாமற் போகவே, தாம்பத்திய வாழ்க்கையின் உணர்ச்சி நிலைகளைப் பற்றி டாக்டர்களிடம் அவர் எவ்வளவோ பெரிய பெரிய பேச்சுகளைக் கேட்கும்படியாகி விட்டது. அதில் தமது பொன்னான நேரத்தை அநாவசியமாக வீணாக்கும்படியும் ஆகி விட்டது!

இத்தகைய அவசியமான காரியங்களைக் காரியால யத்துச் சம்பளம்பெறும் சிப்பந்திகள் சரிவரச் செய்வ தில்லை. அதனால் அவரது செயலாற்றும் திறமையில் கறை படியும் போலிருந்தது. அதற்கு அவர் இடம் கொடுக்க விரும்பவில்லை. ஒருநாள் இதற்கு ஒரு முடிவு கண்டே தீருவது என்ற முடிவுக்கு வந்தார். அதிர்ஷ்ட வசமாக அதற்கு ஒரு வழியும் தோன்றியது. மற்ற அலுவல்களைக் கவனிக்கத் தனித்தனி இலாக்காக் களும் காரியதரிசிகளும் ஏற்படுத்தி யிருந்ததுபோலவே, குடும்ப சம்பந்தமான அலுவல்களைக் கவனித்துக் கொள்வதற்கும் ஒரு தனி இலாக்கா ஏற்படுத்தி, அதற்கு ஒரு அந்தரங்கக் காரியதரிசியும் நியமித்து விடுவது என்று தீர்மானித்தார். அவரது அந்தத் தீர்மானம் உடனடியாகப் பிரபல பத்திரிகைகளில் விளம்பரமாக வெளி வந்தது.

குறிப்பிட்ட தினத்தன்று குறிப்பிட்ட நேரத்தில், ஸர் மோகன்லால் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட உத்தியோக சுயம்வர மண்டபத்தில், தன் கழுத்தில்தான் மாலை விழும் என்ற நம்பிக்கையுடன் பல விண்ணப்பதாரர்கள் சாதக பட்சியாகக் குழுமி விட்டனர்.

அப்பொழுது ஸர் மோகன்லால் தமது விசாலமான அறையின் அரையே அரைக்கால் பகுதியை அடைத்துக் கொண்டிருக்கும் மேஜைக்கெதிரே அமர்ந்திருந்தார். அவர் எதிரே அன்றைய தினக் குறிப்பேடு திறந்து கிடந்தது. ‘மூன்று அடித்து முப்பத்தொன்பது நிமிஷத்துக்கு நகரபரிபாலன சபையின் விஷயாலோசனை கமிட்டிக் கூட்டம்’ என்ற குறிப்பைக் கவனித்த அவரது பார்வை – அதற்குமேலிருந்த குறிப்பிலும் அவரையறியாமலே சென்றது. ‘மூன்று அடித்துப் பதினைந்து நிமிஷத்துக்கு அந்தரங்கக் காரியதரிசியின் தேர்வு.’உடனே ஸர் மோகன்லால் மேஜையின்மீது வைத்திருந்த வெண்கலப் பூனையின் வாலை அழுத்தினார். கண கணவென்று மணி ஒலித்தது. அதைத் தொடர்ந்து அவரெதிரே வில்லைச் சேவகன் நின்றான்.

“தலால் ஸேட்டை வரச் சொல்!”

ஸர் மோகன்லால் நிமிர்ந்து பாராமலே சொன்னார். வில்லைச் சேவகன் வெளியே சென்றான். அதை அடுத்து நடுத்தர வயதுடைய ஒரு மனிதர் அவரெதிரே நின்றார்.

“வேலைக்கு மனுப் போட்டிருக்கிறவர்கள் வந்தி ருக்கிறார்களா ?”

“ஆமாம்! வந்திருக்கிறார்கள்!”

“மொத்தம் எத்தனை பேர்?”

“பதின்மூன்று பேர்.”

“அதிர்ஷ்டக்கட்டை நம்பர். இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொருவராக உள்ளே அனுப்பு!” என்று கட்டளையிட்டார் ஸர் மோகன்லால்.

“சரி, சார்!” என்று கூறித் தலால்ஸேட் அடுத்த கணமே அவ்வறையிலிருந்து வெளியே சென்றார்.

மறு கணம் ஒரு பார்ஸி வாலிபன் உள்ளே நுழைந் தான். ஆள் வாட்டசாட்டமாக உயரமாக இருந்தான். அழகாகவும் இருந்தான். ‘துறு துறு’ என்ற குணம் படைத்தவனாகவும் தோன்றினான். அவன் உடுத்தியிருந்த ஆடம்பர உடையும் ஆகிருதியும் துணிக்கடை விளம்பரத்தின் உருவம்தான் உயிர் பெற்றுவந்து விட்டதோ என்று எண்ணும்படி அமைந்திருந்தன. அவனது சுருண்ட தலைக் கேசங்களில் இரண்டொரு கொத்துக்கள் முன்நெற்றியில் வந்து விழுங் திருந்தன. பிரேம் இல்லாத கண்ணாடி அவன் முகத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவன் அணிந்திருந்த உடை மடிப்புக் கலையாமல் இருந்தது. சலவைக் கஞ்சியின் மொர மொரப்போடு தையற்காரனின் கைத்திறனும் அபூர்வம் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

விறைப்பாக நின்ற அவனது உடல் இடுப்போடு சற்றுக் குனிந்து வணக்கம் தெரிவித்தது. உதடுகள் ஒரு புன்முறுவலைக் காட்டுவது போலக் காட்டி மறுபடியும் பழையபடியே குவிந்தன. வாலிபன் முன் நெற்றியில் புரண்ட தலைமயிரை ஒரு தடவை இடது கையினால் ஒதுக்கிவிட்டுக் கொண்டான்.

ஸர் மோகன்லால் தலை நிமிர்ந்து அவனை ஒருமுறை பார்த்து விட்டுக் கேட்டார்:

“பெயர்?”

“பேஸி சுல்தான்!”

வாலிபன் சற்று நெருங்கி வந்தான்.

மனுக்கள் கட்டிலிருந்து அவன் மனுவை எடுத்தார் ஸர் மோகன்லால்.

“வயது?”

“இருபத்தெட்டு.”

மனுவை ஒருபுறம் வைத்தார் ஸர் மோகன்லால்.

“சரி! உம்மை எடுத்துக் கொள்வதாயிருந்தால், நாளை உமக்குக் கடிதம் வரும்!” என்று கூறித் தமது கழுத்து அசைப்பினாலேயே அவனை வெளியே போகுமாறு உத்தரவிட்டார்.

சுல்தான் மூன்று நாட்களாகவே இந்த ‘இண்டர் வியூ’வுக்காக விழுந்து விழுந்து தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தான். எத்தனை எத்தனையோ கேள்விகளை எதிர்பார்த்துப் பதிலை உருப்போட்டு வைத்துக் கொண டிருந்தான். பதில் சொல்லும் பொழுது எப்படி எப்படியெல்லாம் தன் உடல் உறுப்புகளுக்கு வேலைகொடுக்க வேண்டும் என்பதற்குப் பல ஒத்திகைகளும் பார்த்துக் கொண்டிருந்தான். அத்தனை முயற்சிகளும் ஒரு நொடியில் வீணாகிப் போய் விட்டன. ஸர் மோகன்லால் அவனுக்குத் தன் திறமையைக் காட்ட வாய்ப்பே அளிக்காமல் ஏமாற்றி விட்டார். இந்த எதிர்பாராத ஏமாற்றம் அவனைப் பேய் அறைந்தாற்போல் நிலைகுலைந்து நிற்கும்படி செய்து விட்டது.

தலை நிமிர்ந்த ஸர் மோகன்லால் “இன்னும் ஏன் நிற்கிறீர்?” என்றார் வெடிப்பாக. சுல்தான் வேறு வழியின்றி ஒன்றும் பேசத் தோன்றாமல் வெளியேறினான்.

உடனே ஒரு மராத்தியர் உள்ளே நுழைந்தார். அவர் அணிந்திருந்த சிவப்பு நிறத் தலைப்பாகையும், செருப்பும், அவர் பேஷ்வா காலத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லாமலே சொல்லிக் காட்டின. அவருக்கு வயது சற்று அதிகம். பரந்த அநுபவம் பெற்றவர் என்பதை முகக்குறியே எடுத்துக் காட்டியது. நான்கைந்து கேள்விகள் கேட்டு ஸேட்ஜி அவருக்கும் விடை கொடுத்து அனுப்பினார். அடுத்தவர் வருவதற்குள்ளாக ‘இவர் நம் காரியத்துக்குப் பயன்படுவாரோ?’ என்று எண்ணிப் பார்க்க நினைத்தார்.

ஆனால் மூன்றாவதாக உள்ளே நுழைந்தவர், அவர் மூளைக்கு அந்தச் சிரமத்தை வைக்கவில்லை. வந்தவரின் முகத்தில் காம்பீர்யம் குடி கொண்டிருந்தது. நடையில் மத்தகஜத்தின் மெதுத்தன்மை மிளிர்ந்தது. விழிகளில் ஒரு ஒளியைக் காணோம். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பவரைப் போன்று, இல்லை, இல்லை, எதையோ பறி கொடுத்து விட்டவரைப் போன்று-உள்ளுக்குள் செருகிக் கொண்டிருந்தன. இடுப்பு ஓடிந்து, நொடிந்ததைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போலத் தோன்றியது.

ஸர் மோகன்லால் அதைக் கவனித்தார். அவரது நிலைத்த பார்வையில் ரகசியமே உருவான ஒரு இளநகை ஓடி மறைந்தது.

“உமது பெயர்?”-குஜராத்தி மொழியில் கேட்டார் ஸர் மோகன்லால்.

“மதுபர்க்க சங்கர சாஸ்திரி.”

எந்த ஊரோ?”

இந்தக் கேள்வியைக் கேட்கும்பொழுது, கல்யாண காலத்தில் மதுபர்க்கம் அருந்துவது போன்ற சுவையை ஸர் மோகன்லாலின் நா சுவைத்தது.

“நடியாத்.”

சாஸ்திரியின் நடை, உடை, பாவனையைக் கண் ணுற்ற ஸேட்ஜிக்கு ஒரு வேடிக்கை தோன்றியது. கேலியாக, “எழுதப் படிக்க வருமா?” என்று கேட்டார்.

“எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் குஜராத்தி அன்னையின் பாதாரவிந்தங்களில், இப்படி எப்பொழுதாவது பத்ரம், புஷ்பம், பலம், தோயம், அதாவது இலை, பூ, பழம், நீர் என்ற வகையில் ஏதாவது அர்ப்பணித்து வந்திருக்கிறேன்!’ என்றார் மதுபர்க்க சங்கரசாஸ்திரி. அதைச் சொல்லும்பொழுது அவர் குரலில் ஒரு காம்பீர் மும் அதைத் தொடர்ந்து கர்வமும் தொனித்தன.

ஸர் மோகன்லாலின் சாந்தமான முகத்தில் மீண் டும் ஒருமுறை சிரிப்பு இழையோடியது. “சரி. உமக்கு என்ன சம்பளம் வேண்டும்?” என்று கேட்டார்.

“பம்பாய் வாழ்க்கை…”

ஸர் மோகன்லால் கடிகாரத்தைப் பார்த்தவாறே, “ மக்குக் குழந்தை குட்டிகள் இருக்கின்றனவா?” என்று கேட்டார்.

“இருக்கின்றன!” என்று சொன்ன மதுபாக்க சாஸ்திரி ஏதோ யோசனையில் ஆழ்ந்தவர் போல், “ஆனால் தற்சமயம் பம்பாயில் இல்லை!” என்றார்.

“இருநூற்றைம்பது சம்பளம். என் வீட்டிலேயே இருப்பு; சாப்பாடு இரண்டும். சம்மதமா, சொல்லும்!” என்று தந்தி பாஷையில் சாஸ்திரியைப் பார்த்துக் கேட்டார் ஸர் மோகன்லால்.

சாஸ்திரியின் விழிகள் அகல விரிந்தன. “தங்கள் சித்தம் என் பாக்கியம்!” என்றார்.

“இன்றைக்கே நீர் இங்கே வேலையை ஒப்புக் கொள்ளலாம் அல்லவா?”

“எனக்கு வேறு ஒன்றும் வேலை இல்லை!”

“அப்படியானால் உட்காரும். இதோ உமது மேஜை!” என்றார் ஸர் மோகன்லால்.

மதுபர்க்க சாஸ்திரிக்கு வாய்மொழியாகவே நிய மனப்பத்திரம் வழங்கிவிட்டு, மின்சார யந்திரத்தைப் போன்ற வேகத்துடன் உத்தரவிடலானார், மோகன்லால். “நான் இப்பொழுது வெளியேபோய்க் கொண்டிருக்கிறேன். ஐந்தேகால் மணிக்குத் திரும்பி வருவேன். இந்தாரும், கடிதம். இந்த ஆசாமிக்கு இருபத்தைந்து ரூபாய் அனுப்ப வேண்டும். பணம் அனுப்பியிருப்பதாக ஒரு கடிதமும் எழுதிவிடும். ஆள் கொஞ்சம் அகம்பாவி, தன்மானம் உள்ளவன். தர்மத்துக்காக நாம் அவனுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் விழக்கூடாது!”

ஸேட் இன்னுமொரு கடிதத்தை எடுத்தார்.

“இந்தாரும், இன்னொரு கடிதம். இது யாருடையது, தெரியுமா? மனோரமாவினுடையது!”

சாஸ்திரியின் விழிகள் வியப்பினால் பிதுங்கி வெளியே விழுந்துவிடும் போலாகி விட்டன.

“மனோரமா என் மனைவி. அவள் டும்மஸில் இருக்கிறாள். வியாதிக்காரி. அவள் மனத்துக்கு ஆறுதல் ஏற்படும் வகையில் ஒரு கடிதம் எழுதி வையுங்கள்!”

“என்னையா சொல்கிறீர்கள்?”

“ஆமாம்! இதில் என்ன தவறு? நான் வந்ததும் பார்த்து அனுப்புகிறேன்!”

ஸர் மோகன்லால் மணி அடித்து வேலைக்காரனைக் கூப்பிட்டார். அவன் வந்ததும், “இந்தப் பையைக் கொண்டுபோய்க் காரில் வை!” என்று உத்தரவிட்டார்.

தலால் ஸேட் மறுபடியும் உள்ளே வந்தார். “சார்!”

“இதோ பார்! மிஸ்டர் சாஸ்திரிக்கு இன்று முதல் மாதம் இருநூற்றைம்பது ரூபாய் சம்பளம். இவர் பெயரை எழுதிக்கொள். இவருக்கு இங்கேயே ‘ஸீட்’ போட்டுவிடு. மற்ற விண்ணப்பதாரர்களை நீயே ஒரு மாதிரியாகப் பார்த்து அனுப்பிவிடு!”

இவ்விதம் கூறியதும் ஸர் மோகன்லால் ஒருகணம் கூடத் தாமதிக்காமல் வெளியே புறப்பட்டு விட்டார்.

2

ஸர் மோகன்லால் வெளியே போய்விட்டார். ஆனால் மதுபர்க்க சங்கர சாஸ்திரி சித்திரப் பதுமையாக வாய் அடைத்துப்போய் ஸ்தம்பித்து நின்றார்.

இருநூற்றைம்பது ரூபாய் சம்பளம்; தங்க இடமும் உண்ண உணவும் இலவசம்; ஸேட்ஜீயின் உத்தரவு; அவர் மனைவிக்குக் கடிதம் எழுதவேண்டிய பொறுப்பு தம் தலையில் சார்ந்தது;-எல்லாமாகச் சேர்ந்து சாஸ்திரியின் மூளையைக் குழப்பி மனத்தைச் சஞ்சலத்தில் ஆழ்த்திவிட்டன.

தலால் ஸேட் சிரித்தவாறே அவரிடம் சில கேள்வி களைக் கேட்டார். ஆனால் சாஸ்திரி சரியான பதில் கொடுக்கவில்லை. சாஸ்திரி ஒருவேளை கர்வியோ என் னவோ என்று எண்ணித் தலால் ஸேட் அங்கிருந்து போய் விட்டார். சாஸ்திரியோ ஸேட்ஜியின் மனைவி எழுதிய கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு செய்வது அறியாது திகைத்தார்.

மதுபர்க்க சாஸ்திரியைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்தப் புதிர் புரிவது சற்றுச் சிரம சாத்தியமான காரியம்தான்.

நடியாத்வாசியான மதுபர்க்க சங்கர சாஸ்திரி தம் முயற்சியில் படித்து முன்னுக்கு வந்தவர். அவருக்கு அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. அதாவது, சிருஷ்டியின் இருதயஸ்தானம் குஜராத். அதன் நடுப்புள்ளி கடியாத். அதற்கு ஆதாரப் புள்ளி அவர். அதோடு அவருடைய இன்னொரு நம்பிக்கையும் என்னவென்றால், கோவர்த்தனராம் போன்ற நடியாத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற புலவர்களின் கீர்த்தி என்னும் மணிமகுடம் தமது தலையை அலங்கரிப்பதற்காகவே அவர்கள் தலையிலிருந்து கிடுகிடுவென்று கனவேகமாக ஆடத் தொடங்கிவிட்டது என்பதுதான்.

அவரைப் பொறுத்தவரை உலகம் நடியாதின் ஒரு தெரு; உலக இலக்கியம் அவரது கிராமத்தைச் சேர்ந்த புலவர்களின் வாயினின்று எழுந்த கர்ஜனையின் எதிரொலி. இவ்வளவே.

மதுபர்க்க சாஸ்திரிக்குத் தமது படிப்பிலும் நடி யாத்தின் பெருமையிலும் எத்தனை பக்தி சிரத்தை இருந்ததோ, அத்தனை பக்தி சிரத்தை தமது மனைவியிடமும் இருந்தது. அவர் அவளைத் தமது வழிபடு தெய்வமாகவே மதித்து வந்தார். உலகத்துப் பெண் சிருஷ்டி களுக்குள் குஜராத்திப் பெண்களின் அழகும் பண்பும் தான் எல்லாவற்றிலும் சிறந்தது என்பது அவர் அபிப்பிராயம். அந்தத் குஜராத்திப் பெண்களுக்குள்ளே தமது தர்ம பத்தினி ஒருத்திதான் கடந்தகால, நிகழ்கால, வருங்கால அழகிகளில் எல்லாம் தலை சிறந்தவள், குணக் களஞ்சியமானவள் என்பதும் அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

அதனால்தான் ஸர் மோகன்லால் தமது மனைவியின் கடிதத்தை அவரிடம் கொடுத்துப் பதில் எழுதுமாறு சொன்னபொழுது மதுபர்க்க சாஸ்திரி உடலும் உள்ளமும் ஒருங்கே குலுங்கத் துணுக்குற்றார்.

இந்தப் பாவி உலகம் ஏன் இன்னும் பாதாளத்தில் அழுந்தாமல் கிடக்கிறது? இந்த உலகத்தில் இவ்வளவு மட்டரகமான கணவன்மார்கள்கூட இருக்கிறார்களா? அன்பே உருவான மலர் உள்ளம் படைத்த மனைவிமார் களுக்குக் காதல் கடிதம் எழுதச் சம்பளம் பெறும் சிப்பந்திகளை நியமிப்பதா? என்ன கண்ணராவி!

இன்றுவரை கேள்விப்படாத விஷயமாயிருக்கிறதே! அட, கடவுளே! மனிதன் இவ்வளவு கீழ்த்தரமாகவா போக வேண்டும்? பம்பாய் நகரத்தில் அதோகதி என்னும் ஆழமான குழியில் அழுந்திக் கிடக்கும் எத்தனையோ கேடுகெட்ட மனிதர்கள் :இருக்கிறார்கள் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் இந்தப் பணக் கார மனிதர் தம் அருமை மனைவிக்கு இழைக்கும் துரோகத்தைப் பார்க்கும்போது, அந்தக் கேட்டிலும் கேடுகெட்ட மனிதர்களைக்கூட நல்லவர்கள் என்று கூறி விடலாம் போலிருக்கிறதே!

எத்தனை அன்புடன், எத்தனை உற்சாகத்துடன், எத்தனை மென்மையான எண்ணத்துடன் அந்த மாம லராள் இவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறாளோ, யார் கண்டார்கள்? உணர்ச்சிக்குச் சற்றும் மதிப்புக் கொடாத இவரும் ஒரு மனிதரா? உண்மைக் கணவரா ? மூன்றாம் மனிதனைக் கொண்டு பதில் எழுதச் சொல்பவர் உணர்ச்சியே சிறிதும் அற்ற வெறும் கட்டை யாகத்தான் இருக்கவேண்டும்; கருங்கல் நெஞ்சம் படைத்தவராகத்தான் இருக்கவேண்டும். மதுபர்க்க சங்கர சாஸ்திரியினால் அதற்குமேல் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

அவர் உள்ளம் தழுதழுத்து மெழுகாக உருகி விட்டது. துர்வாஸ முனிவர் எத்தகைய கனல் கக்கும் பார்வையுடன் பார்த்து மக்களைப் பஸ்மமாக்கியிருப்பாரோ, அதே கோபம் கொண்ட விழிகளுடன் மதுபர்க்க சாஸ்திரி, பக்கத்திலிருந்த ஸர் மோகன்லாலின் மேஜையைப் பார்க்கலானார்.

மேஜையின்மேல் சென்ற அவர் பார்வை அதன் மேல் திறந்து கிடந்த குறிப்பேட்டையும் ஒரு நோட்டம் விட்டது. அதிலிருந்து ஸர் மோகன்லால் சீக்கிரமே திரும்பி விடுவார் என்றும் தெரிய வந்தது. அதோடு இருநூற்றைம்பது ரூபாய், உணவு, ஜாகை வசதி ஆகி யவை நினைவுக்கு வந்தன. கடமையை நிறைவேற்றாமல் இருப்பது தம்மீது எத்தனை பெரிய மாசைக் கற்பிக்கக் கூடும் என்பதும் நினைவுக்கு வரவே, அவசரம் அவசர மாகக் கடிதத்தை எடுத்துப் படிக்கலானார்.

‘அன்பே,

தங்கள் கடிதம் கிடைத்தது. என் உடல் நிலை வரவரக் குணமாகி வருகிறது. தாங்கள் எப்பொழுது என்னைப் பார்க்க வரப்போகிறீர்கள்?

தங்கள் மனோரமா.’

கடிதம் சிறியதுதான். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்றபடி இனிமை நிறைந்தல்லவா இருக்கிறது! பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ள எழுத்து அதோடு எழுதும் முறையிலும் உயர்ந்த பண்பு! எல்லாவற்றுக்கும் மேலாக எழுதுபவருடைய பெயரிலும்தான் என்ன மனோரம்யம்!

பம்பாய்ப் பணக்காரர்கள் உலகத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்பது வேலை பார்க்கும் ஊழியர்களுக்குத் தெரியும். ஆனால் அன்பே உருவான மனைவிமார்களையும் அப்படித்தான் நடத்துவார்கள் என்று தெரிந்திருக்க நியாயம் இல்லையல்லவ? இதை நினைத்துப் பார்க்கவே, மதுபர்க்க சங்கர சாஸ்திரிக்கு மனம் கூசியது; தலை பம்பரமாகச் சுற்றியது.

அவர் தம் மேஜைக்கெதிரே உட்கார்ந்து கொண் டார். வெற்றுக் காகிதத்தை எடுத்து வைத்துக் கொண்டு பதில் எழுதலானார். என்ன என்னவோ எழுதினார், அடித்தார், திருத்தினார், சேர்த்தார். அப் புறம் காகிதத்தையே கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். பிறகு புதிதாக இன்னொரு காகிதத்தை எடுத்து வைத்துக்கொண்டு மறுபடியும் எழுத முனைந் தார். இரண்டு தடவை பேனாவைக்கூட மாற்றினார். உணர்ச்சி நிறைந்த அவரது உள்ளத்தில் எண்ணங் களுக்குமேல் எண்ணங்கள் அலைமேல் அலையாக எழுந்து மோதலாயின.

கடைசியில் மதுபர்க்க சாஸ்திரியின் இயல்பான அறிவு அவரோடு ஒத்துழைக்க முன் வந்தது. ஸர் மோகன்லாலின் ரசிகத் தன்மையைக் காப்பாற்றிக் கடைத்தேற்றுவதற்காகவே கடவுளாகப் பார்த்துத் தம்மை அவரிடம் அனுப்பி யிருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தார். எந்த எந்த வித்துவான்களுக்கிடையே, தாம் முதல் ஸ்தானம் வகிக்கப் போவதாக அவர் கனவும் கற்பனையும் செய்து வந்தாரோ, அவர்களது பெருமைகளை யெல்லாம் மனத்துள் ஒன்று கூட்டி நிறுத்திக் கொண்டார். தமக்கு வெற்றி கட்டாயம் கிட்ட வேண்டும் என்ற ஆனைமுகனை வேண்டிக் கொண்டு, பிள்ளையார் சுழியையும் பலமாகப் போட்டார். பிறகுதான் காகிதத்தில் பேனாவை ஓட்டலானார்.

‘அன்புள்ள மனோரமாவுக்கு,

உன் கடிதம். விஷயம் தெரிந்து கொண்டேன். எனது வாடிய மனம் மறுபடியும் மலர்ந்தது. என் அன்பே! நீ எப்பொழுது நோய்ப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாய்? இரவு-பகல் எந்நேரமும் எனக்கு இதே சிந்தனைதான். உன்னைக் காண என் உள்ளம் எப்படித் துடிக்கிறது என்பது உனக்கு என்ன தெரியும்? இன்னும் சில தினங்களுக்குள்ளேயே வந்து என் உள்ளத்தின் நிலையைக் கட்டாயம் உன்னெதிரே விண்டு வைப்பேன்.

இப்படிக்கு,

உன்னைக் காணத் துடிக்கும்,
……….’

மதுபர்க்க சங்கர சாஸ்திரி நூறு தடவை படித்து, திருத்தி இந்தக் காதற் கடிதத்தைத் தயாரித்தார். ஆனால் அவருக்கு ஒரே ஒரு சந்தேகம். வறண்ட இதயம் படைத்த ஸர் மோகன்லால் இந்தக் கடிதத்தில் கொட்டியிருக்கும் மென்மலர் போன்ற உணர்ச்சி களுக்கு ஒரு மதிப்பு வைப்பாரோ, மாட்டாரோ என்று! உணர்ச்சியை அவர் கசக்கி எறிந்து விட்டால்….? உள்ளம் இதை எண்ணித் துடித்துக் கொண்டிருந்தது.

ஸர் மோகன்லால் கனிந்த தீயாக உள்ளே வந் தார். தலால் ஸேட்டைக் கூப்பிட்டு என்ன வெல் லாமோ உத்தரவிட்டார். வேறு சிலரைக் கூப்பிட்டுப் பல கடுமையான உத்தரவுகள் போட்டார். பிறகு மதுபர்க்க சாஸ்திரியின் பக்கம் திரும்பி, சாஸ்திரி !” என்றார் அதிகார மிடுக்குடன், ஆணவம் தொனிக்க.

“சார்!”

“டும்மஸுக்குப் போக வேண்டிய கடிதம் எழுதியாகி விட்டதா?”

“தயாரா யிருக்கிறது, சார்!”

“சரி, அதோ குஜராத்தி டைப்ரைட்டர் இருக்கிறது, பாரும்! அதில் அதில் டைப் அடித்து அனுப்பிவிடும். என் கையெழுத்தையும் டைப் செய்தே அனுப்பிவிடும். மாலையில் என் கார் வரும். அதில் உமது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு பாலகேசுவரத்துக்கு வந்து சேரும்!”

இந்தச் சொற்களின் பொருள் சாஸ்திரிக்கு விளங் குவதற்கு முன்னாலேயே ஸர் மோகன்லால் அறையி லிருந்து வெளியேறி விட்டார். அவரது உத்தரவின் பொருள் விளங்கிய பொழுது மதுபர்க்க சங்கர சாஸ்திரிக்கு அவர்மேல் உண்டான ஆத்திரத்தையும் எரிச் சலையும் கணக்கிட்டுச் சொல்லி முடியாது.

3

மதுபர்க்க சங்கர சாஸ்திரி தங்குவதற்கென்று ஸர் மோகன்லாலின் கடற்கரை மாளிகையிலே ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. அங்கிருந்தவண்ணமே அவர் எழும்பி விழும் கடலலைகளின் இனிய இசை ஒலியைக் கேட்க முடிந்தது; குதித்தெழும் அலைகளின் விளையாட்டைக் காண முடிந்தது. புறக் காட்சியைக் கண்டு ஆனந்திக் கும் அதே வேளையில் அவரது அகத்திலும் அதே நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்கி விட்டன. என்ன என்னவோ எண்ணங்கள் ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று

போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு அவரது உள்ளத்தில் எழலாயின.

மனோரமாவுக்கு வயது இருபது இருக்கலாம். அவள் ஸர் மோகன்லாலுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப் பட்டவள். நோய்வாய்ப்பட்டு விட்டது காரணமாக அவள் கடந்த ஓராண்டாக டும்மஸில் வசித்து வந்தாள். என்ன வியாதி, ஏது வியாதி என் பது யாருக்குமே சரிவரத் தெரியாது. வேலைக்காரர்கள் கூட அது சம்பந்தமாக உரக்கப் பேச முடியாமல் தடை விதிக்கப்பட்டிருந்தனர். அதோடு சிறிது காலமாக ஸர் மோகன்லாலின் முதல் மனைவியின் மகன் பிருந்தாவனனும் தன் சிற்றன்னைக்குக் காவலாக அங்கேயே இருக்கலானான்.

மாலையில் பாலகேசுவரத்துக்கு வந்த மதுபர்க்க சாஸ்திரி சுருக்கமாக இவ்விவரங்களைத் தெரிந்து கொண்டார். தமது அறையில் போய் உட்கார்ந்து கொண்ட அவர் கடல் அலைகளின் சேஷ்டைகளைக் கண்டு களிப்பதில் ஈடுபட்டார். அப்பொழுது அவரது கற்பனைக் குதிரையும் கட்டுத் தெறித்துக் கொண்டு ஓடத் தொடங்கி விட்டது.

ஸர் மோகன்லாலின் மனைவி எழிலரசியாகவும் ரசிக உள்ளம் படைத்தவளாகவும் இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் மதுபர்க்க சாஸ்திரிக்குச் சம்சயமே உண்டாகவில்லை. ஆனால் ஸர் மோகன்லாலோ வறட் சியே உருவானராகவும், சிறிதும் ரஸிகத் தன்மையே அற்றவராகவும், பெண்ணின் உள்ளம் புரியாதவராக வும்தான் அவர் கண்களுக்குத் தோற்றம் அளித்தார்.

அவள் எத்தகைய எழிலரசியாக இருப்பாள்? இந்தக் கேள்வி மனத்தில் எழுந்ததுதான் தாமதம்; மகாகவி காளிதாஸரின் சுலோகம் ஒன்றை அவர் உதடுகள் முணுமுணுத்தன. கண்கள் அதை ஓவிய மாகத் தீட்டி, மனோரமாவை அதில் ஆவாகனம் செய்து, கண்டு களித்தன. கண்களை மூடினாலும் அவள் மதிமுகம்; கண்களைத் திறந்தாலும் அவள் மதிமுகம். இந்த இன்பபோதையிலே நினைவிழந்து அவர் எப்பொழுது தூங்கினாரோ, அவருக்கே தெரியாது!

ஆமாம், அவர் கடிதம் எழுதினாரே, என்ன ஆகும்? அங்கிருந்து என்ன பதில் வரும்? அதைப் படித்துவிட்டு ஸர் மோகன்லால் என்ன சொல்வார்? கடவுளே! அவர் எழுதிய கடிதத்துக்கு வரும் பதில் கடிதம், அவர் வேலைக்கு உலை வைக்கக் கூடியதாக. வந்து முடியக் கூடாதே!

இதே சிந்தனைதான் இரவு பகல் எந்நேரமும். ஒருவிதமாக மூன்று நாட்கள் ஓடி மறைந்தன. கடிதமும் வந்து சேர்ந்தது. ஸர் மோகன்லால் அந்தக் கடிதத்தைத் திறந்து பார்க்காமலே மதுபர்க்க சாஸ்திரியின் மேஜை மீது வைத்தார். “சாஸ்திரி! இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு இன்றைக்கே பதில் எழுதி விடுங்கள். தாமதிக்க வேண்டாம்!” என்றும் கட்டளையிட்டார்.

சாஸ்திரிக்கு உயிர் வந்தது. அதோடு அடங்கி யிருந்த ஆத்திரமும் கோபமும் கூடவே வந்தன. ஸர் மோகன்லால் மீது ஏற்பட்ட வெறுப்பு உணர்ச்சி கடுங் கோடையின் உஷ்ணமானிபோல் ஏறியது. இவரும் ஒரு மனிதரா? என்ன அரக்க குணம்! ஒருவேளை ஆண்டவன் இவருக்கு இருதயத்தை வைக்கவே மறந்து விட்டாரோ? இல்லாவிட்டால் இப்படி உணர்ச்சியற்ற பிண்டமாயிருக்கக் காரணம்?

ஸர் மோகன்லால் வெளியே சென்றதும் சாஸ்திரி கடிதத்தைப் பிரித்தார்;

‘அன்பே!

தங்கள் கடிதம் கிடைத்தது. உள்ளத்து உணர்ச்சியை வெள்ளமாகக் கொட்டியிருப்பதைக் காண எந் தப் பெண்தான் விரும்பமாட்டாள்? என் இந்தக் கடிதம் உங்கள் உள்ளத்து வேதனையை அதிகப்படுத்தி விடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை. இத்தனை பெரிய வர்த்தகத் துறையில் உழன்று கொண்டிருந்த பொழுதிலும், தாங்கள் அடியாளை மறக்கவில்லை என்பதைக் காணும்பொழுது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே உண்டாகிறது. தாங்கள் எப்பொழுது வந்து தரிசனம் தந்து என்னை ஆட்கொள்ளப் போகிறீர்கள்? அடியாள் இதை அறியலாமா?

இப்படிக்கு,

தங்கள் பிரிவால் வாடும்
மனோரமா’

மதுபர்க்க சங்கர சாஸ்திரியின் சின்னஞ் சிறு விழிகளில் வெற்றியின் ஒளி பளிச்சிட்டது. அவர் நினைத்தது சரியாகி விட்டது; மனோரமாவைப் பற்றிக் கட்டிய; முடிவு முற்றிலும் உண்மையாகி விட்டது. அவர் நினைத்தது போல் அவள் தீர்ந்த ரசிகை, உணர்ச்சிக்கு ஒரு மதிப்புக் கொடுப்பவள் என்பதும் தெள்ளென விளங்கி விட்டது. ஆனால் அவளது அதிர்ஷ்டத்தை என்ன வென்பது? ரசிகத் தன்மை என்றால் என்னவென்றே அறியாத உணர்ச்சியற்ற ஒரு ஜடத்தின் கையில் சிக்கி அல்லலுற்று அவதியுற்று மனம் வெதும்பிச் சாக வேண். டும் என்றல்லவா அவள் தலையில் எழுதியிருக்கிறது!..ஆனால், நல்ல வேளை! ஆண்டவனாகப் பார்த்து, வாடி வதங்கும் அப்பூங்கொடிக்கு உயிர் ஊட்டுவதற் காகவே, சரியான தருணத்தில் அவரை அனுப்பிவைத்திருக்கிறார். இல்லாவிட்டால் என்ன ஆகும்? நினைக்கவே அவருக்கு மனம் கூசியது.

உலகத்தின் துயரைத் துடைப்பதற்காகத்தானே ஏசுநாதர் சிலுவையில் ஏறினார்? அப்புறம்தானே அவர் மனத்துக்கும் ஒரு நிம்மதி உண்டாயிற்று? இந்த நினைவு மதுபர்க்க சாஸ்திரியின் நினைவில் எழுந்தது. சின்னஞ் சிறு சாத்வீகமான நற்பணிக்காகக் கூடப் பெரும் தியா கங்கள் புரியச் சித்தமாயிருக்கவேண்டும் என்ற சாணக்கிய நீதியை எண்ணி மனத்தைத் திடம் செய்து கொண்டார். பிறகு நடியாத்தைச் சேர்ந்த பிரபல இலக்கியப் பிரும்மாக்களை மனத்துள் வணங்கி விட்டுப் பதில் எழுதுவதற்காகப் பேனாவைக் கையில் எடுத்தார்.

‘ஆருயிரே!

உன் கடிதம் கண்டேன்; ஆனந்தம் கொண்டேன். கடிதமா அது? வர்த்தகத் துறையின் தொல்லைகளில் சிக்குண்டு தவிக்கும் ஒரே காரணத்தினால், உன்னைப் போன்ற ரத்தினத்தைப் பரீட்சிக்காமலே போட்டுவிட்டேன். இப்போதுதான் தெரிகிறது, ஈடு இணையற்ற இன்பத்தை இத்தனை நாளும் அனுபவிக்காமலே இருந்து விட்டோமே என்று! இனி வருந்தி என்ன பயன்? அந்த வருத்தத்தைக் கடிதத்தில்தான் வடிக்க முடியுமா? பொறுமையே பூஷணமான உன் குணம்தான் எனக்கு ஆறுதல் அளித்து மனச்சஞ்சலத்தை நீக்கி ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது.

இன்னும் சில தினங்கள் பொறுத்துக் கொள். நான் கட்டாயம் உன்னை வந்து காண்பேன். அப்புறம் நாம் இருவரும் இணைந்தே வாழ்வோம். காதற் பொய்கையில் ஆனந்த நீராடுவோம், களிநடம் புரிவோம். என் பேச்சைப் பரிபூரணமாக நம்பு.

பிரிவு என்பது ஓர் புதுமைப் பாலம்-அதைப்
பேணி நிற்கும் ஆசைக் கட்டைகள் ஏராளம்
பனிமலர் பெய்திடும் பால்நிலவாம்-அதில்
பிரேமையை வளர்த்திடுமாம் அந்தப் பாலம்.

உன் அன்புள்ள,
மோகன்’

இந்தக் கடிதத்தை அனுப்பிய பின் மதுபர்க்க சாஸ்திரியின் மனம் ஒரு நிலையில் இல்லை. எத்தனையோ சிந்தனைகளுக்கு உள்ளாகி அவரையும் வாட்டி எடுத்தது. உட்காரும் பொழுதும் எழுந்திருக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும் விழித்துக் கொள்ளும் பொழுதும் அவருக்கு மனோரமாவின் நினைவேதான். அந்த நினைவில் பிறர் நலம் பேணிக் காக்கும் நன் நோக்கம் மேலோங்கி யிருந்ததே ஒழியத் தன்னல நோக்கம் சிறிதும் இல்லை.

மூன்றாவது நாள் மறுபடியும் பதில் வந்தது.

‘அன்பே!

கடிதம் கிடைத்தது. நான் சுகமாக இருக்கிறேன். அநேகம் தடவைகள் நான் தங்கள் கடிதத்தைப் படித்தேன். படிக்கப் படிக்கத் தெவிட்டவில்லை. சாதகபட்சிக்குச் சுவாதி நீர் கிடைத்தது போன்ற இன்பத்தைப் பெற்றேன். தங்கள் சொற்களில் மண்டிக் கிடக்கும் இனிமையும் உணர்ச்சியின் தூய வேகமும் என்னை மதிகிறங்க வைத்து விட்டன. சுத்தமான சாத்து வீக அன்புக்காக ஏங்கி நிற்கும் இந்த அடியாளை இத்தனை நாட்களும் ஏன்தான் இப்படிச் சோதித்தீர்களோ, புரியவில்லை! சரி, ஏதோ நடந்தது நடந்து விட்டது. இனி மேலாவது சோதிக்காமல் இருப்பது உங்கள் கையில் இருக்கிறது.

என் அன்பே! அரும்பே! கட்டிக் கரும்பே! நாம் எப்பொழுது நேரில் சந்திப்போம்? கடிதத்தின் வறட்டுச் சொற்களைப் படிப்பதைக் காட்டிலும், நேர்முகமாக உங்கள் இனிய சொற்களையே கேட்க ஆசை கொள்கிறேன். அந்த அரிய வாய்ப்பை எப்பொழுது அளிக்க உத்தேசித்துள்ளீர்கள்?

பொறுமை இழந்து தவிதது உருகும்
மனோரமா’

இதைப் படித்தவுடன் மதுபர்க்க சங்கர சாஸ்திரி யின் உள்ளத்தில் ஆனந்தப் புயலே உருவாகிவிட்டது. பதினைந்து நிமிஷ நேரத்துக்கு அவரது அபிப்பிராயங்களே ஆட்டம் கொடுத்து விட்டன. உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த சிந்தனைச் சுடர் லபக்கென்று அணைந்துவிட்டது. இன்ப வாரிதியின் சல சலப்புமட்டும் சிறிது நேரம் அவரது நரம்புகளுக்குள்ளே கேட்டுக் கொண்டிருந்தது. அவர் வைத்த கண் வாங் காமல் கடிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நாவில் மனோரமாவின் பெயர் நடனமாடியது.

புயலின் வேகம் சற்றுத் தணியவே, அவரது உள்ளத்தில் என்ன என்னவோ எண்ண அலைகள் ஒன்றை ஒன்று அடித்து அழித்துக்கொண்டு எழ லாயின. இந்தக் கடிதப் போக்குவரத்தின் விஷயம் ஸர் மோகன்லாலுக்குத் தெரிந்துவிட்டால்…? அவரது உத்தியோகத்துக்கே ஆபத்து நேர்ந்து விட்டால்…? இதுபோன்ற எத்தனையோ ‘விட்டால்?’ கேள்விகள் அவர் மண்டையைத் துளைத்துவிட்டன. அதோடு இன் னொரு கேள்வியும் அவர் மனத்தைக் குடைந்தது.

‘பிறர் மனைவியுடன் இதுபோன்ற கடிதப்போக்குவரத்து நடத்துவது உசிதமாகுமா?’

விடை காண முடியாத இந்தக் கேள்வி அவரை வெகு நேரம் திக்குமுக்காட வைத்துவிட்டது. கடைசி யில் கடிதம் எழுதும் நேரம் வந்துவிடவே, எல்லாக் கேள்விகளையும் ஒரே அமுக்காக அமுக்கிவிட்டுக் கடமை உணர்ச்சி மேலிட்டு நின்றது. ‘நாம் நமக்காகவா எழுதுகிறோம்? நம் உள்ளத்தில் தீய நோக்கத்துக்குச் சிறிதும் இடம் இல்லை. ஸர் மோகன்லாலிடம் ஊதியம் பெறும் ஊழியன் நாம். அவர் சொல்வதைக் கேட்க வேண்டியது நம் கடமை. கடமையைச் செய்யும்பொழுது தவறு எங்கிருந்து வந்தது?’ இவ்வாறு தமது மனத்தைப் பலமுறை சமாதானப்படுத்திக் கொண்டு அவர் கடமையிலே கண்ணானார்.

பம்பாய்க்கும் டும்மஸுக்குமிடையே இனிய காதற் கடிதங்கள் வளர்ந்தன; அன்புப் பரிவர்த்தனை அமோகமாக நடந்தது. மதுபர்க்க சாஸ்திரி ஏழாவது வானத்திலே மிதக்கத் தொடங்கி விட்டார். காலையில் எழுந்ததும் அவர் வந்த கடிதங்களைப் பாராயணம் செய்வார். பகல் வேளைகளில் அவற்றைச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு தமது ஞாபக சக்தியை வளர்ப்பதில் முனைவார். மாலை வேளைகளில் மறுபடியும் ஒரு முறை பாராயணம் செய்துவிட்டு இரவு வேளைகளில் அரைகுறைக் கனவில் அவற்றையே உருப்போட்டு உரக்கப் படிப்பார்.

மதுபர்க்க சாஸ்திரிக்குத் தமது கடமை உணர்ச்சி யில் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைக்கு வெற்றி கிட்டுவதாகத் தோன்றவே, அவரது உள்ளம் ஆனந்த நர்த்தனம் புரியத் தொடங்கி விட்டது. கல் அணை உடைத்துக் கொண்டு விட்டால் நீர்ப்பிரவாகம் வெகு வேகமாகப் பீறிக்கொண்டு வெளி வருகிறதல்லவா? அதேபோல் ஸர் மோகன்லாலின் வறட்சி மனப்பான்மை யெல்லாம் இருந்த இடம் தெரி யாமல் மறைந்துவிட்டது என்ற எண்ணம் ஏற்படவே, மனோரமாவின் உள்ளமும் எழுதுகோலும் ஒருங்கே சேர்ந்து நாற்புறங்களையும் இனிமையும் பசுமையும் தோய்ந்தனவாகச் செய்துவிட்டன் என்றே எண்ணினார் மதுபர்க்க சங்கர சாஸ்திரி.

ஒரு சாதாரண குஜராத்திப் பெண்மணி வெகு அழகாகவும் பண்பு தோயவும் காதற் கடிதங்கள் எழுதுவதில் கைகாரியாக இருக்கிறாள் என்பதை எண்ணியபொழுது, இலக்கிய உள்ளம் படைத்த மதுபர்க்க சங்கர சாஸ்திரியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரையே சொரியலாயின. அதோடு அவளது கடைசிக் கடிதம் எல்லாவற்றையும் தூக்கியடிக்கக் கூடியதாக உயர்ந்த. முறையில் அமைந்து விட்டது.

‘உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மோகன்,

தங்கள் பிரிவால் வாடும் இந்த மனோரமாவின் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். என் ஒவ்வொரு மயிர்க்காலும் உங்கள் பெயரையே நாமஸ்மரணைசெய்து கொண்டிருக்கின்றன. இலக்கிய வல்லுநர்களது குர லோடு குரல் சேர்ந்து என் உள்ளமும் ஒத்துப் பாடிக் கொண்டிருக்கிறது.

தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரையைத்
தவிக்கவிட்டுப் பறந்துசெல்லும் வண்டுபோல
கானகத்தில் கதறி அழும் கோபியர்களைக்
கலங்கவைப்பது ஞாயமா, கண்ணா ஞாயமா?

என் உள்ளம் உருப்போடும் இந்த ஆசை எப் பொழுது நிறைவேறும்? உள்ளத்துப் புயல் எப்பொழுது ஓயும்? அடுத்த சனிக்கிழமை வருவதாகத் தாங்கள் வாக்களித்துள்ளீர்கள். கட்டாயம் வருவீர்கள் அல்லவா? என் மனம் பொறுமை இழக்கிறது. நீங்கள் வராவிட்டால் நானே நேரில் வந்து விடுவேன்.

பொறுமை இழந்துவிட்ட
மனோரமா’

இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த பொழுது மதுபர்க்க சங்கர சாஸ்திரியின் கையிலிருந்த உறையிலிருந்து இன்னொரு காகிதம் கீழே விழுந்து காற்றில் சலசலத்தது. அதில் எழுதியிருந்தது:

‘வாடத் தொடங்கிவிட்ட என் உள்ளப் பூங்காவுக்குப் புத்துயிர் ஊட்ட முற்பட்டிருக்கும் ரசிக சிகாமணியான தோட்டக் கலைஞரே! நீங்கள் எத்தனை நாட்கள்தான் என் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் மறைமுக மனமோகனனாக இருக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? போதும், இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு. அடுத்த சனிக்கிழமை யன்று உள்ளத்தோடு உள்ளம் ஒட்டவும், கண்ணோடு கண் நோக்கவும் வேண்டும்; நம்மிருவருக்கும் இடையே நெருங்கிய அறிமுகமும் கிட்ட வேண்டும். அதற்கான வழிவகை கோலுங்கள். நான் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு, முதல் மாடியில் உள்ள என் அறையில் உங்கள் பெயரை உருப்போட் டுக் கொண்டே உங்களுக்காக வழிமேல் விழிவைத்த வாறு காத்திருப்பேன், காத்திருப்பேன்.’

இந்தக் கடிதத்தைப் படித்ததும் மதுபர்க்க சாஸ்திரிக்குத் தலை சுற்றியது. நஞ்சுள்ள நாகத்தைக் காலால் மிதித்து விட்டது போன்ற உணர்ச்சியில் ஒரு துள்ளுத் துள்ளிக் குதித்தார். ஆனால் அடுத்த கணம் அதற்கு நேர்மாறான நிலையை அடைந்தார். பழைய ஓட்டைக் குடிசை, ரத்தினம் பதித்த மாளிகையாகக் காட்சி அளித்தபொழுது அலாவுத்தீனுக்கு என்ன உணர்ச்சி உண்டாகியிருக்குமோ, அதுவே அவர் உள்ளத்தை நிறைத்தது. இனிமை நிறைந்த இத்தனை இன்பக் கடிதங்களும் ஸர் மோகன்லாலுக்காகவா எழுதப்பட்டன? அவரைக் காண்பதற்காகவா அத்தனை துடிதுடிப்பும் பரபரப்பும் அக்கடிதத்தில் தொனித்தன? ஆவல் உந்த அந்தத் தாமரையாள் மகரந்தத்தை நாடி வரும் மலர் வண்டுக்கல்லவா அந்த அழைப்பை விடுத்திருந்தாள்! இந்த எண்ணம் உதித்ததும், உடலோடு அவர் உள்ளமும் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கி விட்டது.

ஆனால் மதுபர்க்க சாஸ்திரி நல்ல அறிவாளி, சாமர்த்தியசாலியும்கூட. தமக்கும் மனோரமாவுக்கும் ஏற்பட்டுள்ள இந்த உறவு ஒரு புதிய பயங்கர உருவம் தரித் துக் கொண்டுவிடக் கூடாதே என்ற கவலையும் அவருக்கு இல்லாமல் இல்லை. எனவே, ஸர் மோகன்லா லின் மனைவியோடு தாம் தனித்துத் தெரியாமல் சந்திக்கலாமா, கூடாதா என்ற கேள்விஅவர் உள்ளத்தில் எழுந்தது. அதைத் தொடர்ந்தாற்போல் நடியாத் கிராமத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு செல்லும் இல்லக் கிழத்தி கண்ணெதிரே வந்து நின்றாள்.

ஒரு புறம் ரசனை நிறைந்த காதலன் கிடைக்காமையினால் உருகி உருகிச் சாகும் பம்பாய் அழகி; இன்னொரு புறம் கணவனே கதி, அவனே தெய்வம் என்றிருக்கும் கிராமப் பெண். ஒரு புறம் காவியம், ரசனைத் திறன்; ஈடு இணையற்ற ஆத்மானந்தம். இன்னொரு புறம் கற்பு நிலையின் பெருமை, நன்மை தீமைகளை ஆய்ந்தறியும் விவேகம்; வருங்காலச் சந்ததிகள்மீது மாசுபடியுமோ என்ற பயம். இப்படியாக ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு அவர் கண்ணெ திரே வந்து நின்றன.

ஆனால் மனோரமா களங்கமே சிறிதும் அற்றவளாக ஏன் இருக்கக்கூடாது என்ற எண்ணமும் எழுந்தது.

ரசிக உள்ளத்தின் ஊற்றுப் பெருக்கு வறண்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவள் ஒரு ரசிக சிரோமணியைக் காண விரும்பியிருக்கலாம் அல்லவா? இதில் என்ன தவறு? பாவம்தான் ஏது ?

அதுமட்டும் அல்ல; மதுபர்க்க சாஸ்திரியின் உள்ளங்கூடத்தான் சுத்தமாகவும் சாத்விகமானதாகவும் இருந்தது. அவருக்கு ஒரு பற்றுதலும் கிடையாது. பலன் ஏதும் விரும்பாமலே கர்மயோகத்தில் ஈடுபடத் தயாராயிருந்தார். மனோரமாவைச் சந்தித்து அவர் இரண்டொரு வார்த்தைகள் பேசுவாரானால், மனோரமாவுக்கும் நன்மை ஏற்படும்; அவர் மனத்துக்கும் அமைதி கிட்டும். இதில் அவர் தமது சகதர்மிணிக்கு என்ன துரோகம் செய்யப்போகிறார்? அவர் தம் சகதர்மிணி யைச் சேர்ந்தவர்தான ; என்றென்றும் சேர்ந்தவராகவே இருக்கப் போகிறவர்தாம்.

இத்தகைய எண்ணப் போராட்டங்களுக்குப் பிறகு, அவரது தளர்ந்த மனம் உறுதிப்பட்டது. இதே சமயம் ஸர் மோகன்லாலும் “சாஸ்திரி! நாளை மறு நாள் சனிக்கிழமை நீங்களும் என்னோடு டும்மஸுக்கு வரவேண்டியிருக்கும்!” என்று சொல்லிப்போனார்.

4

சனிக்கிழமை அன்று மதுபர்க்க சங்கர சாஸ்திரி போட்ட திட்டப்படி குறித்த நேரத்துக்கு ஸர் மோகன் லாலுடன் டும்மஸை அடைந்தார்.

அவர், மாளிகையின் வாசலிலேயே படைப்புக் கடவுளின் அற்புத சிருஷ்டியான புதிர்ப் பெண்ணைக் காணப்போகிறோம் என்று எண்ணியிருந்தார். ஆனால் அவளுக்குப் பதிலாக ஸர் மோகன்லாலின் முதல் மனைவியின் மகனான பிருந்தாவனனைத்தான் அவர் காண முடிந்தது.

அவருக்குக் கீழ்த் தளத்திலேயே மாடிக்குப் பக்கத்திலேயே ஒரு அறை ஒழித்துக் கொடுக்கப்பட்டது. முதல் மாடியில் ஒருபுறம் மனோரமாவின் அறையிருந்தது. மறுபுறம் நர்ஸின் அறை இருந்தது. ஸர் மோகன்லாலும் பிருந்தாவனனும் இரண்டாவது மாடியில் தூங்குவதாகத் திட்டம்.

பேச்சு வாக்கில், உடல் நிலை சரியில்லாததனால் மனோரமா தன் அறையிலிருந்து வெளியே வரவேயில்லை என்றும், அன்று இரவு நர்ஸ் தன் சொந்த வேலையாகச் சூரத்துக்குப் போகப்போகிறாள் என்பதும் சாஸ்திரிக்குத் தெரியவந்தன. சூழ்நிலை தமக்குச் சாதகமாக அமைவதைக் கண்டு மதுபர்க்க சங்கர சாஸ்திரிக்கு ஆனந்தம் நிலைகொள்ளவில்லை. யார் எனன பேசுகிறார்கள் என்பதைக்கூட அவர் காதுகளில் சிறிதும் வாங்கிக் கொள்ளவில்லை.

மணி ஒன்பது அடிக்கவில்லை. அதற்குள்ளாக மதுபர்க்க சாஸ்திரி நிமிஷங்களை எண்ண ஆரம்பித்து விட்டார். நேரம் நெருங்க நெருங்க அவர் உள்ளத் துடிப்பு அடங்கி ஒடுங்கலாயிற்று.

ஆனால் அவரது ரசிகத்தன்மை படைத்த உள்ளம் அவரைத் தூங்கவும் விடவில்லை; சும்மா ஓய்ந்திருக்கவும் விடவில்லை. மனோரமாவைப் பார்த்துப் பேசும் சந்தர்ப்பம், அவளைப்போன்ற ரசிகத்தன்மை நிறைந்த பெண்ணோடு பேசுவதனால் ஏற்படக்கூடிய பயன், தமது பாண்டித்தியத்தையும் ரசிகத்தன்மையையும் காட்டுவதற்காகக் கிடைத்திருக்கும் பொன்னான தருணம் ஆகியவற்றைக் கை நழுவ விடுவது கூடாது என்று எச்சரித்துக் கொண்டிருந்தது. அப்படிச் செய்வதானது வருங்காலச் சந்ததியர்களுக்குத் தீங்கிழைப்பதாக முடியும் என்றும் அறிவுறுத்திக் கொண்டிருந்தது. ரசிகத்தன்மை வாய்ந்த பெண் ஒருத்தி தன் வெட்கம் மானத்தை விட்டு விட்டு, அவரை அழைத்திருக்கிறாள். அவர் அதை மறுத்தால் பயங்கொள்ளித்தனமாக முடியாதா?

அறையில் இருந்த கடிகாரம் பதினொன்றரை அடித்தது. மதுபர்க்க சங்கர சாஸ்திரி எழுந்து நின்றார். வெகு நேரம் ‘போவதா, வேண்டாமா?’ என்று யோசித்தார். ‘நாம் தன்னல நோக்கத்தோடு முன்னேறவில்லை’ என்ற எண்ணம் அவருக்கு மனோதிடத்தை அளித்தது.

அவர் வராந்தாவைப் பார்த்தார். அங்கு யாரும் இல்லை. மாடிப்படியை ஒரு கோட்டம் விட்டார்.க அங்கும் யாரும் இல்லை. இடம், பொருள், ஏவல் எல்லாம் அவருக்கு அநுகூலமாக இருந்தன. அவர் மெதுவாக மாடிப்படி ஏறலானார்.

அவர் கால்கள் எழும்ப மறுத்தன. உள்ளம் தளர்ந் வெட்கம் வேறு சேர்ந்து கொள்ளவே, அவர் உடல் முழுவதும் வியர்த்து விறுவிறுத்து விட்டது. அவருக்கு இருந்த மனக் கலவரத்தில் ஒன்றும் புரியவில்லை. அவர் தம் மனத்தை ஒருமைப்படுத்த முனைந்தார். அவர் முனைய முனைய அது பல முனைகளிலும் பரவிப் பரவி அவரை அச்சத்துக்கு ஆளாக்கியது. அப்புறம் அவர் கண்களுக்கு ஒரே வழிதான் தோன்றியது. ‘நல்லவனாகக் கீழே இறங்கிப் போய் விடுவதுதான் நலம்’ என்பதுதான் அந்த வழி.

ஆனால் கால்கள் முன்னுக்கும் போகமாட்டோம், பின்னுக்கும் போகமாட்டோம் என்று சத்தியாக்கிரஹம் செய்யத் தொடங்கி விட்டன. நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துண்டினால் துடைத்துக்கொண்டார். பிறகு துணிவையெல்லாம் ஒன்று கூட்டிக்கொண்டு மீண்டும் படியேறினார். மெதுவாகக் கதவைத் தள்ளினார். அது திறந்து கொண்டது. நிலைப்படியில் நின்று கொண்டு மேலே கீழே நாற்புறமும் ஒரு முறை பார்த்தார். எங்கும் பூரண அமைதி நிலவியிருந்தது. அவர் அறைக்குள் நுழைந்தார். ஒருபுறம் விடிவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அழகான மெத்தையில் யாரோ படுத்துக் கொண்டிருந்தார்கள்.

மதுபர்க்க சாஸ்திரிக்கு இரக்கம் உண்டாயிற்று. ‘பாவம், எத்தனை நேரம் நமக்காக வழி மேல் விழி வைத்த வண்ணம் காத்துக் கிடந்தாளோ? கடைசியில் களைத்துத் தூங்கிப் போயிருக்கிறாள்! பிறரைக் கல் நெஞ்சர் என்று சொல்லிவிட்டு, நாமே எத்தனை கல் நெஞ்சினனாக ஆகிவிட்டோம்?’ என்று தம்மைத் தாமே நொந்து கொண்டார்; நிந்தித்துக்கொண்டார்.

அறையில் அமைதியின் பரிபூரண ஆட்சி நடந்து கொண்டிருந்தது. கட்டிலிலிருந்து படுத்திருப்பவர் மூச்சு விடும் மெல்லிய தொனி மட்டுமே கேட்டது.

கட்டிலை நெருங்கிய மதுபர்க்க சாஸ்திரி கண நேரம் பேசாமல் நின்றார். பிறகு துணிவை வரவழைத்துக் கொண்டு போர்வையைத் தொட்டு ‘மனோரமா!’ என்று கூப்பிட வாய் எடுத்தார். அதற்குள் கட்டிலிலிருந்து யாரோ குதித்து எதிரே வந்து நின்றார்கள்.

நின்று கொண்டிருந்தது ஆண் அல்ல; பெண். அந்தப் பெண் உருவம்தான் என்ன கோரம்! நோயினால் கறுத்துக் கன்னிப்போன தோல், உலர்ந்து ஒட்டிப் போன உடல், பைத்தியக்காரர்களைப் போல் பேந்தப் பேந்த விழிக்கும் கண்கள், இத்தகைய பயங்கர அழகைப் பெற்றிருந்த மனோரமாவைப் பார்த்ததும் மது பர்க்க சாஸ்திரிக்குச் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

“ஏண்டா! உன் சிற்றன்னைக்கு விஷமா கொடுக்க வந்திருக்கிறாய்? உன் உயிரை வாங்கிவிட்டு மறு காரியம் பார்க்கிறேன், பார்!” என்று ஆவேசத்துடன் கூறினாள் அவள்.

அவ்வளவுதான், மதுபர்க்க சாஸ்திரிக்கு உதறல் எடுத்தது. அவர் உடல் வியர்வையினால் சொட்டச் சொட்ட நனைந்து விட்டது. மனோரமா பெண் புலியாகி அவர் மீது பாய்ந்தாள். நிலைமை மிகவும் இசை கேடாகி விட்டது. உதவிக்கு யாரையாவது கூப்பிடலாம் என்றால் எப்படிக் கூப்பிடுவது? அவரது ரகசியங்கள் அம்பலமாகி விடாதா? எனவே, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திக்குமுக்காடினார். தமக்கும் மனோரமாவுக்கும் இடையே நிகழப் போகும் பெரும் போர் அவரது கண்ணெதிரே விசுவரூபமெடுத்து நிழற்காட்சியெனப் பல காட்சிகளைக் காட்டி நின்றது.

நிகழப்போகும் இந்தப் போரின் பொழுது, அவர் வணங்கி வழிபடும் இலக்கியப் பிரம்மாக்கள், அமரர்கள் வாழும் வானுலகத்திலிருந்து பார்த்து ரசிப்பார்களா? அவரது யுத்த சாதுரியத்தைப் புகழ்வார்களா? இதையெல்லாம் அவரால் அப்பொழுது கற்பனைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. சொர்க்கவாசி களான தேவர்கள் மகாபாரதம் நிகழும்பொழுது பூமாரி பொழிந்தார்களாமே, அப்படி இங்கேயும் நிகழுமா? இதையும் அவரால் சிந்தித்துப் பார்க்க இயலவில்லை.

ஒரே பாய்ச்சலில் மதுபர்க்க சாஸ்திரி அறைக்கு வெளியே வந்தார். திரும்பிக்கூடப் பாராமல் கடகட வென்று இறங்கிக் கீழ்ப் படிக்கு வந்தபின்தான் மூச்சே விட்டார். வந்த வேகத்தில் வேட்டியும் சொக்காயும் நாதாங்கியில் மாட்டிக் கொண்டு கிழிந்தது கூடத் தெரியவில்லை. தலைதெறிக்க ஓடித் தற்காப்புக்கு முயன்றதில் மதுபர்க்க சாஸ்திரி உயிர்ப்பிணமாகவே படியருகில் உட்கார்ந்து விட்டார்.

சிறிது நேரத்துக் கெல்லாம் இரண்டாம் மாடியிலி ருந்து இனிய குரலில் பிருந்தாவனன் தெம்மாங்கு மெட் டில் பாடுவது கேட்டது.

“நள்ளிரவின் அமைதியிலே
காரிருள் மண்டிக்கிடக்கையிலே
கண்ணிரண்டும் இமைக்காத
காதலர் கதை கேளுமையா!”

பாட்டைக் கேட்டதும் மதுபர்க்க சங்கர சாஸ்திரியின் மனத்திலே ஒரு மின்னல் பளிச்சிட்டது. மனோரமாவுக்கு என்ன ரகசிய நோய் ஏற்பட்டிருந்ததென்றும், கடிதங்கள் எல்லாம் யார் சொல்லி யார் எழுதியிருக்க வேண்டும் என்ற விவரங்களும் அதன் ஒளியில் தெள்ளென விளங்கின. மேலே இரண்டாவது மாடியிலே உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்த பிருந்தாவனன்தான் நர்ஸைக் கொண்டு இந்த நாடகம் நடத்தியிருக்க வேண்டும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை யென்றால் மதுபர்க்க சாஸ்திரி தம்மை இலக்கிய பிரம்மாக்கள் கோஷ்டியில் ஆதாரப் புள்ளியாக எப்படி நினைத்துக் கொள்ள முடியும்?

விடியற்காலையில் சூரத் ஸ்டேஷனில் ஒரு இளைஞர் பம்பாய்க்கு டிக்கட் வாங்கிக்கொண்டிருந்தார். இரவு தூக்கமில்லாத காரணத்தினால் மிகவும் களைப்புற்றுக் காணப்பட்ட அந்த இளைஞர் வேறும் யாரும் இல்லை; மதுபர்க்க சங்கர சாஸ்திரியேதான்.

– குலப்பெருமை, கே.எம்.முன்ஷி, தமிழாக்கம்: ரா.வீழிநாதன், முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரதி பதிப்பகம்,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *