கோயில்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 20,933 
 
 

பசுபதி.

வயது முப்பது. ஊர் தேனி.

இயற்கை வனப்புச் செறிந்த பிரதேசங்களுக்கு அடுத்ததாக பசுபதியின் உணர்வுகளை எளிமையாகக் கவர்ந்திருப்பவை அழகிய பழமையான கோயில்கள்தான்.

தென் தமிழ் நாட்டில் அவன் காணாத கோயில்களே இல்லை எனலாம். மதுரைக்கு அருகே உள்ள கள்ளழகர் கோயிலிலிருந்து, செங்கோட்டைக்குச் சற்றுத் தள்ளிய வனாந்திரத்தில் இருக்கும் அச்சன்கோவில் வரை அத்தனை கோயில்களையும் அவன் பார்த்திருந்தான்.

கோவில்பட்டியின் அருகில் இருக்கும் கழுகு மலைக் கோயிலும், ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சற்றுத் தள்ளி பல்லாயிரக்கணக்கான பனை மரங்களின் மத்தியில் சிறிய குன்றின் மேல் எழுப்பப் பட்டிருக்கும் திருவண்ணாமலைக் கோயிலும், ஒரு பிரபஞ்ச வியூகங்களாகவே அவனுக்குத் தோன்றின.

வத்ராயிருப்பிலிருந்து பல மலைத் தொடர்களைத் தாண்டிய மஹாலிங்க மலைக் கோயிலும், இலஞ்சிக்கு அருகில் உள்ள திருமலைக் கோயிலும் இப் பூமிக்கான காவல் பீடங்களாகவே பசுபதிக்கு புலப்பட்டன. அதுவும் ஆகம விதி முறைப்படி கட்டப்பட்ட சாஸ்திரமான பழைய கோயில்களுக்கு அபூர்வ சக்திகள் மிக அதிகம் என்றும் திடமாக நம்பினான்.

கோயில்கள் எதையோ சமனம் செய்கின்றன. கோயில்கள் எதையோ கொணர்கின்றன. எதையோ களைகின்றன. கோயில்கள் திண்மையான மலைகளுக்கு ஈடானவை.

கடவுள் என்ற பய பக்தி இல்லாமல் கோயில்களை இந்திய கலாச்சாரத்தின் உன்னத வடிவங்களாகவே பசுபதி கண்டான். அந்தக் கலாச்சாரத்தின் மதிப்பும், மரியாதையும் பலருக்கு புரிவதில்லை.

அவனுக்கும் அதைப் புரிய வைத்ததே ஒரு வட இந்தியர்தான். அவர் பெயர் மாணிக்லால் சேட். தற்போது அவர் சென்னையின் போயஸ் கார்டனில் வசிக்கிறார். மிகப் பெரிய செல்வந்தர். சொன்னதைச் செய்பவர். வாக்குத் தவறாதவர்.

பசுபதி மிகச் சமீபத்தில் பார்த்து வியந்த கோயில் பாளையங்கோட்டைக்கு அருகில் இருக்கும் திம்மராஜபுரம் என்கிற அக்ரஹாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்.

அந்தக் கோவிலின் பெருமாள் மிக ஐஸ்வர்யமாக பார்த்தாலே அள்ளிக் கொள்ளும் தேஜஸில் இருந்தார். பெருமாள்கள் அலங்காரப் பிரியர்கள் என்பது உண்மைதான். அவரருகே குட்டி குட்டியாக அழகான ஸ்ரீதேவி பூதேவி சிலைகள். தாயார் தனியாக வீற்றிருந்தாள். அந்தக் கோயிலே ஒரு சுகந்தமான நறுமணத்தில் கமழ்ந்தது.

அது எப்படி, அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஐஸ்வர்யம் தாண்டவமாடுகிறது; ஆனால் அதே நேரம் அனைத்து சிவன் கோயில்களும் பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி அழுது வடிகிறது? என்கிற கேள்வி அவனுள் எழுந்தது.

பசுபதிக்கு அந்தக் கோயில் மிகவும் பிடித்துப் போயிற்று. கோயிலைப் பற்றி நிறைய விவரங்களை சேகரிக்க மெனக்கிட்டான். ஒரே வாரத்தில் நிறைய விசாரித்து தெரிந்துகொண்டான். அருகே பாளையங்கோட்டூரில் ஒரு சின்ன வீடு எடுத்துத் தங்கினான்.

கோயில் பட்டர் சேஷாத்ரி ஐயங்காரிடம் அதிக மரியாதை காட்டினான். அவருக்கு நாற்பது வயது இருக்கும். இரண்டு பெண் குழந்தைகள். கோயிலைப் பற்றிய விவரங்களை தொகுத்து மாணிக்லால் சேட்டிற்கு கீழ்க்கண்டவாறு ஒரு நீண்ட குறிப்பினை தனது லேப்டாப் மூலமாக அனுப்பினான்.

மூலவர் / உற்சவர் – வெங்கடாசலபதி;

தாயார் – செண்பகவல்லி

துணை – ஸ்ரீதேவி / பூதேவி

தரம் – நான்கும் பஞ்சலோகச் சிலைகள்.

தல விருட்சம் – பனைமரம்;

தீர்த்தம் – ஜடாயு தீர்த்தம்;

திருவிழா – வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு – கொடி கம்பத்திற்கு பதிலாக, தீப ஸ்தம்பம் உள்ளது.

திறந்திருக்கும் நேரம் – காலை 6.00 மணியிலிருந்து 9.30 மணி வரை;

மாலை 6.00 மணியிலிருந்து 8.30 மணி வரை.

பாதுகாப்பு – போதாது. பட்டர்தான் எல்லாமே.

அவனுக்கு ‘குட் ஜாப் டன்’ என்று பதில் அனுப்பி, பசுபதியின் உபயோகத்திற்காக தன்னுடைய மதுரை கெஸ்ட் ஹவுஸிலிருந்து இன்னோவா க்ரெஸன்ட் ஆடோமேடிக் 2.8 Z வண்டியை அனுப்பி வைத்தார்.

சேஷாத்ரி ஐயங்காரின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட பசுபதி அவரிடம் ஒருநாள், “சாமி…நான் பெருமாளுக்கு ஒரு நல்ல நாளில் அர்த்தசாம பூஜை இரவு இரண்டு மணிக்கு பண்ண வேண்டும், எனக்கு அதனால் ஐஸ்வர்யம் பெருகும்…” என்றான்.

“அது எப்படிடா முடியும்? கோயில் நடையை நான் எட்டரை மணிக்கு தினமும் சாத்தி கதவைப் பூட்டியாக வேண்டும்… ராத்திரி பூஜையெல்லாம் என்னால் நடத்த முடியாது. நடக்கிற காரியம் ஏதாவது பேசு…”

பசுபதியின் முகம் வாடியதைக் கண்ட சேஷாத்ரி ஐயங்காரின் மனம் சஞ்சலப்பட்டது.

அதை உடனே புரிந்துகொண்ட பசுபதி, அடுத்த சில நாட்களில் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி அவரை இரவுப் பூஜைக்கு ஒப்புக்கொள்ள வைத்தான்.

இருபத்திநான்காம் தேதி இரவு இரண்டு மணி என்று அர்த்தசாம பூஜைக்கு நேரம் குறிக்கப்பட்டது. சேஷாத்ரி பட்டர் ரகசியமாக இரவு ஒன்றரை மணிக்கு வந்து கோயிலைத் திறக்க ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு பத்தாயிரம் கைச்செலவுக்கு கொடுக்கப்பட்டது. பூஜை முடிந்ததும் இன்னமும் ஏராளமான பணம் தருவதாக பசுபதி சொன்னான்.

இருபத்தி நான்காம் தேதி…

இரவு ஒன்றரை மணி. எங்கும் ஒரே இருள் மயம். பசுபதி, கோயில் வாசலின் இருட்டில் தனியாகக் காத்திருந்தான்.

சேஷாத்ரி ஐயங்கார் சுற்றும் முற்றும் பார்த்தபடி, கோயில் கொத்துச் சாவிகளுடன் பூனை நடையில் கோயிலுக்கு வந்து நுழைவு வாயில் கதவைத் திறந்தார். உள்ளே நுழைந்தார். காத்திருந்த பசுபதியும் அவரிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அவரைத் தொடர்ந்தான். கடைசியாக உற்சவ மூர்த்தியின் கதவைத் திறந்தார்.

அப்போது கோயில் வாசலில் சப்தமில்லாமல் அந்த இன்னோவா வந்து நின்றது. அதிலிருந்து வாட்ட சாட்டமாக நான்குபேர் இறங்கினர். திறந்திருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்து நேராக உற்சவரின் இடத்திற்கே விரைந்து வந்தனர்.

அவர்களைப் பார்த்த சேஷாத்ரி ஐயங்கார் அதிர்ச்சியடைந்து, “என்ன பசு, இவர்களெல்லாம் யார்?” என்று அதட்டலாகக் கேட்டார்

“என்னுடன் பூஜைக்கு வந்திருப்பவர்கள் சேஷு… நீ மொதல்ல இந்தப் பக்கம் ஒத்து..” என்று அவர் புடதியில் கை வைத்து முரட்டுத் தனமாக பசுபதி தள்ளினான்.

இரண்டு முரடர்கள் சேஷாத்ரி வாயில் மஸ்லின் துணியைத் திணித்து பெரிய ப்ளாஸ்டரால் அவரது வாயை இறுக்கமாக ஒட்டினர். அவரது கைகளை கயிற்றால் சேர்த்துக் கட்டினர். பின்பு அவரை வெளியே தள்ளிச் சென்று ஹனுமார் கல் சிலைக்கு எதிரே இருந்த ஒரு பெரிய தூணில் அசைய முடியாதபடி கை, கால்களைக் கட்டி வைத்தனர்.

அதே நேரத்தில், மற்ற இரண்டு முரடர்களும் பசுபதியுடன் சேர்ந்து பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை விரைவாகத் தூக்கிக்கொண்டு இன்னோவாவை அடைந்து சிலைகளைக் படுக்கை வாக்கில் கிடத்தினர். ஏற்கனவே இன்னோவாவின் கடைசி இருக்கை முற்றிலுமாக நீக்கப்பட்டு வசதியாக இருந்தது.

பசுபதி டிரைவிங் சீட்டில் அமர்ந்துகொள்ள, மூவர் உடனே அவனுடன் பின் சீட்டில் ஏறிக்கொண்டனர். ஒருத்தன் மட்டும் நிதானமாக கோயிலை வெளிப்புறம் பூட்டிவிட்டு, முன் சீட்டில் பசுபதியுடன் சேர்ந்து கொண்டான்.

இரண்டு மணிக்கு இன்னோவா சீறிக் கிளம்பி அடுத்த நான்கே நிமிடங்களில் மதுரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் சென்னையை நோக்கி விரைந்தது.

கண்களில் வழுயும் நீருடன் வெறுமனே சுவாசித்துக் கொண்டிருந்த சேஷாத்ரி கட்டுகள் அவிழ்க்கப்பட்டு; ஒட்டிய ப்ளாஸ்டர் வாயிலிருந்து கிழிக்கப்பட்டு, மஸ்லின் துணி எடுக்கப்பட்டபோது மணி ஒன்பது.

போலீஸுக்கு விஷயம் தெரிந்தபோது மணி பத்து.

அன்றே பகல் இரண்டு மணிக்கு மாணிக்லால் சேட்டிடம் சிலைகளை இன்னோவாவுடன் பசுபதி ஒப்படைத்தான். சிலைகளைப் பார்த்த சேட் பூரித்துப்போனார்.

பசுபதியை ஆரத் தழுவினார்.

“இவைகளோட மதிப்பு எட்டு கோடிடா..”

வீட்டினுள்ளே சென்று ஒரு பெரிய சூட்கேசுடன் வந்தார்.

“இந்தா இதுல பேசியபடி எண்பது லட்சம் இருக்கு… பத்திரமா வோல்வோ பஸ் பிடிச்சு தேனிக்கு போய் குடும்பத்தோட ஆறு மாசத்துக்கு என்ஜாய் பண்ணு… அதுக்கு அப்புறமா நாம திருவஹிந்தபுரம் தேவநாதப் பெருமாளைப் பற்றி நிறையப் பேசலாம்…” என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *