வருவாளா? அவள் வருவாளா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 3,482 
 
 

ஒருத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்குமோ அவ்வளவு ஆனந்தம் கொண்டான் அவன் – சகல வசதிகளையும் ஒருங்கிணைக்கப்பெற்ற அந்த கைத்தொலைபேசியை அவனுக்கு வீட்டில் வாங்கித்தரப்பட்டதும்!.

(அவளுக்கு மட்டும் என்னவாம்? ஒரு அதிர்ஷ்டப் போட்டியில் அவளுக்கும் அதே போன்ற ஒரு கைத்தொலைபேசி கிடைத்ததும் துள்ளினாள்!. யாருடனும் அவ்வளவாக பேசி பழகிராத அவளுக்கு இது பெரும் துணையாக இருந்தது. வீட்டு வேலைகள் செய்த பின் மீதி வேளையெல்லாம் இந்த கைத்தொலைபேசி தான் வாழ்க்கைத்துணை!!. காலநேரம் தெரியாமல் நகர்ந்து கொண்டிருந்தது)

அவனுக்கோ கடந்த இரண்டு வருடங்களாக தொலைக்காட்சியில், சினிமாவில், பொது இடங்களில் காதலர்கள் கட்டித்தழுவி, உரசிக்கொண்டு, முத்தமிட்டுக் கொள்வதையெல்லாம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து…. நொந்து போன அவனுக்கு -.இப்போது இந்த கைத்தொலைபேசி மூலம் பற்பல – பலான பலான – இணையவழி ஆபாச படங்களைப் பார்த்ததில் கொஞ்சம் கெட்ட எண்ணங்கள் தலைதூக்க ஆரம்பித்தது; காதல் செய்யத் தூண்டியது. புதிய நண்பர்களை இணையம் வழியாக தேடி, நேரடி அறிமுகம் ஏதுமின்றி…., யாரிடம் பரிமாறுகிறோம் என்று கூட தெரியாமல் பேசலானான் (chat). அப்பாவும் சகோதர சகோதரிகள் இல்லாமல் அம்மாவிடம் மட்டும் தனிமையிலே வாழ்ந்துகொண்டிருந்தவனுக்கு இந்த இணைய வழி புது நண்பர்கள் அவனுக்கு ஒருவித கிளுகிளுப்பை ஏற்படுத்தியது!

“எனக்கொரு காதலி வேண்டுமடா….எனக்கொரு காதலி வேண்டுமடி….” என்று பேசிப் பாடியதில், ஒரு காதலி இணையத்தில் அகப்பட்டாள். ஆனால் இருவரும் பெயர்களை பரிமாறிக்கொள்ளாமல், என்ன வயது எங்கே வாழ்கிறோம் என்பதையும் மூடிமறைத்து கிளுகிளுப்பான விஷயங்களை மட்டும் பேச முற்பட்டனர்.

(அவளுக்கும் இதே போல் கடந்த இரண்டு வருடங்களாக தொலைக்காட்சியில், சினிமாவில், பொது இடங்களில் காதலர்கள் கட்டித்தழுவி, உரசிக்கொண்டு, முத்தமிட்டுக் கொள்வதையெல்லாம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து….. நொந்து போன அவளுக்கு -.இப்போது இந்த கைத்தொலைபேசி மூலம் பற்பல – பலான பலான – இணையவழி ஆபாச படங்களைப் பார்த்ததில் கொஞ்சம் கெட்ட எண்ணங்கள் தலைதூக்க ஆரம்பித்தது; காதல் செய்யத் தூண்டியது. புதிய நண்பர்களை இணையம் வழியாக தேடி, நேரடி அறிமுகம் ஏதுமின்றி……, யாரிடம் பரிமாறுகிறோம் என்று கூட தெரியாமல் பேசலானாள். தனிமையிலே வாழ்ந்துகொண்டிருந்தவளுக்கு இந்த இணைய வழி புது நண்பர்கள் ஒருவித கிளுகிளுப்பை ஏற்படுத்தியது!

“எனக்கொரு காதலன் வேண்டுமடா…..” என்று பேசிப் பாடியதில், இணையத்தில் ஒரு காதலன் அகப்பட்டான். ஆனால் இருவரும் பெயர்களை பரிமாறிக்கொள்ளாமல், என்ன வயது எங்கே வாழ்கிறோம் என்பதையும் மூடிமறைத்து கிளுகிளுப்பான விஷயங்களை மட்டும் பேச முற்பட்டனர்)

“தகித்துக் கொண்டிருக்கும் என் உணர்வுகளை அடக்க அவள் வருவாளா?… அவள் வருவாளா?… என்னை குளிர்விக்க நீ வருவாயா??”; என அவன் பாடினான். “இனி ஏன் தயக்கம்?” என்று கேட்டான்

(கிட்டத்தட்ட அதே போன்ற உணர்வுகளால் தாக்கப்பட்டு, ‘இனி என் காம வெறியை அடக்கிக்கொள்ள முடியாதா?’ என்று ஏங்கி தவித்தவளுக்கு அவன் பாட்டு செமையாக தாக்கியது!!

“நீயும் தகித்துக் கொண்டிருக்கிறாய்….நானும் தகித்துக் கொண்டிருக்கிறேன்…. நாம் இணைந்தால் குளிர்ச்சி எங்கு கிடைக்கும்?” என்று கேட்டாள்)

“பரவாயில்லை….வா…எரிமலையாய் வெடித்து வானில் பறக்கலாம்… வா…. வருவாயா?…எங்கே சந்திக்கலாம்?”

(“எரிமலை வெடித்து வானில் பறக்க வருகிறேன் …நீ எங்கே வாழ்கிறாய்? நான் சென்னையில் இருக்கிறேன்”)

“அட…நானும் சென்னை தான்!!!…. எங்கே எப்போது சந்திக்கலாம்?”

(“நாளை மாலை ஐந்து மணிக்கு மெரீனா பீச்சில் சந்திப்போம்”)

அவன் சொன்னபடியே அவள் அங்கு சென்றாள். அவன் சொன்ன அந்த வண்ண உடையை யார் அணிந்து இருக்கிறான் என்று தேடி அவனை கண்டதும்…… அவனை நோக்கி நடந்தாள் அவள்.

எத்தனையோ முறை எத்தனையோ பெண்களை மானசீகமாக காதலித்து அனுபவித்தவனுக்கு இது தான் காதலியை நேரில் சந்திக்கப் போகும் முதல் அனுபவம்….மனம் திக்திக்கென்று அடித்துக்கொள்ள அவளை பார்க்க ஏக்கத்துடன் காத்திருந்தான் அவன்……”அவள் எப்படி இருப்பாள்? எங்கே அவள்?…ஏன் இன்னும் வரவில்லை?…..அவள் வருவாளா?”

அவளுக்கும் மனம் திக்திக்கென்று அடித்துக்கொள்ள…. அவனை பார்க்க ஏக்கத்துடன் நடந்தாள் ……”அவன் எப்படி இருப்பான்?” பின்புறமாக அவனை நோக்கி நடந்து நெருங்கும் போது…..முதுகை காட்டி அமர்ந்திருந்த அவனை நெருங்குகையில்….அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது!……பயத்தில் உடல் நடுங்க அப்படியே நின்றாள்…….’அது….அது….என் மகனாயிற்றே?!!’

திருமணமாகி மகன் பிறந்து வளர்ந்து….. இரண்டு வருடங்களுக்கு முன் பு கணவன் இறந்து போக…….இப்பொழுது பதின்ம வயதில் உள்ள தன் மகனையே இணையத்தில் காதலித்தோமா?! என்று வெட்கித் தலை குனிந்தாள்.

குற்ற உணர்வுகள் பூகம்பமாய்……..எரிமலையாய் அவளை தாக்க…..அவன் தன்னை பார்க்கும் முன் நடையை கட்டுவோம் என்று திரும்பி நடந்தாள் விறுவிவிறுவென்று!!

அவனோ….. “வருவாளா?……அவள் வருவாளா?” என்று மனதில் பாடிக்கொண்டே இருந்தான்….நேரம் செல்லச்செல்ல வெறுத்து போய் அவளை இணையத்தில் அழைத்தபோது….அவளிடமிருந்து பதிலே வரவில்லை.

இரண்டு நாட்களுக்குப்பிறகு ஒரு பதில் வந்தது….”காதல் என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்ட ஒரு உணர்வு என்று எவ்வளவு தவறாக பாதை வகுத்து வருகிறது இந்த நவநாகரீக உலகம்??”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *