குனவதியின் காதல் மன்னன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 44,140 
 
 

அத்தியாயம் 1 – முன்னிருட்டில் ஒரு முகமன்

பாண்டிய நாட்டின் ராஜேந்திரபுரி-

அந்த முன்னிருட்டுப் பொழுதிலும் அடுத்த நாளை இனிதே துவங்க, தயங்காமல் ஆயத்தமாக நின்றன புள்ளினங்கள்! அரண்மனையைச் சுற்றிலும் ஆங்காங்கே நின்றும் நடந்தும் காவல் வியூகம் அமைத்து நின்ற வீரர்களின் படை ஓசை; வீரர்கள் சவாரி செய்த போர்க் குதிரைகளின் குளம்பொலி ஓசைகள்; இவை மட்டும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தன.

அரண்மனை, உறக்கத்திலும் ஒளிமயமாக விளங்கியது. படைவீரர்களுடன் தீப் பந்தங்களை ஏந்திய ஏனைய காவலர்களும் காலாட்படையின் ஒலிபரப்பி ஒளியும் பரப்பினர்.

அரண்மனையின் சுற்று வட்டாரத்தில், அந்த இருள் சூழ்ந்த வேளையில், ஒளிவட்டத்தைத் தவிர்த்து, தயங்கித்தயங்கி நகர்ந்து கொண்டிருந்த ஒரு உருவத்தை யாரும் கவனித்த மாதிரித் தெரியவில்லை.

அந்த உருவம், தன் கையில் இருந்த குறு வாளின் முனையை அடிக்கடி எடுத்து முத்தமிட்டபடி முன்னேறிச் சென்றது.

சற்றும் எதிர்பார்க்காத நொடிப் பொழுதில், அந்த உருவத்தைப் பிடித்துக் கீழே வீழ்த்தி விட்டு, உடை வாளினால் தலையைக் கொய்தான் ஒருவன். இறந்தவனின் ‘ஐயோ’ அவன் ஒருவனுக்கு மட்டுமே கேட்டிருக்கக் கூடும்!

அவன், மாறுவேடத்தில், நகர சோதனை முடித்து அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அரசன் வீரசேனன்!

இறந்தவனின் முகமூடியை நீக்கிப் பார்க்கத் தேவையிருக்கவில்லை அரசனுக்கு. ஏனென்றால், ஒற்றர்களின் கூற்றுப்படி அங்கே பதுங்கி இருந்தவன், அரசனின் சித்தி சந்திரவதனியின் மூத்த மகனான நாகவர்மன். பட்டம் கிடைக்கவில்லை என்ற ஆற்றாமைக்கு அரசனைக் கொல்ல சூழ்ச்சி செய்த வண்ணமிருந்த தம்பியான நாகவர்மன், தானே நேரிட இறங்கி வீரசேனனைக் கொல்லத் திட்டம் தீட்டினான்.

வானுலகத்தில் சித்தர்களும், முனிவர்களும் அந்த முன்னிருட்டான ‘இனிமைப் பொழுதில்’, கீழே, ராஜேந்திரபுரியைக் கண்டும் காணாமலும், அவரவர் நோக்கங்களை ஆலோசனை செய்து கொண்டு அவசர கதியில் மிதந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் மட்டும் ராஜேந்திரபுரியைக் கூர்ந்து கவனித்தார் எனலாம். இல்லையென்றால் அரசனின் உடைவாளுக்கு இரையான நாகவர்மனை அவர் அருகாமையிலிருந்து பார்த்திருக்க முடியாது. அவனுடைய பின்னணியையும் தெரிந்து கொண்டிருக்க முடியாது!

இந்த ஒரு நொடிப் பொழுதில் அவருக்கு, சற்று முன் நடந்த நிகழ்ச்சியும், முன்னால் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளும் தெளிவாக அகக் கண்ணில் தோன்றி மறைந்தன. முன்னிருட்டில் தோன்றிய முகமன் அது.

நிதானமாக நின்று உற்று நோக்கினார் சித்தர் திருமூலர்!

————————————————————————

அத்தியாயம் 2 – நந்தவனத்தில் ஒரு நயவஞ்சகம்

அரண்மனையின் நந்தவனம் அழகு பொலிந்து கிடந்தது. மலர்கள், அவசரம் அவசரமாக, கூட்டம் கூட்டமாக, சுகந்தத்தை சேகரித்து, மொத்தமாக விண்வெளியில் பரப்பித் தலையாட்டத் தயார் நிலையில் இருந்தன. அவர்களுக்குத் தெரியும் அரசன் அதிகாலை நேரமும் அங்குதான் வருவான் என்று! அந்தப்புரத்தை அடுத்து அவன் அமைத்திருந்த அழகு மலர்த்தோட்டம் அல்லவா? ஆனால், அவற்றிற்குத் தெரியுமா, அன்று வீரசேனன் ஒரு வெற்றிக் களிப்புடன் வந்து கொண்டிருக்கிறான் என்று?

அதிவேகமாக அரண்மனையின் அருகில் அமைந்த நந்தவனத்தில் நுழைந்து அதிலிருந்த மணம் பரப்பும் மலர்கள் அளிக்கும் நறுமணத்தை சுவாசித்துவிட்டுத்தான் அவன் அந்தப்புரம் நுழைவது வழக்கம். மனதுக்குப் பிடித்த மலர்களை குணவதிக்கு என்று கைகளில் ஏந்திச் செல்வது அவனது அன்பின் அடையாளம். அவர்கள் இருவரும் அத்தனை அன்னியோந்நியமாக வாழ்க்கை நடத்தி வந்தனர். அரசனும் அரசியும் அரச சபையில் வீற்று நாட்டின் நிர்வாகத்தைச் செவ்வனே நடாத்தினர்.

வானில் மிதந்து சென்று கொண்டிருந்த சித்தருக்கு இப்போது ராஜேந்திரபுரியின் அரண்மனை விவகாரம், நடந்ததும், நடக்கப் போவதும் தெளிவாகத் தெரிந்தபடியால் மனதில் ஒரு கலக்கம். உள்ளூர ஒரு பச்சாதாபம் தோன்றியது.

அந்த சித்தர் எதிர்பார்த்த அந்த அடுத்த நிகழ்வும் இன்னும் சில நொடிகளில் அவர் கண் முன்னே காட்சியாக விரிந்தது!

சூழ்ச்சியை வென்ற களிப்பில், ஒரு சதியை முறியடித்த மிதப்பில், வீரசேனனின் கவனம் அந்தப்புரத்தின் பால் திரும்பியது. ‘ஐயோ! ராணி குணவதியைத் தனிமையில் விட்டு வந்தது மாபெரும் தவறு. இந்த இக்கட்டில் அவளுக்கும் தேவை பாதுகாப்பு! உடனே அரசியைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற முடிவுடன் நந்தவனத்தில் வழக்கம்போல நுழைந்தான்.

அப்போதுதான் எய்யப்பட்ட பகைவனின் அம்பு, குறி தவறி, மலர்வனத்திலிருந்த ஒரு கரு நாகத்தின் தலையைச் சிதைக்க, அந்த நாகத்தின் விடம் அருகிலிருந்த அழகு ரோஜா மலரிதழ்களின் மேல் குடி கொள்ள, அவசரமாக வந்து கொண்டிருந்த எதையுமறியா மன்னன் வீரசேனன் அந்த மலரைக் கொய்து முகர்ந்து கொண்டே அந்தப்புரத்தை அடைந்தான். குணவதியின் அருகில் செல்லும் முன்னரேயே வாயில் நுரையுடன் இறந்து வீழ்ந்தான் வீரசேனன்.

————————————————————————

அத்தியாயம் 3 – குணவதியின் காதல்

காதல் மன்னன் இறந்து பட்டான் என்று நேரில் பார்க்கையிலேயே அரசி மனமுடைந்து உருகிப் போனாள். மன்னன் இறந்ததை அவள் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அவள் காதலும் அவள் கற்பின் கனலும் அவனைக் காக்கும் என்பது அவளது உறுதி! அவளது இறைவழிபாடு ஈசனிடம்தான்! அவன் எப்படி என்னைக் கை விடுவான்? என்று எண்ணினாள். இறந்த வீரசேனனின் உடலைக் கண்டு தாங்கொண்ணாத துயரத்துடன் அரண்மனை வைத்தியனிடம் ‘மன்னனை இறைவன் காப்பாற்றி விடுவான். நீங்கள் வைத்தியம் மட்டும் செய்யுங்கள்’ என்று ஆணையிட்டாள். ஈசனிடம் மனமுருகிப் பிரார்த்தனையில் ஈடுபட்டாள்.

திருமூலர் சித்தர் இவை அனைத்தையும் காணாப் பொறுக்காதவராக ஈசனிடம் மனமுருகினார். ‘இந்த நல்ல அரச தம்பதியைத் துயரத்தில் ஆழ்த்தக் கூடாது’ என. ஆனால், மன்னன் இறந்தது அவருக்குத் தெரியும். பக்கத்தில் நின்ற சீடர் குருராஜனுக்கும் தெரியும். நாட்டு மக்களும் துயரத்தில் ஆழ்ந்தனர் அவ்வமயம்.

————————————————————————

அத்தியாயம் 4 – அந்தப்புரத்தில் அதிசயம்!

இறைவன் அவருக்குப் பதிலளித்தது போல இருந்தது.

“குருராஜா,எமக்கு இவர்களைத் துயரத்தில் ஆழ்த்த மனது மிகவும் வேதனைப் படுகிறது. ஈசன் எனக்கு ஆணை இட்டுவிட்டான். நான் வீரசேனன் உடலில் புகுந்து உயிர் வாழ விழைகிறேன். என்னுடைய இந்த உடலைப் பத்திரமாக விலங்குகளிடமிருந்து பாதுகாத்து, சதுரகிரி மலையின் கோட்டையில் ஒளித்து வைத்து விடு. இந்த வாழ்க்கையை முடித்தபின்னர் நான் வந்து என் பழைய உடலில் புகுந்து கொள்கிறேன்”

என்று சீடனுக்கு ஆணை இட்டு, மன்னன் உடலில் புகுந்து கொண்டார் சித்தரான திருமூலர்.

ஈசனின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு சற்றே துக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்

குணவதி. வைத்தியர் இன்னும் மன்னனுக்கு பச்சிலைக் கட்டு பல இட்டு வேறு பல மூலிகைச் சாற்றுக் கலவைகளை வீரசேனனின் வாயில் புகட்டினார்.

என்ன ஆச்சரியம்!

மன்னர் உடலில் அசைவுகள்! வாயில் நுரை தள்ளி இறந்து பட்ட வீரசேனன் –எழுந்து அமர்ந்தான் உயிருடன்!

“குணவதி அன்புடன் மன்னனை நெருங்கித் தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினாள். அந் நாட்டு மக்கள் அனைவரும் மன்னன் பிழைத்ததை நினைத்து ஆனந்தம் அடைந்த வண்ணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குணவதி “அரசே! ஈசன் என்னைக் கைவிட மாட்டார்” என்று கண்ணீருடன் தழுதழுத்தாள்.

பின்னர், நடந்த சதிகளை அரசன் அரசிக்குத் தெரிவித்தான்.

————————————————————————

அத்தியாயம் 5 – மன்னனின் மாண்பு

வீரசேனன் (திருமூலர்) அரசனாக வீற்று முன் போலவே மக்கள் மகிழும்படியான ஒரு நல்லாட்சியை நடத்தினான். அரசியும் முன்போலவே அரச சபையில் வீற்று மன்னனுக்கு உறு துணையாக நின்றாள்.

மன்னன் நல்லாட்சியுடன் மக்களுக்கு நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் அவ்வப்போது அறிவுறுத்தி வந்தான்.

பண்டைய நாட்களில் போர், வாள் வீச்சு என்ற இன்ன பிற விஷயங்களை மட்டும் பேசி வந்த மன்னன் தற்போது வாழ்வியல், தத்துவங்கள், ஈசனின் பெருமை, இறைவணக்க, வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து அதிகம் பேசினான்.

இவையெல்லாம் குணவதிக்கு அதிசயமாக இருந்தது. மன்னன் எப்படி மாறி விட்டார்? மக்களுக்கு நன்மை செய்வதில் முன்போலவே இருந்தாலும், முன்பைவிட அதிக அளவில் மக்களிடம் நாட்டம் ஏற்பட்டுள்ளது. மக்களின் நன்மை தலையாயது என்று சைவ மத போதனைகளும் கற்றுக் கொண்டுள்ளார்.

நாட்டிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். பகைவர்களிடமும் மன்னர் கருணையுடன் நடந்து கொள்வதாக மக்கள் பேசிக் கொண்டனர். போர்களும் வெகுவாகக் குறைந்து விட்டன என்பதால் நாட்டில் சுபிட்சம் பெருகியது.

————————————————————————

அத்தியாயம் 6 – காமத்தின் கனல்

குணவதியின் காதல் சிறந்தது. வீரசேனனின் மன மாற்றம் அவளுக்கு அதிர்ச்சியையும் அதே சமயம் ஆச்சரியத்தையும் அளித்தது.

காமத்தின் கனலில் சிக்கித் தவித்த அவள் மன்னனின் அருகில் செல்ல முடியாதபடி அவரது அறிவுரைகள் அவளைத் திசை திருப்பிவிட்டன.

“ மன்ன! ஏன் இந்த மாற்றம்?”

திருமூலர் ஒரு பத்தினியிடம் பொய் உரைக்க விரும்பவில்லை

“ குணவதி! உன் துயரத்தைத் தாங்கா ஒண்ணாமல் ஈசனிடம் நானும் வேண்டிக் கொண்டேன். ஆனால் அப்போதே வீரசேனன் இறந்து விட்டான். இப்போது நான் உடலளவில் வீரசேனன். உயிரளவில் திருமூலர் சித்தர். என் உயிர் மட்டும் கூடுவிட்டு கூடு பாயவென்று இறையருளில் இத் தவறைச் செய்ய நேர்ந்தது. என்னால் உன் கணவனாக வாழ முடியாது. அது தருமமும் அல்ல. மன்னித்து விடு! ”

குணவதிக்கு திருமூலரின் நேர்மை பிடித்திருந்தது. அவன் அரசாளும் திறமையும் நன்றாகவே இருந்தபடியால் அவள் மனசில் ‘நான் சுமங்கலியாகவே இருக்கவேண்டும். இவரைப் பிரியக் கூடாது. இல்லறம் முக்கியமல்ல. இவர் போல ஞானி கிடைத்தது இறையருள்.” என்றெல்லாம் அவள் மனது சில முடிவுகளை எடுத்தது.

அது சரி! இவர் திரும்பிப் போக முயன்றால்?

சுய நலத்தின் பிடியில் நின்ற குணவதியின் மனதில் ஒரு திட்டம் உருவானது!

————————————————————————

அத்தியாயம் 7 – ஆண்டவன் கட்டளை

குணவதியும், வீரசேன திருமூலரும் நல்லாட்சி நடத்திய தருணத்தில், அரசிக்கு அமைதியும், தெளிவு நிலையும் அதிகம் கிடைத்தது எனலாம்.

வீரசேனன் தன்னை நெருங்க மறுப்பது அவளுக்கு அத்தனை கொடுமையாகத் தோன்றவில்லை. எனினும், காமக் கனலின் தழல் அவளைச் சுட்டது! ஏன் இந்தக் கொடுமை? நான் ஏன் இந்த விரக தாபத்தில் துடிக்க வேண்டும்? என்றெல்லாம் சிந்தை அலை பாய்ந்தாலும், உடனே அரசன் வருமளவில் அவள் மனது சீராகிவிடும்! என்ன விந்தை இது!

என் உடல் இறந்த மன்னனுக்குத்தான் சொந்தம் என்ற அளவில் ஞானி தெளிவாகச் சொல்லி விட்டாரே? அதையும் மீறி அவர் என்னை எப்படி நெருங்க இயலும்?

இன்பம் அனுபவித்தாயிற்று. வீரசேனனுக்குப் பதிலாக இந்த சித்தர் என்னருகில் அமர்ந்து ஆட்சி புரிவதும் எனக்கு தாலிபாக்கியம் கொடுத்துவருவதும் என்னுடைய முற்பிறவிப் பயன். இறையருள். ஈசனே இதுதான் உன் கட்டளையா?

இதை ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக் கொண்டு, திருமூலர் சித்தரைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்

என்று முடிவு செய்தாள்.

————————————————————————

அத்தியாயம் 8 – தர்மத்தை சூது கவ்வும்

குணவதியின் மனம் இவற்றை ஒப்பவில்லை. இவர் நம்மை விட்டு விலகிப் போய் விட்டால் எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். இவருடைய எதிரிகள் இவர் இல்லாமல் போனால் நாட்டிலும் அரண்மனையிலும் குழப்பங்களை விளைவிப்பார்கள். எனது நிம்மதி கெட்டு விடும்!

எப்படியாவது இவரை இங்கேயே இருத்திக் கொள்ளல் வேண்டும்.

ஆனால் எப்படி?

‘எனக்குக் கணவனாக வேண்டாம். என் காதல் மன்னனாக வேண்டாம். ஒரு நாட்டின் மன்னனாக ஆட்சிபுரிந்தால் அபாரம்.’ என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றின அரசியின் மனதில்.

என் மாங்கல்யம் நிலைக்க வேண்டுமே? வீரசேனன் இறந்து பட்டதை எதிரிகள் அறிந்து கொண்டால் நாட்டில் படையெடுப்பும், கலகங்களும் நடக்கும். மன்னனின் எதிரிகள் அவளையும் கவர்ந்து செல்ல வாய்ப்பு எதிர் நோக்கியிருக்கிறார்கள். இறைவா! ஏனிந்த சோதனை நீ இருக்கும் இம் மா மதுரையில்?

என் காமத்தைக் குறைத்து, மனதைத் தெளிய வைப்பாயா? திருமூலரால் எனக்கு ஆபத்து ஏதுமில்லை. அவருடைய உறுதுணை இருந்தாலே போதும். உன்னருள் பெற்றவரல்லவா அவர்? உன் சார்பில் எனக்கு உதவிபுரிய வந்தவரல்லவா அவர்?

‘இறைவா! நானே சுயமாக திட்டம் ஏதாவது தீட்ட வேண்டும். நாட்டு நன்மைக்காக! ; என்ற முடிவுக்கு வந்தாள்.

————————————————————————

அத்தியாயம் 9 – சதுரகிரியில் ஒரு சதித்திட்டம்

திருமூலர் தன்னுடைய பழைய உடல் சதுரகிரியில் சீடன் குருராஜனின் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதாக அரசியிடம் முன்னர் தெரிவித்து இருந்தார்.

அந்த உடல் இருக்கும் வரை திருமூலர் இங்கிருந்து வெளியேற முயற்சி செய்தவண்ணம் இருப்பார். ஆகவே அந்த உடலைக் கைப் பற்றி தீக்கிரையாக்கிவிட்டால்? – தீவிரமாக யோசனை செய்தாள் அரசி

‘எனக்கேன் இந்த கெட்ட எண்ணம்?’ என்ற உள் மனது உடனே யதார்த்தத்தை நினைத்து அடங்கியது. மறு முனையில், சுய நலமும் அவளை விரட்டியது. அரசியல் மூளையை சுறுசுறுப்பாக்கியது. கசக்கிப் பிழிந்தது.

மனமும் சரி சரி என்று ஒப்புக்கொண்டு பின் வாங்கி விட்டது.

உடலை அப்புறப் படுத்துவது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி மேல் கேள்வி மனதைப் பிசைந்தது

திருமூலர் அரசியிடம் ஒரு தடவை அந்த உடலை எந்த முறையில் தீக்கிரையாக்க முடியும் என்ற இரகசியத்தைக் கூறியிருந்தார்.

“அதுதான் சரி” என்று தன்னுடைய நம்பகமான சேவகனை அழைத்துக் கட்டளையும் இட்டாள்.

“குணாளா! சதுரகிரி மலைக் கோட்டை குகையில் இருக்கும் துறவியின் உடலை எரித்து விட்டு வா! குங்கிலியம், வெங்காரம், வெடியுப்பு,இவற்றைப் பூசி, விராலி இலைகளால் மூடி அகில் கட்டைகளை அடுக்குவதனால் மட்டும்தான் இது சாத்தியம்!” போய் வா! இது ராஜாங்க இரகசியம்! வெளியே சொன்னால் தலையைத் துண்டிப்பேன்!” என்றும் அச்சுறுத்தி அனுப்பினாள்.

————————————————————————

அத்தியாயம் 10 – குணவதியின் காதல் கோட்டை

துறவியின் உடல் எரிக்கப்பட்ட அதே சமயத்தில், வீரசேனன் (திருமூலர்) தன் உடலைத் தேடி சதுரகிரி கோட்டைக் குகையில் சென்று தேடுகிறார். கிடைக்காததால், திருவானைக்காவல் அருகே வீர சேனனின் உடலை ஒரு மரத்தில் ஒளித்து வைத்து விட்டு, ஜம்புகேஸ்வரர் என்னும் அந்தணனின் உடலில் கூடுபாய்ந்து ஜம்புகேஸ்வர திருமூலராக மீண்டும் சதுரகிரி வந்து ஆசிரமம் அமைத்தார்.

புதிய துறவியை அடையாளம் தெரியாத குணவதி அவரை அணுகி வீரசேனன் குறித்து வினவினாள். உருமாறிய திருமூலர்-வீரசேனன் அவளிடம் கோபம் கொள்ளாமல் பச்சாதாபம் கொண்டார்; சுய நலம் யாரை விட்டது? என்று மனதில் நினைத்த அவர், குணவதியின் சதியைப் புரிந்து கொண்டு மனம் நொந்தார். நடந்ததை அவளும் விவரித்தாள். திருமூலரின் உடலை எரித்தது குறித்தும் சொல்லி விட்டாள்.

தன் காதல் மகத்தானது என்றும் மன்னன் வீரசேனனைத் தான் இழக்க முடியாது என்றும் வாதாடினாள். தனக்கு திருமூலர் கொடுத்த வரத்தையும் நினைவு கொண்டாள்.

திருமூலர், அவளை மன்னித்தார். அவளுக்குக் கொடுத்த வரத்தின்படி, அவளை நித்திய சுமங்கலியாக வாழ்விக்க வீரசேனனின் உடல் மறைக்கப்பட்டு வைத்து இருந்த மரத்தை ‘அரச மரம்’ என்று பெயரிட்டு, குணவதியை அந்த மரத்தை வீரசேனனாகவே பாவிக்க வேண்டும் என்று அவளையும் நித்திய சுமங்கலியாக வாழச் செய்து, ஒரு அரசியாக நாட்டை ஆள வழி வகுத்தார்.

மன்னன் வீரசேனன் இன்றும் திருவானைக்காவலில் அரச மர உருவில் சிரஞ்சீவியாக நின்று உயிர் வாழ்ந்து நிழல் கொடுக்கிறான். திருமூலர் சிதம்பரத்தில் சென்று முக்தியடைந்தாலும், இன்றளவில் சதுரகிரி மலைக் குகையில் வாழ்ந்து வருவதாகத்தான் ஐதீகம்!

இவனல்லவோ காதல் மன்னன்? என்றும் அணையாத தீபமாக குணவதியின் இதயத்தில் ஒளி வீசி, அவளை வாழ்வில் நடாத்தும் அற்புத மனிதன் இவன் தானே?

– முற்றும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *