அக்கினி மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 5,980 
 
 

மூணு மாசம் ஆச்சு. வேலை வெட்டிக்கு போக முடியல. சாப்பாட்டுக்கு கஷ்டம். இந்த சூழல்ல என்னதான் பண்றது. தினமும் பொலம்பி தவிக்க வேண்டியதுதான். மணி மனசுக்குள்ள பொலம்பி கொண்டிருந்தான்.

“ஏங்க , இப்படியே உட்கார்ந்திருந்தால் சாப்பாட்டுக்கு என்ன தாங்க செய்யிறது. நாளைக்கு பொட்டு அரிசி கூட கிடையாது”.

“என்னங்க .நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு ஒக்காந்து இருக்கீங்க”

“ஏம்மா , என்னை என்ன செய்ய சொல்ற. துட்டு வச்சுக்கிட்டா ஒக்காந்து இருக்கேன். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அக்கம்பக்கம் கூட கடன் கேட்க முடியாது. எல்லார் நெலையும் ஒன்னு
போல தான் இருக்கு”.

“ஏங்க , வீட்ல ரெண்டு பிள்ளைங்க இருக்குதுக. அதுகல எப்படிங்க பட்டினி போடறது. நாம கூட வயித்துல ஈரத்துணி போட்டுக்கலாம். குழந்தைக”ளைப் பட்டினி போட முடியுமா ?

மணி எழுந்தான். பொண்டாட்டி பொலம்பரது புரியுது. மெக்கானிக் ஷாப் வரைக்கும் போயிட்டு வரலாம். எவனாவது தோஸ்த் அகப்பட்டா காசு கேட்டு பார்க்கலாம். வண்டி எடுத்து உதைத்தான். காசு கிடைச்சா இதுக்கு கொஞ்சம் பெட்ரோல் ஊத்தணும்.

தம்பி, எங்கப்பா போற. எனக்கு கொஞ்சம் பிரியாணி வாங்கிட்டு வந்து கொடுப்பா. என் வீட்டுக்காரரு எந்திரிக்க முடியலை . நாளும் பிரியாணி சாப்பிடணும் என்று புலம்பி தவிக்கிறார். அப்பா மணி, என்னால மெயின் ரோடு வரைக்கும் நடக்க முடியாதப்பா. கொஞ்சம் வாங்கிட்டு வந்து கொடுப்பா.

மணி ஒன்றும் சொல்லாமல் காச வாங்கி கிட்டான். அவன் பொண்டாட்டி செல்லா உள்ளே கூப்பிட்டா. உள்ள வந்த மணியிடம்,

“மாமாவோவ் நம்ம வீட்டுக்கும் ஒரு பிரியாணி வாங்கிட்டு வாய்யா. அத்தே சாப்புட்டு நாளாச்சு. ஆளுக்கு ஒரு வாய் எடுத்துக்கலாம்”என்றாள்.

மணி அவளை முறைத்தான் . காசே இல்லேன் சொல்றேன் . நீ பிரியாணி வாங்கிட்டு வா என்று சொல்ற. தன் தலையில அடிச்சு கிட்டு வெளியேறினான்.

மணி மெக்கானிக் ஷாப் சென்றான். அங்க மொக்கையன் நின்னுகிட்டு இருந்தான். அவன் கண்ணாலம் கட்டிக்காதவன். எப்பவும் கையில ரெண்டு துட்டு வச்சிருப்பான். அவனிடம் கைமாத்தா ஒரு நூறு ரூபாய் கேட்டான். அவனும் பதில் பேசாமல் தூக்கி கொடுத்தான்.

காசு கிடைச்ச சந்தோசத்துல, வண்டிக்குக் கொஞ்சம் பெட்ரோல் போட்டுவிட்டு, கொஞ்சம் அரிசியும், கவுரு மாவும் வாங்கிகிட்டு அஞ்சு ரூபா பிஸ்கட் பாக்கெட் ரெண்டு வாங்கிக்கிட்டான். கையில இருந்த
ரூபாயைக் கொடுத்து விட்டு, மீதிக்கு கடன் எழுதினான். பக்கத்து தெருவுல பிரியாணி கடை இருந்தது. பிரியாணி ஒரு பொட்டலம் வாங்கி கிட்டு திரும்பினான்.

வண்டிய நாலு வீட்டுக்குத் தள்ளி நிறுத்திவிட்டு, அதனைத் தள்ளிக் கொண்டே வந்தான். முதல பிரியாணி பொட்டலத்தைப் பக்கத்து வீட்டில் கொடுத்தான்.’ நீ நல்லா இருப்ப தம்பி ‘ என்று அந்த அம்மா மனமார வாழ்த்த , வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மணி, வண்டிய வீட்டு ஓரமா நிப்பாட்டிட்டு உள்ள வந்தான். ‘என்ன மாமா பிரியாணி வாங்கிட்டு வந்துட்டியா. வண்டி சத்தமே கேட்கல ‘ என்று கத்துகிட்டே செல்லா ஓடிவந்தாள்.

அவ கையில வாங்கி வந்த பொட்டலத்தைக் கொடுத்தான். ஆவலா திறந்து பார்த்தால் செல்லா.

அதுல அரிசியும் கேவுரு மாவும் இருந்ததைப் பார்த்து தூக்கி வைத்து விட்டாள். ‘மாமாவ் பிரியாணி வாங்கிட்டு வரலையா . எவ்வளவு ஆசையா கேட்டேன் . வர வர உனக்கு என் மேல ஆசையே இல்லாம போயிடுச்சு’ என்று சட்டையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

‘ என்ன , நீ கொஞ்சமும் அறிவு இல்லாமல் பேசுற. நானே காசு இல்லைன்னு சொல்லிட்டு இருக்கேன் .ஏதோ மொக்கையன் வந்தான். அவனிடம் நூறு ரூபாய் கைமாத்து வாங்கி, இதெல்லாம் வாங்கிட்டு வந்தேன். கொஞ்சம் பெட்ரோல் போட்டுட்டு வந்தேன். மளிகை கடைக்காரரிடம் கடன் வேறு .போயி கஞ்சியைக் காச்சி கொடு” என்று கோபமாகச் சொன்னான்.

” என்ன மாமாவ், ரொம்ப தான் கோவிச்சுக்கிற. காதலிச்சு தான கல்யாணம் கட்டிக்கிட்ட. என்னவோ விரோதி மாதிரி பேசுற. என்னால கஞ்சி எல்லாம் காய்ச்ச முடியாது. போ பிரியாணி வாங்கிட்டு வா”.
“என்னடி , ரெண்டு பிள்ளையும் பெத்துகிட்டு இன்னும் சின்னப் புள்ளை மாதிரி அழுது அடம் பிடிச்சு கிட்டு இருக்க. மனுஷனோட நிலைமை புரியல்ல. இப்படியா நீ சண்டை போடுவே.

இன்னைக்கு இருக்கிற நிலைமையிலே ஒரு நாளைக்கு ஒரு வேளை கஞ்சி கிடைக்கிறதே பெரிய பாடு . நீ என்னடான்னா பிரியாணி கேட்டு அடம் பிடிக்கிற..போ…. குழந்தைக பசின்னு வந்து நிக்கிறதுக்கு முன்னாடி கஞ்சியையாவது காச்சித் தொலை” என்று கோபத்தில் கத்தினான்.

செல்லா முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு , கோபமா அந்த இடத்தை விட்டுப் போனாள். கொழந்தைகள் விளையாட போனதுக தான் . திரும்பி வர காணம். பத்து நிமிஷம் கழிச்சு அடுப்பாண்ட எட்டிப் பார்த்தான் மணி.

செல்லாவைக் காணல. வாங்கி வந்த ஜாமான் ஒரு மூலையில் கிடந்தது.

என்னமோ பொசுங்கற வாடை வந்தது. சுத்தி சுத்தி பாத்தான். ஒன்னும் புரியல. கண்ணை கட்டிக்கிட்டு வந்தது. வாசல்ல குய்யோ முறையோன்னு சத்தம்.

டேய் மணி பாவி….பயலே… எங்கடா போய் தொலைஞ்ச.. உன் பொண்டாட்டிய பாருடா.. கொளுத்திக்கிட்டாடா. பாவி கொளுத்திக்கிட்டா….. அந்த ஓலத்தைக் கேட்ட மணி அப்படியே மயங்கி சாய்ந்தான்.

மணி கண்விழித்துப் பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் செல்லாவின் உடல் அவன் அருகில் கிடந்தது . வலி தாங்காமல் அவள் முனகிய சத்தம், அவன் காதில் வேதனையாக ஒலித்தது. ஆளாளுக்குக் கத்திக் கொண்டிருந்தார்கள் . ஆம்புலன்ஸ் கூப்பிட ஒருத்தர் போன் செய்து கொண்டிருந்தார். அருகில் மருத்துவர் யாராவது கிடைப்பாரா என்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தார் . தெரிந்த சிலர் மணியை எழுப்பி உட்கார வைக்க முயற்சித்தனர். அந்த இண்டு வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது.

செல்லாவின் இரண்டு குழந்தைகளும் , அம்மா அருகில் வர பயந்துகொண்டு, பக்கத்து வீட்டுப் பாட்டி அரவணைப்பில் முடங்கிக் கிடந்தனர். அவர்கள் கண்கள் பயத்தில் உறைந்து கிடந்தன.
மணி சடாரென்று எழுந்து உட்கார்ந்து, அருகில் கிடந்த செல்லாவை இழுத்து மடியில் போட முயன்றான். கையில் தொட முடியவில்லை. அந்த அளவு உடல் வெந்து போயிருந்தது .தலையை மட்டும் தூக்கி மடியில் வைத்தான். “ஏன்னம்மா இப்படி பண்ணிட்டாய். ஒரு பிரியாணியா உன்னோட உயிரை கொண்டு போயிடுச்சு” என்று கதறினான்.

லேசாகக் கண் திறந்து பார்த்த செல்லா, “நீ எப்படியும் என்னைக் காப்பாத்தி விடுவாய் அப்படின்னுதான் மாமாவ் செஞ்சுட்டேன். என்னை மன்னிச்சுடு. மாமாவ்! இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்ல . எம் மூளை கெட்டுப் போச்சு ” என ஈன சுரத்தில் அவள் முனங்கினாள்.

ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. செல்லாவைக் கையால் தொட முடியவில்லை . ஒரு போர்வையைப் போத்தி அவளைத் தூக்கிச் சென்றார்கள். குழந்தைகள் அவள் பின்னாலேயே அலறி கொண்டு ஓடினர். குழந்தைகளை யாரோ பிடித்துக்கொண்டனர். மணி பேச்சு மூச்சற்று திரும்பவும் மயக்கம் ஆனான். அவனை வீட்டில் விட்டுவிட்டுத் தெரிந்தவர்கள் ஆம்புலன்சில் ஏறி சென்றார்கள்.

மறுநாள் அவள் பிணமாக வீட்டுக்கு வந்த பொழுது மணிக்கு அழக் கூடத் தெம்பில்லை. அவன் மனசு துக்கத்தில் உறைந்து கிடந்தது . அவளுக்கு மாலை வாங்கி போடக் கூட அவன் கையில் காசு இல்லை. எதுவும் செய்ய இயலாது, ஒரு ஓரமாகக் குழந்தைகளை அணைத்தபடி நின்று கொண்டிருந்தான் .

” இனிமேல் எனக்கு இந்த உயிர் எதற்கு? என் வாழ்வில் வசந்தமாக வந்த செல்லாவே போய்விட்டாள். நான் யாருக்காக வாழ வேண்டும்” என்று அவன் மனம் ஓலமிட்டது.

அடுத்த கணமே அவன் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை அழித்தான். செல்லாவின் அச்சு அசலான இரண்டு குழந்தைகளின் உயிர் தன் கைகளின் அரவணைப்பில் துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுக்கு அந்த சனமே வந்தான்

“குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டுச் சென்று விடக்கூடாது. செல்லா போல அக்னி மனசு எனக்கு இல்லை”.

செல்லாவை நினைத்தவுடன் தாரைதாரையாக அவன் கண்ணில் நீர் வடிந்தது. . காதலித்த போது அவள் காட்டிய அன்பும் அரவணைப்பும் அவன் கண்ணில் கண்ணீராகக் கொந்தளித்தது. அனாதையாகச் சுற்றித்திரிந்த அவனுக்கு ஒரு வாழ்க்கை பிடிப்பாக அவள் வந்து நின்றாளே …….அந்த கணத்தை அவன் தான் மறக்க முடியுமா? கல்யாணம் கட்டிக்க முடிவு செய்தபோது, அவள் தாய் தந்தையர அதனை எதிர்த்தனர். அவள் அண்ணன்காரன் வெட்டுவேன் குத்துவேன் என்று குதித்த போதும், அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு துணிஞ்சு அவன் கிட்ட வந்தாளே…, “என் வாழ்வை வசந்தம் ஆக்கினாளே…. இப்படி அநியாயமா, இந்த கொராமானா காலம் தந்த வறுமையிலே போய் சேர்ந்துட்டாளே…. பாவி எனக்கு கொடுத்து வைக்கல…..அழகா இரண்டு பிள்ளைகளைப் பெத்துக் கொடுத்து விட்டு போயிட்டா…….” என்று தலையில் அடித்துக் கொண்டு அவன் அழுத அழுகை பார்ப்பவர் நெஞ்சைப் பிசைந்தது.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவன் நிலையைப் புரிந்துகொண்டு, காசு சேகரித்து , செல்லாவின் கடைசி காரியத்துக்கு உதவினார்கள். அவர்களே முன்னின்று அனைத்துக் காரியத்தையும் பார்த்துக் கொண்டனர்.

சுடுகாட்டிற்கு அவள் பின்னால் சென்ற பொழுது, தன் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குவதை மணி உணர்ந்தான். கோழைகள் என்றும் வாழ முடியாது. தைரியமானவர்கள் என்றும் வீழ்வதில்லை . என்றோ எப்பவோ யாரோ கூறக் கேட்டது ஞாபகம் வந்தது.

உடனே ஒரு உறுதியோடு குழந்தைகளை அணைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். குழந்தைகள் அப்பாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே நடந்தன. மூவரின் கண்ணிலும் சோகத்திற்குப் பின்னால் ஒரு உறுதி பிரகாசித்தது. கைகள் மேலும் இறுகின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *