குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 19,250 
 
 

”நீ என்னிய லவ் பண்றியா?’ – குல்பி ஐஸின் மேல் நுனியைப் பல்லால் சுரண்டிச் சுவைத்துக்கொண்டு இருந்த ஹேமா கண்களை விரியச் செய்தபடி கேட்டாள்.

ட்ரை சைக்கிளில் வைத்திருந்த ஐஸ் பெட்டியில் இருந்து குல்பிகளை ரப்பர் பேண்ட் சுற்றி அடுக்கிக்கொண்டு இருந்த அவன், எச்சிலை விழுங்கிக்கொண்டான். நல்லவேளை அந்த நேரம் தெருவில் யாரும் இல்லை. தூரதூரமாகத்தான் வீட்டு வாசல்களில் பெண்கள் அவரவர் பாடுகளில் மூழ்கி இருந்தனர். பள்ளி முடிந்து வந்த பிள்ளைகளுக்கு உடைமாற்றிவிடுவதும் தனக்குத் தலைசீவி பேன் குத்திக்கொள்வதுமாக அந்த மாலை நேரம் அவர்களுக்கு அமைந்து இருந்தது.

தினமும் 4 மணிக்கு அவன் இந்தத் தெருவைக் கடப்பான். அதுவரை பத்மநாபனின் நினைவு ஆரம்பப் பள்ளியில்தான் யாவாரம். பள்ளிக்கூடத்தில் மாலை நேர சிறுநீர் இடைவேளை முடிந்ததும் ஊருக்குள் யாவாரம் செய்யக் கிளம்பிவிடுவான். எப்படி விற்றாலும் இரவு 7 அல்லது 8 மணிக்குள் சரக்குத் தீர்ந்துவிடும். அதற்கு மேல் ஐஸ் பெட்டியிலும் குளிர்ச்சி நிற்காது.

KulfiKadal1

அவன் கடந்த ஆறேழு மாதமாகத்தான் ஐஸ் யாவாரத்தில் இறங்கி இருந்தான். அதற்கு முன்பு, பட்டறை இறக்கத்தில் இருக்கும் நூர்முகம்மதுவின் டூவீலர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். அது நல்ல வேலை. இஷ்டத்துக்கு வண்டிகளை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றலாம். அந்தக் கடையில் சேர்வதுவரைக்கும் அவனுக்கு பைக் ஓட்டத் தெரியாது. நூர் அண்ணன்தான் கியர் வண்டி ஓட்டக் கத்துக்கொடுத்தார். பிரேக்டவுன் ஆகிக்கிடக்கும் வண்டிகளை எடுத்து வர டிரைவிங் முக்கியம். ஆனால், இன்றுவரைக்கும் லைசென்ஸ் மட்டும் எடுத்துத் தரவில்லை. ‘மெக்கானிக்னு சொல்றா’ எனச் சொல்லியிருந்தார். பல போலீஸ்காரர்களின் வண்டிகளை வேலை பார்ப்பதால் அவனுக்கு அந்தக் கடையில் இருக்கும்வரை பிரச்னை வந்தது இல்லை. ஒரு ஃபிளக் ஸ்பேனரும் கொஞ்சம் ரேக்தாள் பீஸும் புது ஃபிளக்கையும் பையில் போட்டுக் கொடுத்துவிடுவார். வண்டியை ஸ்டார்ட் செய்து எடுத்து வந்துவிடுவான்.

வண்டி ட்ரையல் பார்ப்பது எல்லாம் நூர் அண்ணன்தான். சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்போது மட்டும் அவனிடம் வண்டியைக் கொடுத்துவிடுவார். அந்த நேரத்தில்தான் அவன் மற்ற மெக்கானிக் கடைப் பையன்களோடு சேர்ந்து ரேஸ் விடுவதும் பைக்கில் பலவிதமான சாகசங்கள் செய்வதுமாகப் பழகினான். அந்த நேரத்தில் பசங்கள் ஆளுக்கொரு லவ்வர் வைத்திருந்தனர். அவனுக்கு மட்டும் செட் ஆகவில்லை. அல்லிநகரம் வடக்குத் தெருவில் ஒரு வண்டியை டெலிவரி கொடுக்கச் சென்றபோதுதான் அவனுக்கான ஃபிகரைக் கண்டான். துரதிருஷ்டவசமாக அந்தப் பெண்ணிடம் தன் பைக் சாகசத்தைக் காட்டிக்கொண்டு இருந்த வேளையில், ஒரு ஆட்டோக்காரன் வினையாக வந்து வண்டியைப் போட்டு விட்டான். பெட்ரோல் டேங்க் சேதார மாகிவிட்டது. செலவு கூடுதலான சேதாரம். அதன் பிறகுதான், அவன் ஐஸ் வண்டியைத் தள்ளலானான்.

ஹேமாவைப் பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது. லூஸா? அழகான பிள்ளைதான். ரெம்ப சிவப்பும் இல்லை… சுத்தமான கறுப்பும் இல்லை. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைப் போல ரெட்டைச் சடை போட்டு, பவுடர் பூசி இருக்கும். பார்க்க நல்லா இருக்கும். முகத்துக்கு அதிகமாக மஞ்சள் பூசிய நாளில் கொஞ்சம் விகாரமாக இருக்கும். ஓரிரு வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்க்காமல் ஒற்றைச் சடை போட்டு, கண்ணுக்கு மை இட்டிருக்கும்போது, காற்றில் பறக்கும் காதோர முடியில், அசின் மாதிரி ரொம்பவும் பிரமாதமாக இருக்கும்.

அவன் ஐஸ் யாவாரம் ஆரம்பித்த நாளில் இருந்து, இந்தத் தெருப் பக்கம் வரும்போது எல்லாம் தவறாமல் யாவாரம் வாங்குகிறவர்களில் ஹேமாவும் ஒருத்தி. புளிக்கொட்டகையில் இருந்து மனு கணக்கில் புளியை வாங்கி வீட்டில்வைத்துத் தட்டி, கொட்டை பிரித்து, பாக்கெட் போட்டுக் கொடுக்கிற வேலைபோல் இருக்கிறது. எப்போது வந்தாலும் வலது கையும் இடது கையும் கறுப்பாக, பிசுபிசுப்பாகவே இருக்கும்.

”கையைக் கழுவிட்டு வரலாம்மா’- முதன்முதலாக ஹேமாவிடம் அவன் பேசிய வார்த்தை அதுதான்.

அவனுடைய பேச்சுக்குப் பிறகுதான் ஹேமா தன் கையை விரித்துப் பார்த்தாள். ‘நல்லாத்தான இருக்கு…’ என்றாள்.

‘நல்லாயிருக்கா? கரேல்னு திட்டுத்திட்டா சகதி மாதிரி ஒட்டிக்கெடக்கு பாரு’ என்றான்.

‘சகதி இல்ல அது, புளி’- விரல்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து, படர்ந்துகிடந்த பிசுக்கைத் திரட்டிக் காண்பித்தாள்.

அதற்கு மேல் ஒரு பருவப் பெண்ணிடம் பேசுவது நீதியல்ல. ‘சரி… சரி…” என்றான்.

”இப்பக் கழுவுனாலும், ஐஸ தின்னு முடிச் சிட்டு, இன்னொருக்கா வேல பாக்கணும்ல’- அவளாகவே பதில் சொன்னாள்.

முதலில் ஹேமாவையும் அக்கா என்றுதான் யாவாரப் போக்கில் கூப்பிட்டான். பிறகு, ஒரு நாள் கடன் வைத்தபோது, அதனை வசூலிக்கும் நாளில் ‘யேம்மா…’ என்று விளிக்க வேண்டி வந்தது.

கடன் வாங்கிய நாளில் இருந்து ஹேமாவும் அவனோடு கூடுதலான நேரம் செலவழித்தாள். அவன் அந்த வீதிக்குள் நுழைந்ததும் ‘ஐஸ் வண்டி வந்திருச்சு… ஆராருக்கு வேணும்?” என்று வீட்டில் உள்ளோரைக் கணக்கெடுத்து வருவாள். முதலில் தெருக்காரர்களுக்கு யாவாரத்தைக் கொடுக்கச் செய்வாள். அப்போது ஏதாவது பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருப்பாள். ”ஐஸுக்குள் உண்மையிலேயே பால் கலப்பாகளா? எசன்ஸா… இனிப்புக்குச் சீனியா… சாக்ரீமா? எவ்வளவு நேரம் பிரிஜ்ல ஓடவிடுவாங்க? கமிஷனா… சம்பளமா? எம்புட்டு வித்தா எவ்வளவு கமிஷன்? அட்வான்ஸ் குடுத்து சரக்கு எடுக்கணுமா… அப்பிடியே குடுத்துவிடுவாங்களா? ஐஸ் விக்காம இருந்தா என்னா செய்வ?”

ஆரம்பத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுப்பாகப் பதில் சொன்னான். அப்புறம் அது தன் அந்தரங்கத்தை ரெம்பவும் சுரண்டுவதாக ஃபீல் பண்ணினான். அதேசமயம், சடாரென வெட்டிப் பேசி ஒதுக்கிவிடவும் மனசு தயாராகவில்லை. சில சமயம் ஹேமாவின் பவுடர் வாசனை அவளுடைய நெருக்கத்தை விரும்பியது. அந்த நேரம் அவனுடைய கால்கள் அவனை சட்டை செய்யாமல் ஹேமாவின் பக்கமாக நகர்ந்துவிடும். ஐஸ் பெட்டியைச் சரிசெய்வது போலவோ, அல்லது ட்ரை சைக்கிளின் சக்கரத்தைச் சோதித்துப் பார்ப்பதுபோலவோ பாவனை செய்து கொள்வான்.

”வடையைக் குடுத்தா பிச்சுத்தேம்மா திங்கணும், ஓட்டய எண்ணிப் பாக்கக் கூடாது…” என்று அண்டப் பழசான உவமையைச் சொல்லி, ஹேமாவின் கேள்வியை நிறுத்த முயற்சிப்பான்.

”ஒரு விசயத்த தெரிஞ்சுக்கிறது தப்பா?”- ஒரு கையை ட்ரை சைக்கிளில் ஊன்றி இடுப்பில் ஒரு கை வைத்து ஸ்டைலாகக் கேட்பாள்.

KulfiKadal2

”ஒன்னோட வேலையப் பத்தி எப்பவாச்சுங் கேட்டுருக்கேனா?’

‘கேக்கணும்யா…. ஒரே தொழிலே என்னிக்கும் நிரந்தரமா ஓடிருமா?”

‘அப்ப… நீயும் ஐஸ் விக்கப்போறியா? ஐஸ்… ஐஸ்னு வீதில உன்னால சத்தம் போட முடியுமா?”

‘ஐஸ் கம்பெனி வெச்சா? கத்த வேண்டியது இல்லில்ல’- சொல்லிவிட்டு அன்றுதான் பலமாகச் சிரித்தாள். அவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

இரண்டு பேரும் சேர்ந்து சிரித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்துவிட்ட பஞ்சுமிட்டாய் முருகன், சினிமா தியேட்டரில் வைத்து அவனிடம் கேட்டான். ”சூப்பர் ஃபிகரப் பிடிச்சுட்ட!”

முருகனிடம் அவன் வன்மையாக மறுத்தான். ”சத்தியமா அப்பிடி எல்லாம் இல்ல… அது ஒரு லூஸு!”

”நிய்யினாப்ல..? நீ ஒரு லூஸு… அந்தப் பிள்ள ஒரு லூஸு. ஜோடி செட்டாயிரும்ல. நானும் ஊரெல்லாம் அலசுறேன்… நமக்கு ஒண்ணும் அமைய மாட்டேங்குதே. எப்பிடிடா அமுக்குன?”

அதற்கு மேல் முருகனிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. தியேட்டரில் அந்தத் தெருக்காரன் எவனாவது அதைக் கேட்டு, பிரச்னை வில்லங்கமாகிப்போனால் அடி தாங்க முடியாது. வீட்டில் அம்மா, செருப்பை எடுத்து விளாசிவிடும். அக்கா இருக்கிறது. தங்கச்சி படித்துக்கொண்டு இருக்கிறது. வேணாம்டா சாமி!

அந்த நாளில் இருந்து ஹேமாவைப் பார்க்கிறபோது எல்லாம் ஒரு குறுகுறுப்பு மின்னியதைத் தவிர்க்க முடியவில்லை அவனால்.

ஹேமாவும் நெருங்கி வருவதுபோலவே தெரிந்தது. தெருவுக்குள் வந்து நின்றவுடன் ஹேமா தானாகவே ஐஸ் பெட்டியைத் திறந்து ஒரு குல்பி குப்பியை எடுத்து, அதில் சுற்றி இருக்கும் ரப்பர் மூடியை அகற்றி, குச்சி எடுத்து ஐஸுக்குள் சொருகி சுவைக்கத் தொடங்கிவிடுகிறாள். அவன் அந்தத் தெருவைவிட்டுக் கிளம்புகிற வரைக்கும் கூடப் பேசிக்கொண்டே இருக் கிறாள். அவனுக்கும் சில நேரம் பேச்சை நீட்டிக்க விருப்பமாக இருக்கிறது. ஐஸ் வாங்க ஆள் வராவிட்டாலும்கூட மணியை அடித்துக்கொண்டே நின்றிருப்பான்.

இப்போது அவனும் ஹேமாவின் வேலை, வீட்டு நிலவரங்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தான். ஹேமா எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னதில் அவனுக்குள் ஏதோ ஓர் அந்நியோன்யம் ஏற்பட்டதுபோல உணர்ந்தான். காலையில் கண் விழித்து எழுந்ததில் இருந்து சாப்பாட்டு நேரம் தவிர, உறக்கம் வரை இடைவிடாமல் புளி தட்டுவதை அறிந்தான். சீஸன் காலத்தில் அவசரம் என்றால் ராத்திரி தூங்காமல்கூட விழித்திருந்து, கொட்டை எடுத்த புளித் தோடுகளைப் பாக்கெட் போட்டுக்கொண்டு இருப்பார்களாம். எந்த நேரமும் வீட்டில் சுத்தியல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக் குமாம்.

”அஞ்சு சீவாத்திக கஞ்சி குடிச்சுக் காலந்தள்ளணும்ல…” – அந்த நேரம் ஹேமா கிழவியாகத்தான் பேசுவாள். ”அக்காவுக்குச் சீரு, தங்கச்சிக்கிப் பள்ளிக்கூடச் செலவு, வீட்டு வாடக, கேபிளு… நடுவால பொறக்கறது பெரிய இமுசபோல. நீ எப்படி… நீயும் நடுப்பிள்ளயா?”- அவனிடம் கேள்வி மாறும்.

வழக்கமாக அந்தத் தெருவில் முருகனும் அவ்வப்போது வந்து குல்பி ஐஸ் யாவாரத்தை கிராஸ் செய்வான். அவர்கள் சினிமா தியேட்டரில் சந்தித்துக்கொண்ட நாளில் இருந்து அந்தத் தெருவுக்கு வருவதை முருகன் திட்டமிட்டுச் செய்யத் தொடங்கினான். ஹேமாவும் அவனும் நேருக்கு நேர் நிற்கிற சமயத்தில் சில நிமிடம் அவர்கள் அருகே முருகனும் நிற்க ஆரம்பித்தான். ”ஐஸ் யாவாரம் எப்படி? அந்தத் தெருவுல ஒன்னியக் கேட்டாகப்பா… போவலியா?” என்று ஏதாவது உளறுவான். ஹேமா அவனிடம் இருந்து கிளம்பியதும் முருகனும் நடக்க ஆரம் பிப்பான்.

‘யே… இது பாவம்டா’ என்று அவனுடைய நண்பர்கள் முருகனை எச்சரித்தார்கள். முருகனோ ‘சத்தியமாக நான் அந்த நோக்கத்தில் செய்யவே இல்லை’ எனத் தன் கையிலேயே அடித்துச் சொன்னான். ”ரெண்டு பேரையும் சேத்து

வக்கெத்தே பிரியப்படுறேன். நாந்தான அவனுக்கு லவ்வு இருக்கதவே சொன்னேன்’ என்றவன், ”சும்மாப் பேசிட்டே இருந்தா எப்படி? எங்கிட் டாச்சும் கூப்புட்டுப் போலாம்ல… எதாச்சும் கிஃப்ட்டு மாதிரி வாங்கித் தரலாம்ல. லெட்டராச்சும் குடுத்தியா’ என்று நிறையக் கிளறிவிட்டான்.

‘வெளிய போனா செலவு…’

‘செலவு! நீதேம் பண்ணணும். லவ்வுன்னா சும்மாவா?’

‘யே… சில சமயம் பொண்ணுங்களே பண்ணுவாங்கடா. அந்தப் பிள்ளயும் சம்பாரிக்கிதுல்ல. அப்ப அதும் காசு கொண்டுவரும்!’

‘எங்காள்லாம் அவதே செலவு பண்ணுவா. நானெல்லாம் பைசா செலவு செஞ்சதில்ல’ – பெருமையாகச் சொல்லிக்கொண்டான் பேக்கரி கடை செல்வம்.

அந்தப் பரீட்சைக்கு அவன் தயாராக இல்லை. நாளெல்லாம் புளித் தட்டுகிற பிள்ளை. ஒருவேளை… ஓய்வுக்காக நேரம் போக்குவதற் காகக்கூடத் தன்னிடம் பேசிக்கொண்டு இருக் கலாம். இவனுகள் சொல்கிறான்கள் என்று தப்பாக எடுத்து… எனப் பின்வாங்கினான். ஆனாலும் மனசு கேட்கவில்லை. சினிமாப் படத்தில் வருவதுபோல மனசுக்குள்ளேயே போட்டுவைக்காமல், ஆம்பளை தன் காதலைச் சொல்ல வேண்டும். துணிச் சலாக வெளிப்படுத்திவிட வேண்டியதுதானே. வந்தா மலை… போனா மசுரு! முருகன் சொன்னதுபோல, ஃபேன்ஸி ஸ்டோருக்குப் போய் ஒரு செட் வளையல் வாங்கினான். இருபத்தைந்து ரூபாய் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.

‘இது உனக்குச் சேருமா பாரு’- என்று ஹேமாவிடம் நீட்டியபோதுதான் கேட்டாள், ”நீ என்ன லவ் பண்றியா?’

அதே கேள்வியையே ஹேமாவிடம் அவன் திருப்பிக் கேட்டான். ”நிய்யீ?’- அதில் அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. இத்தனை தைரியம் எப்படித் தனக்கு வந்தது. கொஞ்சம் வியர்க்கவும் செய்தது.

அந்தக் கேள்வியில் ஹேமா ஒரு நிமிடம் யோசிக்க வேண்டி இருந்தது. பிறகு, ‘தெரியல’ – என்று பதில் சொன்னபோது அவனுக்கும் குழப்பம்.தொடர்ந்து ஹேமா இன்னொரு கேள்வி கேட்டாள். ”லவ் பண்ணுனா… வெளில கூப்புடுவியா?’

வாய் உதடு வறண்டுபோக… பதில் சொன்னான், ‘ஆமா… வெளில போகணும் இல்ல.’

‘ம்… கேக்கறதெல்லா வாங்கித் தருவீல்ல?” – தலையை மட்டிலும் அசைத்து ”ஆமாம்” என்றான்.

‘பர்த்டேக்கு டிரெஸ் வாங்கித் தருவியா… கேக் தருவியா..?” – தயங்காமலும் அதேசமயம் யோசிக்காமலும் பதில் தந்தான். ‘ரெண்டுமே!’- சொல்லிவிட்டுச் சிரிக்கவும் செய்தான்.

‘கல்யாணம் செஞ்சுக்கச்சொன்னா?” – அதை மட்டும் கிசுகிசுப்பாகக் கேட்டாள் ஹேமா.

அவனுக்குள் ஒரு மிரட்சி வந்துபோக, மறுபடி ஒருதரம் எச்சில்கூட்டி விழுங்கிக்கொண்டான். ‘எங்க வீட்ல ஒரு அக்கா இருக்கு” என்றான்.

‘எங்க வீட்லயுந்தா” – ஹேமாவும் சடாரெனப் பதில் சொன்னாள். சொன்ன நிமிடத்தில் சுபாவமாக மறுபடியும் ஐஸ் பெட்டியினைத் திறந்து, கைக்கொரு குல்பி ஐஸை ஏந்திக்கொண்டாள்.

‘சரி… நானும் ஐ லவ் யூ” என்று தலையை ஒருவெட்டு வெட்டிக்கொண்டு ஐஸுக்குக் காசு கொடுக்காமல் தன் வீட்டை நோக்கி குடுகுடுவென ஓடிப்போனாள்!

– பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *