கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 8,657 
 

மல்வேட்டி ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணணாடி அணிந்திருந்த அந்தப் பெரியவர் காவல் நிலையத்தில் நுழைந்தார். மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே இன்ஸ்பெக்டர் காட்டிய நாற்காலியில் அமர்ந்து மேல் துண்டினால் விரல்களில் போட்டிருந்த மோதிரங்களை துடைத்து விட்டுக் கொண்டார்.

‘என்ன விஷயம்?’ – வினவினார் இன்ஸ்பெக்டர்.

‘ஒண்ணுமில்லே சார். என் பேர் கனகலிங்கம். நாங்கள் விவேகானந்தர் காலனியிலே புதுசா வீடு கட்டி குடி போயிருக்கோம். நம்பர் 13, நாலாவது தெரு. வர்ற ஏப்ரல் பத்திலேருந்து பதினைஞ்சுவரை ஹைதராபாத்துலே என்னோட சிஸ்டர் கல்யாணத்துக்குப் போறோம்’

‘சொல்லுங்க’

‘வீட்டுக்கு கொஞ்சம் பாதுகாப்பு தேவை. அந்த ஏரியாவிலே ஒதுக்குப்புறமான இடத்திலே இருக்கிற வீடு. அந்தப் பக்கம் இன்னும் டெவலப் ஆகலே.’

‘சரி ஒரு அப்ளிகேஷன் கொடுங்க நாங்க பாத்துக்கறோம்.’

‘ரொம்ப நன்றி ஸார்’

‘நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். வெளியூர் போனா தெரிவிச்சுட்டுப் போங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லறோம். யாரும் உங்களைமாதிரி முன்னெச்சரிக்கையா நடந்துக்க மாட்டேங்கறாங்க. நீங்க பயமில்லாம போயிட்டு வாங்க’

மனு ஒன்று எழுதிக் கொடுத்துவிட்டு செல்வதற்குமுன் ‘ஒன் நாட் செவன்’ என்று அதிகாரி அழைக்கவும், ஒரு கான்ஸ்டபிள் வந்து சல்யூட் அடிக்கவே, அவரை பெரியவரிடம் காட்டி, ‘இவரைத்தான் அந்த ஏரியாவிலே பீட் போட்டிருக்கோம்’ என்று அறிமுகம் செய்தார்.

பெரியவர் கான்ஸ்டபிளுக்கும் நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார்.

ஏப்ரல் பத்தாம் தேதி மதியம், வீட்டுத் தெருமுனையில் நின்றிருந்தார் கான்ஸ்டபிள். ஆட்டோவில் வந்த பெரியவர் அவரிடம் –

சொன்ன மாதிரியே வந்துட்டீங்களே! சந்தோஷம். எல்லாரையும் இப்பத்தான் சென்ட்ரலுக்க அனுப்பி வச்சேன்.நானும் இதோ பொறப்படறேன் என்று கூறிவிட்டு, காம்பவுண்டைத் திறந்து வீட்டில் நுழைந்தார்.

சற்று நேரத்தில் இரண்டு பெரிய சூட்கேஸ்களோடு புறப்பவர்.

போலீஸ்காரரிடம் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்து – ‘தப்பா நினைக்காதீங்க… டீ, காபி சாப்பிட வச்சுக்குங்க’ என்று கூறிவிட்டு ஆட்டோவில் அமர்ந்தார்.

போலீஸ்காரரும் சூட்கேஸ்களை தூக்கி ஆட்டோவில் வைத்து அவருக்கு உதவி செய்து அனுப்பினார்.

பதினாறாம் தேதி இரவு வீடு திரும்பிய கனகலிங்கம் அலறியடித்துக் கொண்டு அவசர அவசரமாக காவல் நிலையத்திற்கு ஓடினார்.

‘ஐயா… ஐயா… எங்க வீட்டில் திருட்டு போயிடுச்சு..கல்யாணத்துக்குப் போயிருந்தோம். ஊர்லேர்ந்து திரும்பி வந்தா இரும்பு பீரோ திறந்திருக்கு. பல லட்சம் நகை பணம் கொள்ளை போயிடுச்சி..’

‘உங்க வீடு எங்கேயிருக்கு? உங்க பேர் என்ன? எல்லாம் விவரமா சொல்லுங்க!’

‘நம்பர் 13 நாலாவது தெரு, விவேகானந்தர் காலனி..’

‘கனகலிங்கம்’

‘என்ன கனகலிங்கமா? நீங்கதான் கனகலிங்கமா? ஹைதராபாத்லே கல்யாணமா…’

‘ஆமா சார்…கரெக்டா சொல்லறீங்களே…’ என்றார் நெற்றியில் வழிந்த வியர்வைத் துடைத்தவாறே ஒடிசலாகவம் உயரமாகவும் இருந்த ஒரிஜினல் கனகலிங்கம்.

‘அப்படியென்றால் கனகலிங்கம் என்று வந்தவன்தான் திருடனா? போலீஸையே காவலில் வைத்து திருடிச் சென்றிருக்கிறானே!’ – நினைக்கவும், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஏராளமாய் வியர்த்தார் இன்ஸ்பெக்டர்.

– ஓகஸ்ட் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *