அதனதன் வாழ்வு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 15,014 
 
 

ராமையா தட்டில் இருந்த சோற்றை உண்ணாமல் கைகளால் அதனை அளைந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தார். கொஞ்ச காலமாகவே அப்படித்தான் இருக்கிறார். நாச்சார் அவரைச் சலிப்புடன் பார்த்தாள். மனைவிமார் புருஷன்மாரைப் பார்க்கிற பார்வைகள் ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஏற்ப மாறுகின்றன. கல்யாணம் முடிச்ச புதுசில் எதுக்கெடுத்தாலும் சிரித்த படி ஒரு நாணப் பார்வை. பிள்ளை பெற்ற பின் கொஞ்சம் பெருமிதம் கலந்த அலட்டல் பார்வை. அது மெதுவாக அதட்டல் பார்வையாக மாறி, வருடங்கள் சில சென்றதும் சலிப்புப் பார்வையாக, எரிச்சல் பார்வையாக மாறிவிடுவது இயல்பாக இருக்கிறது. நாச்சாரும் அதில் விதிவிலக்கு அல்ல. சமீப காலமாக நாச்சார் மனசில் ஒரு குற்ற உணர்ச்சியும் சேர்ந்துகொள்ள… அவள் மொத்த உலகையும் ஒரு வித சலிப்பும் எரிச்சலும் கொண்டவளாகவே பார்த்து வருகிறாள்.

‘சோத்தை தட்டுல போட்டுக்கிட்டு என்ன யோசனை? கிண்டுறதை நிப்பாட்டிட்டுத் தின்னு…’

”ப்ச்! சாப்பிடலாம்… சாப்பிடலாம்… நிதம் திங்கிற சோறுதான… மனுசனுக்கு ஆயிரம் கவலை.’

‘கவலை இருக்குனு கஞ்சி குடிக்காம இருந்திருவியா? தின்னுட்டுப் போய் சோலியைப் பாரு. நாளைக்கு ஆடி…”

ராமையா அவளைக் கடுப்பாகப் பார்த் தார். அவரது கவலையும் அதுதான். நாளை ஆடி பிறக்கிறது… பொதுவாக, ஆடி பிறக்கும்போது இவருக்கு வருகிற ஒரு பரபரப்பும் சந்தோசமும் இந்த வருசம் இல்லை. ராமையாவுக்குத் தொழில் கசாப்பு போடுவது (ஆடு உரிப்பது). ஊருக்குள் இவரை ‘கசாயி ராமையா’ என்று சொன்னால் தான் தெரியும். அஞ்சாவது வகுப்பு வரை பள்ளிக்கூடம் போன ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் ராமையாவின் அய்யா அதிரடியாகப் பள்ளிக்கூடத்தில் நுழைந்து, ராமையாவை இழுத்து வந்து, தனது கசாப்புக் கடையில் உட்கார்த்தி, ஒரு தூக்குச் சட்டி யைக் கொடுத்து அதில் சில்லறைகளை வாங்கிப் போடச் சொன்னார். சிறுவன் ராமையா தூக்குச் சட்டியில் காசுகளை வாங்கிப் போட்டுக்கொண்டே அப்பாவைக் கவனித்தான். இரும்பு போன்ற உறுதியான கரங்கள் ஆட்டை வெட்டின… பிளந்தன. லாகவமாகத் தோலை உரித்தன. கறி வேறு எலும்பு வேறாகக் கூறு போட்டு ஒதுக்கின. வெட்டுப்பட்ட ஆட்டின் தலை ஒன்றை அவர் வெட்டுக் கட்டையில் வைத்துப் பிளந்தபோது ராமையாவுக்குப் பதறியது. அய்யாவை நிமிர்ந்து பார்த்தான். அவர் வேலையில் கவனமாக இருந்தார். முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. அவரது பனியன், கைலி எங்கும் காய்ந்துபோன ரத்தம், அப்போதுதான் தெறித்த பச்சை ரத்தம் என்று வெவ்வேறு நாளில் தெறித்த ரத்தப் பொட்டுகள். அன்று துவங்கியது ராமையாவின் கவுச்சி வாழ்க்கை. ஆயிரக்கணக்கான ஆடுகளின் மரணத்தைப் பார்த்துப் பார்த்து வளர்ந்து, பின் தந்தைக்குப் பதிலாக தானே கையில் வெட்டுக் கத்தியை எடுத்து கசாயி போட ஆரம்பித்தார்.

இவரைக் கட்டிக்கொள்வதற்கு நாச்சார் அரை மனசாகத்தான் சம்மதித்தாள். கசாயி போடுறவனைக் கட்டிக்க மாட்டேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ”நம்ம இருக்கிற இருப்புக்கு கலெக்டராடி வருவான்?” என்று நாலு மிதி மிதித்து வீட்டில் சம்மதிக்கவைத்துவிட்டார்கள். அழுதபடியே புருசன் வீட்டுக்கு வந்தாள். வீடெங்கும் ஆட்டுப் புழுக்கையும் மூத்திரமுமாக இருந்தது. கொடியில் தொங்கிய புருசனின் எல்லாத் துணிகளிலும் ரத்தக் கவுச்சி. குமட்டியது அவளுக்கு. முதலி ரவில் பத்திக்குச்சி எல்லாம் பொருத்திவெச்சு, லைட்டை ஆஃப் பண்ணியதும் ஒரு ஆட்டுக்குட்டி வாடை அவளைச் சூழ்ந்துகொண்டது. குமட்டல்களை அடக்கியபடி ‘இன்னக்கி இவனுக்கு நாந் தான் கசாயி போலிருக்கு’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். நாளாவட்டத்தில் எல்லாம் பழகிப்போனபோதும் அந்த ஆரம்ப காலக் குமட்டல் ஓர் ஓரத்தில் முள்ளாக இருக்கத்தான் செய்கிறது.

ராமையா மிச்சம் இருந்த சோற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு, கை கழுவி எழுந்தார். ஆறு அடி உயரம். கை பனியன். இடுப்பில் ஒரு பெல்ட். டெக்னாலஜி டெவலப்மென்ட், அவரிடமும் செல்போன் ஒன்றைக் கொண்டுவந்து சேர்த்துஇருந்தது. மொத்தம் மூன்று நான்கு நம்பர்கள்தான் அதில் இருந்தன. அவரது மகன் ஸ்பீடு டயலில் நாலைந்து நம்பர்களைப் பதிந்து சொல்லிக் கொடுத்திருந்தான். பச்சை பட்டனை அமுக்கிக் கூப்பிட்டுப் பேசணும். அப்புறம் பாட்டு வந்தா, பச்சை பட்டனை அமுக்கிப் பேசணும். நிப்பாட்டணும்னா, செகப்பு பட்டன் என்று செல்போனின் அடிப்படை ஆபரேஷனைத் தெரிந்துவைத்திருந்தார்.

அவர் செல்போன் பேசும் விதமே தனி. போனை எடுத்தார். ஒண்ணாம் நம்பரை அமுக்கினால் பாண்டிக்குப் போகும். அமுக்கினார்.

மிக உரத்த குரலில் ‘அலோ… நான் ராமையா பேசுறேன்யா… யாரு பாண்டியா? ஆங்… கசாயி ராமையா…’

‘என்னாண்ணே? சொல்ணே…’ என்றது மறு முனை.

‘அதானப்பா… விடிஞ்சா ஆடி… பத்துப் பதினஞ்சு குட்டியாவது உரிச்சாத்தான் கட்டும். கைல நாலஞ்சு குட்டிகதான் இருக்கு. அம்புட்டும் பொடிப் பொடிக் குட்டிக. பத்தாது. உங்கிட்ட இருக்க கெடாக்குட்டியைத் தந்தேன்னா, பொழுது சாயக் காசை வாங்கிக்க… என்னா?’

”என்னண்ணே இம்புட்டு ரே(லே)ட்டாச் சொல்ற? நம்ம குட்டி யைக் குடுத்தாச்சே?’

இவர் முகம் மாறியது. ‘ஏன்யா நான் முந்தாநாளே உனக்கு போன் பண்ணிச் சொன்னேன்ல? நீ பாட்டுக்குக் குட்டியைக் குடுத்துட்டேன்னா எப்படி? அர்த்தம் இல்லாத சோலியைப் பாக்கிற நீயி?’

பாண்டியும் குரலில் வேகம் காட்டினான். ”என்னாண்ணே நீயி? வாய்ல சொன்னாப் பத்துமா? அட்வான்ஸ் கிட்வான்ஸ் குடுக்க வேணாமா? கோடாங்கிபட்டி சின்னமுத்து வந்து கைல காசை வெச்சுக்கிட்டு குட்டியை அவுருங்கிறான்… என்னை என்னா பண்ணச் சொல்ற?’

இவர் எரிச்சல் அதிகரித்தது. ”இதுக்குத்தாண்டா உன்னை மாதிரி சின்னப் பயலுககூடல்லாம் யேவாரம் வெச்சுக்கிரக் கூடாதுங்கிறது… பழக்கவழக்கத்துக்கு மரியாதை இல்லை. துட்டுக்குத்தான் மதிப்புனு ஆயிப்போச்சில்ல? நல்லாருங்கடா சாமி.’

சிகப்பு பட்டனை எரிச்சலுடன் அமுக்கினார்.

‘என்னாவாம்?”

‘ப்ச்! நாளைக்கு யேவாரத்துக்குக் குட்டிக பத்தாது. இந்தப் பாண்டிப் பயலைத்தான் நம்பி இருந்தேன். அவன் கிடாய் எப்படியும் முப்பது கிலோ இருக்கும். சொல்லிவெச்சிருந்தேன்… எவனோ காசை நீட்டினதும் அவனுக்குக் குடுத்துட்டான் பொச கெட்ட நாயி!’

”அவனை வைஞ்சு என்னாகப் போகுது? நீங்க குட்டியை உரிச்சு அப்புறம்தான் காசு தருவீங்க. ரொக்கக் காசு தர்றவனுக்குத்தான அவன் குட்டியைக் குடுப்பான்? நீங்க ஒரு ஆயிரம் ரூவாயாவது அட்வான்ஸா குடுத்திருக்கணும்.’

ராமையா கோபத்தில் கொந்தளித்தார், ”எங்கடி போறது காசுக்கு? இத்தனை வருசமா சிறுகச் சிறுகச் சேத்துவெச்ச காசைத்தான் உனக்கு ஆஸ்பத்திரிச் செலவுக்கு உருவிவிட்டாச்சுல்ல? இப்ப வெறும் கோமணம்தான் இருக்கு… பேச வண்ட்டா.’

நாச்சாருக்குக் குபுக்கென்று அழுகை பொங்கியது. போன ரெண்டாம் வருசம் அவளுக்கு மார்பில் புற்று நோய் வந்தது. அப்பிராணிகளுக்கு வரக் கூடாத வியாதி. தேனி, மதுரை என்று மாறி மாறி ஆஸ்பத்திரிச் செலவு. கடைசியாக, ஒட்டன்சத்திரம் பக்கம் அம்பிளிக்கையில் காட்டினார்கள். கரன்ட் வைத்தார்கள். என்னென்னமோ மருந்துகள்.

கடைசியில் ஆபரேசன் பண்ணி ஒரு பக்க மாரை எடுத்துவிட்டார்கள். நாச்சியார் உடம்பு சரியானாலும் மனசு நொறுங்கிவிட்டது. பிள்ளைகள் படிப்புச் செலவு. குடும்பச் செலவு எல்லாத்தையும் வைத்தியச் செலவு முழுங்கிவிட்டது. இருந்த ஒண்ணு ரெண்டு நகையையும் கையில் இருந்த ஆடு களையும் விற்ற பிறகும் பணம் போதாமல் கந்து வட்டிக்கு வேறு கடன் வாங்க வேண்டியதாகிவிட்டது.

நாச்சார் அழுவதைப் பார்த்து ராமையாவுக்கு எரிச்சல் கூடியது. ‘என்னா எழவுக்குடி இப்ப அழுகிற? உனக்கு சீக்கு வர்ற வரைக்கும் மிச்சத்துல இருந்தேண்டி. எத்தனை ஆட்டுக்குட்டி இருந்துச்சு? இப்பப் பாரு… நல்ல நாளுக்கு அறுக்கறதுக்குக் குட்டி பத்தலைங்கிற நிலைமை. என் பரம்பரையில இப்படி ஒரு நிலைமை வந்ததே இல்லைடி. நாண்டுக்கிட்டு சாகலாம்போல இருக்கு. நேத்துப் பிறந்த அந்த பாண்டிப் பய ஒரு கெடாய்க்கு என்னை நம்ப மாட்டேங்கிறான்னா, இதைவிட ஒரு கேவலம் உண்டா?’

‘என் தலையெழுத்து… நான் அப்படியே செத்திருக்கணும். பொழைச்சு வந்து, ‘வைத்தியம் பாத்தேன், செலவழிச்சேன்’னு நீ சொல்லிக் காட்டறதை இனி காலம் பூராவும் கேக்கணும்னு என் தலையெழுத்து.’

‘ஏய்! பொலம்பாதடி… நாளைக்கு ஊரே கறி திங்கும். கடையில வந்து நிக்கிற சனத்துக்குக் கறி போடலைன்னா, என் மானம் போயிரும். அந்தக் கவலையில நான் இருக்கேன். நடுவுல நீ வேற! வாயை மூடு…’ என்று கோபத்துடன் கையை ஓங்கினார்.

நாச்சார் கண்ணீர் வழிய, ‘பேசாம என்னைய வெட்டித் துண்டம் போட்டு வித்துரு. நிம்மதியா இருக்கும்’ என்றாள் ஆவேசத்துடன்.

‘உன் கறியை எவன்டி வாங்குவான். சீக்கு வந்த சனியனே…’

நாச்சாரால் தாங்க முடியவில்லை, ”ஏய்! ஆடு வெட்டற கசாயிக்காரனைக் கட்டிக்கிட்ட பாவம்டா! தினம் தினம் உசுரை வெட்டிக் கூறு போடறேல்ல? அந்தப் பாவம்தாண்டா என் மாரை அறுத்துக் கூறு போட்டுருச்சு…’ என்று ஒற்றை மாரை அறைந்தபடி அழத் துவங்கினாள்.

கோபத்துடன் வீதியில் நடந்த ராமையாவுக்கு மனசு வலித்தது. அவளை இப்படி எல்லாம் பேசணும் என்று இவரும் நினைக்கவில்லைதான். ஆனால், நிலைமைதானே பேசவைக்குது. நாளைக்குச் சாயங்காலம் கந்துவட்டிக்காரனுக்குப் பதில் சொல்லணும். ரெண்டு மாச வட்டி அப்படியே நிக்குது. ஆடி யேவாரத்தை நம்பி ஆடி ஒண்ணாம் தேதி சாயங்காலம் வானு சொல்லியாச்சு. கன் மாதிரி வந்து நிப்பான். காசு குடுக்கலேன்னா, கேவலப்படுத்திருவான். பொண்டு பிள்ளை எல்லாம் இழுத்துப் பேசுவான் பாடையில போறவன். மனசு உளைந்தது. ரொம்ப நேரம் யோசித்தார். வேலப்பன் ஞாபகம் வந்தது. அவனிடம் கேட்டுப் பார்க்கலாம். நமக்குன்னா உதவி செய்வான் என்று தோன்றியது. சைக்கிளை எடுத்துக்கொண்டு தேனிக்குக் கிளம்பினார்.

வேலப்பன் கொஞ்சம் பசையானவன். நிலபுலன்கள் இருந்தாலும் சைடு பிசினஸாக ஆடுகளை வாங்கி விற்கிறான். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் இருக்கும் கிராமங்களுக்குப் போய் ஆடு கொள்முதல் பண்ணி வந்து, கம்பம், போடி, தேனி, குமுளி என்று விற்று நல்ல காசு பார்க்கிறான். கையில் பணம் நிறைய இருந்தால், கசாயி போடாமல் இப்படிக்கூடச் சம்பாரிக் கலாம். அவன் பொண்டாட்டி அவனைப் பார்த்து பாவம் செய்கிறாய் என்று சொல்ல மாட்டாள். அவன் கத்தி எடுக்கலையே. கத்தி எடுக்கிறவனுக்கு விக்கத்தானே செய்யிறான் என்று எண்ணிக்கொண்டார் ராமையா.

வேலப்பனின் வீடு, காம்பவுண்டு சுவர் எல்லாம் வைத்து ஆடம்பரமாக இருந்தது. பின் பக்கமாகப் பெரிய தோட்டம். அதில் கூபா புல் வளர்த்து, ஆடு மாடுகள் நிறைய இருந்தன. பெரிசு பெரிசாக ரெண்டு நாய்கள் வேற. இவர் சற்றே கூச்சத்துடன் உள்ளே நுழைய… மோட்டார் பைக்கைத் துடைத்துக் கொண்டு இருந்தவன் நிமிர்ந்து. ‘அட, வாங்கண்ணே… என்னா இந்தப் பக்கம்?’ என்றான்.

‘ஒண்ணுமில்லை தம்பி… ஒரு சோலியா வந்தேன்.’

‘ஆமாமா. சோலி இல்லாட்டி நம்மகிட்ட எதுக்கு வரப்போறீங்க? போன தீவாளிக்குக்கூட நீங்க நம்மகிட்ட வரலையே?’

‘போன தீவாளிக்கு நான் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமால்ல திரிஞ்சேன்… ஒரே ஒரு நாள் கடை போட்டதோட சரி.’

‘ம்… நானும் கேள்விப்பட்டேன். மதினிக்கு இப்ப சரியாய்ருச்சா?’

‘ம்… பொழைச்சுக்கிட்டா. ஆனா, வீட்ல சந்தோசம் இல்லை. ஒரே ஒரு சீக்கு வந்து கைமுதல் போயி, கடனாளியாக்கி விட்டுருச்சு நம்மளை…’ என்று பரிதாபமாகச் சிரித்தார்.

‘விடுங்கண்ணே, எல்லாம் ஒரு நேரம்தான். நல்லதும் கெட்டதும் நம்மளைக் கேட்டுக்கிட்டா வருது?’

‘அதைச் சொல்லு…’ என்று பெருமூச்சுவிட்டவர், ”ஒரு உதவி செய்யணும்ப்பா நீயி…’ என்றார்.

‘ம்… என்னா செய்யணும்?’

‘நாளைக்கு முத ஆடி…’

‘ம்… நம்ம யேவாரம் டாப்பால்ல இருக்கும்? முத ஆடிக்குக் கறி திங்காட்டி நம்மூர்க்காரங்க கை கால் வீங்கிச் செத்துப்போயிருவாங்களே?’

‘ஆமாப்பா. ஆனா, கைவசம் நாலஞ்சு பொடிக் குட்டிகதான் இருக்கு. பெரிய குட்டியா ஒண்ணாச்சும் இருந்தாத்தான் தோதுப்படும். முப்பது நாப்பது கிலோவாச்சும் இருக்கணும்.”

‘ஒரு பெரிய குட்டி இருக்குண்ணே… முப்பது முப்பத்தி அஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். நிறுத்துப் பாக்கலை. அதை வேணா பிடிச்சுட்டுப் போண்ணே…’

இவர் முகம் மலர்ந்தது. ”ரொம்ப சந்தோசம் தம்பி. ஆனா, கைல ரொக்கம் இல்லை.’

நூறு ரூபாயை எடுத்து நீட்டினார். ”இதை வெச்சுக்கிட்டு ஆட்டைக் குடுப்பா. நாளைக் குக் கறி போட்டு சாயங்காலம் பாதிக் காசு குடுத்திர்றேன். மிச்சக் காசு நடு ஆடிக்குக் குடுக்கிறேன். கொஞ்சம் கஷ்டம். அதான்… முதத் தடவையாக் கேக்கிறேன்… மாட்டேன்னு சொல்லாமப் பண்ணுய்யா’ – சொல்லும்போதே அவர் குரல் லேசாகக் கம்மியது.

வேலு அவரை ஒரு விநாடி உற்றுப்பார்த்தான். பிறகு புன்னகையுடன் சொன்னான். ”ஒண்ணும் பிரச்சினை இல்லண்ணே. கஷ்டப்படறீங்கனு கேள்விப்பட்டேன். கொஞ்சம் லேட் பண்றதைப் பத்திப் பரவால்ல. மூணு நாலு மாசம் கழிச்சுக் குடுத்தாக்கூட சரிதான், ஆனா குடுத்திருங்க… கரெக்டாக் குடுத்திங்கன்னா… எங்கிட்ட திரும்ப வாங்கிக்கிறலாம்.’

இவர் மனம் நெகிழ்ந்து கை கூப்பினார்.

‘ரொம்பச் சந்தோசம்பா… உன்கிட்ட நான் ஜாஸ்தி யேவாரம் பண்ணது கிடையாது. இருந்தாலும், வந்து நின்னதும் மூஞ்சியைப் பாத்துட்டு இந்த வார்த்தையைச் சொன்ன பாரு… இந்த உதவியை மறக்க மாட்டேன்யா.’

‘பரவால்லை… ஆட்டை எப்படிக் கொண்டுபோவிங்க?’

‘சைக்கிள்ல கட்டிக் கொண்டுபோயிர்றேன்…’

‘பெரிய ஆடுண்ணே!’

‘அதெல்லாம் கொண்டுபோயிரலாம்ப்பா… பொறந்ததுல இருந்து ஆடுககூடத்தானே இருக்கோம்?’

ஆட்டின் கழுத்துக் கயிற்றைப் பின்புறம் இருந்த அகலமான கேரியரில் கட்டினார். மெதுவாக சைக்கிளை ஓட்டினார். ஆடு பின்னாலேயே வந்தது. ஏழு கிலோ மீட்டரில் ஊர். மெதுவாகப் போய்விடலாம். சைக்கிள் மெதுவாக ஊர்ந்தது. ஊருக்குள் போனால் நிறைய வண்டி வரும் என்பதால், பை பாஸ் ரோடைப் பிடித்தார்.

மதிய வேளையில் பை பாஸ் ரோடு ஆளரவமற்று இருந்தது. இடதுபுறம் முள் மரங்கள் அடர்ந்த கரடு. காற்று பலமாக வீச… கஷ்டப்பட்டு சைக்கிளை அழுத்தினார். சிரமமாக இருந்தது. ஆடு வேறு அவ்வப்போது தன் போக்கில் சைக்கிளை இழுக்க பேலன்ஸ் தவறி இறங்கி கொஞ்ச தூரம் உருட்டுவதும் பிறகு ஏறி ஓட்டுவதுமாக சிரமத்துடன் ஒரு மேட்டை ஏறிக் கடந்தார். அங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு சரிவாக இருந்தது. சைக்கிளில் வேகமாக இறங்கினால் ஆடு பின்னாலேயே ஓடி வந்துவிடும் என்று நினைத்து சைக்கிளில் ஏறி வேகம் பிடித்தார். வண்டி மிக வேகமாகக் கீழிறங்கியது. அதற்கு இணையாக ஆடும் ஓடி வர, வழியில் ஓர் இடத்தில் மணலும் சரளையுமாக இருக்க, வந்த வேகத்தில் சைக்கிள் சடாரென்று வழுக்கி, அய்யய்யோ என்று விழுந்தார். விழுந்த வேகத்தில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து ஆடு இடப்புறம் இருந்த கரட்டை நோக்கித் தாவி ஓடியது.

கை காலெல்லாம் சிராய்ந்து ரத்தம் வழிய எழுந்தவர், தனது காயங்களைக் கவனிக்கக்கூடத் தோன்றாமல் ஓடும் ஆட்டைப் பார்த்துப் பதறினார். மனசு பரிதவிக்க ஆட்டை விரட்டினார். ஆடு முள் மரங்களுக்கு இடையில் ஓடியது. பட்ட பாடெல்லாம் வீணாய்ப் போய்விடுமோ என்கிற நினைப்பில் இவரது பதற்றம் கூடியது. கடவுளே என்று மனதுக்குள் சொல்லியபடி விரட்டினார். சரிவான கரடு. ஆடு மிக லாகவமாகத் துள்ளி ஏறிப் போய்க்கொண்டு இருக்க… களைப்பும் வலியும் வேதனையும் மிகுந்தவராக இவர் ஆட்டை நோக்கிப் பரிதாபமாக நகர்ந்தார். மேல்மூச்சு வாங்கியது. செல்போன் கீழே நழுவி விழ, அதனை எடுத்தார். அந்நேரம் அது ”விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று பாட… மூச்சு வாங்கியபடி அதனை எடுத்தார். அவரது மகன் மணிகண்டன் பேசினான்.

‘அலோ… நான் கசாயி ராமையா பேசுறேன்…’

‘ப்ச்… யப்பா! நான் உனக்குத்தான போன் பண்றேன்? அப்ப நீதானே பேசுவே? எப்பப் பாத்தாலும் நான் கசாயி பேசுறேன்… கொசாயி பேசுறேன்னுக்கிட்டு?’

‘இவன் ஒருத்தன்… மனுசன் படுற பாடு தெரியாம? என்னடா?’

‘சோறு திங்க வரலையா? அம்மா தேடுது…’

‘ஏய்… தேனியில ஆடு வாய்ண்ட்டு வந்தேன். அத்துக்கிட்டுப் போயிருச்சு… நிய்யி உடனே வாடா.”

‘நான் எதுக்கு?’

‘என்னால முடியாதுடா. நீயும் வந்தாத்தான் பிடிக்க முடியும்.’

‘ஒரு ஆட்டைப் பிடிச்சுக் கொண்டுவர முடியலைன்னா என்ன கசாயி நீயி? இத்தனை வருசமாத் தொழில் பண்றேன்னு பீத்திக்கிறே, நீயா பிடிச்சுக் கொண்டுவர முடியாதா?”

‘ஏலேய் வெண்ணெய் மகனே! நீயும் உங்க ஆத்தா மாதிரியே பேசிக்கிட்டு… பை பாஸ் கரட்டுல நிக்குதுடா ஆடு. நான் கீழே விழுந்து காயமாயிருச்சு. ஒத்தை ஆளாப் பிடிக்க முடியாது. சீக்கிரம் வாடா… இந்த ஆட்டைக் கொண்டுபோனாத்தான் நாளைக்குக் கசாயி, கஞ்சி அம்புட்டும். புரியுதா? சீக்கிரம் வா…’

‘சரிப்பா… வந்துர்றேன்.’

அடுத்த கால் மணி நேரத்தில் ஒரு மொபெட்டில் மணிகண்டனும் அவன் ஃப்ரெண்டு ஒருத்தனும் வந்தார்கள். மூன்று பேருமாக ஆளுக்கொரு பக்கமாக ஆட்டை நெருங்கினார்கள். அதன் அருகில் சென்றதும் துள்ளி ஓடி விளையாட்டுக் காட்ட… இவர்கள் விடாமல் போராடினார் கள். உடலெங்கும் முள் மரங்கள் குத்திக் கிழித்த விழுப்புண்களுடன் இரண்டு மணி நேரம் கழித்து ஒருவழியாக ஆட்டை மடக்கினார்கள்.

அதிகாலை நாலு மணிக்கெல்லாம் ஜனங்கள் கறி வாங்க பாத்திரத்துடன் வந்து நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரும் கசாயி ராமையாவுக்காகக் காத்திருந்தனர். எப்பவும் வெள்ளன எந்திரிச்சு நமக்கு முன்னால ஆட்டை உரிச்சுக்கிட்டு உக்காந்திருக்கிற மனுசன் ஆடியும் அதுவுமா எங்க காணாம் என்று தமக்குள் பேசிக்கொண்டு இருக்க… ஒருவழியாக மெதுவாக ராமையா நடந்து வந்தார். உடன் மணிகண்டன் அந்த ஆட்டைப் பிடித்தபடி வந்தான்.

‘என்ன கசாயி? ஆடியன்னிக்கு இப்பிடி ஆடி அசைஞ்சு வர்ற? மேலுக்குச் சொகம்இல்லையா?’

‘சைக்கிள்ல இருந்து விழுந்துட்டேன்…’

‘நிசமாவா? எப்படி விழுந்த?’

‘எல்லாம் இது பண்ண வேலைதான். அத்துக்கிட்டு ஓடி கொள்ளப் பாடுபடுத்திருச்சு’ என்று இழுத்து வந்த ஆட்டைக் காட்டினார்.

‘சரி… சரி… நேரமாச்சு’ என்று கூடியிருந்த குரல்கள் பரபரக்க, கத்தியை எடுத்து வரட் வரட் என்று கல்லில் தேய்த்தார்.

‘உனக்கென்ன? இன்னிக்கு ஒரு நாள்ல நல்ல காசு பாத்திருவே?’ என்று ஒரு பெண் சொல்ல,

‘நீ வேற? நேத்து பூரா நான் பட்ட பாடு எனக்கில்ல தெரியும்? ச்சே! மனுசப் பய… பாழாப்போன இந்த உசுரைக் காப்பாத்திக்க என்னெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?’ என்று கத்தியை ஓங்கினார்.

ஆடு தன் கடைசி நொடியை வாழ்ந்து முடித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *