நந்தினி என்றொரு தேவதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 4,739 
 
 

ஞாயிறு காலை எட்டுமணிக்கு மீனாட்சி மெஸ்ஸில் எதுவும் கிடைக்காது என்று சின்னக் குழந்தைக் கூடத் தெரியும்.இருந்தாலும் சங்கர் மெஸ் வாசலில் வந்து நின்றான்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தொங்குகிற வாசல் திரைச் சீலை பற்றாக்குறையாய் காற்றில் ஆடியது.

“ஸா… ர்”

வாய் ‘ஸாரை’ அழைத்தாலும் மனசு நந்தினிக்காக ஏங்கியது.

“யா… ரு?”

ஆண் குரல் கேட்டது. நடராஜன், நந்தினியின் அண்ணன்.மெஸ்ஸுக்குச் சொந்தக்காரன் ..

“நான்தான்…”

“நான்தான்னா யாரு… ஏய் நந்தினி.. போய்ப் பாருடி…”

நடராஜனின் இரைச்சல் வாசலுக்குக் கேட்டது.

“ஹாய்…!”

கிசுகிசுப்பாய் கையாட்டினான்.

“என்ன…?”

“இன்னிக்கு ஊருக்குப் போகலே. மீல்ஸ் வேணும்.”

நந்தினி திரும்பி உள்ளே போனாள்.. மறுபடி வந்தாள்.

“பத்தரை மணிக்கு வாங்க..”

“வரேன்…” என்றான் மலர்ச்சியாய்.

ஊஹும். நந்தினி பேசாமல் திரும்பிப் போய் விட்டாள்..தன்னுடைய சைகைகள். பார்வை, தவிப்பு… இது எதுவுமே அவளுக்குப் புரியவில்லையா!சங்கர் வேலை கிடைத்தது வந்ததும் முதல் கவலை, தங்குமிடம்.
நண்பன் கைகொடுத்தான்.

“கவலைப்படாதீங்க . பேச்சிலருக்கு உதவும் ஓனர் இருக்காரு. எங்க கூட ரூம்ல தங்கிக்கலாம்…”

“சாப்பாடு?” என்றான் இரண்டாவது கவலையாய்.

“நம்ம மீனாட்சி…”

“மீனாட்சி…!”

“ம்… மீனாட்சி மெஸ். வாரம் ஆறு நாளும் காலை, இரவு டிபன், மதியம் மீல்ஸ்… மொத்தமா பணம் கட்டி… ஒரு டிபன் கேரியரும் வாங்கிக் கொடுத்தா போதும். மீல்ஸ் ஆபிசுக்கு வந்துரும் ..”

“ஓஹோ…” என்றான் நிம்மதியாய்.

“ஆனா ஒண்ணு. சண்டே எதுவும் கிடையாது. அவங்களுக்கு ரெஸ்ட், ஒரு வேளை, நீங்க ஊருக்குப் போகலேன்னா… போய் அட்வான்சா சொன்னா.. மதியம் சாப்பாடு மட்டும் கிடைக்கும். அதுவும் நாலஞ்சு பேருக்குத்தான்… ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி… இப்பதான் ரெண்டு மாசமாத்தான் இந்த சலுகை…”

“நான் பெரும்பாலும் திருச்சி போயிருவேன்… சனி, ஞாயிறு ரெண்டு நாளும்” என்றான் சங்கர்.

“திருச்சில எங்கே…?”

“வயலூர் ரோடு… குமரன் நகர்… நீங்க…?”

மணியும் அவனும் ‘நீ… வா… போ’ லெவலுக்குப் பிறகு நெருங்கி விட்டார்கள்.

நந்தினியை முதல் தடவை பார்த்த நினைவு பசுமையாய் நிற்கிறது. பரிமாறுவதற்குப் பெரும்பாலும் நடராஜனும், வேலைக்கு வைத்திருந்த ஒரு சிறுவனும் தான் வருவார்கள்

ஒரு நாள் சிறுவனைக் காணோம். காலில் அடி பட்டு விட்டதாய் தகவல் சொன்னார்கள்.ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தான் மெஸ் நடத்திக் கொண்டிருந்தான் நடராஜன். ஹாலில் தரையில் அமர்ந்து தான் சாப்பாடு.

நந்தினி வந்து சட்னி, சாம்பார் ஊற்றி விட்டு போனாள்.தோசை விள்ளல் அப்படியே கையில் நின்றது.
மணி அவனை கிள்ளினான்.

“எ… ன்ன?”

“ஸ்ஸ்… சாப்பிடு…”

வெளியே வந்ததும் மணி எச்சரிக்கை விடுத்தான்.

“உங்க ஊர்ல பொண்ணே இல்லியா…? காலேஜ் வாசல்ல நின்னிருப்பியே…?”

“இல்லே மணி… இவ… சம்திங்.ஸ்பெஷல்.!”

“இங்கே . பாரு இப்பவே வார்ன் பண்றேன். நடராஜன் ருத்ர தாண்டவம் ஆடிவருவான். போன மாசம் ஒருத்தன் செம அடி வாங்கினான்… அப்புறம் இங்கே வர்றதே இல்லை… இந்த பொட்டைக் காட்டுல… தோல் நாத்தத்துக்கு நடுவுல… டீசன்ட்டா சாப்பாடு கிடைக்கிற ஒரே இடம் இது தான்.. கெடுத்துக்காதே… ஹோட்டல்ல மசால அரைச்சுக் குளிப்பாட்டி இருப்பான்… ரெண்டு நாள் சாப்டா போதும்… ஆஸ்பிடல் தான்…”

சங்கர் தலையாட்டினான். ஆனாலும் மனசு ஒத்துழைக்கவில்லை. மணியைத் தவிர்த்து தனியே சாப்பிடப் போனான். பொய்க் காரணங்கள். சனி, ஞாயிறு ஊருக்குப் போகாமல் தவிர்த்தான்.எப்படியாவது புரியவைத்து விட வேண்டும். நந்தினி … நந்து…ஞாயிறு மாலை ராஜேஸ்வரி தியேட்டரில் நடராஜன் அன்ட் கோவைப் பார்த்ததும் சிலிர்த்தது அருகில் போனான். சிரித்தான்.

“என்ன.. சினிமாவுக்கா…?”

நடராஜன் அத்தனை சுலபமாய் இவனிடம் பேசிடவில்லை. நந்தினி குனிந்த தலை நிமிராமல் நின்றாள்.
தியேட்டரில் முன் வரிசையில் அவர்கள். பின்னால் அமர்ந்து மெலிதான வெளிச்சத்தில் திரையைத் தவிர்த்து உத்தேசமாய் நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவனுக்குப் பின் வரிசைக்காரர் அடிக்கடி உறுமி இவன் தலை மறைத்ததை அதிருப்தியுடன் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். கடைசி வரை ‘எந்தப் படம்’ என்று புரியாமல் பார்த்துவிட்டு வந்தான். இடை வேளையில் பழியாய்க் கிடந்ததில் நந்தினி தரிசனம். படம் விட்டதும் ஆட்டோ பிடித்து உடன் மறைந்து விட்டார்கள். காய்ந்த சாப்பாத்தியும் மட்டமான குருமாவும் சாப்பிட்டபோதும் மணியின் நினைவு வந்தது.

நிஜமாகவே மீனாட்சி மெஸ் சொர்க்கம்!

மணி நேரடியாய் ஆபீசுக்கு வந்து விட்டான்.

“எப்படி பொழுது போச்சு…?”

“காலை லேட்டா எழுந்தேன். மெஸ்ல சாப்பாடு. அப்புறம் மறுபடி தூக்கம். சாயங்காலம் ராஜேஸ்வரி…”
நேரடியாய் பார்க்காமல் பதில் சொன்னான்.

“சர்த்தான். அடுத்த அடி உனக்குத்தான்…”

“ஏய்…”

“வந்த புதுசுல… திருச்சி சொர்க்கம்… ஊருக்கு கட்டாயம் போயிருவேன்னு சொன்னே…!”

“செலவுப்பா… எதுக்கு… வீணா… அலைச்சல்… ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை போனாப் போதும்… எங்க வீட்டுலயும் அடிக்கடி வர வேணாம்னு சொல்லிவிட்டாங்க .”

“ஹை… எப்படி எல்லாம் கற்பனை சிறகடிக்குது.நானும் லவ் பண்றவங்களைப் பார்த்திருக்கேன்.. எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும்…” மணியின் சீண்டல் பிடித்திருந்தது. தன்னை நந்தினியுடன் தொடர்பு படுத்திய கேலி.

மணி மீண்டும் எச்சரித்தான்.

“வேணாம்… நடராஜன் ரொம்ப பொல்லாதவன். ஸ்மெல் பண்ணாக் கூட போச்சு. சாப்பாட்டுல மண்ணு. ப்ளீஸ், உடம்பு முழுக்க பிளாஸ்திரிதான்!”

‘சரி’ தலையாட்டினான் வழக்கம் போல.

பலமுறை யோசித்து – வார்த்தைகளுக்காவும், அந்தச் செயலுக்காகவும், – பிறகு நிறுத்தி, நிதானமாய், அழகாய் அந்தக் கடிதத்தை எழுதினான்!’.உள்ளூற உதைப்புத்தான். கடிதம் எப்போதும் டேஞ்சர். ‘இல்லை’ யேன்று தப்பித்துக் கொள்ள முடியாத எவிடென்ஸ்.

ஆசை வென்றது. தன் படிப்பு, உதவி, சம்பளம், சுயமாய் முடிவெடுக்கிற சக்தி, கடைசி வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றக்கூடிய திடம். பார்த்த முதல் வினாடி தொட்டு இந்த நிமிடம் வரை தழைத்து வளர்ந்திருக்கிற காதல் எல்லாம் தேனில் தோய்த்து போனாவால் எழுதி அழகான அச்சிட்ட கவரில் வைத்து ஓட்டினான்.

கொடுக்க வேண்டும். எப்படி… எப்போது…நேரம் வாய்த்தது. அன்றிரவு கூட்டம் இல்லை. சனிக்கிழமை. பெரும்பாலானவர்கள் ஊருக்குச் சென்று விடுகிற தினம். சனி அரை நாள் மட்டும் அலுவலகம் இருப்பவர்கள் அப்படியே பஸ் ஏறிப்போய் விடுவார்கள்.சங்கர் போன போது ஒரு நபர் மட்டும்.

உட்கார்ந்ததும் இலை போட்டு தோசை, சட்னி பரிமாறப்பட்டது.பார்வை அலை பாய்ந்தது. சிறுவன் தான் வந்தான். நடராஜனைக் காணோம்.கூட அமர்ந்திருந்தவனுக்கு அகோரப் பசி போலும். ‘இன்னொரு தோசை’ என்று கேட்டு விட்டுக் காத்திருந்தான்.

சங்கர் கை கழுவி விட்டு வந்தான்.

வாடிக்கையானதால் சாப்பிட்ட கணக்கு தெரியும். சிறுவனுக்குப் பணம் பெறும் உரிமை இல்லை
“அக்கா…”என்றான்.

நந்தினி வெளியே வந்தாள்.

“அக்காகிட்டே கொடுத்துருங்க…”

சமையல் கட்டுக்குள் ஓடினான்.ரூபாய் நோட்டை நீட்டி மீதிக்காகக் காத்திருந்தான். அதற்குள் அடுத்தவனும் கை கழுவிவிட்டு வந்தான்.

“இந்தாங்க…”

கொடுத்த சில்லறையை வேண்டுமென்றே தவறவிட்டு கீழே குனிந்து தேடினான்.அடுத்தவன் வெளியேற சங்கர் நிமிர்ந்து கடிதக் கவரை மேஜை மீது வைத்தான். நந்தினி பார்க்காத போது.

வழக்கமற்ற செயல் என்பதாலோ என்னவோ உடம்பு அநியாயத்திற்கு நடுங்கியது.

“இது உங்களுதா..?”

கையில் அதே கவர்.

“இ… இல்லே…”

ஏன் சட்டென்று அந்த பதில் வந்தது… புரியவில்லை. வேகமாய் நடந்து வந்துவிட்டான்.

அறைக்குள் நுழைந்து பத்து நிமிடங்களில் மூச்சு நிலைப்பட்டது ‘சே… என்ன பதில் சொல்லிவிட்டேன். எத்தனை அருமையான சான்ஸ். மனம் விட்டுப் பேச. மனதில் உள்ளதைக் கொட்ட. தவற விட்டாச்சு. இனிதுபோல் அமையப் போவதில்லை.’தலையை வேகமாய் உதறிக் கொண்டான். மடையன். முட்டாள் என்று தன்னையே திட்டிக் கொண்டான்.

நள்ளிரவில் ஒரு தடவை திடுக்கிட்டு எழுந்து மீண்டும் திட்டிக் கொண்டான். ஞாயிறு மெஸ்ஸூக்கு செல்ல மனம் இல்லை. பஸ் பிடித்து திருத்தணி போனான். மலை மீது அப்படியே அமர்ந்திருந்து விட்டு பசித்ததும் பிரசாதம் சாப்பிட்டான். மாலையில் அறைக்குத் திரும்பினான்.

திங்கள்காலை ஹோட்டல் ஒன்றில் டிபன். மெஸ் போல வாய்க்கு ருசிக்கவில்லை.

மணி ஆபீசில் இவனைப் பார்த்ததும் பரபரப்பாய் ஓடிவந்தான்.

“நேத்து என்ன பண்ணே… எங்கே இருந்தே…?”

“என்ன விஷயம்…?”

சங்கருக்குப் புரியவில்லை.

“நீ முதல்ல சொல்லு…?”

“நேத்து முழுக்க நான் திருத்தணியில இருந்தேன். மனசு ரொம்ப அமைதியா… சந்தோஷமா… நல்ல தரிசனம்…”

“ஹப்பா… நீதானோன்னு கலங்கிப் போயிட்டேன்…”

மணி நிம்மதியாய் பெருமூச்சு விட்டான்.

“நேத்து மெஸ்ஸுல கலாட்டா.! நடராஜன் யாரோ ஒரு சங்கரைப் போட்டு நிமித்திட்டானாம்.. ஒரு வேளை அது நீதானோன்னு…”

“எ… எதுக்கு…?”

சங்கர் தடுமாறியது மணிக்குத் தெரியவில்லை.

“எல்லாம பாழாய்ப் போன லவ் லெட்டர் விவகாரம். எவனோ நந்தினிக்கு லெட்டர் கொடுத்திருக்கான்.. சனிக்கிழமை ராத்திரி… மறுபடி அவனே நேத்தும் சாப்பாட்டுக்கு வந்திருக்கான்… உள்ளே வந்ததும்… நடராஜன் பேரைக் கேட்டு…. அடுத்த நிமிஷம்… அடி… உதைத்தான்..”

“ஏன்… அவன் எதுவும் சொல்லலியா… நான் எழுதலேன்னு மறுத்திர வேண்டியது தானே…”

படபடப்பை அடக்கிக் கொண்டு சங்கர் சொன்னான்.

“எப்படிச் சொல்லுவான்… அவனே எழுதிட்டு… வாய் தவறி உண்மையைச் சொல்லிவிட்டான்…”

சங்கருக்கு அதற்குமேல் அதை எப்படி விசாரிப்பது என்று புரியவில்லை. இல்லை நான் தான் எழுதினேன் என்றால் மணி ‘உடனே அறையைக் காலி பண்ணு’ என்று நிச்சயம் வெளியேற்றி விடுவான். அவனுக்கு இதில் துளிக்கூட உடன்பாடு இல்லை என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் வலியுறுத்தி இருக்கிறான்.

அடி வாங்கிய இன்னொரு நபரும் சங்கர்… சங்கர் ராமன். ஆனால் அவன், ஏன் உளறினான், ‘தான் எழுதியதாய்!

அன்று மாலை டிபன் சாப்பிடப் போனபோது நந்தனி இல்லை. ஊருக்கு அனுப்பிவிட்டதாய்ப் பிறகு தெரிய வந்தது. குறிப்பிட்ட ‘சங்கர் ராமன்’ வேறு இடம் பார்த்துக் கொண்டு போய்விட்டதாக அறைவாசி தகவல் தந்தான்.

மனசுக்குள் குறுகுறுப்பு. தான் எழுதிய கடிதத்திற்கு எவனோ அடி வாங்கியது உறுத்தியது.

மூன்றாவது நாள் மாலை, மணி இல்லாமல் சங்கர் மட்டும் கடைத் தெருவில் நடந்து போனபோது யாரோ பின்னாலிருந்து அவன் கையைப் பிடித்திழுக்க நின்றான்.

மீனாட்சி மெஸ்ஸில் வேலை பார்க்கிற சிறுவன்.

“என்னடா….?”சிரித்தான் சிநேகிதமாய்.

“அண்ணே… ஒங்ககிட்டே பேசணும்…” என்றான் அழுத்தமாய்.

“எ… ன்ன?”

“உங்க லெட்டர் தானே … அக்காவுக்கு நீங்கதானே எழுதினீங்க…”

குரல் தணிந்து தீவிரமாய் ஒலித்தது.

“செச்சே…”

“நான் பார்த்துட்டேன் – பொய் சொல்லாதீங்க அண்ணே…”

இப்போது குரல் உண்மைக்காக இரைஞ்சியது.

“ஆமாம்டா…”சங்கர் வெட்கினான்.

“ஆனா… உங்க லெட்டரை அக்கா பிரிச்சுக் கூட பார்க்கலே. அக்காவுக்கு நீங்க எழுதினீங்கன்னு தெரியாது… கிழிச்சு போட்டுருச்சு…”

என்ன…? திடுக்கிட்டுப் பார்த்தான்.

“அன்னைக்கு உங்க கூட இன்னொருத்தர் சாப்பிட்டாரில்லே. அவருதான் அடி வாங்கினது. மறுநாளும் அவர் சாப்பாட்டுக்கு வந்தாரு… அக்கா பார்க்கிறாப்ல லெட்டரை மேஜை மேல வச்சு சிரிச்சாரு.அப்ப… வெளியே போன பெரியண்ணன் வந்திட்டாரு… பிய்ச்சு உதறிட்டாரு…”

அடப்பாவி. அவனும் லெட்டர் கொடுத்தானா?

“அக்கா பாவம்ணே… இங்கே இருந்தப்ப சாப்பாடு நிச்சயமா கிடைச்சுது… இப்ப ஊர்ல அவங்க சின்னாம்மா வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டாரு… அங்கே எப்பவும் அடி. திட்டு தாண்ணே… எங்கிட்ட சொல்லி அழும்.”
சிறுவன் குரல் தேம்பியது.

சங்கர் என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் நின்றான்.

“அண்ணே. நம்மால உதவி செய்ய முடியாட்டியும் தொந்தரவு தராம இருக்காலாம்ல. பாவம் அக்கா. தப்பு செய்யாம தண்டனையை அனுபவிக்குது. வேணாம்ணே. இனிமேல இந்த மாதிரி எதுவும் செஞ்சிராதீங்க.”
விருட்டென்று திரும்பிப் போய் விட்டான்.

சங்கருக்குத்தான் அசையக் கூட முடியவில்லை அந்த இடத்திலிருந்து.

(மாலைமதி)

– செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *