குண்டு வெடிப்பு…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 12,859 
 
 

பேருந்து நிலைய கூட்டத்தினிடையே தனித்து நின்ற ஆளை அடையாளம் கண்டுகொண்டதும் தினாவிற்குள் மகிழ்ச்சி.

மெல்ல சென்று நெருங்கி அவன் தோளைத் தொட்டான்.

அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். தொட்டவனை மிரட்சியுடன் பார்த்தான்.

“கவின் ! என்னைத் தெரியலே..?”

அவனுக்குக் குரலைக் கேட்டதும்தான் இவனை அடையாளம் தெரிந்ததது.

“ஹே..! தினா…!” சட்டென்று மலர்ச்சியை கவின் நண்பனின் கையைப் பிடித்தான்.

“மன்னிச்சுக்கோடா. ரொம்ப நாள் பிரிவு. நீ தாடி மீசையோட வேற இருக்கே. சத்தியமா அடையாளம் தெரியலே…!”நிஜமாகவே மன்னிப்புக் கேட்டு நண்பனின் கையைப் பிடித்து குலுக்கினான்.

“எப்படிடா இருக்கே..?”

“நல்ல இருக்கேன் தினா. என்ன தாடி மீசை?”

“வேண்டுதல். ஆமாம். நீ சொல்லாம கொள்ளாம ஊரை விட்டு ஓடிப்போய் பத்து வருசம் இருக்குமா..?”

“இருக்கும் !. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதும் ஓடிவந்தேன்”

“ஏன் ஓடி வந்தே..?”

“அதுவா…? ஊர்ல விவசாயம் சரி இல்லே. வேலை தேடி பொழைக்கலாம்ன்னு கிளம்பியாச்சு ..”

“கிடைச்சுதா..?”

“இல்லே. தேடி அலையறேன்..!”

“என்னடா சொல்றே…??”, இவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“ஆமாம் தினா. நிரந்தரமா எங்கும் அமையல. தற்காலிக வேலையில் அங்கே இங்கேன்னு இருக்கேன்”

“வாழ்க்கை வந்து எப்படி ஓடுது..?”

“எங்கே ஓடுது..? தள்ளறேன்”

“வா டீ சாப்பிடலாம்…”தினா கவினின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அருகில் சாலையோரம் இருக்கும் தேநீர் கடைக்குச் சென்றான்.

“ரெண்டு டீ !”

“கவின் ! நீ விருந்தாளி. நான்தான் காசு கொடுப்பேன். !”

“சரி”

தேநீர் வந்தது. இருவரும் குடித்தார்கள்.

“சிகரெட் ..?”

“இல்லே…”
இருவரும் நடந்து அருகில் இருக்கும் பூங்காவிற்கு வந்தார்கள்.

“தினா..! மீனா எப்படி இருக்காள்…?”

“என்ன கவின் திடீர்ன்னு அவள் நினைப்பு…?”

“ஊரை விட்டு வந்ததிலிருந்து நான் யாரையும் பார்க்கல, சந்திக்கலை. இப்போ முதன்முதலாய் உன்னைப் பார்க்கிறேன். அடுத்து… நம்மோடு படித்த மீனா முகம் ஞாபகமிருக்கு. அதான் கேட்கிறேன். ”

“நல்ல இருக்காள். மணமாகி இரண்டு குழந்தைகளோடு மகிழ்ச்சியாய் இருக்காள். ”

“நம்ம ஆசிரியை…?”

“சரோஜினியா..? அவங்க இன்னைக்கும் தளதளன்னு தக்காளிப் பழம் மாதிரி அன்னைக்குப் பார்த்த மாதிரியே இருக்காங்க…”சிரித்தான்.

“நம்ம கோவில் குருக்கள்..? ”

“பாவம் ! கொஞ்ச நாளைக்கு முன் கோயில் நகைகளெல்லாம் கொள்ளை போயிடுச்சி. பைத்தியமாய்த் திரியறார்”

“கேட்கவேப் பரிதாபமா இருக்கு. நம்ம ஊர் புகை வண்டி நிலையத்தில் குண்டு வெடுப்பாமே. செய்தியைத் தினசரியில் படித்தேன். எப்படிடா…? ”

“இன்னும் துப்பு துலங்களே..!”

“உனக்குத் திருமணம் ஆயிடுச்சா தினா…?”

“ஆகிடுச்சு.”

“வேலை..?”

“துப்பறியும் போலீஸ்..! ”

“தினா !! ”- மிரட்சியாகப் பார்த்தான்.

“அதிர்ச்சி அடையாதே. ஓடாதே கவின். நம்ம ஊர் கோயில் கொள்ளை, குண்டு வெடிப்பு. இன்னும் சில இடங்களில் நடந்த குண்டு வெடிப்பிற்கெல்லாம் நீதான் காரணம் கண்டுபிடிச்சிருக்கோம். எல்லா கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும் உன் உருவம் இருக்கு. நீ தீவிரவாத கும்பல்ல ஒருத்தன். உன்னைக் கைது செய்யத்தான் நாயாய் பேயாய் அலைஞ்சேன்.”என்று சொல்லி…. தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைவிலங்கை எடுத்தான் தினா.

சட்டென்று சுதாரித்த கவின்…

“நெருங்காதே. ! கிட்ட வந்தா குத்திடுவேன். !” சொல்லி சடாரென்று தன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து நீட்டினான்.

“உன்கிட்ட கத்தி இருக்கு. என்னிடம் துப்பாக்கி இருக்கு. மரியாதையா சரண்டர் ஆகலைன்னா சுட்டுடுவேன் !”என்று சொல்லி தினா துப்பாக்கியை எடுக்க…

கவின் ஆடவில்லை. அசையவில்லை. !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *