அடுப்பங்கரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 11,320 
 
 

வாழ்வின் சாரம் ஓர் ஓரமாய் கசிந்துகொண்டு இருந்தது. பொழுதின் முடிவு, கீழ்வானம் கறுப்பானது. மழை வருவதற்கான பச்சை மண்வாசம் அடித்தது. காற்று தன் வேடத்தைத் தரித்துக்கொண்டது. மேற்கே வீசுகிற காற்று, ஊருக்குள் புகுந்தது. அக் கணத்தில் மட்டும், அது தனக்கான முகத்தை வெளிக்கொணர்ந்தது. சுழன்று சுழன்று வீசியது. மண்ணும் மரம் மட்டைகளும் பயம்கொண்டன. தெருவெங்கும் குப்பைக்கூளங்களைப் பரவலாக்கியது. கொடிக்கம்பங்களை உடைத்துக் கீழே தள்ளியது. ஆடு மாடுகள் கொட்டகைகளிலும் வீட்டுத் திண்ணைகளிலும் ஒதுங்கின. தெய்வானை வீடு திறந்தே கிடந்தது. புழுதி மண்ணை வாரி, வீட்டின் அடுப்பங்கரை வரை வீசியது. வீட்டுச் சுவர் எங்கும் வெடிப்பு. வெள்ளையடித்த சுவர் கறுப்பேறியிருந்தது. தோசைக் கல் ஒன்று வெகுநாட்களாகப் புழக்கத்தில் இல்லாமல், ஆணியில் மாட்டியிருந்தது. அதன் மீது செம்மண் சுவர் கரைந்து, ஒழுகியிருந்தது. அதனை ஒட்டியே மஞ்சள் பை ஒன்று தொங்கிற்று. கொல்லை வாசல் திறந்து கிடந்தது. அவ்வழியே வந்த காற்று, மஞ்சள் பையை நிதானமிழக்கச் செய்தது. மஞ்சள் பையையே ஏறிட்டுப் பார்த்தாள் தெய்வானை. மஞ்சள் பை, பல யோசனைகளை முன்வைத்தது. வெகுநேரமாய் யோசித்தாள். பின், ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்துகொண்டாள். தன் இரு புடவைகளையும் எடுத்து அந்தப் பையில் திணித்துக் கொண்டாள். மகன் மருதுவின் கால்சட்டையையும் மேல் சட்டை யையும் தேடினாள். கொல்லைப் புறம் போய்ப் பார்த்தாள். துணி களெல்லாம் கீழே விழுந்து கிடந்தன. அதனையும் அரக்கப்பரக்க எடுத்துப் பையில் திணித்துக்கொண்டாள். பிறகு, தெருவாசல் பக்கம் வந்தாள்.

இவளின் பார்வை சிவன் கோயிலை நோக்கியே இருந்தது. மருதுவை எதிர்பார்த்திருந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை. பொடுசுகள் ஒவ்வொன்றாய் வீடு திரும்பினர். மருது மட்டும் ஏனோ வரவில்லை. வானம் இருட்டிக்கொண்டது. தெய்வானை, வானத்தையும் சிவன் கோயில் பக்கத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தாள். வெகு நேரத்துக்குப் பின், மருது ஓடி வந்தான். தெய்வானை வாசல் படியிலேயே நின்றிருந்தாள். மூச்சு வாங்க ஓடி வந்தவன், அம்மாவின் கண்களைப் பார்த்தான். கலங்கியிருந்தன. அம்மாவின் கையைத் தொட்டான். கையிலிருந்த மஞ்சள் பையைப் பார்த்ததும் அவனுக்கு எல்லாம் புரிந்துபோனது.

”பெரியம்மா வூட்டுக்குப் போறமாம்மா?” என்றான்.

”ஆமா! நீ எங்க இன்னமுட்டும் போன?” தெய்வானையின் குரல் இளகியிருந்தது.

”சிவன் கோயிலுக்குப் பின்னாடி வெளாண்டுக்கிட்டிருந்தேம்மா!”

”பள்ளிக்கூடம் வுட்டு வந்தா புஸ்தகத்தத் தொடுறதே இல்ல. பள்ளிக்கூடத்துலேந்து வர வேண்டியது, புஸ்தக மூட்டயத் தூக்கிப்போட்டுட்டு, ஊரு சுத்தப்போறது. அப்பனாட்டமே பொறுப்பில்லாம சுத்துற!”

மருது படிப்பது ஆறாம் வகுப்புதான். விளையாட்டுப் புத்தி. ஆனால், அறிவாகப் பேசுவான். ஊர் சுற்றினாலும் படிப்பில் கருத்தாக இருப்பான். வாழ்க்கையில் முன்னுக்கு வருகிற ஒவ்வொருவனும் அடிபட்டிருப்பான். அந்த அடிதான் அவனுக்குப் பலமே! மருதுவுக்கும் அதுதான் பலம்.

”நீ இப்படித்தாம்மா… அப்பா மேல உள்ள கோவத்த எம் மேல காட்டுவ” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டான் மருது.

”சரி… சரி… பதிலுக்குப் பதில் பேசாம கௌம்பு. பொழுது இருட்டுறதுக்குள்ள பெரியம்மாவூடு போயி சேரணும்” என்றாள் தெய்வானை.

தெய்வானை, மருதுவின் கையை இறுகப் பற்றிக்கொண் டாள். வாசல்படி இறங்கினாள். இடியின் சத்தம், நெஞ்சைத் தூக்கி வாரிப்போட்டது. மகமாயியை வேண்டிக்கொண்டாள். காற்று புது அவதாரமெடுத்தது. இவளின் முன் ஜென்மப் பகையாய் புழுதி மண்ணை முகத்தில் வீசியது. தெய்வானை புடவையின் முந்தானையால் மருதுவின் முகத்தை மூடிக்கொண்டாள்.

வீரப்பக்கோனார், மேய்ச்சலிலிருந்து வீடு நோக்கித் திரும்பிக் கொண்டு இருந்தார். அண்டக்குடி ஊர் எல்லை, மனித நடமாட்டமே இல்லாதிருந்தது. தெய்வானையைக் கண்டதும், ”மூட்டையும் முடிச்சுமா இந்நேரத்துல எங்க புள்ள கௌம்பிட்ட?” எனக் கேட்டார்.

”பூந்தோட்டம் கடைத் தெரு வரைக்கும் போறேன் தாத்தா! வூட்டுல மளிகை சாமான் இல்ல. அதான்… வாங்கிட்டு வரலாம்னு போறேன்” என்று இழுத்துச் சொன்னாள்.

”யாருட்ட புள்ள கத வுடுற? கண்ணு கலங்குது… கையில மஞ்சப்பையி வேற வச்சிருக்க! என்னன்னு தயங்காம சொல்லு” என்றார் வீரப்பக் கோனார். தொடர்ந்து அவரே, ”ஒம் புருசன் குடிச்சிப்புட்டு அடிச்சதால கோவிச்சிக்கிட்டு அக்கா வீட்டுக்குப் போற, அதானே?” என்றார்.

”ஆமா தாத்தா!”

”தெனந்தெனம் நடக்குறதுதானே! என்ன பண்றது புள்ள… விதியேனு கெடக்க வேண்டியது தான். அவனோட கொணந்தான் உனக்குத் தெரியுமே! சரி… சரி… அதெல்லாம் எதுக்கு இப்போ? நீ வூட்டுக்குப் போ! நாளைக்கு வந்து ரெண்டு பாட்டு வுடுறேன்!” என, அனுசரணையாகச் சொன்னார் வீரப்பக் கோனார்.

”இல்ல தாத்தா! அவன் எம்மா அடிச்சாலும் பரவால்ல, தாங்கிக் குவேன். ஆனா அவன், என் னோட நடத்தையப் பத்தி சந்தேகப் படுறான். வூட்டுக்கு அஞ்சு காசு கொடுக்குறதுல்ல. நான் வயக் காட்டுக்குப் போனாலும், செல வுக்கு ஏதாச்சும் கெடைக்கும். அதுக்கும் வுட மாட்றான். மீறி வேலைக்குப் போனா, ‘நீ வேலைக்குதான் போறியா… இல்ல, வேற எங்கயாவது போறியா?’னு வாய் கூசாம கேக்குறான். இவன் தானும் வாழ மாட்டான், அடுத்த வங்களையும் வாழ வுடமாட் டான்..!” – தெய்வானை, அழுதுகொண்டே கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டாள்.

”போதுமடா சாமி! இந்த மனுசனோட இனிமே குடும்பம் பண்ண முடியாது. நான் போறேன். போயும் போயும் இவனுக்கு வாக்கப்பட்டு வந்தேம் பாரு… ம்… நீ வாடா போவம்! இந்த ஊருல இனி இருக்கக் கூடாது” என்று, மருதுவை இழுத்துக்கொண்டு நடந்தாள்.

”நாளைக்கு ஊருல சொல்லிப் பஞ்சாயத்து வெச்சிக்கலாம், வா புள்ள!” என, வீரப்பக்கோனார் கெஞ்சிப் பார்த்தார்.

”பஞ்சாயத்தா? எவன் இருக் கான் இந்த ஊருல ஒழுங்கா பஞ்சாயத்துப் பண்ண? ஊருல உள்ளவனுவோ பாதிப் பேரு குடிக்கிறவனுவோ! இவனுவ பஞ் சாயத்துப் பண்ணவும் வேணாம். ஊர் சனங்க முனனாடி நாந் தல குனிஞ்சி நிக்கவும் வேணாம்!” என்று, மருதுவை இழுத்துக் கொண்டு ஒத்தையடிப் பாதையில் வேகமாக நடந்தாள். அவள் வாழ் வைப் போல் வளைந்து வளைந்து சென்றது அந்த ஒத்தையடிப் பாதை.

பொழுது சாய இன்னமும் நேரம் இருந்தது. வானம் மூடிக்கொண்டது. பறவைகள் இடம் பெயர்ந்தன. மின்னல்கள் மழை வருவதை உறுதிப்படுத்தின. கருப்பச்சாமி கோயில் பக்கம் நரிகள் ஊளையிட்ட வண்ணம் இருந்தன. கன்னி வாய்க்கால் வந்ததும், மருது நின்றான்.

”வாய்க்கால்ல பாம்பு இருக்கும். நான் இறங்க மாட்டேன்” என்றான். ”அம்மா முதுகுல ஏறிக்க, நான் தூக்கிட்டுப் போறேன்” என்று மகனை முதுகில் சுமந்துகொண்டு வாய்க் காலைக் கடந்தாள் தெய்வானை. ஏனைக்குடி நூலாற்றுப் பாலம் வந்தது. மருது மறுபடியும் நின்றுவிட்டான். ”அம்மா, காலு வலிக்குதும்மா!” என்று பாலத்தின் மரக்கம்பில் அமர்ந்துகொண்டான்.

”கொஞ்ச தொலவுதான், நடடா! காடுவெட்டி வந்துடும். அப்புறம் அத்த வூடு போயி உக்காந்துக்கலாம். எந்திரிச்சி வா ராசா… வாடி… மழ வேற வருது. இருட்டுச்சுன்னா வழியில பூச்சிப்பொட்டு ஏதாச்சும் கெடக்கும். நரி வந்து வழி மறிச்சிக்கும்” என்றதும், எழுந்துகொண்டான். தட்டிப் பாலத்தில் நடக்க ஆரம்பித்ததும் அவளுக்கு ஈரக்குலையே நடுங்கியது. தட்டிப்பாலம் ஆட்டங் கண்டது. மருது, அம்மாவின் கையை இறுகப் பிடித்துக்கொண்டான். ஆத்துத் தண்ணி அசுர வேகத்தில் ஓடியது. தெய்வானை, ஆற்றுநீரின் வேகத்தைப் பார்த்துக்கொண்டு நடந்தாள். தலை சுற்றுவதுபோல் இருந்தது. தட்டுத் தடுமாறி ஆற்றுப்பாலத்தைக் கடந்தாள். ஆற்றைப் பார்க்கும்போதெல்லாம் ‘தரணி’ ஞாபகம்தான் வரும் அவளுக்கு.

தரணி எப்பவும் துறுதுறு என்று இருப்பாள். அவள் போய் ஒரு வருடம் இருக்கும். அப்போது ஐப்பசி மாத அடைமழை. ஊரே வெள்ளக்காடாய் மாறியிருந்தது. தெய்வானை, உயிரை ஒரு கையிலும் மறு கையில் தரணியையும் பிடித்துக்கொண்டு, பாலத்தில் நடந்துகொண்டு இருந்தாள். பச்சை மரத்தையே அடியோடு அடித்துச் சென்ற பாவித் தண்ணீருக்கு மூங்கில் பாலம் எம்மாத்திரம்! நடுப் பகுதியை ஒரே அடியில் அடித்துச் சென்றது. தெய்வானையும் தரணியும் ஆற்றில் விழுந்தனர். மருது பின்னால் வந்ததால் தப்பித்துக்கொண்டான். ஆறு கரைபுரண்டு தெய்வானையை அடித்துச் சென்றது. தரணியை எப்போது கைவிட்டாள் என்றே தெய்வானைக்குப் புலப்படவில்லை. கரையோரம் உள்ள மரத்தைப் பிடித்துக்கொண்டு, சற்று மூச்சை இழுத்துவிட்டாள். வேக வேகமாய்க் கரை ஏறியவள், ”தரணி… தரணி…” எனக் கத்திக்கொண்டே கரையோரப் பாதையில் ஓடினாள். செம்மண் சேறு வழுக்கியது. மருதுவும் பின்னாலேயே ஓடிவந்தான். தரணி தென்படவே இல்லை.

பொழுது விடிந்து, வெயில் அடிக்க ஆரம்பித்ததும், அந்தப் பொல்லாத சேதி வந்தது. அண்டக்குடியிலிருந்து ஆறு மைல் தொலைவில், மேனாங்குடியில் உயிரின்றி ஒதுங்கியிருந்தாள் தரணி.

இடியின் சத்தம் நினைவுகளைக் கலைத்தது. காடுவெட்டியை நெருங்க நெருங்க, ஊரெங்கிலும் இருள் சூழ்ந்தது.

”மழ வந்திரிச்சிடா மருது, வேகமா நட!” என கால்களை எட்டிப் போட்டாள். மருது, அம்மாவின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தான். காடுவெட்டி நெருங்க, அடைமழை ஆரம் பித்தது. ஊர்ப் பெருசுகள், கோணிப்பையைத் தலையில் மாட்டிக்கொண்டு நடந்தனர். ஊர்த் தலையாரி, அரிக்கேன் விளக்கைப் பிடித்துக்கொண்டே வயல் வரப்பில் நடந்துபோனார். ஊர் எல்லை வந்தது. அதற்கு மேல் தெய்வானை, காலடி எடுத்துவைக்கத் தயங்கினாள்.

”ஆ வூன்னா கோச்சிக்கிட்டு அக்கா வூட்டுக்கு வந்துடுறியே?” என யாரோ சொல்வது போல் இருந்தது. தயக்கத்துடனே தெரு வில் நடந்தாள்.

‘ஒரு நாளு ரெண்டு நாளுன்னா பரவால்ல..! இனி புருசன் வூட்டுக்கே போக மாட்டேன்னு அக்கா வூட்டுக்குப் போறே! அவளே மூணு பொண்ண வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறா. அவங்க வயித்துப்பாடே திண்டாட்டமா இருக்கு. இதுல நீ வேறயா?’ என்றது மனது.

”நான் அவளுக்குச் சொமையா இருக்க மாட்டேன் வயக்காட்டுக்கு வேலைக்குப் போயி, எம் புள்ளை யப் பாத்துக்கறேன். அவ இருக்குற இடத்துல ஒரு குடுச போட்டுக் குடுத்தாப்போதும். அவன் படிச்சுப்புட்டான்னா போதும். பெறகு, அவன அவன் பாத்துப்பான். அதுக்கப்புறம் நான் உசுர வுட்டுடுவேன்!” – தெய்வானை உரக்கப் புலம்புவதை மருது கேட்டுக்கொண்டே வந்தான்.

அக்கா வீடு வந்தது. நிலை வாயிற்படியில் அக்கா மரகதம் நின்றிருந்தாள். ”வா தெய்வானை! என்ன இந்நேரத்துல? பொழுதுக்கே வரவேண்டியதுதானே?” என்றாள்.

”இல்லக்கா…” என வார்த் தையை நீட்டினாள் தெய்வானை.

”வூட்டுக்காரரோட ஏதாச்சும் சண்டையா?”

தெய்வானை கடகடவென எல்லாவற்றையும் கொட்டி அழுதாள். முடித்ததும்,

”அது சரிம்மா…” என்று இழுத்தான் கலியன். மரகதத்தின் கணவன்.

”என்னங்க அத்தான் தயங்கு றீங்க? என்னடா, நாம படுற பாடே பெரும்பாடா இருக்கே! இதுல இவ வேறயானு நெனக்கிறீங்களா? அப்படில்லாம் நெனச்சிராதீங்க அத்தான்! அப்புறம் நாங்க தெருவுலதான் நிக்கணும். எனக்கு ஒரு குடுச மட்டும் போட்டுக் குடுங்க. வயல் வேலைக்குப் போயி பொழப்ப ஓட்டிக்கிறேன். எங்களை அநா தையா வுட்டுடாதீங்க அத்தான்” என தெய்வானை பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டாள்.

மரகதம், ”சரி… சரி… அழுதது போதும். மனசப் போட்டுக் கொழப்பிக்காம சாப்புடுங்க. எல்லாம் விடிஞ்சு பாத்துக்கலாம்!” என்றாள். மாங்காய் போட்டு புளிக் குழம்பு வைத்திருந்தாள். கீரையைத் துவட்டி வைத்திருந் தாள். மருதுவுக்கு நல்ல பசி. அவனும், பெரியம்மா பெண்களோடு பேசிக்கொண்டே சாப்பிட்டான். தெய்வானைக்கு மட்டும் சாப்பாடு இறங்கவேயில்லை. சாதத்தை உருண்டையாக உருட்டிக்கொண்டே இருந்தாள். சாப்பிட்டு முடித்ததாகப் பேர் பண்ணினாள்.

ஊரே உறங்கியிருந்தது. நாய் குரைப்பது நின்று, அமைதி ஆனது. நாழிகை கடந்து, தூறல் நின்றிருக்கும் போல! தெய்வானை, தூங்காமல் மோட்டுவளை இருட்டையே பார்த்துக்கொண்டு இருந்தாள். நினைவுகள் முன்னும் பின்னும் அலைபாய்ந்தன. தெய்வானையின் கண்களில், ஒட்டடை படிந்த தன் வீடும், கறுப்பேறிய அடுப்பங்கரையும் தோன்றி மறைந்தன. எதிர்காலப் பொழுதுகள் அச்சத்தை மூட்டின.

எதிர்காலப் பொழுதுகள், தெய்வானைக்குச் சாதகமா, பாதகமா? யாருமே அறிந் திலர்! தேடலில், அது தென் படாதிருந்தது.

‘எனை அறிந்தவன் இவ்வண்டத்தில் யாரும் உண்டோ? நான் மண் ணாய்க் கிடப்பேன்; காற் றாய்ச் சுழலுவேன்; மழை யாய்ப் பொழிவேன்; என் உரு உங்களுக்குத் தெரியா தெனினும், மெய்யானவன் நான். உங்களைப் படைப்பவன் நான். காப்பவன் நான். உங்களின் வினைகளுக்கேற்ப, சரியான பொழுதில் அழிப்பவனும் நான்… நான்… நானேதான்! இவ்வுலகில் உள்ள தூண், துரும்பு ஒவ்வொன்றிலும் நான் இருக்கிறேன். எனை எதிர்த்தவன் எவனும் உண்டோ? எதிர்க்கிறவன், எதிர்க்கப்போகிறவன் எவனும் உண்டோ? எவனும் இல்லை. இனி ஒருவன் வரப் போவதுமில்லை’ என்று உருவிலா ஒலி மட்டும் வெட்டவெளியில் எழும்பிக்கொண்டே யிருந்தது. அதை இங்கு கேட்பவரில்லை. காலமெனும் அதன் பிடியில் சிக்காதவர் யாருமிலர். காலத்தின் உருவம், எப்போதும் சாதாரணமாகவே தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, உள்ளுக்குள் பெரு வெளியாய் புதைந்திருக்கிறது.

– 23rd ஏப்ரல் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *