வானம் இலவம் பஞ்சுக் கூட்டத்தால் நிறைந்து கிடந்தது. சுற்றிலும் ஆள் அரவமற்ற தனிமையின் சூழலை உணர்ந்தேன். மனம் ஒரு நிலையற்றுத் தாவித்தாவி அலைந்தது. ஏனோ என் நினைவுகள் எங்க ஊர் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. கொடியில் காயப்போட்ட ஆச்சியின் சேலையைப்போல் பரவைக்கடல் பரந்து விரிந்து உறக்கமற்று என்னைப்போல் கிடந்தது.
சிந்தையில் ஏதேதோ நினைவுகள் வந்து மனதை அலைக்களித்தது. கடந்துவிட்ட என் வாழ்க்கையில் வந்துபோன உறவுகளின் நினைவுகள் ஏக்கத்தைச் சுமந்தும், ஒருசில வலிகளைச் சுமந்தும் இதயத்தை வருடிச் சென்றன. அந்த நினைவுகளில் நட்புக்கு முதலிடம் இருந்தது. காதலுக்கும் அதில் இடம் இருந்தது. என் காதல் ஒருதலைக் காதலானதால் மனதுக்குள் புதைந்தே கிடந்தது. தமிழனின் வாழ்வை புரட்டிப்போட்ட ஈழப்போர், என் வாழ்க்கையின் திசையையும் மாற்றியது. நெருக்கடியான நேரத்தில் என் கூடவே இருந்த நண்பன் ‘எமில்’ என் நினைவுக் கண்ணில் வந்து வட்டமிட்டான்.
என் நண்பன் எமிலுக்கும், மேரிக்கும் இடையில் காதல் தொடங்கிய காலகட்டம். முதலில் காதலைச் சொன்னது மேரிதான். ஆனால் எமில் அதை உடனும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மறுப்புக்குக் காரணம் இருந்தது. சின்ன வயதிலிருந்தே தன்னை எடுத்துவளர்த்த வீட்டிற்கு மருமகனாகப் போவது அவனுக்கு உறுத்தலாக இருந்தது. ஆனால், மேரி தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியால் அவனைத் தன் வழிக்கே கொண்டு வந்துவிட்டாள். அவளுடைய விடாப்பிடியான அன்பு அவனை ஆட்கொண்டது. எமில் காதலை ஏற்றுக்கொண்டதிலிருந்தே மேரிக்கு அவன்மேலிருந்த பிரியம் முன்னைவிட பலமடங்காகியது.
மேரியின் அப்பா சூசையப்பர் நல்ல உயரமானவர். சிவலையாக இருப்பார். அவருடைய முகம் மேலிருந்து கீழாக ஒடுங்கி ஏசுவின் முகம் போல் இருக்கும் .மேரியின் அம்மாவைக் காதலித்தே திருமணம் செய்தவர். சாதுவானவர், கபடமற்றவர் என்று ஊரில் பலர் அவரைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள். அவர் கதைக்கும் பொழுது அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். மனைவி, பிள்ளைகள் மீது தீராத அன்பு கொண்டவர். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கடையொன்றில் வேலை செய்கிறார். அவரது மீசையைப் பார்த்து “அப்பா உங்கட மீசை பாரதியின் மீசை போல இருக்கிறது” என்று கிண்டல் செய்வாள் மேரி.
சூசையப்பர் தம்பதிகள் திருமணம் செய்து மூன்று வருடங்கள்வரை பிள்ளைப் பலன் கிடைக்கவில்லை. பிள்ளையே இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில் ஒரு பிள்ளையை தத்தெடுக்க முடிவு செய்தார்கள். உடன் பிறந்த தங்கையிடம் தனது எண்ணத்தை வெளியிட்டார் சூசையப்பர். முதலில் தயங்கத்தான் செய்தார்கள். அவர்களுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்தார்கள். இளையவன்தான் எமில். சின்னவனாக எமில் இருந்த நிலையில் அவனையே வளர்க்கும்படி அண்ணன் குடும்பத்துக்குக் கொடுத்தாள் தங்கை. எமில் வீடு வந்த ராசியோ என்னவோ, அடுத்தடுத்த வருடங்களில் சூசையப்பர் குடும்பத்தில் மழலைக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. முதலில் மேரியின் அண்ணன் பிறந்தான். அடுத்து மேரி பிறந்தாள். கூடவே ஒரு தம்பி. மேரியின் பெற்றோர் தங்கள் சொந்தப் பிள்ளையைப் போலவே எமிலையும் வளர்த்தார்கள். இளமைப் பருவம் வரை அவர்களோடு வளர்த்த எமில், ஒரு குறிப்பிட்ட வயதின் பின் தங்களுடைய வீட்டிற்கே திரும்பி வந்து விட்டான். அவன் தங்களோடு தொடர்ந்து இருப்பான் என்றுதான் சூசையப்பர் குடும்பம் நினைத்திருந்தது. ஆனால் அவன் தாய்வீட்டுக்குத் திரும்பியது எல்லோருக்கும் வருத்தமாக இருந்தது. ஆனாலும் வற்புறுத்தவில்லை, அவன் எண்ணப்படியே விட்டுவிட்டார்கள். தாய்வீட்டுக்கு எமில் திரும்பிவிட்டாலும் அவ்வப்போது மேரி வீட்டிற்கு வந்துபோகவே செய்தான். சில வேளையில் அவர்களுடைய வீட்டில் தங்குவதும் உண்டு.
மேரியின் குடும்பம் கடவுள் பக்தி அதிகமுள்ளவர்கள். ஆகக்குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு வேளையாவது செபமாலை சொல்லிக் கொள்வார்கள். இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவி செய்கிற பழக்கமுடையவர்கள். இயக்கப் பொடியன்கள் அவர்களுடைய வீட்டிற்கு வந்து போவார்கள். வருகிறவர்களிடம் அன்பாகக் கதைத்து அவர்களுக்கு வேண்டிய உணவும் கொடுத்து வழியனுப்புவார்கள். மேரி அவர்களை நாட்டிற்காகப் போராடும் போராளிகள் என்று உயர் நிலையில் வைத்திருந்தாள்.
மேரியின் அம்மாவின் சகோதரர்கள் மூவர் கனடாவில் வசிக்கிறார்கள். மேரியின் அண்ணனையும், தம்பியையும் கனடாவிற்குக் காசு கட்டி எடுத்தது அவர்கள்தான். குடும்பம் ஒரு நடுத்தரமானது ஆனால் அவர்களுடைய வாழ்க்கை மிக எளிமையானது. வெளிநாட்டுக்கார குடும்பம் என்று சொல்ல முடியாதளவுக்கு அவர்களுடைய வாழ்க்கை இருக்கும்.
எமில் எனக்குத் தற்செயலாகவே பழக்கமானான். நான் அப்போது யாழ்ப்பாணத்திலுள்ள ரீயுசன் சென்ரறில் எ.எல். கலைப் பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன்.அவன் ஒருநாள் ரீயுசனுக்கு வந்து என்னுடைய மேசையில் எனக்குப் பக்கத்திலேயே அமர்ந்தான். பாடம் தொடங்கி ஐந்து நிமிடமிருக்கும். பொருளியல் ஆசிரியர் கரும்பலகையில் விளங்கப்படுத்திய பின், பாடத்தை பற்றி அவர் குறிப்பு சொல்ல நாங்கள் எழுதினோம். நான் எழுதிக்கொண்டிருந்ததை எமில் அவதானித்திருப்பான் போலும், இடைவேளை விடும்போது “உன்னுடைய கையெழுத்து அழகாக இருக்கு…!” என்றான். நான் “ அப்படியா” என்று புன்னகைத்தேன். வெளியில் போகும் போது கதைத்துக் கொண்டே போனோம். ஓரே நாளில் அவன் எனக்கு நல்ல நண்பனான்.
இந்தச் சந்திப்பின் பின் தொடர்ந்து ஒன்றாகவே திரியத் தொடங்கினோம். யாழ்ப்பாணத்திலுள்ள வெவ்வேறு கரையோர பிரதேசத்தைச் சேர்ந்த கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பாசையூர் அந்தோனியார் கோயிலுக்குச் சென்று வந்தோம். அவ்வப்போது மேரியின் வீட்டிற்கும் என்னைக் கூட்டிச் செல்வான். சந்திக்கும் சமயங்களில்லாம் என்னோடு அன்பாகவே மேரி கதைப்பாள் .
மேரியின் முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு படர்ந்திருக்கும். அவள் என்னுடைய படிப்பைப் பற்றியும்,எங்களுடைய குடும்ப நிலைமையைப் பற்றியும் கேட்டு அறிந்து கொள்வாள். கதைத்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி மெல்லிய புன்சிரிப்பு உதிர்ந்தபடி இருக்கும். அவள் மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தும் போது விளம்பரத்திற்கு வரும் பெண்களின் பற்கள் போல் பளிச்சென்று இருக்கும். அவளிடமிருந்து ஒரு நாளும் வெடிச்சிரிப்பு வெளிப்பட்டது கிடையாது. ஒரு நாள் அவளிடமே அதைப்பற்றிக் கேட்டதற்கு அவள் சொன்னாள் “என்னுடைய இயல்பே இப்படித்தான். எமில் கூட மட்டும்தான் சின்ன வயதிலிருந்தே அதிகம் கதைப்பேன். மற்றபடி மிக அமைதியாக இருப்பதே எனக்கு விருப்பம்” என்று சொன்னாள். நான் சில வேளையில் அவளை நினைத்து பெருமைப் படுவேன். அதே வேளை இவளைப் போல் ஒரு பெண் எனக்குக் கிடைக்க மாட்டாளா என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். ஒரு நாள் நாங்கள் மூவரும் கதைத்துக் கொண்டு நின்ற போது அதைப் பகிடியாக நான் சொல்ல அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
எமில் என்னோடு ரீயூசனுக்கு வந்துகொண்டிருந்த நிலையில்தான், இயக்கத்துடனான தொடர்பு அவனுக்கு ஏற்பட்டது. நெடுநாட்களாக அதை எனக்குச் சொல்லமலே வைத்திருந்தான். திடீரென இரண்டு நாட்கள் அவன் வகுப்புக்கு வரவில்லை. காரணத்தை அறிய மேரியைத் தேடி அவள் வீட்டுக்கே முதலில் சென்றேன். மேரியின் அப்பா சூசையப்பர்தான் முதலில் எதிர்பட்டார். அவர் முகத்தில் என்றுமில்லாத கடுங்கோபம் தெரிந்தது. வளக்கத்திற்கு மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் பார்த்தபடி இருந்தார்கள். எமில் அங்கு இருப்பதாகவே தெரியவில்லை. அவனுக்குத்தான் ஏதோ நடந்து விட்டதாக உணர்ந்தேன்.
இளைஞர்கள் எவரையாவது திடீரெனக் காணவில்லை யென்றால், ஒன்றில் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் இயக்கங்களால் சுடப்பட்டிருக்கலாம், அல்லது அவர்கள் பிடித்துச் சென்றிருக்கலாம். அதுவும் இல்லையேல் புலிகள் இயக்கத்தில் போய் சேர்ந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு வரும் நிலையே காணப்பட்டது. கொடியவர்களிடம் அகப்பட்டு மடிவதைவிட, உரிமைக்காக போராடுபவர்களோடு சேரலாம் என்ற மனநிலையில்தான் இளைஞர்கள் பலர் அப்போது இருந்தார்கள். எமிலுக்கு என் நடந்திருக்கும் என்று பலமான யோசனையுடன் நான் நின்றேன். கோபத்தோடு நின்ற மேரியின் தந்தையோடு எதுவும் பேசாமல் மேரியின் அம்மாவின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அவளுடைய முகத்தில் சோகம் வடிந்து கிடந்தது .
“அவன் இயக்கத்துக்கல்லோ போய்யிற்றான். போறது பற்றி உன்னோட ஏதாவது கதைத்தவனோ தம்பி…?” என்றாள்.
“இல்லையுங்க..மேரிக்கு ஏதாவது …? என்றேன் தயங்கியபடி.
“அவளுக்கும் ஒன்றும் தெரியாது. அவள் அழுதபடியே இருக்கிறாள்!” என்றாள் தாய். மேரியை திரும்பிப் பார்த்தேன். அதிகம் பேசும் நிலையில் அவள் இல்லை என்பதை உணர்ந்தேன். அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். அதன் பின் மேரியின் வீட்டுக்குப் போவதை தவிர்த்திருந்தேன்.
ஒரு மாதம் கழிந்த நிலையில் எமில் வீட்டிற்கு வந்து விட்டான் என்ற தகவல் கிடைத்தது. ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்ற கோபம் இருந்தாலும் சந்திக்கச் சென்றேன். இயக்கத்தை விட்டு விலகிவிட்டதாக மட்டும் எனக்கு சொன்னான். அது தவிர, நானும் எதுவும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை.
இயக்கத்திலிந்து வந்த நாட்களிலிருந்து எமில் கவலையோடுதான் திரிந்தான். படிப்பு பாதியில் முறிந்ததை நினைத்து தனக்குள் கவலைப்பட்டுக் கொள்வான், அவ்வப்போது கூலி வேலைகளுக்கு போய் வந்தான்.
எமிலுக்கு குடி, சிகரட் என்று எந்த பழக்கமும் கிடையாது. எனக்கு அவை எல்லாமே இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கிற காலத்தில் தொடங்கியது. அதிலிருந்து என்னால் விடுபடமுடியாமல் போய் விட்டது. குடிப்பதை குறைந்தாலும் சிகரட் பிடிப்பதை என்னால் விடமுடியாமல் இருந்தது. இந்தப் பழக்கம் என்னில் ஒட்டியதை இப்போ நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும். நண்பர்களின் தூண்டுதலால் ஒருமுறை சிகரட்டை வாயில் வைத்து ஊதியபோது ஏற்பட்ட அனுபவம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு இழுவையிலேயே புகை தலைக்கு ஏறி, தொண்டை அடைத்து, இருமித் தவித்ததை நண்பர்கள் கைகொட்டி ரசித்ததை ஒருபோதும் மறக்க முடியாது. அதுவே பழக்கப்பட்டதால், விடமுடியவில்லை என்பதுதான் எனது பலயீனம்.
பெண் தொடர்பு என்பது, என்னுடைய பள்ளிப்படிப்பு காலத்தில் எனக்குள் ஏற்பபட்ட ஒரு ஒருதலைக் காதல். என்னுடைய தங்கச்சியின் சிநேகிதியும், என்னுடைய வகுப்பு மாணவியுமான கிரிஜா மீது எனக்குக் காதல் இருந்தது. அவளுக்கும் நான் விரும்பித் திரிவது தெரியும்.அவளோடு முகம் கொடுத்து ஒரு போதும் நான் கதைத்தில்லை. அவளைக் கண்டாலே ஒருவித படபடப்பு என்னுள் இறங்கிவிடும். கதைப்பதற்கு விருப்பம் இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் என்னை தடுத்துவிடும். ஆயினும் அவள் பின்னால் சுற்றித் திரிவது ஒரு வகையான இன்பத்தைத் தருவதுண்டு. என்னுடைய தங்கச்சிக்கு என் எண்ணமும் நடவடிக்கையும் தெரிந்தாலும் எதையும் அவள் காட்டிக்கொள்ளாமலே இருந்து வந்தாள்.
என்னுடைய தங்கச்சியை சந்திப்பதற்காக அவ்வப்போது கிரிஜா வீட்டிற்கு வந்து போவாள். அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் உற்றுக் கவனிப்பேன். அது அவளுக்கும் தெரியும். ஆனால் அவள் எந்த ஒரு நிலையிலும் தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்தவில்லை. அது அவளுடைய இயல்பாக இருக்கலாம் என்று விட்டு விட்டேன். தங்கை மூலம் அவள் எண்ணத்தை அறியவும் நான் விரும்பவில்லை.
கிரிஜா தனிமையில் போவதை காணநேர்ந்தால், அவளுடன் ஆவலோடு ஏதும் பேச முற்படுவேன். அவளோ, எதையாவது ஏனோ தானோ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போய் விடுவாள். மனம் வாடவே செய்யும். இப்படித்தான் ஒரு நாள் பத்தாம் வகுப்பு இறுதியாண்டு பரீட்சை நடந்த நேரம். பரீட்சை எழுத நான் போய்க்கொண்டிருந்தபோது, கிரிஜாவும் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தாள். நான் எட்டி நடந்து அவளை நெருங்கினேன். அன்று எப்படியும் என் விருப்பத்தை தெரிவித்துவிடுவது என்று முடிவு செய்திருந்தேன். சடுதியாக அவளை முன்புறமாக மறித்து, நேரடியாகவே என்னுடைய விருப்பத்தைச் சொன்னேன். அப்போது அவள் முகத்தில் எந்த மாறுதலையும் என்னால் காண முடியவில்லை. வழமை போலவே எதுவுமே பேசாமல் நகர்ந்து விட்டாள்.
அன்றிரவே என்னுடைய அப்பா தடி முறிய முறிய என்னை அடித்தபோதுதான் என்னைப்பற்றிய அவளது எண்ணம் வெளிப்பட்டது. உடம்பில் ஏற்பட்ட வலியை விட மனதின் வலி அதிகாமாக இருந்தது. மறுநாள் அது இன்னும் அதிகமாகியது. காலையில் பரீட்சை எழுதுவதற்காக நடந்து போய்க்கொண்டிருந்தேன். எதிரே சையிக்கிளில் வந்து கொண்டிருந்த கிரிஜாவின் அப்பா சட்டென அதை விட்டு இறங்கி, என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். நான் மனமொடிந்த நிலையில் பரீட்சை எழுதப் போனேன். பரீட்சை மண்டபத்தில் அவளைத் திரும்பிப் பார்க்கக்கூட மனமற்றிருந்தேன். அவமான உணர்வு என்னை ஆட்கொண்டது.
விசயம் தெரிந்து என் தங்கச்சி ஆறுதல் வார்த்தைகளை சொல்லி என்னை அமைதியக்கினாள். அன்றுதான் என் கடைசிப் பரீட்சையும் முடிவடைந்தது. அதன் பின் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அவளை எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளைச் சந்திப்பதோ, வஞ்சிப்பதோ அல்லது அவள் வேதனைப்படும்படி நடந்து கொள்வதோ இல்லை என்று முடிவு செய்தேன். அதன்படியே நடந்து கொள்ளவும் செய்தேன். அவளிடமிருந்து மெல்ல மெல்ல ஒதுங்கிக் கொள்ளும் முடிவோடு அன்றிரவு என் நண்பர்களுடன் சேர்ந்து நன்றாகக் குடித்து இரவைக் கழித்தேன். அன்றிலிருந்து மதுவுக்கு,சிகரட்பிடிப்பதற்கு அடிமையாகி விட்டேன். என்னுடைய குடும்பத்திற்கு என்னுடய செயல்பாடுகள் தெரிந்திருந்தும், அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தபோது மனம் உறுத்தவே செய்தது.
இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் தொடங்கியபோது அகதியாய் குடும்பத்தோடு ஊரூராக அலைந்து, யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ஊர் திரும்பியிருந்தோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சிகரட், மதுபானத்தை நிறுத்தி விட்டிருந்தேன்;. அதாவது, என்னை அறியாமலேயே அவை என்னிடமிருந்து விலகி விட்டன என்றுதான் சொல்லவேண்டும்.
போரினால் சீரழிந்த எங்கள் வாழ்க்கையில் நாயா உழைத்தாலும், ஓடா தேய்ந்தாலும் எதுவும் மிஞ்சியதாக இல்லை. எங்க குடும்பத்தின் வயிறுமட்டும் ஓரளவு நிரம்பியது. அவ்வளவுதான்…! பெரிதாக தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலை. கிடைக்கும் சிறிய சிறிய தொழில்களை மறுக்காமல் செய்து வந்தேன். அந்த நிலையில்தான், வேறு வேலை கிடைக்காத ஒரு நாளில் விறகு விற்கச் சென்றேன். பல மைல் தூரம் பயணிக்கவேண்டும். விறகை சயிக்கிளில் வைத்துக் கட்டி ஊருக்குள் கொண்டு சென்று கொடுக்கவேண்டும். அப்படியன ஒரு நாளில் காற்றுக்கு எதிராக விறகுச் சுமையோடு சயிக்கிள் ஓடிக் காளைத்துப் போய் வீட்டிற்கு வந்திருந்தேன்.சற்று ஓய்வெடுக்கலாம் என்று கால்களை நீட்டி உட்காந்தேன். என் உடலும் மனமும் சோர்ந்திருந்தது. அடித்துப் போட்ட உணர்வில், களைப்போடு வெறும் நிலத்தில் ஒரு பாயை விரித்து அதில் சுருண்டு படுத்தேன். தூக்கம் வரமறுத்தது.
இரண்டு வருடத்திற்கு முன் யாழ்ப்பாணக் கோட்டைக்குள்ளிருந்து வீசப்பட்ட செல்லுக்கு பலியாகி களங்கண்ணி வலைக்குள் ஊதிப் பெருத்துக் கிடந்த யோசேப்பு ஒரு கணம் நினைவுக்கு வந்தான். கடலின் மேற்பரப்பில் மீன்கள் கூட்டமாக அணி வகுத்துச் சென்றன. கயல் மீன் ஒன்று வானத்தை நோக்கிப் பாய்ந்து மீண்டும் கடலுக்குள் விழுந்தது. குளத்தின் மேற்பரப்பில் கல்லை வீசி எறியும் போது அந்தக் கல் நீரின் மேல் தாவித் தாவி பாய்ந்து பின் குளத்திற்குள்ளேயே மூழ்கிப் போவது போல் சில மீன்கள் கடலில் தாவிக் குதித்தன.
பின்னிரவு தாண்டியபோது பசித்தது. எழுந்து சமையலறைக்குச் சென்றேன். இருட்டுக்குள் இரை தேடும் பூனையைப் போல் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று தேடினேன். அம்மா பகல் வாங்கி வந்த றோஸ் பாண் பாதி பிய்த்தபடி ஒரு காகிதத்தால் முடிக்கிடந்தது. அநேகமாக தங்கச்சி பாதியை சாப்பிட்டிருப்பாள். மீதியை எனக்கு வைக்கும்படி அம்மா சொல்லியிருக்கக் கூடும். வெறும் பாணாகவே அதைச் சாப்பிட்டு முடித்தேன். ஒரு கண்ணாடிக் குவளையில் தண்ணீரை எடுத்து விறு விறு என்று குடித்து முடித்தபின், மீண்டும் வந்து பாயில் விழுந்தேன். வீட்டில் எல்லோரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். சத்தம் சந்தடி இல்லாமல் இரவும் உறங்கிக் கொண்டிருந்தது.
தூக்கம் என்னை அரவணைக்க முயன்றபோது, நினைவா கனவா என்று சொல்லமுடியாத சிந்தனைக் கலவை என்னுள் புகுந்துகொள்வதாக உணர்ந்தேன். உடல் எங்கும் பயத்தின் உச்சம் படர ஆரம்பித்திருந்தது. இந்தப் பயம் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்ததிலிருந்துதான் எனக்கு தொடங்கியது என்பது என் நினைவில் இருக்கிறது. இந்திய ஆமி அமைதிகாக்க வந்த போது என் ஆழ்மனதில் உருவான பதற்றம், அவர்கள் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தபோது உச்சத்தை அடைந்தது. தூக்கக் கலக்கத்தில் இதுபோன்ற தவிப்பான எண்ணக் கோலங்கள் என் மனதை ஆக்கிரமிப்பதுண்டு. அதன்போது திடுக்குற்று நான் எழுந்து அமர்ந்திருப்பதும் உண்டு.
அன்றும் அப்படித்தான், உறக்கத்தின் மயக்கத்தில் நான் இருந்தேன். நாய்கள் கூட்டமாக குரைத்துக் கொண்டும், ஊளையிட்டபடி ஊரின் உறக்கத்தை கலைத்துக்கொண்டிருந்தன . நள்ளிரவு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. வீதியில் நிற்கின்ற நாய்களின் நடவடிக்கையை உற்றுக் கவனித்தேன். காதைக் கூர்மைப் படுத்தி ஒலி வருகின்ற திசையை நோக்கினேன். நாய்கள் எதையோ விறான்டி விறான்டி சாப்பிடுவது போன்ற ஒலி கேட்டது. இயக்கப் பொடியள் யாரையாவது இந்தியன் ஆமி சுட்டுப் போட்டு, சாக்கில் கட்டி பின்னிரவு வேளையில் ஊர்க் கோடியில் போட்டிருக்கலாம். அதைத்தான் நாய்கள் விறாண்டிக் கொண்டிருக்கின்றனவோ என்று மனம் தவித்தது. பயத்தில் உடல் நடுங்கியது. வான் பரப்பை நோக்கி பார்வையைத் திருப்பினேன். முகத்திற்கு நேராகவே வானத்தில் சத்துருக்களின் கூத்தும் கும்மளமுமாய் அந்தரத்தில் தெரிந்தன. எல்லாப் பேய்களும் கறுப்பு உடையில் கண்களைப் பிதுக்கியபடி பார்ப்பதற்கே பயமாக இருந்தது. வேறு ஒரு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்மோ என்று ஒரு கணம் எண்ணத் தோன்றியது. வலது பக்கமாகத் திரும்பிப் பார்க்கிறேன். இறந்தவர்கள் ஒரே வரிசையில் வெள்ளை நீள அங்கியோடு வானத்து தேவதூதர்கள் போல் நின்றார்கள். போராளியான என்னுடைய மூத்த தங்கச்சியும் அந்த வரிசையில் நிற்கிறாளா என்று தேடினேன். அவள் யாருடனோ கதைத்துக்கொண்டு போவதைக் கண்டேன். அவன் யாராக இருக்கலாம் என்று யோசிப்பதற்குள், இராணுவச் சீருடை அணிந்த ஒரு சர்வ வல்லமை படைத்தவர் அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் எல்லோரும் என் பார்வையிலிருந்து மறைந்து போனார்கள். ஏன் இப்படியெல்லாம் எனக்கு நினைவுகள் வருகிறது என்று தூக்கக் கலக்கத்திலும் சிந்தனை வந்தது. பயத்தில் வியர்த்துக் கொட்டியது. உடல் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது. வெடி வைத்து என் உடல் தகர்த்தப்படுவது போன்ற உணர்வில் அச்சம் ஊடறுத்தது. கரிய இருள் என்னுள் படியத் தொடங்கியது. இலக்கற்று என் மனம் அழுந்து திரிகிறது. எனக்கு என்ன நேர்ந்திக்கலாம். இது கனவா அல்லது உண்மையில் நடக்கப் போவதைப் பற்றிய முன் நகர்வா…? என குழம்பிப் போயிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னை நானே அமைதிப் படுத்திக்கொண்டு அம்மா படுத்திருக்கும் இடம் நோக்கி நகர்ந்து சென்றேன். அம்மாவுக்கு பக்கமாக உறங்கினால் எந்தப் பயமும் வராது என்று நினைத்து அம்மாவின் அருகில் ஒதுங்கினேன். என் முனகல் சத்தம் கேட்டு அம்மா விழுத்துக்கெண்டாள். அரைகுறைத் தூக்கத்திலேயே என்னைப பார்த்தாள்.
“கனவு ஏதும் கண்டிருப்பாய் மோன…? பயப்படாதை, விடியட்டும் பார்த்துக் கொள்ளலாம்!” என்று சொல்லியபடி என் உடலை கையால் தொட்டுப் பார்த்தாள்.
“என்ன மோன இப்படி நெருப்பாக உடம்பு கொதிக்குது…!” என்றவள், என் நெற்றியில் குருசு அடையாளம் போட்டுவிட்டு என்னைத் தூங்கச் சொன்னாள். சிறிது நேரத்தில் என்னை அறியாமலே நான் தூங்கி விட்டேன்
வழமைக்கு மாறாக காலையில் தாமதமாகவே கண்விழித்தேன். வீட்டிற்குள் யாரமில்லை. தெருப்பக்கத்திலிருந்து பரபரப்பான குரல்கள் வருவது கேட்டது. படுக்கையை விட்டு எழுந்து வெளியில் வந்தேன். தெருவை அண்மித்தபோது என்னைக் கண்ட அம்மா, உரத்த குரல் எடுத்து கத்தியபடி ஓடிவந்தாள். ஏதோ விபரீதம் வீட்டில் நடந்து விட்டதாக உணர்ந்தேன். “ என்னம்மா நடந்தது…?” என்றபடி அவளை நெருங்கினேன். “உன்ர அண்ணன் வேலை முடிஞ்சு வரேக்க சயிக்கிள்ல வந்த இயக்கப் போடியள் சுட்டுட்டுப் போட்டாங்களாம்…?” நான் விக்கித்துப் போனேன். அம்மாவோடு சேர்ந்து நானும் அழுதேன்.
அண்ணனின் மரணச் சடங்குகள் முடிந்து ஒரு மாதம் கடந்தும், வீட்டிலேயே உறைந்து கிடந்தேன். மனம் ஆற மறுத்தது. வெளிக் காற்றுக்காக மனம் ஏங்கியது. மனதைத் தேற்றிக் கொண்டு, ஒரு பகல் பொழுதில் மோட்டார் சைக்கிளில் யாழ்நகர் சென்றேன். எமிலை சந்தித்து நீண்டகாலம் ஆகிவிட்டதால், அவனைச் சந்திக்கும் நோக்கோடு கஸ்தூரியார் வீதியால் வந்து கொண்டிருந்தேன். இராணுவ நடமாட்டம் இருந்ததால் வந்துகொண்டிருந்த வேகத்தை மெதுவாகக் குறைத்தேன். வலது பக்கமாக போட்டார் சக்கிளை திருப்ப முற்பட்டபோது, லிங்கம் உடுப்புக் கடைக்கும் மலாயன் கபேக்கும் முன்னால் காவலில் நின்ற இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் என்னைக் கையைக் காட்டி மறித்தார். மூன்று முழத்துக்கு ஒருவராக அவர்கள் வரிசையில் நின்றார்கள். வரிசையாக நடந்து வருவது அவர்களின் வழக்கம். சில வேளையில் வீதியின் காவலுக்காகவோ அல்லது நடந்து வந்த களைப்புக்காகவோ பாதை ஓரத்தில் நின்று விடுவார்கள்.
‘என்னுடைய கஷ்ட காலம் இந்த நேரத்தில இவங்கட்ட மாட்டுப்பட்டு விட்டேன்…!’ என்று நினைத்துக் கொண்டு மோட்டார் சயிக்கிளை றோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, என்னை அழைத்த ஆமிக்காரனை நோக்கிச் சென்றேன்.
“எங்க போரே”என்று இந்தியத் தமிழில் கேட்டான்.
“ நண்பர் வீட்டிற்கு போறேன்…!’ ” என்றேன்.
கையைக் காட்டி ஓரமாக உட்காராச் சொன்னான்.
“என்னதான்ரா உங்கட பிரச்சினை…?” என்று மனதுக்குள் சினந்து கொண்டே வெய்யிலுக்குள் குந்தியபடி உட்கார்ந்தேன்.
வெய்யில் கொழுத்தியது. கண்ணைக் கூசியபடி வீதியைப் வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். சிறிது நேரத்தின் பின் என்னைக் கை காட்டி அழைத்தார்கள். நான் அவர்கள் நின்ற இடத்திற்கு எழுந்து சென்றேன். கூப்பிட்ட ஆமிக்காரன் என்னைப் பார்த்து,
“பீடி இருக்க”என்றான்.
“பீடி , சிகரட் பழக்கம் இல்லை என்றேன் .என்னைப் போகச் சொல்லி தலை அசைத்து விட்டு அவர்கள் எல்லோரும் வீதியோரமாக நடக்கத் தொடங்கினார்கள். எதிர் திசையில் மோட்டார் சயிக்கிளை எடுப்பதற்காக திரும்பிய போது ஒருகணம் என் பார்வை தடுமாறி நின்றது. மேரி என்னை நோக்கி ஓடி வருவது தெரிந்தது. ஓடிவந்த வேகத்தில் அவளுக்கு மேல்மூச்சு வாங்கியது. மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள்,
“ ஆமிக்காரன் உன்னை வெய்யிலுக்குள்ள இருத்தி வைச்சிருக்கிறதை தூரத்திலேயே கண்டுட்டேன். எப்பிடியோ விட்டுட்டாங்கள் எண்டதும் ஓடோடி வந்தனான்!” என்றாள். எனக்கு சந்தோசமாக இருந்தது.
“அப்படியா…?” என்று சொல்லியபடி சுற்றிப் பார்த்துவிட்டு மேரியைப் பார்த்தேன்.
“எமில் எங்க” என்று கேட்டேன். அவள் உடனும் பதில் சொல்லவில்லை. அவள் கண்களில் கண்ணீர் பெருகுவதைக் கண்டேன். ஏதோ ஒரு பாதிப்பான சம்பவம் நடந்திருக்கிறது என நினைத்துக் கொண்டேன். அவளே சொல்லும்வரை காத்திருந்தேன். அழுகின்ற அவள் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. வேறு திசையில் பார்த்தபடி “அழாத.. அழாத…!” என்று கேட்டுக்கொண்டேன். அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டுடாள்.
“ காச்சல் எண்டு யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு காட்டப்போனவர். அந்தநேரம், திடீரெண்டு யாரோ வாகனத்தில் வந்து சுட்டுப்போட்டு போட்டாங்கள். முன்ன இயக்கத்தில இருந்ததை யாராவது சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியல்ல…!” சொல்லும்போதே மீண்டும் அவளிடம் கண்ணீர் கசிந்தது.
“நான் அவரை கனடாவிற்கு அனுப்புறதுக்குத்தான் எங்கட அண்ணன் கிட்ட கேட்டனான். அவர் சம்மதிச்ச பிறகு, இரண்டு தடவை கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போனனான். அவருக்கு வெளிநாடு போறதுக்கு ஒரு துளி கூட விருப்பமில்லை. ஆனாலும் வேற வழியில்லாமல் எனக்காவும், பிள்ளைக்காகவும் ஓமென்டவர். என்னிலும் பிள்ளையிலும் அவர் உயிரையே வைத்திருந்தவர். பாழாய்ப்போன எங்கட பலன், நீண்ட நாள் அவரோடை வாழக் கொடுத்து வைக்கல….அவரை அனியாயமா இழந்திட்டன்!” என்று சொல்லும்போதே மீண்டும் அவள் கண்கள் கலங்கின. என் பார்வை அவளை அனுதாபத்தோடு நோக்கியது. என் கண்களின் கலக்கத்தை கண்டதும் அவள் தன்னை திடப்படுத்திக் கொண்டாள். கண்ணீரை துடைத்தபடி நிமிர்ந்தவள், செயற்கையான ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டாள.
“அது சரி… நீ எப்பிடி இருக்கிறாய் கிறிஸ்ரி….? கன நாளாச்சு உன்னைக் கண்டு. உன்பாடு எப்பிடிப் போகுது..?” என்று என் முகத்தை உற்று நோக்கியபடி கேட்டாள்.
“ நானும் வெளிநாடு போறதுக்குத்தான் கொழும்புக்கு போய் வந்தனான். இன்னும் சரிவரல்ல. நான் ஒரு தடவை உங்கட வீட்டுக்கு வந்தனான். உங்கட அம்மாதான் சொன்னவ வெளிநாடு போறதுக்காக நீங்க கொழும்புக்கு போயிட்டீங்க எண்டு. நான் அதுக்குப் பிறகு உங்கட வீட்டுப் பக்கம் போகல. நீங்க வெளிநாடு போயிருப்பீங்க எண்டு நான் நினைச்சிட்டன். காலமும் எப்பிடியோ ஒடிப்போச்சு. திடீரேன ஒரு யோசனை வந்ததாலதான், உங்களைப் பற்றி உங்க வீட்டிலை விசாரிச்சிட்டுப் போகலாமெண்டு புறப்பட்ட வந்தனான்…!” என்று நான் சொல்ல, அவள் மெல்லிய தலை அசைவோடு புன்னகைத்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு வகையான சோகம் உள்ளோடியிருந்தது. அவளது சோகம் என்னையும் ஆக்கிரமித்தது. என் பார்வை அவளை அனுதாபத்தோடு ஊடுருவியது.
முகத்தின் முன் நீண்ட மூக்கின் மேல் நீலநிறக் கல் மூக்குத்தி உட்காந்திருந்தது. அவள் எளிமையாகவும் நேர்த்தியாகவும் உடுப்புகள் அணிந்திருந்தாள். கண்களில் கனிவான பார்வை தெறித்தது. ஒரு வகையான பதுமையும், கதைக்கும் போது அவளுடைய அம்மாவின் குரல் சாயலும் அப்படியே இருந்தது. தூரப்பார்வைக் குறைவு காரணமாக அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். வீதியால் போகின்ற சிலர் நாங்கள் இருவரும் கதைத்துக் கொண்டு நிற்பதை பார்த்துக் கொண்டு போனார்கள்.
எதிர்ப் பக்கமாக இருந்த புடவைக் கடையின் முன்பாக இந்திய இராணுவ றக்வண்டி ஒன்று நின்றது. அதைச் சுற்றி இந்திய இராணுவ வீரர்கள் ஐந்து அல்லது ஆறுபேர் துப்பாக்கியை சுமந்தபடி மிகச் அசாதரணமாக நின்றார்கள். வீதியால் போய் வருபவர்கள் யாரும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. புடவைக் கடைக்குள் நின்ற பெண்களில் சிலர் ‘எப்படா இவர்கள் போவார்கள்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு நின்றார்கள் .சிலர் அச்சத்தோடு நின்றிருந்தார்கள்.
உள்ளே நின்ற இராணுவத்தினர் திருப்பித் திருப்பி சில உடுப்புக்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒருவர் ஆங்கிலத்தில் சொல்ல மற்றவர் இந்தியத் தமிழில் மொழி பெயர்த்து சொன்னர்.10 அல்லது 15 நிமிடம் வரை அவர்கள் அவ்விடத்தில் நின்று விட்டு, வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள்.
இராணுவ வாகனம் மெதுவாக ஊர்ந்து எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்த போது மேரி சொன்னாள்;
”ராஜீவ் – ஜே ஆர் ஒப்பந்தந்தத்தோடு வந்தவங்க எல்லா அட்டூழியங்களும் செய்து போட்டாங்க. இன்னும் ஏன் இங்க நிற்கிறாங்க…!” எரிச்சலோடு கோபம் கொப்பளித்தது அவளிடம். நான் சிரித்துக் கொண்டே,
“ வெய்யிலுக்க என்னை இருத்தி விட்டதுக்கும் சேர்த்துத் தானே சொல்ற..?”
“ஒமோம்…அதுக்கும் சேர்த்து தான்.” என்று சொல்லிக் கொண்டு வெடித்துச் சிரித்தாள். அவன் சிரிப்பை ரசித்தபடி,
“ மலாயன் கபேயில் ஏதாவது குடிப்போமா” என்று நான் கேட்டேன்.
“கொஞ்சம் முதல்தான் தேத்தண்ணியும், வடையும் சாப்பிட்டனான்” என்றாள்.
“நானும் வீட்டிலேயிருந்து இறங்க முதல்தான் அம்மா தேத்தண்ணீ போட்டுத் தந்தவ, உனக்காகத்தான் கேட்டனான்” என்று நான் சொன்னபோது, அவள் முகத்தில் தெரிந்த சிரிப்ப என்னை சங்கடப்படுத்தியது.
“ என்ன சிரிக்காறே…?” அவள் முகத்தை உற்று நொக்கியபடி கேட்டேன.
“இல்லை… இன்னும் அம்மாதான் தேத்தண்ணி சாப்பாடு போட்டுத் தாறாவவோ…?” என்றாள் மீண்டும் புன்னகைத்தபடி.
“ ஓ…அதைச் சொல்லுறியா? இன்னும் இன்னொருத்தி கையால சாப்பிடக் கிடைக்கேல்லை…!” என்று நான் சொன்னபோது அவள் வாய்விட்டுச் சிரித்தாள். என் முகத்தில் அசடு வழிவதை நானே உணர்ந்தேன்.
“நீ முன்னமாதிரி இல்லை… இப்ப நல்லா கதைக்கிறாய்…!” என்று உரிமையோடு சொல்லிவிட்டு, ஆத்து மீறிவிட்டேனோ என்று அவளைப் பார்த்தேன். அதை கண்டுகொள்ளாமலே,
”ஓம் உண்மைதான். எங்கட அம்மாவும் இப்படித்தான் சொல்றவங்க… ஆண் துணையை இழந்த பெண்கள் நிலைமைக்கேற்ப மாறத்தான் வேணுமெண்டு. விதவையென்டு சொல்லிக்கொண்டு எங்கட உணர்வுகளையும், கனவுகளையும் அழிக்கக் கூடாதெண்டு சொல்லுவா. ஈழத்திற்ககான போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து எத்தினையோ ஆயிரம் விதவைகள் உருவாக்கப்பட்டிருக்கினம். அன்றாடம் வாழ்க்கையை கொண்டு செலுத்த முடியாமல் அவை படும் கஸ்ரம் சொல்லிலடங்காது. ஓரளவு வசதியும், வெளிநாட்டு உதவிகள் இருக்கிறதாலும் எங்கட பாடு பரவாயில்லை. எந்த வசதியும் இல்லாமல் வாழுகின்ற விதவைப் பெண்களால் என்னதான் செய்ய முடியும்? பாவம்தானே அவர்கள்…!” சொல்லும்போதே மேரியின் கண்களில் நீ முட்டலாயிற்று. அவள் தவிப்போடு சொல்லுவதைக் கேட்கையில் எனக்குள்ளும் அதன் தாக்கம் புகுந்துகொண்டது. அவளை உற்றுப்பார்ததுக் கொண்டே அவள் சொல்பவற்றுக்கு தலையாட்டினேன்.
விழத்துடிக்கும் கண்ணீர் துளியும், சிவந்துவிட்ட அவள் மூக்கு நுணியும் சுமந்து கொண்டிருக்கும் நீல நிற மூக்குத்தியும், அதன் மேல் உட்கார்ந்திருக்கும் மூக்குக் கண்ணாடியுமாக அவளைப் பார்க்கையில், சோகத்தை சுமந்து நிற்கும் அழகான ஒரு ஓவியம்போல் தெரிந்தாள். சிந்திய கண்ணீரை விரல்களால் அவள் துடைத்துவிட்டபோது, அதிலும் ஒரு நளினம் தெரிந்தது. கண்ணீரின் ஈரம் அவள் உள்ளங்கையில் விரவிக் கிடந்தது. வழமையாகவே கைக்குட்டை வைத்திருக்கும் மேரி, இன்றைக்கு அதை மறந்து விட்டாளோ அல்லது அந்தப் பழக்கத்தை கைவிட்டு விட்டாளோ என்று எண்ணத் தோன்றியது. இந்த யுத்தம் எத்தனையோ மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றி விட்டிருக்கிறது என எண்ணிக் கொண்டேன். கண்களைச் துடைத்துவிட்டு மீண்டும் நிதானத்துக்கு வந்த மேரி, என்னைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் ஏதோ ஒரு தனிப்பட்ட விடயத்தை என்னிடம் கேட்க முற்படுவதுபோலத் தெரிந்தது. தயங்கினாலும் அவள் கேட்கத் தவறவில்லை.
“ அது சரி…உன்னுடைய கிரிஜா எப்பிடி இருக்கிறாள்…? அவளுடனான ஒரு தலைக்காதல் என்னாச்சு…?” என்று அவள் கேட்டதும் நான் சிறிது தயங்கினேன்.
“ சந்தர்ப்ப சூழ்நிலையால நான் இன்னும் கல்யாணம் செய்யல. அதுக்கு கிரிஜா எந்த வகையிலும் காரணம் இல்லை. கிரிஜா பாவம், அவள் நல்லவள். நான்தான் அவளைப் பிழையாக விளங்கிக் கொண்டன். நான் அவளை விரும்பித் திரிந்த காலத்தில அவள் சிஸ்டருக்கு படிக்க வேணும் எண்ட ஒரே நோக்கத்தில இருந்திருக்கிறாள். அது தெரியாமல், நான் என் காதலை வெளிப்படுத்தியதும் அவளுக்கு என்மேல் கோபம் வந்திட்டுது. அவளுடைய முடிவுக்காக நான் பின்தொடர்ந்தபோது அதை அவள் தகப்பனிடம் சொல்லிவிட்டாள். அதனால் நான் என் அப்பாவிடம் அடி வாங்கவேண்டி ஏற்பட்டது. ஆனாலும், அவளுடைய பெற்றோர் அவளை சிஸ்டராக மாறுவதற்கு அனுமதிக்கவில்லை. உறவுக்காரப் பையனை அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். தன் தந்தை எனக்குச் செய்த கொடுமைக்காக பின்நாளில் அவள் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். அதனால் அவள் மீது இருந்த ஒருதலைக் காதல் விலகி, அன்பும் மரியாதையும் முன்னை விட அதிகமாயிற்று. இரண்டு குழந்தைக்கு தாயாகி விட்ட அவளுடைய கணவன் நித்திரையில் இருக்கும்போது இந்திய விமானப்படையின் செல் வீச்சில் சிதைந்து மாண்டதாக அறிந்தேன். சிறிது காலத்தில், அவளது குடும்பம் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும் அறிந்தேன்….!” என்று நான் சொல்லும்போது மேரி என்னையே உற்று நோக்கியபடி இருந்தாள். அதன்பின் இருவராலும் ஏதுவும் பேச முடியாமல் இருந்தது.
நான் “போவோமா” என்று கேட்டேன். அவளும் சரி என்பதுபோல் தலையசைத்தாள்.
இருவரும் மோட்டார்சைக்கிள் நிறுத்திய இடம் நோக்கி நடந்தோம்.
அப்போதுதான் அவதானித்தேன், அவள் நொண்டி நொண்டி வருவதை. என் பார்வை அவளை நோக்கிச் சுருங்கியது. கிட்ட வந்தவள், மோட்டார் சைக்கிளில் ஏறுவதற்கும் சிரமப்பட்டாள்.
“காலில என்ன நடந்தது…!” நான் தவிப்போடு கேட்டேன்.
“அதொண்டுமில்லை எப்பவோ செல் பட்டது…!” அலட்சியமாக அவள் சொன்போது, சட்டென ஒருவித சோகம் மனதைத் தாக்கியது. என்னை நிதானப்படுத்த சிரமப்பட்டேன்;. மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் மேரி உட்காருவதற்கு வசதியாக நான் இருக்கையில் இடம் கொடுத்தேன். அவள் இதமாக அமர்ந்துகொண்டாள். நான் மோட்டார் சைக்கிளை நகர்த்தினேன். மௌனத்தைக் கலைக்க நினைத்தேன்.
“நீ மோட்டார் சயிக்கிள் ஓடுவியா… ?” வேகத்தை அதிகரித்தபடி எதையாவது கேட்கவேண்டும் என்பதற்காகக் கேட்டேன்.
“நீ கார் பழகின மாதிரி இருக்கும் பரவையில்லையா…?” என்றாள் என் காதுக்குள்.
“ஐயோ நான் கார் ஓடப் பழகினதைப் பற்றி எமில் உனக்கும் சொல்லிப் போட்டானா…?” என்று நான் தடுமாறியபோது, அவள் வாய்விட்டுச் சிரித்படி என் முதுகில் ஓங்கித் தட்டினாள்.
” நீங்க கார் பழக்கேல, காக்கதீவு வெளியில் பஸ்சைக் கண்டு வயலுக்குள்ள காரை ஓட்டினியளாமே…!” என்று சொல்லி அவள் வாய்விட்டுச் சிரித்தபோது நானும் வெட்கத்தோடு சிரித்தேன்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தில் அலைய முற்பட்ட தன் சேலையை அவள் இழுத்துப் பிடித்து இடுப்பில் சொருகினாள். நீண்ட அவள் கூந்தலும் கட்டுப்பாட்டை இழந்து அலைந்தது. அதையும் கட்டுப்படுத்த சிரமப்பட்டாள். பக்கக் கண்ணாடியில் இடையிடையே அவளைப் பார்த்தபடியேதான் நான் வண்டியை ஓட்டினேன். காற்றின் வேகத்தில் அவள் படும் அவஸ்தையை நான் ரசிப்பதாக நினைத்து, வெட்கப் புன்னகையோடு என் முதுகில் செல்லமாக அடித்தாள். பாதையில் பார்வை இருந்தாலும், ஒருகணம் பின்பக்கமாகத் திரும்பி அவளது முகத்தைப் பார்த்து புன்னகைத்தேன்
“என்ன சிரிப்பு…. முன்பக்கம் பார்த்து ஓட்டுங்கொ….!” என்றாள்.
“சயின்ஸ் ரீச்சற்ற மூக்குக் கண்ணாடி சரியாக இருக்கிறதா என்று பார்த்தேன்…!” என்று மீண்டும் நான் சிரித்தேன். அவள் புன்சிரிப்போடு என் தோள்பட்டையில் குத்தினாள். அது வலிக்கவில்லை, ஆனால் வலித்தது போல் “ஆ…!” என்றேன்.
“ சும்மா நடிக்காதேங்கோ…!” என்றபடி அடித்த இடத்தில் தடவி விட்டாள். சட்டென என் உடல் முழுவதும் உற்சாகம் பரவியது. நான் சிரித்தபடி வாகனத்தை வேகப்படுத்தினேன். அது காற்றில் மிதப்பதுபோல் எதிர்த்திசையில் வேகமாகப் பயணித்தது. தேங்காய எண்ணை தடவிய மேரியின் கூந்தல் காற்றில் அலைந்து என் முகத்தில் வந்து மோதியபோது, அந்த வாசம் என்னை மயக்கியது. எங்கோ பறப்பது போல் நான் உணர்ந்தேன். கூடவே ஒரு சுதந்திர உணர்வு என்னோடு…! அந்த வானம் எங்களுக்கு வழிவிடுமா…?