அண்டங்காக்கை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 12,940 
 

என் தந்தை அண்டங்காக்கையைப் போலிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது இப்படி எனக்குத் தோன்றியது. பானை வயிறு, தோலாடைகள், குட்டையான கறுப்பு நிற பாத அணிகளோடு ஒரு பாறையின் மீது நெப்போலியன் நின்று கொண்டிருக்கும் படம் ஒன்றை நெவாவில் கண்டேன். அதைப் பார்த்ததுமே பொக்தனோவின் துருவப் பயணத்தில் வரும் ஒரு படம் என் நினைவுக்கு வந்ததால், நான் குபீரென்று மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டேன்; ஏனெனில் நெப்போலியனின் தோற்றம் பெங்குவின் பறவையைப் போலிருந்தது. அதே சமயம், “”என்னுடைய அப்பா அண்டங்காக்கையைப் போலிருக்கிறார்” என்ற எண்ணமும் எனக்குள் பளிச்சிட்டது.

அண்டங்காக்கைஎங்கள் நகரில் மிகவும் முக்கியப் பதவியில் இருந்தார் என் தந்தை. நகரம் மாவட்ட மையமாகவும் இருந்தது. நகர நாகரீகம் என் தந்தையின் பண்புகளைக் கடுமையாகப் பாதித்திருந்தது. அவர் சார்ந்த அரசு ஊழியர் சமூகத்தில்கூட அவரைப்போல வீராப்புள்ள சோக மயமான, கலகலப்பு சிறிதுமில்லாத, நிதானமான சொற்களிலும், செயல்களிலும் கொடூரம் நிறைந்த ஒருவரைப் பார்க்க முடியாது. அவர் உண்மையிலேயே அண்டங்காக்கையைப் போலத்தான் இருந்தார். குட்டையாக, கட்டையாக, ஓரளவு வட்டமான தோள்பட்டைகள், ஒழுங்கற்ற கறுத்த தலைமுடிகள், நீண்ட பெரிய மூக்கு, நன்கு மழிக்கப்பட்ட முகம், கன்னங்கரேலென்ற நிறம். அதுவும் அவர் கறுப்புக்கோட்டை அணிந்து கொண்டாரானால் அசல் அண்டங்காக்கை போலவே தென்படுவார்.

ஆளுநர் மனைவி ஏற்பாடு செய்திருந்த நடன நிகழ்ச்சியில் கறுப்புக் கோட்டணிந்து அவர் கலந்து கொண்டபோது, அண்டங்காக்கையைப் போலத்தான் இருந்தார். ரஷ்யக் குடில்போல் அமைக்கப்பட்ட ஓர் இடத்தின் அருகில் நகராமல் நின்று கொண்டு அவர், அண்டங்காக்கையின் கழுத்தைப் போலவே தோற்றமளித்த தனது நீண்ட கழுத்தை அசைத்து, அண்டங்காக்கையைப் போன்ற பிரகாசமான கண்களால் அங்கே நடனமாடிக் கொண்டிருந்த ஜோடிகளையும், அந்த இடத்திற்கு வந்தவர்களையும், கழுத்தைச் சாய்த்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் குடிலுக்குள் இருந்த பெண்ணும்கூட, அவரைப் பார்த்து இனிய புன்னகை சிந்தினாள். அவளது நீளமான கையில் வைரங்கள் ஜொலித்தன. அவள் அனைவருக்கும் மலிவான மஞ்சள் நிற சாம்பெயின் மதுவை வழங்கினாள்.

பல ஆண்டுகளாக என் தந்தை தனித்தே வாழ்ந்து வருகிறார். எனக்கு அம்மா இல்லை. எனது எட்டு வயது தங்கை லிலியாவும் நானும் பெரிய வீட்டில் இருந்தோம். எங்கள் குடித்தனப் பகுதியில் அருமையான அறைகள் இருந்தன. என் தந்தை பணியாற்றும் அலுவல் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தின் முதல் மாடியில் குடியிருந்தோம்.

பேராலயத்துக்கும், பிரதான தெருவுக்கும் இடையில் பாப்ளார் மரங்கள் வரிசையாய் அமைந்திருக்கும் நிழற்சாலையை நோக்கியவாறு அறையின் ஜன்னல்கள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளை மாஸ்கோவில் கழித்தேன். கிறிஸ்துமஸ் விடுமுறையிலும் கோடை விடுமுறையிலும் மட்டுமே வீட்டுக்கு வருவேன். ஆனால் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கோடையில் ஒரு நாள் வீடு வந்து சேர்ந்தபோது, முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் காத்திருந்தன.

மாஸ்கோவிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும் திகைத்துப் போய்விட்டேன். அழுது வடிந்து கொண்டிருந்த எங்கள் குடித்தனப் பகுதியில் திடீரென சூரியன் பிரகாசிப்பது போலிருந்தது. ஆம்! அழகிய இளம் பெண்ணொருத்தி வீட்டில் இருந்தாள்! ஏற்கெனவே என் தங்கையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பேற்றிருந்த உயரமான, ஒல்லியான வயதான தாதிக்குப் பதிலாய், புதிதாய் வந்திருந்தவள் பொறுப்பேற்றிருந்தாள். பழைய தாதி, ஒரு சமயத்துறவியின் மத்தியகால மர உருவச்சிலை போலிருந்தாள். புதியவளிடம் அழகே உருவாய் அமைந்திருக்கக் கண்டேன்.

என் தந்தையின் தலைமைக்குக் கட்டுப்பட்டு அலுவலகப் பணிபுரியும் ஒருவரின் ஏழை மகளாய் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்து வெளியில் வந்ததுமே இத்தகைய நல்ல வேலை கிட்டியதற்காக அவள் நிரம்ப மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அவளுக்குச் சம வயதுள்ள நானும் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

அச்சமும் நாணமும் மிகுந்தவள் அவள், சாப்பாட்டுக் கூடத்தில் என் தந்தையின் முன்னிலையில் மிகவும் வெட்கப்பட்டாள். அதே சமயம் கருவிழி கொண்ட என் தங்கை லிலியாவையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். லிலியாவும் என் தந்தையைப் போலவே சரியான உம்மணாமூஞ்சி. கலகப்பாக இருக்கமாட்டாள்.

எங்கள் வீட்டிலிருந்த வயதான சமையற்காரர் குரியுடன் என் தந்தை அதிகமாகப் பேசுவதில்லை. அவள் வந்த பிறகு அழகிய இளம் தாதியைப் பார்த்தவாறே அடிக்கடி பேசலானார்.

“”அன்புள்ள யெலனா நிக்கொலயேவ்னா” என பிரியமுடன் அழைத்தார். அவ்வளவு நாள் கலகலப்பாக இல்லாத என் தந்தை, அவள் முன்னிலையில் நகைச்சுவையாகப் பேசுவதற்கு முயற்சி செய்தார்; புன்னகைக்கவும் முயன்றார். அதனால் மிகவும் சங்கடப்பட்ட இளம் தாதி புன்னகையைப் பதிலாகத் தந்தாள்.

உணவு வேளையில் அவள் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் துணியவில்லை. என் தந்தையை நிமிர்ந்து பார்ப்பதைவிட என்னைப் பார்க்கவே அவள் மிகவும் வெட்கப்பட்டாள். என்னைக் கண்டும் காணாதவாறும் அதே சமயம், என் தந்தை கூறுவதைச் செவி மடுப்பதைப் போலவும் அல்லது என் தங்கையைக் கவனித்துக் கொள்வது போலவும் அவளிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். என் தந்தை முன்பெல்லாம் தனது படிப்பறையில் அமர்ந்துதான் தேநீர் பருகுவார். அவள் வந்து சேர்ந்த பிறகு அவரும் சாப்பாட்டுக் கூடத்தில் வந்தமர்ந்து எங்களோடு தேநீர் பருகினார்.

“”அன்புள்ள யெலனா நிக்கொலயேவ்னா, அழகான கூந்தல் கொண்ட பெண்கள் கறுப்பு அல்லது சிவப்பு நிற ஆடை அணிந்தால் மிகவும் அழகாகத் தோற்றமளிப்பர். உதாரணமாக, மேரி ஸ்டூவர்ட் அணிந்திருப்பதுபோல கூர்முனை காலர் வைத்த, சிறு வைரக் கற்கள் பதித்த கறுப்பு நிற பட்டுப்பாவாடை அணிந்தால் உன் முகம் எவ்வளவு அழகாய் இருக்கும் தெரியுமா? சின்னக் காலர் வைத்த சிவப்புக் கல் பதித்த சிறு சிலுவை கொண்ட மத்தியகால சிவப்பு வெல்வெட் கவுன் அணிந்திருந்தால் உனக்கு எவ்வளவு அழகாய் இருக்கும் தெரியுமா!…இதெல்லாம் பகற்கனவு ” என்று கூறி புன்னகைத்தார் என் தந்தை.

“”நாங்கள் உன் தந்தைக்கு மாத சம்பளமாக 75 ரூபிள் தருகிறோம். உன்னைத் தவிர இன்னும் ஐந்து குழந்தைகள் அவருக்கு. எல்லோருமே இளம் பிள்ளைகள். ஆகவே நீ காலமெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனால், நான் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வதுண்டு, பகல் கனவு காண்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அது உன்னை மகிழ்விக்கிறது. உனக்கு பலமும் நம்பிக்கையும் அளிக்கிறது. சில சமயம் கனவு திடீரென நனவாகிவிடுவதும் உண்டு இல்லையா?”

அவர் கூறியதையெல்லாம் விளையாட்டாக அவர் ஏளனம் செய்கிறார் என்று நினைத்துக் கொள்கிற மாதிரி அவள் பாசாங்கு செய்தாள். வேறு வழியின்றி அவரை ஏறிட்டுப் பார்த்து புன்னகைத்தாள். அதே சமயம், இதையெல்லாம் கவனிக்காத மாதிரி பொறுமையாக நானிருந்தேன். பேசிக் கொண்டே சென்ற என் தந்தை ஒரு சந்தர்ப்பத்தில், இன்னும் ஒரு படி மேலே சென்றார். அவர் என்னைக் காட்டி தலையசைத்தவாறே திடீரென இவ்வாறு கூறினார்:

“”இந்த இளைஞனுக்கும் சொந்தக் கனவுகள் இருந்து வருகின்றன எனலாம். தன் அருமைத் தந்தை ஒரு நாள் இறந்து போவார். பின்னர் தான் எதிர்பார்த்ததைவிடவும் அதிகத் தங்கம் கிடைக்கும் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கலாம். உண்மையில், இவனுக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. இவனுடைய அப்பாவுக்குச் சமரா பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கரிசல் நிலம் உள்ளது. ஆனால் அவையெல்லாம் இவனுக்கு வாரிசுரிமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இவனுக்குத் தன் அப்பாவின்மீது அவ்வளவு பாசம் கிடையாது. மேலும் என்னைப் பொறுத்தவரை, இவன் முதல்தர, ஊதாரியாகத்தான் உருவாகப் போகிறான்.”

எனக்கு மிக முக்கிய நாளான புனித பீட்டர் தினத்தன்று இந்தக் கடைசி உரையாடல் நடைபெற்றது. விடியற்காலையில் எழுந்து, என் தந்தை பேராலயம் சென்று வந்தார். பிறகு பிறந்த நாள் விழா கொண்டாடிய ஆளுனரோடு, சிற்றுண்டி அருந்தினார். ஞாயிறு தவிர,வேறு எந்த நாட்களிலும் என் தந்தை வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டதில்லை. நாங்கள் மூவர் மட்டும் வழக்கம்போல வீட்டிலிருந்தோம். சாப்பிட்டு முடிக்கும் வேளையில் லிலியாவுக்குப் பிடித்தமான இனிப்பு கேக்குகளுக்குப் பதிலாக, செர்ரிப் பழப்பாகு அவளுக்குப் பரிமாறப்பட்டது. உடனே என் தங்கை, சமையற்காரரை நோக்கி உரக்கக் கத்தினாள். கையை மூடி, மேஜையில் குத்தினாள். சாப்பாட்டுத் தட்டை தரையில் வீசி எறிந்தாள். எங்களைப் படாதபாடு படுத்தினாள். விம்மி விம்மி அழுதாள். நாங்கள் இருவரும் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றோம்.

லிலியா எங்கள் கைகளைக் கடித்தும், உதைத்தும் முரண்டு பிடித்தாள். நாங்கள் சமையற்காரரைக் கடுமையாகத் தண்டிப்போம் என்று கூறிய பிறகே அவள் சமாதானம் அடைந்தாள். பிறகு அமைதியாக உறங்கிப் போனாள்.

லிலியாவை அறைக்குள் தூக்கிச் சென்றபோது, தற்செயலாக இளம் தாதியின் கரங்கள் என் மீது பட்டன. இனம் புரியாத உணர்ச்சி பரவியது. அதே சமயம் வீட்டுக்கு வெளியே நல்ல மழை. இருண்ட அறைகளில் ஜன்னல் படபடவென்று அடித்துக் கொண்டது.

இந்தப் பயங்கரமான இடி சப்தம் கூட இவளைப் பாதித்திருக்கும், என மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள் அந்த இளம் தாதி. லிலியா இருந்த அறைக்கு வெளியே வந்து, அடுத்த அறைக்குச் செல்லும் நடை வழியில் அவள் அவ்வாறு கிசுகிசுத்தாள். பின்னர் திடீரென்று வெளியே பார்வையைப் பதித்த அவள் உரக்கச் சொன்னாள்:

“”ஓ! எங்கோ தீப்பிடித்துவிட்டது போலத் தெரிகிறது!”

இருவரும் சாப்பாட்டுக் கூடத்திற்குள் ஓடினோம். ஜன்னலைத் திறந்து பார்த்தோம். தீயணைப்புப் படையினர் எங்கள் வீட்டைக் கடந்து விரைந்து செல்வது தெரிந்தது.

பாப்ளார் மரங்கள் மீது மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இடி முழக்கம் ஓய்ந்திருந்தது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

தீயணைப்புப் படையினரின் ஆரவாரக் கூக்குரல் எங்களுக்குக் கேட்டது. நீண்ட தண்ணீர் குழாயை எடுத்துப் போட்டனர். ஏணியை வைத்து, ஏணியின் மீது ஏறி நின்றிருந்தனர். பிறகு தேவாலய மணியின் எச்சரிக்கை ஒலி எங்கணும் எதிரொலித்தது.

அப்போது-

ஜன்னலருகே நானும் அவளும் நெருக்கமாக நின்றிருந்தோம். புத்தம் புதிய மழை நீரின் மணத்தை, மழையில் நனைந்த தெருவின் மண் வாசனையை நுகர்ந்தோம். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பதும், ஆரவாரங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதும் எங்களுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியை அளித்தது. அவள் கையை என் கையோடு சேர்த்துக் கொண்டேன்.

அவளை ஏக்கத்தோடு பக்கவாட்டில் உற்றுப் பார்த்தேன். நெடுமூச்செறிந்தாள். அவளிடம் ஒருவித படபடப்பு காணப்பட்டது. அவள் மார்புகள் விம்மித் தணிந்தன. கண்களில் நீர் மல்க, என்னை நோக்கித் திரும்பினாள். நான் அவள் தோள்களைப் பற்றினேன். ஓர் இளம் பெண்ணின் உதடுகள் தந்த ஸ்பரிசம் என்னை மயக்கியது. என் வாழ்க்கையில் முதல் தடவையாக நான் அறிந்த இன்பம் அது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, நாங்கள் நாள் தவறாமல், ஏன் ஒரு மணி நேரம் கூட தவறாமல் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டோம். தற்செயலாக நடப்பது போலிருக்கும். ஏதாவது ஒரு வகையில், அறைக்குச் செல்லும் நடை வழியில், அல்லது அப்பாவின் படிப்பறையில் சந்திப்போம்.

எப்பொழுதுமே தந்தை தாமதமாகத்தான் வருவார். அதனால் தங்கு தடையின்றி நாங்கள் சந்தித்துக் கொண்ட ஒவ்வொரு கணமும் ஒருவருக்கொருவர் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டோம்.

அப்பாவுக்கு இதெல்லாம் அரைகுறையாகத் தெரிந்துவிட்ட மாதிரி இருந்தது. அவர் பழையபடி டைனிங் அறைக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். கலகலப்பையும் இழந்தார். ஆனால் இதையெல்லாம் நாங்கள் கவனிக்காமலேயே இருந்தோம். சாப்பாடு பரிமாறும் வேளையில் அவள் அமைதியாகவும் நிதானமாகவும் நடந்து கொண்டாள்.

ஜூலை மாதத் தொடக்கத்தில் என் தங்கை லிலியாவுக்கு உடல் நலம் சரியில்லாமற் போயிற்று. இளம் தாதியோ எப்போதும் அவள் அருகே இருந்து கவனிக்க வேண்டியிருந்தது.

வேறு யாருமற்ற, அமைதி குடி கொண்டிருக்கும். அந்த வீட்டில் தனித்திருந்தேன். அவளைப் பார்க்க வேண்டும். கட்டித் தழுவ வேண்டும் என்று துடித்தேன். என் தந்தையின் படிப்பறைக்குச் சென்று புத்தகம் வாசிக்க முயன்றேன். அவருடை புத்தக அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுத்தேன். அந்தக் குறிப்பிட்ட நாளில் நான் செய்த காரியம் அதுதான். மாலை மயங்கும் நேரம் அது. மெள்ள மெள்ள அவள் நடந்து வரும் ஓசை கேட்டேன். என் புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு ஓடினேன்.

“”லிலியா தூங்கி விட்டாளா?”

“”உங்களுக்கு அவளைப்பற்றி ஒன்றும் தெரியாது. இரண்டு நாட்களானாலும் தூங்காமல் இருப்பாள் அவள். அவளுடைய அப்பாவின் சாய்வு மேஜையில் இருக்கும் சில மஞ்சள், ஆரஞ்சு நிற பென்சில்களை எடுத்துவரும்படி என்னை அனுப்பி வைத்தாள். அதற்காகத்தான் வந்தேன்” என்றாள் இளம் தாதி.

கண்களில் நீர் கசிய என்னிடம் வந்து, என் மார்பில் முகம் புதைத்தாள். “”ஓ! கடவுளே, இதெல்லாம் எப்போது முடியும்? நம்மை யாரும் இந்த உலகில் பிரித்துவிட முடியாது” என்றாள் அவள்.

முகத்தை நிமிர்த்தினாள், கண்ணீரால் முகம் நனைந்திருந்தது. வேகமாக அவள் கைகளால் என் தோள்களைப் பற்றிக் கொண்டாள். மென்மையாக முத்தமிட்டாள். அவளை அப்படியே கட்டி அணைத்து என்னோடு சேர்த்துக் கொண்டேன். அவளை அப்படியே சோபாவை நோக்கி அழைத்துச் சென்றேன். வேறு எதைப்பற்றியும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இப்போது மெதுவாக யாரோ இருமுவது கதவருகே கேட்டது. அவளது தோளின் வழியே பார்வை செலுத்தினேன். என் தந்தை நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். பிறகு அவர் ஒன்றும் பேசாமல் தன் தோள்களை குலுக்கியவாறு திரும்பிச் சென்றுவிட்டார்.

அன்றிரவு நாங்கள் யாருமே சாப்பாட்டுக்கூடத்தில் அடி எடுத்து வைக்கவில்லை. பிறகு குரி கதவை தட்டினார். “”அறைக்கு வரும்படி உன்னுடைய தந்தை கூப்பிடுகிறார்” என்றார். அப்பாவின் அறைக்குச் சென்றேன். கை வைத்த நாற்காலியில் அவரது சாய்வு மேஜையை நோக்கியவாறு அமர்ந்திருந்தார். என்னை நோக்கித் திரும்பாமலேயே பேசத் தொடங்கினார்.

“”நாளைக்கு நீ என்னுடைய சமரா எஸ்டேட்டுக்குக் கிளம்ப வேண்டும். கோடை விடுமுறையை நீ அங்குதான் கழிக்க வேண்டும். இலையுதிர்காலத்தில் நீ மாஸ்கோவுக்கோ, பீட்டர்ஸ்பர்ஸ் நகரத்துக்கோ சென்று வேலை தேடிக்கொள். என் சொல்லுக்குக் கீழ்படிய மறுத்தால் எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமற் போய்விடும். விஷயம் அத்துடன் முடிந்துவிடாது. நாளைக்கே நான் ஆளுநரிடம் சொல்லி உன்னை உடனடியாக நாடு கடத்தும்படியும் காவலர் துணையோடு இட்டுச் செல்லும்படியும் கேட்டுக் கொள்வேன். இப்போது நீ போகலாம். மீண்டும் என் முகத்தில் விழிக்காதே. உனக்கு வேண்டிய ரயில் கட்டணம், கைச் செலவுக்குத் தேவையான பணம் ஆகிவயற்றை என்னுடைய ஆள், காலையில் உன்னிடம் கொண்டு வந்து கொடுப்பார். நீ தலைநகரங்களில் சிறிது காலம் தங்கியிருக்கத் தேவைப்படும் செலவுக்காக பணம் கொடுக்கும்படி, என் எஸ்டேட் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதப் போகிறேன். நீ போகுமுன் அவளைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது, பார்க்கவும் முடியாது, அவ்வளவுதான். போ வெளியே.”

அன்றிரவே யரோஸ்லாவல் பிராந்தியத்துக்குப் புறப்பட்டேன். கோடை முழுவதும் அங்கிருந்தேன். என்னுடைய பள்ளி நண்பன் ஒருவனது வீட்டில் தங்கியிருந்தேன். அவனது தந்தையின் உதவியால் பீட்டர்ஸ்பர்கிலுள்ள அயல்துறை அமைச்சகத்தில், இலையுதிர் காலத்தின்போது எனக்கு வேலை கிட்டியது. எனக்குள்ள வாரிசுரிமைகளை மட்டுமல்லாமல் அப்பாவின் பிற உதவிகளையும் நான் ஏற்க மாட்டேன் என்பதைத் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதினேன். அந்த ஆண்டு குளிர்காலத்தில், அவரும் பதவி ஓய்வு பெற்று நான் இருக்கும் பீட்டர்ஸ் பர்கு நகரத்துக்குத் தன் “இளம் மனைவி’யோடு வந்து தங்கிவிட்டாரென்று அறிந்தேன்.

ஒரு நாள் இரவு, மரீன்ஸ்கி தியேட்டர் இருக்கைகளினூடே நடந்தேன். காட்சி ஆரம்பமாக சில நிமிடங்களே இருந்தன. அப்போதுதான் அவர்களைப் பார்த்தேன். அரங்க மேடைக்கு அருகில் முன் சீட்டுகளில் அமர்ந்திருந்தனர். அண்டங்காக்கைபோல அப்பா உட்கார்ந்திருந்தார். அதற்குத் தகுந்த மாதிரி கோட்டணிந்து, ஒரு கண்ணைச் சாய்த்து தனது நிகழ்ச்சி நிரல் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். உயர்ந்த ஆடைகள் அணிந்து, மார்பில் சிவப்புக் கல் பதித்த சின்னஞ்சிறு சிலுவை பளிச்சிட அவரருகே அவள்-இளம் தாதி அமர்ந்திருந்தாள்…

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *