நயாகராவில் ஒரு காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 7,703 
 
 

நயாகராவிற்குப் போவோமா?

ரொரன்டோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய உங்கள் அன்புக்குரியவரின் முதலாவது கேள்வியே இதுவானால் உள்ளுக்குள் கொஞ்சம் சிலிர்க்குமா இல்லையா? சொல்லுங்கள்.

எனக்குச் சிலிர்த்தது.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் இலங்கை சென்று தாலி கட்டிய அன்றே திரும்பிய எனக்கு இப்பொழுதுதான் முதன்முதலாக கனடா வந்துள்ள எனது மனைவியின் இந்தக் கேள்வி சிலிர்க்க வைக்காமல் வேறு என்ன செய்யும்?

இந்தக் கேள்வியால் மட்டுமல்ல வேறு எதற்காகவும் அவள் வாயைத் திறந்திருந்தாலும் எனக்கு சில்லிட்டிருக்கும் என்பது வேறு கதை.

தமிழ் திரைப் படங்களாக இருந்திருதால் இக் கேள்வி் விமான நிலையத்தில் புறப்படத் தயாராகவிருந்த விமானங்களை ஓடு பாதையில் ஓடாமலே பறக்க வைத்திருக்கும். அல்லது இந்த விமானம் சரியான நேரத்திற்கு தரை இறங்கியதைத் தெரிவிக்கும் அறிவிப்புப்பலகையின் மின் எழுத்துகளையாவது எக்கச்சக்கமான ஒளி சிந்தலுடன் சிமிட்ட வைத்திருக்கும் என்ற கற்பனையில் கிறங்கினேன்!

மனசெங்கும் நீந்தியது நயாகரா!

“உதென்ன…இப்பதானே கனடாவுக்கு வாறாய்… இனி இஞ்சைதானே இருக்கப் போறாய்.. வந்ததும் வராததுமாக நயாகரா என்கின்றாயே… அப்படி என்ன அங்கு கொட்டிக் கிடக்கு” என்றார் எம்முடன் விமான நிலையத்துக்கு வந்திருந்திருந்தவரும், அண்மையில்தான் ‘சூப்பர் விஸா’ மூலம் கனடா வந்தவருமான எனது அக்கா.

“கனடா என்றதும் பலரது நினைவில் எழுவது நயாகரா. உத்தியோகத்துக்காக – உல்லாசத்துக்காக – உறவினருக்காக என எந்தக் காரணத்துடனும் கனடா வரும் எவரையும் தவறவிடாது பரவசத்தில் வீழ்த்துவது நயாகரா என்று கேள்விப் பட்டுள்ளேன். அதனால்தான்.” என்றாள் என்னவள் பவ்வியமாக.

“கனடாவின் பிரமாண்டமான ஈர்ப்பு நயாகரா என்பார்கள். நயாகராவின் ஈர்ப்பு சக்தி பெரிதா அல்லது எமது ஈர்ப்பு சக்தி பெரிதா? என்று ஒரு தரம் எட்டிப் பார்க்கத்தானே” என்றேன் நான்!

சொந்த ஊர் சிரிப்பில் – சிரித்தாள்!

“திருமணத்தம்பதிகளின் தேன்நிலவுக்கு உலக மக்களால் பெரிதும் விரும்பப்படும் நயாகரா. ‘உலக தேன் நிலவு தலை நகரம்’ என்ற பெயரை 1950 ம் ஆண்டு முதல் தக்க வைத்துள்ளது. அதன் நீரில் எதிர்மறை அணுக்கூறுகள் செறிந்து நிறைந்திருப்பதால் இயல்பாகவே காம இச்சையை தூண்டும் ஆற்றல் அப்பகுதிக்கு அதிகம். தேடுக! தேறுக!” கூட்டத்திலிருந்து ஒரு குரல் கும்மியடித்தது!

தொடர்ந்து கூ கூ என்ற பலத்த கூச்சல் அதே கூட்டத்திலிருந்து கூடத்தையே அதிர வைத்தது.

அவர்களுக்கு அது கலக்கும் குரல். மற்றவர்களுக்கு அது கலக குரல்!

சில கிராமிய நன் நிகழ்வுகளில் பெண்கள் குலவை இடுவது தாயக வழமை. அதனை கொச்சைப்படுத்துவது புரியாமல் இங்கும் எந்நிகழ்வுகளிலும் கூ கூ என்று கூச்சலிடும் வாலிப குழாம் இருக்கிறதே! சகிக்க முடியாதவாறு காது கிழியக் கூச்சலிட்டது. ஏன் கூச்சலிடுகிறார்கள் அல்லது எதற்கு கூச்சலிடுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. நாகரீகம் என்ற போர்வையில் மெல்ல ஊடுருவும் அநாகரீகம்!

என்னவளை உப்படியே நயாகராவிற்கு அள்ளிச் சென்றால் என்ன? வாழ்க்கையில் ஒரு ‘திறில்’ வேண்டும். நினைத்ததை நினைத்த உடனே செய்யும் வயது. மாற்று யோசனை இல்லாமல் செயல்ப்படுத்தத் தூண்டியது கையிலிருந்த ‘மோபைல்’.

ரொரன்டோவிலிருந்து 78 மைல் (126கி.மீ) தூரத்தில் உள்ள நயாகராவை மகிழுந்தில் சென்றடைய சுமார் ஒன்றரை மணி நேரம் தேவை.தினசரி பேருந்து தொடருந்து வானுர்ந்து சேவைகளும் உண்டு.

எமக்கு தொடருந்துதான் ஒத்துவரும். இரண்டு மணித்தியாலங்கள் அதற்குள் ஆடுவோம். பாடுவோம். கொண்டாடுவோம்.

“வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. நாங்கள் தேன் நிலவின் தலை நகருக்கு நேரே போகப்போறம். நீங்கள் வீடுகளுக்குப் போங்கோ. உங்களுடன் ‘லகேசையும்’கொண்டு போங்கோ.”

“என்ன..எதுவுமே இல்லாமலா?” என்றார்கள் கோரஸாக.

“அப்ப உடுப்புகள்?” என்றாள் என்னவள் பிரத்தியேகமாக.

“ஒன்றுமே தேவை இல்லை!” என்றேன் நான்.

நான் முதலாவது கேள்விக்கு சொல்லிய பதிலை தனக்கென கருதினாளோ…

“என்ன?” என்றாள் மீண்டும்

நின்ற இடத்திலிருந்தே தொடருந்தில் ஆசனம் பதிவதற்கும், தங்குவதற்கு ஹோட்டலை ஒழுங்கு படுத்தவும் கையிலிருந்த ‘மோபைல்” யாமிருக்கப் பயமேன் என்றது!

மோபைலை எட்டிப் பார்த்தவள் “கதவில்லாத குளியலறையும் கட்டாயம் என அடிக்கோடிடவில்லையா?” என்றாள்.

பாரதி கண்டால் மாத்திரம் புதுமைப் பெண்ணா?

கட்டி அணைத்தேன்!

கிளர்ந்த காற்றும் நெளிந்தது!

புகையிரதத்தின் இரு மணி நேர பயணம். இரண்டாயிரம் முத்தங்கள் உயிர் வாசம் பற்றிப் பரவின.

“நல்ல காலம்.பெட்டிக்குள் வேறு எவரும் இல்லை” என்றாள் நாணத்துடன்.

இருந்திருந்தால் என்ன? எண்ணிக்கையில் இரண்டொன்று குறைந்திருக்கும். அவ்வளவுதான்.” என்றேன் நான்.

“பொடி நடையாக வந்திருக்கலாமே? எகிறியிருக்கும்! ஆசை.தோசை” என்றாள் அவள்!

“அசுத்தமான உண்மை” என்றேன்!

“சுத்தமான பொய் ” என்றாள்!

நயாகரா புகையிரத நிலையத்தில் இறங்கியதும், நீர் வீழ்ச்சியின் பேரொலி மிக அருகில் கேட்டது.

“ ஆஹா! நீரின் இடியோசை போலுள்ளதே” என்றாள்.

“உப்படித்தான் பழங்குடி மக்களும் மோகாக் என்ற தமது பாஷையில் அன்று சொன்னார்கள் என்பது வரலாறு. அவர்களது பாஷையில் நயாகராவின் அர்த்தம் நீரின் இடியோசையாகும்” எனது பதிலானது.

நாம் தங்கப் போகும் ஹோட்டல். மிக உயரத்தில் அழகான அறை.. ஒரு யன்னலுக்கு வெளியே கனடிய நீர் வீழ்ச்சி கொட்டியது. பிறிதொரு யன்னல் அமெரிக்கா அருவியை காட்டியது. நள்ளிரவு வரை வர்ண விளக்குகளின் ஒளிவீச்சால் நிறம் மாறும் நயாகரா கண்களுக்குள் நர்த்தனம் புரிந்தது.

அறைக்குள் எமக்கு வேறு அலுவல்!

வெளியே வாண வேடிக்கை வானத்தில் வேடிக்கை காட்டியது!

இளைப்பாறாத இரவின் மறு நாள் மாலைப் பொழுதை சிநேகிதமாக்கி கனடா பக்கமாக உள்ள பெரியதும் ரம்மியமானதுமான குதிரை லாடன் வீழ்ச்சியின் அருகே பார்வையாளர் பகுதிக்குச் சென்றோம்.

“ஓ! புனலின் பூச்சரம்.”என்றாள்.

அருவிக்கு புதிய பெயர் சூட்டிய குதுகலத்தில் துள்ளிக் குதித்தாள்.

எட்டி எட்டிப் பார்த்தாள். பின்னர் “ஒரு மண்ணும் தெரியாது என்பதற்கான புது அர்த்தத்தை எனது ஒரு சோடி கண்களுக்கு மட்டுமல்ல பார்க்கும் பல கோடி கண்களுக்கும் கற்பிற்குமோ இந்தப் புனலின் பூச்சரம்” என்றாள்.

பிரகாசமான நாட்களில் நிதமும் மதியம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நீர்வீழ்ச்சியின் ஒளித்தெறிப்பால் அருவிக்கே வந்து வர்ணஜாலம் காட்டும் – வானத்தில் தெரியும் வானவில்.

இன்று உயிரோடு ஒய்யாரமாக என் எதிரேயும் விந்தை புரிந்து கொண்டிருந்தது,

–என்னவளாக!

இது மலையின் வீழாறு அல்ல. ஒன்ராரியோ ஏரியில்,எரிக் ஏரியின் நீரெடுப்பு கலப்பதே நயாகரா ஆகும். கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தையும் அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தையும் எல்லைகளாக்கி சமதளத்தில் ஓடி கால் மட்டத்துக்கு கீழாக ஒவ்வொரு விநாடியும் 28000000 லீட்டர் நீரை வெள்ளை நிறத்தில் 165அடி ஆழாத்துக்கு பெரும் பள்ளத்தில் ஓயாமல் கொட்டுகின்றது இயற்கை.” என்றேன்.

“500 நீர்வீழ்ச்சிகள் உலகினை பிரமிப்புடன் அண்ணாந்து பார்க்க வைத்தாலும் நயாகரா என்ற இந்த புனலின் பூச்சரம் மட்டும் வருடந்தோறும் 30 கோடி மக்களை குனிந்து பார்க்க வைக்கின்றது. அப்படித்தானே?” என்றாள்.

“அருகருகே மூன்று நீர்வீழ்ச்சிகளை கொண்டது நயாகரா.அவற்றுள் முதலாவதும் பெரியதும் இது. அடுத்தது அமெரிக்க வீழ்ச்சி. சிறியது மணமகள் முக்காடு.” எனத் தொடர்ந்தேன்.

“நிலவில் கால் வைப்பதில் வெற்றியீட்டிய அமெரிக்கா பலமுறை கனடாப் பக்க நயாகராவில் கை வைக்க முனைந்தும் தோற்ற கதை எனக்கும் தெரியும்” என முடித்தாள்.

எந்த வயதினருக்கும் ஏற்ற ஏதாவது எப்பொழுதும் இருக்கும் கேளிக்கை பிரதேசமாக நயாகரா வர்ணிக்கப்படுகின்றது.கடல் தேசம், வண்ணாத்திப்பூச்சிகள் சரணாலயம், பறவைகள் ராஜ்ஜியம், நீரின காட்சியகம், தண்ணீர் பூங்கா, மெழுகு நூதனசாலை,கின்னர்ஸ் சாதனை நூதன சாலை, பளிங்குக் குகை, கூரை கீழாக மாறிய வீடு, அசகாய வீடு, வேடிக்கை வீடு போன்ற சில பகுதிகளுக்கு சென்று வந்தவர்களுக்கு அன்றைய தினமாவது வயதை மறந்த மகிழ்ச்சி –கரைபுரளும்!

இவை எல்லாம் வாய் பேச மாட்டாதவை என்று யார் சொன்னார்கள்? சிறுவரோடு மகிழ்ச்சியிலும் முதியவரோடு துயரிலும் சொல்வதற்கென அவற்றிடம் ஏராளமான கதைகள் உண்டு!

நிலைத்து நிற்க வேண்டுமானால் ஓடிக் கொண்டே இரு என்ற தத்துவத்தை வாய் பேசாமலே போதிக்கவில்லையா நயாகரா. – அது போலத்தான்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையில் ஒவ்வொன்றாக ஓரளவிற்கு எல்லாவற்றையும் பார்த்தோம்! சிலதுக்கு அரை ம ணி நேரம் காணும். சிலதுக்கு இரு மணி நேரம் தேவைப்பட்டது. பொழுது போனதே தெரியவில்லை.

குதிரை லாடன் வீழ்ச்சியின் பகுதியில் தள்ளு வண்டிலில் சிற்றுண்டிக்கடை வைத்திருந்தவருக்கும் நடை பாதையின் ஐஸ் கிறீம்காரருக்கும் வாடிக்கையாளராகினோம். இருவரிடமும் கொஞ்சம் தமிழ் கொஞ்சும் தமிழாகி செல்லம் கொட்டும்!

ரொரன்டோவில் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது எங்கோ ஓரிடத்தில் இதர மொழிகளுடன் நல்வரவு என்று தமிழில் எழுதியிருந்ததைப் பார்த்தது நினைவில் வந்தது.

“நயாகராவிலும் உப்படி உள்ளதாமே?” என்று விமான நிலைய வரவேற்புக் கூடத்தில் எனது பெரியப்பாவை கேட்டதும் அதற்கு அவர் பெரிய ‘லெக்சரே’ செய்ததும் நினைவில் தொடர்ந்தது.

“ஓம் பிள்ளை. எழுதியிருக்கு. ஆனால் அதைப் பார்க்க வேண்டுமானால் அமெரிக்காப் பக்கம் போகவேண்டும். அங்கு எல்லையையொட்டி ஆட்டுத்தீவு என்று ஒரு குட்டித்தீவு. அங்குதான் உந்த நல்வரவு உண்டு. நீர் வீழ்ச்சியை அதன் பின் புறத்திலிருந்து, அதுவும் ஆக அடி மட்டத்திலிருந்து பார்ப்பது கொள்ளை அழகு! முப்பது வருடங்களுக்கு முன் கனடாவுக்கு வந்து குடியுரிமை பெற்ற புதிதிலை முதன் முதலாக போனனான். பேந்தும் இரண்டு மூண்டு தடவை போயிருப்பன். அச்சா இடம். இளந்தாரிகளுக்கு ஏற்ற இடம். வயது போனதுகள் களைச்சுப்போம். படிக் கட்டுகளிலை இஞ்சையும் அங்கையும் மாறி மாறி இறங்கி ஏறணும். சாரல் முற்றாய் தோச்சுப் போடும். நாரி் ஈவு இரக்கமில்லாமல் பிஞ்சுபோம்”

“சிறிய அருவியான மணமகள் முக்காட்டின் வெளிப்பார்வைக்கு எட்டாத பின்புறத்தை காற்றின் குகை மூலம் பரவசத்துடன் பார்க்கலாம். மலையை குடைந்து சிறு பொந்து போல் காணப்படும் பகுதிக்குள் சென்றாலோ மற்ற இரு அருவிகளும் புயல் வேடமிட்டு் எம்மை அள்ளிச் செல்வது போல் பதற வைக்கும். நடுக்கமுறாத மீன்கள் சாரமாரியாய் எம்மீது வீழ்ந்து எம்மை உதற வைக்கும். அங்குள்ள ஒரு சிறு ஏணியில் ஏறினால் முழு அருவியும் எம் மீது விழும் திகிலை ஏற்படுத்தும். உலகில் வேறெந்த அருவியின் அடிவாரத்தையும் இவ்வளவு நெருக்கமாக பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பு.ஈரமாக அங்குள்ள சுவர்களில் சாதனை புரிந்தவர்களின் பெயர்களும் உண்டு.செத்தவர்களின் பெயர்களும் உண்டு.” என்றார் பெரியப்பா.

“காணும் காணும் பெரியப்பா. விட்டால் நீங்கள் சொல்லிக் கொண்டே போவீர்கள்”என்று இடை நிறுத்தியதும் நினைவில் வந்தது.

“சின்னஞ் சிறுசுகள் ஒண்டோடை ஒண்டு இறுகக் கட்டிப்பிடித்துக் கொள்ளும். இதுதான் சாட்டு என்ற நினைப்போ அல்லது போனால் ஒண்டாய் போவோம் என்ற பயமோ யாரறிவர்?” என்றார் பின்னர் முத்தாய்ப்பாக.

புகாரின் கன்னி என்ற படகில் குதிரை லாடன் அருவியின் வெளிப்புற அடிவாரத்திற்கு மிகமிக அருகில் சென்றோம்.

அட்சதை சொரிந்தது சாரல்!

அது மேலிருந்து கீழிறங்கும் வேகம், சாகசம், நல்ல அனுபவம்.

சாரலில் தோய்ந்தாலும், குழம்பாது, விழி அதிர கோப ஆறு கொப்பளித்து வீழும் பிரவாகம், – பிரளயம்.

நமக்கும் மேலே ஒரு சக்தி இருப்பதை நாஸ்திகரும் நம்பக் கூடிய ஒரு தருணம் இதுவென்ற உணர்வு வெளியே வந்த பின்பும் நீங்கவில்லை. காலநிலை எப்படியிருப்பினும் நயாகராவின் இந்தப் படகு பயணம் மட்டும் உறைவதில்லை என்று பேசிக் கொண்டனர் படகிலிருந்து எம்முடன் வெளியே வந்தவர்கள்.

“குதிரை லாடன் வீழ்ச்சியின் பின் பக்கத்தை பார்க்க முடியாதோ?” என்றாள்

“அருவியின் பின்புற பயணம் என்ற பெயரில் ஒன்றை வைத்திருக்கிறார்கள். சுமார் 150 அடி நீள சுரங்கத்தில் இரைச்சலையும் சாரலையும் தவிர திகில் என்றிட எதுவுமில்லை முன் பக்கம் போலவே பின் பக்கமும் இருப்பினும் சுரங்கத்துள் பின் பக்கம் வீழ்ச்சி இடைக்கிடை மட்டுமே தெரியும்” என்றேன்.

“ஓ! அப்ப முன்னுக்குப் பின் முரண் என்று சொல்லுங்கோ” என்றாள்.

வெள்ளை நிறத்தில் நுரைத்தோடும் நயாகரா நதியின் பிரவாகத்தைப் பிரமித்தவாறே மிக அருகே அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மேடையில் சுமார் கால் மைல் தூரமும் அரை மணி நேரமும் பார்வையாளர்கள் நகர்வதும் தேன் நிலவினர் ஊர்வதும் – கண்களுக்கும் இதயங்களுக்கும் ரம்மியம்!

விடுவோமா? ஒன்றெனக் கலந்தோம்!

“காலநிலை சீராயிருக்கின்றது. உலங்குவானுர்தியில் நயாகராவின் ஆதி அந்தம் பார்க்கலாமா? அல்லது அறைக்குப் போய் வேறு அலுவல் பார்போமா?” என்றேன் நான்.

“உங்களின் வேறு அலுவல் என்ன என்று எனக்குத் தெரியும். இப்ப வாங்கோ நயாகராவின் வியாபகத்தை புதிய பரிணாமத்தில் பார்த்து அதில் மெய்மறந்து நிற்போம்.” என்றாள் மனைவி.

“நான் உங்கள் விமானி ரவி.பொதுவாக 15 நிமிடங்கள் பயணம். நீங்கள் தேன் நிலவுக்காக வந்ததால் மேலதிகமாக 5 நிமிடங்கள் போனஸ். சீட் பெல்ட்களை போடுங்கள். ஆரம்பிப்போம்” என்றார்.

ஆர்ப்பரித்த நயாகரா அருவி அமைதியான நயாகரா ஆறாக மாறும் இடத்தில் இருந்து 18 மைல் (27கி.மீ) தூரம் ஒரு பக்கம் கனடாவும் மறு பக்கம் அமெரிக்காவும் எம்முடன் பறந்தன. கீழே நயாகரா ஆறு 32 மைல் வேகத்தில் ஓடினாலும் அசைவற்று நிற்பதாக நினைக்க வைத்தது.

நயாகரா ஆற்றில் குதித்தாடி ஓடும் மீன்களை குறி வைத்துக் கவ்வும் நீர்பறவைகள் இதயத்தில் இறக்கை விரிக்க -ஆட்டுத்தீவு, சந்திர தீவு, மூன்று சகோதரிகள் தீவு, பெரும்தீவு, கோபுரத் தீவு, கடற்படைத்தீவு, பறவைத்தீவு, மான்தீவு உள்ளிட்ட பல தீவுகளையும் திடல்களையும் ‘மேற்பார்வையிட்டோம்’.

ஊரும் மனிதரும், அவை அல்லது அவர்கள் தருவதைப் பொறுத்து அல்ல, நாம் எடுத்துக்கொள்வதைப் பொறுத்துக் கிடைக்கும் போல.

“எப்படி இருந்தது அனுபவம்?” என்றார் விமானி.

“கனடாவில் தமிழர் ஆகாசத்தில் பறக்கின்றார்கள் என்பது எவ்வளவு உண்மை” என்றாள் என்னவள்.

“நீங்கள் காட்டியது வானத்தை. நாங்கள் கண்டது சொர்க்கத்தை” என்றேன்.

“வாழ்க நயாகராவில் ஒரு காதல்” என்றார் விமானி.

சிக்கனமில்லாத சிரிப்பு எங்கும் பரந்தது!

– நவம்பர் 2023, ஈழநாடு வாரமலர், அக்கினிக்குஞ்சு

Print Friendly, PDF & Email
எஸ் ஜெகதீசன், யாழ்ப்பாணம், இளவாலையில் பிறந்த பத்திரிகை யாளார், எழுத்தாளர்.  1990 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். இவர் இளவாலை புனித என்றியரசர் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு அலெக்ஸாண்டிரா கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி பயின்றார். மேலும் இலண்டன் கணக்கியல் கல்லூரி, இலண்டன் பத்திரிகைத்துறை கலாசாலை போன்ற இடங்களிலும் பயின்றார்.  இளவாலை எஸ்.ஜெகதீசன்,பொதிகை எஸ்.ஜெகதீசன்,பாஞ்சாலன் போன்ற பல புனை பெயர்களில் அறியப்படும் இவர் யாழ் ஈழநாட்டில் உதவி ஆசிரியராகவும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *