புயலுக்குப் பின்னே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 21,612 
 
 

இதமான காற்று, கொஞ்சமாக குளிர். மயிலுக்குப்பிடித்த சீதோஷ்ணம். தோகை இருந்தால் விரித்தாடி மகிழிந்திருப்பாள் மஹா.

கஜா நடைப்பயிற்சிக்கு வரமாட்டேன் என்று சொன்னதால் இத்தனை அழகையும் ரசிக்க கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு.பாவம். மஹாவின் எண்ண ஓட்டம் இவ்வாறு இருந்தது.

அன்று பின்னிரவு மூன்று மணிக்குத்தான் கஜா வீட்டிற்கு வந்தாள். தானே கார் ஓட்டிக்கொண்டு வந்ததால் களைத்திருந்தாள். காலையில் நடை பயிற்சிக்கு வா என்றால் எப்படி வருவாள். மேலும் அவள் பெரியம்மாவான மஹாவின் அம்மாவிடமும் அப்பாவிடமும் ஏதோ ரகசியம் பேசவேண்டுமோ என்னவோ. அவர்கள் பேசட்டும்.

“ஜாக்கிரதை மஹா காற்று இப்போ ஒரு மாதிரியா வீசுது ரொம்பதூரம் போகாதே சீக்கிரம் வந்துவிடு” வரும்போது அப்பா எச்சரித்தார்.

மஹாவும் கஜாவும் அக்கா தங்கைகள் பெற்ற பெண்களாயினும் அவர்கள் இரட்டையர் போன்றே தோற்றம் கொண்டிருந்தனர். வித்தியாசமே இல்லாமல் தோற்றத்தில் அப்படி ஒரு ஒற்றுமை.. ஒரு விபத்தில் அம்மாவையும் அப்பாவையும் ஒருசேர பறிகொடுத்திருந்தாள் கஜா. பாட்டி கோமதி அவளுக்கு துணையாக இருக்க முன்வந்ததால், சென்னையில் அத்தனை பெரிய வீட்டில் இருந்துகொண்டு வேலைக்கும் சென்றுவந்தாள்.

மஹாவுக்கு முன்பே நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளையான கனகு இதே கிராமத்தில் பெரிய நிலச்சுவான்தார். பெரிய படிப்பு படித்திருந்தாலும் வேலைக்குப்போனால் இத்தனை நிலங்களையும் யார் பார்த்துக்கொள்வது என்பதாலும், வயதான பெற்றோரின் விருப்பத்தாலும் கிராமத்திலேயே இருந்தான்.

மஹா கிராமத்தை அதன் அழகை மிகவும் விரும்பும் இயல்பு கொண்டிருந்தாள். அதனாலேயே அவனை மணக்க ஒத்துக்கொண்டாள். ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது.

மணநாளை எதிர்நோக்கி காத்திருந்த வேளையில், கனகுவின் கல்லூரித்தோழி தேன்மொழி அவன் வீட்டில் வந்து தங்க நேரிட்டது. அதுவே எல்லாவற்றையும் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது. மஹா அதன் பிறகு கனகுவை கல்யாணம் பண்ணிக்கொள்ள தயாராக இல்லை.

மஹா தன் நினைவோட்டத்தை நிறுத்திக்கொண்டாள். ரம்யமான அவ்வேளையில் பழைய நிகழ்வுகள் மறந்து போய் விடவே அவள் விரும்பினாள் காற்றினூடே வந்த நறுமணத்தை நுகர்த்தவாறே நடந்துகொண்டிருந்த அவள் மல்லிகை தோட்டம் தாண்டி சவுக்கு தோப்பிற்குள் நுழைந்தாள். இருபுறமும் சவுக்கு அடர்த்தியாக நெடிதுயர்ந்து வளர்ந்திருக்க ஊ. …என்ற காற்றின் சப்தம் மரங்களின் அசைவினால் பெரிதாக கேட்டது.

காற்று கொஞ்சம் வலுத்துவிட்டதெனவே தோன்றுகிறது.இடியின் சத்தம் பயங்கரமாக கேட்டது. எங்கோ அருகில்தான் இடி விழுந்திருக்கவேண்டும். சீக்கிரம் வீடு போய் சேர்ந்துவிடவேண்டும் என எண்ணியவள்; ஏதோ ஓசை கேட்கவே கொஞ்சம் நிதானித்தாள்.

குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்களா என்ன? மரங்கள் வெட்டப்பட்டு சொட்டையாகிப்போன ஓரிடத்தில் தோண்டப்பட்ட குழியினுள்ளிருந்து மண்ணை வாரி மேலே போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. நபர் குழியினுள் இருந்ததால் யார் என்று தெரியவில்லை. பக்கத்தில் இது என்ன? ஏதோ மூட்டைமாதிரி துணியினால் போர்த்தப்பட்டு? அவ்வமயம் காற்றினால் துணி சிறிதே விலக அங்கு ஒரு மனித முகம் தலையிலிருந்து இரத்தம் வழிய. ஐயோ பிணமா ?

உரக்க கத்திவிட்டாள் போலும். கீழே குழியினுள் இருந்த ஆள். மேலேறி வந்தான். அவன் கனகுவேதான்.

இவளை பார்த்தவுடன் கோபம் ஏறிய கண்களோடு மண்வெட்டியை தூக்கிக்கொண்டு இவளை நோக்கி ஓடிவர மஹா; தலை தெறிக்க ஓட ஆரம்பித்தாள். சவுக்குத்தோப்பை விட்டு வெளியில்வந்தவுடன்தான் காற்று புயலாக மாறிவிட்டிருந்தது அவளுக்கு தெரியவந்தது.தோப்புக்குள் இருந்த போது காற்றின் சீற்றத்தை, அதன் வீரியத்தை உணரமுடியவில்லை. வேகமான புயல் காற்று அவளை கீழே தள்ளி உருட்டிக்கொண்டேபோயிற்று.

கனகுவும் தோப்பை விட்டு வெளியில் வந்தவுடன்தான் காற்றின் பயங்கரத்தை உணர்ந்தான். மஹாவோ காற்று உருட்டிக்கொண்டு வந்த வேகத்தில் சீக்கிரமே வீட்டை அடைந்துவிட்டாள். அங்கு அவள் பார்த்த காட்சி அவளை அதிர்ச்சி அடைய வைத்தது. வீடு முழுதும் இடிந்து; நொறுங்கி கிடந்தது. இடியினால் முன் பக்கம் கருகி அதனால் சரிந்த தூண் பக்கவாட்டு அறையிலிருந்த மூன்று உயிர்கள் பலியாகிக்கிடந்த அலங்கோலத்தைப் பார்த்தாள். பார்த்தவள் மயக்கம் வருவதுபோல் உணர்ந்தாள்.

அப்பா அம்மா தங்கை கஜா மூவரும் இடிபாடுகளுக்கிடையில் நசுங்கி கிடந்தனர். ஒருகணம் துக்கம் அவளைக்கொன்றுவிடும்போல நெஞ்சைப்பிடித்து அழுத்தியது. தோப்பினுள் இருக்கும்போது கேட்ட இடியோசை இதுதானா. எங்கள் வீட்டின்மீதேவா.

ஒரே நாளில் நான்கு சடலங்களைப் பார்க்க நேரிட்ட தன் விதி தன்னை அனாதை ஆக்கி வேடிக்கை பார்த்து களிக்கிறதோ. அடுத்த கணம் கனகு துரத்திக்கொண்டு வருவதை யோசித்தாள். கடவுளே ! இதென்ன சோதனை. ஆனாலும் மூளை சுறுசுறுப்பாக இயங்கத்தொடங்கியது. தான் அணிந்திருந்த ஷாலை கஜாவுக்குப் போர்த்திவிட்டு வெளியில் சென்று கஜாவின் காரை ஸ்டார்ட் செய்து பார்த்தாள்.

கடவுளின் கருணையால் கார் நன்றாகவே இயங்கியது. சென்னை நோக்கி கார் சீறிப்பாய்ந்தது. இப்பொழுது புயலின் வேகம் சிறிதே மட்டுப்பட்டிருந்தது. ஒரு குருட்டு யோசனையில் ; தான் அணிந்திருந்த ஷாலை கஜாவுக்கு போர்த்திவிட்டதை நினைத்து கொஞ்சம் தைரியமடைந்தாள். கஜாவை கனகுவுக்கு தெரியும் என்றாலும் அவள் அங்கு வருகை தந்திருப்பது தெரியாத காரணத்தால் கனகு சிறிது குழப்பம் அடையக்கூடும். கார் வந்துசென்ற அடையாளத்தைக்கூட கன மழை மறைத்துவிட்டிருக்கும். துக்கப்படக்கூட முடியாமல் தன்னைக் காத்துக்கொள்ள தான் நினைப்பது குறித்து மனம் நொந்தாள். தானும் அவர்களுடனேயே போய் சேர்ந்திருக்கலாம். ஆனால் கனகு கையால் தனக்கு என்ன நேரும் என்று நினைத்துப்பார்த்தாள்.

ம்ஹும். அவன் யாரை கொலை செய்திருப்பான். அன்று பார்த்த பிணத்தின் முகம் இதுவரை பார்த்திராத முகமாக இருந்த்தது. ஏன் இந்த கொலை ? கனகு இதிலிருந்து தப்பவே முடியாது.

புயலின் வேகத்தில் கார் ஓட்ட சிரமமாக இருந்தாலும், அவ்வூரைத்தாண்டியதும் அங்கெல்லாம் புயல் இல்லையாதலால் சிரமம் இல்லாமல் காரை ஓட்டிச்சென்றாள் கஜாவின் வீட்டின் முன் கார் நின்றது. அதற்குள்ளாகவே சென்னை வந்தடைந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கனகுவிடமிருந்து தப்பிக்க எண்ணியதாலோ ; குடும்ப உறுப்பினரின் ஒட்டு மொத்த மரணச் செய்தியை பாட்டியிடம் பகிர்ந்து , அவள் மடியில் விழுந்து கதறவோ அவள் உள் மனது ஏங்கியிருக்கலாம். அழைப்பு மணி சப்தம் கேட்டு பாட்டி கதவைத்திருந்தாள். “பாட்டி….” கதறிய மஹாவை பாட்டி; கஜா என்னம்மா ஆயிற்று எனக்கேட்க ; ஐயோ பாட்டி நான் கஜா இல்லை. மஹா. நடந்ததைச் சொல்லத் துவங்கினாள்..

பாட்டி நெஞ்சில் அடித்துக்கொண்டு அழத்துவங்கிய அதே நேரத்தில் தொலை பேசி ஒலித்தது. மஹா எடுத்து ஹலோ எனக்கூறும் முன்பே கனகு பேசினான்.

“கஜா இங்கு ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. பாட்டியையும் அழைத்துக்கொண்டு உடனே வா.புயலில் வீடு இடிந்து மஹா அவள் பெற்றோர் மூவரும் பலியாகிவிட்டனர். ” என்றான்.

மஹா கல்லூரி நாடகங்களில் முதல் பரிசு வாங்கி இருக்கிறாள்.பொங்கிவந்த அழுகையை மறைத்து “என்ன நிஜமா சொல்கிறாய். விளையாட்டில்லையே” என்று கேட்டுவிட்டு பின் உரத்த குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். தொலைபேசி வைக்கப்பட்டுவிட பாட்டியும் பேத்தியும் பயமும் துக்கமும் ஒருசேர வாட்ட கட்டிப்பிடித்து அழுதனர்.

“நான் பெரிய பாவி; என்னை மட்டும் கடவுள் ஏன் விட்டுவைத்திருக்கிறார்” பாட்டி கதற, “பாட்டி என்னைவிடவா நீங்கள் பெரிய பாவி” என மகா அழ; கோமதிப்பாட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

“உன்னை நான் இனி கஜா என்றே அழைப்பேன்.’அந்த பாவி உன்னையும் என்னிடமிருந்து பிரித்துவிட விடமாட்டேன். போலீஸூக்கெலாம் போகவேண்டாம். கஜாவாக என்னுடனேயே இருந்துவிடு”

“இப்போ போலீசுக்கு போவதில் அர்த்தமில்லை. அவன் இந்நேரம் சாட்சியங்களை அழித்திருப்பான். பிணம் வேறொரு இடத்திற்கு போயிருக்கும். அவன் பணமும் பாதாளம் வரை பாயும். பொறுத்திருப்போம். சமயம் வரும்.தவறு செய்தவன் தண்டிக்கப்படவேண்டும்.”

இப்படியாக இருவரும் யோசித்தனர். பிறகு உறவினர்களின் ஈமச்சடங்குகளை நிறைவேற்ற கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். மூன்று சடலங்களையும் எரியூட்ட எடுத்துச்செல்ல முயன்றபோது “கஜா! கஜா!” என்று பாட்டி குரலெடுத்து அழுததை ஒருவரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அருகிலிருந்த கஜாவைக்கட்டிப்பிடித்து அழுகிறார்கள் என்றே எண்ணினர்.

கனகு ஈமச்சடங்குகளுக்கான வேலைகளை தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான். உறவினர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கினான். அவனுக்குத்தான் மஹா மேல் எவ்வளவு அன்பு என்று உறவினர் பாராட்ட மஹாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

வீடு முற்றிலும் இடிந்து விட்டபடியால் இருவரும் அந்த ஊரிலிருந்த சிறிய விடுதி ஒன்றில்தான் தங்கியிருந்தனர். அங்கு உள்ளூர் பத்திரிக்கை ஒன்றை மஹா பார்க்க நேரிட்டது. புயல் பற்றிய முழு விபரங்களும் அதில் புகைப்படங்களுடன் போட்டிருந்தார்கள்.

எவ்வளவு உக்கிரமான புயல் !. மரத்தின் மீது ஒரு கார் மோதி சின்னாபின்னமாக சிதைந்து காட்சி அளித்தது. உற்று நோக்கிய போது அந்த காரை அக்கம் பக்கத்தில் எங்கும் பார்த்ததே இல்லையே என நினைத்தாள். அந்த கார் பற்றிய விவரங்கள் அடுத்த நாள் இதழில் போட்டிருந்தார்கள்.காரின் நம்பர் வைத்து போலீசார் தேடியதில் அது சென்னையைச் சேர்ந்த வட்டிக்கடை சேட்டின் கார் என தெரிந்து அவ் வீட்டை சோதனை செய்ததில் கிடைத்த கடன் பாத்திரம் மூலமாக கனகு மாட்டிக்கொண்டான்.

ஆனால் புயலில் அவர் காணாமல் போனதற்கு தான் காரணமில்லை என சாதித்தான். அப்போதான் கஜா மஹாவாக தைரியமாக சாட்சி சொல்ல முன்வந்தாள். பிணத்தை அவன் அங்கேயே விட்டுவைத்திருந்தான். மஹா இறந்துவிட்டாள் என நினைத்தது அவன் முட்டாள்தனம். இப்போ கனகு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *