ஒரு சொல் கொல்லும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 2,891 
 
 

எனக்கு அவசரமாக ஒரு தமிழ்ப் புலவர் வேண்டும். அறம் பாடத் தெரிந்த புலவர். ஒருத்தியைக் கொல்ல வேண்டும். எல்லாம் தணிகாச்சலத்தோட ஐடியா.

‘இவன் என்ன லூஸா?’ என்று அந்தண்டை நழுவுவதற்கு முன் சொல்லி விடுகிறேன். நான் லூஸு இல்லை. ஒரு வங்கியின் மேலாளர். வங்கி என்றவுடன் ஏதோ தி நகர் மவுண்ட் ரோடு என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல.

அத்திப்பட்டு தெரியுமா அத்திப்பட்டு? நம்ம ‘சிடிசன்’ புகழ் அத்திப்பட்டு இல்லை. மீஞ்சூர் தாண்டி வரும் அத்திப்பட்டு. அங்கு ஒரு சர்கார் வங்கியில் மேலாளர். வங்கி மேலாளருக்கு எதுக்கு அறம் தெரிந்த புலவர் என்று கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன். எதுக்கு கொலை என்று கேட்டால் பதில் சொல்கிறேன்.

மேலாளரின் முக்கிய பணிகளில் ஒன்று கடன் கொடுப்பது. அத்திப்பட்டு அரும்பாக்கம் இல்லை என்றாலும் அங்கும் கடன் கேட்டு வருபவர்கள் நிறைய உண்டு.

பிள்ளைக்குக் கல்யாணம், சாகுபடி, வீடு கட்ட வேண்டும், உடல் நிலை சரியில்லை என்று என்னென்னவோ காரணங்கள்.

சரி கதைக்கு வாங்க என்று நீங்கள் அலுத்துக் கொள்வது புரிகிறது.

மூன்று வருட ட்ரான்ஸ்பரில் வந்த நான் குடும்பத்தை அழைத்து வரவில்லை. தனிக் குடித்தனம் தான். வங்கி அருகிலேயே ஒரு சின்ன வீடு.

சரி சரி சிறிய வீடு. அதில் தான் நானும் தணிகாசலமும் குடியிருந்தோம்.

அந்த வீட்டில் ஒரு விசேஷம் உண்டு. என் பெட் ரூமில் என் பெட்டுக்குப் பக்கத்தில் இருந்த சுவரில் சுண்ணாம்பு உரிந்து இருந்தது. அது பல patternகளை செய்திருந்தது. அந்த patternகளில் ஒன்று ஒரு மனித முகம் போல இருந்தது. அந்த முகத்துக்கு நான் தான் தணிகாசலம் என்று பெயர் வைத்தேன். இவன் லூஸு தான்னு நீங்க முடிவு செய்யுறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். என்னோட சொந்த ஊர்ல எங்கப்பா பிரெண்ட் ஒருத்தர் தணிகாசலம்னு இருந்தார். அவர் முகம் மாதிரியே இருந்ததா அதுனாலதான்.

என் தனிமையைப் போக்க நான் வீட்டில் இருக்கும் நேரங்களில் தணிகாசலத்துடன் பேசுவதுண்டு. என் மனதின் காயங்கள் தாபங்கள் எதிபார்ப்புகள் ஆசைகள் என்று ஒன்று விடாமல் நான் அவனுடன் ஷேர் செய்வேன்.

அவன் பொதுவாக திரும்ப பதில் சொல்ல மாட்டான். என் பிரச்சனை எதுவும் சொல்லி நான் ரொம்பவும் வருத்தப்பட்டால் அப்போது மட்டும் பதில் சொல்வான். அதுவும் சிறிய வாக்கியங்களில்.

சரி அப்படி ஒரு நாள் நான் என் ப்ராப்ளம் சொல்லி அழுதபோது அவன் தந்த ஐடியா தான் ஆரம்பத்தில் நான் சொன்னது.

என்ன நடந்ததுன்னு அவன் கிட்ட சொன்னத உங்க கிட்டவும் சொல்றேன். கேளுங்க.

மூணு மாசம் முன்னால ஒரு நாள் அதிகம் கூட்டமில்லாத (என்னிக்கு இருந்திருக்கு?) ஒரு மதியத்தில் வசுமதி வங்கிக்கு வந்தாள். (ஆரம்பிச் சுட்டியான்னு நீங்க கேக்குறது காதில விழுகிறது). லோன் விஷயமாக.

வசுமதின்னு பேரு தான் கர்னாடகம். ஆளு நம்ம ஊரு பாஷைல ‘ஃபிகர்’!.

எனக்குத் தான் அழகான பொண்ணுகளப் பாத்தா ஆகாதே! உடம்பு உடனே குப்புன்னு வேர்த்து விட்டது.

இந்த பொம்பளைங்களுக்கு என்ன தெரியுமோ தெரியாதோ, ஒரு ஆண் தங்கள் அழகில் சாய்ந்து விட்டான் அப்படீங்கறது மட்டும் உடனே தெரிஞ்சிடும். வசுமதிக்கும் தெரிஞ்சுடுத்து.

அப்புறம் என் எதிரில் உட்கார்ந்து தன்ன அறிமுகம் செஞ்சு கொள்ள, நான் அவ மொகத்தப் பாக்க, அவ லோன் பத்திப் பேச, நான் அவ கழுத்தைப் பாக்க,
அவ டாக்குமெண்ட்ஸ் செக்யூரிட்டி பத்திப் பேச, நான் கழுத்துக்குக் கீழே பாக்க, கடைசியா ஒரு விஸ்கி குரலில் “எனக்கு லோன் குடுப்பீங்களா சார்?” என்று என்னக் கொஞ்சலாப் பாக்க நான் அவள் நாபியைப் பாத்தேன்.

அவளுக்குப் புரிந்து விட்டது. டேபிள் கீழே காலைத் தற்செயலாக படுவது போல என் காலில் பட்டு, ‘சாரி சார்’ என்றாள். ‘இட்ஸ் ஓகே’ என்றதும் நன்றாகவே என் கால் மீது வைத்துக் கொண்டாள்.

நான் ப்யூனை அழைத்து அப்ளிகேஷன் படிவம் வரவழைத்து எல்லா விவரமும் நிறைக்கத் துவங்கியதும் அவள் கால் என் காலைத் தடவத் துவங்கியது.

“இத ஜோனல் ஆபீஸ் அனுப்பணும். ரெண்டு நாள்ல பாஸ் ஆயிடும். நான் சொல்லி அனுப்பறேன்”

“எதுக்கு சொல்லி அனுப்பணும்? நீங்களே வாங்க” என்று சொல்லி அவள் தன் கார்டைக் கொடுத்துச் சென்றாள்.

அப்புறம் நான் அவள் வீட்டுக்குச் சென்றது, அடிக்கடிச் சென்றது இதெல்லாம் சொல்லித் தான் தெரியணுமா?

இப்படி இருக்கையில ஒரு நாள் வசுமதி “ சார் என் அண்ணன் ஊர்லே இருந்து வர்றார். கொஞ்ச நாள் என்கூடத் தான் இருப்பார். அதுனால இந்தப் பக்கம் வர்றத கொஞ்சம் நாளு தள்ளி வைங்க”ன்னு சொன்னா.

சரின்னு சொன்ன என் கண்ணுல ரெண்டு நாள் கழிச்சு பக்கத்து ஊர்ல இருக்கற வங்கில இருந்த cash remittance கொண்டு வரப் போனபோது மானேஜர் எதிர்ல அவ ஒரு ஆளுடன் உட்கார்ந்திருந்தது பட்டது.

அவர்களும் என்னைப் பார்த்து விட்டார்கள். விருட்டென்று எழுந்து சென்று விட்டார்கள். உள்ளே சென்று கேட்டால், இருவரும் கணவன் மனைவி என்று லோன் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று முகம் சிவந்த மானேஜர் சொன்னார்.

எனக்குக் காலின் கீழிருந்த தரை நழுவியது.

மறு நாள் அவள் வீட்டுக்குச் சென்றேன். கதவைத் திறந்த அவள் முகம் வெளிறியது.

‘மணி’ என்று உள்ளே நோக்கி குரல் கொடுத்தாள். மணி வந்தான். வந்தவன் உடனேயே “என்னய்யா வேணும்?’ என்று ஏக வசனத்தில் கேட்டான்.

அப்புறம் எங்களுக்குள்ளே பெரிய வாக்குவாதம். இறுதியில் ‘உன்னாலே ஆனதப் பாத்துக்கோ’ன்னு சொல்லி ஒரு கவர என் மொகத்துல விட்டு எறிந்தான்.

பிரித்துப் பார்த்தால் உள்ளே நானும் வசுமதியும் இருந்த நெருக்கமான புகைப்படங்கள். என் பொண்டாட்டி பார்த்தா நிச்சயம் டைவர்ஸ். மாமனார் சொத்து கைவிட்டு போயிடும்.

“போயிடு! இல்லேனா போஸ்டர் அடிச்சி ஒட்டிருவேன். இத்தோட விட்டீன்னா நாங்க எங்க வழில போவோம். குறுக்க வராதே”

ஒரு வேலைக்காரனைப் போல மௌடீகமாக தலை அசைத்து விட்டு வீடு திரும்பினேன். தணிகாசலத்திடம் சொன்னேன். அழுதேன். ரொம்ப அழுதேன். இனிமேல் இந்த மாதிரி தப்பு செய்ய மாட்டேன் என்றேன்.

திடீரென்று தணிகாசலம் “ அந்தப் பணமும் கிடைக்கும். பழியும் வாங்கலாம். அறம் பாடத் தெரிஞ்ச ஒரு தமிழ் புலவரத் தேடி வரவழச்சு அவ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ. நல்லதே நடக்கும்” என்றான்.

திடுக்கிட்ட நான் அப்புறம் என்ன கேட்டாலும் மௌனம் சாதித்தான். அதுனால தான் உங்க கிட்ட கேட்டேன். என் ஆபீஸ் ப்யூநிடமும் சொல்லி வைத்தேன். ஒரு தமிழ் புலவர் வேண்டும் என்று.

சரியாக சாயந்திரம் நாலு மணி. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அங்க வஸ்திரம் என்று ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க ஒருவர் உள்ளே வந்தார்.

“நான் மாசிலாமணி. தமிழ் புலவர் வேணும்னு கேட்டீங்களாமே? எதுவும் மொழிபெயர்ப்பு வேலையா?” என்று என்னிடம் கேட்டார்.

இல்லை என்று சொல்லி அவரை உட்கார வைத்து ஒரு மாதிரி விஷயம் சொல்லி முடித்தேன். (தணிகாசலம் தவிர). மாசிலாமணியும் என்னைச் சந்தேகமாகப் பார்த்தார்.

“சார்! நான் பைத்தியம் இல்லை. உங்களால முடியுமா முடியாதா?”

“எவ்வளவு தருவீங்க?”

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பத்தாயிரம்”

பத்தாயிரம் என்று கேட்டவர் கண்கள் விரிந்தன. சரி என்றார்.

“ஆனா, எனக்கு அந்த மாதிரி பாட்டெல்லாம் எழுத வராது. வேணா நந்தி கலம்பகம் பாடறேன்” என்றார்.

“ஏதோ ஒண்ணு செய்யுங்க” என்றேன்.

மாலை சுமார் ஏழு மணிக்கு வசுமதி வீட்டுக்குச் சென்றோம். அவளும் மணியும் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்திகொண்டிருந்தார்கள். மாசிலாமணிக்கு மயக்கமே வரும் போலிருந்தது.

“பாடும் ஒய்” என்றேன். அவரும் ந.க. ஆரம்பித்தார்.

இந்த அமர்க்களத்தைப் பார்த்த மணிக்கு வெறி ஏறியது. “தே.. ஒன்ன என்ன பண்ணுறேன் பார்”ன்னு வேகமா எழுந்தான். எழுந்த வேகத்தில் கீழே வைத்திருந்த ஒரு பெட்டி அவன் காலை இடறியது. நிலை தடுமாறி மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் வெளிப்பக்கம் சாய்ந்தது போல விழுந்தான்.

‘ஐயோ” என்று கதறியவாறு அவன் கையைப் பிடிக்க எழுந்த வசுமதியையும் இழுத்துக் கொண்டு மணி கீழே விழுந்து செத்துப் போனான். வசுமதியும் செத்துதான் போயிருக்க வேண்டும்.

சப்த நாடியும் ஒடுங்கிய நிலையிலும் மாசிலாமணி ந.க. சொல்லிக் கொண்டிருந்தார்.

“யோவ்! நிறுத்துய்யா. வா கீழ போகலாம்” என்று அவரையும் இழுத்துக் கொண்டு கீழே சென்றேன். கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்த எங்களை வரவேற்றது அங்கிருந்த டேபிள் மேல் வைத்திருந்த ஒரு leather bag. ஒரு பிரபல வங்கியின் பெயர் பொறித்திருந்தது. ஒரு intuitionல் அதைத் திறந்து பார்த்தேன். உள்ளே பணம். சுமார் ஐந்து லட்சம் இருக்கும்.

அந்தப் பையில் இருந்து ஒரு பத்தாயிரம் எடுத்து மாசிலாமணியிடம் கொடுத்தேன்.

அவர் வெட்கத்துடனும் குழப்பத்துடனும் வாங்கிக்கொண்டார்.

பின்னர் அந்த bagஐ மூடி என் கையில் எடுத்துக்கொண்டு அவரையும் இழுத்துக்கொண்டு வெளியே ஓடினேன்.

நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.

அப்புறம் மறுநாள் போலீஸ் வந்து அது தற்கொலை என்று முடிவு செய்து போனது எல்லாம் மாலை பேப்பரில் வந்தது. நான் அந்தப் பணத்தை என்ன செய்வது என்பதை பிறகு யோசித்துக் கொள்ளலாம் என்று என் லாக்கரில் வைத்து விட்டேன்.

‘ஆமா! அது எப்படி சுவத்துல இருக்கற ஒரு மூஞ்சி சொன்னத வச்சி செஞ்சீங்க?’ன்னு நீங்க கேக்கலாம்.

எனக்குத் தணிகாசலம் மேல அசையாத நம்பிக்கை.

போன வருஷம் வேற ஒரு பிரச்சனைல மாட்டிகிட்ட எனக்கு ஒரு கெமிஸ்ட்ரி professorஐப் பார்த்து ஒரு கெமிக்கல் formula கேட்டு வரச் சொல்லி ஒரு விஷம் தயாரிக்க வைத்து என்னைக் காப்பாற்றினான்.

இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியல இல்ல? அப்ப இப்ப மட்டும் எப்படி மாட்டுவேன்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *