அடையாளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 2,866 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“யூ இண்டியா?”

“நோ… நோ…”

“ஸ்ரீ லங்கா?”

“நோலா ஐ யெம் சிங்கப்பூரியன்.”

கோபத்தோடு டாக்ஸிகாரனுக்குப் பதில் சொல்லி விட்டு மவுனமானாள்.

அவன் உடனே மலாயில் பேசத் தொடங்கி விட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மவுனமாக இருந்தாள்.

“யூ தத்தாவ் மெலாயு?”

“தத்தாவ்லா.”

“நீ சிங்கப்பூரியன் என்கிறாயே, மலாய் தெரியாதா?” அவன் கேள்வியில் தொனித்த ஏளனத்தை அவளால் பொறுக்க முடியவில்லை.

“ஐ டோன்ட் நோ மலே, ஐ இண்டியன்!” என்று வெடுக்கென்று சொன்னாள்.

“யூ கம் ஃபாரம் இண்டியா? கம் டு டூ ஹவுஸ் வேர்க்?”

“இந்தியாவில இருந்து வர்றவங்க எல்லாம் மெயிடா…” இதற்கு மேல் எதுவும் கேட்காதே என்ற எச்சரிக்கை அவள் குரலில் ஒலிக்கவும் அவன் அமைதியானான்.

இறங்க வேண்டிய இடம் வந்ததும் கட்டணத்தை வீசாத குறை யாக அவனது இருக்கைக்கு அருகில் போட்டுவிட்டு, வெளியில் குதித்தாள். பைகளை அள்ளிக்கொண்டு கதவை அடித்து மூடினாள். நடக்கும்போதுதான் தள்ளுவண்டியை எடுத்துவராமல் போனது உறைத்தது. தன்னையே நொந்துகொண்டு கைகள் கணக்க

வீட்டுக்குள் நுழைந்தாள். நடு ஹாலில் விட்டேற்றியாக பேப்பரில் மூழ்கியிருந்தான் கணவன். நடிகைகளை ரசித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்ததும் கடுப்பாக இருந்தது.

“ஒருநாளாவது நீங்க பசாருக்குப் போகக்கூடாதா… எப்பவும் எல்லா வேலையையும் நானேதான் செய்யனுமா… வெட்டியா சினிமாதானே படிச்சிட்டு இருக்கீங்க…”

“எதுக்கு காலங்காத்தால உசிர வாங்கறே. சே… லீவு நாள்லயாவது நிம்மதியா இருக்க முடியுதா இந்த வீட்டில…”

அவனது கத்தலைக் காதில் போட்டுக்கொள்ளாமலேயே சமைய லறைக்குள் சென்றாள். 15 ஆண்டு கால வாழ்க்கையில் அவனது கத்தல்கள் பழகிப் போயிருந்தன.

வெயிலில் வந்தது களைப்பாக இருந்தது. கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கலாம்போல் இருந்தது. ஆனால் முடியாது. மணி ஒன்பதாகி விட்டது. தலைக்குமேல் வேலை இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் இரவு வேலை முடிந்து மாமனார் வந்து விடுவார். அவருக்கு எப்போதும் காலையில் பசியாற இட்லி, தோசை என்று பலகாரம் செய்ய வேண்டும். அதுவும் வீட்டில் செய்ய வேண்டும். கடையில் வாங்குவதென்றாலும் அவள்தான் வாங்கிவர வேண்டும், அதுவும் அவள் காசில். ஆளுக்கு ஒன்று சொல்வார்கள். எப்படியும் 10, 15 வெள்ளி செலவாகும். பசியாற வாங்க இவ்வளவு செலவு செய்வதா, ஒரு அரை மணி நேர வேலை என்று எண்ணிக் கொள்வாள்.

பசார் சாமான்களைப் பிரித்து ஒவ்வொன்றாக அவள் எடுத்து வைப்பதற்குள் மாமியார் எழுந்து வந்து விட்டார். அவள் ஃபிரிஜ்ஜில் திணித்த பொருட்களை மீண்டும் வெளியே எடுத்து “என்ன வாங்கியாந்திருக்கே” என்றபடி வெளியே பரப்பத் தொடங்கினார். மீண்டும் உள்ளே வைக்க மாட்டார். போட்டது போட்டபடி போய் விடுவார்.

அவர் மீது எவ்வளவு கோபம் வந்தாலும் ஏனோ அவளால் அதை வெளிப்படுத்த முடிந்ததில்லை. அப்படியும் தன்னை மீறி அவள் ஏதாவது சொல்ல நினைக்கும் சமயங்களில்… “எத்தனை கோபமாயிருந்தாலும் பொறுமையாப் போம்மா… அதாம்மா நமக்கு நல்லது… ‘என்ன பொண்ணு வளர்த்திருக்கிறா பாரு’ன்னு நாலு பேர் என்னை சொல்ற மாதிரி வைச்சிடா தம்மா,” என்ற அம்மாவின் கெஞ்சல் காதுக்குள் ஒலிக்கும். அதோடு அவள் கோபம் அடங்கிவிடும்.

எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு குறை சொல்லிவிட்டு, தனக்குப் பிடித்த கோழியையும் கத்தரிக்காயையும் எடுத்து மேசைமேல் வைத்தார் மாமியார். அவள் அன்றைக்கு மீன் குழம்பு வைக்கலாம் என்று நினைத்திருந்தாள். செய்து கொண்டிருந்த வேலையைப் போட்டு விட்டு, தனியாக வைத்திருந்த மீனை எடுத்து பிரீசரில் திணித்தாள்.

“தோசை சுட்டாச்சா, சீக்கிரம் எடுத்தா, கிறுகிறுன்னு வருது. பிரஷர் அதிகமாயிடுச்சு போலயிருக்கு.” மாமியார் சாமான்கள் நடுவில் காலை நீட்டி உட்கார்ந்து விட்டார். இனி அவருக்கு உபசாரம் செய்ய வேண்டும்.

தமக்கு பல நோய்கள் இருப்பதாக தாமே கற்பனை செய்துகொள்வார். “உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உடம்பைக் கொஞ்சம் குறைத்தால் கால் வலி சரியாகிவிடும்” என்று டாக்டர்கள் பலரும் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் தமக்கு ஏதோ நோய் இருக்கிறது என்ற எண்ணம் அவரை விட்டுப் போவதாக இல்லை. எப்படியும் வாரத்தில் ஒரு அரை நாளை, அவரோடு கிளினிக்கில் அவள் செலவழித்தாக வேண்டும்.

நேற்றும் அப்படித்தான். சனிக்கிழமை அரைநாள் வீணாய் போனது. சனிக்கிழமையே பாதி வேலைகளை முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தாள். ஒரு வேலையும் முடியவில்லை. மாமியாருடன் கிளினிக் போய், பிறகு அவரோடு பக்கத்தில் இருந்த கடைகளைச் சுற்றிவிட்டு வரவே நேரம் சரியாக இருந்தது. அவரோடு சுற்ற வேறு யாருக்கும் பொறுமை இல்லை. அவர் தனியாகவும் வெளியில் போகமாட்டார். நேற்றும் அவளைப் பிடித்துக்கொண்டார். மெத்தை உறை பார்க்கப் போகிறேன் என்று இரண்டு மணி நேரம் ஷாப்பிங் சென்டர் முழுக்க சுற்றி விட்டார். வீட்டுக்கு வர இரவாகி விட்டது.

என்னோடுதானே வந்தாள், வீட்டு வேலையில் கூடமாட உதவி செய்வோம் என்றும் நினைக்க மாட்டார். வீட்டுக்கு வந்ததும் கால் வலி என்று படுத்துவிட்டார். அவருக்குக் காலுக்கு மருந்து தேய்த்து, ஒத்தடம் கொடுத்துவிடும் வேலை வேறு அவளுக்கு. களைத்துப் போய் விட்டது. போட்டது போட்டபடி படுத்துவிட்டாள். இன்றைக்குள் எல்லா வேலையை யும் முடித்துவிட வேண்டும். இந்த வாரம் வேலையிடத்திலும் அதிக வேலை இருக்கிறது. நிச்சயம் நேரம் கிடைக்காது. வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும், பிள்ளைகளின் சப்பாத்துக்களைக் கழுவ வேண்டும், துணி அயன் போட வேண்டும், அதற்கும் மேல் பாதியில் நிற்கும் அலுவலக வேலையையும் முடிக்க வேண்டும்…

குடிக்க எடுத்த தவ்வுத் தண்ணியை வாஷ்பேஷனில் கொட்டிவிட்டு, தோசைக் கல்லை அடுப்பில் போட்டாள்.

“என்னா, இன்னிக்கும் தோசை இப்படிக் காய்ஞ்சு இருக்கு… இத்தனை வருஷமா குடும்பம் நடத்தற. இன்னும் தோசைகூடச் சரியாச் சுடத் தெரியல. கிரைண்டர்தானே அரைக்குது. அத நல்லா அரைக்கவிட உனக்கு நேரமில்ல. அந்தக் காலத்தில நான் ஆட்டுக் கல்லி அரைச்சு பூப்போல தோசையும் இட்லியும் சுடுவேன் தெரியுமா. அதுக்கே என் மாமியார் அவ்வளவு குறை சொல்வாங்க. உங்க மாமா தட்ட தூக்கி எம் மூஞ்சியிலேயே வீசுவாரு. இப்ப யாரு சொல்றது. யாரு கேக்கிறது. ம்… காலம் மாறிப் போச்சு….’

“ஏய் எனக்கு தோச கீச எல்லாம் வேண்டாம். முட்ட ரொட்டி சுட்டுக் கொடு.” ஹாலில் இருந்தே குரல் கொடுத்தான் கணவன்.

“எல்லா நாளும்தான் இந்த வரட்டு ரொட்டியத் திண்கிற. எதுக்குடா இன்னிக்கும் அதே வேணுங்கிற…”

“ஆமா எப்ப பாரு தோச, இட்லி, சாம்பார்ன்னு… எவன் திண்பான். ஒருநாளாவது அப்பஞ்சாலாவும் இறைச்சிக் கறியும் செய்யிறீங்களா..”

“அப்பஞ்சாலா செய்யிற மாதிரியாடா என் உடம்பு இருக்கு… உன் பொண்டாட்டிகிட்ட சொல்ல வேண்டியதுதானே…” மருமகள் பக்கம் திரும்பி குரல் கொடுத்தார். “அவன் ஆசையா கேக்கிறானில்ல. இன்னிக்கு லீவுநாள்தானே அப்பஞ்சாலா செய்ய லாமே…”

இவர்களுக்கு வகையாக ஆக்கிப்போடத்தான் நான் இருக்கி றேனா… எனக்கு என்ன பிடிக்கும் என்று ஒருநாளாவது இந்த வீட்டில் நினைத்தாவது பார்த்திருக்கிறார்களா… அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

கணவனுக்கு ரொட்டி சுட்டுக் கொடுத்துவிட்டு, மாமனாருக்குத் தோசையும் கோப்பியும் மேசையில் எடுத்து வைத்தாள். மாமனாருக்கு எல்லாமே மிதமான சூட்டில் வேண்டும். கோப்பிகூட அப்படித்தான் இருக்க வேண்டும். இப்போது எடுத்து வைத்தால்தான் அவர் குளித்து முடித்து வரும் போது சூடு சரியாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்றால் அவர் ஒரு மெனு வைத்திருப்பார். அவர் என்ன சமையல் சொல்லப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டே கோழியைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

‘அம்மா… சுபாவைப் பாருங்க… என்னை டிஸ்டர்ப் பண்றாள்…” குழந்தைகள் குரல் கொடுத்தாயிற்று. இனி அவளுக்கு சுயபச்சா தாபம் படக்கூட நேரமில்லை.

சும்மாவே அடம்பிடிக்கும் குழந்தைகள். லீவு நாள் என்றால் கேட்கவே வேண்டாம். பல் தேய்ப்பதில் இருந்து ராத்திரி தூங்குவது வரை எல்லாவற்றுக்கும் அவள் கெஞ்ச வேண்டும். அவள் போக்குக்கு அவர்களை வழிக்குக்கொண்டு வரவும் முடியாது. குழந்தை வளர்ப்பில் அவள் கணவனும் மாமியாரும் மாமனாரும் ஆளுக்கொரு சித்தாந்தத்தை வைத்திருந்திருந்தார்கள். அவள் பேச்சு எடுபடாது. அவள் ஊரில் இருந்து வந்தவள்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றாகச் செய்து முடித்து அவள் சாப்பிட உட்காரும்போது மணி மூன்றாகி விட்டது. காலையில் இருந்து அடுப்பிலேயே கிடந்ததால் அவளால் சாப்பிட முடியவில்லை. சோற்றில் தண்ணியைவிட்டு, ஊறுகாயை எடுத்து வைத்துக்கொண்டாள்.

சில்லென்று தண்ணி சோறுதான் என்ன இதமாக இருக்கிறது… அவள் அடுத்த வாய் வைப்பதற்குள் அவன் வந்து விட்டான்.

“என்ன நீ எப்பவும் இப்படியே சாப்பிடுறே, பிச்சைக்காரங்க மாதிரி…”

தட்டில் போட்ட சோற்றை அப்படியே குப்பைத் தொட்டியில் கொட்டினாள். அவள் அப்படிச் செய்பவள் இல்லை. பதிலுக்கு ஏதாவது சொல்வாள். ஆனால் அன்றைக்கு அவள் எதுவும் சொல்லாமல் சோற்றைக் கொட்டியதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் தோளைப் பிடித்து உலுக்கினான். “என்னா… என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கோபப்படுற… எதுக்கு சோத்தக் கொட்டுற…”

“விடுங்க…”

“முதல்ல பதில் சொல்லு, உனக்கு இப்ப யார் மேல கோவம்?”

“கையை விடுங்க. எனக்கு நிறைய வேல கிடக்கு.”

அவனோடு பேச முடியாது. பேசினால் சண்டைதான் வளரும். வருஷக்கணக்காக நடப்பதுதான். சண்டை போட்டு கோபித்துக் கொண்டு போக அம்மா வீடு பக்கத்திலா இருக்கிறது… அவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

“உன்னைத்தான் மெய்டு வச்சுக்கோன்னு சொல்றேன்ல.” அவனும் விடாமல் பின்னாலேயே வந்தான்.

“மெய்டு வச்சா, யார் காசு கட்டுறது!?”

“நான் வீட்டுக்கு கட்டணும், காருக்கு கட்டணும், இன்சூரன்ஸ் கட்டணும், என் சம்பளத்தில முடியாதுன்னு உனக்கு பல தடவ சொல்லிட்டேன். உன் உதவிக்குத்தானே வைக்கிற. உன் சம்பளத்தில கட்ட வேண்டியதுதான்.” தன் கடமை முடிந்து விட்டதாக அவன் போய் விட்டான்.

அவன் எப்போதும் இப்படித்தான். எதிலும் பட்டுக்கொள்ள மாட்டான். இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர்களே இப்படித்தான் இருப்பார்கள் என அவள் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வாள். அவள் மாசம் இரண்டாயிரம் வெள்ளி சம்பாதிக்கிறாள். அதில் பணிப்பெண்ணுக்குச் செலவு செய்தால் மிச்சம் பிடிக்க முடியாது. தமிழ்நாட்டில் அவள் படித்த எம்எஸ்சியை சிங்கப்பூரில் படித்திருந்தால் இன்னும் இரண்டு – மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம்.

அவள் செலவுகளை அவளேதான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டுச் செலவுக்கும் அவள் பணம்போட வேண்டும். பிறகு எங்கே மிச்சம் பிடிப்பது… லீவுக்கு லீவு ஊருக்குப் போக பணத்துக்கு எங்கே போவது… அவள் இரண்டு வருஷமாக சேர்த்த பத்தாயிரம் வெள்ளி போன லீவில் ஊருக்குப் போனதில் செலவாகி விட்டது. டிக்கெட் காசு மட்டும் என்றால் பரவாயில்லை. அங்கே போய் உறவுகளுக்கும் கொடுக்க வேண்டும்.

வேலைக்காரிக்கு மாசம் அறுநூறு வெள்ளி கொடுப்பதா… அடேயப்பா… அறுநூறு வெள்ளியென்றால் ஊர் காசுக்கு… பார்ட்டைமாக கூப்பிட்டாலும் ஒரு மணி நேரத்துக்கு 10 வெள்ளியாவது கொடுக்க வேண்டும்… கணக்குப் போடும்போதே இரவு தோழி கல்யாணம் இருப்பது நினைவுக்கு வந்தது. ஐம்பது வெள்ளியாவது மொய் வைக்க வேண்டுமே… அந்த ஐம்பது வெள்ளியை வேறு எதில் மிச்சப்படுத்துவது என்று யோசித்தபடி குளியலறைக்குள் புகுந்தாள்.

குளியலறையைக் கழுவும்போது கண்ணாடியில் முகம் தெரிந்தது. மெலிந்த கறுத்த உருவம். குட்டையான முடி. கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு ஒரு செயின், சாதாரண ஐந்து கல் தோடு, ஒற்றைக் கல் மூக்குத்தி.

என்னைப் பார்த்தால் வீட்டு வேலைக்கு வந்தவள் போலவா இருக்கிறது… காலையில் டாக்ஸிக்காரன் கேட்டது உறுத்தியது.

மீண்டும் முகத்தைக் கண்ணாடியில் நன்றாகப் பார்த்தாள். பிசிறாகத் தொங்கிய முடியும், வியர்த்திருந்த கோலமும்… வேலைக்காரி போலத்தான் இருக்கிறேனோ… உடனே கல்யாணத்துக்குப் போகிறோமே என்ற நினைப்பு வந்தது. சலூனுக்குப் போய் முடி வெட்ட முடிவு செய்தாள். பேஷியலும் செய்துகொள்ள வேண்டும் என நினைத்தாள்.

பிள்ளைகளின் கூச்சல் சிந்தனையைக் கலைத்தது. நாளை மகனுக்கு கணக்குத் தேர்வு. குளியலறையை வேகமாகக் கழுவி, காக்காய் குளியல் குளித்துவிட்டு வந்தாள்.

இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். சண்டையைத் தீர்த்து வைத்து, மகளை அவளது அறைக்கு அனுப்பி விட்டு மகனிடம் திரும்பினாள்.

“நாளைக்கு உனக்கு மாத்ஸ் டெஸ்ட் இருக்குல்ல, புக்க எடுத்து வா சொல்லித் தரேன்.”

“போங்க உங்களுக்குத் தெரியாது. நா அப்பாட்டதான் கேப்பேன்.” அழுதுகொண்டே மகன் வீம்பாகப் பேசினான்.

“டேய் நான் எம்எஸ்ஸி மாத்ஸ் படிச்சிருக்கேன். உங்கப்பா வெறும் ஏ லெவல்தான்.”

“நீங்க இந்தியாவில படிச்சீங்க. உங்களுக்கு சிங்கப்பூர் கணக்குத் தெரியாது… நான் அப்பாட்டயே கேக்கிறேன்…”

கைகளை நீட்டி நீட்டி அழுதுகொண்டே கோபத்தோடு பேசும் அவனைப் பார்க்கும்போது அவளுக்குச் சிரிப்பு வந்தாலும் அவன் வார்த்தைகள் சுட்டன. எத்தனையோ முறை கேட்டுக் கேட்டுப் பழக்கமாகிவிட்ட வார்த்தைகள்தான். ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் வலிக்கவே செய்கிறது.

“எக்கேடாவது கெட்டுத் தொலை!” அவனைத் திட்டி விட்டு,

“சுபா உள்ள என்ன செய்யிறே?” என்று மகளை விரட்டிக்கொண்டு அவள் அறைக்குள் சென்றாள்.

உதடுகளுக்கு சாயம் பூசிக்கொண்டிருந்த 13 வயது மகளைப் பார்த்தபோது, வேலைக்குச் செல்லத் தொடங்கும் வரை தான் லிப்ஸ்டிக்கே பார்த்ததில்லை என தோன்றியது.

“எங்க கிளம்பற?”

“பிரண்ட்ஸோட படத்துக்குப் போறேன்.”

“என்ன டிரஸ் இது… இந்தக் குட்டப் பாவாடையை போடுறதுக்கு வெறும் ஜட்டியைப் போட்டுட்டுப் போகலாம்…”

தலை சீவிக் கொண்டிருந்த சீப்பைத் தரையில் எறிந்துவிட்டு தாயை முறைத்தாள் மகள்.

“மாம் யூ ஆர் ரியலி ஏ நேரோ மைன்டட்!” கத்தினாள்.

“எதுக்கு இப்படிக் கத்தறே, பொம்பளப் பிள்ளைங்கன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும். இந்த மாதிரி நான் பேசியிருந்தா இந்நேரம் எங்கம்மா என்ன அறைஞ்சே கொன்னுருப்பாங்க. வரவர நீ ரொம்ப வாய் பேசறே…”

“ஆமா உங்கள மாதிரி இருந்தா என்னையும் ஊர்க்குடுமின்னு கேலி பண்ணுவாங்க. இப்ப இதுதான் பேஷன்.”

“பேஷனாவது ஒன்னாவது, முதல்ல இத கழட்டிப் போடு, இத போட்டுக்கிட்டு நீ வெளியில போகக்கூடாது.’

“எதுக்கு சும்மா சத்தம் போடறீங்க…” தூக்கம் கலைந்த கணவன் தன் அறையில் இருந்தபடியே கத்தினான்.

“இங்க பாருங்க, இந்தக் குட்ட பாவாடையைப் போட்டுக் கிட்டு வெளியில போறாளாம்…”

“அவளையும் உன்ன மாதிரி எல்லா இடத்துக்கும் சேலையச் சுத்திக்கிட்டு அலையச் சொல்றியா… எந்தெந்த இடத்துக்கு என்னென்ன டிரெஸ் போடணும்னு இருக்கு. உனக்கு என்ன தெரியும்… அவள் இஷ்டத்துக்கு அவள விடு…”

அப்பாவின் அனுமதிக்காகவே காத்திருந்ததுபோல் கிளம்பி விட்டாள்.

இதே அவள் கல்யாணமாகி வந்த புதிதில் அவள் ஜீன்ஸ் போட்ட போது, அவள் கணவன், “நீ புடவை கட்டி நீளக் கூந்தலைப் பின்னிப் போட்டு இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அடக்க ஒடுக்கமான மனைவி வேணும்னுதானே ஊர்ல வந்து உன்னைக் கட்டிக்கிட்டேன்.” என்றது நினைவுக்கு வந்தது.

“இங்க பாரு, இந்தக் காலப் பிள்ளைங்களப் பத்தி உனக்குத் தெரியாது. கண்டிப்போட வளர்க்கிறது நல்லதுதான். அதுக்காக நீ ரொம்ப கண்டிச்சா அதுங்க அடங்காமலே போயிடுங்க. இன்னிக்கு பிள்ளைங்க வளர்ற சூழ்நிலையே வேற. அதான் நீ பேப்பர்ல படிக்கிறியே.”

கணவனின் இந்த அறிவுரையைப் பலமுறை கேட்டுப் புளித்துப் போயிருந்ததால் அவனுக்குப் பதில் சொல்லாமல் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நான்கைத் தாண்டி விட்டது. சலூனுக்குப் போக வேண்டுமே என்று அவசரமாக மணிபர்சை எடுக்கும்போதே, போகத்தான் வேண்டுமா என அலுப்பு ஏற்பட்டது.

நேரத்தையும் பணத்தையும் செலவழித்து அலங்காரம் செய்து கொண்டு போவதில் என்ன இருக்கிறது… கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கப் போகிறோம். தாலி கட்டியதுமே விழுந்தடித்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி விடுவோம். ஒரு மணி நேர ஷோவுக்கு, அலங்காரம் செய்ய நாலு மணி நேரத்தைச் செலவிடுவதா… ஊரில் திருமணம் என்றால் எவ்வளவு கலகலப்பாக… ஜாலியாக இருக்கும்…

எண்ணமே இனித்தது. கொட்டமடிக்கும் நட்புகள் நினைவுக்கு வந்தன. குமரனும் நினைவுக்கு வந்தான். என்னவோ கல்யாணம் என்றாலே அவளுக்குக் குமரன் நினைவு வந்து விடுகிறது. போன மாதம்கூட கணவனின் நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்த போது, அவனைப் பற்றி நினைத்தாள். அவளது கல்யாணத்தின் போதும் அவளுக்கு குமரன் நினைப்பாகத்தான் இருந்தது.

இங்கே ஏன் யாருமே தனக்கு நெருக்கமாயில்லை… ஒருவேளை தன்னால்தான் இந்த ஊர் மக்களை, அவர்கள் வாழ்க்கையை நெருங்க முடியவில்லையோ… இந்த மண்ணோடு ஒட்டமுடிய வில்லையோ… என்று யோசித்துக்கொண்டே மணிபர்சைத் திறந்தாள்.

சிவப்பு நிறத்தில் சிங்கப்பூர் குடியுரிமை அட்டை. அதில் வாய் நிறைய புன்னகையோடு அவள் படம்.

“ஐ யெம் சிங்கப்பூரியன்.”

அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

– 1997, நான் கொலை செய்யும் பெண்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 2007, கனகலதா வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *