பொலிடோல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 28,620 
 
 

ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான்.

இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது.

மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அது மனதிற்கு உவப்பானதாக இருக்காது. பலரால் கண் திறந்து பார்க்கவும் முடியாதது .

தென்னிலங்கையின் சிறிய நகரம் ஒன்றில் அரசாங்க மருத்துவராக இருந்த நண்பன் குமாரின் வீட்டில் சிலகாலம் இருந்தபோது அவன் இறந்த உடலைக் கூறுபோடும்போது பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் ஏற்பட்டது

அது ஒரு விவசாயிகள் வாழும் சிறிய நகரம். நகரத்தைச் சுற்றி பதினைந்து கிலோமீட்டர் சுற்றி உள்ள கிராமங்களுக்கு இந்த நகரமே இதயம். மருத்துவமனை, மருத்துவர் குடியிருப்பு, இரயில்வே நிலையம் மற்றும் கடைகள் இருப்பதனால் அந்த நகரத்திற்கு விவசாயிகள் தங்களின் நாளாந்த தேவைகளின் நிமித்தம் அங்கு வருவார்கள். அந்த நகரத்தில்; நான் மிருக மருத்தவராக இருந்த காலத்தில் அங்கு குமார் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவராக இருந்தான். ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் நாம் நண்பர்களாக இருந்ததால் எமது நட்பு அங்கும் நீடித்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. இருவருக்கும் விடுமுறைநாள். வெளியே கடும் வெய்யில், தாவரம்

விலங்குகள் என்ற பேதமற்று வறுத்துவாட்டிக் கொண்டிருந்தது. எங்கும் போகாமல் மதிய உணவின்பின் சிறிய குட்டித் தூக்கத்தை போட்டுவிட்டு மாலையில் வெய்யில் தணிந்த பின்பு வெளியே ஒரு நண்பரின் வீடு செல்வதாக எமது திட்டம் இருந்தது.

மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதியாக சைமன். அவருக்கு நாற்பது வயதிருக்கலாம். பின்பக்கம் முடியை வாரிய தலைமயிர். வெள்ளைச்சட்டை எப்போதும் அணியும் மனிதர். குடும்பம் கண்டியில் இருப்பதால் தனது ஓய்வு நேரத்தை எங்களோடு கழிப்பார்;. எப்பொழுதும் சிரித்தபடி, ஊதியம் வாங்காத சிங்கள வாத்தியாராக அவர் எங்களுக்கு இருந்தது மட்டுமல்லாமல் எங்களுக்கு பல உதவிகளும் செய்வார். எங்களுக்கு அவர் வலது கை எனவும் சொல்லலாம்.

அன்று நாட்டுகோழியை உரித்து சிறு துண்டுகளாக வெட்டித் தந்துவிட்டு பக்கத்தில் இருந்த மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டார். அவரை நாங்கள் சமைப்பதற்கு அனுமதிப்பதில்லை. அதற்குப் பெரியகாரணம். மனிதன் கோழியில் எதையும் எறிந்துவிடக்கூடாது என்ற சிக்கனமான பொருளாதார கொள்கையுடையவர்.

சிலகாலத்துக்கு முன்பாக ஒரு வேலைநாளில் கோழிக்கறி வைக்கவோ என அவர் கேட்டபோது சரி என கூறிவிட்டோம். மதியம் வந்து சாப்பிடுவதற்காக கோழி இறைச்சியை கரண்டியில் எடுத்தபோது கோழித்தலை சிவப்பு கொண்டையுடனும், மஞ்சள் அலகுடனும் கரண்டியில் வந்தது. கொஞ்சம் அடியில் கரண்டியை மீண்டும் விட்டபோது கோழியின் பாதங்களும் வந்தன. எங்களால் சாப்பிட முடியவில்லை. அதன்பின்பு சமைப்பதற்கு சைமனுக்கு தடை விதித்துவிட்டோம். கோழி உரித்து இறைச்சி வெட்டுவதோடு அவரது வேலை முடிவடைகிறது.

இறைச்சி சமையலில் நான் அனுபவசாலி என்பதால் கோழிக்கறியை முதலில் தேங்காய்ப்பாலில் வதக்கி சிறிதளவும் தண்ணீர்த்தன்மை இல்லாமல் சமைத்ததும் குமார் தனது பங்கிற்கு பருப்பை பால்கறியாக்கினான். அவன் மரக்கறி உணவு மட்டும் உண்ணும் குடும்பத்தில் இருந்து வந்தவன். என்னோடு இருந்த காலத்தில் தொட்டுக் கொள்வதற்கு மட்டும் மச்சம், மாமிசத்தை பாவிப்பான்.

இப்படியாக வாரத்தில் ஒருநாள் மட்டும் ஆறுதலாக மதியஉணவருந்த முடியும் என்பதால் உணவருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். வயிறுபுடைக்க தின்றதால் ஹோலில் இருந்த இடத்தில் இருந்து எழுந்திருக்க முடியாதிருந்தது.

வீட்டுக் கதவில் பலமாக தட்டப்படும் சத்தம் வந்ததும் எழுந்து பார்த்தபோது எமக்கு ஏற்கனவே பழக்கமான பொலிஸ் இன்ஸ்பெக்டரும் அவரருகே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தினரும் நின்றனர். அவர்களுடன் அம்புலன்ஸ் சாரதி சைமனும் நின்றார்.

‘ஐயாவுக்கு வேலை வந்திருக்கு ‘ என சைமன் குமாரிடம் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தார் இன்ஸ்பெக்டர் கதவருகே தனது அகல, உயரமான உடலால் முற்றாக கதவை அடைத்தபடி நின்றுகொண்டு — ‘டொக்டர் ஒரு பெண் இரவு புல்எலிய என்ற இடத்தில் இறந்து விட்டாள். அவளது உடலை போஸ்ட்மோட்டம் பண்ணவேண்டும்’ என்றார்.

பெரிய நகரங்களில் சட்டமருத்துவ அதிகாரி என தனியாக இருப்பார்கள். ஆனால் – சிறிய நகரங்களில் அரசாங்க மருத்துவரே போஸ்ட்மோட்டம் செய்வார்கள். சிக்கலான கொலை விடயங்கள் கொழும்புக்குச் செல்லும்.

குமார் என்னை தன்னுடன் வரும்படி கேட்டான்;.

சிறிது தயக்கமாக இருந்தாலும் உடை மாற்றிவிட்டு ஜீப்பில் ஏறினேன்;. கூடவந்த சைமனது கையில் ஒரு தோல் பையிருந்தது

வழி எங்கும் வயல்வெளிகளும், வைக்கோலினால் வேயப்பட்ட குடிசைவீடுகளும் இடையில் சில ஓட்டுவீடுகளும் என மாறி மாறி வந்தன. பங்குனி மாதமானதால் நெற்கதிர் விளைந்து அறுப்பிற்கு தயாராக தலைசாய்ந்து கொண்டு காற்றில் சரசரத்தன. மாத இறுதிக்குள் அவை அறுக்கப்பட்டு புதுவருடத்திற்கு முன்பு விற்கப்படும். இந்தப்பகுதி மக்கள் சித்திரை புது வருடகாலத்தில் கைநிறைய பணம் வைத்திருப்பார்கள் ஆனால் மாதங்கள் செல்லச்செல்ல அவர்களிடம் பணம் குறைந்து வருட இறுதியில் பானை சட்டிகளை மட்டுமல்ல பெண்கள் தமது உடைகளைக் கூட அடவு வைப்பார்கள். அந்தப்பகுதியில் பெண்களின் உடைகளை அடவுக்கு வைத்து பணம் கொடுக்கும் மனிதரையும் எனக்குத் தெரியும்.

ஒரு மணிநேரம் ஜீப்பில் பிரயாணம் செய்து அந்தக் கிராமத்தை அடைந்தோம்.

வசதியான ஓடு போட்ட பெரிய வீட்டின் முன்றலில் தென்னைமரங்களின் இடையில் ஜீப் நிறுத்தப்பட்டது. நான் பார்த்த காட்சி என்னை அதிர வைத்தது. அந்த வீட்டிற்கு நான் சிலநாட்கள்; முன் வந்து ஓர் இரவு தங்கி இருக்கிறேன்.

எனக்கு ஏற்கனவே அறிமுகமான பொடிசிங்கோ நின்றிருந்தார். அவரது கையில் விலங்கு. அவரது இரண்டு பிள்ளைகளும்: பெண்குழந்தைக்கு மூன்றுவயது ஆண்குழந்தை ஐந்து வயது ,அழுதபடி பொடிசிங்கோவின் கால்களைக் கட்டிப்பிடித்தபடி நின்றார்கள்.

எங்களை அழைத்துக் கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் அந்த வீட்டின் பின்பகுதிக்கு எம்மை அழைத்துச் சென்றபோது அங்கு பொடிசிங்கோவின் மனைவியின் உடல் மரக்கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தது. அந்த உடலின் தலைமாட்டில் இரண்டு பொலிசார் நின்றார்கள். அந்த மரக்கட்டிலருகே உள்ள முக்காலியில் ஒரு பொலிடோல் போத்தல் காலியாக இருந்தது.

இன்ஸ்பெக்டர் குமாரைப் பார்த்;து ‘இதே இடத்தில் தரையில் இரவு விழுந்து இறந்து கிடந்தாள். அருகில் இந்த பொலிடோல் போத்தல் கிடந்தது. வழக்கம்போல் நிறை தண்ணியில் படுத்த பொடிசிங்கோ காலையில்;தான் உடலைப் பார்த்திருக்கிறார்.” என்றார்.

மரணித்திருக்கும் சீலாவதிக்கும் பொடிசிங்கோவிற்கும் எதுவித பொருத்தமும் இல்லை. அந்தப் பிரதேசத்திலே பார்ப்பவர் கண்களை பறித்தெடுக்கும் சிவப்பு நிறமும் அழகான கண்களும் கொண்டவள் சீலாவதி. பூப்போட்ட மலிவான பருத்தி உடையை இடையில்சுற்றி அவள் நடப்பது மிதக்கும் பூந்தோட்டமாக ஆண்களுக்குத் தெரியும். விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவளது தோரணை பாவனை நகரத்துக்குரியது. இதற்கு நேர்மாறாக பொடிசிங்கோ மெலிந்த உயரமானவர். கிராமத்து வெப்பத்தில் கருமையாக வறுத்தெடுத்த நிறம்;. இதெல்லாவற்றையும்விட மனிதன் இரவானதும் குடியில் கிராமத்து குளத்;தின்; மீனாகிவிடுவார்.

இன்ஸ்பெக்டர் மீண்டும் ‘எங்களுக்கு சீலாவதியின் மரணத்தில் சந்தேகமில்லை. ஆனாலும் தற்கொலை என உறுதிப்படுத்தும்வரை பொடிசிங்கோவை விடுவிக்க முடியாது.’ என்றார்.

‘போஸ்ட்மோட்டம் செய்தால்தான் என்னால் உறுதிப்படுத்தலாம். அது எப்படி இந்த இடத்தில்? பிள்ளைகள் கணவன் உறவினர் நிற்கும் போது?” – எனச்சொன்ன குமார் தயக்கத்துடன் பொலிடோல் என்ற அந்த விவசாய கிருமிநாசினியை மணந்து விட்டு முகம் சுழித்தான். பின்பு சடலத்தின் அருகில் சென்று வாயை முகர்ந்து விட்டு ‘மணம் பொலிடோல் மாதிரி இருக்கிறது.’ என்றான்.

அந்தக் கிராமத்து மக்களும் திரண்டுவிட்டர்கள். பிரேதத்திற்கு அருகே வராது விட்டாலும் வீட்டுக்கு முன்னால் பொடிசிங்கோவோடு பேசிக்கொண்டு நின்றனர்.

குளிருட்டப்பட்ட பிணஅறை இல்லாத மருத்துவமனையானதால் பிரேதத்தை எடுத்துக்கொண்டு வந்தும் பிரயோசனமில்லை . வீணாக பிரேதத்தை கொண்டலைவதுதான் மிச்சம். அந்த இடத்தில் வைத்துத்தான் பிரிசோதிக்கவேண்டும்.

இப்பொழுது நிலைமையை புரிந்து கொண்ட சைமன் – பொலிசாரிடம் ‘சேர் இரண்டு சேலைகளைக் கொண்டுவரச் சொல்லுங்கள்.’ என்று சொல்லிவிட்டு சிறிது தூரத்தில் இருந்து நான்கு கம்புகளை எடுத்துக்கொண்டு வந்து சீலாவதியின் சடலம் இருந்த கட்டிலை சுற்றி நட்டார்.

குழந்தைகளையும் பொடிசிங்கோவையும் மற்றவர்களோடு தூரப்போகும்படி கூறும்படி இன்ஸ்பெக்டரிடம் கேட்டதும் அதை அவர் மற்றைய பொலிசாரிடம் கூறினார்

ஐந்து நிமிடத்தில் இரண்டு வெள்ளைச்சேலைகள் கொண்டுவந்து பிரேதத்தை சுற்றிக் கட்டியாகிவிட்டது. இப்பொழுது அந்த இடம் கூரை மட்டுமற்ற பிரேத அறையாகியது. சைமன் தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார். பொலிஸ் இன்ஸ்;பெக்;டரும் நாலு பொலிசாரும் இடத்தை விட்டு நகர்ந்தனர்.

குமார் உள்ளே சென்றதும் நானும் உள்ளே சென்றேன். மிருங்களை வெட்டிய எனக்கு மனிதர்களை எப்படி மருத்துவர்கள் அணுகுகிறர்கள் என்ற ஆவல் இருந்தது. சைமன் சீலாவதியின் சிவப்பு மேலாடையை பெண் குழந்தையின் உடையின் பொத்தான்களை ஒரு தந்தை குளிப்பாட்டுவதற்கு கழற்றுவதுபோல் லாவகமாக கழற்றிய பின்பு மார்புகச்சையை விலக்கி கழுத்துவரை ஒதுக்கினார். மார்புகச்சை மறைத்த முகத்தைத்தவிர உடல் நிர்வாணமாக இருந்தது. பிள்ளைகளைப் பெற்ற அடையாளமாக வானத்து மின்னலாக நெளிந்த கோடுகள் சில நடுவயிற்றில் இருந்து இடையில் சென்று மறைந்தன. என்னால் பார்க்க முடியவில்லை. தலையை சிறிது திருப்பினேன்.

‘மனிதர்களும் ஆடையை அகற்றியதும் உடலில்,இ செயலில் மிருகங்கள்தான்’ எனச்சொல்லிக்கொண்டு நடு வயிற்றில் நெஞ்சின் கீழ் பகுதியில் தனது கருப்பு போல் பொயிண்ட் பேனையால் குமார் கோடு போட்டான்.

அந்த இடத்தில் சைமன் கையுறை அணிந்தபடி தேர்ந்த சேர்ஜன்போல் வெட்டியதும் கரிய திரவம் சிறிது வெளிவந்தது.

‘இன்னும் கொஞ்சம் மேலே’

நெஞ்சு நோக்கி அந்த வெட்டு நீளமாகியது.

முழங்கைவரை சிவப்பு இரப்பர் கிளவுஸ் அணிந்த கையை வயிற்றின் உள்ளே விட்டு இரைப்பையை மெதுவாக வெளிக்கொணர்ந்து அதில் ஒரு சிறிய வெட்டு வெட்டும்படி கேட்டபோது கத்தியின் கூர் நுனியால் சிறிய ஓட்டைபோட்டார் சைமன்.

மஞ்சள் நிறத்தில் திரவமாக பித்தச்சாறுடன் இரவு சோறு மணியாக வெளிவந்தது. சாப்பிட உடன் இறந்திருக்கவேண்டும். குமார் அந்த திரவத்தருகே முகத்தை வைத்து ‘பொலிடோல்’ என்றுவிட்டு மீண்டும் கையை உடல்குழியுள் விட்டான்.

ஐந்து செக்கன்;கள் உள்ளே ஏதோ தொலைந்த பொருளை தேடுவது போல் தேடினான்.

‘விடயம் முடிந்தது’

. பையில் இருந்து ஊசியை எடுத்து கிட்டத்தட்ட சாக்கு தைப்பது போல் வேகமாக உடலைத் தைத்துவிட்டார் சைமன்.

ஒரு துளி இரத்தமோ உடல்திரவமோ சிந்தாமல் மீண்டும் அவளது உடையை சீர் செய்து பொத்தான்களை கழட்டிய லாவகத்துடன் போட்டார்.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் குமாரும் சைமனும் கையை கழுவினர்.

‘பொலிடோல்தான் என நான் அத்தாட்சி செய்கிறேன்’ என்று சொல்லிய குமாருடன் ஜீப்பில் ஏறினோம்.

பொடிசிங்கோவின் கையில் இருந்த விலங்கு கழற்றப்படுவது எனக்குத் தெரிந்தது.

பொலிசாரும் இன்ஸ்பெக்டரும் அங்கு நின்றார்கள்.

வீடு வந்ததும் சைமன் உபகரணங்களக் கொண்டு மருத்துவமனையை நோக்கி நடந்தார்.

தனித்துவிடப்பட்டதும் குமார் – ‘அந்த பொடிசிங்கோவைத் எனக்குத் தெரியும். அவனை பலதடவை மருத்துவராக சந்தித்ததுடன் அவனுக்கு ஒப்பரேசனும் கடந்த வருடம் செய்தேன். அவன் பாவம்’ என்றான்.

‘எனக்கும் தெரியும் கடந்த கிழமை அவனது வீட்டில் நான் எனது உதவியாளர் சமரசிங்காவுடன் தங்கினேன்” என்றேன்.

‘நான்தான் கடந்த வருடம் வசக்டமி செய்தேன்;. ஆனால் சீலாவதி மூன்று மாத கர்ப்பமாகியிருந்தாள்.’ – என்றான் குமார்.

‘அதுதான் இரண்டாவது முறை கையை விட்டு தேடினாயா?” எனக்கேட்டேன்.

‘தற்கொலைக்கு அதுதான் காரணம் -மரணத்திற்கு காரணம் பொலிடோல்தானே என்றுதான் என்னிடம் பொலி;சார் கேட்டார்கள் அதனால் அதையே எழுதிக் கொடுத்தேன்.” என்றான் குமார்.

‘எனக்கு சந்தேகம் எனது உதவியாளர் மீதுதான்’ எனச்சொன்னேன்.

‘யார் சமரசிங்காவா?’

—–

சில நாட்களுக்கு முன்பு மாலை முன்று மணியிருக்கும். அன்றைய வேலைகள் முடிந்தன என நினைத்து தினப்பத்திரிகைளை புரட்டிக்கொண்டிருந்தேன்.

அடக்கமான சிரிப்புடன் முன்தலைமயிரை கையால் பின்தள்ளியபடி வந்தான் சமரசிங்கா. எனது சக உதவியாளன். விவசாய உத்தியோகத்தன். ஊரைத்தெரிந்த சிங்களவர் என்ற காரணங்களோடு குஷியான இளைனாகவும் எனக்குத்தென்பட்டவன். பெரும்பாலான வெளிவேலைகளுக்கு சமரசிங்காவைத்தான் கூட்டிச் செல்வேன். திருமணமாகாதது மட்டுமல்ல சிருங்காரத்தின் உபாஷகனாகவும் அவன் இருந்தான்.

‘சேர் புல்வெளியில் உள்ள பண்டாரவின் வீட்டில் அவரது காளை மாட்டுக்கு உடல் நலமில்லாமல் இருக்கிறது. உங்களைக் கூட்டிவர முடியுமா என கேட்டார்.’ என சமரசிங்கா சொன்னதும் நான் தயங்கினேன்.

‘அந்தக் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் போய்விட்டு திரும்பி வீடு வருவதற்கு இரவாகிவிடும்’

‘இல்லை சேர். எனது நண்பன் வீட்டில் இரவு தங்கமுடியும். வசதியான வீடு’

மாலை ஐந்துமணிக்கு முன்பாக பண்டாரவின் மாட்டுக்கு வைத்தியம் செய்;துவிட்டு சமரசிங்காவின் நண்பரான பொடிசிங்கோ வீடு செனN;றாம். அந்த ஊரில் அதுதான் பெரிய கல்வீடு. சீலாவதியும் பொடிசிங்கோவும் வாசலுக்கு வந்து எங்களை வரவேற்றார்கள். நாங்கள் ஊர் குளத்தில் குளிக்கப்போகிறோம் என்றதும் சுத்தமான டவல் இரண்டைத் தந்தாள். சீலாவதி அந்த கிராமத்துப் பெண்ணாகத் தெரியவில்லை. கிராமத்;தில் ஏதோ காரணத்திற்காக அவதரித்த தேவதையாக தெரிந்தாள்.

எங்களோடு சிறிய வீச்சுவலையொன்றுடன் பொடிசிங்கோ வந்தார். வயல் கரையால் நடந்து சென்றபோது ‘நெல்லுக் கதிருக்கு வரும் எலிகளைத் தேடி பாம்புகள் வரும் நேரம்;. பெரிய நாகப் பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். பார்த்து நடவுங்கள்;. என பொடிசிங்கோ எச்சரித்தார். வயல் வரப்புகள் காய்ந்;து உறுதியாக இருந்தன. விளைந்த நெல் பொற்குவியலாக அந்த மாலை வெயிலில் அழகான காட்சியாக இருந்தது. வயல் கரையின் பால் முற்றிய நெல்லின் மணம் நெஞ்சை நிரப்பியது. வயல்களைக் கடந்து குளத்தை அடைந்தபோது சிவந்த தாமரை மலர்களும், பச்சை இலைகளும் அந்தக் குளத்தை சொந்தம் கொண்டாடியிருந்தது.

குளத்தின் உயர்ந்த அணை மேலாக நடந்து போனபோது குளிப்பதற்காக ஒரு பகுதி தாமரைகொடிகள் எதுவும் இல்லாமல் தண்ணீர் தெளிவாக இருந்தது. அந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் மீன்பிடிப்பதற்காக வலையை வீசினார் பொடிசிங்கோ.

குளத்து தண்ணீரில் மூழ்கி எழுத்தது உடலுக்கும் மனதிற்கும் நிறைவாக இருந்தது. இந்த குளியலுக்காக மட்டுமே இவ்வளவு தூரம் வந்திருக்கலாம் என நினைக்கவைத்தது

‘சமரசிங்கா உனக்கு இவர்களைத் தெரியுமா?’ எனக்கேட்டேன்.

‘சீலாவதி என்னோடு எங்கள் ஊரில் ஒரே வகுப்பில் படித்தவள். பொடிசிங்கோ இந்த ஊரில் வயல் – உளவு யந்திரம் எல்லாம் வைத்திருக்கும் வசதியானவர் என்பதால் திருமணம் செய்து வைத்தார்கள். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. ஆனால் பொடிசிங்கோ குடிகாரர் அப்படி இப்படி சாதாரணமான குடியல்ல. வைத்திருந்த உளவு யந்திரத்தையும் விற்றும் குடித்து தீர்த்துவிட்டார்.’

‘பார்த்தால் மனிசன் அப்பாவிபோல் தெரியுது. எங்களுக்காக மீன் பிடிக்கிறார்.”

‘குடியைத்தவிர மற்ற விடயங்களில் நல்ல மனுசன்தான்’

சிறிது நேரத்தில் எங்களோடு பொடிசிங்கோ சேர்ந்து கொண்டதும் வீட்டுக்கு திரும்பினோம். பொடிசிஙN;காவின் கையில் ஐந்து மீன்கள் பச்சைத் தென்னை ஈர்க்கில் தலையைக் கொடுத்துவிட்டு துடித்துக்கொண்டிருந்தன..

வீடு வந்ததும் பொடிசிங்கோ தங்கொட்டுவ விசேஷ சாராயம் என்று வெள்ளை வடிசாராயப் போத்தலை எடுத்து எம்மை உபசரித்தார். மான் இறச்சி துண்டுகளை பொரித்தெடுத்துக் கொண்டு வந்தாள் சீலாவதி.

நெஞ்சுக்குள் புகைந்துகொண்டு சென்றது அந்தக் காரமான சாராயம். என்னால் சிறிதளவே குடிக்க முடிந்தது. ஆனால் முழுப்போத்தலையும் பொடிசிங்கோவும் சமரசிங்காவும் குடித்து முடித்துவிட்டார்கள். சிறிது நேரத்தில பொடிசிங்கோ சாப்பிடாமல் படுக்கைக்கு சென்று விட்டார்

நாங்கள் அவரை சாப்பிட வற்புறுத்தியுபோது அவர் அசைந்து கொடுக்கவில்லை. மரக்கட்டிலில் படுத்தவரது தலையின் கீழ் தலைகணியை வைத்தாள் சீலாவதி.

எங்களுக்கு குளத்து மீன்கறியுடன் கத்தரிக்காய் வதக்கி தட்டில் சோறு வைத்தாள். கடல் மீன் தின்று பழகிய எனக்கு குளத்து மீனில் கொஞ்சம் சேற்று மணமும் வழுவழுப்பும் இருந்ததாலும் தனிச்சுவையாக இருந்தது.

சாப்பாடு முடிந்தவுடன் சீலாவதி வெற்றிலைத் தட்டத்தை வைத்துவிட்டு ‘சேர் எந்த இடம்?’ என்றாள் ஆங்கிலத்தில்.

இதுவரையும் பேசாமல் இருந்த தேவதை ஆங்;கிலத்தில் பேசியது வியப்பாக இருந்தது. பொடிசிங்கோவிடம் நான் உடைந்த சிங்களத்திலேயே முன்பு பேசிக்கொண்டிருந்தேன்.

‘நாக தீப” – என்றேன்

‘ஐயோ சார் நான் எனது வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் போகவேண்டுமென்று நினைத்திருக்கிற இடம்தான் நாகதீப‘. – என்றாள் சீலாவதி.

‘அப்படியா? ஏன் ? ‘எனக்கேட்டேன்.

‘இல்லை அந்த ஊரால்தான் புத்தசாமிகள் இந்தியாவில் இருந்து இலங்கை வருவார்கள் என புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

‘என்ன புத்தகம் படிப்பாய்?’

மாட்டீன் விக்கிரமசிங்கா எழுதிய சிங்கள நாவல்கள். அத்துடன் சிங்கள மொழி யில் மாற்றமடைந்த ஐரோப்பிய நாவல்கள் எல்லாம் படித்திருக்கிறேன்.’

‘எப்படி கிடைக்கிறது?’

‘அதுதான் மாதமொரு முறை அநுராதபுரம் போகிறபோது’ எனக் குறுக்கிட்டான் சமரசிங்கா.

‘அப்படியா நல்லது’

மகாவித்தியாலயத்தில் பத்தாவது படித்ததையும் அவள் சொன்னதும் அநுராதபுரத்தில் புதுவருடதினத்தின்போது அவள் அழகுராணியாக தேர்வானதாக சமரசிங்கா சொன்னான்;.

‘நான் இவளுக்காக காத்துக்கிடந்தேன். ஆனால் சீலாவதி பொடிசிங்கோவை மணந்துகொண்டாள்’ எனவும் அவன் சிரித்தபடி சொன்னபொழுது அவனை உற்றுப்பார்த்தேன்.

அவனது முகத்தில் இனம்புரியாத ஏக்கம் படிந்திருந்தது.

‘அப்பா இல்லை. அம்மாதான் முடிவு எடுத்தாள். அதனால் இப்படியாகிவிட்டது’ என்று பொடிசிங்கோ படுத்திருந்த அறையின் பக்கம் பார்த்துச்சொன்னாள் சீலாவதி. அவளும் வெற்றிலை போட்டிருந்தாள். அந்தச்சிவந்த உதடுகள் அந்த ஊர் குளத்து காலைத்தாமரை மொட்டாக விரித்தன.

எங்கள் உரையாடலுக்கு மத்தியில் அவளது குழந்தைகள் வந்து அவளோடு ஒட்டிக்கொண்டன.

நான் பொடிசிங்N;காவுக்கு பக்கத்தில் இருந்த கட்டிலி;ல் படுத்தேன். பக்கத்தில் நிலத்தில் சமரசிங்கா படுத்தபோது பொடிசிங்காவின் குறட்டை புலி உறுமலாகக் கேட்டது. குடித்த சாரயமும் அதிகமானதால் குறட்டையை கேட்டபோது சந்தோசம் ஆனால் இடையில் நிறுத்தியபோது பொடிசிங்கா உயிருடன் இருக்கவேண்டும் என நினைத்தேன். அந்த குறட்டையின் தாலாட்டில் நித்திரை வந்துவிட்டது.

நடு இரவு ஏதோ கனவு கண்டு நான் விழித்தபோது சமயலறையில் சத்தம் கேட்டது. என்னருகே நிலத்தில் படுத்திருந்த சமரசி;ங்காவை காணவில்லை. பொடிசிங்கோவின் குரட்டை ஒலி தொடர்ந்து கேட்டது.

————-

பாவம் பொடிசிங்கா இண்டு பிள்ளைகளையும் தனியாக வளர்க்கவேண்டும் அதற்காக குடியை முதலில் அவன் விடவேண்டும் என்றான் குமார்.

சீலாவதி நகரத்துப் பெண்ணாக இருந்தால் விவாகரத்துக்கு மனுப்போட்டிருப்பாள். கிராமமானதால் பொலிடோலைத் தேடியுள்ளாள்.

ரஷ்யாவில் இரயில் வந்தபோது லியோ டோல்ஸ்ரோய் இராட்சத இயந்திரங்கள் உயிரற்றன என எதிர்த்தார். அவரது கதாநாயகி அன்னா கரினா அதில் உயிர் இழந்தாள். நவீன விவசாயத்தின் முக்கிய கிருமிநாசினியாக பொலிடோல் இலங்கைக்கு வந்தது. சீலாவதியின் உயிரை பறித்துவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *