அந்திநேரத்து நிஜங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 6,929 
 
 

செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச்
செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
சதாகாலம் ஒம்சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
வேதாந்தச் சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால்
உத்தமனே சகலசித்துக் குதவி யாமே.

-சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதம்.

கதவு தட்டப்பட்டச் சத்தம் கேட்டு மும்முரமாக கதை எழுதிக்கொண்டு இருந்த நான் நிமிர்ந்தேன். “போய்விடு” என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். ஆனால் கதவுக்குப் பின்னால் இருந்தவர் போகவில்லை. அலுத்துக்கொண்டே எழுந்துசென்று கதவைத் திறந்தேன்.

சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர். ரொம்ப பயந்த சுபாவி போன்ற முகம்.

“யாரு வேணும்?”

“ராஜசேகரன்… ராஜ்…”

“நான்தான் ராஜ்…. நீங்க யாரு?”

“ என் பேரு சந்திரசேகரன். விழுப்புரம் பக்கத்துல ஒரு வில்லேஜ்ல பேங்க் மேனஜர்….உங்களைப் பார்க்கலாம்னு…”

“என்ன விஷயமா” என்று கேட்டேன்.

“ஒரு சொல் கொல்லும்” என்றார் மெதுவாக. அதைச் சொல்லும் போதே அவர் முகம் விகாரமாகியது. எனக்குள் சரேலென்று ஒரு குளிர்காற்று பாய்ந்தது.

சத்தியசீலன் ஐயாவும் அவர் சொல்லித்தந்த சித்தர் பாட்டும் அசந்தர்பமாக நினைவுக்கு வந்து என்னைப் பின்னோக்கி அழைத்துச் சென்றது.
நான் ராஜசேகரன். உங்களுக்கு நிச்சயமாக என்னைத் தெரிந்திருக்கும். ‘ராஜ்’ என்ற பெயரில் கதைகள் எழுதி வருகிறேன். எல்லா வாராந்திரிகளிலும் மாதாந்திரிகளிலும் என் கதைகள், தொடர் கதைகள் வந்திருக்கின்றன. எந்தக் கதை எழுதினாலும் கதாநாயகி மட்டுமல்லாது, அதில் இடம்பெறும் இருபத்தி ஐந்து வயதுக்கு உட்பட்ட எந்த பெண் கதாபாத்திரமானாலும் என் வர்ணனைகளுக்குத் தப்ப மாட்டார்கள். விம்மித் தணியும் இளமைகளிலிருந்து வழிந்து இறங்கும் இடுப்பு வரை ஒரு முறை நின்று நிதானித்துத் தான் கதை நகரும். (பீ அண்ட் சி செண்டர் டிமாண்ட்!)

எல்லாருக்கும் இருமல் சளி ஜுரம் வரும். எனக்கு ரைட்டர்ஸ் ப்ளாக் வந்தது. அது என்ன வியாதி என்று தெரியாதவர்கள் கூகுளை நாடவும். அரசினை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, என் எழுத்தை நம்பி வேலையை விட்டுவிட்ட எனக்கு ரொம்பவுமே இக்கட்டான சூழ்நிலை.என்ன செய்வதென்று அறியாமல் இருந்த என்னை மேலும் இருட்டில் தள்ளினார் எழுத்தாளர் சாகர்.

555 என்னும் ஒரு சந்தேஹாஸ்பதமான ஏஜென்சியை அறிமுகப்படுத்தினார். எனக்குச் சகாயமாக அவர்கள் ஐந்து கதைகள் கொடுத்தனர். அதற்கு பதில் என் ரைட்டர்ஸ் ப்ளாக் விலகியதும் நான் ஐந்து கதைகள் எழுதித் தரவேண்டும் என்று நிபந்தனை. அவர்கள் கதைகளை வாங்கி என் பெயரில் போட்டு பணம் புகழ் சம்பாதித்த பிறகு என் நிபந்தனையை நான் மறக்க அவர்கள் மிரட்டலுக்கு பயந்து அடிபணிந்தேன் என்பது பழைய கதை.

அவர்களுக்கு நான் எப்படிக் கதைகள் எழுதிக் கொடுத்தேன் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. ஆனால் அதற்கப்புறம் கதை எழுதுவது என்றாலே ஒரு பயம் தொற்றிக்கொண்டது.

ஆனால் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே இருப்பது? இலியானாவின் இடுப்பைப் போல சிறுத்து வந்த பேங்க் பாலன்ஸ் வேறு என்னை மிரட்டியது. மன உளைச்சலை தவிர்க்க முகநூலே கதியென்று ஆனேன். என்னுடன் நட்பான அனைவரும் கேட்ட முதல் கேள்வி நான் ஏன் இப்போதெல்லாம் கதைகள் எழுதுவதில்லை என்பதுதான். நான் பதில் சொல்லாமல் மழுப்பிவிடுவேன். இதேக் கேள்வியைத்தான் சத்தியசீலன் ஐயாவும் கேட்டார். ஆனால் என்னால் அவருக்குப் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சத்தியசீலன் ஐயா என் முகநூல் நண்பர். ஒரு ஆன்மீக வலைத்தளம் நடத்தி வருகிறார். வயதில் மூத்தவர். என்னிடம் தனி அன்பு கொண்டவர்.

அவரிடம் நான் என் மனக்குமுறலை கொட்டிவிட்டேன். பொறுமையுடன் கேட்ட அவர் கடைசியில் எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். குறிப்பாக சித்தர்களை நம்புவது உண்டா என்று கேட்டார்.

எனக்குச் சித்தர்கள் என்றால் நம்ம இந்திரா சௌந்திரராஜன் டிவி சீரியல்களில் வரும் சித்தர்களைத்தான் தெரியும். அவரிடம் சொன்ன போது சிரித்தார்.

பின்னர் பதினெட்டு சித்தர்கள் பற்றியும் அவர்கள் வரலாறு பற்றியும் அட்டமா சித்திகள் குண்டலினி என்று ஒரு மர்மதேச பிரயாணத்தில் என்னைக் கூட்டிப்போனார். நான் வாயடைத்துப் போனேன். பிறகு தான் மேலே சொன்ன பாடலைச் சொல்லித்தந்தார். அந்த மூல மந்திரத்தையும் சொல்லித்தந்தார்.

சித்தர்கள் பாடி வைத்த தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்து அறிந்து கொள்ளவும் , சித்தர்களைக் காண்பதற்கு ஒரு மூலமான மந்திரம் இதுவென்றும் சொன்னார் .சைதன்யமான இறையைப் போற்றி எந்நேரமும் ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல் உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம் என்றும் அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக்களுக்கும்உதவியாகும் என்றும் சொன்னார்.

நிச்சயம் முயன்று பார் என்று அறிவுரைச் சொன்னார். சரியென்று தலையாட்டிய நான் பிறகு அதை மறந்துபோனேன் என்பதுதான் உண்மை.

அதற்கப்புறமும் என் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பராசக்தி சிவாஜி சொன்னது போல வாழ்கையின் ஓரத்துக்கு போய்விட்டேன். அப்போதுதான் இந்த சித்தர் பாடல் நினைவுக்கு வந்தது. சரி முயன்றுதான் பார்ப்போமே என்றுதான் கணினி திறந்து அந்தக் பாடலைப் பார்த்தேன்.

அடுத்த நாளிலிருந்து அதற்கான வழியில் இறங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வாரம். ஒரு கோடி முறை சொல்லியும் விட்டேன். சத்தியசீலன் ஐயாவிடம் சொன்னேன். நல்லதே நடக்கும் என்றார்.

ஆனால் கலி முத்தியதோ என் விதி முற்றியதோ ஒன்றுமே நடக்கவில்லை. நான் மொத்தமாக உடைந்து போனேன். தற்கொலை நினைவு எட்டிப்பார்த்தது. அப்போது ஒரு எண்ணம். சாவது என்றுதான் முடிவாகிவிட்டதே! ஒரு முறை 555 ஏஜென்சியை தொடர்பு கொண்டால்தான் என்ன? ஒரு life கிடைக்குமே!

அந்த எண்ணம் வலுப்பெற்றதன் விளைவு ஒரு நாள் காலையில் நான் அந்த ஏஜென்சி இருக்கும் இடத்துக்குக் கிளம்பினேன். அருகில் இருந்த ஹோட்டலில் காப்பி சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று நுழைந்தேன். காப்பி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோதுதான் அவர் வந்தார்.

“இங்கே உட்காரலாமா?”

நிமிர்ந்து பார்த்தேன். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. நெற்றி நிறைய திருநீறு. கழுத்தில் ருத்திராட்ச மாலை.

“உட்காருங்க ஜி”

“எதுக்கு ஜி எல்லாம்? என் பேரு சித்தலிங்கம்”

என் பேரு ராஜ் என்று ஆரம்பித்த என்னை “எனக்குத் தெரியுமே” என்று தடுத்தார்.

ஆச்சர்யத்துடன் பார்த்த என்னை “உங்க நண்பர் சத்தியசீலன் சொன்னார்னு வச்சுக்கோங்களேன்” என்று சொல்லி சிரித்தார்.

“நான் இங்கே இருக்கேன்னு எப்படித் தெரியும்” என்று இழுத்தேன். “உலகில் எத்தனையோ அதிசயங்கள். அதிலே இதுவும் ஒண்ணுன்னு வச்சுக்கோங்க” என்றார்.

காப்பி வந்தது. அவருக்கும் ஒன்று சொன்னேன். “காப்பியா” என்று சிரித்தார். சரியென்று சொன்னார்.

“சத்தியசீலன் உங்க நிலைமை பற்றிச் சொன்னார்.” அந்த முகத்தில் ஒருசேர இருந்த அமைதியும் ஆளுமையும் என்னை அதிகம் பேச விடவில்லை. “ம்ம்” என்ற முனகல் மாத்திரமே வந்தது.

“இந்த உலகத்துல எதுவுமே முடியறது இல்லை” என்றார் பொதுவாக. பிறகு அவரே தொடர்ந்தார். “ எல்லா நிகழ்வுகளுக்கு முன்னாலும் ஒரு கதை இருக்கும். பின்னாலும் ஒரு கதை இருக்கும். அதை காணும் வித்தை தெரிய வேண்டும். அவ்வளவுதான்.”

“புரியலையே ஜி… இதுக்கும் என் நிலைமைக்கும் என்ன சம்பந்தம்?”

“நீங்க கதை எழுத வரலைன்னு தானே சத்தியசீலனிடம் சொன்னீங்க? அதுக்குத் தான் பதில் சொன்னேன். இப்ப பாருங்க நீங்க எழுதின கதைகளையே திரும்பவும் ஆழமாப் படிச்சீங்கன்னா உங்களுக்கு நான் சொல்ல வந்தது விளங்கும். அதிலேருந்தே இன்னும் கதைகள் பிறக்கும்”

“அதெப்படி? நான் தான் அந்தக் கதைகளை முடிச்சுட்டேனே?”

“அது நீங்க நினைக்கறது. அது வெறும் கதைன்னு நீங்க நினைக்கறதுனாலதான் இந்தப் பிரச்சினை. அதை உண்மைன்னு நினைச்சுப் பாருங்க. உங்க கதைகள்ல வர்ற கதாபாத்திரங்கள் நிஜம்னும் அவங்க வாழ்க்கை, அவங்க உலகம் நிஜம்னும் நினைச்சுப் பாருங்க. அப்ப விளங்கும்”

“அது எப்படி சாத்தியம்? அதெல்லாம் பொய்”

“அது உங்களுக்கு. சரி… நம்ம வேதாந்தம் என்ன சொல்றது? இந்த உலகம் பொய். இந்த வாழ்வே மாயம்னு சொல்றது. சரிதானே? அது இதெல்லாம் படைத்த அந்த ஆண்டவனுக்கு வேணும்னா உண்மையா இருக்கலாம். ஆனா அவன் படைத்த இந்த உலகில் வாழ்ந்துக்கிட்டு இருக்கற நமக்கு உண்மையாத்தானே தோணுது?”

“அதுனால…”

“நீ படைக்கும் கதைகளுக்கு நீதான் கடவுள். அந்தப் பாத்திரங்கள் உனக்கு வேண்டுமானால் பொய் போலத் தோன்றலாம். ஆனா நமக்கு எப்படி இந்த வாழ்க்கை உண்மைன்னு தோணுதோ, அவங்களுக்கும் அப்படித் தோணலாம் இல்லையா? நீ பார்த்தது அவங்களோட வாழ்க்கைல ஒரு பகுதி மாத்திரம்தான். அதுமட்டும் தான் அவங்க வாழ்க்கைனு நீ எப்படி முடிவு பண்ணலாம்? நம்மள மாதிரியே அவங்களுக்கும் வாழ்க்கை இருக்குன்னு நினைச்சுப் பாரு. அப்போ அவங்க வாழ்க்கைல நடந்த, நடக்கபோற இன்னும் பல சம்பவங்கள் உனக்குத் தெரியும். அதிலிருந்து நீ இன்னும் கதைகள் எழுதலாம்” என்று சொல்லி முடித்தார்.

அவர் பேச்சின் கோர்வையில் நான் ஒரு அர்ஜுன மயக்கத்துக்குப் போயிருந்தேன். அதிலிருந்து திடுக்கிட்டு விழித்தேன். “நீ நல்லா வருவ.. ஆனா ஒண்ணு. நீ எழுதின கதைகள்ல “ஒரு சொல் கொல்லும்”ன்னு ஒரு கதை இருக்கே… அத மேற்கொண்டு எழுத முயற்சி பண்ணாதே” என்றார்.

என் கதை அவருக்கு எப்படித் தெரியும் என்ற ஆச்சர்யங்களை கடந்த நிலையில் இருந்த நான் ஏன் என்று மட்டும் கேட்டேன்.

“அந்த சந்திரசேகரன் கொஞ்சம் சரியில்லை. நீ எழுதின கதைல மட்டுமே அவன் ரெண்டு கொலை பண்ணிட்டான். அப்புறம் நீ வேற கதைகள்ல முழுகிட்டதால உனக்குத் தெரியல. விழுப்புரம் மாவட்டத்துல மட்டும் அவன் அப்புறமா ஏழு கொலைகள் பண்ணிட்டான். நீ இனிமே அவனப் பத்தி எழுதினா அவன் மாட்டிக்கற மாதிரி எழுதிடுவ. அதனால அவனுக்கு உன்கிட்ட ஒரு பயம் வெறுப்பு கோபம் எல்லாம் இருக்கு. அதுனால ஜாக்கிரதை”

நான் அதிர்ச்சியில் உறைந்தேன். “என்ன உளர்றீங்க? அது வெறும் கதை… அவன் ஒரு கற்பனைப் பாத்திரம். அவன் என்னை எப்படி கொலை செய்ய முடியும்?” என்று கேட்டேன்.

அதற்குப் பதில் சொல்லாமல் எழுந்த அவர் “ உனக்கு என் ஆசிகள்” என்று சொல்லி சட்டென்று என் நெற்றியில் தன் வலது கை கட்டைவிரலை வைத்தார்.

எனக்குச் சுற்றுப்புறம் மறந்தது. திடீரென்று ஒரு மயானத்தில் நின்றது போன்ற ஒரு தனிமை. மயங்கினேன். முகத்தில் திடீரென்று ஒரு மழை. விழித்துப் பார்த்தால் சர்வர் டம்பளர் தண்ணியுடன்.

“சார் சார் என்ன ஆச்சு உங்களுக்கு”

என் கண்கள் சுற்றும் முற்றும் தேடின. சித்தலிங்கம் அங்கே இல்லை. “எங்கே என் கூட இருந்த ஆள்?” என்றேன் சர்வரிடம்.

அவன் என்னை விசித்ரமாகப் பார்த்தான். “உங்களோட யாரும் இல்லையே சார்.. நீங்க ரெண்டு காப்பி கேட்டபோதே யோசிச்சேன்…”

எனக்குச் சட்டென்று எல்லாம் விளங்கியது போல தோன்றியது. ‘வேதாந்தச் சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய் ‘ என்று மனதுள் ஓடியது.

உடனே காப்பிக்குப் பணம் தந்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினேன். கதவு திறந்து கணினி திறந்து என் ப்ளாக் திறந்து நான் எழுதிய ஒரு கதையைப் படிக்க ஆரம்பித்தேன். இரண்டு முறை படித்ததும் மனதில் ஒரு மின்னல்!
என்ன அதிசயம்! சித்தலிங்கம் சொன்னது போல ஒரு கதைக்கான கரு தோன்றியது. உடனே எழுதினேன்.

அப்புறம் அதை பத்திரிகைக்கு அனுப்பியது அது பிரசுரமானதோ அதற்கு சன்மானம் வந்ததோ உங்களுக்குச் சுவாரசியப்படாது. ஆனால் அதற்குப்பின் என் மூன்று நாவல்களில் இருந்து இன்னும் மூன்று நாவல்கள் பிறந்தது அதிசயம். அதனால் எனக்குப் புகழ் பணம் கிடைத்தது ஆச்சர்யம்.

இப்படிப் போய் கொண்டிருந்த ஒரு நாளில்தான் என் மனதில் அந்த விபரீத எண்ணம் தோன்றியது. என் ப்ளாகை திறந்து நான் எழுதிய ஒரு சொல் கொல்லும் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். கதையை மூன்று நான்கு முறை படித்ததும் ஒரு மின்னல். எனக்குள் ஒரு பயம் மெதுவாக எட்டிப்பார்த்தது. அதை கவனிக்காமல் நான் எழுத ஆரம்பித்தேன். காதுக்குள் “ஜாக்கிரதை” என்றார் சித்தலிங்கம். நான் பொருட்படுத்தவில்லை.

அப்போதுதான் கதவு தட்டப்பட்டது. கதவு தட்டப்பட்டச் சத்தம் கேட்டு மும்முரமாக கதை எழுதிக்கொண்டு இருந்த நான் நிமிர்ந்தேன். “போய்விடு” என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். ஆனால் கதவுக்குப் பின்னால் இருந்தவர் போகவில்லை. அலுத்துக்கொண்டே எழுந்துசென்று கதவைத் திறந்தேன்.

சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர். ரொம்ப பயந்த சுபாவி போன்ற முகம்.

“யாரு வேணும்?”

“ராஜசேகரன்… ராஜ்…”

“நான்தான் ராஜ்…. நீங்க யாரு?”

“என் பேரு சந்திரசேகரன். விழுப்புரம் பக்கத்துல ஒரு வில்லேஜ்ல பேங்க் மேனஜர்….உங்களைப் பார்க்கலாம்னு…”

“என்ன விஷயமா” என்று கேட்டேன்.

“ஒரு சொல் கொல்லும்” என்றார் மெதுவாக. அதைச் சொல்லும் போதே அவர் முகம் விகாரமாகியது. எனக்குள் சரேலென்று ஒரு குளிர்காற்று பாய்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *