கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 20, 2013
பார்வையிட்டோர்: 17,145 
 
 

“என்ன மாமா மஞ்ச தண்ணி ஊத்தவா இல்ல சாணிய கரைச்சு ஊத்தவா” கிண்டல் தொனியில் கேட்டாலும் அதில் பழைய காதலும் அன்பும் கலந்தே இருந்தது அவளிடம். இன்று திருமணமாகி வேறொருவன் மனைவி ஆகிவிட்டாலும் அவளின் பால்ய வயது குறும்புத்தனம் மட்டும் இன்னும் குறையவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாகி போனவள் சற்று உடல் பெருத்திருக்கிறாள் அவ்வளவே. உடலின் மாற்றங்கள் மனதை மாற்றுவதில்லை. வசதி வாய்ப்புகள் பெருகிய பின்பும் அதே மனநிலையில் அவள் இருப்பது தான் ஆச்சர்யம்.

மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடிய விளையாட்டு தான் எங்களை சேர்த்தது. அதை ஆரம்பித்தது என்னமோ நான் தான் ஆனால் இன்னும் மறக்காமல் இருக்கிறாள் அவள்.

வருடம் ஒரு முறை வரும் எங்கள் ஊர் கோவில் திருவிழாவிற்கு போகும் எனக்கு என் சிறுவயதில் விரக்தியே அதிகம் இருந்தது. டவுனில் வளர்ந்ததாலோ என்னவோ என்னை என் சொந்தங்கள் எல்லாம் அன்னியமாகவே பார்த்தது. ஆதலால் என் சொந்த ஊரும் எனக்கு அன்னியமாகவே பட்டது. பெரியவர்கள் காட்டிய அன்பில் விருந்தினர்க்கான உபசரிப்பே இருந்தது, என் வயது ஒத்தவர்கள் என்னை அவர்களோடு விளையாட சேர்த்து கொள்ளவே யோசித்தனர்.

என் அப்பாவிற்கோ ஊருக்கு வந்தால் சீட்டாட்டத்தின் மோகம். கோவில் முன்பு சுற்றி அமர்ந்திருக்கும் பல குழுக்களில் எதாவது ஒரு குழுவில் சீட்டை குலுக்கி கொண்டிருப்பதை எப்போது போனாலும் பார்க்கலாம். இவர் இப்படி என்றால் என் அம்மாவிற்கு அவர்கள் அண்ணன் தம்பிகள் அவர்களின் குடும்பம் இவைகளை பார்ப்பதே அவர்கள் வேலையாகி விடும். என்னை கணநேரம் கூட பிரியாமல் எனக்கான சந்தோஷத்தை அள்ளி அள்ளி தரும் இவர்கள் இருவர் கூட ஊர் வந்துவிட்டால் அவர்களுக்கான சந்தோஷத்தை பருக சென்றுவிடுவர். என்னை என் பாட்டியிடம் விட்டு சென்று விடுவர்.

என் பாட்டியின் சிறு சிறு கதைகளும் அவள் ஊட்டும் உணவுமே அந்த சிறு வயதில் எனக்கான அறுதல். அதனாலேயே இந்த ஊரின் மீது ஒரு வித வெறுப்பு என்னுள் இருந்தது.

அதும் திருவிழாவின் கடைசி நாள் எல்லோரும் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் போது நான் மட்டும் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன். என் மேல் ஊற்றினால் நான் அழுது விடுவேன் என்று அவர்களாய் நினைத்து கொள்வார்கள். என் மீதிருந்த விருந்தாளி மாயை அவர்களை என் மேல் ஊற்ற விடாமல் தடுத்தது. நான் ஊற்றலாம் என்றால் என் வயது ஒத்தவர்கள் என்னிடம் பழகியதே இல்லை. அவர்கள் மேல் ஊற்ற எனக்குள் தயக்கம். என்னை விருந்தினராய் பார்க்கும் பெரியவர்கள் மீதாவது ஊற்றலாம் என்றால் பெரியவர்கள் மீது ஊற்றக்கூடாது என்ற கண்டிப்பு என் வீட்டில். என் பாட்டி கலக்கி கொடுக்கும் மஞ்சள் தண்ணீர் கடைசி வரை எவர் மீதும் ஊற்றாமல் அப்படியே இருக்கும்.

என்னுடைய பத்தாவது வயதில் வழக்கம் போல் பிடிக்காத அந்த திருவிழாவிற்கு சென்ற எனக்கு சிறு ஆச்சர்யம் காத்திருந்தது. வழக்கம் போல் அப்பாவும் அம்மாவும் அவர்கள் வேலை பார்க்க சென்று விட பாட்டியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மதிய உணவிற்கு பின் சிறிது உறக்கம் போட்டேன்.

வேக வைத்த நெல் மணிகளை என் பாட்டி எங்கள் விட்டின் மொட்டை மாடியில் ஆற போட்டு அதற்கு காவல் காக்க சென்று விட்டாள்.

“அடியேய் இங்க என்ன டி பண்றீங்க” என் பாட்டியின் அதட்டல் சத்தம் கேட்டு உறங்கி கொண்டிருந்த நான் உடம்பின் சோம்பலுடன் வீட்டின் வெளியே வந்தேன். எங்கள் வீட்டு திண்ணையில் அவளும் அவளது தோழியும் பல்லாங்குழி ஆடி கொண்டிருந்தனர்.

“பாத்தா தெரியலையா கெழவி வெளையாட்றோம்னு. வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டா கண்ணு தெரியாதே உனக்கு” கிண்டலாய் அவள்.

“போங்க டி உங்க வீட்ல போய் வெளையாடுங்க டி” அதட்டிய என் பாட்டி அதோடு நில்லாமல் பல்லாங்குழி பலகையை உதைத்து தள்ளினாள். புளியங்காய் முத்துக்கள் சிதறி தெறித்தன.

அவளது தோழி என் பாட்டியை புரியாத வார்த்தைகளால் திட்டி கொண்டே முத்துக்களை பிரக்கினாள். ஏதோ கெட்ட வார்த்தைகள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

“ஏய் கெழவி பலகயவா எத்துற. என்ன பண்றேன் பாரு” என்ற அவள் சற்றும் எதிர்பாரா நேரத்தில் என் தலையில் நங்கென்று கொட்டி ஓடி விட்டாள். என் கண்களில் கண்ணீர் சுரந்து விட்டது. அவளிடம் நான் பேசியது கூட கிடையாது அப்படியிருக்க என்னை ஏன் கொட்டினாள். தப்பு கூட ஏன் பாட்டி மீது தானே… இப்படி பல கேள்விகள் இப்போது தோன்றினாலும் அப்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. மாறாக வலி தான் வந்தது.

“பாட்டீடீடீடீடீடீடீடீ” என்ற அலறலோடு கோபமும் சேர்ந்து வந்ததால் அவளை துரத்தினேன். எங்கள் வீட்டின் ஓரம் உள்ள சந்திற்குள் நுழைந்த அவளை பிடிக்க முயன்றேன். அதற்குள் அவளது வீட்டிற்குள் ஓடி விட்டாள். ஏழ்மையின் பிம்பம் அந்த வீட்டில் தெரிந்தாலும் புரியும் வயது எனக்கு அப்போதில்லை. வீட்டின் மூன் வாசலில் அவளுடைய அப்பா அமர்ந்திருந்தார். அவளது அப்பாவை கண்டால் எனக்கு எப்பவுமே பயம். உருட்டும் விழிகளோடும் நரைத்த பெருத்த மீசையோடு எங்கே என்னை பிடித்து அடித்து விடுவாரோ என்ற பயத்தில் திரும்பி வந்து விட்டேன்.

“இதுக்கெல்லாமா அலுவாக ஆம்பள பிள்ள… அவ இந்த பக்கம் வரட்டும் காலு ரெண்டையும் ஒடச்சு ஒடப்புல போட்ருவோம்….. அலுவாதையா என் தங்கம்” என்று பாட்டி என் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே என்னை தேற்றினாள்.

திருவிழாவின் போது அவள் அதிகம் அவள் அம்மாவுடனேயே காணப்பட்டாள். என்னை பார்த்து தன் கை மடக்கி அவள் அம்மாவிற்கு தெரியாமல் என்னை கொட்டுவது போல் சைகை காட்டி சிரித்து என்னை வெறுப்பேற்றினாள். அவள் வீட்டு வாசல்மூன் நின்று கொண்டு “எங்க இப்ப வா பார்ப்போம்” என்று என்னை கிண்டல் செய்தாள்.

அவள் என்னை அடித்ததை கிண்டல் செய்வதை பெற்றோர்களிடம் சொல்லக்கூட எனக்கு வெட்கமாய் இருந்தது. அவளை பழிவாங்க சரியான நேரத்திற்காக காத்து கொண்டிருந்தேன். மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் நாள் அதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

“பாட்டி அவ மேல இன்னைக்கு மஞ்ச தண்ணி ஊத்தணும்… எனக்கு ரெடி பண்ணி குடு” என்று என் பாட்டியிடம் கேட்டேன். அவளும் எனக்காக மிக ஆர்வத்துடன் மஞ்சளை சரிவிகிதமாய் தண்ணீரில் கலந்து அதனுடன் சிறிது சுண்ணாம்பை சேர்த்து ரத்த சிவப்பில் அந்த தண்ணீரை ஒரு சின்ன குண்டா நிறைய எனக்கு தயார் செய்து கொடுத்தாள்.

“பாட்டி இது ரெட் கலர்ல இருக்கு… எதுக்கு மஞ்ச தண்ணின்னு சொல்றாங்க… ரெட் தண்ணின்னு தான சொல்லணும்” பாட்டி கலக்கிய மஞ்சள் தண்ணீர் சிவப்பாய் மாறியதை கண்டு இந்த கேள்வி பாட்டியிடம் கேட்டேன்.

“பேரா…. வெறும் மஞ்சள் கலக்கி ஊத்துனா கறை கழுவுனா போயிரும்… ஆனா சுண்ணாவ கலக்கி ஊத்துனன்னு வை கறை கழுவி போக்க முடியாது… சுரண்டி தான் எடுக்கணும்….” என சுண்ணாம்பு கலக்கியதால் சிவப்பாய் மாறியதை சொல்லாமல் சொல்லி அது எதற்கு என்பதையும் விளக்கினாள்.

என் அம்மா அப்பா கூட வெளியே செல்ல பயந்துகொண்டு வீட்டின்னுள்ளே இருந்தனர். நான் ஒரு சொம்பில் அந்த தண்ணீரை முழுவதும் நிரப்பி அவள் வீட்டின் சுவரோரம் அவள் வருகைக்காக காத்து கொண்டிருந்தேன்.

“டேய் அங்க என்ன டா பண்ற…. யார் மேல டா ஊத்த போற… முறமைகாறைங்க மேல மட்டும் ஊத்து டா….” மாடியில் இருந்த அறையில் பதுங்கியிருந்த என் சித்தப்பா என்னை பார்த்து இதை சொன்னார். அவர் சொன்னதும் பாட்டியிடம் வேகமாக சென்றேன்.

“பாட்டி அவ மேல நான் ஊத்தலமா பாட்டி” அவள் எனக்கு என் உறவேன்றே தெரியாத எனக்கு சித்தப்பா எழுப்பிய சந்தேகத்தால் பாட்டியிடம் உர்ஜிதம் செய்து கொள்ள கேட்டேன்.

“அட கிறுக்கு பய மவனே…. அவ உனக்கு அய்த்த மக முறை தான்…. போய் அவ மேல ஊதிட்டு வா ஓடு…..” என்று என்னை திருப்பி அனுப்பினாள்.

அச்சமயம் அவள் வெளியே யாராவது தன் மேல் ஊற்றி விடுவார்களா என்ற பயத்தோடே வாசல் தெளிக்க மாட்டு சாணத்தை தண்ணீரில் கலந்து கொண்டிருந்தாள். அவள் வெளியே தனியாய் அமர்ந்திருந்ததை மறைந்திருந்து கவனித்த எனக்குள் கொண்டாட்டமும் அவள் மீது சரியாக ஊற்றி விட வேண்டும் என்ற படபடப்பும் ஒன்றாக கலந்திருந்தது.

அவள் பின்னால் சென்ற நான் அமர்ந்திருந்த அவளின் தலைமேல் என் சொம்பின் மொத்த தண்ணீரையும் ஊற்றினேன். முகம் முழுதும் காறைசிவப்பாக கோவமும் அழுகைக்கு தயாராகும் முகத்தையும் கண்ட நான் பழிவாங்கியதை நினைத்து அவளை கண்டு சிரித்தேன். மிகுந்த கோவம் கொண்ட அவள் சற்றும் எதிர்பாரா விதமாய் கலக்கி கொண்டிருந்த சாணம் கலந்த தண்ணீரை என் மீது வீசி ஊற்றினாள். இம்முறை எனக்கு அழுகை வர வில்லை மாறாக கோவம் அதிகமாக அவள் தலை முடியை நான் பிடித்து இழுக்க அவள் என் தலை மயிராய் கொத்தாக பிடிக்க எங்களுக்குள் நடந்த சண்டை கடைசியில் எங்கள் பெற்றோர்கள் உட்புகுந்து தடுக்கும் அளவிற்கு போயிற்று.

என்னுடன் சண்டை போடவாவது இந்த ஊரில் ஒரு பெண் இருக்கிறாளே என்ற திருப்தியுடன் அந்த வருட திருவிழா முடிந்து டவுன் சென்றேன். மறுவருடம் வந்த எனக்கு அவளை தேடும் அளவிற்கு அவள் என்னுள் நிறைந்து போனாள். எங்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தவள் நான் வந்ததை பார்த்ததும் இம்முறை ஓடவில்லை மாறாக என்னை கண்டு சிரித்தாள்.

என் பெற்றோர் போன பின் தனியாக ஆமர்ந்திருந்தவளிடம் போய் “ஏய் வா விளையாடுவோம்” என என் கையில் இருந்த செஸ் போர்டு காட்டி அழைத்தேன்.

“இதெல்லாம் எனக்கு தெரியாது… வேணுமா இரு பழக எடுத்துட்டு வரேன்…. பல்லாங்குழி விளையாடுவோம்” என்றாள் அவள்.

அன்று ஆரம்பித்தது எங்கள் சிநேகிதம். எனக்கு தெரிந்த செஸ் அவளுக்கு நான் சொல்லி தர அவளுக்கு தெரிந்த பல்லாங்குழியை அவள் எனக்கு கற்று தந்தாள். நொண்டி, ஐஸ்பால், சொட்டாங்கல் என நான் இவளுடன் மட்டுமே விளையாடினேன். அவளும் எனக்காக அவள் தோழிகளை விடுத்து என்னுடனே ஐந்து நாட்களும் கழித்தாள். மஞ்சள் தண்ணீர் நாளில் இருவரும் மாற்றி மாற்றி ஊற்றிகொண்டோம் சிநேகத்தை வளர்த்துக்கொண்டோம். சாணி தண்ணீரை கலக்கி என் மீது ஊற்றுவது போல பாவ்லா செய்து விளையாடுவாள்.

என்னுடைய பதினோராவது வயதில் என் ஊர் இவளால் எனக்கு பிடித்தது, அதற்குப்பின் வருடா வருடம் நான் ஊர் எப்போது போவோம் என காத்திருப்பேன். ஊரில் ஏதாவது பெருசுகள் போய் விட்டாள் அவ்வளவு சந்தோஷமாய் இருக்கும். ஏனெனில் அது எனக்கு அவளை காண கிடைத்த ஒரு ஊக்க தொகை போல.

இப்படி போய்கொண்டிருந்த எங்கள் சிநேகிதம் சிறிதாய் சிறிதாய் ஒரு முன்று வருடங்கள் கழித்து குறைந்தது. காரணம் அவள் பூப்பெய்தியதே. கிராமத்தில் வயதிற்கு வந்த ஆணும் பெண்ணும் பேசி கொண்டால் அவ்வளவு தான். ஏதேதோ இட்டுகட்டி பேசுவர். என் அப்பாவும் என்னை கண்டித்ததால் அவளிடம் என் பேச்சை நான் குறைத்து கொண்டேன் என் வயது பசங்களின் நட்பை சம்பாதித்துகொண்டேன்.

வயதுக்கு வந்த பெண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றினால் பிரச்சனை என்பதால் அதையும் நிறுத்திக்கொண்டேன். ஆனால் அவள் அதே சிறுபிள்ளை போல் சாணி தண்ணீரை கலக்கி என்மீது ஊற்றப்போவது போல் வம்பிழுத்துகொண்டு தான் இருந்தாள்

நான் அப்போது கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் ஊர் வந்திருந்தேன். “முன்ன மாத்ரி எண்ட பேசமாற்ற பெரிய ஆள் ஆயிட்டியா மாமா” எதோ ஒரு முறை அவள் சொன்னது என்னை அறைந்தார் போல் இருந்தது. அதே நேரம் மாமா என்று என்னை அவள் அழைத்ததில் என் மனம் ஆனந்தம் கொண்டது. எதோ தவறு செய்து விட்டோமோ என்று என்னுள் தோன்றியது.

“அப்டிலாம் இல்ல மா” என்ற என் பதிலை உரைக்கும் போதே அவளை கவனித்தேன். அவளின் பருவ உடல் என்னுள் ஏதோ செய்தது. அந்த வயதில் எல்லாருக்கும் ஏற்படும் இனக்கவர்ச்சி என்னை மட்டும் விட்டுவிடுமா என்ன. அவளுக்குள்ளும் அது தோண்டியிருக்கும் அதலால் தான் என்னை மாமா என்று உறவுமுறை கொண்டாள். அவளிடம் யாரும் அறியாமல் பேசிக்கொண்டேன். எங்களுக்குள் எழுந்த இனக்கவர்ச்சியை வெறும் பேச்சில் மட்டுமே கட்டுபடுத்தி கொண்டோம். அதிலேயே சந்தோஷப்பட்டு கொண்டோம்.

மஞ்சள் தண்ணீர் ஊற்றும் நாளும் வந்தது. ஆனால் ஊற்றுவதானால் வரும் பிரச்சனை என்னை கட்டு படுத்தியது. இருந்தும் அந்நேரம் அவள் வீட்டின் முன்பு யாரும் இல்லாததால் வெறும் சொம்பை வைத்து ஊற்றி விடுவேன் என அவளை கிண்டல் செய்தேன்.

சுற்றும் முற்றும் பார்த்தவள் “அப்டி ஊத்தணும்னு உனக்கு ஆசை இருந்தா வா வந்து ஊத்திட்டு போ” என அவள் வீட்டிற்க்குள் புகுந்து கொண்டாள் என்னுள் கிளர்ச்சியை ஏற்றிவிட்டாள்.

எவரும் அங்கு இல்லை என்பதை கவனித்த நான் அவள் வீட்டிற்குள் விரைவாக சென்று என்னை மறைத்துக்கொண்டேன். மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது போல் பாவ்லா செய்து கொண்டே அவளிடம் சண்டை போட்டேன், அவள் கை பிடித்தேன், இடுப்பை அணைத்தேன், கன்னத்தில் முத்தமிட்டேன், காதோரம் என் முச்சுகாற்றை இரைந்தேன். என்னில் இருந்து விடுபட முயன்றவள் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் முயற்சியை தளர்த்தினாள் எனக்கேற்றவாறு இசைந்தாள்.

என்ன நினைத்தாலோ சடாரென என்னுள் இருந்து விடுவித்து கொண்டு வேகமாய் வெளியே ஓடிவிட்டாள். நாம் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன் நானும் என் வீடு நோக்கி சென்றேன். அதன் பின் அவளை என்னால் பாக்கவே முடியவில்லை. எங்கெங்கோ தேடினேன் கிடைக்கவில்லை.

அடுத்த நாளே ஊருக்கு செல்லவேண்டும் என்று அப்பா சொன்னதால் அந்த குற்ற உணர்ச்சியுடனேயே டவுனுக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தேன். ஜன்னலோரம் அமர்ந்திருந்த என்னை மறைந்திருந்து சிறு சிரிப்புடன் அவள் பேருந்து நிலையத்தின் சுவரோரம் நின்று பார்த்துகொண்டிருந்தாள். என் விழி அவளை பார்த்ததும் வெட்க சிரிப்பு அவளுக்குள். என் குற்றுணர்ச்சி காதலால் அடித்து நொறுக்கப்பட்டது. பேருந்து கிளம்பும் நேரம் எனக்கு அவள் கண்களாலேயே பிரிவின் விடை கொடுத்தாள். சந்தோஷத்துடன் அவளிடம் விடை பெற்றேன் இப்போதே அடுத்த வருட திருவிழா வராதா என்ற ஏக்கத்துடன்.

இப்பொழுதுள்ள தொழில்நுட்ப ஏற்றங்கள் அப்போது இல்லை. செல்போன்கள் பணக்காரர்களின் கைகளில் மட்டுமே புழங்கிய காலம் அது. எங்கள் கிராமத்தில் ஐந்தில் ஒரு விட்டில் தான் டெலிபோனையே காணும் நிலை. இந்நிலையில் அவளை தொடர்பு கொள்ளும் வழிகள் ஒன்றும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் காத்திருப்பின் வலிகள் என்னுள் ரணத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு என் கல்லூரி நண்பன் ஒருவனிடம் மட்டும் இவளிடம் பழகிய அனைத்தையும் விவரிப்பேன். அதில் ஆனந்தம் கொள்வேன்.

அடுத்த வருடம் ஊருக்கு செல்லும் வேலை வந்தது. அவளுக்காக ஒரு சின்ன வெள்ளி மோதிரம் கூட வாங்கி இருந்தேன். அவளின் வீட்டின் பக்கம் எட்டி பார்த்தேன். அவளை காண முடியவில்லை. எப்படியும் பார்த்து விடுவோம் என்ற தைரியத்தில் வந்த களைப்பில் சிறிது உறங்கி போனேன்.

“பாட்டி……. பாட்டி” அவள் தான் வெளியில் இருந்து என் பாட்டியை அழைத்து கொண்டிருந்தாள்.

அவளை பார்க்கும் சந்தோஷத்துடன் வெளியில் சென்று பார்த்த காட்சி என்னை நிலைகுலைய செய்தது. நெற்றியில் வட்ட பொட்டும் கழுத்தில் தாலியுமாய் கசங்கிய சேலை ஒன்றை கட்டி கொண்டு வாசல் மூன் அவள். 18 வயது நிரம்பும் மூன் கழுத்து நிறைய தாலி அவளிடம். கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணின் விதி அது.

“நீ எப்ப வந்த மாமா…. பாட்டி இல்லையா” என்னை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானாலும் அதை மறைத்துக்கொண்டு என்னிடம் கேட்டாள். அவளின் சோகம் அவள் கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டது. இருந்தும் அதை நான் அறிய கூடாதென தலைகுனிந்து தன் சீலையில் கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

அவளிடம் ஏதும் பதில் சொல்லும் நிலையில் அப்போது நான் இல்லை. வெறும் மரம் போல் எந்த உணர்ச்சியும் இன்றி வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன். என்னிடம் இருந்து பதிலை அவளும் எதிர்பார்க்கவில்லை. அந்த இடத்திலிருந்து நகன்றாள்.

வீட்டின் சந்திற்குள் செல்லும் மூன் “எல்லாருக்கும் நினைக்கிறது நடக்கிறது இல்ல மாமா. விடு நீ எண்ட இருந்து தப்பிச்சுடன்னு நெனச்சுக்க. ஆனா சாணி தண்ணி கண்டிப்பா இருக்கு மாமா உனக்கு இந்த வருஷம்” சோகத்துடன் ஆரம்பித்து சிரிப்புடன் முடித்து அந்த இடம் அகன்று சென்றாள்.

அடுத்த ஐந்து நாட்களில் அவளது கணவன் அவளை கவனிக்கும் விதம் கண்டு மகிழ்ச்சி கொண்டேன். நல்ல மனிதன் தான் அவன் என்பதை பார்த்து நிம்மதிகொண்டேன். என்னைக்கூட அவள் கணவனிடம் அறிமுகம் செய்தாள்.பக்கத்துக்கு ஊரின் ஏழை விவசாயி ஆனாலும் மனம் வெள்ளை. எனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் சந்தோஷ வாழ்க்கை திருப்தியை ஏற்படுத்தியது. நான் ஊர் கிளம்பும் வேலை அவளும் அவள் கணவனுடன் புகுந்த வீடு சென்றாள்.

இதோடு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்றும் அதே கிண்டல் அதே பேச்சு. அவளது குழந்தை அவளை போலவே அழகாய். தன் மகள் விளையாட மஞ்சள் தண்ணீர் கலக்கி கொண்டே கேட்டாள் இந்த கதையின் ஆரம்பத்தில் உள்ள வாக்கியத்தை. கலக்கிய தண்ணீரை கையால் மொண்டு என்மீது தெளித்து விட்டு சிரித்தாள். பல வருடங்களுக்கு பிறகு அவள் கையால் பட்ட அந்த மஞ்சள் தண்ணீர் அவளை போலவே மாறாமல் என் மீது அப்பிக்கொண்டது. கடந்த வருடங்களில் அவளுடன் பகிர்ந்த சந்தோஷ நாட்களை நினைவுபடுத்தியது.

– பெப்ரவரி 2013

Print Friendly, PDF & Email

5 thoughts on “மஞ்ச தண்ணி

  1. Very nice story. I shed tears when I read this story.It reflects the true hidden love.Hats off Mr Hari saradhi .

  2. அருமையான எழுது நடை .. கதை மிகவும் பிடித்திருந்தது.
    வாழ்த்துக்கள் ஹரி சாரதி

  3. கதை வாசித்து முடிக்கும் பொது கண்ணருகே இரு சொட்டு கண்ணீர் துளி….. எனக்கும் எங்கோ நடந்தது போல்……

    1. நன்றி ஆனந்த்!!!! உங்கள் கண்ணீர் இந்த கதைக்கு கிடைத்த பரிசாய் கருதுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *