(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு ஊர்ல – ஒரு அடங்காப்பிடாரி இருந்தா. ஒருத்தங்கூட, அவளக் கல்யாணம் முடிக்க வரல. வராம இருக்கவும், அவளோட தாயிக்கு ஒரே வருத்தம். இவள எங்குடாச்சும் புடுச்சுக் குடுக்கலாம்ண்டா , ஒருத்தங் கூட வரமாட்டேங்குறானேண்டு வருத்தப்ட்டுக்கிட்டிருக்கா.
ஒருநா, தொல தூரத்ல இருந்து ஒருத்த, பொண்ணு கேட்டு வந்தர். இந்தச் சந்தர்ப்பத்த விடக் கூடாதுண்டு, சரி பொண்ணத் தரோம்ண்டு சொல்லிட்டா. சொல்லவும் கலி யாணம் முடிஞ்சிருச்சு. புருச வீட்டுக்கு வந்தா. வந்ததும், வராததுமா, யாரிடி? மாமியாண்டறவ, அவ வீட்ட விட்டு வெளியேறுடிண்டு சொன்னா. அதிகாரத்த மாமியா மேல காட்டுறா.
அடங்காப்பிடாரி பேசுன வார்த்த, அம்மாவயும்-மகனயும் அசத்திருச்சு. ரெம்பக் கவலப்பட்டு, என்னாடா மகனே! இப்டிண்டு பேசிக்கிட்டிருக்கயில, மாமியா போறாளா? இல்ல, நா போகவாண்டு பேசிக்கிட்டே, வெளியேறி, பெறந்த வீட்டுக்குப் போயிட்டா.
வீட்ல போகவும், அம்மாகாரி, தெரிஞ்சது தானண்ட்டு, என்னமாண்டு கேட்டா. கேக்கவும், நிய்யி எங்கூட வரணும்ண்டா அம்மாகாரி, பதுலப் பேசாம, இவ கூட வர்ரா.
வீட்டுக்கு வந்தாங்க. இவங்க தாயி மக, அவங்க தாயி மக, ஒரே வீடல இருக்காங்க. இருக்கயில், நாளுக்கு நாளு மாமியாளக் கொடுமப் படுத்துறா. எப்டியும், இவளக் கொண்டுபிறணும்ண்டு நெனச்சுக்கிட்டிருக்கா.
அப்டி இருக்கயில, ஒருநா, புருசனுக்குச் சாப்பாடு போட்டுக்கிட்டே, இண்ணக்கி ராத்ரில எப்டியாச்சும், ஒங்கம்மாளக் கொண்டுபிடணும்ண்டு சொன்னா. இதச் செஞ்சாத்தா ஒங்ககூட இன்பமா இருப்பேண்டு சொல்றா. இவனும், மனசுல ஒரு திட்டத்தப் போட்டுக்கிட்டே, சரித்தேண்டு சொல்லிட்டா.
கெழவிக ரெண்டுபேருந் தனியா ஒரு வீட்டுக்குள்ள படுத்துக்கெடக்காங்க. சின்னஞ் சிறுசுக, அங்குட்டுத் தனியா படுக்கட்டும்ண்டு நெனச்சு, நல்லாப் படுத்து ஓரங்குறாங்க. ஒரங்கயில, இருட்ல –
மாமியாள அடயாளங் கண்டுபிடிக்கிறதுக்காக, மாமியா காலுல வெள்ளத் துணியக் கெட்டி விட்டுருக்கா. தம் புருசங் கிட்ட வந்து, ஒங்கம்மா காலுல வெள்ளத் துணியக் கெட்டி வச்சிருக்கே. அடயாளம் பாத்துக் கொல்லு, தவறுதலா, எங்கம்மாவக் கொண்டுபிடாதண்டு சொல்லி போகச் சொன்னா. சொல்லவும், இவ, பொண்டாட்டிக்குத் தெரியாமப் போயி, அம்மா காலுல கெட்டி இருந்த வெள்ளத் துணியக் கழத்தி, மாமியா காலுல கெட்டி விட்டுட்டு வந்திட்டா.
நல்லா நடுக்குறிச் சாமத்ல, புருசனும் – பொண்டாட்டியும் எந்திருச்சுப் போறாங்க பெரீ….ய கட்டயப் புருசங்கிட்டக் குடுத்து, மாமியாள, மண்டயில் பாத்து அடிக்கச் சொல்றா. இவனும் போயி, வெள்ளத் துணி கட்டுன கால அடியாளம் பாத்து, மண்டயில் ஒரே போடு போட்டு, கொண்டு பிட்டு வந்திட்டா.
அண்ணக்கி, விடியுங்குள்ள அடங்காப்பிடாரி எந்திரிச்சிட்டா. எந்திரிச்சு மோரு கடயிரா. எப்டிச் சொல்லிக் கடையிராண்டா,
அல்லயும்மில்ல தொல்லயும் மில்ல
அலஞ்சு வரப் பிள்ளயும் மில்ல
சிலுப்பு மெத்தா சிலுப்பு – ண்டு
சொல்லிக்கிட்டே மோரு கடயிரா. இதக் கேட்ட புருச,
நிய்யி அங்க சிலுப்புடி!
ங்காத்தாங்குறதும், ங்கோத்தாங்குறதும்
விடிஞ்சாத் தெரியும்ண்றா.
நல்லா விடியவும், அடங்காப் பிடாரி போயிப் பாத்தா. பாத்திட்டு, என்னா ஆம்பள? எங்கம்மாவக் கொண்டு போட்டிருக்கண்டு கேட்டா. கேக்கவும் – நா என்னா செய்யுறது. நிய்யி கெட்டி வச்சிருந்த அடையாளத் துணி இருந்தவளத்தர் அடிச்சேண்டு சொன்னா.
சொல்லவும், சரி! ஆனது ஆச்சு, போனது போச்சு. பெதைக்கிறதுக்கு வழியப் பாருண்டு சொன்னா. இங்ஙன விழுந்திட்டா – அங்ஙன விழுந்திட்டாண்டு, சாக்குப் போக்குச் சொல்லி, ஊரக் கூட்டிப் பெதச்சிட்டாங்க.
பெறகும், அடங்காப்பிடாரிக்கு, மாமியா மேல இருந்த ஆத்ரம் போகல. எப்டியாச்சும் இவள ஒழிச்சுப்பிடணும்ண்டு வழி பாத்துக்கிட்டிருக்கா.
ஒருநா ராத்ரி, அன்யோன்யமான நேரத்ல. புருசன இறுக்கிப் புடுச்சுக்கிட்டு, இண்ணக்கி எப்டியாச்சம் ஒங்கம்மாவ உசுரோட சாக்குல கெட்டி, சுடுகாட்டுல கொண்டு போயி எரிக்கணும்ண்டு சொல்றா. அன்யோன்யமான நேரத்ல சொன்னாக் கேப்பாண்டு சொன்னா. சொல்லவும், அவனும் சரிண்ட்டு, சாக்குல கட்டி, சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போறா. சுடுகாட்ல வச்சுட்டு, வெறகு வெட்டப் போயிட்டர். அப்ப! என்னயக் காப்பாத்துங்க. காப்பாத்துங்கண்டு சத்தம் போடுறா.
அப்ப, அந்த வழியா போனவ. என்னயக் காப்பாத்துங்கண்ட சத்தங் கேட்டுப் போயி, அவுத்து விட்டுட்டர். வெளிய வந்து, வைக்கோல அள்ளி, சாக்கு நெறயாக் கெட்டி வச்சுட்டு, பக்கத்ல இருந்த காளி கோயிலுக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிட்டா.
அந்தச் சமயத்ல, மூணு களவாணிக, நகநட்டுகள களவாண்ட்டு வந்து, பகுந்துகிட்டு இருந்தாங்க. இந்தக் கெழவி. செலக்கிப் பின்னால இருந்து யாருடா? என்னெடத்ல இருக்கதுண்டு சொன்னா. சொல்லவும், யாரோ ஆளுக வந்துட்டாங்கண்ட்டு, நகநட்டுகள போட்டுட்டு ஓடிப் போயிட்டாங்க. ஓடிப் போயிறவும், நகநட்டுகள அன்ளிக்கிட்டு. மக வீட்டுக்கு வந்தா. வாம்மா! வா! எப்டிம்மா வந்தேண்டு மக் கேட்டர். மகனே! சுடுகாட்ல வச்சு என்னய எரிச்சுட்டயா. அப்டியே மேலோகத்துக்குப் போனே. அங்க! எங்கப்பா, எங்கண்ணே, எங்கம்மா, எந்தம்பி, எம்பருசி எல்லாத்தயும் பாத்தே. பாத்து. எந்நெலமயச் சொன்னே.
நாங்க இங்க இருக்கயில, நிய்யி எதுக்கு அங்க கசுட்டப்படுறேண்டு – எம்மேல எரக்கப்பட்டு, இந்த நகநட்டுகள அள்ளித் தந்தாங்க. வாங்கிட்டு வந்தேண்டு சொன்னா.
மாமியா கொண்டு வந்த நகநட்டுகளப் பாத்திட்டு, அடங்காப்பிடாரிக்கு ஆச வந்திருச்சு. நானும் போயி, எங்கப்பா, எங்கம்மாகிட்ட நகநட்டு வாங்கிட்டு வரணும் என்னயும் சுடுகாட்டுல கொண்டு போயி எரிங்கண்டு சொன்னா.
சரிண்ட்டு,- அடங்காப்பிடாரியச் சாக்குல கெட்டித் தூக்கிட்டுப் போறா. சுடுகாட்ல எரக்கி வச்சுத் தீய வச்சுட்டா. அடங்காப்பிடாரி ஏரிஞ்சு சாம்பலாப் போனா. போகமாட்டாளா பின்ன!
நாளாச்சு. அடங்காப்பிடாரி வரல. ஏம்மா! நிய்யி ரெண்டு மூணு நாள்ல வந்துட்டியே. இன்னும் எம்பொண்டாட்டயக் காணமண்டு கெழவி கிட்டக் கேட்டா. கேக்கவும்,
மகனே! என்னய சுடுகாட்டுக்குக் கொண்டு போன, நிய்யி, அங்கிட்டுப் போயிறவும், அந்த வழியர் ஒருத்தி வந்தா. அவ சாக்க அவுத்து விட்டா. வெளிய வந்து, பக்கதில் இருந்த காளி கோயிலுக்குப் போனே. அங்க களவாணிக, நகநட்டுகளப் போட்டுப் பகுந்துகிட்டிருந்தாங்க. யாருடாண்ட்டு கேட்டே? போட்டுட்டு ஓடிப் போயிட்டாங்க. அள்ளிக் கிட்டு வந்தேண்டு மகங்கிட்டச் சொன்னா. பெறகு, தாயும் மகனும் நல்லாப் பொளச்சாங்களாம். இவ, வஞ்சகக்காரி திய்யில் எரிஞ்சு செத்தா. பாவம்! மாமியாளக் கரிச்சுக் கொட்டலாமா?
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.