நான் அவன் அது…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 26,304 
 

‘மார்கழி மாசக் குளிரு மச்சத் துளைக்கும்; தை மாசக் குளிரு தரையத் துளைக்கும்’ என்ற அம்மாச்சியின் சொலவடை ஞாபகத்துக்கு வந்தது. தை மாசப் பனி, தரையைத் துளைத்துக்கொண்டு இருந்தது. வீட்டின் சாவித் துவாரத்தைக்கூட மூடியாகிவிட்டது. மெத்தை, போர்வை, எதுக்கும் கட்டுக்குள் வராதுபோல், பனி தன் முழு ஆவேசத்துடன் ஆடிக்கொண்டு இருந்தது. அதிகப் பனி, தற்காலிகத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது. கிச்சன் பக்கம் போய் ஒரு இஞ்சி டீ போட்டுஎடுத்துக் கொண்டு டி.வி. இருந்த ஹாலுக்கு வந்து சோபாவுக்குள் என்னைப் புதைத்துக்கொண்டேன். என் மேலாக நான்கு தலையணைகள் ஒரு போர்வை என்று பதுங்குக்குழியில் இருப்பதுபோல் ஆக்கிக்கொண்டேன். மெதுமெதுவாக சோபா சூடும், டீயின் சூடும் உடம்புக்குள் இறங்க ஆரம்பித்தன. சத்தம் இல்லாமல் டி.வி-யை இயக்கி, வழக்கம்போல ரிமோட் விளையாட்டை ஆரம்பித்தேன். ஒவ்வொன்றாகத் தாண்டித் தாண்டி வந்துகொண்டே இருந்தது. தானாக என்னை அறியாமல் உள்ளிருந்து ஏதோ ஒன்று என்னை நிறுத்தியதுபோல், ரிமோட் இயக்கத்தை நிறுத்தினேன்.

‘பகல் நிலவு’ படத்தில் இருந்து ‘பூ மாலையே தோள் சேரவா?’ என்று தரை உதிர் பூக்களுக்கு நடுவே, ஸ்லீவ்லெஸ் சாரி, காட்டன் சுடிதார், மிடி டாப்ஸ் என்று சகலவிதமான ஆடைகளிலும் ரேவதி பாடிக்கொண்டு இருந்தார். சட்டென்று ரவி அண்ணன் ஞாபகம் வந்தது.

NaanAvan1

அண்ணன்தான் அடிக்கடி சொல்வான் என்னிடம், ‘உன் ஞாபகம் வந்தா நான் இந்தப் பாட்ட பாத்துப்பேன் மீனா. அச்சு அசப்புல ரேவதி உன்ன மாதிரியே இருப்பா!’ என்று. ”ஆமால… ஒரு கேசட் முழுக்க இந்தப் பாட்டதான் இவன் பதிஞ்சுவெச்சுருக்கான். அடிக்கடி வீடியோல போட்டுப் பாத்துக்குவான்!’ என்று பெரியம்மாவும் சேர்ந்து சொல்லும்போது, ஒரு மாதிரி வெட்கம் முகம் முழுவதும் பரவி ஓடும்.

ரவி அண்ணன். நான் வயதுக்கு வந்த பிறகு என் ஆளுகைக்குள் பல்வேறு சட்டத் திட்டங்களுடன் என் குடும்பத்தினரால் நுழையவிடப்பட்ட ஒரே ஒரு ஆண்மகன். என் அம்மாவின் தூரத்துச் சொந்தம், பெரியம்மாவும் பெரியப்பாவும். சுத்திமுத்தி சொந்தத்தில் எனக்கென்று இருந்த ஒரே அண்ணனும் அவன் மட்டும்தான். சிறு வயதில் இருந்தெல்லாம் அவனைப் பற்றிய பெரிய அறிமுகம் இருந்ததாக ஞாபகம் இல்லை.

வயதுக்கு வந்து அதற்கான சடங்குகள் முடிந்து அப்பாச்சியின் வீட்டில் இருந்து அம்மாச்சியின் வீட்டுக்கு வந்து தங்கி இருந்த அந்தப் பத்து நாட்களில்தான் ரவி அண்ணன் அறிமுகமானான். அவனுடைய முதல் நாள் இன்னமும் பளிச்சென்று மின்னல்போல் மனதுக்குள் வெட்டுகிறது. அப்போது என்னைப் பார்க்க வள்ளி, குமார், ஆனந்தராஜ் மாமா என எந்தப் ‘பையன்’களுக்கும் அனுமதி இல்லை. பானு, சுப்பு அக்கா, கலா அக்கா, மான் சித்தி இவர்கள் மட்டும்தான் என்னோடு இருக்க அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள் அம்மாச்சியால்.

பெண் என்றாலும், மான் சித்தியுடன் மட்டும் நான் அதிகம் பேசிவிடக்கூடாது என்பதில் ஆச்சி கண்ணும் கருத்துமாக இருந்தாள். சித்தி அப்போதே கொஞ்சம் ஃபெமினிஸ்ட். போராட்டக் குணம் உடையவள். கல்லூரிக்கு ஜீன்ஸ் அணிந்து செல்லும் அவளைக் கொஞ்சம் அதிர்ச்சியாகப் பார்க்கும் சொந்தங்களுக்கு மத்தியில், கல்லூரியில் உடன் படிக்கும் ஆண் தோழர்களை வீட்டுக்கு அழைத்துவந்து, வீட்டுத் தொழுவத்தில் கட்டிப் போடப்பட்டு இருக்கும் மாட்டில் இருந்து அவளே பால் கறந்து டீ போட்டுக் கொடுத்து, பார்ப்பவர்களுக்கு மாரடைப்பை வரவழைப் பாள். ஆனாலும் அம்மாவின் பிரியத்துக்கு உரியவள் அவள். அதனால், வேறு வழி இல்லாமல், என்னுடன் இருக்க சித்திக்குச் சம்மதம் சொல்லி இருந்தாள் ஆச்சி. அந்தப் பத்து நாட்களும் என்னைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண் டவள் சித்தி. உளுந்து சோறு, பூண்டு கஞ்சி என்று சைவமாக ஆரம்பித்து பச்சை முட்டையை நான் அழ அழ என் வாயில் ஊற்றிக் கொடுமைப்படுத்துவது வரை எல்லாமே செய்தாள்.

பத்து நாட்களும் அம்மாவின் சொந்தக்காரர்கள் யாராவது என்னைப் பார்க்க வந்துகொண்டே இருந்ததால், ஒவ்வொரு நாள் மாலையும் ஒவ்வொரு வகைப் பூவிலும் என்னை அலங்காரம் செய்து உட்காரவைப்பாள். எனக்குத் தாழம்பூவைத்து அலங்காரம் செய்ய வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டாள். ஆனாலும் அவளுக்கு அது கைகூடி வரவில்லை. தாழம்பூ ஒன்றும் கிடைக்காத ஒன்று அல்ல. ஆற்றுக்குச் செல்லும் வழியில் தாழம்பூக் காடே இருந்தது. ஆனாலும் கொத்துக் கொத்தாக அதில் சுருண்டுஇருக் கும் பாம்புகள், தாழம்பூபற்றிய நினைப் பையே தூரத் தூக்கி வீசி இருந்தன. தாழம்பூக் காடு பக்கத்தில்தான் ஆவுடை யாச்சி கோயில் இருந்தது. அங்கு உள்ள ஆழ்வார் ஒருத்தர்தான் ஆவுடையாச்சிக் காக, தாழம்பூக்களைப் பறித்துச் செல்வார். தாழை பறிப்பதற்கு என்றே பெரிய தொரட்டி ஒன்றைவைத்திருப்பார்கள். 10 அடி நீளம் இருக்கும். அதனைவைத்து தூரத்தில் இருந்து முதலில் மெதுவாகச் செடியை அசைத்துவிடுவார்கள். ஓர் அசைவுக்கு அதில் இருந்து பாம்புகள் சர சரவென்று குமியல் குமியலாகக் கொட்டும். அவை ஓடிய பின் தொரட்டிவைத்து தாழம்பூவைப் பறித்து தன்னுடைய குடலைக்குள் போட்டுக்கொள்வார் ஆழ்வார்.

வயதுக்கு வந்த வீட்டுக்கு ஆழ்வார் வர மாட்டார். தீட்டு என்று ஒரு காரணம் வேறு இருந்தது. இதனால் தாழம்பூ என்பது அம்மாவுக்கு நிறைவேறாத கனவாக இருந்தபோதுதான், ரவி அண்ணன் வந்து சேர்ந்தான். என் அம்மாவின் முறை மாமனின் மகன். மான் சித்திக்கும் முறை மாமன்தான் ரவி அண்ணனின் அப்பா. சித்தியைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தான் ரவி அண்ணன். அம்மாச்சி அவனை தார்சாவிலேயே நிறுத்திவிட்டாள்.

”நம்ம வேலு மச்சான் மகன் ரவி!”என்று அம்மாவிடம் அவனை அறிமுகம் செய்துவைத்தாள் சித்தி. அதற்கு அடுத்த சில நிமிடங்கள், ‘அட… வேலு மச்சாவி மவனா இது… இத்தன வளந்துட்டானா?’ என்பது போன்ற ஆச்சர்ய கேள்விகளும் நெகிழ்வும் கட்டித் தழுவுதலுமாகச் சென்றன. பிறகு தான் அம்மா அவனை உள்ளே கூப்பிட் டாள்.

ஒரு பட்டுச்சட்டை பாவாடையும், வாயில் அப்பா வாங்கித்தந்துபோன வெள்ளை கேக்குமாக உட்கார்ந்திருந்தேன். அம்மா சொன்னாள் ‘இது ரவி அண்ணா… நம்ம சொந்தத்துல உனக்கு இருக்கிற ஒரே அண்ணன்!’ என்றாள்.

NaanAvan2

வளர்த்தியாக, லேசாக அழகான பெண்மையுடன், சிரித்தால் தெரியும் தெத்துப் பல்லுடன்… முதல் பார்வையி லேயே ரவி அண்ணன் மீது நிறையப் பிரியம் வந்தது. சிரித்தேன். அவன் 10-ம் வகுப்புப் படிப்பதாகச் சொன்னான். நான் ‘8-ம் வகுப்பு!’ என்றேன். அப்புறம் வழக்கமாக ‘எப்படிப் படிக்கிற, எனக்கு இங்கிலீஷ் வராது… கொஞ்சம் சொல்லித் தர்றியா!’ என்பது போன்ற அனைத்து கிராமச் சொந்தக்காரர்களும் கேட்கும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருந்தான்.

சித்திதான் கேட்டாள்… ‘எலேய்… அவளுக்குக் கொஞ்சம் தாழம்பூ பறிச்சுட்டு வர்றியா?’ என்று. அவன் ஏதும் சொல்லவில்லை. ஆனால், அன்று மாலை கூடை நிறையத் தாழம்பூவோடு வந்து நின்றான். அந்தப் பூவை எப்படிப் பறிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்பதால், அந்த நிமிடம் அவனை நிறையவேபிடித்து இருந்தது. அதைப் பத்திரமாகவைத்து மறுநாள் என் தலையில்வைத்து அம்மா தன் ஆசை தீர பின்னிவிட்டாள். அப்ப டியே ஊரில் இருந்த ஸ்டுடியோக்காரரை வீட்டுக்கு வரவழைத்து, என்னை ஒரு போட்டோவும் பிடித்துக்கொண்டாள். ஸ்டுடியோக்காரரை ரவி அண்ணன்தான் வீட்டுக்கு அழைத்துவந்தான். அந்த நாட் களில்கூட ரவி அண்ணனுடன் எனக்குப் பெரிதாகப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. பத்துப் பதினைந்து நாட்கள் அம்மாச்சியின் வீட்டில் கழிந்த பின், எங்கள் ஊருக்கு வந்துவிட்டோம். அதன் பின் வந்த நாட்களில் ரவி அண்ணாவிடம் இருந்து வாராவாரம் இன்லேண்ட் லெட் டரில் கடிதம் வரும். அப்பா, அம்மாவைக் கேட்டு இருப்பான். ஊரில் என்ன நடக்கி றது என்று எழுதி இருப்பான். அவனுடைய படிப்பு எப்படிப் போய்க்கொண்டு இருக் கிறது என்று எல்லாவற்றையும். கடைசியாக ‘மீனாவைக் கேட்டதாகச் சொல்லு சித்தி!’ என்று முடிப்பான். பதில் கடிதம் எதுவும் போட்டதாக நினைவில் இல்லை. அவனு டைய கடைசி வரிக்காக மட்டுமே நான் கடிதங்களுக்காகக் காத்திருப்பேன். அவன் மேல், இதுதான் என்று சொல்ல முடியாத பிரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 8-ம் வகுப்புப் பிரியத்துக்கு எல்லாம் காதல் என்றோ, அன்பு என்றோ, அண்ணன் தங்கை பாசம் என்றோ பேர்வைக்க இப்போதும் விரும்ப வில்லை நான்.

அது ஒரு பிரியம். பெயரில்லா, பெயரற்ற பிரியம்.

அந்த வருட முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகள் அம்மாச்சியின் சேரன்மகா தேவியில்தான் கழிந்தன. அப்பா ஊருக்கு வர முடியாது என்று அம்மாவிடம் அடம்பிடித்துச் சொல்லிவிட்டேன். ரவி அண்ணாவுடன்தான் ஒவ்வொரு மணித் துளியும். அவன் வீட்டு தார்சாவில் உட் கார்ந்து இருப்பான், நான் பட்டாசாலையில். ஏதாவது பேசிக்கொண்டு இருப்போம். என்ன பேசினோம் என்று சுத்தமாக ஞாபகம் இல்லை. அதை நினைக்கையில் என்னைச் சுற்றி சில புன்னகைகள் சிதறு வதைப் பார்க்க முடிகிறது. வெளியில் போவது என்றாலும், அவனுடன் மட்டும் தான். வீட்டில் இருந்து கொஞ்சம் அரிசி, பருப்பு திருடி தேங்காய் சிரட்டையில் வைத்து கூட்டாஞ்சோறு செய்யச்சொல்லிக் கொடுத்தான். பூவரசம் இலைவைத்து பீப்பீ ஊதக் கற்றுக்கொடுத்தான். போட்டி யில் ஜெயித்த அத்தனை, கலர் கலர் கோலிக் காய்களை ஒரு டப்பாவில் போட்டு அடைத்துக்கொடுத்தான். அந்தக் கோலிக் காய்களில் இருந்த வண்ணத்தை இன்னும் நான் வேறு எங்கும் பார்க்கவில்லை.

ஒரு நாள் என்னை அவசர அவசரமாக, அவன் குடும்பத்துக்குச் சொந்தமாகத் தெக்குத் தெருவில் இருந்த ஒரு வீட்டுக்குக் கூட்டிச் சென்றான். யாருக்கும் தெரியாமல் நாங்கள் இரண்டு பேர் மட்டும் சென்றோம். பெரிய வீடான அதில், அதன் அத்தனை அறைகளையும் தாண்டி பின்கட்டுத் தோட்டத்துக்குக் கூட்டிச் சென்றான். அமைதியாக இருக்கும்படி, வாயில் விரல்வைத்து சைகை செய்துவிட்டு, தோட்டத்து சுவரின் மூலையில் இருந்த ஒரு ஓட்டையைக் காண்பித்து மெதுவாகச் சொன்னான்.

‘இங்கதான் ஆயிரம் வருஷமா ஒரு பாம்பு வாழுது. வெள்ளையா இருக்கும். அதுக்கு றெக்கைகூட இருக்கும். அப்படியே உடம்பெல்லாம் முடி முடியா முளைச்சு இருக்கும். பறந்துவந்து கொத்தும்!’ என்று அந்த ஆயிரம் வருட பாம்பைப் பற்றி கதை சொல்லிக்கொண்டே போனான். நான் பயத்தில் சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டேன். நான் அழுவதைப் பார்த் தும் கொஞ்சம்கூட எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்… ‘நாம அந்தப் பாம்ப பாக்கத்தான் இங்க வந்திருக் கோம்’ என்று. வீட்டைவிட்டு வெளியே போக வழியே தெரியாத நிலையில் அவனுடன் அன்று நாள் முழுக்கக் காத்துக்கிடந்தேன். ‘வெள்ளை பாம்’பைப் பார்ப்பதற்காக. எதுவும் வரவில்லை. ஆனால், வீடு போனவு டன் எனக்கு விழுந்தது முதுகில் நாலு சாத்து அம்மாவிடம் இருந்து.

அதன் பின் வெளியே செல்ல எனக்கான அனுமதி கட்டுப்படுத்தப்பட்டது.

ரவி அண்ணனுடன் வெளியில் செல்லாத நாட்களில் அந்த வயதில் என்னவென்று சொல்லத் தெரியாத வலியை, வெறுமையை உணர்ந்து இருக்கிறேன். வீட்டுக்கு வருவான்.எனக்கும் அவனுக்கும் நடுவில் வெளியில் போக முடியாத, கூட்டாஞ்சோறு சமைக்க முடியாத, பீப்பீ ஊத முடியாத, வெள்ளை பாம்பு பார்க்க முடியாத எங்களின் வருத்தம் அமர்ந்து இருக்கும். என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருப்போம். அதன் பின் ரவி அண்ணன் வீட்டுக்கு வருவதையும் குறைத்துக்கொண்டான்.

அந்த வருட விடுமுறை முடிந்து ஊருக்குப் போகும்போதுதான் ரவி அண்ணனைவிட்டுப்போகிறோம் என்று மனதில் உரைக்க, அவனைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தேன். முதல்முதலாக என் தலையைத் தடவிச் சொன்னான். ‘அழாதல… நேரம் கிடைக்கும்போது வீட்டுக்கு வர்றேன்’ என்று. அந்த ஒரு வாக்கியத்தை நம்பிக்கையாகவைத்து மட்டும்தான் நான் சேரன்மகாதேவியில் இருந்து அன்று புறப்பட்டு வந்ததே! அண்ணன் வரவில்லை. ஆனால், அவனிடம் இருந்து மறக்காமல் கடிதம் வந்துகொண்டு இருக்கும். அதே கடைசி வரிகளுடன். வழக்கம்போல் இங்கு இருந்து பதில் கடிதம் எதுவும் போகாது.

9-ம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் மறுபடியும் அம்மாச்சி ஊர். ரவி அண்ணன். ஆனால், இந்த முறை எங்கள் இருவருக் கும் நடுவே அண்ணனுக்கும் எனக்கும் முறைப் பெண்ணான சுபிதாவின் வரவு இருந்தது. அவள் மும்பை வேறு. அண்ண னின் வீட்டுப் பக்கம்தான் சுபிதாவின் பாட்டி வீடும் இருந்தது. நான் அடுத்தத் தெருவில் இருந்தேன். ரவி அண்ணனுக்கு இயல்பாகவே சுபிதாவின் மீது இருந்த காதல் காரணமாக என்னைப் பார்க்கவருவதைக் குறைத்துக்கொண்டான். முதல் முதலாக அண்ணன் இல்லாத சேரன்மகாதேவி நாட்கள் எனக்கு வாய்த்தன. ரவி அண்ணன் மீது அளவற்ற கோபம் வந்தது. எழுதவும் தெரியாத ‘பொசசிவ்னெஸ்’ஸும் அவன் மீது வர ஆரம்பித்தது. சுபிதாவின் மீது பொறாமை என்று ஒரு டீன் ஏஜின் அத்தனை குழப்பங்களும் என்னை ஆட்டிப்படைத்தன.

ஆற்றுக்கு நான், அம்மா, சித்தி, அக்கா, பெரியம்மா என்று போகும் பெண்கள் கும்பலுக்கு ரவி அண்ணன்தான் துணை வருவான். தற்போது அண்ணனின் சிபாரிசில் அந்தக் கும்ப லில் சேர்ந்திருந்தாள் சுபிதாவும்.

‘சுபியை ரவிக்குக் கட்டிவெச்சா நல்லாத்தான் இருக்கும். ரெண்டும் பொருத்தமாத்தான இருக்கு!’ என்று அம்மா, ரவி அண்ணனின் அம்மாவிடம் சொல்லிய ஒருநாள், அம்மாவைத் தலையில் ‘நங்’கென்று கொட்ட வேண்டும் என்று தோன்றியது.

போதாக்குறைக்கு சுபிதா வேறு என் எரிச்சலை அதிகரித்தாள். ஆற்றில் உள்ள பாறைகளில் துணி துவைக்கும்போது, யாருக்கும் தெரியாமல் அண்ணனின் உடைகளை மட்டும் அவள் துவைத்துக்கொண்டு இருந்தாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியாத மனக் குழப்பத்தில் நிறைய வலியு டனும், பொறாமையுடனும், ஆத்திரத்துடனும் அண்ணனிடம் இருந்து விலகத் தொடங்கினேன்.

அதன் பின் ஒரு வருடம்! அண்ணன் நினைப்பு மனதுள் இருந்தாலும், அந்த வலி ஆறவில்லை. ரவி அண்ணன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று நம்பினேன். ‘என்ன ஏமாற்றினான்? எதற்காக ஏமாற்றினான்? எப்படி அப்படி ஓர் எண்ணம் வந்தது எனக்கு?’ என்று இப்போது யாராவது கேட்டாலும் சொல்லத் தெரியாது எனக்கு!

அது அப்படித்தான். சொல்ல முடியாதத் துயரம். பெயரற்றத் துயரம். பெயரில்லாத் துயரம்!

பத்தாம் வகுப்பு ஆண்டு விடுமுறை. பதினொன்றாம் வகுப்பு செல்வதற்கான சிறப்பு வகுப்புகள் இருந்ததால் சில நாட்கள் மட்டுமே ஊருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம்போல் சேரன்மகாதேவிதான். உடன் யாரும் இல்லாமல் தனியாக என்னைப் பார்க்க வந்த ரவி அண்ணனைப் பார்த்த முதல் நிமிடம், அவன் மீது இருந்த அத்தனை கோவமும் வடிந்து ஓடியது. நான் ஒரு வளர்ந்த பெண் என்பதை எல்லாம் மறந்து, அவனுடன் கோலிக் காய் ஆடிய அந்தச் சிறு பெண் ணாகவே ஓடிப் போய்க் கட்டிக்கொண்டேன். அண்ணன் திகைத்துவிட்டான். அவனுக்குத் தெரியாது அது ஒரு வருட வலி என்று!

நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வெளியில் போவது இல்லை என்றாலும், ஒருநாளுக்கு ஒருமுறையாவது வீட்டுக்கு வருவான் அண்ணன். ஏதாவது பேசுவான். அவன் எழுதிய கவிதைகளைக் காண்பிப்பான். அண்ணன் அப்போது ப்ளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டு இருந்தான். அதனால் நிறைய நேரம் அவனால் என் னுடன் இருக்க முடியவில்லை. இன்ஜினீ யரிங் கிடைத்ததும் அவன் மெட்ராஸ் செல்லப்போவதாக வேறு சொல்லிக் கொண்டு இருந்தான்.

விடுமுறை முடிந்து ஊருக்குக் கிளம்புவதற்கு ஒரு நாள் மட்டுமே இருந்தது எனக்கு. அதன் பின் எனக்கு இங்கு வரும் சந்தர்ப் பம் கிடைக்காது. என் மணித் துளிகளுக்குக் கூட அட்டவணை போட்டுவைக்கப்பட்டு இருந்தது ஏற்கெனவே. அண்ணனும் மெட்ராஸ் போய்விடுவான். அவனைப் பார்க்கவே முடியாது என்று தோன்றியது. அதீதமான ஒரு பதற்றத்தில் அண்ணனிடம் கேட்டேன் ‘அண்ணா… என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? உன்னோடவே வெச்சுக்கிறியா என்னைய?’ என்று.

அண்ணன் சட்டென்று அதிர்ந்து நின்றது இப்போதும் மனதுக்குள் நிழலாடுகிறது. எதுவும் சொல்லவில்லை. அமைதியாகக் கிளம்பிப் போய்விட்டான். அதன் பின் அண்ணனுடனான தொடர்பு முற்றிலும்… முற்றிலும்… முற்றிலுமாக நின்றுபோனது.

அவ்வப்போது அவனைப் பற்றிய கதை களை அம்மா சொல்வாள். மெட்ராஸ் போய்விட்டான். இன்ஜினீயரிங் படிக்கிறான். வேலையில் சேர்ந்துவிட்டான். நிறைய சம்பளம் என்று. கேட்டுக்கொள்வதோடு சரி. அதன் பின் எனக்கும் வாழ்க்கை வேறானது. படிப்பு, வேலை, சம்பளம், காதல், நட்பு என்று முழுவதும் வேறானது. அண்ணன் இருக்கும் அதே சென்னையில்தான் நானும் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், அவனைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது இல்லை.

அண்ணனிடம் அன்று கேட்ட கேள்வியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பு வரும் எனக்கு. எதற்காக அப்படி ஒரு முட்டாள்தனத்தைச் செய்தேன் என்று. ஒருத்தன் மீது அப்படி என்ன பிரியம் வேண்டிக்கிடக்கிறது? விடை தெரியாது!

இந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் அண்ணனை மறுபடியும் பார்க்க வேண்டி இருந்தது. பொங்கலை ஒட்டி ஊருக்குச் செல்வதற்காக எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் காத்து நின்றேன். ஊர்ப்பட்ட கூட் டம். மூச்சு முட்டியது. என்னுடைய ரயில் எங்கு நிற்கிறது என்றுகூடத் தெரியவில்லை. லக்கேஜையும் தூக்கிக்கொண்டு கன்னாபின்னாவென்று அலைந்துகொண்டு இருந்த என்னை, சட்டென்று வழிமறித்து நின்றான் அண்ணன்.

அவனைப் பார்த்ததும்… என்ன தோன்றி யது என்பதை எழுதுவதற்கு வார்த்தைகளோ, மொழியோ இங்கு கிடையாது. பரவசம், பயம், அழுகை, சந்தோஷம், வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறி… ஒரு குட்டி நவரசத்தையே அரங்கேற்றிக்கொண்டு இருந்தேன். என் தலை தட்டி, லக்கேஜ் வாங்கி, ‘இப்பவும் அதே மாதிரி திரு திருன்னுதானா… இன்னும் திருந்தலையா நீ?’ என்றபடியே ரயிலுக்கு அழைத்துச்சென் றான். அவனும் ஊருக்குச் செல்வதாகக் கூறினான். அதே ரயிலில் வேறு ஒரு கம்பார்ட்மென்ட் அவனுக்கு. அவ்வப்போது வந்து ‘சாப்ட்டியா, தலையணை வாங் கிக்கோ, பத்திரமாப் படுத்துக்கோ’ என்று அட்வைஸ் செய்துவிட்டுப் போனான். இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை.

திருநெல்வேலி வந்திருந்தது. அண்ணன்தான் வந்து எழுப்பிவிட்டான். லக்கேஜ் தூக்கிவந்தான். நிறையப் பேசிக்கொண்டே வந்தான். கடைசியாகக் கேட்டான், ”எப்பலே கல்யாணம்?” என்று.

”கொஞ்ச நாள்ல. லவ் மேரேஜ்தான். அப்பா, அம்மா ஓ.கே. சொல்லிட்டாங்க!” என்றேன்.

”நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா?’ என்று கேட்டேன் அவனிடம்.

”உன்னை மாதிரியே ஒரு பொண்ணைத் தேடிட்டு இருக்கேன்!” என்றான். எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும் அதற்குப் பிறகு!

– பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *