கானல் உலகு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 12,619 
 

வைத்தியர் மூர்த்தியின் மனதில் ஏற்கனவே புகைந்துகொண்டிருந்தது, பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக்கேட்டு பற்றி எரியத் தொடங்கியது.

கொஞ்சநாளாகவே மனைவியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களைப்பார்த்து அவருக்குச் சந்தேகமாக இருந்தாலும் ,இன்று பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக் கேட்டபின்பு அவருக்கு அந்தச் சந்தேகம் சந்தேகம் சரியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

“அவளுக்கு என்ன குறை வைத்தேன்? லவ் பண்ணின காலத்தில இருந்து அவளுக்குப்பிடிச்சதெல்லாம் செய்தேனே? அப்பா அம்மாவுடன் சண்டைபோட்டு அவளைத் திருமணம்செய்தேனே?….சீ சீ நான் இப்படியெல்லாம் செய்து என்ன பிரயோசனம்,எனக்கே துரோகம் செய்கிறாளே?” நினைக்க நினைக்க அவனுக்கு ஆத்திரம் பொத்திக்கொண்டு வந்தது.

காரை பார்க் பண்ணிவிட்டு சென்ரல் லொக்கை போடும் சத்ததிலேயே மூர்த்தி வந்துவிட்டதை உணர்ந்து ஓடிவந்து கதவைத்திறந்து கதவடியிலே பார்த்துக்கொன்டிருந்தாள் அவன் மனைவி ஷீலா.

“பாரு உத்தமி மாதிரி வந்து நின்றுகொன்டு போஸ் கொடுக்கிறத?”

மனசுக்குள்ளே ஆத்திரம் பொத்திக்கொண்டு ஓங்கி அறையவேண்டும்போல இருந்தாலும், இப்போது வேண்டாம் ,இதைக் கையும் களவுமா பிடிக்கும் வரை இந்த விடயம் தெரிந்தமாதிரியே காட்டிக்கொள்ளக்கூடாது என முடிவெடுத்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டான்.

“என்னங்க இன்றைக்கு நிறையப் பேஷன்டா ,இப்படிக்கலைத்துப்போய் இருக்கீங்க?” அவன் கையை பிடித்து அறைக்குள்ளே அழைத்துப்போய் அவன் டையை கழற்றிவிட்டு ஒவ்வொரு சேர்ட் பட்டனாக கழட்டத்தொடங்கினாள்.

முன்பெல்லாம் ஷீலா இப்படி அவனுக்காக ஆசையாக செய்வதையெல்லாம் ரசிப்பான்.அவள் டை ,சேர்ட்டைக் கழட்டி,சாரனை எடுத்துக்கொடுக்கும்போது அவன் மனதில் டூயட் ஒலிக்கும்.

ஆனால் அந்த விடயத்தை கேள்விப்பட்ட‌ ஒரு கணவனால் எப்படி இப்போது இதையெல்லாம் ரசிக்க முடியும்.

வழமைபோல ஷீலாவின் சாப்பாடு ருசியாகவும் இருக்கவில்லை.முன்பெல்லாம் அம்மாவை விட நல்லாச் சமைக்கிறாய் என்று சொல்லிக்கொன்டு ருசித்துச் சாப்பிடுவான்,அவளும் அவ்வள‌வு ருசியாக சமைப்பாள்.

ஆனால், இப்போ எல்லாமே தலிகீழாக மாறி இருந்தது. இன்னொருவனை மனசில் வைத்துக்கொண்டு எனக்குச் சமைப்பது எப்படி டேஸ்டா இருக்கும்? கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு பேசாமல் படுக்கை அறைக்குள் சென்றுவிட்டான்.

“என்னங்க வரவர ஒழுங்காகக் சாப்பிடுறீங்களே இல்ல?”கவலையாக கேட்ட ஷீலாவைப்பார்த்து என்னடி நடிக்கிறாயா என்று கேட்கவேண்டும் போலதோன்றியது.

“வேணாம், எனக்குத் தெரிந்துவிட்டது என்று தெரிந்தால் அலேர்ட் ஆகிவிடுவாள்.

தெரியாதமாதிரி இருந்தே இவளை அவனோடு இருக்கும்போது கையும்களவுமாக பிடிக்க வேண்டும்.

“இல்ல ஷீலா ,ஏனோ தெரியல இப்போ பசியே குறைந்துவிட்டது,வயசாகிக்கொண்டு போறதாலேயே தெரியல…”சமாளிக்கப்பார்த்தான்.

சாப்பிட்ட உடனேயே படுக்கையில் விழுந்திருந்தாலும் ,நேரம் இரவு ரெண்டு மணியைத் தாண்டியிருந்தது. இன்னும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

பக்கத்தில் அவனைக்கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்திருந்த ஷீலா ,இப்போ நித்திரை மயக்கத்தில் மற்றப்பக்கம் திரும்பி நல்லா தூங்கிக்கொண்டிருந்தாள்.

“பாரு சனியன் ,என்னை ஏமாற்றிவிட்டு எப்படித் தூங்குகிறாள்?”

மனதுக்குள் திட்டிக்கொண்டான்.

“என்ன மூர்த்தி உன் பொண்டாட்டி இப்படிப் பண்றாளே? எங்க வீட்டிலயும் வயசுப் பிள்ளைகள் இருக்கு, கொஞ்சம் அடக்கமா இருக்கச் சொல்லு” பத்மா அக்கா சொன்னது மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டு அவனைத் தூங்கவிடாமல் தடுத்துக்கொன்டே இருந்தது.

“அவன் யாரா இருக்கும் ? என்னிடம் இல்லாதது அப்படி என்ன அவனிடம் இருக்கும்?” யோசித்துக்கொண்டே படுத்திருந்தவனின் மனதில் திடீரென உதித்தது அந்த ஐடியா.

அடுத்த நாள் விடிந்தவுடன் முதலாவதாக செய்தது,வீட்டுக்கு சீ சி டிவி கமரா பூட்டியது.

அன்றைக்கே ஒருவரை அழைத்து வீடு முழுவதும் கமராவை பூட்டிவிட்டான்.அந்தக்கமரா அவனின் கைத்தொலைபேசியோடும் இணைக்கப்பட்டது.

“என்னங்க திடீரென கமராவெல்லாம் பூட்டுறீங்க”

“அதுவ‌ந்து ஷீலா நான் கொஸ்பிட்டலுக்குப் போன பிறகு நீ தனியாகதானே இருக்காய்,அதுதான் உனக்கு ஒரு பாதுகாப்பா இருக்குமே என்றுதான்.”

இப்படி அவளைச் சமாளித்தாலும் கமராவினை கைத்தொலைபேசியுடன் இணைத்த விடயம் அவளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

அடுத்த நாள் வைத்திய சாலைக்குச் சென்றாலும் பேஷன்டைப் பார்ப்பதைவிட கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டு இருந்ததே அதிகம்.

யார் யார் வீட்டுக்கு வருகிறார்கள் என அவன் கமராப்பதிவுகளைப்பார்த்துக்கொண்டே இருந்தான்.

முதலில் மரக்கறி விற்பவன்…வாசலோடேயே மரக்கறியைக்கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

அடுத்ததா இன்னொருவன் …யார் இவன் ?இதற்கு முதல் பார்த்ததே இல்லையே ? பார்க்க இள‌மையா வாட்ட சாட்டமாகவேற இருந்தான், அலேர்ட் ஆனான் மூர்த்தி.

கொஞ்ச நேரத்திலேயே அவன் சந்தேகம் தீர்ந்தது. வந்தவன் வாசலிலேயே வைத்து ஒரு பார்சலைக்கொடுத்துவிட்டு அவளிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே ,ஷீலா அழைத்தாள்.

“என்னங்க நீங்க ஒன்லைனில ஓர்டர் பண்ணின ஒரு ஹெட்போனை இப்போதான் டெலிவரி பண்ணினாங்க”

“சரி சரி நான் பிஸியாக இருக்கேன்,அப்புறம் கதைக்கிறன் போனைக் கட் பண்ணி விட்டான்.”

அதற்கப்புறம் வீடு செல்லும்வரை கைத்தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தாலும் யாருமே வரவில்லை.

இடையில் ஷீலாதான் ஒருதரம் கூடையை எடுத்து மார்கெட்டுக்குப்போய் வந்தாள்.

அன்று பின்னேரம் வீடு திரும்பும் முன் ,மூர்த்தியின் நெருங்கிய நண்பன் சங்கரன் மூர்த்தியின் அறைக்குள் வந்தான்.

“மச்சான் மூர்த்தி ,உங்கிட்ட ஒரு முக்கியமான விடயம் பேசவேண்டும்.ஆனா…”

“என்ன விடயம் சங்கரன் ,ஏதா இருந்தாலும் சொல்லு”

“இன்றைக்கு மத்தியானம் என் பிள்ளைகளைப் பிக்கப் பண்ண ஸ்கூலுக்குப்போறப்போ உங்க மனைவியைப்பார்த்தேன். மார்க்கெட்டுக்குப் பக்கதில யாரோ ஒருத்தனோட நடந்து போய்க்கொண்டிருந்தா, அவன் அவ இடுப்பைச் சுற்றிக் கை போட்டிருந்தான்,எதுக்கும் கொஞ்சம் கவனமா இரு”

“ஓ அப்ப நான் வீட்டில கமரா பூட்டினதும் ,மார்க்கெட் என்ற சாக்கில வெளியில போய் ஒன்றா இருக்காங்களா?”

மூர்த்திக்கு உடனேயே போய் மனைவியை வெட்ட வேணும்போல இருந்தது.

வேண்டாம் …இப்போ வேண்டாம் கையும் களவுமாகப் பிடிக்க வேன்டும்.

ஆத்திரத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொன்டான்.

அடுத்தநாள் வழமைபோல காலையிலேயே வெளிக்கிட்டு காரை எடுத்துக்கொன்டு புறப்பட்டாலும் ,வைத்தியசாலைக்குப்போகவில்லை அவன்.

முதல் நாளே லீவு போட்டிருந்தான்.

பக்கத்துத் தெருவிலே ஒரு ஒழுங்கையில் காரை நிப்பாட்டிவிட்டு போனில் கமரா பதிவுகளைப்பார்த்துக்கொண்டு இருந்தான்.

“எப்படியும் இன்றைக்கு வெளியில போய் அவனை மீட் பண்ணுவாள்தானே அப்போ பிடிக்கிறேன்….” மனதுக்குள் வைராக்கியம் ஓலித்துகொன்டிருந்தது.

சரியா பத்துமணி வீட்டுக்கு வெளியே வந்து ஒரு மீட்டர் டக்சியில் ஏறிக்கொண்டாள்.

மூர்த்தியும் அவசரமாக தன் காரை ஸ்டார்ட் பண்ணி ஓடிவந்து அந்த மீட்டர் டாக்ஸியைத் தொடர்ந்தான்.

ஷீலா சரியாக மார்க்கெட் முன்னாலதான் இறங்கினால்,அவளை இறக்கிவிட்டு அவள் வந்த மீட்டர் டக்ஸி போய்விட்டது.

மூர்த்தியின் காருக்கு பின்னுக்கு நின்றவன் ,தொடர்ந்து ஹோர்ன் அடித்துக்கொன்டே இருந்தான் . காரைத் திருப்பி மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பார்க்கிங்கில் பார்க் பண்ணிவிட்டு ஓடிவந்தான்.

மார்க்கெட்டுக்குப்பக்கத்தில் இளநீர் கடை ஒன்றின் முன் ஷீலா இன்னொரு இளைஞனோடு கதைத்துக்கொண்டிருந்தாள். இருவரின் கையிலும் இளநீர்.

ஷீலா அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொன்டிருந்தாள். இடையிடையே அவனைத் தொட்டுக்கதைத்துக்கொன்டிருந்தாள்.

ஓ இவன் தானா அது, பார்க்க அவளைவிட இளமையாக இருக்கானே, இந்தக்கால பெண்களுக்கு தங்களைவிட இளமையான ஆண்களைத்தான் பிடிக்குதோ?

தூரத்திலேயே நின்றுகொன்டிருந்த மூர்த்திக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்ல.

இப்போ போனால் பிரன்ட் என்று சொல்லி தப்பிவிடுவாள்,எப்படியும் எங்கேயோ ஒரு லொட்ஜுக்கோ,ஹொட்டலுக்கோ போவாங்கதானே அதுவரை வெயிட் பண்ணுவோம், அப்படியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கரவண்டியின் பின் ஒளிந்துகொன்டான்.

பத்து நிமிடமளவில் சிரித்து சிரித்துக்கதைத்துக்கொண்டே இருந்தார்கள்.மூர்த்தியும் அடுத்ததா எங்கே போகப்போகிறார்கள் என்ற ஆவலுடன் காத்துக்கொண்டே இருந்தான்.

கடையில் அந்த இளைஞன் ஷீலாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் கன்னம் வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த பைக்கில் ஏறவும்,அவர்கள் கட்டிப்பிடித்ததை திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்த மூர்த்தி மறைந்திருந்த முச்சக்கரவண்டி நகரவும் ,மூர்த்தியை ஷீலா கவனித்ததும் ஒரே நேரத்தில் நடந்தது.

மூர்த்தியைக்கண்ட ஷீலா ஆச்சரியத்துடன் அந்த இளைஞனின் கையைப்பிடித்து நிறுத்தினாள்.

மூர்த்தி தன்னை ஷீலா கண்டுவிட்டதைக்கண்டதும் ஆத்திரத்துடன் அவளை நெருங்கினான்.

“என்னங்க கிளினிக் ஏர்லியா முடிஞ்சுதா? ஏன் இங்கே வந்தீங்க? இவன் யாரென்று தெரியுதா?” அந்த இளைஞனின் கையைப்பிடித்துக்கொண்டே கேட்டாள்.

“யாரு இது?”

“நித்திலன் ,என் தம்பி முறைதான் .சித்தியின் மகன்.சின்னவயசில இருந்தே ஒன்றாத்தான் வள‌ர்ந்தோம். இப்போ பெரிய ஆளாகி சிங்கப்பூரில செட்டில் ஆகிட்டாராம், நேற்றுதான் வந்திருக்கார்.நம்ம கல்யானத்துக்குக்கூட சொன்னன் ஆனா வரல …இப்போ ஏதோ அக்சிடென்டா சந்திச்சதாலதான் ,இல்லாட்டி இந்த பெரிய மனிசன் இலங்கைக்கு வந்தத சொல்லாமலேயே சிங்கப்பூர் போயிருப்பார்.”

“ஹலோ , மூர்த்தி,உங்க போட்டோவெல்லாம் பேஸ்புக்கில பார்த்திருக்கன்,உங்க கல்யாணத்துக்குத்தான் வர முடியல சொரி ,கைகொடுத்தான் நித்திலன்.”

பதிலுக்குக் கை கொடுத்த மூர்த்தியின் மனதில், நித்திலன் பற்றியும் சின்ன வயசில் அவனோடு விளையாடின கதைகள் பற்றியும் ஷீலா சொன்னது ஞாபகம் வந்தது.

“அப்ப அது இவன் இல்லையா ? அவசரப்பட்டு மிஸ் பண்ன்ணிட்டேமே. இப்போ அலெர்ட் ஆகி அவனைச் சந்திக்காமல் போய்விடுவாளே! சரி சரி இன்றைக்கு இல்லாட்டி என்ன நாளைக்குப்பார்ப்போம்.”

அடுத்தநாள்,அதற்கடுத்தநாள் என தொடர்ந்து மூன்று நாள் இப்படிப் பின்னாலேயே போனான்,ஆனா அவன் சந்தேகப்படும்படி யாரோடையும் அவள் கதைக்கல‌

ஒருவேலை அலேர்ட் ஆகிட்டாளோ? அன்று நான் மார்க்கெட்டு வந்ததைப்பார்த்து தெரிந்துவிட்டது என்று நினைக்கேன் ,என்கிட்டேயே நடிக்கிறாளா?

எப்படியும் பிடித்துக்காட்டுறன். அதுக்குமேல் யோசிக்கமுடியவில்லை,அவனுக்கு நித்திரையும் வரவில்லை.

ரென்டு நித்திரைக்குளிசையைப்போட்டுக்கொண்டு படுத்துவிட்டான்.

நித்திரைக்குளிசையின் மகிமையில் காலை ஏழுமனிவரை நல்ல தூக்கம்.

இன்றைக்கு மார்கெட் போய் பிரயோசனமில்லை,அலேர்ட் ஆகிட்டாள் ,வேற ஏதும் பிளான் பன்ணுவம் என நினைத்து வைத்திய சாலைக்கு வெளிக்கிட்டான்.

போகும் வழியில் பத்மா அக்கா என்ன மூர்த்தி முன்னெல்லாம் நீங்க இல்லாதபோதுதான் வீட்டுக்கு வருவான்,இப்போ நீங்க இருக்கும்போதே வாரத்தொடங்கிட்டானா?” கேட்டுவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“என்ன சொல்றீங்க அக்கா?’

“இரவு அவன் மதிலால பாய்ந்து போனதைப்பார்த்தேன் அதுதான்.”

“ஓ மை காட், நான் நித்திரைக்குளிசை மயக்கத்தில் இருக்கும்போது அவனைக்கூப்பிட்டு இருக்ககாளா? இனியும் பொறுக்க ஏலாது ,இப்படியே என்னை கேணையனாக்க விட ஏலாது”

அப்போதே போய் அவளை வெட்டிக்கொல்லனும் போல தோன்றியது.

“வேண்டாம், இவளை வெட்டிவிட்டு நான் ஏன் ஜெயிலுக்குப்போக வேண்டும்?ஆனா இப்படியேயும் விட முடியாது….அவளைக்கொலைசெய்தால்தான் ஆத்திரம் அடங்கும்….பக்காவா பிளான் பண்ணி பிடிபடாதமாதிரி கொல்ல வேண்டும்.”

இப்போது அவர்களைக் கையும் களவுமாக பிடிக்கும் எண்ணத்தைவிட, ஷீலாவைக்கொல்ல வேண்டும் என்றே தோன்றியது,அப்போதுதான் அவன் ஆத்திரம் அடங்கும் .

எவ்வள‌வு ஆத்திரம் வந்தாலும் அடக்கிக்கொண்டான்,அவசரப்பட்டு எதுவும் செய்துவிடவில்லை.

பக்காவா பிளான் பண்ணி பிடிபடாதமாதிரி பண்ணவேன்டும் என்பதில் உறுதியா இருந்தான்.

தான் படித்த பொரன்ஸிக் மெடிசின் இப்போதுதான் உதவியது அவனுக்கு.

கொலை செய்ததுபோல தெரிந்தால் ,போலிஸ் விசாரணை அதிகமாகி தான் பிடிபடலாம்,சோ கொலையை விட தற்கொலை மாதிரி செய்துவிட்டால் போலிஸின் விசாரனை பெரிதாக இருக்காது

சோ ஷீலா தற்கொலை செய்துகொண்டாள் என்று நம்பவைப்பதுமாதிரி கொல்லவேண்டும்!

முடிவெடுத்துவிட்டான்!

ஆனால் எப்படிக்கொள்வது?

ரெண்டு நாளாய் இதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கான்.

நச்சு மாத்திரைகளை கொடுக்கலாமா ஆனால் அவளுக்குத் தெரியாமல் அவளைக்கொல்லும் அளவுக்கு மாத்திரைகளைக்கொடுப்பது சாத்தியமில்லை.

தூக்கு மாட்டுவது…ம்ம் தூக்கிலே போடும்போது எப்படியும் ,திணறுவாள்,அப்போது சின்னக் காயங்கள் ஏற்பட்டாலும் போலிஸுக்கு சந்தேகம் வரலாம்,போர்ஸ்ட் மார்ட்டத்திலயும் பிடிபடலாம்.

கத்தியால் வெட்டுவது, கத்தி என்றாலே எப்படியும் சந்தேகம் வரும்.

என்ன செய்யலாம்?

யோசித்து யோசித்து மண்டை விறைத்தது

எண்ணெய் ஊற்றி எரித்துவிடுவோமா?

வேண்டாம் ,உடனேயே சாகமாட்டாள், சத்தம்போட்டு ஊரைக்கூட்டினால் எல்லோருக்கும் தெரிந்துவிடும்?

அன்று படுக்கையில் உருண்டுகொண்டிருந்தபோது ,அதிகாலை ரெண்டரை மணிக்குத்தான் அந்த ஐடியா வந்தது.

“குட் ஐடியா ,இப்படியே செய்வோம்”

அந்த ஐடியா வந்த பிறகுதான் அவனுக்குத் தூக்கமே வந்தது.

அடுத்த நாள் வைத்தியசாலைக்குச் சென்றதும் முதலில் செய்தது ,ஒரு கெட்டாமின் போத்தலையும் ,ஐந்து மில்லி லீட்டர் சிரிஞ்ஜினையும் எடுத்து வைத்துக்கொண்டான்.

வீட்டுக்குப்போகும்போது ஒரு தடிப்பான நைலோன் கயிறும் வாங்கிக்கொண்டான்.

கெட்டாமின் ஒரு மயக்க மருந்து.ஒரு சிறிய ஊசியால் ஏற்றிவிட்டால் மயங்கிவிடுவாள். அந்த மருந்து மயக்கினாலும் மருந்தினால் மூச்சுத் திணறல் ஏற்படாது.

மற்றவர்களுக்கு அவள் உணர்வோடு இருப்பது போலதான் தெரியும்.

அந்த மருந்தை ஏற்றிவிட்டு அவளை தூக்கிலே தொங்கவிட்டால் ,அவளாகவே தூக்கிச் செத்தது போலதான் இருக்கும்.

தூக்குமாட்டும்போது அவள் கைரேகை கயிற்றில் படும்படியும்,அவனின் கைரேகை படாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்காக கிளவுசும் எடுத்து வைத்துக்கொன்டான்.

அன்று ஷீலா படுக்க பத்துமணியானது.

அவள் படுத்துவிட்டதை உறுதி செய்துகொண்டவன் ,கெட்டாமின் மருந்தை ஊசியினுள் எடுத்துக்கொண்டான்.

மெதுவாக ஷீலாவின் பக்கத்தில் சென்று , அவள் புஜத்தில் ஊசியை ஏற்றினான்.

ஊசி குத்திய வலியில் திடுக்கிட்டு எழுந்த ஷீலா கொஞ்ச நேரத்திலேயே மயங்கிவிட்டாள்.

ஆனாலும் திடீரென எழும்பியதால் குத்திய ஊசி அவள் தோலைக் கிழித்து இரத்தம் கசியத்தொடங்கியது.

இதை எதிர்பார்க்கவில்லை மூர்த்தி. இப்போது தூக்கிலே போட்டாள், நிச்சயம் இந்தக்காயத்தில் சந்தேகம் வரும்.போஸ்ட்மோர்டம் செய்யும் டொக்டர் ஊசி போட்டிருப்பதைக்கண்டு பிடித்துவிடுவார், அப்புறம் கெமிக்கல் டெஸ்டிங் செய்து என்ன ஊசி என்று கன்டுபிடித்தால் ,கட்டாயம் நான் தான் ஊசிப்போட்டிருக்கேன் என்று பிடிபட்டுவிடும்.

மூர்த்தி படித்த சட்ட மருத்துவ அறிவு இப்போது எதுவும் செய்ய வேண்டாம் என அவனைத் தடுத்தது.

ஆத்திரம் பொங்கியது ,என்ன பிளான் பண்ணினாலும் சொதப்புதே,பேசாம கத்தியை எடுத்து கழுத்தை வெட்டிவிட்டு போலிஸீல் சரணடைவோமா? என்றுகூட யோசித்தான் .

வேண்டாம் இவள் செய்த தப்புக்காக நான் ஏன் ஜெயிலுக்குப்போக வேண்டும்.

கண்ணைமூடி தியானத்தில் ஆழ்ந்தான்,ஆத்திரம் அப்போதைக்கு அடங்கியது.

ஷீலா மயக்கத்தில் உளறிக்கொண்டிருந்தாள்.

கெட்டாமின் மருந்தின் இயல்பே அதுதான். அந்த மயக்கம் என்பது ஒரு பரவச நிலைபோல அவர்களை உளற வைக்கும்,அவர்கள் உள்ளத்தில் இருப்பவை உளறலாக வெளிவரும்.ஷீலா சிலநேரம் தன் கள்ளக்காதலன் பற்றியும் உளறலாம்…ஆர்வமாகக்கேட்டுக்கொன்டிருந்தான் மூர்த்தி. சரியாக மூன்று மணித்தியாலம் அளவில் ஷீலாவுக்கு உணர்வு திரும்பியது. மயக்கமானதில் அவன் ஊசிபோட்டது மறந்திருந்தது. படுக்கையில் ஏதோ குத்திவிட்டதாக அவனிடமே அந்தக் காயத்தைக்காட்டினாள்.

முர்த்தியின் மனமோ அடுத்து என்ன செய்வதென்றே யோசித்துக்கொண்டிருந்தான்.

பேசாமல் துப்பாக்கியால் சுட்டுவிடுவோமா?

போஸ்ட் மோர்டத்தில் துப்பாக்கிக்குண்டு உள்ளே போன காயம் வெளியேறிய காயம், இறந்தவர் இடக்கைப்பழக்கம் உள்ளவரா வழக்கைப்பக்கம் உள்ளவரா ,சுட்ட துப்பாக்கியின் தூரம் என்பவற்றை வைத்துதான் தற்கொலையா கொலையா என்று யோசிப்பார்கள்.

ஷீலா இடது கைப்பழக்கம் உள்ளவள்,அவள் படுக்கும் போது இடதுபக்க நெற்றி ஓரமா துப்பாக்கியை வைத்துச் சுட்டுவிட்டு அவள் கைரேகையைத் துப்பாக்கியில் பதித்துவிட்டாள் யாருக்குமே சந்தேகம் வராது.

யெஸ் இதுதான் ஒரே வழி …
அடுத்த நாள் தன் நண்பர் ஒருவர் மூலம் திருட்டுத் துப்பாக்கி விற்கும் ஒருவரின் தொடர்பினை எடுத்துவிட்டான்.

ஆனால்,போகும்போதுதான் அந்த டவுட் வந்தது. துப்பாக்கி எப்படி வீட்டுக்கு வந்தது

விசாரனையில் தனக்கு பெரிய சிக்கல் வந்துவிடும் என்று தோன்றியது.

ஷிட் எவ்வளவு பெரிய தப்புச் செய்து மாட்டிக்கொள்ளப்பார்த்தேன்.உடனேயே திரும்பிவிட்டான்.

திரும்பிவந்துகொண்டிருக்கும்போதுதான் பத்மா அக்காவைப்பார்த்தான், “என்ன மூர்த்தி சேர் போற போக்கைப்பார்த்தால் நீங்களே உங்க பொண்டாட்டிய அவனோடு அனுப்பி வைப்பீங்க போல ..நக்கலாகச் சொல்லிவிட்டு அங்கபாருங்க இப்பதான் அவன் உங்க வீட்டில இருந்து போறான்” காட்டிய திசையில் பார்த்தால் ஒரு வெள்ளைக்கலர் கார் ஓடி மறைந்துகொண்டிருந்தது.

இதுக்குமேலயும் பொறுக்க ஏலாது ஜெயிலுக்குப்போனாலும் பரவாயில்லை,அவளை வெட்டியே தீருவேன்,

வாசல்க் கதவை செக்கியூரிட்டி திறக்க முன்னமே காரினாலேயே அடித்துத் திறந்தான், அவ்வள‌வு ஆத்திரம்.

காரை வீட்டு வாசலிலேயே விட்டு விட்டு ஆத்திரத்துடன் வீட்டுக்குள் ஓடினான். நேரா கிச்சனுக்குப்போய் ஒரு நீளமான கத்தியை எடுத்துக்கொண்டு ,”ஷீலா ஷீலா..”

கத்திக்கொண்டே ஒவ்வொரு அறையாகத் தேடினான்

“என்னங்க” பின்பக்கம் வீட்டுத்தோட்டத்தில் இருந்து ஷீலாவின் குரல்

ஓ அங்க இருக்கியா இரு வாரன் கத்தியைத் தூக்கிக்கொண்டு வேகமாக வாசல் வழியே வெளியே வந்து வீட்டுக்குப்பின்பக்கம் போனான்.

ஷீலாவும் இவன் குரல் கேட்டு வீட்டுத்தோட்டத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்தாள்.

“என்னங்க இவ்வளவு பதட்டமா வாறிங்க”கேட்டுக்கொன்டிருக்கும்போதுதான் அவன் கையில் கத்தி இருப்பதைப்பார்த்தாள்.

அவள் சுதாகரிப்பதற்குள் பக்கத்தில் வந்துவிட்டான்.

“உனக்கு என்ன துரோகம் செய்தேனடி ,ஏன் என்னை இப்படி ஏமாற்றினாய்?”
கத்தியை ஓங்கி வயிற்றிலே குத்தப்போனான்.
திரும்பி ஓடக்கூட என்னவில்லை அவள்,அந்தளவு அதிர்ச்சி.

கத்திக்கும் வயிற்றுக்கும் இடைவெளி ஒரு மில்லிமீட்டர்தான் இருந்தது ..சடார் !

அப்படியே சரிந்து விழுந்தான் மூர்த்தி.

செக்கியூரிட்டி கையில் பொல்லுடன் நின்றுகொண்டிருந்தான்.

“மெடம் …சேர் வாசல் கதை உடைத்துக்கொன்டுதான் உள்ளே வந்தார், அப்படியே கையில் கத்தியுடன் உங்கள் பெயரை ஆத்திரத்துடன் சொல்லிக்கொன்டு வருவதைக் கண்டுதான் சந்தேகப்பட்டு வந்தேன்.”

மூர்த்தியின் வலது கையில்தோள்பட்டைக்குக் கீழ்தான் அடி ,ஆனாலும் பலமான அடி என்பதால் கையைத்தூகி எழும்பமுடியவில்லை

“இருடி உன்னைக்கொல்லாம விடமாட்டன்” மற்றைக்கையில் கத்தியை எடுத்து எழும்ப முயற்சித்துக்கொண்டிருந்தான்.

செக்கியூரிட்டி ஓடிப்போய் கத்தியை பறித்துக்கொண்டான். தனக்குப் பழக்கமான கையில் விழுந்த பலமான அடியால் செக்கியூரிட்டியை எதிர்க்க முடியவில்லை.

ஷீலா போட்ட சத்தத்தில் பக்கத்துவீட்டு பத்மா அக்கா புருஷனும் வந்து சேர்ந்திருந்தார்.

எழும்பிய மூர்த்தியிடம் இப்போது கத்தி இல்லை,காலால் எட்டு ஷீலாவின் வயிற்றில் உதைத்தான் ,தூரப்போய் விழுந்தவளை நோக்கி ஓடினான்.
பின்னால் வந்து செக்கியூரிட்டி மூர்த்தியைப் பிடிக்க ,பத்மா அக்கா புருஷனும் மூர்த்தியின் கால்களைச் சேர்த்துப்பிடித்தார்.

அடுத்த நாள்.

வைத்தியசாலையில் கையில் கட்டுடன் படுத்திருந்தார். மூர்த்தி அப்போதுதான் ஹலோபிடிரோல் ஊசி அடிக்கப்பட்டிருந்ததால் பாதி மயக்கமான நிலையே இருந்தார்..
அந்த நிலையிலும் பக்கதிலே நின்றுகொண்டிருந்த பத்மா அக்கா சொன்னது அவனுக்கு விளங்கியது.

“என்ன சேர் இப்படிப் பண்ணிட்டீங்களே ஷீலா அம்மா உங்க மேல உசுரையே வைத்திருக்காங்களே? அவங்க போய் உங்களுக்கு துரோகம் செய்வாங்களா?
என்ட பிள்ளைகளுக்கும் அவவை உதாரணம் காட்டித்தானே எப்படி ஒழுக்கமா இருக்கனும் என்று சொல்லிக்கொடுக்கிறனான்” கலக்கமான குரலுடன் பத்மா அக்கா சொல்லிக்கொண்டிருந்தாள்.

வெளியே அழுதுகொன்டிருந்த ஷீலாவிடம்

“இஞ்ச பாரும்மா ஷீலா, அவனுக்கு கொஞ்ச நாளாகவே ஷிஷோபெரினியா என்ற வருத்தம் இருந்திருக்கு. அந்த வருத்தம் வந்தா பொய்யான விடயங்கள் உண்மையா இருக்குது என்ற போலியான எண்ணம் வரும் அத டிலூசன் என்போம்.

பொய்யான அந்த கற்பனை விசயத்தை அவங்க நூறுவீதம் உண்மை என்றே நம்புவாங்க.அப்படித்தான் அவனும் உனக்கு யாரோ ஒருவருடன் தொடர்பு இருக்கு என்றுபொய்யாக நம்பி இருக்கான்.

இந்த வருத்தம் வந்தால் அவங்களுக்கு ஹலுசினோஷனும் வரும்.ஹலுசினோஷன் என்றால் யாரோ ஒருவர் தங்களோடு பேசுவதைப்போல கேட்கும்,சிலருக்கு அவங்களுக்கு முன்னாலேயே ஒருவர் நின்று கதைக்கிற‌துபோல தெரியும்.

மூர்த்திக்கும் ஹலுசினோசனில உங்க பக்கத்துவீட்டு பத்மா அக்கா பேசுவதுபோல கேட்டிருக்கு.அவன் பிரன்ட் சங்கரன் கூட உன்னைப்பற்றி தப்பா சொன்னதா நம்பியிருக்கான்” ஆறுதலாக விளங்கப்படுத்திக்கொண்டிருந்த மனநல வைத்தியரிடம்

“இப்ப நான் என்ன பண்ணலாம் டொக்டர்? எனக்கு இவரை விட்டால் எதுவுமே இல்லையே? என்னை அவரு கொலை செய்தாலும் பரவாயில்லை அவரு நல்லா இருந்தால் போதும்.” அழத்தொடங்கினாள் ஷீலா.

“அழாதம்மா ஷீலா இதுவும் ஒரு வருத்தம்தான்.மருந்து தொடங்கியிருக்கு.எல்லாம் சரியாகிவிடும். அப்புறம் அவனோட சேர்ந்து எந்தப்பிரச்சினையும் இல்லாம வாழலாம்”

சொல்லிவிட்டு விடைபெற்றார் வைத்தியர்.

“எல்லாம் நாம நினைச்சபடியே முடிஞ்சுது டியர். ஒட்டுமொத்த ஹொஸ்பிட்டலுமே மூர்த்திக்கு அந்த வருத்தம் என்று நம்பிவிட்டது, இனி நமக்கு எந்தச் சிக்கலும் இருக்காது.” ஷீலாவைப்பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான் சங்கரன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *