டெர்மினல் 5 சிகாகோ ஒஹேர் விமான நிலையம். உயர் வகுப்பு பயணிகளுக்கான லவுன்ஜில் அமர்ந்து கையிலிருந்த கிண்டிலில் எந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குவது என்று விரல்களால் தேய்த்துக் கொண்டிருந்தான் ராகுல். இன்னும் நான்கு மணி நேரத்தை ஓட்ட வேண்டும். நன்றாகக் கால்களை நீட்டிக்ஞஞ கொண்டு சாய்ந்து கொள்ள வசதியான இடம். அவ்வப்பொழுது கொறித்துக் கொள்ளத் தேவையான உணவு. அமைதியான சூழல். இங்கொன்றும் அங்கொன்றுமாக வெவ்வேறு நிறத்தில் ஆட்கள். அவனுக்கு அருகில் நடுவயது வெள்ளைக்காரர் கைப்பையை இடுப்புக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு கால்களை நீட்டி தலையை இருக்கையின் சாய்வு பகுதியில் சாய்த்துக்கொண்டு வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தார். சற்று தள்ளி ஒரு சீனப் பெண்மணி தன் கைபேசி வழியாக யாருடனோ காணொலியில் கொஞ்சிக் கொண்டிருந்தார். எதிர்புறத்தில் ஒரு ஆப்பிரிக்கத் தம்பதியினர். ஆண் தன்னுடைய கையை ஒரு பக்கம் ஊன்றி அதில் தலையைச் சாய்த்து அவ்வப்போது கண்களை மூடுவதும் திறப்பதுமாய் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார். கனமான முரட்டுத் துணியில் ஜீன்ஸ் அணிந்திருந்தார். மேலே தொளதொளவென ஒரு பூப்போட்ட சட்டை. அந்ந பெண்மணி உடலைக் கல்வி பிடிக்கும்படி ஸ்கெர்ட் அணிந்து மிரட்டினாள். தன் பார்வையை எல்லா பக்கமும் ஓடவிட்டு மீண்டும் கிண்டிலுக்குள் வந்தான். ஒருவழியாக யுவால் நோவா ஹராரியின் ஸாப்பியன் புத்தகத்தைப் படிப்பது எனத் தீர்மானித்தான்.
அப்போது கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண்மணி நுழைந்தார். அங்கிருந்த வரவேற்பாளரிடம் பதிவு செய்து கொண்டு இருந்தார். ராகுலுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்று விடும் போல ஆகிவிட்டது. சுஷ்மிதாவா அது? சரியாகத் தெரியவில்லையே. அதே உயரம். வெள்ளை கலரில் எம்பிராய்டரி செய்த டாப்சும் மஞ்சள் கலரில் பாட்டமும் அணிந்திருந்தாள். .அளவாகக் கழுத்துவரை வெட்டப்பட்ட பாப் கட்டிங். நரை தெரியாமலிருக்க மெஹந்தி . மெல்லிய பிரேம் கண்ணாடி. புத்தரின் மூக்கு போலக் கூரானது. பக்கவாட்டில் பார்க்கும்போதே அவள் தான் என்று தெரிகிறது. நிச்சயமாக அவளாகத்தான் இருக்க வேண்டும். அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடிய தோற்றமா? ராகுலுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. நெஞ்சிலே ஒரு படபடப்பு. கடைசியாக எப்போது பார்த்தது? 30 வருடங்களுக்கு மேல இருக்கும்.
***
சுட்டெரிக்கும் வெயில். சென்னையைக் கவ்விய ஒரு கோடைக்காலம். சென்ட்ரல் ரயில் நிலையம். தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் அவளை வழியனுப்பச் சென்றது. அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாகச் சிந்தியது. “ராகுல் நான் உன்ன முழுசா நம்பறேன். நீ என்ன கைவிட மாட்டேன்னு எனக்குத் தெரியும்”.
ராகுல் உடைந்து போயிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் அவளைப் பிரியப் போகிறோம் என்கிற நினைப்பு சோகத்தில் ஆழ்த்தியது. நாளையிலிருந்து அவளை எப்படிப் பார்ப்பது. சென்னைக்கு வடக்கே எண்ணூரையே தாண்டாத தான் எப்போ டெல்லிக்கு போய் பின்ன சண்டிகர் போய் அங்கிருந்து ஏதோ ஒரு ஊரு, வாயில் நுழையாத பேரு, அங்க போய் அவளைப் பார்க்கிறது. அவ இல்லாத வாழ்க்கையை நினைச்சே பாக்கவே முடியல.
அவளும் உணர்ச்சி ததும்ப அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆங்கிலத்தை மறந்து ஏதோ ஏதோ இந்தியில் பேசினாள். அவனுக்கு வரிக்கு வரி அர்த்தம் புரியலானாலும் என்ன சொல்றான்னு புரிஞ்சுக்கிட்டான். நம்ம ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாங்கறத திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொன்னாள். அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்த காயமத் சே காயமத் இந்தி படம் நினைவுக்கு வந்தது. படத்தின் தொடக்கத்தில் அவனுக்கு வரிக்கு வரி மொழி பெயர்த்தாள். ஒருகட்டத்தில் ‘சீ போடா” அப்படின்னு செல்லமாகக் கொச்சைத் தமிழில் சொல்லிட்டு அவ மட்டும் படம் பார்த்த அந்த நினைவு அவனுக்கு வந்து போனது.
“ராகுல் ஐ வில் டெரிபளி மிஸ் யு டா. எப்படா நம்ம கல்யாணம்?”.
“கவலைப்படாதே நிச்சயமாகச் சீக்கிரமாகவே, நாம் திருமணம் செய்து கொள்வோம்”. அவள் கண்கள் தளும்பி அவன் அருகில் வர நெஞ்சோடு அனணத்துக் கொண்டான்.
இரயில் விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. “பாய்”, “டா டா” என்று கூச்சல்களுக்கும் விசும்பல் கண்ணீர் இவைகளுக்கும் இடையே வண்டி மெதுவாக நகரத் தொடங்கியது. வண்டியின் வாசலில் ஏகப்பட்ட பேர் நின்று கை காட்டிக் கொண்டிருந்தார்கள். அவள் தன் இருக்கைக்கு ஓடி ஜன்னல் அருகில் அமர்ந்து இவனைச் சத்தம் போட்டு அழைத்தாள். அருகில் சென்று கைகளைப் பிடித்தான். அவள் ஓவென்று அழுதாள். வண்டி வேகத்தைக் கூட்ட, இவன் ஓடத் தொடங்கினான். மெதுவாக அவள் கைகள் விலகியது. அந்த நீண்ட தொடர் வண்டி மகிழ்ச்சி, துக்கம், சோகம், நம்பிக்கை, எதிர்காலம் எல்லாத்தையும் உள்வாங்கிக் கொண்டு தலைநகரை நோக்கி விரைந்து.
***
32 வருஷம் கழிச்சு பூமிப்பந்தின் இன்னொரு பக்கத்தில் குளிர்கால மாலையில் அவளைப் பார்க்கிறான். அவளும் பார்க்கிறாள். அவள் கண்களில் ஆச்சரியம். புருவங்கள் விரிய, ‘நீயா’ என்று உடல் மொழியிலே கேட்டாள். பதைபதைப்புடன் எழுந்தான். கையிலிருந்த கிண்டில் நழுவி இருக்கையில் விழுந்தது.
“நீங்களா? நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லையே”
“எப்படி இருக்கீங்க?’.
“ம். நல்லா இருக்கேன்”. ஒரு கூடுதல் அழுத்தத்தோடு ஆங்கிலத்தில் சொன்னாள்.
இப்பொழுது அவனுக்குள் எத்தகைய உணர்ச்சி ஏற்பட்டது என்று தெளிவாகச் சொல்ல முடியாது. ஒரு கொந்தளிப்பான நிலை என்று சொல்லலாம். மகிழ்ச்சி, வருத்தம், குற்ற உணர்ச்சி, சோகம் என மாறிமாறி அவனைத் தாக்கியது.
“நீங்க எங்க போறீங்க?” அவன் கேட்டான்.
“நான் டெல்லிக்கு போறேன்”.
இங்க?
“என் மகள் திருமணமாகி டென்வர்ல இருக்கிறா. அவ வீட்டுக்கு வந்துட்டு திரும்ப போய்கிட்டு இருக்கேன். நீங்க? சென்னைதானே?”
“ஆமாம். ஆனால் இப்ப டெல்லிக்கு போறேன். ஒரு கான்ஃபரென்ஸ்க்கு. சனிக்கிழமை அங்க இருந்துட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு போறேன்”.
“ஓ மகிழ்ச்சி அப்ப நீங்க எங்க வீட்டுக்கு வாங்க”.
ராகுல் ஒரு நொடி தயங்கினான். அதற்குள் அவளே “என்னுடைய கணவர் அஜித் சோக்கி உங்களைச் சந்திக்க விரும்புவார்”.
“முயற்சி பண்றேங்க.
“ப்ளீஸ் டிரை. கொஞ்சம் பாத்துக்கங்க” என்று தனது பையை வைத்துவிட்டு ரெஸ்ட் ரூம் நோக்கிச் சென்றாள்.
தனது அருகே காலியாக இருந்த இருக்கைக்கு அருகில் அவளது பையை வைத்துவிட்டு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமர்ந்தான்.
***
சென்னையில் கொஞ்சமாவது இரசிக்கக்கூடிய மாதம் என்றால் அது டிசம்பர் மட்டும்தான். குளிராவிட்டாலும் கூட வெப்பம் உணரப்படாத மாதம் என்று சொல்லலாம். அப்படி ஒரு மாதத்தில் புகழ்பெற்ற அந்த பல்கலைக்கழகத்தில் இளம் வயது ஆண்களும், பெண்களும், அங்கு வைக்கப்பட்டிருந்த கரும்பலகையில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைத்தாளில் தங்களுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்பதைப் பதட்டத்தோடு தேடினர். அகரவரிசைப்படி வெளியிடப்பட்டு இருந்ததால் விரல் வைத்து மேலிருந்து வேகமாகக் கீழே தேடிக்கொண்டே வந்தான் ராகுல். பெயரைக் கண்டதும் மகிழ்ச்சியில் உறைந்தான். மீண்டும் ஒரு முறை தன்னுடைய பதிவு எண்ணுடன் பெயரைச் சரி பார்த்துக் கொண்டான். சரியாகத்தான் வந்துள்ளது என்று உணர்ந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது. அடுத்தது தன்னுடைய வகுப்பு தோழர்கள் யார் யார் என்று பெயர்களைப் பார்த்தான். அவனுக்கு அடுத்து சுஷ்மிதா என்ற பெயர் இருந்தது.
‘என்ன மாமே நம்ம கிளாஸ்ல எவ்வளவு கேர்ள்ஸ்ன்னு தேடறீயா?”.
திரும்பிப் பார்த்தான். தன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அனிருத். பெங்காலி. இரு தலைமுறையாகச் சென்னையிலேயே வசிப்பவன். சென்னை தமிழை ரசகுல்லாவை ஜீராவில் நனைத்துச் சொட்டச்சொட்ட எடுத்தது போலச் சுவையாகப் பேசுவான். அவனுக்கும் இடம் கிடைத்திருக்கிறது. இப்போது இருவரும் வகுப்பு தோழர்கள். அனிருத்தின் கேள்வி ராகுலின் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது.
‘மாமே டிரெயின்ல ஒரு இராத்திரி டிராவல்கே நம்ம கூபேல ஒரு பொண்ணு வரமாட்டாளான்னு ஏங்குற காலத்தில அடுத்த மூன்று வருஷத்துக்கு ஒன்றாக படிக்கணுமே. அதனால பாக்குறது தப்பு இல்ல”.
“ஆமாண்டா அதுதான் தேடினேன்”.
“நான் அதெல்லாம் அப்பவே பாத்துட்டேன் மச்சி”. 60 பேர்ல பத்து பேரு பொண்ணுங்கடா”.
அப்படியா?
“அம்பது பசங்களுக்கு பத்தே பத்துதான். ஒரு பொண்ணுக்கு அஞ்சு பேரு ட்ரை பண்ணுவாங்க”.
“எல்லாரும் உன்ன மாதிரி இருப்பாங்கன்னு நினைக்காதே. எல்லாருக்குமே இதான் வேலையா?”
“ஹேய் கூல்டா. அதப் பாரு. அங்க நிக்கிறாங்க பாரு அவங்க தான்”.
அனிருத்தைப் போல தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்பவன் இல்லை என்றாலும் அவனுக்குள்ளும் ஒரு ஆசை இருந்தது. ராகுல் சுற்றிப் பார்த்தான். ஏராளமான பெண்கள் இருந்தார்கள். பேரழகிலிருந்து ரொம்ப சுமாரானவர்கள் வரை இருந்தார்கள்.
தனக்கு இடம் கிடைத்த மகிழ்ச்சியை உடனே தன் வீட்டில் தெரிவிக்க வேண்டும் என்பதில் ஆவல் மிகுந்ததால் ராகுல் கிளம்புவதற்கு எத்தனித்தான்.
அனிருத்திடம் “நான் புறப்படுகிறேன் நீ ” என்றான். .
“நானும் உன் கூடவே வந்து விடுகிறேன்” என்றான்.
ஹீரோ ஹோண்டாவில் ஏறிக்கொண்டு சீறிப் பாய்ந்தனர்.
“மாமே சூப்பர்டா. உன் வண்டிச் சத்தத்தைக் கேட்டு எல்லாரும் நம்மளையயே பாக்குறாங்க”
அந்த உற்சாக வார்த்தையில் கூடுதலாக டிராட்டுல் கொடுத்து வண்டியை விரட்டினான் ராகுல்.
***
அவள் ரெஸ்ட் ரூமிலிருந்து திரும்பி வந்தாள்.
“எப்படி இருக்க ராகுல்? கொஞ்சம் வெயிட் போட்டுட்டே போல இருக்கு?”
“கொஞ்சம் இல்ல. நிறையவே போட்டிருக்கேன்”.
“ஆமாம் நீ எத்தியாட் தானே?
“இல்ல நான் எமிரேட்ஸ்.
எத்தியாட் போடிர்டிங் அப்பவே ஆரம்பிச்சிட்டாங்களே.
“ஆமாம் ஆமாம். பக்கத்துல தான் கேட்.. நான் போய்கிட்டே இருக்கேன். ராகுல் நீ கண்டிப்பா டெல்லியில வீட்டுக்கு வரே. சாணக்கியபுரில வீடு. ஞாயிற்றுக் கிழமை தானே சென்னைக்கு போற. சனிக்கிழமை சாயந்திரம் டின்னருக்கு ஜாயின் பண்ணு”.
அவனுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. சனிக்கிழமை சாயந்திரம் கான்ஃபிரன்ஸ் டின்னர் நினைவுக்கு வந்தது.
“சரி வீட்டுக்கு வான்னு சொல்லிட்டே,. அட்ரஸ்?”
“இந்தா என்னோட மொபைல் நம்பர குறிச்சுக்கோ. உன் நம்பர குடு. ப்ளைட்ல ஏறிட்டு அட்ரஸ வாட்ஸ்அப் பண்றேன்”.
“சனிக்கிழமை காலைல உறுதி செய்து கொள்வோம்”.
“பாய். டேக் கேர். சேஃப் பிளைட்'” என்றாள்.
“யூ டூ”. என்றான்.
அவள் புயலாய் சென்று விட்டாள்.
கிண்டிலை கைல எடுத்தவன், இனி அதைப் படிக்க முடியாது என்று பையில் வைத்துவிட்டு நினைவுகளில் மூழ்கினான்.
***
கல்லூரி பருவம், மனிதர்களுடைய வாழ்வில் வசந்த காலம். படிப்பு, பைக், சினிமா, கிரிக்கெட், பொண்ணுங்க, தண்ணி, சிகரெட் அப்பப்ப கொஞ்சம் வீடு, இதைத் தவிர ஒன்றும் பெரிய கவலை இல்லாத வாழ்க்கை.
கொஞ்சம் விவரமானவர்கள் தண்ணி, சிகரெட் போன்றவையெல்லாம் ஒதுக்கிவிட்டு கம்ப்யூட்டர், இசை, இலக்கியம் என்று பழகிக் கொள்வார்கள்.
வகுப்புகள் தொடங்கி ஒரு வாரம் சென்று இருக்கும்.
ஒரு மாலையில், ராகுல் தனது மோட்டார் சைக்கிளை எடுக்கும் போது.
“எக்ஸ்க்யூஸ் மீ. நீங்க அடையாறு வழியாகதானே வீட்டுக்கு போவீங்க?”
திரும்பிய ராகுல் ஒரு நிமிடம் நிலை குலைந்து போய் விட்டான். நல்ல வளர்த்தி. தோள்வரை நறுக்கப்பட்ட அழகான பாப் முடி, வெல்வெட் போல இருந்தது. மாலை வெய்யிலில் பொன்னிறமாய் ஜொலித்தது. முழங்கால் வரை நீண்ட கரும் நீல நிறத்தில் மிடி அணிந்திருந்தாள். வெளிர் சந்தன கலரில் சட்டை அணிந்து அதன்மீது அரை கை டெனிம் ஜாக்கெட் அணிந்திருந்தாள். ஆளை அடிக்கும் பெர்ஃபயூம் மணம். ராகுல் கிறங்கினான்.
தமிழில். “ஆமாம் அடையார் வழியாகத்தான் செல்கிறேன்’.
“மே தமில் நகின் போல் சக்தா”…குட் யூ ஸ்பீக் இங்லீஷ் என்றாள்?”
“ஆமாம் நான் அடையாறு வழியாகத்தான் செல்கிறேன்” என்றான் ஆங்கிலத்தில்.
“உங்களுக்குச் சிரமம் இல்லையென்றால் என்னை அடையாறில் இறக்கிவிட முடியுமா?”
ராகுலுக்கு கனவு போல இருந்தது. முதன்முறையாகத் தனது மோட்டார் சைக்கிளில் பெண்ணொருத்தி ஏறுகிறாள். அதுவும் அழகு தேவதை. கடற்கரைச் சாலையில் சில்லென்று வீசும் கடல் காற்றை அனுபவித்துக்கொண்டே
வண்டியை ஓட்டிச் சென்றது சுகமான அனுபவம்.
விரைவிலேயே ராகுலும் சுஷ்மிதாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
வகுப்புகள் மாலைநேரத்தில் ஆனதால் பெசன்ட் நகரிலிருந்து வரும்போது அடையாறில் சுஷ்மிதாவை ஏற்றிக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு வருவதும் அதைப்போல இரவு கொண்டு விடுவதும் வசதியாகப் போனது.
ஒரு நாள், கடைசி நேரத்தில் வகுப்புகள் இரத்து ஆனவுடன், என்ன செய்வது என்று இருவரும் யோசிக்க,
“நான் இதுவரை கடற்கரைக்கு சென்றதில்லை அலைகள் முட்டும் அந்த இடத்திற்குச் செல்லலாமா” என்று கேட்டாள்.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கடற்கரை ஒரு பெரிய விஷயம் அல்ல. அது மட்டுமல்லாமல் அதனை அனுபவிக்கத் தெரியாதவர்கள்.
சினிமாவுக்கு போகலாமா என்று யோசனை செய்த ராகுல் கடற்கரை என்றவுடன் சரி என்று சொன்னான்.
கரையில் அலைகள் மோதி விட்டு செல்லும் காட்சி அவளுக்கு புதியது. சிறிய அலைகள். பின்னாலேயே குழந்தைகளைத் தேடி வரும் தாய் போலப் பெரிய அலை வந்து எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு மீண்டும் கடலுக்குள் செல்வது. மீண்டும் சிறிய அலைகள், அதனைத் தொடரும் பெரிய அலை. தொடர்ச் சங்கிலியாக நடக்கும் இந்த விளையாட்டு, சுஷ்மிதாவுக்கு உற்சாகத்தை ஊட்டியது. தண்ணீரில் நிற்கும்போது, அலைகள் கால்களைத் தழுவி விட்டுத் திரும்பிப் போகும்போது
நிற்பவரையும் இழுத்துச் செல்வது போல ஏற்படுத்தும் உணர்வு. அரிந்து செல்லும் மணல் பாதங்களில் ஏற்படுத்தும் குறுகுறுப்பு. குழந்தை போல அவள் துள்ளிக் குதித்து விளையாடினாள்.
எப்பொழுதெல்லாம் வகுப்புகள் இல்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் நேரத்தை கடற்கரையில் செலவழித்தனர்.
அது ஒரு மாலை. இருவரும் கடற்கரை மணலில் தண்ணீரை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது அவர்களது விரல்கள் உரசிக் கொண்டன. ராகுல் அந்த விரல்களைத் தொட்டான். அவள் வெடுக்கென்று தன் கைகளை இழுத்துக் கொண்டாள். ராகுல் தனது செய்கைக்கு வெட்கப்பட்டான். அவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது கூட சுஷ்மிதா எப்போதுமே வண்டியைத் தான் பிடித்துக் கொள்வாளே தவிர ராகுலை தொட மாட்டாள்.
அதற்குப் பிறகு அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அலைகள் உரசும் கரையில் அருகருகே அமர்ந்தார்கள். தூரத்தில் துறைமுகத்திற்குள் இடம் கிடைக்காமல் காத்திருக்கும் கப்பல்கள். கட்டுமரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக அலைகளில் மேலும் கீழும் இறங்கித் தத்தி தத்தி செல்வது ரம்மியமாக இருந்தது.
வெகுநேரம் நிலவிய அமைதியை சுஷ்மிதா கலைத்தாள்.
“ஏன் ராகுல் பேசாம இருக்க? என்ன யோசனை?”
“ஒண்ணும் இல்லை சுஷ். கடலை ரசிக்கிறேன்”.
மேற்கில் கதிரவன் மறைந்து விட்டது என்பதனை உறுதி செய்து கொண்டு, இனி கேட்போர் யாரும் இல்லை என்கிற தைரியத்தில் நீரிலிருந்து நிலவு எட்டிப் பார்த்தது. தங்கக் குழம்பில் முக்கி எடுத்தது போல தகதகவென ஜொலித்தது நிலா. எல்லாம் கொஞ்ச நேரத்திற்குத் தான். மேலே எழும்பி வரும்போது தனது மஞ்சளை இழந்து வெள்ளை கோலம் பூண்டு விடும். அன்று பௌர்ணமி . முழு நிலவு. வானிலிருந்து குடம் குடமாய் பாலை கொட்டியது போல கடல் காட்சி அளித்தது.
குளிர்ந்த காற்று, உடலெங்கும் பரவிச் சிலிர்க்க வைத்தது.
இதுவரை இவர்களது உரையாடல்கள் பெரும்பாலும் பாடங்கள், பேராசிரியர்கள் என்கிற அளவில்தான் இருந்தது. எப்பொழுதாவது அவள் தன்னைப் பற்றிக் கூறுவாள். படிப்பதற்காகவே மாமா வீட்டுக்கு வந்து இருப்பதாகவும் அவர்தான் தங்கள் குடும்பத்துக்கு எல்லாமே என்றாள்.
இரண்டு மூன்று தடவை அவள் வீட்டிற்குச் சென்றிருந்த போது மாமாவைச் சந்தித்துப் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் சென்னையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் உயர்பதவியிலிருந்தார்.
“ராகுல் நான் சென்னைக்கு வந்ததே நல்லபடியா எம்பிஏ படிச்சு முடிச்சுட்டு போகணும்னுதான். நான் வேற எந்த ஊர்ல படித்திருந்தாலும் ஹாஸ்டல், சாப்பாடுன்னு செலவு. மாமா வீட்டில தங்கிப் படிக்கிறதாலே செலவு எதுவும் இருக்காது என்று அம்மா மெட்ராஸ்க்கு அனுப்பி வச்சாங்க”.
எதுவும் சொல்லாமல் ‘உம்’ கொட்டினான்.
“எங்க அப்பா இருந்த வரைக்கும் நாங்க ரொம்ப வசதியா இருந்தோம். அப்பா அம்பாலாவில் ஒரு தொழிற்சாலையில் பெரிய பொறுப்பில் இருந்தாங்க. திடீர்னு ஒருநாள் நெஞ்சு வலி வந்து இறந்து போயிட்டாங்க. கம்பெனி நிர்வாகம் அம்மாவுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தாங்க. அதுவரைக்கும் மகாராணி மாதிரி வீட்ல வலம் வந்த அம்மா வேறு வழியில்லாமல் வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம். அப்பா மிக உயர்ந்த பதவியில் இருந்தாங்க. ஆனா அம்மாவுக்கு மிடில் மேனேஜ்மென்ட்ல வேலை. மன வருத்தமும் அழுத்தமும் அம்மாவைப் பாதித்தது. என்னையும் என் தங்கச்சியையும் படிக்க வைக்கணும் அப்படிங்கிற வைராக்கியத்தில எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்காங்க”.
ராகுலுக்கு இதை எல்லாம் ஏன் இப்போது தன் இடத்திலே சொல்கிறாள் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.ஒரு வேளை அவளுடைய கைகளைத் தான் தொட முயற்சித்ததற்கு எதிர்வினையோ என்று கருதினான். தான் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று வருந்தினான்.
“ராகுல் எங்க அப்பாவ நான் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா? ஒருவேளை நான் பிறப்பதற்கு முன்னேயே அவர் இறந்து போயிருந்தா எனக்கு அவரோட பிரிவு தெரிஞ்சு இருக்காது. என்னால தாங்க முடியாமல் எத்தனை தடவ அழுது இருக்கேன் தெரியுமா. அவர் எங்க மேல பாசத்தைத் தவிர வேற எந்த உணர்ச்சியும் காட்டியதில்லை தெரியுமா”.
பேசிக்கொண்டே இருந்தவள் திடீர் என்று கேவிக்கேவி அழ ஆரம்பித்து விட்டாள். அதுவும் இந்தியில் ஏதோ சொல்லி அழுதாள். சுண்டல் விக்கிற பையன் நின்று உற்றுப் பார்த்துவிட்டுச் சென்றான்.
ராகுலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தொட்டு ஆறுதல் சொல்லவும் தயக்கமாக இருந்தது.
“கூல் டவுன் சுஷ்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான்.
அவள் வாய்விட்டு அழுது கொண்டு இருந்தாள். ராகுல் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் தலை மீது கை வைத்தான். அவள் அப்படியே அவன் மேல் சரிந்தாள்.
“ராகுல் என்னமோ தெரியல. உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு. எனக்கு ஆதரவா இருப்ப, நம்பிக்கைக்கு உரியவன்னு மனசுக்கு தோணுச்சு. நம்ம வகுப்பில யார் கிட்டயும் ஏற்படாத ஈர்ப்பு உன் கிட்ட தான்டா வந்தது. நீ பேசறது, பழகறது, நடந்துக்கறது எல்லாமே எனக்கு எங்க அப்பாவை நிறையத் தடவை நினைவுப்படுத்துச்சு. அதே நேரத்துல என்னோடப் பொறுப்பு எனக்குத் தெரியும். அதனாலதான் இது வரைக்கும் எச்சரிக்கையோடு இருந்து வரேன்’.
அவள் கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான். பஞ்சு போல இருந்தது. “சுஷ் நீ எப்போதுமே என் கூட இருக்கணும்னு தோணுது. அதைவிட எனக்குச் சந்தோஷம் கொடுக்கக் கூடியது எதுவும் இல்லை. என் கூட இருப்பியா?”
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இதைப்போல எத்தனையோ காதல்கள் மலர்ந்ததை நான் கண்டுவருக்கிறேன். ஆகவே இதில் என்ன புதிதாக இருக்கப்போகிறது என்கிற அலட்சியத்தில் நிலா மேகங்களோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.
“ராகுல் அய் திங்க் அம் ஃபாலிங் இன் லவ் வித் யூ”
அவளை அனைத்துக் கொண்டு காதருகில் கிசுகிசுத்தான், “அய் அம் ஸோ லக்கி டியர்”. அவள் காது மடல்களில் முத்தம் கொடுத்தான்.
***
“சார் ஆர் யூ ட்ராவெலிங் பை எமிரேட்ஸ்?”
“யப்”.
“போர்டிங் கமன்ஸ்ட்.”
“தாங்க்ஸ்”.
முகம் கழுவித் தன்னை தயார்படுத்திக் கொண்டு பயணத்திற்கு ஆயத்தமானான்.
விமானம் பறக்கத் தொடங்கியவுடன் திரைப்படங்கள் பார்க்கலாம் என்று தொடு திரையில் தேடினான். மனம் எதிலும் செல்லவில்லை.
மனம் முழுவதும் சுஷ்மிதாவே நிறைந்திருந்தாள். வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்டுவிட்டு
கண்களை மூடிக்கொண்டு மீண்டும் நினைவுகளில் மூழ்கினான்.
*****
“ராகுல் நாம சீக்கிரமா முடிவு பண்ணனும்”.
“ம். எத பத்தி?”
“விளையாடுறியா? நம்ம கல்யாணத்தைப் பத்தி தான்”.
“அதுக்கு இப்ப என்ன அவசரம்? ”
“அம்மா எனக்கும் மேக்னாவுக்கும் கல்யாணம் பண்ணா தன் கடமை முடியும்னு நினைக்கிறாங்க. அதனால எனக்குச் சீக்கிரமே பண்ணிடுவாங்க”.
“எவ்வளவு நாள்ல?”
“அதிகபட்சம் ஒரு வருஷம்”.
“ஐயோ. எப்படிப்பா ? உனக்கு நல்லா தெரியும் நான் யுஎஸ் போய் படிக்கனும்னு”.
“நீ திரும்ப வரவரைக்கும் நான் காத்து இருக்கணுமா?”
“ஏன் காத்திருக்க முடியாதா?”
“உனக்கு நான் எப்படிப் புரிய வைப்பேன்'” சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கியது.
“உனக்கு நல்லா தெரியும் எங்க அப்பா சாகும்போது எனக்கு 12 வயசு. இந்த 8 வருஷம் என்னையும் என் தங்கச்சியையும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எங்கம்மா வளர்த்தாங்க தெரியுமா. எங்க தாத்தா வீட்டிலேயோ மாமாகிட்டயோ எந்த உதவியும் கேட்க கூடாதுன்னு தன்னோட சம்பாதியத்திலேயே எங்க ரெண்டு பேருக்கும் எந்த கஷ்டமும் தெரியாம வளர்த்தாங்க”.
சொல்லும்போதே அவள் குரல் உடைந்து கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.
“எங்க அம்மாவுக்கு ரொம்ப ஸ்டெரஸ் வந்தா வலிப்பு வரும். அந்த நேரத்துல அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க தெரியுமா”.
அவன் உடைந்து போனான்.
கைகளை விரித்து அவளை உள்வாங்கி அணைத்துக் கொண்டான். அவன் மார்பில் தலைசாய்த்து ‘ஒ’ வென கதறி அழுதாள்.
“என்னால முடியலடா. அய்யோ உன்ன பிரிஞ்சி என்னால இருக்க முடியாதுடா. அதே நேரத்துல அம்மாவ நெனச்சா கஷ்டமா இருக்குடா. எனக்கு மட்டும் ஏன் இப்படி ராகுல்?” இரு கைகளாலும் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
ராகுல் அவள் கைகளை விலக்கி, தலையை உயர்த்தி நெற்றியில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்து முத்தமிட்டான்.
“எல்லாமே நல்லபடியாக நடக்கும்னு நம்புவோம். தயவுசெய்து இந்த மாதிரியான நெகட்டிவ் தாட்ஸ் வேண்டாம் சுஷ்”.
கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியாக இருந்தார்கள். தங்கள் நிலைப்பாட்டிலிருந்து எப்படி இறங்கி வருவது என்று தீவிரமாகச் சிந்தித்தனர். அமைதியாக இருந்தனர்.
அந்த கொடூரமான மௌனத்தை சுஷ்மிதாதான் கலைத்தாள்.
“ராகுல் நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?”
“ம்”.
“ப்ராமிஸ்?”
“ப்ராமிஸ்”.
“நீ தான் நம்ம க்ளாஸ்லயே ஃபர்ஸ்ட். இந்தப் படிப்புக்கே உனக்கு நல்ல வேலை கிடைக்கும். போறாததற்கு உங்க அப்பா பிசினஸ் வேற இருக்கு. இதுக்கு மேல எதுக்கு யுஎஸ் போய் படிக்கணும்?”
“சுஷ் வாழ்க்கையில என்னோட கனவு, இலட்சியம் வெளிநாட்டில போய் படிக்கனும். அப்புறம், அப்பாவோட சேர்ந்து ஃபேக்டரிய பாத்துக்கலாம்னு நினைக்கிறேன்”.
“ம்”.
“நான் இப்ப இந்த வாய்ப்ப விட்டுடேனா பிறகு படிக்க முடியாது. ரெண்டு வருஷம்தான்டா கண்ணு.. கண்ண மூடி கண்ண திறக்கிறதுக்குள்ள ஓடிப் போயிடும்”.
“டேய். புது உலகம் புது வாழ்க்கை அப்படின்னு போற உனக்கு ரெண்டு வருஷங்கிறது ரெண்டு நிமிஷத்துல ஓடிப்போய்டும். ஆனா உன்ன பிரிஞ்சி இருக்க போற எனக்கு ஒரு நிமிஷம்ங்கறது ஒரு யுகம் மாதிரி இருக்கும்”.
“நான் மட்டும் உன்ன பிரிஞ்சு சந்தோஷமா இருப்பேன்னு நினைக்கிறியா?”
“அப்படி சொல்லல. நீ ஒரு குறிக்கோளோடு போற. அத உறுதியா பற்றி இருக்கிற வரைக்கும் மற்றதெல்லாம் உனக்கு இரண்டாம் பட்சம்தான். இந்த மூணு வருஷத்துல நான் உன்கிட்ட வியந்து அதிகமா இரசித்தது உன்னுடைய உயர்ந்த குறிக்கோள்களும் அதை அடையனும்கிற வைராக்கியமும் தான். ஆனா இப்ப அதுவே எனக்கு எதிராக அமைஞ்சிடுமோன்னு பயமா இருக்கு”‘.
“சுஷ்மிதா எல்லாத்தையும் விட்டுட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு மனசு சொல்லுது. ஆனா இப்படிப்பட்ட வாய்ப்பை விட்டுடாதேன்னு அறிவு சொல்லுது”.
“ராகுலை நன்கு அணைத்துக்கொண்டாள். அய் லவ் யூ டா கண்ணா. அய் டிரஸ்ட் யு” என்றாள்.
அவனும் அணைப்பின் கதகதப்பில் “அய் லவ் யூ டூ” என்றான்.
“நீ போய் படிப்பை முடிச்சுட்டு வா”.
“காத்திருப்பியா?”
“ம்.”
“வாய்திறந்து சொல்லு”.
“தெரியல ராகுல். எங்கம்மாவ மட்டும் இல்ல. மாமா மத்தவங்களையும் சமாளிக்கணும்”.
“கை மீறிப் போச்சுன்னா எனக்கு சொல்லு. நான் திரும்ப வந்துடறேன்”.
“நீ எங்க இருப்ப ராகுல்? நான் உனக்கு எப்படி சொல்றது?”
“நான் போய் சேர்ந்தவுடன உனக்கு போன் பண்றேன்”.
“ம்”.
சொல்லிவிட்டானே தவிர தொடர்பு கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதைப் போன சில நாட்களிலேயே புரிந்து கொண்டான். இவனுக்கு நேரம் கிடைத்து அழைக்கும் போதெல்லாம் இந்தியாவில் பின்னிரவு. அவள் வீட்டில் தொலைபேசி இல்லாததால் தெரிஞ்சவங்க வீட்டுக்குப் பண்ணி அவளை அழைக்க வேண்டும். யாரோ எடுத்து இந்தியில் பேசினார்கள். மேலும்
லேக் காரணமாக ஒரு சில நொடிகள் கழித்து தான் இங்கே இருப்பவர்களுக்கு ஒலி கேட்கும். பழக்கம் இல்லாதோருக்கு சரியாகப் பேச முடியாது. இந்த பிரச்சினைகள் காரணமாக அவளோடு பேசுவது கடினமாகிவிட்டது.
ராகுல் கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்புக்குள் மூழ்க எல்லாமே, சுஷ்மிதாவையும் சேர்த்து வெளி வட்டத்திற்குச் சென்று விட்டன.
நாட்கள் உருண்டன. வருடங்கள் ஓடின.
தொடர்புகள் அறுந்தன.
***
வெள்ளி இரவு .டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் கம்பீரமாக மிதந்து வந்து தரையிறங்கியது.
அவன் பெயர் தாங்கிய பதாகையுடன் ஷெரட்டன் ஓட்டல் சிப்பந்தி காத்திருந்தார்.
மறுநாள் காலை எழுந்து கான்ஃப்ரன்சுக்கு கிளம்பினான்.
வாட்ஸ் அப்பில் சுஷ்மிதாவின் செய்தி காத்திருந்தது.
நீ டெல்லிக்கு பத்திரமாய் வந்திருப்பாய் என்று நம்புகிறேன். பயணம் எப்படி இருந்தது?
நன்றாக இருந்தது.
எங்குத் தங்கி இருக்கிறாய்?
ஷெரட்டன்.
கான்ஃப்ரன்ஸ்?
இதே இடத்தில்தான்.
மாலை டின்னர்?
நீ வற்புறுத்தினால் கண்டிப்பாக வருகிறேன்.
வற்புறுத்துகிறேன்.
ஒரு ஸ்மைலி அனுப்பி விட்டு கான்ஃப்ரன்ஸில் மூழ்கி விட்டான்.
மாலை சுஷ்மிதாவின் வீட்டிலிருந்து கார் வந்திருந்தது.
ராகுலை சுஷ்மிதாவும் அவள் கணவரும் வாசலுக்கே வந்து வரவேற்றார்கள்.
வீடு பிரம்மாண்டமாக இருந்தது. விலை உயர்ந்த ஃபர்னிச்சர்கள், அலங்கார விளக்குகள், கலைப் பொருட்கள் அலங்கரித்து இருந்தது. வீட்டின் முன் பகுதியில் பச்சை பாவாடை விரித்தது போல கொரியன் புற்கள் அழகு ஊட்டின. அங்கும் உட்கார்ந்து பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும் மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்தவுடன் அவர்கள் வெளியே தோட்டத்தில் வந்து அமர்ந்தார்கள்.
அஜித் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்து ரிடையர் ஆனவர். அவரது மூதாதையர்கள் ராஜஸ்தானில் அரச வம்சத்தை சார்ந்தவர்கள். ஏராளமான சொத்துக்கள்.
“ராகுல் என்ன குடிக்கிறீங்க…. விஸ்கி, பிராண்டி?”
“எனக்கு அது பழக்கமில்லை”.
“ஆச்சரியமா இருக்கு”.
“நான் இளைஞனாக இருக்கும்போது முயற்சி பண்ணினேன். பிறகு தொடரல”.
ராகுல் ஆரஞ்சு சாறு போதுமென்று எடுத்துக் குடித்தான்.
படிக்கும் காலத்தில் வகுப்புத் தோழர்கள் ஒரு சனிக்கிழமையன்று சுமார் 30 பேர் பேருந்தில் சென்னைக்கு அருகே உள்ள கோனே அருவிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். ராகுலும் சுஷ்மிதாவும் சென்றார்கள். பேருந்தில் அருகருகே அமர்ந்து கொண்டனர். கல்லூரி கால வாழ்க்கையில் இனிமையாக அமைய வேண்டிய அந்த நாள், அவனைப் பொறுத்தவரையில் சோகத்தில் ஆழ்த்தியது.
வண்டி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே பின் இருக்கைகளிலிருந்தவர்கள் பியர் சாப்பிட தொடங்கினார். ராகுலுக்கு பழக்கம் இல்லையென்றாலும் தானும் முயற்சிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. தன் இருக்கையிலிருந்து எழுந்து பின்னால் சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டான். “நீ சாப்பிடு” என்று ஒருவன் சொல்ல உற்சாகமாய் வாங்கி குடித்தான். முதன்முறையாகச் சாப்பிட்டதால் அவனுக்குப்போதை அளித்தது.
வயிறு முட்டக் குடித்தவுடன் தள்ளாட்டத்துடன் வந்து சுஷ்மிதா அருகில் அமர்ந்தான். வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள் டக்கென்று அவன் பக்கம் திரும்பி,
“மரியாதையாக இங்கிருந்து எழுந்து சென்று விடு”
என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் கண்டிப்புடன் சொன்னாள்.
வெலவெலத்துப் போன ராகுல் தன் இடத்தை மாற்றிக் கொண்டு முன்னால் அமர்ந்திருந்த வேறொரு நண்பன் பக்கத்தில் சென்று அமர்ந்தான். இந்த பயணத்தில் மட்டுமின்றி திரும்பி வந்த பிறகும், இரண்டு நாட்கள் அவனோடு பேசவில்லை. மூன்றாவது நாள் தான் இயல்புக்குத் திரும்பினாள்.
“நான் என்ன அப்படி பெரிய தப்பு பண்ணிட்டேன்னு என்ன வறுத்து எடுத்திட்ட?”
“தண்ணி அடிச்சதும் இல்லாம என்ன தப்புன்னு கேட்க்கிறீயே. உனக்கு கொஞ்சம் கூட வெக்கமில்லையா. செஞ்சது தப்புன்னு தெரியாதா?”
“ஒரு பியர் சாப்பிட்டது தப்பா?”
“ஆமாம் தப்புதான். ஆல்கஹாலை எந்த விதத்திலும் சாப்பிட்டாலும் தப்புதான்”.
“அப்படின்னா பெனட்ரில்கூட குடிக்க கூடாதுன்னு சொல்லுவியா?’
“டேய். நான் சீரியஸா பேசறேன் உனக்கு தமாஷா?”
“இல்ல சுஷ். நீ இவ்வளவு சீரியஸா எடுத்துப்பன்னு தெரிஞ்சிருந்தா நான் சத்தியமா சாப்பிட்டே இருக்க மாட்டேன்”.
“இடஸ் ஒகே. இனி சாப்பிட மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு”.
“சத்தியமா சாப்பிட மாட்டேன். போதுமா?”
ஆசையாய் அணைத்துக் கொண்டாள்.
“ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எப்படி உங்களுக்கு அவ்வளவு உறுதி வந்தது?” என்ற அஜித்தின்
கேள்வியால் நினைவுகளிலிருந்து திரும்பிய ராகுல்,
ம். இப்பொழுது செல்ல முடியுமா? சுஷ்மிதாவால்தான் நான் குடிப்பதை விட்டு விட்டேன் என்று.
“எனக்கு உடம்புக்கு ஒத்துக்கொள்ளலைன்னு அப்பவே விட்டுட்டேன்”. சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் சுஷ்மிதாவை பார்த்தான்.
அவள் கவனித்ததாகவே தெரியவில்லை. மேசையில் மீது கண்ணாடி கிளாஸ்களை அடுக்குவதில் மும்முரமாக இருந்தாள்.
“எனக்கெல்லாம் சாப்பிடலன்னா தான் உடம்புக்கு ஒத்துக்காது போயிடும்” என்று பலமாகச் சிரித்துக்கொண்டே கூறினார். பேசிக்கொண்டே தனது கிளாசில் விஸ்கியை ஊற்றிக்கொண்டு சுஷ்மிதாவை பார்த்து
“டியர் உனக்கு? ஓட்கா ஆர் ஸ்காட்ச்” என்று வினவ,
“ஸ்காட்ச் சாப்பிடுறேன்” என்றாள்.
“சோடாவா இல்ல தண்ணீரா?”
“ஆன் தி ராக்ஸ்” என்றாள்.
ராகுல் அதிர்ந்தான். அவனால் நம்பவே முடியவில்லை. அவளது செய்கைகளைக் கவனித்தான்.
கிளாஸில் இருக்கும் விஸ்கியின்
வெட்ப நிலையை, உள்ளங்கை சூடு கெடுத்துவிடக் கூடாது என அக்கறையோடு நளினமாக கிளாஸை கையாண்டாள்.
பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென சுஷ்மிதா ,
“இன்னும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்”
என்று எழுந்திருக்க முயல,
“நீ இரு. நான் போய் எடுத்துட்டு வரேன். நீ உன் ஃபிரண்டோட பேசிக்கிட்டு இரு” என்று சொல்லி எழுந்து சென்றார் அஜீத்..
சுஷ் என்று அழைக்கத் தொடங்கி “சுஷ்மிதா” என்றான்.
“ம். என்ன?” புருவங்களை உயர்த்தி.
“நான் ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டேன்னு சொன்னனே, அதுக்கான காரணம் உனக்கு நினைவிருக்கா?”
உதடுகளை பிதுக்கி, “இல்லையே” என்றாள்
“நாம கல்லூரியில் எல்லோரும் கோனே அருவிக்கு சுற்றுலா போனமே நினைவிருக்கா?”
“ஆமா”.
“அந்த டிரிப்ல பஸ்ல பியர் சாப்பிட்டேன்னு கோபப்பட்டு நீ என்னை திட்டல”.
“நானா, திட்டினேனா?”
“ஆஹா எப்படி உன்னால் மறக்க முடிந்தது. என்கிட்ட இனிமே குடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்யச் சொன்னேயே. நான் கூட சத்தியம் பண்ணினேன். கொடுத்த சத்தியத்திற்காக இதுவரைக்கும் நான் சாப்பிடவே இல்ல தெரியுமா”.
“ஒ மை குட்னஸ். யு ஆர் கிரேஸி.
அப்ப எதுவோ அந்த வயசுல சொன்னதற்காக இதுவரைக்குமா?”
“மற்ற எந்த வார்த்தைகளைக் காப்பாற்ற முடியலைன்னாலும் இந்த ஒன்றிலேயாவது உறுதியா இருக்கிறனேன்னு சந்தோஷப்பட்டுக்கிறேன்”.
“ராகுல் நான் எப்போவோ எல்லாத்தையுமே மறந்துட்டேன்”.
அந்த எல்லாத்தையுமே என்பதில் கொஞ்சம் கூடுதலான அழுத்தம் தெரிந்தது.
“ம். உண்மையாகவா?” ரொம்ப பிராக்டிகலான்னு சொல்லு”.
“பிரக்மாட்டிக்ன்னு சொல்லாம். முதல்ல கொஞ்ச நாளைக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். காதலோட வலி என்னன்னு உணர்ந்த தருணங்கள் அது. சில சமயங்கள்ல செத்துடலாமான்னு கூட தோனுச்சி. நல்ல வேளையா அத்தகைய எண்ணம் சீக்கிரமாகவே மறைஞ்சு போச்சு. அதற்குப் பிறகு, நான் ஏமாற்றப்பட்டேன் என்கிற கோப உணர்வு அதிகமாச்சு. உன்னை பழி வாங்கலாமான்னுகூட யோசிச்சேன்” சிரித்துக்கொண்டே கண்ணடித்தாள்.
“ம். அப்புறம்?”
“இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு, எல்லாத்தையுமே மறந்துட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். வாழ்க்கைங்கிறதுநமக்கு கிடைச்ச ஒரு பெரிய வாய்ப்பு. அதை ஏன் கோபம், அழுகை, வருத்தம், இப்படியான எதிர்மறை உணர்ச்சிகளை போட்டு வீணாக்கனும். ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழனும் அப்படின்னு முடிவு பண்ணி, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டும்தான்னு வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஒரு உண்மையை சொல்லட்டுமா?”
அவனது முகத்துக்கு அருகில் வந்து,
“உன்னை திருமணம் செய்யாமல் போனது எவ்வளவு நல்லதுன்னு சில நேரங்களில் நெனச்சிருக்கேன். காரணம் என் கணவர் அஜித். மாதிரி ஒரு நல்ல மனிதர் பண்பாளர் கிடைக்காமல் போயிருக்கும் அல்லவா. எல்லாமே மனசுதான் ராகுல். நம்மைச் சுற்றி நடக்கிற எல்லாத்தையும் எல்லா நேரங்களிலும் நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. அப்படி முயற்சிக்கிறதும் வீண். அதே நேரத்தில் அத்தகைய சூழலுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்பது நம் கையிலதான் இருக்கு”.
“நீ பேசறது கேட்க சந்தோஷமாக இருக்கு. வாழ்க்கையை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கே சுஷ்…. சுஷ்மிதா” என்றான்.
“பரவாயில்ல சுஷ்ன்னே கூப்பிடு” என்றாள் சிரித்துக்கொண்டே”.
“எல்லாமே அனுபவங்கள் தானே ராகுல். 12 வயசு இருக்கும்போது வீட்ல அப்பாவோட உடல கொண்டாந்து கிடத்தின போது ஏற்பட்ட அதிர்ச்சி. வாங்கின கடனைத் திருப்பிக் கொடுங்க. இல்லைனா வீட்ட விட்டு போங்க என்று துரத்திய உறவுகள். பல வகைகளில் தொடர்ந்து ஏதாவது இன்னல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் மீண்டு எழுந்து வந்துட்டோம்னு நினைச்ச முக்கியமான கட்டத்தில அம்மா போயிட்டாங்க. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வாங்களே எது நம்மை கொல்லவில்லையோ அது நம்மை மேலும் உறுதியாக்கிறதுன்னு. எல்லாமே பார்த்தாச்சு இனிமே நமக்கென்ன புதுசா வந்துட போகுது என்கிற மனநிலைக்கு வரும்போது அங்கு மகிழ்ச்சி ஆக்கிரமிச்சுக்குது. கடந்த காலத்தில் நடந்தவை குறித்து கவலைபடுறதும் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு அச்சமும் இல்லை. நிகழ்காலத்தினை நிம்மதியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்”.
அவளை வியந்து பார்த்தான். எப்படி அறிவும் அனுபவமும் அவளைப் பக்குவமாக்கிவிட்டது.
“மனசுங்கிறது ஒரு பீரோ மாதிரி. அதுல எத்தனையோ துணிகள் இருக்கும் . வெவ்வேறு சந்தர்ப்பத்திற்கு எது சரியாக இருக்குமோ, நமக்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்து அணிகிறோம். நமக்கு ஒத்துவராத கிழிந்து போன பழைய துணிகளை அகற்றிவிடுகிறோம். சில துணிகளை இப்பொழுது பயன்படுத்த முடியாது, பொருந்தாது என்றாலும் கூட அது நினைவூட்டும் பசுமையான தருணங்களுக்காகப் பத்திரமாக வைத்திருப்போம். முதல் திருமண நாளுக்கு வாங்கியது, வேறு ஏதாவது முக்கியமான நிகழ்வுக்கு வாங்கியது, நமக்குப் பிரியமானவர்கள் கொடுத்தது என்று அடுக்கி வைத்திருப்போம். அவைகளை இனிமேல் எப்போதும் அணிய முடியாது என்று தெரிந்தாலும் கூட பத்திரமாக வைத்திருப்போம். எப்பவாது அவைகளை கைகளில் எடுத்து அந்த நினைவுகளில் மூழ்குவது சுகமான அனுபவம் தானே. அதுபோலத்தான் நான் உன்னோடு பழகிய காலங்களை எடுத்துக் கொள்கின்றேன்”.
அஜித் தட்டு நிறைய வெவ்வேறு ஸ்னாக்ஸ் நிரப்பிக் கொண்டு வந்தார்.
“ஏன் டியர் இவ்வளவு நேரம்?”
“உள்ள போனால், ஃபோன் அடிச்சுகிட்டு இருந்தது.. குப்தா ஃபோன்ல. அதான் பேசிட்டு வந்தேன்”.
“என்னவாம்?”.
“நாளைக்குச் சாயந்தரம் வீட்டுக்கு டின்னருக்கு வர சொன்னான். மகளும் மருமகனும் வராங்களாம்”.
“சரி. ஒ மை குட்னஸ், ராகுல் உன் ஃபமிலிய பற்றி கேட்கவே இல்லையே. யாரை கல்யாணம் பண்ணிக்கிட்ட! உனக்கு தான் நிறைய அத்தை பொண்ணுங்களாச்சே. அவங்கள்ல யாராவதா, இல்ல, அப்பா அம்மா பார்த்துக் கட்டி வெச்ச பொண்ணா?”
மிகவும் இயல்பாகச் சாதாரணமாக சுஷ்மிதா கேட்டாலும் உள்ளுக்குள் ஏதோ மெலிதாக நக்கல் கலந்திருப்பதை உணர்ந்தான்.
“நான் இலண்டனில் படிக்கும் போது அங்கே ஒரு இலங்கை பெண்ணோட நட்பாச்சு. அவங்க அப்பா, அம்மா யுத்த காலத்துல புலம் பெயர்ந்து வந்தவங்க. அவளை நான் கல்யாணம் செய்துகிட்டேன்”
“யுஎஸ் தானே போனே?”
“ஆமாம். யுஎஸ்ல இருந்து வந்து கொஞ்ச நாள் கழிச்சு லண்டனில் ஒரு வருஷம் படிச்சேன்”.
“உன்னோட வைஃப் பேர் என்ன?”
“யாழினி”.
“ஹாஹா…. நாங்க எப்படிச் சரியாக உச்சரிக்க முடியும்?” அஜீத்.
“எஸ் டார்லிங், தமிழ் பெயர்கள் ரொம்ப அழகானவை. ஆனால் எளிதில் உச்சரிக்க முடியாது”.
“உங்களுக்கு எத்தனை பசங்க?” அஜீத் கேட்டார்.
“எனக்கு இரண்டு பெண்கள். இருவரும் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்”.
“உங்களுக்கு?”
“என் மக பெரியவள். ஒரு வருஷத்துக்கு முன்னால கல்யாணம் ஆகி இப்போ டென்வர்ல இருக்கா. அவ கூட இருந்துட்டுதான் திரும்பி வந்தேன். மகன் இங்க ஜேஎன்யூல எம் ஏ படிக்கிறான்”..
இரவு உணவு செய்திருந்தார்கள். காளான் பிரியாணி, மிளகுடன் பொறித்த சிக்கன், முட்டை, பன்னீர், ரொட்டி, சப்ஜி என இருந்தது.
இவள் சிக்கன் சாப்பிடுவாளா?
ஒரு தடவ அம்மா செஞ்ச மட்டன் பிரியாணி கொண்டுபோய் கொடுத்தபோது ,அது என்னன்னு தெரியாம சாப்பிட்டு விட்டு, என்னம்மா ஆர்ப்பாட்டம் பண்ணினாள். நான் எதோ கொலையே செஞ்ச மாதிரி இல்ல கத்தினாள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கவனித்தான், அவள் தட்டில் சிக்கன் இல்லை.
“நீங்கள் நான் வெஜ் சாப்பிட மாட்டிங்களா?” என்றான்.
“இல்லை அஜீத்தும் பசங்க மட்டும் தான் சாப்பிடுவாங்க”.
அஜீத்தை பார்த்து “நான் சென்னையில் இருந்தபோது ஒருமுறை இவர் மட்டன் பிரியாணி கொண்டுவந்து என்னைச் சாப்பிட வைத்துவிட்டார்”
“ஆஹா அது உனக்கு இன்னும் நினைவிருக்கிறதா?” என்றான்.
“ஏதோ பெரிய பாவம் பண்ணிட்ட தா ரொம்ப நாளா நெனச்சு வருந்திக் கொண்டிருந்தேன”.
“நாம ஏதாவது ஒரு பாவம் பண்ணிட்டு மனசு வருத்தமா இருந்தா என்ன செய்யணும் தெரியுமா?” என்று கேட்டார் மேஜர்.
ராகுல் முழிக்க சுஷ்மிதா, ‘அதுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணனும். க்யா மே ஸஹி வுன்….”
“நஹி. கல்த்தி”.
ராகுல் விழித்தான்.
“க்யா ஆஃப் இந்தி போல்தே ஹை”
“இல்லை எனக்குத் தெரியாது” என்றான்.
“ஒரு தப்பு பண்ணிட்டு மனசு வருத்தமா இருந்தா, சிம்பிளான வழி, அதைவிடப் பெரிய தப்பு பண்ணிடனும்”. என்று சொல்லிவிட்டு வெடிச் சிரிப்பு சிரித்தார்.
“இருந்தாலும் அந்த தப்பு, தப்புதானுங்களே. அதனால் ஏற்படும் பாதிப்பு அப்படியேதான் இருக்கும்”.
“யேய் டோன்ட் டேக் தட் சீரியஸ்லி. ஜஸ்ட் கிட்டிங்”.
***
“அது எப்படி இந்தி தெரியாதுன்னு சொல்லுவ”.
“தெரியாதுன்னா தெரியாதுன்னு தானே சொல்லுவாங்க”.
பக்கத்தில் இருந்த மணலை எடுத்து அவன் மீது அடித்து “கிண்டலா?” என்றாள்.
“உண்மையாகவே எனக்குத் தெரியாது?”
“தெரிஞ்சிருக்க வேண்டாமா?”
“எதுக்கு?”
“அது நம்ம நேஷனல் லாங்குவேஜ் டா”.
“ஹாஹா. நாங்க இன்டர்நேஷனல் லாங்குவேஜையே ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கோம்”.
“அப்போ நீங்கள் மத்த ஸ்டேட் எல்லாம் போனா எப்படி பேசுவீங்க?”
“நாங்க ஸ்டேட்ஸ்க்கு போறத பத்தி இல்ல யோசிக்கிறோம்”.
“பாம்பே, டெல்லி போனால் எப்படி மேனேஜ் பண்ணுவீங்க”.
“இங்கிலீஷ்”.
“நம்ம நாட்டுக்குள்ள இந்தி தொடர்பு மொழியாக இருந்தா நல்லதுதானே”.
“நாங்க மூணு மொழி இல்ல படிக்க வேண்டி இருக்கும்”.
“ம். சரி விடு. நமக்கு கல்யாணம் ஆச்சுன்னா இங்கிலீஷ்லயே பேசுவோமா?”
“நீ தமிழ்ல பேசுவ. நான் இந்தியிலே பேசுவேன்”.
“ஸோ ஸ்வீட். எனக்குத் தமிழ் சொல்லி தருவியா?”
“நிச்சயமாக”.
***
‘நீங்க அடிக்கடி ஏதோ நினைவுகளுக்குள்ளே மூழ்கி போறீங்களே. ஏதாவது முக்கிய யோசனையா?” மேஜர் கேட்டார்.
சுதாரித்துக் கொண்டான் ராகுல், “இல்லை நத்திங். நேரமாச்சு. நான் புறப்படட்டுமா?”
“நீங்க இங்கேயே தங்கிட்டு காலையில போகலாமே ராகுல்” என்றார் மேஜர்.
“நான் அதுக்கு தயாராக வரவில்லை. இரண்டாவது காலைல எந்திரிச்சி விமானத் தளத்திற்கு போவதற்குத்தான் நேரம் சரியா இருக்கும்”
“ஷல் வி கோ அண்ட் ட்ராப் ஹிம். டிரைவர் இன்னைக்கு சீக்கிரமாகவே போய்ட்டார்”. சுஷ்மிதா.
“மேய் ந ஜாஸ் கட்.. தக்கான் மேசூஸ் கர் ரகா வுன். நீ போய் விட்டுட்டு வந்துடு சுஷ்மிதா”.
“கவலைப்பட வேண்டாம். நான் ஒலா இல்லனா வுபர் வர வச்சிக்கிறேன்”.
“ஒய் டாக்ஸி? அய் வுட் லவ் டு. நான் உங்களை இறக்கி விடறேன். இப்ப ட்ராஃபிக் இருக்காது”.
“அப்ப நாம கிளம்பலாமா?”
“எங்களுக்காக இந்த மாலை நேரத்தைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ராகுல். அடுத்த முறை. குடும்பத்தையும் அழைச்சிட்டு வாங்க”.
“நிச்சயமாக மேஜர். நீங்களும் குடும்பத்தோடு சென்னைக்கு வரணும்”.
கருப்புநிற பிஎம்டபிள்யூ சாலையில் வழுக்கிக்கோண்டு ஹோட்டலை நோக்கி புற்ப்பட்டது.
சுஷ்மிதா வண்டி ஓட்டுவதைப் பார்த்தான். அவள் ஸ்டியரிங் பிடித்திருந்த இலாவகம் அவளது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது. கருப்பு நிறத்தில் பொன்னிற பார்டரில் காட்டன் புடவை அணிந்திருந்தாள். மேட்சிங்காக பொன்னிற கலரில் ஜாக்கெட் அணிந்திருந்தாள். அவளுடைய சிவந்த நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. அவள் மீது வைத்த கண்களை அவனால் எளிதாக அகற்ற முடியவில்லை. 50 வயது கடந்தும் இன்னும் இளமையோடும் அதே துள்ளலுடன் இருக்கிறாளே.
ஒரு மாலை, மெரினா கடற்கரையிலேயே நடந்து கொண்டிருக்கும்போது எதிரே ஒரு வட இந்தியப் பெண்மணியும் அவர் கணவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அந்தம்மா ஏராளத்திற்கு பெருத்து இருந்தார். முதுகிலே இரு சிமெண்ட் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு நடப்பவனைப் போலத் தனது எடையைத் தூக்கிக் கொண்டு சிரமத்தோடு நடந்து வந்தார்.
சுஷ்மிதா அவன் கைகளைச் சீண்டினாள்.
‘என்ன” என்றான் ராகுல்..
“அந்தம்மாவ பாரு. பாவம்” என்றாள்.
“அவ பாவம் இல்ல அவர்தான் பாவம்” .
“ஹேய் நாட்டி” என்றாள்.
“அந்த அம்மா கூட கல்யாணத்துக்கு முன்னால அழகா வளைவுகளோடும் நெளிவுகளோடும் கவர்ச்சியாதான் இருந்திருப்பாங்க”.
“எப்படி சொல்ற?”
“நம்ம அனிருத் சொல்லுவான், ராகுல் இந்த வடக்கத்தி பொண்ணுங்க கல்யாணத்துக்கு முன்னால ஜிம்மு, டயட்ன்னு உடம்ப சிக்குனு வச்சுக்குவாங்க. கல்யாணம் ஆனவுடனே ஸ்வீட்டும் நெய்யும் கிலோ கணக்கில் சாப்பிட்டு மூணு வருஷத்துல அணுகுண்டு மாதிரி ஆயிடுவாங்க”.
“ஏய் அதெல்லாம் சும்மா”.
“யார் கண்டது சுஷ், நீ கூட மூணு வருஷத்துல அது மாதிரி ஆனாலும் ஆயிடுவ”.
“அய்யே. அதுக்கு வேற ஆளைப் பாரு.”
“உண்மையாகவா ? வேற ஆளப் பார்க்கட்டுமா?”
“டேய். கொன்னுடுவேன்டா”.
“ஹாஹா”
“சரி ராகுல் ஒருவேளை கல்யாணத்துக்கப்புறம் நான் குண்டாயிட்டா என்ன வெறுப்பியா?”
“காதல்ங்கறது அழகை வச்சி வரதில்லை. மனச வச்சி வரத்து.
“தேங்க்ஸ்”. அவன் கைகளை உறுதியாகப் பற்றிக் கொண்டான்.
***
இந்த உரையாடலை நினைத்துச் சிரித்துக்கொண்டான். சுஷ்மிதா முன்பைவிட கூடுதலான அழகோடு தெரிந்தாள். “தேஜஸ்” நிரம்பியிருந்தது.
கார் ஓட்டிக் கொண்டிருந்த அவள் இடது பக்கம் திரும்பி
“என்ன ராகுல்ஜி, கனவா?'”
“அய்யோ கனவெல்லாம் இல்ல. சும்மா பழசை நினைச்சுப் பார்த்தேன்”.
“நினைவுகள் நமக்குள்ளே இருக்கும் பொக்கிஷங்கள். நாம எப்ப வேண்டுமானாலும் கடந்த காலத்தில் எந்தக் கட்டத்திற்கும் போக முடியது. அதை நினைத்து அசை போட முடிகிறது’.
“ஆமா சுஷ். அதேமாதிரி, தேவைப்படும்போது நம்மையும் காலசக்கரத்தில் பின்னோக்கிக் கொண்டு போக ஒரு கருவி இருக்கணும். எச். ஜி.வெல்ஸ் டைம் மெஷின் படிச்சிருக்கியா”.
“ம். படிச்சு இருக்கேன்”.
“அதுமாதிரி ஒரு மிஷின் இருந்தா நம்ம முப்பது வருஷத்துக்கு பின்னால போயிடலாம் இல்ல”.
“ஏய் இப்ப தான் நினைவு வருது நீயும் நானும் ஒரு படம் போயிருந்தோமே நினைவு இருக்கா? இங்கிலீஷ் படம். இதே மாதிரிதான். அதில் ஒரு பையன் பின்னோக்கி இருபது வருஷமோ முப்பது வருஷமோ போவானே”.
“ஒ அது ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கோட பேக் டு ஃபயூச்சர். அருமையான படம்பா. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. சுஷ், அப்படி ஒரு மெஷின் நம்மகிட்ட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?”
“ஏன்?”
“30 வருஷத்துக்கு பின்னால போலாம்”.
“போயி?”
“நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப திரும்ப வந்துடுவேன்.”
“ஆஹா. ஆசைதான் உனக்கு”.
“ஏன் உனக்கு இல்லையா?”
அவள் பதில் சொல்லவில்லை.
சிறுது நேரம் கழித்து அவன்,
“ஏன் சுஷ். நான் ஏதாவது தப்பா கேட்டுட்டனா?”
“ராகுல் ஒருவேளை அப்படி ஏதாவது எந்திரத்தின் மூலமா காலசக்கரத்தில் முப்பது வருஷத்துக்கு பின்னால போறோம்னு வச்சுக்குவோம். கண்டிப்பா, அன்றைக்கு இருந்த மனநிலைக்கு நான் திரும்ப முடியாது. காரணம் இந்த 30 வருஷத்துல உலகத்தை நான் புரிஞ்சிகிட்டது, என்னோட அனுபவங்கள் இவைகளெல்லாம் சேர்ந்து உன்னைக் கல்யாணம் செய்துக்கறத தடுக்கும். அதுமட்டுமில்லாம அப்ப இருந்த வயசு, எதிர்காலத்தை பத்தின பயம், கூடவே, உன்னைப் போன்ற வசீகரமான ஆண் துணை இருக்கு அப்படிங்கற தைரியம் எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உன்மேல பைத்தியம் பிடிக்க வச்சிடுச்சு.இப்பத் திரும்பிப் போகும் போது உன் மீது காதல் வரும்னு சொல்ல முடியாது”.
தன் கவனத்தைச் சாலையில் செலுத்தினாள்.
“சுஷ், என்னைப் பொருத்தவரை வாழ்கையில் அது வசந்த காலம்னே சொல்லலாம். பலமுறை நினைத்து நினைத்து மகிழ்ந்து இருக்கிறேன். நினைவிருக்கா சுஷ், நம்ம காதலை ஃபரோபோஸ் பண்ணிகிட்ட அந்த மொமன்ட்.. முழு நிலவைச் சாட்சியா வச்சுக்கிட்டு ‘ஐ திங்க் ஐயம் ஃபாலிங் இன் லவ் வித் யூ’ என்றாயே? ”
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
“ம். நன்றாக நினைவிருக்கிறது. அந்த ரம்மியமான சூழல். மறக்க முடியுமா. ஈரக் காற்று. பசும் பாலில் தோய்த்து எடுத்ததுபோல வானிலே பௌர்ணமி நிலா. வெள்ளிக் கொலுசுகள் கொட்டி நிரப்பியது போலக் கடல். இனிமையான அலை சத்தம். உடலோடு ஒட்டி நெருக்கமாக வசீகரமான ஓர் ஆண். இச்சூழலில் எந்த பெண்ணுக்குத்தான் தேவைக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரோனை சுரக்காது.. அதைக் காதல் என்கிறோம்.
“ஆஹா எவ்வளவு ஈஸியா காதலை வேதிப்பொருட்களின் கலவை ஆக்கிட்ட.”
“ஒரு பெண்ணுக்குக் காதல் உணர்வுகள் ஏற்படச் சூழல் அவசியமாகிறது. உன்ன மாதிரி ஆணுக்கு, அழகான பெண்களைப் பார்த்தவுடனேயே டெஸ்டோஸ்டிரோன் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. இது தப்புன்னு சொல்ல. இட் இஸ் நேச்சுரல். ஐஸ்கிரீம் கடைய பார்த்த உடனே ஐஸ்கிரீம் சாப்பிடுனம்னு தோணுறது மாதிரிதான். இப்போ கூட கார்ல ஏறின உடனே உனக்கு அந்த உணர்வு வந்து விட்டது. நீ இந்த வயசுலயும் கவலைப்படாமல் சைட் அடிச்ச”. என்றாள்
இதற்குப் பதில் சொல்லாமல் அவன் சாலையை வெறித்துப் பார்த்தான்.
“என்ன கரெக்ட் தானே?”
“நான் உன் அழகை இரசித்தேன்”
“அது சரி. அத அப்படியே சொல்லிட்டு போகலாமே. எதுக்கு டைம் மெஷின் அது இதுன்னு ஒரு கதைய சொல்லி, 30 வருஷத்துக்கு பின்னால போய் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்ட.? நானும் ஆமாம் போய் பண்ணிக்கிட்டு வரலாம்னு சொல்லியிருந்தா, சந்தோஷப்பட்டு அதை செலிபிரேட் பண்றதுக்கு இன்னைக்கு முதல் ராத்திரி வச்சுக்கலாம்னு சொல்லி இருப்ப இல்ல” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
அவனும் சேர்ந்து சிரித்தான்.
“ஒருவேளை நான் ரொம்ப குண்டாகி உன்ன கவரக்கடிய வடிவத்தில இப்போ இல்லாம இருந்திருந்தா, உனக்கு இந்ந நினைப்பும் கேள்வியும் வந்திருக்குமா ராகுல்?’
ராகுல் திடுக்கிட்டுத் தடுமாறினான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்.
அவள் கவனம் மீண்டும் சாலையில் சென்றது.
சிறிது நேரம் கழித்து, கனைத்துக் கொண்டு,
“நான் இப்ப சொல்ல போறத கேட்டு வருத்தப்படாத. நீ நல்லவன், படிப்பாளி, திறமைசாலி. இதையெல்லாம் மட்டும் வச்சு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கலாம்னா நீ நிறையத் தகுதியானவன்தான். நிச்சயம் உன் குடும்பம் உன்னால் பெருமைப்பட்டு இருக்கும். பயன் அடைந்திருக்கும். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை நீ பெருத்த ஏமாற்றம். ஒரு பெண், ஆண் கிட்ட எதிர்பார்க்கிறது அன்பு மட்டுமல்ல. நம்பிக்கை. நம்பிக்கைங்கறது அவளுக்கு ஆணி வேர் மாதிரி. நான் உன்கிட்ட அந்த விஷயத்தில ஏமாந்துட்டேன் ராகுல். உன் மீது நான் எக்கச்சக்கமான நம்பிக்கை வைச்சிருந்தேன்”.
“அயம் சாரி சுஷ்”.
“யூ டோன்ட் நீட் டு. தேவை இல்லை. நீ சரியாத்தான் போய்க்கிட்டு இருந்த. வாழ்க்கையில் ஒரு இலக்கை நிறுவி அதனை நோக்கி நீ பயணிச்ச. உன்னை நான் தான் சரியா புரிங்சுக்கல”.
“தப்பு என் மேலதான் சுஷ்”.
“எல்லா பேருந்தும் சரியான ரூட்டில் தான் போகுது ராகுல். நாமதான் சில சமயங்களில் தப்பான வண்டில ஏறிடறோம். லீவ் இட்.”
ராகுல் உண்மையாகவே உடைந்து போனான். சிகாகோவில் விமான கூடத்தில் ஏன் சந்தித்தோம். பிறகு எதற்காக இவள் வீட்டுக்குச் சென்றோம். நாம் என்ன எதிர்பார்த்து இவளிடம் மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சித்தோம்.
“அஜித் மாதிரி ஒருத்தர் என் வாழ்க்கைக்கு கிடைச்சத பெரும் பேரா கருதறேன். அவரைப் போல ஒரு மனுஷன் கிடைப்பது அரிது. எல்லோருக்குமே முதல் ராத்திரிங்கறது மறக்க முடியாத இனிமையான அனுபவமா அமையும். ஆனால் எங்களுக்கு அது பரிதாபத்துல முடிஞ்சது. அவர் என்னை நெருங்கி வந்து அணைக்கும் போது எனக்கு ஃபிட்ஸ் வந்தது. அவருக்கு நான் ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்துட்டேன். அதுக்குக் காரணம் நீ தான்”.
ராகுல் உறைந்து போனான். கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து போனான்.
“நான் எவ்வளவோ சொன்னேன், கல்யாணத்துக்கு அப்புறம் வெச்சுக்கலாம்னு.. ஆனால் நீ கேட்கவே இல்லை. செக்ஸ்தான் உனக்கு குறிக்கோள்ன்னு இருந்திருந்தா எதுக்கு காதல், கத்திரிக்காயினு என் மனச கெடுத்திருக்கனும்”.
.
அவள் கண்களில் கண்ணீர் கோத்துக்கொண்டது. இடது கையால் டிஷ்யூ டப்பாவில் இருந்து ஒன்றை உருவியெடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டாள். நிற்காமல் தாரை தாரையாகக் கொட்டியது.
சுஷ் இதுக்கா நாம இவ்வளவு நாள் கழிச்சி சந்தித்திச்சோம் என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டுவிட்டான். அந்த ஒரு நொடியில் தான் அழிந்து போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.
வண்டியை இடது பக்கம் ஓரமாக நிறுத்திவிட்டு கைகளால் தலையினை அடித்துக் கொண்டு ஓவென அழுதாள்.
“சுஷ்”.
“டோன்ட் டாக். யூ சீட்டட் மீ. யூ ஆர் எ ஃபராட். நீ.பசுந்தோல் போர்த்திய புலி. இத்தனை வருஷம் ஆச்சு. நான் இருக்கனா, இல்லையானு கூட நீ கவலைப்படல” உச்சஸ்தாயில் கத்தினாள்.
சிறிது இடைவெளிவிட்டு,
“நான் நார்மலா இருக்கனும்னு என்ன பக்குவப்படுத்தி வச்சிருந்தேன். உன்னுடைய நினைப்புகள் மொத்தத்தையும் தொடச்சிப் போட்டுட்டேன். உனக்கு வேணூம்னா அது வசந்த காலமா இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது மறக்கப்பட வேண்டிய இருண்ட காலம்”.
அங்கலாய்ப்பும் அழுகையும் தொடர்ந்தது.
அவள் தன் கையறு நிலை எண்ணி வருந்தினான்.
பத்து நிமிடம் அப்படியே அமைதி நிலவியது.
பிறகு கார் புறப்பட்டது. அதற்குப் பிறகு அவள் எதுவும் பேசவேயில்லை. வண்டி செஷரட்டன் விடுதிக்குள் நுழைந்து போர்ட்டிக்கோவில் நின்றது. வெள்ளை உடையணிந்த சிப்பந்தி காரின் கதவைத் திறந்தான். அவன் இறங்கினான்.
“போய் வருகிறேன் சுஷ். தேங்க்ஸ்” என்றான்.
அவள் வண்டியிலிருந்து இறங்கி இந்தப் பக்கமாக வந்து அவனை அணைத்துக்கொண்டு,. மன்னிப்பு கேட்க, பரவாயில்லைன்னு இவன் சொல்லி பிறகு மகிழ்ச்சியுடன் தன் அறைக்குத் திரும்புவதாக கதை முடிந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
எழுதத் தொடங்கும் போதுதான் கதாசிரியரின் விருப்பத்திற்குக் கதை செல்கிறது. கதை, நகர்ந்து, வளர்ந்து விரிவடையும் போது கதாசிரியரை விழுங்கி விடுகிறது. தொடர்ந்து என்ன எழுத வேண்டும் என்று கதைதான் அவனுக்கு உத்தரவிடுகிறது. என்ன செய்வது?
“போய் வருகிறேன் சுஷ். தேங்க்ஸ்” என்றான்.
அவள் திரும்பாமல் முன்பக்கம் வெறித்துப் பார்த்தாள்.
“ம்.” என்று சொல்லிவிட்டு வண்டியை நகர்த்தினாள்.
கார் விர்ரென்று கிளம்பி சில நொடிகளில் பார்வையை விட்டு விலகியது.
சிலை மாதிரி நின்றான். தலை கிறுகிறு என சுற்றியது. திரும்பி மெதுவாக ஹோட்டலுக்குள் நுழைந்தான்.
ஆசுவாசப்படுத்திக் கொள்ள அங்கிருந்த விசாலமான சோஃபாவில் அமர்ந்தான். எப்படி எளிதாக சொல்லிட்டா? வெறும் செக்ஸுக்காக தான் நான் அவளை காதலிச்சேன்னு. அவன் உடல் நடுங்கியது.
சாய்ந்து கொண்டு கண்களை மூடினான்.
எத்தனையோ முறை நினைத்து நினைத்துப் பரவசமடைந்த அந்த சம்பவம் முதன்முறையாக கசந்தது அவன் மேலேயே வெறுப்பு வந்தது. சீ, நீ ஒரு மனுஷனா என்று கேட்கத் தோன்றியது.
சென்னையில் எப்போதுமே ஒரே வகையான மழைதான் பெய்யும். யாரோ மேலே தொட்டிய திறந்து விட்டது போலக் காட்டுத்தனமாக மழைபொழியும். இரசிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அபூர்வமாய் சில நேரங்களில் மெலிதாக பெய்து நம்மை நனைத்து விட்டுச்செல்லும். அன்று வகுப்புகள் முடிந்து திரும்பும் போது வானிலிருந்து மலர் தூவுவது போல மழை பெய்தது. அவளை இறக்கி விடும்போது லேசாக நனைந்து இருந்தான்.
“உள்ளே வா. டீ குடித்துவிட்டு போ” என அழைத்தாள்.
“கிளம்புறேன் நேரமாச்சு” என்றான்
“ஹலோ என் கையாலப் போட்டு தரேன். நல்லா இருக்கும்”.
“சிரித்துக்கொண்டே, சரி” என்று உள்ளே வந்தான்.
ஏலக்காய் தட்டி மசாலா தூவி கமகம என டீ தந்தாள். கதகதப்பாக இருந்தது.
“எங்க ஒருத்தரையும் காணோம்?”
“கல்யாணத்துக்கு பெங்களூர் போய் இருக்காங்க. நாளைக்கு தான் வருவாங்க”.
“யாருக்கு?”
“மாமியோட அண்ணன் மகளுக்கு”.
“ஏன் நீ போல?”
“கிளாஸ் இருக்கிறதுனால போல.
ஜஸ்ட் கிவ் மி டூ மினிட்ஸ். ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்து விடுகிறேன்” என்றாள்.
மேசைய மீதிதருந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து அவள் வெளியே வந்தாள்.
அவள் அணிந்திருந்த இரவு உடை அவனை நிலைகுலைய வைத்தது.
தலை முடிக்குப் போட்டிருந்த
நைலான் பட்டையை நீக்கிவிட்டு முடியை ஆயசப்படுத்திக் கொண்டு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
வீட்டில் யாரும் இல்லை என்கிற சூழல், தனிமை, நெருக்கம். இவற்றின் கலவையில் யார் தொடங்கியது, எப்படித் தொடங்கியது என்றெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் ஒன்றிலிருந்து ஒன்றென அடுத்தடுத்து நடந்தது. எல்லைகளே இல்லையென்ற நிலைக்குச் சென்றுவிட்டார்கள்.
அதற்குமேல் நினைக்க முடியவில்லை. படபடப்புடன் கண்திறந்து ராகுல் சுற்றும் முற்றும் பார்த்தான். இங்கும் அங்கும் சில ஆட்களும், ரிசப்ஷனில் ஹோட்டல் சிப்பந்திகள் மட்டும் இருந்தார்கள்.
மீண்டும் கண்ணை மூடி யோசித்தான். நான் மட்டும் எப்படிப் பொறுப்பாக முடியும்? தலையே வெடித்துவிடும் போலிருந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலத் தோன்றியது.
மீண்டும் கண்ணை திறந்து பார்க்கும்போது பார்
கண்களில் தென்பட்டது. ஏன் குடிக்கக் கூடாது? என்று தோன்றியது.
பாருக்குள் நுழைந்து கவுண்டர் அருகே சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
என்ன வேண்டும் என்று சிப்பந்தி கேட்க “ஸ்காட்ச் விஸ்கி ஆன் தி ராக்ஸ்” என்றான்.
“ரெட் ஆர் பிளாக் லேபிள்?” என்று சிப்பந்தி வினவ,
இவைகளுக்குள் என்ன வித்தியாசம் என்று தெரியாமல் “பிளாக்” என்றான்.
மது நிரப்பப்பட்ட கிளாஸ் முன்னால் வைக்கப்பட்டது.எடுத்து ஒரே மிடறில் குடித்துவிட்டான். கசப்பு தவிர வேறு ஒன்றும் உள்ளுக்குள் மாற்றம் ஏற்படாததால் மீண்டும் இன்னொன்று வாங்கி ஒரே மிடறில் சாப்பிட்டான். பார் கவுன்டரில் நின்றவன் வினோத ஜந்துவாகப் பார்த்தான். ஆனால் இந்த ஸ்காட்ச் விஸ்கி நேரம் போகப் போகத் தான் தன் வேலையைக் காட்டும் என்பதை ராகுல் அறிந்திருக்கவில்லை.
வெளியே வந்து தன் ரூமுக்கு செல்வதற்காக லிப்டுக்குள் நுழைந்து பொத்தானை அமுக்கினான். அவனது அறை இறுதி தளத்திலிருந்தது. லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்தவன். எதிரே மேலே செல்வதற்குப் படிக்கட்டுகள் இருப்பதை பார்த்தான். அதில் ஏறினான். அதற்குமேல் உள்ள தளம், மொட்டை மாடி. சரியாக மூடப்படாத கதவு ஒன்று இருந்தது. அதைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். சில்லென்ற காற்று முகத்தில் வீசியது. நுரையீரலுக்குக் கூடுதலாக ஆக்ஸிஜன் சென்றதால் புத்துணர்ச்சி பெற்றது போல் உணர்ந்தான். இதற்குள் உள்ளே சென்ற இரண்டு பெக்குகளும் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டன. முதலில் அவன் தன் உடலில் எடையற்ற தன்மையை உணர்ந்தான். பறப்பது போல ஒரு உணர்வு. மனதிலிருந்த அழுத்தங்கள் எல்லாம் நொடியில் காணாமல் போய்விட்டது. என்ன ஒரு நிம்மதியான நிலை. தள்ளாடிக் கொண்டே கைப்பிடி சுவரின் ஓரத்திற்கு வந்தான். அது ஹோட்டலின் முன்வாசல் பகுதி. கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் எறும்புகளைப் போலத் தெரிந்தன. தலைநகரம் கிட்டத்தட்ட அரைத்தூக்கத்திலிருந்தது. தெருவிளக்குகள் மட்டும் தூரத்தில் மினுக் மினுக் என மின்னிக்கொண்டு இருந்தது. தூரத்தில் வீடுகள் எல்லாம் மிகச் சிறியதாக தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போலக் காணப்பட்டன.
வாய்விட்டுக் கத்தவேண்டும் போல் இருந்தது. கத்தினான்.
“சுஷ்மிதா என்னைக் கேவலமா நெனச்சிட்டியேடி. நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிச்சது உண்மை. நான் கெட்டவன் இல்லை. நான் யுஎஸ்ல இருந்து வந்ததிலிருந்து உன்னைத் தேடிக் கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமாடி. உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்ச உடனே இனி உனக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாதுன்னு விலகி இருந்தேன். இப்ப கூட நீ தான என்ன கூப்பிட்டே. உன் வார்த்தைக்கு மதிச்சுத் தானே நான் வந்தேன்.”
அவள் எதிரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு உரக்கக் கத்தினான். உள்ளே சென்ற விஸ்கி. அவனைத் தன்னிலை மறக்கச் செய்தது
“ஏண்டா இப்படி கத்துற?” அவள் குரல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கைப்பிடிச் சுவருக்கு அந்தப் பக்கம், அந்தரத்தில் அவள் தொங்கிக் கொண்டிருந்தாள்.
“நான் உன்னை ஏமாத்தலடி. நம்பு”.
“பின்ன நீ செஞ்ச காரியத்தை வேற என்ன சொல்றது?”
“அய்யோ அப்படி சொல்லாதே. என்ன நம்பு…..” ஒ வென அழுதான்.
“சரிடா. நம்பறேன். விடு
கூல். கூல் மை பாய்”.
ஆச்சரியத்துடன் பார்த்தான்
காற்றில் மிதந்து கொண்டே, புன்னகையோடு,
“வா, வாடா ராசா, என்னை ஹக் பண்ணு’ என்றாள்.
உற்சாகத்தோடு,
“இதோ வந்துவிட்டேன் சுஷ்'” ஒரு காலை எடுத்து சுவற்றின் மீது வைத்தான், தாவுவதற்காக.
காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்த சுஷ்மிதா,
நான் ஏன் பேசினேன். அப்படிப் பேசி இருக்கக் கூடாது. அய்யோ பாவம். எல்லாப் பழியையும் தூக்கி அவன் மேலே போட்டு விட்டோமே. அய் ஷுட் நாட் ஹேவ் பீன் டூ க்ருயல்.
செய்த காரியம் அவளை வதைத்தது. திரும்பப் போய் மன்னிப்பு கேட்டால் தான் சரியாக இருக்கும். காரை திருப்ப இடம் தேடினாள்
இல்ல அது சரியா வராது. அவன் ரூம்ல இருப்பான். வேண்டாம். நான் போகக் கூடாது.
போகலாமா வேண்டாமா என்று அவளுக்கு மனப்போராட்டம்..
முதலில் அவனுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்போம். முடிந்தால் நாளை காலை அவனை ஏர்போர்ட்டில் டிராப் பண்ணுவோம்.
அவனை போனில் அழைத்தாள். அடித்துக் கொண்டே இருந்தது. மீண்டும் அழைத்தாள். அடித்துக்கொண்டே இருந்தது எடுக்கவில்லை. அவளுக்குப் பதட்டம் கூடிவிட்டது. பேசாமல் ஹோட்டலுக்கே போகலாமா என்று யோசித்தாள்.
வண்டியைத் திருப்பி ஹோட்டலை நோக்கி விரைந்தாள்.
மீண்டும் அவன் கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
சுவரின் மீது ஒரு காலை வைத்துக் குதிக்க தயாராகும்போது பாக்கெட்டில் இருந்த டெலிபோன் அடித்தது.
ச்ச. இந்ந நேரத்துல யாரு? எங்கிருந்து அழைப்பு?. எடுக்கலாமா? வேண்டாமா? எதிரில் இருந்து சுஷ்மிதா ‘வாடா செல்லம் வா, என்ன வந்து கட்டி பிடிச்சுக்கோன்னு கூப்பிடறா’. இதுல ஃபோன் வேற. எரிச்சல். ஆனால், தன்னிச்சையாக கைகள் பாக்கெட்டுக்குள் நுழைந்து ஃபோனை எடுத்தது.
திரையில் சுஷ்மிதா.
“ஹலோ.”..
“பேபி சாரிடா. அய் ஜஸ்ட் பர்ஸ்ட் அவுட் மை எமோஷன்ஸ். ரொம்ப நாளா உள்ளே அடக்கி வைச்சிருந்தது. வெளியே வந்துருச்சு. நான் உன்மேல வச்சிருக்கற மதிப்பும், மரியாதையும் என்னைக்குமே மாறாது. அதே மாதிரி உன் மேல உள்ள அன்பும் நிலையானது. ப்ளீஸ் கார்ல நடந்தத மறந்துடு.”
குழம்பிப் போய் எதிரே பார்க்க அங்கு அவள் இல்லை. வெறும் இருட்டு.
மீண்டும் ஃபோனில் “ஹலோ” என்றான்.
“நான் பேசுறது கேக்குதா இல்லையா”.
“ம் சொல்லு”.
“ரொம்ப ரொம்ப சாரி. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது”.
“இட்ஸ் ஓகே”.
“இப்ப நீ எங்க இருக்கிற?”
….
“ஹோட்டல்க்குதான் வந்துட்டு இருக்கேன். உன்கிட்ட நேர்ல சாரி சொல்லனும்.”
“நோ இஸ்யூஸ் சுஷ். யூ டோன்ட் ஹவ் டு. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆச்சு. நீ வீட்டுக்குத் திரும்பி போ”.
“ஆர் யு ஸ்யூர்? கோவம் இல்லையே?”
சத்தியமா இல்ல. பார்த்து வண்டி ஓட்டிட்டு போ. சேர்ந்தவுடனே மெசேஜ் அனுப்பு.
அவனுக்குத் தலை கிணுகிணுவென்று வலித்தது. மெதுவாகப் படிக்கட்டுகளில் இறங்கி ரூமுக்கு சென்றான்.
நன்றாகக் குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவினான். இப்போது கொஞ்சம் பரவாயில்லை போலிருந்தது.
ஆடைகளைக் களைத்து விட்டு அப்படியே படுக்கையில் விழுந்தான்.
போன் சினுங்கியது. வாட்ஸ் அப்பில் மெசேஜ்.
‘பத்திரமாகச் சேர்ந்துவிட்டேன்’.
‘குட்’.
‘டேக் கேர்’.
‘சுஷ் உன்கிட்ட ஒரு விஷயத்தை கன்ஃபஸ் பண்ணனும்’.
‘சொல்லு’.
‘நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்’.
‘என்ன?’
‘நீ போனதுக்கப்புறம் ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டேன். ஸ்காட்ச் சாப்பிட்டேன்’.
‘ஹாஹா’.
??
‘இதுல என்ன தப்பு?’
‘எப்பவுமே சாப்பிடக் கூடாது என்ற உறுதி உடைஞ்சிடுச்சு’.
‘ம். ஒரு தப்பு பண்ணிட்டு மனசு வருத்தமா இருந்தா, என்ன பண்ணனும் தெரியுமா?’
‘சொல்லு’.
‘சிம்பிள். அதைவிட பெரிய தப்பு பண்ணிடனும்’.
‘Lol.’
‘Tc’
‘Tc’
‘Gn’
‘Gn.’