அது வியாபாரமல்ல!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 7,114 
 
 

ராதாகிருஷ்ணன், காந்தியை உற்றுப் பார்த்தார். அவன் கண்கள் கலங்கி இருந்தன. அப்பாவைப் பார்க்கச் சங்கடப்பட்டன.

ப்ளஸ் டூவில் 95 சதவிகிதம் எதிர்பார்த்திருந்தான். பிரச்னை எதுவும் இல்லாமல், ஓப்பன் கோட்டாவில் மருத்துவம் படிக்க முடியும் என்று நினைத்திருந்தான். ஆனால், 40 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதில், ஆடிப் போய்விட்டான். மருத்துவம் படிக்க முடியுமா, ஸீட் கிடைக்குமா என்கிற சந்தேகம் அவனுக்குள்!

ராதாகிருஷ்ணனுக்கும் வருத்தம்தான். ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை. ஏற்கெனவே மன பாரத்தில் இருக்கும் மகனை மேலும் தண்டிப்பது போலாகும் என்று நினைத்தார்.

நன்றாகப் படிக்கக்கூடியவன்தான். பரீட்சைக்கும் சிறப்பாகத்தான் தயார் செய்துகொண்டு போயிருந்தான். ஆனாலும் எப்படியோ, மதிப்பெண்கள் குறைந்துவிட்டன.

”சரிப்பா! நான் இன்ஜினீயரிங் படிக்கிறேன். ஏரோநாட்டிக்கல் படிக்கிறேம்ப்பா..!”

ராதாகிருஷ்ணன் சிரித்தபடி தலையை ஆட்டினார். ”இல்லப்பா! நீ டாக்டருக்குப் படிக்கணும்கிறது இந்த கம்பவுண்டர் அப்பாவோட கனவு! உனக்குக் கண்டிப்பா ஸீட் கிடைக்கும். அதுக்கு நான் கேரன்ட்டி! எம்.பி.பி.எஸ். படிக்கிறதுக்கு உன்னைத் தயார்படுத்திக்கோ!” என்றார் உறுதியான குரலில்.

மகனை டாக்டராக்கிப் பார்க்கவேண்டும் என்பது ராதாகிருஷ்ணனின் இருபது ஆண்டுக் கனவு. தன் துறையிலேயே மகனும் இருக்க வேண்டும் என்கிற எண்ணமோ, மகன் டாக்டராகி பங்களா, கார் என்று வசதியாக வாழ வேண்டும் என்கிற ஆசையோ அதற்குக் காரணம் அல்ல.

நாற்பதாண்டு கால கம்பவுண்டர் வேலையில் அவர் நிறையப் பார்த்துவிட்டார். அரசாங்க சம்பளத்தைத் தாண்டி, கட்டு கட்டுவதற்கோ ஊசி போடுவதற்கோ எக்ஸ்ட்ராவாக ஒரு ரூபாய்கூட வாங்கியது இல்லை. சைக்கிளில் தொடங்கிய அவரது கம்பவுண்டர் வாழ்க்கை, இப்போது மொபெட்டில் நிற்கிறது. ராதா சார் என்றால், சுற்றுப்பட்ட ஊர்களில் ரொம்ப மரியாதை. அவருக்குப் பங்களாவும் ஒன்றுதான்… தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் குடிசைப் பகுதியும் ஒன்றுதான்.

அவர் கட்டுப்பாடாக இருந்தாலும், இந்தத் துறையில் நிறைய அத்துமீறல்களைப் பார்த்துவிட்டார். ஆபரேஷன் தியேட்டரில் நோயாளியை சீரியஸான நிலையில் வைத்துக்கொண்டு பேரம் பேசிய டாக்டர்களைத் தெரியும். சுகப் பிரசவத்தை வேண்டுமென்றே தவிர்த்து, பணத்துக்காக சிசேரியன் நோக்கிப் பிரசவங்களைக் கொண்டு செல்லும் டாக்டர்களை அறிவார். கொஞ்சம்கூட மனசாட்சியோ, இரக்கமோ இன்றி ஐயாயிரம் கொடு, பத்தாயிரம் கொடு என்று ஏழைகளிடம் காசு பிடுங்கும் மருத்துவர்களையும் பார்த்திருக்கிறார்.

அந்த வெறுப்புதான், அவரை அப்படி ஒரு முடிவெடுக்கத் தூண்டிற்று. ‘என் மகனை டாக்டருக்குப் படிக்க வைப்பேன். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யச் சொல்வேன். மருத்துவம் என்பது வியாபாரமல்ல, சேவை என்பதை என் மகன் மூலமாகப் புரியவைப்பேன்!’

அவரின் அந்த சமூக சேவைக் கனவுக்குதான் இப்போது 40 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஆபத்து வந்திருக்கிறது.

அந்த சுயநிதிக் கல்லூரியில் மருத்துவம் படிக்க ஸீட் கிடைத்ததை, காந்தியால் நம்ப முடியவில்லை.

பத்து நாட்கள் காணாமல் போய், திடுமென அட்மிஷன் கடிதத்தோடு வந்து நின்ற அப்பாவை வியப்பாகப் பார்த்தான்.

”எப்படிப்பா..? இந்த காலேஜ்ல மெடிக்கல் படிக்கணும்னா, சுளையா 50 லட்சத்தை எடுத்து வைக்கணுமேப்பா..!”

”சீச்சீ..! உன் அப்பா ஒரு பைசா கொடுக்கலை!”

”பின்னே எப்படி..?”

”இதோ பார் காந்தி, 40 வருஷம் கம்பவுண்டரா இருக்கேன். எத்தனை டாக்டர்களை எனக்குத் தெரியும்! இப்ப இருக்கிற சேர்மனோடு மூணு வருஷம் வேலை பார்த்திருக்கேன். அவர் கிட்டே நம்ம நிலைமையை எடுத்துச் சொன்னேன். உன் மார்க்கையும் சொன்னேன். கேப்பிடேஷன் பீஸ் வேணாம், அட்மிஷன் பீஸ் மட்டும் கட்டினா போதும்னுட்டாரு. அங்கே இங்கே அலைஞ்சு திரிஞ்சு, கிராமத்துல இருந்த நம்ம வீட்டை ஒரு நல்ல விலைக்கு வித்துட்டேன். சரி, ஸீட் கிடைச்சுடுச்சு! இனிமே, உன் கையிலதான் இருக்கு. கவனமா படிச்சு, நல்ல மார்க் எடுத்து, அப்பாவோட கனவை நனவாக்கணும். சரியா?”உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனார் அப்பா.

அவர் சொன்னதை நம்ப முடியாமல், அவரையே பார்த்துக்கொண்டு இருந் தான் காந்தி.

எம்.பி.பி.எஸ்., சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடின. கனவு மெய்ப்பட்டதில், காந்திக்கு ரொம்பவே சந்தோஷம். அப்பாவின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான். பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்திப் படித்தான்.

சக மாணவர்கள் அனைவரும் நல்ல நெருக்கமாக இருந்தார்கள். கேப்பிடேஷன் இல்லாமல் ஸீட் கிடைத்தது என்பதை நம்ப மறுத்தார்கள்.

”சரவணனோட அப்பா ஹெல்த் மினிஸ்டரில இருக் காரு. அவருக்காக அஞ்சு லட்சம் குறைச்சுக்கிட்டாரு சேர்மன். அவ்வளவுதான்..! மத்தபடி இந்த காலேஜ்ல கேப்பிடேஷன் பீஸ் இல்லாம ஸீட் கிடைக்கிறதுக்கு சான்ஸே இல்லை!” என்று அடித்துச் சொன்னார்கள்.

காந்திக்குக் குழப்பமாக இருந்தது. இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்களே… பிறகு எப்படித் தனக்கு மட்டும் பணம் இல்லாமல் ஸீட் கிடைத்தது? சேர்மனோடு வேலை பார்த்தேன் என்றாரே, அப்பா! அதற்காக ஸீட் கொடுத்திருப்பாரா என்ன? அப்பா பொய் சொல்கிறாரா? பொய் என்றால், அவ்வளவு பணம் அப்பாவுக்கு ஏது?

கல்லூரி நிர்வாகத்துக்கு வேண்டப்பட்டவர்களோடு பேசியபோது, 50 லட்சம் கொடுத்துதான் அப்பா ஸீட் வாங்கியிருக்கிறார் என்கிற உண்மை காந்திக்குத் தெரிந்தது.

இதை ஏன் தன்னிடம் மறைத்தார்? அத்தனை பணம் கொடுத்து ஸீட் வாங்கியது தெரிந்தால், மனசு கஷ்டப்படுவேன் என்றா? சரி, அவ்வளவு பணத்தை எப்படிப் புரட்டினார்?

அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று காந்தி யோசித்துக்கொண்டு இருக்க… மூன்றாவது நாள் அப்பாவுக்குக் கடும் ஜுரம் வந்தது. எந்த மருந்துக்கும் மாத்திரைக்கும் ஜுரம் கட்டுப்பட மறுத்தது. ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஒரு வாரம் தாண்டியும் ஜுரம் நீடிக்கவும், காரணம் புரியாமல் காந்தி கவலையோடு டாக்டர்களிடம் விசாரித்தான்.

”கிட்னி டொனேட் பண்ணினா, ஒரு மாசம் ரெஸ்ட்ல இருக்கணும். அவர் ஒரு வாரம்கூட வீட்ல இல்லை. அதான், பங்கஸ் அட்டாக் ஆகியிருக்கு!”

துடிதுடித்துப் போனான் காந்தி.

”ஏம்ப்பா..?”

படபடத்த காந்தியைப் பார்த்துப் புன்னகைத்தார் ராதாகிருஷ்ணன். அவன் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்த்து, உள்ளுக்குள் பதறினார். ஆறுதலாக அவனது கைகளைப் பிடித்துக்கொண்டார்.

நடுங்கும் குரலில் பேசினார்… ”கடைசி வரைக்கும் உனக்குத் தெரியக் கூடாதுன்னு நெனச்சேன். ரெண்டே மாசத்துல தெரிஞ்சுட்டுது. கிராமத்து வீட்டை வித்து, நாலு இடத்துல கடன் புரட்டியும்கூட நாற்பது லட்சம்தான் தேறிச்சு. அப்பதான் ஒரு பணக்காரருக்குக் கிட்னி வேணும்னு பேப்பர்ல விளம்பரம் படிச்சேன். உடனே ஓடினேன். என்னோட ப்ளட் குரூப்பும், கிட்னியும் அவருக்குப் பொருந்தும்னு டெஸ்ட் ரிப்போர்ட் சொல்லுச்சு. என் சூழ்நிலையை அந்தப் பணக்காரர்கிட்டே விளக்கமா எடுத்துச் சொன்னேன். பத்து லட்சம் கொடுத்தாரு!”

”அப்படி எதுக்குப்பா எனக்கு இந்த மெடிக்கல் ஸீட்? இதை ஏம்ப்பா என்கிட்ட சொல்லலே?”

”காரணமாதான்ப்பா! பணம் கொடுத்து ஸீட் வாங்கி டாக்டருக்குப் படிச்சோம்கிற எண்ணம் உனக்குள்ளே பதியக் கூடாது. அப்படிப் பதிஞ்சா, போட்ட 50 லட்சத்தை எவ்வளவு சீக்கிரம் திருப்பி எடுக்கலாம்னு மனசு அலைபாயும். என் லட்சியம், கனவு உனக்குத் தெரிஞ்சிருந்தாலும், நூறு கொடு, இருநூறு கொடுன்னு ஏழைங்ககிட்ட காசு பிடுங்கத் தோணும். அதை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலப்பா! அதனாலதான் இந்த விஷயம் உனக்குத் தெரியவே கூடாதுன்னு நெனச்சேன். நான் குணமாகி வரேன், வரலே… இப்ப அது இல்லே பிரச்னை. நான் பணம் கொடுத்து ஸீட் வாங்கினேன்கிறதை இந்த நிமிஷத்தோடு மறந்துடு. உன் டாக்டர் படிப்பு ஏழை மக்களுக்குப் பயன்படணும். இதை ஒரு சேவையாதான் நீ நினைக்கணும். செய்வியாப்பா?”

ராதாகிருஷ்ணன் மகனை நோக்கிக் கையை நீட்டினார். அப்பாவின் முகத்தையே பார்த்தான் காந்தி. இப்படியும் ஒரு மனிதரா? அப்பா குறித்து அவனுக்குப் பெருமையாக இருந்தது.

நீட்டிய அவரது கையில் தன் கையைப் பதித்தான். திருப்தியாகக் கண்களை மூடிக்கொண்டார் அப்பா.

– 23rd ஜனவரி 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *