முனைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 19,011 
 

அபிதாவுக்கு சம்யுக்தா அக்காதான் எல்லாமே.

அவளுடைய அப்பா ஸ்ரீரங்கம் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் நாற்பது வருடங்களாக அதே வேலையைச் திரும்பச் திரும்பச் செய்து ரிடையர்ட் ஆனவர். அதன்பிறகு தற்போது அனைவரும் சென்னை வாசம். அவர் செய்தது அம்மாவுடன் ஒழுங்காக குடித்தனம் நடத்தி நான்கு பெண்களைப் பெற்றதுதான்.

தற்போது குடும்பத்தை தூக்கி நிறுத்துவது மூத்த அக்கா சம்யுக்தாதான். பி.ஈ கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படித்துவிட்டு கடந்த பத்து வருடங்களாக சென்னையிலுள்ள ஒரு பிரபல மல்டி நேஷனல் ஐ.டி கம்பெனியில் உழைத்து முன்னேறி தற்போது டெலிவரி ஹெட்டாக இருக்கிறாள்.

சம்யுக்தாவுக்கு வயது முப்பத்தி இரண்டு. ரொம்ப பிராக்டிகலாக பேசுவாள். தைரியம் அதிகம். அடிக்கடி கம்பெனி விஷயமாக அயல்நாடு சென்று வருபவள். இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ப்ரோபஷனலாக முன்னுக்கு வரத் துடிப்பவள். தன் மூன்று தங்கைகளையும் நல்லபடியாக படிக்க வைக்க ஆர்வத்துடன் உள்ளவள்.

சம்யுக்தாவின் கடைசித் தங்கை அபிதாவுக்கு வயது பதினெட்டு. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, தற்போது மெரீனா பீச் அருகிலுள்ள ஒரு பிரபல மகளிர் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாள். வெகுளியானவள். அவளுக்கு தான் நன்கு படித்து ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டராகவேண்டும் என்கிற முனைப்பு அதிகம். சிவந்த நிறத்தில், மருளும் விழிகளுடன் அதீத அழகில் ஜொலிப்பவள்.

ஒருநாள் அவள் கல்லூரித் தோழிகள் அவளுக்கு முகநூல் கணக்கு இல்லாதது குறித்து கிண்டல் செய்தார்கள். அவளும் நம் சமுதாயத்தில் ஒரு அங்கமா என்று கேலி பேசினார்கள். அபிதா உடனே வீராப்பாக தன் முகநூல் கணக்கை தொடங்கினாள்.

சில மாதங்கள் கழித்து சந்திரன் என்று ஒரு தெரியாத நபரிடம் இருந்து முகநூலில் நட்பை ஏற்றுக்கொள்ள அவளுக்கு அழைப்பு விடப்பட்டது.

சந்திரன் சென்னையின் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறானாம்.

அவள் அந்த அழைப்பை வெகுளியாக ஏற்றுக்கொண்டாள். அவன் உடனே அவள் மொபைல் நம்பரையும் வாங்கி வைத்துக் கொண்டான். அப்புறம்தான் ஆரம்பித்தது வினை.

அவளின் கலெக்டர் கனவுகள் மெல்ல மெல்ல நீர்த்துப்போய், சந்திரனுடன் அடிக்கடி மொபைல் போனில் உரையாடுவது அதிகரித்தது. அடுத்த மாதமே அவன் அவளிடம் ‘ஐ லவ் யூ’ என்றான். ஒருத்தனால் தான் காதலிக்கப்படுவது எவ்வளவு பெரிய விஷயம்? அவள் புளகாங்கிதம் அடைந்தாள். தன் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து விட்டதாக நினைத்து அடிக்கடி தன்னுள் பெருமைப்பட்டுக் கொண்டாள்.

இருவரும் ஒருநாள் பீச்சில் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே அடுத்தவாரம் தன்னுடன் மகாபலிபுரம் வரச்சொல்லி அவளை அழைத்தான். காலை சென்றுவிட்டு மாலை திரும்பிவிடலாம் என்றான். அபிதா சற்று மிரண்டாள். அவனது அழைப்பு பிடிக்கவில்லை. தன் அக்காவுக்கு தெரியாமல் தன்னால் எங்கும் வரமுடியாது என்று சொன்னாள்.

ஆனால் அவன் அவளுடன் இதுகுறித்து அடிக்கடி மொபைலில் பேசி சண்டையிட்டான். தன்னை அவள் ஒரு நல்ல காதலனாக நம்பவில்லை

என்று குற்றம் சாட்டினான்.

அபிதாவுக்கு அன்றுதான் முதன் முதலாக தான் தன்னுடைய கலெக்டர் இலக்கிலிருந்து விலகிச் செல்கிறோமோ என்று உரைத்தது. தான் இப்படிச் செய்வது தவறு என்று தோன்றியது. சந்திரனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.

ஒருமாதம் சென்றது….

சந்திரன் அவளை மொபைலில் அழைத்தான். “அபி ப்ளீஸ்…ஒரு காதலியாக இல்லாவிட்டாலும், எனக்கு ஒரு நல்ல தோழியாக என்னுடன்

பேசு….உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் அபி” என்று உருகினான்.

அபிதா மிகத்தெளிவாக, “சந்திரன் ப்ளீஸ் நான் நன்றாகப் படித்து ஒரு கலெக்டராக ஆசைப்படுகிறேன். என் அக்காவின் சம்பாத்தியத்தில்தான் நான் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். அக்காவிடம் பொய் சொல்வதோ, அவளை ஏமாற்றுவதோ என்னால் இயலாது. பொறுத்திருங்கள். என் படிப்பு முடிந்தவுடன் நாம் எதையும் பேசி முடிவு செய்யலாம்.” என்றாள்.

சந்திரன் கோபத்துடன், “ஏண்டி…நீ நெனச்சா என்னைக் காதலிப்ப, வேண்டாம்னா உடனே கழட்டிவிட்டு வேற எவனையாவது வளைச்சுப் போடுவியா? பாக்கலாம் நீ எப்படி நிம்மதியா இருக்கேன்னு?” மொபைலை துண்டித்தான்.

அபிதா அதிர்ந்து போனாள். தன்னைக் காதலிப்பதாகச் சொல்லி தன்னிடம் அன்பு பாராட்டிய ஒருத்தனுக்கு இவ்வளவு கோபம் வருமா? தான் ஏதோ பெரிய தப்பு செய்து விட்டோம் என்று பயந்தாள். இரவுகளில் தூக்கம் வராது தவித்தாள்.

ஒருவாரம் சென்றது. அன்று அபிதா கல்லூரி விட்டு வெளியே வரும்போது சந்திரன் எதிரில் வந்தான். நிறைய குடித்திருந்தான். அபிதாவிடம், “என் மனதைக் கெடுத்துட்டு நீ மட்டும் நிம்மதியா இருக்கலாம்னு பார்க்கிறயா?…உன்னால நான் இப்ப தினமும் குடிக்க ஆரம்பிச்சுட்டேன். நீ ரொம்ப அளகா இருக்கிற திமிருதான? இப்ப போறேன்….இருடி இரு உன் மூஞ்சில சீக்கிரமே ஆசிட் விட்டு அடிக்கிறேன்.” என்று அடித் தொண்டையில் கத்தினான்.

அங்கு கூட்டம் கூடிவிட்டது. அபிதாவுக்கு, நாற்றமெடுத்த கக்கூஸ் சாக்கடையில் தான் விழுந்துவிட்டதுபோல் உடல் கூசியது.

நிலமை கை மீறி போய்விட்டது. வேறுவழியில்லை. அக்காவிடம் நடந்த உண்மைகளைச் சொல்லிவிட வேண்டும். அவள் மட்டும்தான் இதில் தலையிட்டு என்னை மீட்க முடியும்.

அந்த ஞாயிற்றுக்கிழமை அக்காவிடம் தனிமையில் எதையும் மறைக்காமல் அனைத்தையும் சொல்லி கதறி அழுதாள். சம்யுக்தா எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டாள்.

“நீ இதில் பொய் எதுவும் கலக்கவில்லையே அபி? அவனோட போய் எங்கியும் தங்கலையே?”

“சத்தியமா இல்லக்கா.”

“சரி அவனோட மொபைல் நம்பர எங்கிட்ட குடுத்துட்டு, நீ போய் நிம்மதியா உன் படிப்பில் கவனம் செலுத்து. அவன் இனிமேல் உன் விஷயத்தில் குறுக்கிட மாட்டான்.”

அடுத்தநாள். சம்யுக்தா தன் டீமில் தன்கீழ் வேலை செய்யும் எஸ்தரை அழைத்துக்கொண்டு, அவளுடைய உடன்பிறந்த அண்ணணும், சென்னையின் போலீஸ் கமிஷனருமான ஜார்ஜை நேரில் பார்த்து எல்லா உண்மைகளையும் சொல்லி, அவருடைய உதவியை வேண்டினாள்.

ஒரு வாரம் மிக அமைதியாகச் சென்றது.

அடுத்த ஞாயிறு சம்யுக்தா, அபிதாவிடம் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, “உன்னுடைய எல்லா ப்ராப்ளமும் சால்வ் பண்ணியாச்சு. படிக்கிற பெண்ணுக்கு எதுக்கு பேஸ்புக்? முதல்ல இந்த அசிங்கத்த நிறுத்து. அதில் பல முகங்கள் பொய்முகங்கள். சோம்பேறிகளும், நேரம் நிறையா இருக்கிற பெருசுங்களும்தான் பேஸ்புக்ல சஞ்சரிப்பாங்க. உனக்கு ஏது நேரம்? கலெக்டராக வேண்டும் என்கிற லட்சியம் கொண்ட நீ, முன்பின் தெரியாத ஒருத்தனின் நட்பை ஏற்று, அவன் காதலையும் ஏற்றுக்கொண்ட அடிமுட்டாள் நீ. நான் உன்ன ரொம்ப புத்திசாலின்னு நினச்சேன். எல்லா தவறுகளுக்கும் நீதான் ஆரம்பம். பாவம் அந்தச் சந்திரன், போலீஸ் ஸ்டேஷனில் அவன அடி பின்னி எடுத்துட்டாங்க. அவனும், அவனுடைய அம்மா அப்பாவும் மன்னிப்பு கடிதம் எழுதிக் குடுத்துருக்காங்க.

“………………….”

“பெண்கள் தன் வாழ்க்கை முழுவதும் தனக்கு மிகத் தெரிந்தவர்களைத் தவிர வேறு ஆண்களிடம் தொடர்பில் இருப்பது தேவையற்றது. இதுல காதல் கத்தரிக்கான்னு எதிர்பார்ப்பு வேற. ஒரு பெண் ஒரு ஆணிடம் உடல்ரீதியா தவறு செய்து விட்டால் அது சரித்திரம்டி. அதே தவறை ஒரு ஆண் பத்து பெண்களிடம் செய்தாலும் அது வெறும் சம்பவம்டி. கேட்டால் அவன் ஆம்பளை என்பார்கள். உன் மேலதான் ரொம்ப தப்பு இருக்கு அபி. நீ இஷ்டப்பட்டால் காதல் சரின்னு சொல்லுவ, அப்புறம் திடீர்ன்னு வேண்டாம்னு சொல்லுவ. அவனுக்கு மனசுன்னு ஒண்ணு கிடையாதா? எதிர்பார்ப்புகள் இருக்காதா? நீ பண்ண தப்புக்கு உன்னையும் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு முட்டிக்கு முட்டி ரெண்டு தட்டு தட்டியிருக்கணும்.”

“என்ன மன்னிச்சிருக்கா.”

“இனிமேலாவது கவனமா இரு. இந்தக் காதல் மட்டும் வேண்டவே வேண்டாம் அபி. காதல் ஜாதி, மதம் எதையும் பார்க்காது. தைரியமா ஓடிப்போய் கல்யாணம் செய்துக்க தூண்டும். அதோட அது முடிவதில்லை. வீட்ல இருக்கும் பெருசுங்களுக்கு ஜாதிதான் முக்கியம். கெளரவக் கொலை, வெட்டு குத்துன்னு அசிங்கமா இறங்கிருவாங்க. அதுகளுக்கு பண்பாடு, நாகரீகம் என்று எதுவுமே தெரியாது. தயவுசெய்து நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி ஒரு கலெக்டராக நிமிர்ந்துநில். வாழ்க்கையில் நம்முடைய முனைப்பும், தீவிரமும் நம்மை எதிலும் வெற்றிகொள்ளச் செய்யும். என்ன புரியுதா?”

“சரிக்கா.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *