ரயில் நிலைய பெஞ்சு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 10,930 
 
 

மிகவும் சுறுசுறுப்பாக அந்த ரயில் ஸ்டேஷனில் இரவு நெருங்கும் நேரத்து அந்த பெஞ்சில் அவளும் அவனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே நடமாடும் மக்களின் சுறுசுறுப்பு இவர்களிடம் இல்லை!

எதோ ஒரு சலனம்!

அவர்களின் இரண்டு “காரியான்கள்” கூட அவர்களின் கை இறுக்கத்தினால் தடுமாறிக் கொண்டிருந்தன !

சலனமும் படபடப்பும் அவனை விட அவளுக்கு நிறைய தெரிந்தது!

அவள் செல்போனிலிருந்து “எனக்கு பயமா இருக்கு! மனசு சரியில்லை! தடுமாறுகிறது!” என்று அவனுக்கு அனுப்பினாள்!

“பக்கத்தில் இருந்தே மெசேஜ் கொடுக்கிறாயே! என்ன ஆச்சு உனக்கு!”

“இப்படி சொன்னா என் கான்பிடன்சும் குறையும்! தைரியமா இரு!” என்றான்

அவள் சிறிது நேரம் அவனைப் பார்த்தாள்! தன்னுடைய போனைப் பார்த்தாள்! எதிரே நடமாடும் பல மனித உருவங்களை பார்த்தாள்!

பிறகு சற்று கண்ணை மூடிக்கொண்டு மனதைத் தேடினாள்!

தேடவில்லை! தோண்டினாள்! ஆனால் நேற்றுவரை இல்லாத இன்று இப்பொழுது இந்த சலனம் ஏன்!

பிரிவு என்ற இடைவெளி தெரியாது, சுயநலமற்ற உள்ளங்கள் நேற்று வரை இவளையும் இவள் தேவைகளையும் அரவணைத்து பாசப் பிணைப்பு நிறைந்த மனித உறவுகள்!!

அவள் மனதில் மெள்ள நடமாடியது!

இன்னும் சற்று நேரத்தில் வர போகும் ரயிலினால் இடைவெளி நெடுந்தூரம் சென்று விடும்! நாளை இவளை தேடும்போது பரிதவித்துப் போகும்!

ஒட்டிய உறவுகள் மறந்து காலமும் பருவமும் தேடிய புது உறவு!

எதையும் மறந்து எல்லாம் இவன் ஒருவனே என்ற மயக்கும் மங்காத இனிய உணர்வு! உடலும் உணர்வுகளும் இவனுக்கென தனி உலகை இவள் தேர்வு செய்து ஆசைகளோடு நிறைவாக வேறெதுவும் நினைவில் வராது நெடு நாள் தீராத கனவுகள்!

அந்த தனி உலகத்தின் ஆரம்பம்தான் இந்த ரயில் நிலைய பெஞ்சு!

இதுவரை காணாத, உணராத அன்புப் பிணைப்பும் ஆர்வமும் அவளை மயக்கி, இனி உள்ள எதிர் காலம், வாழ்க்கை, அதன் ஏற்ற தாழ்வு!

இன்ப துன்பம், எல்லாமே இவர்களின் நான்கு கைகளுக்குள் அடங்கி இவர்களோடு அந்த ரயிலில் பயணிக்க போகிறது!

உறுதுணை என்பது இவர்கள் மட்டும்தான்!

சுற்றம் சூழல், பந்தம் பாசம் என்ற நினைவெல்லாம் இந்த பெஞ்சில் உட்காரும்போதே மறைத்து விட்டது! மறந்து விட்டது!

ரயிலும் வந்தது!

கூட்டத்தில் நடுவில் ஓடி அவன் தங்கள் இருப்பிடத்திற்க்காக ரயிலில் ஏறினான்!

பின் திரும்பினால் அவள் இல்லை!

அருகில் இருந்த பெரியவர் அவனிடம் “என்ன தம்பி! ஏதாகிலும் முக்கியமானதை மறந்திட்டிங்களா?”

“ஆமாம் ஐயா!” என்று படபடக்கலானான்!

“பதட்டப் படாதீங்க! கிடைச்சிரும்” என்றார்.

அவன் செல்போன் சிணுங்கியது!

“மன்னித்துவிடு! வாழ்க்கையில் பயணமும் பாதையும் நாம் இருவர் மட்டும் எட்டி நடை போட முடியும் என்ற நம்பிக்கை உறுதி எனக்கு இல்லை! ஆனால் உன்மேல் உள்ள அன்பும் பாசமும் என் உள்ளம் உள்ளவரை மாறாது! மறக்காது! உன் சுற்றத்துடன் என் இல்லம் வந்து பேசி, என் கரம் பற்றி செல்! அன்புடன் காத்திருக்கிறேன்!”

ரயிலும் சென்று விட்டது! வெறிச்சோடிய பிளாட்பாரத்தில் மெதுவாக தன் பெட்டியை உருட்டிக் கொண்டு நடந்தான்!

சற்றே அவர்கள் உட்கார்ந்த அந்த பெஞ்சை பார்த்தான்!

ஆச்சர்யம்! இவர்களை போலவே ஒரு யுவனும் யுவதியும் அடுத்த ரயிலுக்காக அமர்ந்திருந்தனர்!

இவர்கள் என்ன செய்வார்கள்! தெரியவில்லை!

2 thoughts on “ரயில் நிலைய பெஞ்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *