கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 24,089 
 

‘அப்பா போன்… அப்பா போன்…’ மகளின் குரலிலேயே அலைபேசியின் அழைப்பொலியை பதிவு செய்து வைத்திருந்தான் அவன்.

“ஹலோ… ஹலோ… வணக்கம், நான் பிரேம் குமார்.”

“எப்படியிருக்கிங்க?”

பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டபின் சற்று தயங்கித் தயங்கி, “எனக்கு ஒரு உதவி செய்யனும்” என்று கேட்டார்.

பிரேம் குமார் பேங்க் ஆஃப் இந்தியாவின் மும்பை சாக்கிநாக்கா கிளையில் சில வருடங்களுக்கு முன் மேலாளராக பணிபுரிந்தபோது அவனுக்கு அறிமுகமானவர்; நல்ல மனிதர். இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு கோவைக்கு மாற்றலாகி சென்றவர், கடந்த ஒரு வருடமாக மதுரை இரயில்வே காலணியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியாவின் மெயின் பிராஞ்சில் சீனியர் மானேஜராகப் பணிபுரிந்து வருகிறார். என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டே “… ம், சொல்லுங்க…” என்றார்.

“எனக்கு வேண்டியவங்க, நாளைக்கு மும்பை வர்றாங்க… அவங்க பொண்ணுக்கு மும்பை ஐ.ஐ.டி-யில சீட் கெடச்சிருக்கு, மகள ஐ.ஐ.டி-யில சேக்றதுக்காக வர்றாங்க… அவங்கள கொஞ்சம் பாத்துக்கணும், கூட இருந்து அவங்களுக்கு உதவி பண்ணணும்…”

“தாராளமாக, யாரு வர்றா? பேரு, ஃப்ளைட் டீடெயெல்ஸ் அனுப்புங்க.”

“அவங்க பேரு செல்வி, மக பேரு அனுஷ்கா… நாளை ஸ்பைஸ் ஜெட்ல வர்றாங்க, டிக்கெட் வாட்ஸ் ஆப்ல அனுப்புறேன்…” என்றார் பிரேம் குமார். மீண்டும் சற்று தயங்கியபடி, “உங்களுக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லையே…?” என்றும் கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, என் நம்பர அவங்களுக்கு கொடுத்துருங்க. அவங்க நம்பரும் எனக்கு அனுப்புங்க; நான் பாத்துக்கிறேன்” என்று நம்பிக்கை அளித்தான் அவன்.

மறுநாள் அவர்களது எண்ணும், பயணச்சீட்டும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருந்தார். உதவி செய்ய முன்வந்ததற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

அவருக்கு ஒரு ‘கட்டை விரல் ஸ்டிக்கரை’ வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிட்டு பயணச் சீட்டைப் பார்த்தான், SJ-397 எண் கொண்ட ஸ்பைஸ் ஜெட் விமானம். மதுரையில் மாலை 4.05 க்குப் புறப்பட்டு 6.20க்கு மும்பை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வருவதாக இருந்தது. டெர்மினல்-2 அவன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு அருகில்தான். 6.00 மணிக்கு வேலையை முடித்துவிட்டு சென்றால் போதும். எப்படியும் அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளிவர 7.00 மணியாகும் என மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டுக்கொண்டான்.

அன்று வியாழக்கிழமை, வெள்ளி ஒருநாள் விடுப்பு எடுத்தால் போதும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். திங்கட்கிழமை வழமைபோல் வேலைக்குச் சென்றுவிடலாம். மாலை ஐந்து மணிக்கு நிறுவன மேலாளருக்கு ‘நாளை ஒரு நாள் விடுப்பு வேண்டும்’ என்று மின்னஞ்சல் அனுப்பினான். அரைமணி நேரம் கழித்து மேலாளரிடமிருந்து அழைப்பு வந்தது. மேலாளரின் அறைக்கதவை இரண்டு முறை தன் சுண்டு விரல் மடக்கி தட்டினான். “எஸ், கம் இன்…” என்று குரல் வரவும் அறைக்குள் சென்றான். “இப்படி அடிக்கடி விடுமுறை எடுப்பது சரியல்ல” என்றார் மேலாளர். “இல்ல சார், உறவினர் தனது மகளை ஐ.ஐ.டி-யில் சேர்க்க ஊரிலிருந்து வருகிறார். அவர்களை ஐ.ஐ.டி-க்கு அழைத்துச் செல்லவேண்டும்” என்று பாதி உண்மையும், பாதி பொய்யும் கலந்து சொன்னான். தனது மேவாயை தேய்த்துக்கொண்ட மேலாளர், “உனக்காகத்தான் லீவு தர்றேன், திங்கட்கிழமை கிழமை கண்டிப்பாக வந்துவிடவேண்டும்” என்றார். அவன் “சரி” என்றதும் ‘சரி, சரி போ’ என்பதுபோல் தலையசைத்தார். எப்போது விடுப்பு கேட்டு மின்னஞ்சல் அனுப்பினாலும் மின்னஞ்சலில் பதில் வராது. தனது அறையில் அழைத்து தனது அதிகாரத்தைக் காட்டவும், நான் உனக்கு சலுகை செய்கிறேன் என்று காட்டிக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்வார். பிறகு ஒரு நாள் இதையே காரணமாகக் காட்டி இரண்டு மடங்கு வேலை வாங்கிவிடுவார். இதெல்லாம் அலுவலக நடைமுறை, சகித்துக்கொண்டுதான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

மாலை 6.45க்கு விமான முனையத்திற்கு வந்தான். விமான நிலையம் பரபரப்புடன் இருந்தது. JVK விமானநிலைய பராமரிப்பை எடுத்துக்கொண்ட பின் கட்டப்பட்ட புதிய கட்டடம். பல வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக இருந்தது. விமான நிலையத்தின் வெளிப்பக்க மேற்கூரை அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது. அலங்கார விளக்குகள் மேலும் அழகூட்டிய வண்ணம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. பயணிகளை அழைத்துப் போக வந்த ஹோட்டல் ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்கள் சிலரும் பெயர்களைத் தாங்கிய சிறிய தட்டியை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தனர். தாயும், மகளும் வருவதால் எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்பதால், அவன் தட்டி எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியாது போனாலும், அலைபேசியில் அழைத்து பேசிக் கொள்ளலாம் என நினைத்துக்கொண்டான். தகவல் பலகை ‘SJ-397 arrived’ என்று காட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் எந்நேரமும் வெளியில் வரக்கூடும், அங்கிங்கென்று வேடிக்கைப் பார்க்காமல் பயணிகள் வெளியேறும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டத்தோடு தாயும், மகளும் வந்தனர். அவன் அவர்களை நோக்கி கையை அசைத்தான். அவர்களும் பதிலுக்கு கையை அசைத்துவிட்டு புன்னகையோடு அவனை நெருங்கினர்.

அவர்கள் அருகே வர, வர அப்பேரிளம் பெண்ணை எங்கோ பார்த்தது போன்ற பிரம்மை ஏற்பட்டது. அவளுக்கும் அதே போன்றதொரு உணர்வு ஏற்பட்டிருக்கக் கூடும். ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இருவருக்குள்ளும் இனம்புரியாத குழப்பம். எப்படிக் கேட்பது, எங்கிருந்து தொடங்குவது? என்று தெரியாமல் திசையறியாத யாத்திரிகனைப்போல யோசித்துக்கொண்டே வாடகைக் கார் நிற்கும் இடம் நோக்கி மெளனமாக நடந்தனர். அவனே, மெளனத்தை கலைக்க முற்பட்டவனாய் “ஐ.ஐ.டி-யில் என்ன கோர்ஸ்?” பொதுவாகக் கேட்டான். “பயோ மெடிக்கல் சைன்ஸ்” அனுஷ்காதான் பதில் சொன்னாள். “உங்களுக்கு சொந்த ஊரே மதுரையா?” தனது இலக்கு நோக்கி அடுத்தக் கேள்வியை வீசினான். “இல்ல, தேனி பக்கம்” தானும் புதிருக்கான விடைக்குப் பக்கத்தில் வந்துவிட்டோம் என்று மகிழ்சியடைந்தான். எனக்கும் தேனி தான் என்றவாறு “தேனியில எந்த ஊரு?” கடைசி புள்ளியில் வந்து கேள்வியை நிறுத்தினான். “நாகலாபுரம்”, அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். அவன் சிரிப்பதைப் பார்த்தவள் “என்ன?” என்று கேட்டாள். “என்னை அடையாளம் தெரியுதா?” என்று கேட்கவும், “பாத்தமாதிரி இருக்கு, ஆனா…” அவள் முடிக்குமுன் “நான், செந்தில் குமார்” என்றான். “நீங்க, சங்கராவரம் செந்தில்குமாரா?” ஆச்சரியத்தோடு கேட்டாள். நிலவின் பிரகாசம் அவள் முகத்தில் தோன்றியது. “நீங்க, நாகலாபுரம் செல்விதானே?” ஆச்சரியத்தில் கண்கள் விரிய கேட்டான் அவனும். கால இடைவெளி நீ என்பதிலிருந்து நீங்க என்று நீண்டிருந்தது.

“அம்மா, இவரை உனக்கு மொதல்லயே தெரியுமா?” என்றாள் அனுஷ்கா. உதட்டில் புன்னகைத் தவழ “ஆம்” என்று தலையசைத்துக்கொண்டே “ஒரே ஸ்கூல்ல, ஒரே வகுப்புல படிச்சவங்க” என அவனை மகளுக்கு அறிமுகப் படுத்தினாள். பிறகு அவனிடம் “பிரேம்குமார் சார் வேற பேருல அது என்னது இயலவன்னு சொன்னாரே” என்று தனது சந்தேகத்தைக் கேட்டாள். அவன் “ஆம், அது என்னுடைய புனைப்பெயர். எல்லோரும் அப்படிதான் கூப்பிடுவாங்க.”

“ஏன், கத, கவிதையெல்லாம் எழுதுவியா?” எனக் கேட்டுக்கொண்டே நடந்தாள். கணநேரத்தில் நீங்க என்பதிலிருந்து நீயாக கால இடைவெளி சுருங்கிக்கொண்டது. அவன் ‘ஆம்’ என்றோ, ‘இல்லை’யென்றோ சொல்லாமல் பொதுவாக தலையசைத்து வைத்தான்.

வாடகைக் காருக்கான வரிசையில் அவர்களுக்கான முறை வந்தவுடன் “சாக்கிநாகால ஹோட்டல் அட்ரிப் போகணும்” என்றாள். ‘இப்போ ஏன் ஹோட்டலுக்குப் போகணும்? என் வீட்லேயே தங்கலாம்…” என்றான் அவன்.

“இல்ல, ஆன்லைன்லேயே ரூம் புக் பண்ணிட்டோம்”

“அதனாலென்ன, கேன்சல் பண்ணிடலாம். பேமெண்ட் எதுவும் பண்ணலையே?”

“இல்லை” என்றாள் அனுஷ்கா.

“பெறகென்ன, என் வீட்டுக்கே போகலாம், என்ன சொல்ற…?”

செல்வி அரை மனதாக தன் மகளைப் பார்த்தாள். அனுஷ்கா ‘சரி’ என்பதுபோல இலேசாக தலையசைக்கவும் உற்சாகமானாள் செல்வி.

நான் டாக்ஸி ஒட்டுனரிடம் “பவாய்” என்றவுடன். “ஐ.ஐ.டி-க்குப் பக்கத்தில்தான் இருக்கிங்களா அங்கிள்” என்றாள் அனுஷ்கா.

“ஆமாம்.”

எத்தனை குழந்தைகள், என்ன படிக்கறாங்க, எப்போது திருமணம் நடந்தது, அவங்களுக்கு எந்த ஊரு, அவங்க என்ன செய்றாங்க என்று பேசிக்கொண்டே வந்தார்கள். பள்ளிக்கூடம், சத்துணவு, சாம்பாரில் புழு மிதந்தது, அதற்குப் பிறகு சத்துணவுப் பக்கமே போகாமல் இருந்தது, நித்யா, குமரேசன் எல்லாம் பேசிக்கொண்டே வந்தனர். முப்பது ஆண்டுகளாக பேசாமல் இருந்தக் கதைகள் முப்பது நிமிடங்களில் முடிந்துவிடுமா என்ன? டாக்ஸி அவன் குறிப்பிட்ட அபார்ட்மெண்ட் வளாகத்தில் வந்து நின்றது. இருபது அடுக்குகள் கொண்ட பனிரெண்டு கட்டிடங்கள் கொண்ட குடியிருப்பு வளாகம். எவ்வளவு உயரம்? என ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவள், “தான் பதினெட்டாவது மாடியில் இருப்பதாக” அவன் கூறவும் “அவ்வளவு உயரத்திலா! பயமா இருக்காதா?” என்று கேட்டாள் செல்வி.

“ஆண்டி, ஆண்டி” என அனுஷ்கா அவன் மனைவியோடு அவ்வளவு சீக்கிரம் ஐக்கியமாகி விடுவாள் என அவனோ, செல்வியோ கூட எதிர்பார்க்கவில்லை. குழந்தைகளும் தங்களுக்கு ஒரு அக்கா கிடைத்ததில் அத்தனை மகிழ்ச்சி. பல வருடங்களாக வந்துபோகும் உறவுகள்போல, அப்படியொரு பிணைப்பு உண்டானது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

“ஐ.ஐ.டி-யில் எனக்கு வேண்டிய புரபஸர், ஸ்டாப் எல்லாம் இருக்காங்க, ஒண்ணும் கவலைப்படவேண்டாம். சனி, ஞாயிறு இங்க வந்துடுலாம்…” என்றான் அனுஷ்காவிடம்.

“அவளைவிட, நானும் அவரும்தான் ரெம்ப பயந்து போய் இருந்தோம். இப்ப, எனக்கு அந்தக் கவலையே இல்லை. அவரும் ரெம்ப சந்தோசப் பட்டாரு. உங்கூட பேசுணும்னு சொன்னாரு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு நானே கூப்பிடுறேன், அப்போ பேசுங்கனு சொன்னேன்” என்றாள் செல்வி.

“ஏன் அப்பவே போன குடுக்க வேண்டியதுதானே?”

“நீ வாஷ் ரூம் போயிருந்த”

மீண்டும் பள்ளிக் கதைகள் தொடங்கியது. வேலை, குழந்தைகள், அவர்களோடு அவன் மனைவியும் இணைந்து கொண்டாள். இவ்வளவு நாள் கழித்து பள்ளி நட்பு மீண்டும் அரும்பியது மனதுக்கு நிறைவாய் இருந்தது. அந்த நிறைவுடன் இரவு கழிந்தது.

காலையில் பத்து மணிக்கு எல்லாம் ஐ.ஐ.டி மெயின் கேட்டில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துவிட்டு பேராசிரியர் இராம் சந்தரை அலைபேசியில் அழைத்தான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவரும் வந்து அழைத்துச் சென்று தங்குவதற்கான அறைப் பதிவு செய்வதென, எல்லாவற்றையும் உடனிருந்து கவனித்துக்கொண்டார். பேராசிரியர் இராம் சந்தரின் உதவியால் எல்லா வேலைகளும் வேக, வேகமாக முடிந்தது. திங்கள் கிழமையிலிருந்து விடுதி அறையில் தங்கிக் கொள்வதாக அனுமதி பெற்று வந்தாள். மூவரும் மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்துவிட்டனர்.

மறுநாள் ‘மும்பை தர்ஷன்’. மனைவி, குழந்தைகளை அவர்களுடன் அனுப்பிவைத்தான். “நீங்களும் வாங்க” என்றாள் அவன் மனைவி. “எனக்கு ஒரு முக்கியமான வேலை நீங்க‌, போயிட்டு வாங்க” அவனுக்கு தனிமை தேவைப்படுகிறது என்பதை செல்வி மட்டும் புரிந்துகொண்டாள். அவளுக்கும் அது தேவையானதாக இருந்தது. ஆனால், அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“எனக்கொரு மயிலிறகு தருவியா?” அப்படித்தான் முதன்முதலாக பேசினாள் செல்வி. அவனிடம் நிறைய மயிலிறகுகள் இருந்தது. புத்தகத்தில், குறிப்பேடுகளில் எல்லாம் வைத்திருந்தான். நாள்தோறும் மயிலிறகு வைத்தப் பக்கத்தை புரட்டி ‘மயிலிறகு குட்டிப் போட்டுள்ளதா?’ பார்ப்பான். ஒருபோதும் அது குட்டிப்போட்டு அவன் பார்த்ததேயில்லை… ஆனால், அதையெல்லாம் அவன் தரவில்லை. அவளுக்காக மெனக்கெட்டு எடுத்துவந்து தரவேண்டும் என நினைத்தான் அவன். மறுநாள் சாலை வழியாக பள்ளிக்கு வராமல் வீட்டின் தெற்குப்புறமிருந்த ஓடையைத் தாண்டி ஒத்தையடிப் பாதை வழியாக மயில்கள் நிறைந்திருக்கும் புளியந்தோப்புக்குள் நுழைந்தான். ஒரு பெண் மயிலிறகை அந்தத் தோப்பில் தேடி எடுத்தான். தன் புத்தகத்திற்குள் பத்திரப்படுத்திக் கொண்டுவந்து செல்வியிடம் கொடுத்தான். “புத்தகத்துல வச்சுக்கிட்டா குட்டிபோடும்” என்றான். அப்படித்தான் தொடங்கியது அவர்கள் நட்பு. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தனர். அவன் மனதுக்குள் ஒரு மலர் மொட்டுவிட்டதுபோல் உணர்ந்தான். சின்ன, சின்னதாக வார்த்தைப் பரிமாற்றங்களோடு தொடர்ந்த நட்பு பள்ளி இறுதித் தேர்வின் இறுதி நாளில் கண்கள் பனிக்க வார்த்தைகளற்று மெளனமானது.

விடுமுறை நாட்களில் சற்று தொலைவில் இருக்கும் தோழியின் ஊருக்கு, நண்பர்களை பார்க்கும் காரணத்தோடு சைக்கிள் சக்கரங்கள் சுழல ஆரம்பித்தன. காசு இல்லாதபோது ஒற்றையடி குறுக்குப் பாதையை பாதங்கள் அளந்து பார்த்தன. தோழியின் வீட்டுக் கதவு ஒருசாய்த்தே இருக்கும். இடைவெளியில் முடிந்த மட்டும் பார்ப்பான். அவளுக்காக வருவது நண்பர்களுக்கு தெரியக்கூடாதென்பதில் கவனமாக இருந்தான்.

நண்பன் வீட்டுக் கதவு பூட்டியிருந்தது, என்ன செய்வதென தெரியவில்லை. உடன் படிக்கும் மற்றவர்களும் அவரவர் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர் போலும். ஒருவரும் தென்படவில்லை. ஆனால், அவள் வீடிருக்கும் தெருவுக்கு சென்றே ஆக வேண்டும். உள்ளூர் நண்பர்கள் இல்லாமல் தனியாகப் போகவும் தயக்கமாக இருந்தது. கிராமத்தின் பல கண்கள் ஒற்றறிவதாக நினைத்துக்கொண்டான். முகத்தில் வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு நடந்தான். சற்று தொலைவிலேயே கதவு நன்றாக திறந்திருப்பது தெரிகிறது. திறந்திருக்கும் முதல் பார்வையிலேயே பாட்டி அமர்ந்து வெற்றிலையை இடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இடத்தைவிட்டு அகலாமல், அவள் தென்படுகிறாளா என்று எட்டிப் பார்த்தான். பாட்டியைத் தவிர வேறு யாரும் இருப்பதற்கான சிறு தடயம் கூட இல்லை. சற்று தூரம் சென்றுவிட்டுத் திரும்பினான். அப்படித் திரும்பி நடக்கும்பொழுது விசாலமான வீதியில் இடமில்லாததுபோல் படிக்கட்டை ஒட்டி நடந்தான். ‘பாட்டியிடம் கேட்போமா?’ ஒரு கனம் தயங்கி நின்றான். எதுவும் கேட்காமலேயே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் சென்று நாளை, நாளை பார்ப்போம் என்ற நம்பிக்கையுடனே திரும்பினான். ஆனாலும், கோடை விடுமுறை முடியும்வரை, அவள் என்ன படிக்கப் போகிறாள், எங்கு படிக்கப் போகிறாள்? என்று அறிந்துகொள்ள முடியாமல் போனது.

பள்ளி செல்ல பேருந்திற்காக நின்றுகொண்டிருந்தான். தேனி டு தேவாரம் வழி நாகலாபுரம் டவுண் பஸ் மெதுவாக வந்து நின்றது. கண்களிலும், பேருந்திலும் இரண்டு ஜோடி பட்டாம்பூச்சிகள் பறந்தது. அவர்கள் படித்த அதே பள்ளியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்திருந்தாள். அன்றிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடியும்வரை வேறு பேருந்தில் பயணித்ததில்லை. எப்போதும் அவளுடன் நான்கு தோழிகள். அவனுடனும் நண்பர்கள். பேச இயலாதபோதும் அவர்கள் கண்கள் பேசிக்கொண்டன. அவன் கண்களிலோ, அவள் கண்களிலோ காதலாக அது மாறவேயில்லை; நட்பு மட்டுமே முகிழ்ந்து மொட்டாக காட்சியளித்து.

மும்பை தர்ஷன், கேட் ஆஃப் இந்தியா, சிவாஜி மியூசியம், பிஷ் அக்கோரியம், நேரு அறிவியல் மையம், எல்லாம் முடித்து ஜுகு பீச்சிற்கு பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது. மும்பை வாகன நெரிசலில் சிக்கிக்கொண்ட பேருந்தைப்போல செல்வியின் மனமும் நினைவுகளின் அடுக்குகளில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது. அவள் தனது தோள்பையை தடவிப் பார்த்தாள். ‘அன்று அவளுடைய பிறந்த நாள், செய்தித்தாளில் சுற்றி சிறிய பெட்டி ஒன்றை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தான். அவள் ஆர்வத்தோடு பிரித்துப் பார்த்தாள். மூன்று வண்ணங்களில் ஒரு டஜன் வளையல்கள். அங்கேயே, அப்போதே கைகளில் போட்டுக்கொண்டாள். பெட்டியில் இருந்த வாழ்த்து அட்டையை எடுத்து வாசித்தாள்.

‘நம் நட்பை எழுத

நான் கவிஞனாக வேண்டும்

என் எழுத்தில்

எப்போதும் உன் வாசமே

நிறையும்.’

வாசம் நிறைந்த வாழ்த்துகளுடன் என்று எழுதி கையொப்பமிட்டிருந்தான்.

கடற்கரை காற்று அவள் முகம் தழுவிச் சென்றது. காதோரத்திலிருந்த இலேசாக நரைத்த முடி காற்றில் அலைந்தது. அவள் தனது பதின் பருவத்தில் நீந்திக்கொண்டிருந்தாள்.

அவனும், அவளும் விமானநிலையத்தின் நுழைவாயிலுக்கு சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தனர். விமான நிலையம் உள்ளே செல்ல இன்னும் நேரமிருந்தது. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். தன் தோள் பையைப் பிரித்தாள். அவனுக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தாள். வருகிறேன் என்று புறப்பட்டவள், அவன் அந்தப் புத்தகத்தைப் பார்த்தான் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல். புத்தகத்தின் முதல் பக்கத்தில்

‘தாய்பாலுக்கான விதை

காதலில் இருக்கிறது

தாய்மைக்கான விதை

நட்பில் இருக்கிறது.”

பாவலர் அறிவுமதியின் கவிதையை எழுதி பதின் பருவத்தின் நட்புடன் செல்வி என குண்டுகுண்டாக கையெழுத்திட்டிருந்தாள்.

புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்து பார்த்தான். அவள் விமானநிலையத்தின் நுழைவாயிலில் நின்று திரும்பிப் பார்த்தாள். அதைக் கண்டதும் அவன் விடைகொடுப்பதுபோல கைகளை உயர்த்தி அசைத்தான். ஏதோ யோசனை வந்தவள்போல திரும்பி வந்தவள், மீண்டும் தோள்பையைப் பிரித்தாள். அதனுள்ளிருந்த சிறிய பர்ஸை எடுத்து காய்ந்து போன மயிலிறகை எடுத்துக் காட்டினாள். மயிலிறகின் பீலிகள் உதிர்ந்து காலத்தின் இடைவெளியை உணர்த்திக்கொண்டிருந்தது. அதன் முனையில் அடர் நீல நிறத்திலிருந்த மயிலின் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருப்பதாக நினைத்தான். அவள் விமான நிலையத்தின் நுழைவாயிலை கடந்து சென்றுகொண்டிருந்தாள். அவன் கைகள் அனிச்சையாக பர்சை தடவிப் பார்த்தன. அதற்குள்ளிருந்த இரண்டு வளையல் துண்டுகள் ஒன்றையொன்று தொட்டு மெலிதான இசையை எழுப்பியது. அந்த இசை மெல்லிய இலயத்துடன் விமானநிலையமெங்கும் பரவியது. புத்தகத்த்தின் அட்டையையும், அவள் நடந்து செல்வதையும் மாறி, மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தான். ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’. ஆம், இன்று நம் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’. இருவரும் ஒரே நேரத்தில் நினைத்துக்கொண்டு எதிரெதிர் திசையில் நடந்துகொண்டிருந்தனர். வெளியெங்கும் அம்மலரின் வாசமும் சுகந்தமாய் பரவிய வண்ணம் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *