டாக்டருக்கு நேர்ந்த சிக்கல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 15,401 
 

“டாக்டர்” தயக்கமாய் எதிரில் நின்ற செவிலியரை நிமிர்ந்து பார்த்தவருக்கு அவள் நின்ற நிலைமையிலேயே புரிந்து விட்டது.

எப்ப? இப்பத்தான் டாக்டர், உடனே உங்க கிட்டே ஓடி வந்தேன்.

சட்டென்று எழுந்த டாக்டர் “ஸ்டெத்துடன்” விரைந்தார், செவிலி அவர் பின்னால் ஓடினாள்

அரை மணி நேரம் கழிந்திருந்தது. வேர்த்த முகத்துடன் அவரது அறையில் அமர்ந்தவருக்கு அடுத்து என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து தலை வலித்ததுதான் மிச்சம்.

“டாக்டர்” யாரோ இரண்டு பேர் உங்களை பார்க்கணும்னு வெளியே நிக்கறாங்க.

வார்டுபாயின் குரலில் சட்டென நிதானத்துக்கு வந்த டாக்டர் ம்..சரி வர சொல்லுங்க.

வந்தவர்கள் முரட்டுத்தனமான ஆட்களாக இருந்தனர். எடுத்தவுடன் டாக்டர் ஏன் இப்படி பண்ணுனீங்க டாக்டர்?

ஒன்றும் புரியாமல் அவர்களை பார்த்தவர் என்ன பண்ணீட்டேன் நீங்க யாரு?

நாங்க யாருங்கறது இருக்கட்டும் எங்க சொந்தக்காரன் பழனி நேத்து உங்களை பார்க்கறதுக்கு வந்தான்.இப்ப எங்கடான்னு பார்த்தால் ஆஸ்பத்திரியில செத்துட்டான்னு சொல்றாங்க.

அவனை நீங்கதான் கொண்டு வந்து சேர்த்ததா சொன்னாங்க, அப்படீன்னா நீங்கதான் அவனை கொன்னுட்டீங்க, கொன்னுட்டு ஒண்ணும் தெரியாதமாதிரி இங்க கொண்டு வந்து சேர்த்துட்டீங்க.

அதிர்ச்சியானார், இங்க பாருங்க நீங்க யாருன்னே தெரியாது, நான் கொண்டு வந்தவனும் யாருன்னே தெரியாது,

சும்மா நடிக்காதீங்க டாக்டர், நாளைக்கு பத்து மணிக்கு உங்களை பார்க்க வருவோம், நீங்க இதுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும், இல்லயின்னா நேரா போலீஸ் கிட்டே போய் நீங்க அவனை கொலை பண்ணி இங்க கொண்டு வந்து சேர்த்துட்டீங்கன்னு புகார் கொடுத்துடுவோம்.

அவர்கள் மிரட்டி விட்டு சென்று அரை மணி நேரமாகியும் இவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உட்கார்ந்திருந்தார்.

ஒரு நல்லது செய்ய போய் இப்படி ஒரு பழியா?

டாக்டர் நித்தியானந்தம், அமைதியானவர், நேர்மையாக பணி ஆற்றவேண்டி மெனக்கெடுபவர். இதனால் பணி மாறுதல்களை அடிக்கடி ஏற்றுக் கொள்பவர். நல்ல வேளை இன்னும் திருமணம் செய்து கொள்ளாததால் இத்தனை மாறுதல்கள் வந்தும் சமாளித்து கொள்கிறார். ஆனால் அடிப்படையில் மிகுந்த பயந்த சுபாவம் உடையவர். அப்படிப்பட்டவர் இப்பொழுது சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

யாரோ இரண்டு பேர் இறந்தவனை நீங்கள்தான் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டி மிரட்டிவிட்டு போயிருக்கிறார்கள்.

அவர் என்ன செய்ய முடியும்? விடியற்காலை, இன்னும் நன்றாக விடியவில்லை, அந்த இருளிலும் தலைக்கு ஒரு குல்லாவை போட்டு கொண்டு வாக்கிங் போவதற்காக தன் வீட்டிலிருந்து காம்பவுண்டு கேட்டருகே சென்றிருப்பார்.

ஊட்டிக்கு மாற்றலாகி வந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. இருந்தாலும் இந்த குளிர் அவரை இன்னமும் இம்சைபடுத்தி கொண்டுதான் இருக்கிறது.

அவருடைய மருத்துவ பணிக்காலங்களில் பல இடங்களுக்கு மாறி இருக்கிறார், அல்லது மாற்றப்பட்டிருக்கிறார். நிறைய அழுத்தம் அவருக்கு அரசு ரீதியிலும், அரசியல்வாதி ரீதியாகவும் அவரை பல இடங்களுக்கு மாற்றல் வர காரணமாயிருக்கிறது.

இந்த மாற்றல் கூட மதுரையை தாண்டி எங்கோ ஒரு மூலையில் தலைமை மருத்துவராக பணியில் இருந்த போது ஒரு கொலையை “விபத்து” என்று மாற்றி அறிக்கை தயார் செய்ய சொன்னதால் இவருக்கு ஊட்டியில் பணி புரிய வாய்ப்பு வந்திருக்கிறது. பரவாயில்லை, என்று எந்த இடத்துக்கு அனுப்பினாலும் முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொள்வதால், அவரால் தாக்கு பிடிக்க முடிகிறது.

ஆனால் இந்த முறை இவர் மேலேயே இந்த சிக்கல் எழுந்து விட்டது. இவர் அவனை விஷம் வைத்து விட்டு வேண்டுமென்றேதான் கால தாமதமாக இந்த ஆளை மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

முதலில் நோயாளி யார் என்றே இவருக்கு தெரியாது, இரண்டாவது இவனுக்காக இவரிடம் தகராறு செய்து கொண்டிருப்பவர்களையும் இவர் முன் பின் பார்த்ததில்லை. இன்று பத்து மணி அளவில் அவரை வந்து பார்த்து பேசுவதாக சொல்லி மிரட்டி சென்றிருக்கிறார்கள்.

“குட் மார்னிங்”

டாக்டர், நித்தியானந்தம் பணியில் நடு நிலைமையாய் இருப்பவர் என்றாலும் சுபாவத்தில் மிகவும் பயந்தவர். அவர் சுலபமாக எல்லா மாற்றங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு இந்த சுபாவம்தான் காரணம்.

“டாக்டர் குட்மார்னிங்” அவரை மெல்ல உலுக்கிபின்புதான் இவர் என்ன என்ன சொன்னீங்க?..திணறியவாறு “குட்மாரினிங்” என்றார்.

சரியா போச்சு, போங்க, என்னாச்சு டாக்டர் காலையில வாக்கிங் போகும்போது இப்படி நினைவில்லாமல் போனீங்கன்னா எங்காவது போய் விழுந்துடுவீங்க.

ஐ.ஆம்.சாரி, ஏதோ நினைச்சுட்டு அப்படியே நடந்து கிட்டிருக்கேன்.

பரவாயில்லை, டாக்டர் என்ன பிரச்சினை, இவ்வளவு “நெர்வசா” இருக்கீங்க, எங்களுக்கு வைத்தியம் சொல்ற நீங்க ஏன் இப்படி இருக்கீங்க.

ம்..ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை, சாரி ஏதோ ஞாபகம் அதுதான், அவரிடமிருந்து நழுவ பார்க்க,

டாக்டர் இன்னைக்கு நீங்க வாக்கிங் போக வேண்டாம், வாங்க, இப்ப உங்க வீட்டுக்கு போகலாம்.

இல்லை, நான் நடந்து போயிடறேன்.

நோ..இந்த சூழ்நிலையில உங்களை தனியா விட்டுட்டு நான் போக மாட்டேன், வாங்க என் கூட கையை பிடித்து அழைத்து டாக்டரின் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

வீட்டு கதவை திறந்து டாக்டரை அழைத்து வந்தவர், அவரை அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்து விட்டு தண்ணீர் எங்கே? கேட்டுவிட்டு இவரே உள் அறைக்குள் சென்று ஒரு பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை டாக்டரிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

மடமடவென குடித்து முடித்து ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த டாக்டரிடம், சாரி டாக்டர் என்னை அறிமுகப்படுத்த மறந்துட்டேன். என் பேர் அழகேசன், உங்களுக்கு அடுத்த நாலு வீடு தள்ளித்தான் குடியிருக்கேன்.

எப்பவும் ஏழு மணிக்கு மேல எழுந்து காப்பி எல்லாம் குடிச்சு, அதுக்கப்புறம் ஆடி அசைஞ்சு “வாக்கிங்” கிளம்புவேன், அப்புறம் திரும்பி வந்து குளிச்சு, முடிச்சு, ஆபிசுக்கு கிளம்பறப்ப மணி ஒன்பதுக்கு மேல ஆயிடும்.

கொஞ்ச நாளா நீங்க நேரத்துல “வாக்கிங்” கிளம்பி போறதை பார்த்தேன். கிட்டத்தட்ட உங்க வயசுதான் எனக்கும், நீங்க இவ்வளவு சுறு சுறுப்பா போகும்போது நானும் ஏன் உங்களை மாதிரி கிளம்ப கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.

நினைச்சுக்குவேனே தவிர நேத்துதான் என்னால நேரத்துல எந்திரிச்சு கிளம்ப முடிஞ்சது, இன்னைக்கு உங்களை அறிமுகப்படுத்திக்கணும்னு வேகமா வந்து உங்களுக்கு குட்மார்னிங்” சொன்னேன். ஆனா நீங்க என்னடான்னா..!

சொல்லுங்க டாக்டர் என்ன பிரச்சினை?

அது வந்து வந்து..தயக்கமாக அவரை பார்க்க

சும்மா பயப்படாம சொல்லுங்க, என்னால முடிஞ்சா உங்களுக்கு உதவறேன்,

இல்லே..நேத்து விடியற்காலையில வாக்கிங் போறதுக்காக கதவை திறந்து நடந்து காம்பவுண்டுகிட்ட வந்து கிட்டிருந்தேன், அப்ப திடீருன்னு என் தலையில ஏதோ வந்து மோதுன மாதிரி இருந்துச்சு, என்னன்னு பார்க்கறதுக்குள்ள தலை சுத்தி கீழே விழுந்துட்டேன் போலிருக்கு.

மறுபடி எந்திரிச்சி பார்க்கறப்போ, ஒருத்தன் என் பக்கத்துல கிடந்தான். அந்த மயக்கத்துலயும், தடுமாறி எந்திரிச்சு, இவனை சோதிச்சு பார்த்தேன், அவனோட நிலைமை சீரியசா இருந்துச்சு, வாயில இருந்து நுரை வர்ற மாதிரி இருந்துச்சு, இது என்னடா வம்பா போச்சுன்னு பின்னாடி நிக்க வச்சு இருக்கற காரை எடுத்துட்டு வந்து இவனை எடுத்து போட்டு ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தேன்.

அவன் தாங்கலை, நேத்து ஆல்கஹால் நிறைய சாப்பிட்டுட்டிருக்கான், அதுக்குள்ள விஷம் கலந்திருக்கலாம், ஆனா அவன் எதுக்கு என் வீட்டுல வந்து கிடக்கணும்?

ஏன் டாக்டர் நீங்க அக்கம் பக்கம் எங்களை கூப்பிட்டிருக்கலாமில்லையா?

அதெப்படி கூப்பிட முடியும்? நானே மயக்கமாயிட்டேன், அப்புறம் எந்திரிச்சா என் மயக்கம் சரியா தீருரதுக்குள்ள இப்படி ஒருத்தன் கிடைக்கறான். இப்ப அக்கம் பக்கம் கூப்பிட்டா நீங்க என்ன நினைப்பீங்க? எங்களுக்குள்ள ஏதோ ஒரு பிரச்சினை இருந்திருக்குன்னு நினைப்பீங்க இல்லையா? ஆனா இவனை முன்ன பின்ன கண்டிப்பா நான் பார்த்ததே இல்லை. அது மட்டும் உண்மை.

சரி டாக்டர், அதுதான் அவன் விஷம் குடிச்சு இறந்துட்டதா சொல்றீங்க, போலீசுல இன்பார்ம் பண்ணிட வேண்டியதுதானே.

இன்னைக்கு கண்டிப்பா கொடுக்கலாமுன்னு இருக்கேன், ஆனா அவன் எங்க குடிச்சான்? எப்படி இங்க வந்தான்? நீங்க அவனை எப்படி இங்க கொண்டு வந்து சேர்த்தீங்க? இந்த மாதிரி கேள்வி போலீஸ் கிட்ட இருந்து வரும்.

அதை விட…தயங்கினார், சொல்லுங்க டாக்டர் அதைவிட… யாரோ தெரியலை இரண்டு பேர் என் கிட்டே வந்து நீங்கதான் அவனை கொலை பண்ணீட்டீங்கன்னு மிரட்டுறாங்க. போலீசுகிட்ட போய் நானே அவங்களை கொலை பண்ணிட்டதா புகார் பண்ண போறாங்களாம்.

அவங்க மறுபடி எப்ப வருவாங்க டாக்டர்?

இன்னைக்கு பத்து மணிக்கு மேல வர்றதா சொல்லிட்டு போனாங்க.

நீங்க என்ன பண்ண போறீங்க?

அதுதான் எனக்கும் புரியலை. நான் இவன் இறந்து போனதை பத்தி இன்னைக்கு போலீஸ் கிட்ட ரிப்போர்ட் கொடுக்க போறேன்,

அவங்க நேத்தே ஏன் சொல்லலைன்னு கேட்டா என்ன சொல்ல போறீங்க?

அவன் உயிர் போனப்பவே மணி மூணு மணிக்கு மேல ஆயிடுச்சு, அதுவரைக்கும் அவன் உயிரை காப்பத்தறதுக்காக முயற்சி பண்ணிட்டு இருந்தேன். சரி அவன் இறந்த பின்னால போலீசுகிட்ட போலாமுன்னா, திடீருன்னு இவனுங்க இரண்டு பேர் வந்து உங்க வீட்டுல வச்சு நீங்கதான் இவனை கொலை பண்ணிட்டீங்கன்னு சொல்லவும் பயந்து வீட்டுக்கு வந்துட்டேன்.

காலையில எந்திரிச்சு என்ன பண்ணறதுக்குன்னு யோசிச்சு வெளியே கிளம்பும்போது நீங்க வந்தீங்க.

சரி சார் இப்ப மணி எட்டு ஆயிடுச்சு, நீங்க சமையலுக்கு என்ன பண்ண போறீங்க? வீட்டுல வேலைக்கு ஆள் கூட வச்சுக்க மாட்டீங்களா?

நோ, நோ, எங்க ஊர்காரன் எப்பவும் இன் கூடவே இருந்து சமையல் வேலை மத்த எல்லா வீட்டு வேலைகளையும் பார்த்துக்குவான். இந்த குளிரு அவனுக்கு ஒத்துக்கலை. கொஞ்ச நாள் ஊருக்கு போறேன்னு போயிருக்கான்.என்னால கூட இந்த குளிரை சமாளிக்க முடியாமத்தான் இருக்கேன்.

சரியா ஒன்பது மணிக்கு குளிச்சு ரெடியாகி எங்க வீட்டுக்கு வர்றீங்க, இங்க வந்து பாருங்க, கேட்டுக்கு வெளியே வந்து நூறடி நடந்தா போதும் அதோ தெரியுதில்லை, அதுதான் எங்க வீடு. மறந்துடாதீங்க. காலையில சாப்பிட்டுட்டு நானும் உங்க வீட்டுக்கு வந்துடறேன். நீங்க என்னை பார்க்க வந்த நண்பனா அறிமுகப்படுத்துங்க, போதும். மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்.

அதுக்குள்ள நீங்க உங்க “ஸ்டாபுங்க” கிட்டே அந்த நோயாளி “டெத்தை” இன்பார்ம் பண்ண சொல்லிடுங்க. சரியா.

நித்தியானந்தம் தன்னிலை மறந்து தலையாட்டி கொண்டிருந்தார்.

சரியாக ஒன்பது மணிக்கு இவர் அழகேசன் வீட்டுக்கு போகும்போது அவர் இவருக்காக வாசலிலேயே காத்திருந்தார். தன்னுடைய மனைவியையும், மகனையும் அறிமுகப்படுத்தியவர், டைனிங் டேபிளுக்கு கூட்டி சென்றார்.

சுட சுடச்சுட இட்லியும் பொங்கலும், இவருக்கு தன் அம்மாவின் சமையலை ஞாபகப்படுத்தின. இவருடனே மூட்டை முடிச்சுகளை தூக்கி கொண்டு பல ஊர்களுக்கு கூட வந்தவள். ஒரு முறை கூட மகனின் மாறுதல்களுக்கு மனம் சலித்து கொண்டதில்லை. அவனின் நேர்மையினால்தான் இவ்வளவு மாறுதல்கள் என்பது படிப்பறிவு குறைவான அவளுக்கு தெரிந்திருந்தது.

இருவருமே முரட்டுத்தனமான ஆட்களாக தெரிந்தார்கள் என்றாலும் விவரமாகவே பேசினார்கள்.

அழகேசன் அவர்களிடம் உங்களுக்கு இறந்த ஆளை நல்லா தெரியுமா?

தெரியாம என்னங்க, இந்த டாக்டரை பார்க்கறதுக்கு வர்றேன்னு எங்ககிட்ட சொல்லிட்டு வந்தவன் தானுங்க. இவரு இப்படி பண்ணுவாருன்னு நாங்க எதிர்பார்க்கலை.

ஆமா, ஆமா இருந்தாலும் டாக்டருக்கு அவனை தெரியலை அப்படீங்கறாரே.

டாக்டரு பொய் சொல்றாருங்க. தெரியாம எப்படி இவரே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும். வைத்தியம் பார்க்கணும்.

கரெக்ட்டுதான், நான் கூட சொல்லிட்டேன், பாவம் அவங்களுக்கு நீங்கதான் ஏதாவது பாத்து செய்யணும்னு சொல்லியிருக்கேன்.

அப்படி சொல்லுங்க, போலீசுக்கே போக வேண்டாம், அப்படியே கேசை அமுக்கிட சொல்லுங்க, எங்களுக்கு ஏதோ பாத்து கொடுத்தா போதுங்க. நாங்க அப்படியே சத்தமில்லாம ஊருக்கே கிளம்பி போயிடறோம்.

அதையும் அவர்கிட்டே சொல்லிட்டேன். நீங்க கோயமுத்தூரா?

ஆமாங்க.

செத்து போனானே அவன் கூட உங்க ஊருதானே.

என்னங்க இந்த கேள்வி கேட்கறீங்க? அவன் எங்க உறவுக்காரன்னு சொல்லிகிட்டிருக்கோம்.

உண்மைதான், ஆனா நீங்க மூணு பேரும் ஒண்ணாத்தான் ஊட்டிக்கு கிளம்பி வந்ததா சொல்லிக்கறாங்க.

ஆமா, நாங்களும் அதைத்தான் சொல்றோம்.

அப்ப டாக்டரை எப்ப பார்க்க வர்றதா உங்ககிட்டே சொல்லிட்டு இங்க வந்தான்

முந்தா நேத்து நைட்டுலதான் சொல்லிட்டு வந்தான்.

அப்ப அவன் ரொம்ப போதையில இருந்தானோ

அப்படி இல்லைங்க, நாங்க மூணு பேரும் கொஞ்சமா “பார்ல” சாப்பிட்டோம்

அதுவும் சரிதான், அப்ப இரண்டு பாட்டிலு நீங்க ஏற்கனவே வாங்கி கொண்டு போனீங்களாம்.

இதை யார் உங்க கிட்டே சொன்னது, நீங்க என்ன போலீசா?

இல்லை, உங்க மூணு பேருக்கு பக்கத்துல எனக்கு தெரிஞ்ச ஆள் இருந்துச்சு அதான்.

நீங்க பேசறதை பார்த்தா டாக்டருக்கும், எங்களுக்கும் பிரச்சினையை முடிச்சு வக்கிற மாதிரி தெரியலை, பேசாம நாங்க போலீசுகிட்ட புகார் கொடுத்திடறோம்.

உங்களுக்கு தெரியாதா? டாக்டரு ஏற்கனவே போலீசுக்கு தகவல் கொடுத்தாச்சு. இறந்தவனுக்கு சொந்தமுன்னு போலீசு உங்களை கூப்பிடறதா சொல்லியிருக்காங்க.

கூப்பிடறதா இருந்தா தாராளமா கூப்பிடட்டும் போலீசு, நாங்க டாக்டருதான் இவனை விஷம் வச்சு கொன்னுட்டாருன்னு சொல்ல போறோம்.

விஷம் வச்சா? அவன் விஷத்துல செத்ததா யாரு உங்களுக்கு சொன்னா?

அது வந்து…அங்க வேலை செய்யறவங்க சொன்னாங்க.

ஓ அப்படி சொன்னாங்களா, வாங்க ஆஸ்பத்திரி போலாம், அங்க போலீசும் இந்நேரம் இருக்கும். உங்களுக்கு அவரு விஷம் சாப்பிட்டுத்தான் இறந்தாருன்னு யாரு சொன்னாங்கன்னு ஆளை காட்டுங்க, கிளம்புங்க.

நாங்க எதுக்கு வரணும்? நீங்க பேச வேண்டாம் இனிமே, டாக்டரு பேசட்டும், நாங்க போலீசுக்கு போலாமுன்னு இருக்கோம், நீங்க என்ன சொல்றீங்க?

அழகேசன் கவலைப்படாதீங்க, நானும் போலீசுதான், வெளியே போய் எட்டி பாருங்க போலீசு ஜீப் நின்னுகிட்டிருக்கும். இப்ப என் கூட வாங்க, வந்து நீங்க என்ன கம்பெளியிண்ட் பண்ணறதுன்னாலும் பண்ணுங்க.

இல்லை நாங்க எங்க வண்டியில வர்றோம், அவசரமாய் கிளம்ப முயற்சித்து வாசலை பார்க்க இரண்டு போலீஸ் அங்கு நின்று கொண்டிருந்தார்கள்.

ரொம்ப தேங்க்ஸ் சார், என்னை பெரிய சிக்கல்ல இருந்து காப்பாத்திட்டீங்க.

டாக்டர் நீங்க மயக்கம் தெளிஞ்சு எழுந்தப்பவே அக்கம் பக்கம் கூப்பிட்டு உதவி கேட்டிருந்தா இவ்வளவு சிக்கல் வந்திருக்காது.

அந்த அவசரத்துல எனக்கு ஒண்ணும் புரியலை. ஆமா அவங்க யாருன்னே தெரியலையே.

அவனுக மூணு பேரும் அன்னைக்கு இராத்திரி நிறைய குடிச்சிருக்கானுங்க. இப்ப செத்தானே அவனுக்கு மருந்தை கலக்கிருக்கானுங்க.

அவன் விடியற்காலையில குடிச்சுட்டு வெளியே வந்துட்டிருக்கான். அப்ப உங்க வீட்டுல லைட் எரிஞ்சு நீங்க வெளிய வர்றதை பார்த்தவன், உங்களை தலையில அடிச்சு உங்க வாட்சு, மோதிரம், எல்லாத்தையும் கழட்டிகிட்டு போலாமுன்னு முயற்சி பண்ணியிருக்கான். அதுக்காக தடி ஒண்ணை எடுத்து ரெடியா உங்க காம்பவுண்ட் ஓரம் காத்து இருந்திருக்கான்.

நீங்க வெளியே வரவும், அவன் உங்க தலைமேல அடிச்ச உடனே அவன் குடிச்சிருந்த விஷம் வேலை செஞ்சு விழுந்துட்டான்.

அதே நேரத்துல நீங்களும் மயங்கி விழுக, அதுக்கு பின்னாடி நடந்ததுதான் உங்களுக்கு தெரியுமே.

இவனுக்கு விஷம் வச்சவனுங்களுக்கு நீங்க இவனை கார்ல கொண்டு போய் சேர்த்தது தெரிஞ்சு, பழியை உங்க மேல போட்டு வருமானத்தை பார்த்துடலாமுன்னு முடிவு பண்ணி மிரட்டியிருக்கானுங்க.

சார் நீங்க போலீசா?

இல்லீங்க, நான் மின்சார வாரியத்துல ஆபிசரா இருக்கேன்.

அப்ப போலீசுன்னு சொன்னீங்க.

வெளிய வந்து எட்டி பாருங்க. பக்கத்து வீட்டுக்காரரு இங்க ஸ்டேசன்ல இன்ஸ்பெக்டரா இருக்கறாரு, அவர் வீட்டு முன்னாடி ஜீப் நின்னுகிட்டிருக்கும்.

அப்ப வாசல்ல போலீஸ் நின்னுச்சு..!

நான் அவர்கிட்டே விசயத்தை சொல்லி இரண்டு போலீசை வர சொல்லியிருந்தேன்.

இன்ஸ்பெக்டர்கிட்டே ரொம்ப நன்றின்னு சொல்லிடுங்க.

கவலைப்படாதீங்க அவர் இவன் விஷயமா விசாரணைக்கு உங்க கிட்டே வருவாரு, அப்ப சொல்லிடுங்க.

ஐயோ ஏதாவது சொல்லுவாரோ.

கவலைப்படாதீங்க, அவருக்கு எல்லா விவரமும் தெரியும்.

Print Friendly, PDF & Email

1 thought on “டாக்டருக்கு நேர்ந்த சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *