அக்கரைப்பச்சைகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2023
பார்வையிட்டோர்: 2,843 
 
 

(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் சின்னவன் எனது மடிக்குள் கிடந்து பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவள் வந்தாள். எப்போதும் அவள் இப்படித்தான் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுமுறையில் வரும் போதெல்லாம் என் வீட்டை எட்டிப் பாராது தன் வீட்டுக்குப் போக மாட்டாள்.

சொந்தம் என்பதையும் விட ஒன்றாகப் படித்து, ஒன்றாக இலந்தைப் பழம் பொறுக்கி, ஒன்றாக மாங்கொட்டை போட்டு, ஒன்றாகக் கிளித்தட்டு விளையாடி… என்று அரிவரியில் இருந்து ஒன்றாகவே என்னோடு உயர்தரம் வரை பயணித்தவள். எப்போதும் ஒன்றியிருக்கும் எமக்குள் பரீட்சைப் புள்ளிகளில் மட்டும் தவிர்க்க முடியாமல் போட்டி வரும். ஒரு தரம் government test இல் கணிதத்துக்கு பாடசாலையே வியக்கும் படியாக அவளுக்கும் எனக்கும் ஒரே புள்ளிகள்.

இப்படியெல்லாம் படித்து விட்டு நான் ஒரு அவசரக் குடுக்கை. அவசரப் பட்டு கல்யாணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்று, குடும்ப சாகரத்தில் விழுந்து விட்டேன். கண்டறியாத காதல் எனக்கு.

அவள் trousers ம் போட்டுக் கொண்டு வந்து “ஹாய்” என்ற படி என் வீட்டு விறாந்தை நுனியில் அமர்ந்தாள். சின்ன வயசிலிருந்தே அவளும் நானும் அமர்ந்திருந்து கதைக்கும் இடம் அதுதான்.

பிச்சிப்பூ வாசத்தை நுகர்ந்தபடி, கப்போடு சாய்ந்து கொண்டு படிக்கும் போது கதையளந்ததுக்கும் இப்போதுக்கும் கனக்க வித்தியாசம். சுவாரஸ்யமான கதைகளில் முன்னர் போல மூழ்க முடியாமல் என் கவனம் பிள்ளைகளின் பக்கம் சிதறிக் கொண்டே இருந்தது.

அவள் பல்கலைக்கழகப் புதினங்களை அளந்து கொண்டே இருந்தாள். எனக்கு என் மேலேயே கோபமாய் வந்தது. நானும் போயிருக்கலாந்தானே. எத்தனை தரமாய் எல்லோரும் சொன்னார்கள். பெரிய ரோமியோ, யூலியட் காதல் என்பது போல ஒரே பிடியாய் நின்று… இப்போ அவள் ஒரு சுதந்திரப் பறவை. நான் பிள்ளைகளோடு மாரடிக்கிறேன்.

அம்மா ஆடிப்பிறப்புக்கு கொழுக்கட்டை அவிக்க என்று முதல் நாட்தான் பயறு வறுத்து, உடைத்து, கொழித்தவ. கொழித்து வந்த பயத்தம் மூக்கை எப்பவும் போல ஹொர்லிக்ஸ் போத்தலுக்குள் போட்டு வைத்தவ. அதில் ஒரு பிடி எடுத்து சர்க்கரையும், தேங்காய்ப்பூவும் போட்டுப் பிசைந்து இரண்டு சிறிய கோப்பைகளில் போட்டுக் கொண்டு வந்து தந்தா. அவளுக்கு அது நல்லாகப் பிடிக்கும் என்று அம்மாவுக்குத் தெரியும். அவள் அதை ரசித்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

நான் ஒரு கரண்டியை வாயில் போட்டு விட்டுப் பக்கத்தில் வைத்தேன். மூத்தவன் வந்து “அம்மா, ஆ… ஆ…” என்று வாயைத் திறந்தான். ஒரு கரண்டியை அவனுக்கு ஊட்டி விட்டேன். இரண்டாமவன் வந்து “தம்பியைத் தொட்டிலிலை போடுங்கோ. நான் மடியிலை படுக்கப் போறன்” என்று மழலை பொழிந்தான்.

பல்கலைக்கழகப் புதினங்களை அவள் நிறுத்தி நிறுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். சின்ன வகுப்பில் எங்களோடு படித்த தேவநாயகத்துக்கும், சுகுணாவுக்கும் காதலாம். எனக்கு நம்ப இயலாமல் இருந்தது. எங்களோடு படிக்கிற பொழுது தேவநாயகம் நெற்றியில் வடியத் தக்கதாக தலையில் எண்ணெய் தப்பிக் கொண்டு, கன்ன உச்சியும் பிறிச்சுக் கொண்டு…

“சுகுணா அவனைக் காதலிக்கிறாளோ..?”

சுகுணா எங்களுக்கு அடுத்த batch.

“உனக்கு இளப்பமா இருக்கே? அவன் இப்ப எஞ்சினியர் தெரியுமே! இப்ப அவனைப் பாத்தாய் எண்டால், நீயே லொள்ளு விடுவாய்.”

எனக்கு அவளின் கதைகளைக் கேட்கக் கேட்க ஆச்சரியமாகவே இருந்தது. ‘காதல்’ என்ற சொல்லைச் சொல்வதே பாவம் என்பது போல இருந்தவள், பல்கலைக்கழகம் போகத் தொடங்கிய பின் இப்படித்தான் லொள்ளு.., அது இது என்று புதுப் புதுச் சொற்களாய் உதிர்க்கிறாள். கூச்சம் என்பதே இல்லாமல் பட் பட்டென்று மனதில் தோன்றுவதை எல்லாம் வெளியில் கொட்டுகிறாள். பொறாமையோடு அவளைப் பார்த்தேன். இத்தனையையும் இழந்து விட்டேனே என்ற ஆதங்கத்தில் எனக்குள் வெம்பினேன்.

அந்த நேரம் பார்த்து அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு. “உனக்கென்ன..? நீ கலியாணம் கட்டிப் போட்டு குழந்தைகள், குட்டிகள் எண்டு எவ்வளவு சந்தோசமா இருக்கிறாய். எனக்கு எரிச்சல்தான் வருது. இன்னும் படிப்பு, பரீட்சை எண்டு புத்தகங்களையும் காவிக் கொண்டு…”

மனசுக்குள் சில்லென்ற ஒரு உணர்வு.

மூத்தவன் மீண்டும் வந்து என் முதுகுப் பக்கமாக வளைந்து என்னைக் கட்டிப் பிடித்தான். அந்த ஸ்பரிசம் வழமையையும் விட அதீத சுகமாய்…

நான் அவனை அப்படியே இழுத்து, இறுக அணைத்துக் கொண்டேன்.

– காலம் 1982, 27.5.2004, மனஓசை, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, @சந்திரவதனா

சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யில் கல்வி கற்றவர். கணிதத் துறையில்…மேலும் படிக்க...

1 thought on “அக்கரைப்பச்சைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *