காதலே மௌனமானால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 10,611 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைநகரிலிருந்து இருநூறு கிலோமீற்றர்களுக்கு சற்று அதிகமாக உள்ள தனது இலக்கை நோக்கிப் புறப்பட இருந்த அந்த அதிகாலை கடுகதி ‘இரயிலில்’ மூலை ஆசனம் ஒன்றினைப் பிடித்து வசதியாக அமர்ந்துகொண்டேன்.

சனநெரிசல் இல்லை.

எதிரிலே என்னைக் காட்டிலும் ஓரிரு வயது அதிகம் மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் சிறிது பதட்டத்துடன் ‘பிளாட்பாரத்தையும்’ தனது கை கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். சாதாரண ஆடையில் அவன் இருந்தாலும் அவனது இறுக்கமானதும் நன்கு பொலிஷ்’ செய்யப்பட்டதுமான பாதணி அவனை ஒரு ‘பொலிஸ்காரன்’ என இனங்காட்டியது.

எனது வாயைக் கட்டிக் கொண்டேன். பிரயாணத் துணைக்கு இப்படி ஒரு பாதுகாப்பு தேடினாலும் கிடைக்காது என்று மனதை நானோ என்னை மனமோ தேற்றிச் சமாதானம் செய்துக் கொண்டு சாந்தமாகினேன்.

இதமான பனிக்காலக் காற்றுக்கு ஈடுகொடுத்து உடல் சூடாகிக் கொண்டிருந்தது. விழிகளை இறுக மூடி தியான சுகத்தின் பேரின்பத்தை ஒத்திகை பார்த்தேன்.

‘இரயில்’ நிலையத்தின் பேரிரைச்சல் என்னை உலுப்பவும் விழிகளைத் திறந்தேன். என்ன ஆச்சரியம்…

என் எதிரே பளிங்குச் சிலைபோல ஒருத்தி அமர்ந்திருந்தாள். புகைவண்டி நகரத் தொடங்கியிருந்தது. அந்த பொலிஸ்காரன் வண்டியின் நகர்தலுக்கு ஈடுக்கொடுத்து ‘பிளாட்பாரத்தில்’ நடந்தபடியே அவளுக்கு இறுதிக் கட்ட அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டிருந்தான். அவன் அவளது அண்ணன் என்பது மட்டும் புரிந்தது.

இறைவன் அழகென்ற சமாச்சாரத்தை உலகெங்கும் அள்ளிச் சொரிந்திருக்கிறான். மலர்களிலும்…பறவைகளிலும்…மிருகங்களிலும்…மீனினங்களின் இயற்கையிலும் மருளாத உள்ளமும் உண்டோ ?

ஆனால் அவையாவற்றிலும் பரிணமித்துள்ள அழகனைத்தையும் ஒன்று குவித்த மையம் பெண்ணேயல்லவா!

பெண்களில் அழகிகள் உண்டு…. பேரழகிகள் உண்டு…ஆனால் ‘பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்

என்று மனம் ஏங்கும் பெண் அழகிகள் இருக்கிறார்களே…அப்படிப்பட்டவர்களை வாழ்க்கையில் அபூர்வமாகவே சந்திக்க முடியும்!

எனது வாழ்க்கையில் அப்படி நான் சந்தித்த இரண்டாவது பெண் இவள்!

‘பிளாட்பாரத்தில்’ ஓடிக்கொண்டிருந்த அந்த இளைஞனை பின் தள்ளி அந்த அழகுச் சிலையை என் முன்னிருத்தி புகையிரதம் வேகமாக ஓடத் தொடங்கியிருந்தது…

அவள் தனது பார்வையை ஓடும் காட்சிகளில் இலயிக்க விட்டிருந்தாள்…

எப்பேர்ப்பட்ட அழகான தோற்றமுள்ள பெண்ணுக்கும் இணைநிற்கக் கூடிய எனது ஆண்மைக்கு முகம்கொடுக்க அவள் தயங்கினாள் போலும்…

ஆனால் எனது வாழ்ககையில் நான் சந்தித்து அபரிமிதமான ஆசை கொண்ட அந்தத் தங்கச் சிலையை…. ஞ்சியை…” எனது தயக்கம் காரணமாகவே நான் இழந்தேன்!

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள்….ரஞ்சியுடனான எனது உறவு மறக்க முடியாதது என்பதல்ல பிரச்சனை. ரஞ்சியை நான் இழந்து விட்டமையால் எனது இதயத்தை இறுகப் பிழிவது போன்ற ஒரு வேதனை எனது ஆழ்மனத்தின் தளத்தில் என்றுமே சிரஞ்சீவியாக நிலைத்து விட்டது.

எனது அழகு…கல்வி…பதவி எல்லாமே அவளைக் கவர்ந்திருந்தன. அவளை என் பக்கம் திருப்புவதற்காக நான் எதுவுமே செய்ய வேண்டியிருக்கவில்லை…

ஆனால் அந்தப் பேரழகியின் முன் நான் எனது தகுதிகள் அனைத்ததையும் அற்பமாக கருதி விட்டேன் போலும்!

‘நான் உங்களைக் காதலிக்கவில்லையே’ என்று ரஞ்சி மறுத்துரைக்கும் ஒரு சந்தர்ப்பம் ஏற்படக் கூடாதென நான் அஞ்சினேன். அதைத் தாங்கிக் கொள்ளும் தைரியம் என்னிடம் சிறிதளவேனும் இருக்கவில்லை.

எனவே…

‘நான் உன்னைக் காதலிக்கின்றேன்’ என்று அவளிடம் கூறிவிட வேண்டிய அந்த மாபெரும் உண்மையை எனது இதய அறைகளில் வைத்துப் பூட்டிக் கொண்டேன்.

காதலிக்காமலே இருந்து விடுவது சற்றும் சிரமமல்ல. ஆனால் காதலித்துக் கொண்டே “அதை வெளிப்படுத்தத் தவறுவதால் ஏற்படும் இழப்பு நிமித்தமான ஒரு கவலை இருக்கிறதே…அதை எந்த ஒருவனாலும்…எந்த ஒருத்தியாலும் தாங்கவே முடியாது என்ற பாடத்தை நான் எனது வாழ்விலேயே படிக்க நேர்ந்திருக்காவிட்டால் எல்லாமே நன்றாக இருந்திருக்கும்…

அவளால் எவ்வளவு நேரம்தான் எதிர்காற்றுக்கு முகம் கொடுத்தபடி காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்…

எனது பக்கமாக முகத்தை திருப்பிக் கொள்வதும்… பின்னர் நாணி தலையை தாழ்த்திக் கொள்வதுமாக அவளது பெண்மை பிரகாசித்துக் கொண்டிருந்தது.

பிரயாணத்தின் போது என்னிடம் உதவிகள் ஏதாவது கேட்க நேரிட்டாலும் என்ற முன்யோசனையில் அச்சாரமாக ஒரு புன்முறுவலை அவள் உதிர்த்தாள்.

அந்நாட்களில் ரஞ்சி பிடிவாதமாக என்னை வைத்தகண் வாங்காமல் பார்ப்பாள். அச்சந்தர்ப்பங்களி லெல்லாம் நான் ஏனோ தலையைத் தாழ்த்திக் கொண்டிருந்திருக்கின்றேன்.

அவளது விழி வீசசுக்குப் பதிலாக நான் அவள்மீது ஒரு பார்வையை வீசியிருந்தால் அவள் புன்னகையை பரிசாகத் தந்திருப்பாள். அப்போதும் கூட நான் தலையைத் தாழ்த்திக் கொண்டிருப்பேன் என்பதில் ஐயமில்லை.

அந்தத் தவறை இப்போதாவது நான் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுத்தல் என்னில் மேலோங்க….மெதுவாகப் புன்னகைத்தபடியே…“உங்கள் பெயர்?’ என்று வினவினேன்.

நான் ஒரு பெண்ணைப் பார்த்து முறுவலித்தேன் என்றோ அவளது பெயரை வினவினேன் என்றோ என்னால் என்னை நம்பவே முடியவில்லை.

‘ரசிகா’ – முத்து உதிர்ந்த து……சலீர் என்றது. அள்ளிக் கொள்ள வேண்டும்போல் இருந்தது…

மறுகணமே தனது பெண்மைக்கேயுரிய நாணம் மேலிட பார்வையை வெளியே திருப்பிக் கொண்டாள்.

என் ரஞ்சியின் அதே சிரிப்பு!

ரஞ்சி அவளது நண்பிகளுடன் பேசிச் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் நான் அவளைக் களவாகப் பார்ப்பேன். என்னைக் கண்டுவிட்டால் அவளது உற்சாகம் அதிகரிக்கும்.

அதை நான் உணரும்படி அவள் உணர்த்தியிருந்தாள். நான்தான் தைரியமற்றிருந்தேன்.

ஒரு வேளை அவள் துணிந்து ‘நான் உங்களைக் காதலிக்கின்றேன்’ என்று என்னிடம் கூறியிருந்தால் எல்லாமே சரியாகியிருக்கும். அவள் துணியவுமில்லை . அது அவள் குற்றமுமில்லை .

ஒரு வருட காலமாக அவள் என்னில் மருண்டு இலயித்திருந்தாள். எனக்காக காத்திருந்தாள். அவளது இளமைப்பொழுதுகள் என் நினைவுடன் கழிந்தன. தனது கற்பை எனக்கு காணிக்கையாக்க முடிவெடுத்திருந்தாள். இவற்றையெல்லாம் உணர்ந்தும் உணராமல் நான் தான் இருந்து விட்டேன்.

அவள் மேலான எனது காதலை வெளிப்படுத்தும் திராணியற்றவனாக என்னைப் படைத்தாயே இறைவா என ஒவ்வோர் கணமும் வருந்துவேன்.

புகைவண்டி தனது போக்கில் ஆடியும் அசைந்தும் மோதியும் போய்க் கொண்டிருந்தது. சிற்றுண்டி வியாபாரிகளினதும் பிரயாணிகளினதும் பேரம் பேசுதல் சுமுகமாக நடை பெற்றுக்கொண்டிருந்தது.

மற்றொரு ‘கொம்பார்ட்மென்ரி’லிருந்து ‘புஃபே நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு ரசிகாவை தெரிந்திருந்தது.

“எங்கை போறியள்?” அந்த இளைஞன்

“ஊருக்குத்தான்”

உத்தியோகம் பார்க்கிறியளோ?

“இன்னமும் இல்லை ”

“அண்ணயை விசாரிச்சதாய்ச் சொல்லுங்கோ’

“ஓம்…ஓம்…”

ரஞ்சி மனதைக் கவர்ந்திருந்த காலம் தான் எனது வாழ்வின் பொற்காலம்…

நான் அவளுடன் வாழாதிருந்திருக்கலாம், ஒரு வார்த்தை பேசாதிருந்திருக்கலாம். ஆனாலும் ஒரு நேயம் எம்மைக் கட்டி வைத்திருந்தது.

மானசீகமாக ஒருவரை ஒருவர் நினைத்து வாழ்ந்திருந்த அந்தத் தூய பாதையில் ஒரு இளைஞன் குறுக்கிட்டான். அவனுக்கு என்னைக்காட்டிலும் மேலான பதவி இருப்பினும் என்னிடம் இருந்த வசீகரம் அவனிடம் இருக்கவில்லை.

ஆனால் அவன் தைரியத்துடன் ரஞ்சியை நெருங்கினான்.

அவனது தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க நான் கவலையில் துவண்டேன். அவனது மனத் தைரியத்தில் ஒரு சிறிதளவேனும் எனக்கிருந்திருந்தால் ரஞ்சி எளிதாக எனது இல்லத் தரசியாகியிருப்பாள். என் எதிரே அவளை பிறை போன்ற நுதலும்,…எடுப்பான மூக்கும்….முத்துப் பல்வரிசையும்…மாதுளை முத்தில் அமைந்திருக்கும் சிவந்த நிறமும்…கருநாகம் போன்ற அடர்ந்த மிக நீண்ட சிகையும்…உடுக்கின் இடை அழகும்….பாதங்களின் தூய வெண்மையும் எனக்கே எனக்கு என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன்.

‘புஃபே’ நோக்கி சென்று கொண்டிருந்த அந்த இளைஞனுடன் ரசிகா பேச்சை வளர்க்கவில்லை. இலாவகமாக வெட்டிவைத்தாள். அவனும் விலகிச் சென்றான்.

புறத் தூய்மையான பெண்கள் தங்கள் அகத் தாய்மையையும் பேணும்போது அவர்கள் தெய்வத்துக்கு சமமாகி விடுகின்றார்கள்.

ரஞ்சியின் விசயத்திலும் அப்படியே நடந்தது. எந்த ஒரு ஆண்களாலும் களங்கப்படக்கூடாத தெய்வீகத்தை நான் ரஞ்சியில் கண்டேன். அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்று முற்றுமுழுதாக நம்பினேன். என்றோ ஒரு நாள் அவள் ஒரு ஆடவனுக்கு தனது அழகையும் இதயத்தையும் திறந்து வைக்கப்போகிறாள் என்பதை நான் பிடிவாதமாக உணர மறுத்தேன்.

ஆனால் புதிதாக ரஞ்சிமீது காதல் கொண்ட அந்த இளைஞன் அவளை விவாகத்திற்காக நெருக்குவதாகவும் ரஞ்சி ஏதோ சாட்டுப்போக்கு கூறுவதாகவும் கதைகள் அடிபட்டன.

ரஞ்சிக்கும் எனக்குமிடையேயான பனிக் காதலுக்கு சோதனை ஏற்பட்டதாக எண்ணி என் நெஞ்சு வேதனையில் துடி துடித்தது…

புகைவண்டி ஒரு நிலையத்தில் தரிக்கவும் நான் ரசிகாவுக்காகக் குடிநீர் பிடித்துக் கொடுத்தேன். அவள் ஆதரவுடன் என்னை அணுகுவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

“நீங்கள் பட்டதாரியோ?” நான் வினவினேன்.

“இல்லை …. சீமா ‘ஸரேச் த்றீ இப்போதுதான் எழுதிவிட்டு வருகிறேன். நீங்கள்?’ வினாவினாள்.

“நான் ஒரு சிவில் இன்ஜினியர்’ ”

அத்துடன் அமைதி. ஓடும் காட்சிகளில் இலயிப்பு.

நான் விடவில்லை….”உத்தியோகம் பார்ப்பீர்களா, வெளிநாடு போவீர்களா?” வினாவினேன்..

“வெளிநாடு போக விரும்பவில்லை” சிரித்தாள்.

“எங்களுடைய கலாசாரத்தை நீங்கள் போற்றுபவர் போலும்.”

உதடுகளை நாக்கினால் தடவி ஈரலிப்பை ஏற்படுத்தினாள். உதடுகள் பிரகாசித்தன. குறும்புடன் பார்த்தாள். சிரித்தாள். பின் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவளுடைய அறிவு பேச்சிலும் துலங்கியது…

மௌனத்திலும் சுடர்விட்டது, வேகமாக ஓடிக்கொண்டிருந்த புகையிரதம் ஒரு குலுங்கலுடன் நின்றது. எட்டிப் பார்த்தேன். அவள் வினாக்குறியுடன் என் முகத்தைப் பார்த்தாள்.

“யாரோ ‘செயினை’ இழுத்து விட்டார்களாம்” நான் கூறினேன்.

“எந்தச் செயினை?’ சிரித்தபடி கேட்டாள்.

“முதலில் கழுத்துச் ‘செயின்’ பின்னர் அபாய அறிவிப்புச் செயின்”

இரசித்துச் சிரித்தாள். பின்னர் மெதுவாக நகரத்தொடங்கும் காட்சிகள் மீது பார்வை.

எனது பார்வை சுதந்திரமாக அவள்மீது மேய அவள் சந்தர்ப்பம் தந்தாள் போலும்…

எடுப்பான நாசி…துடிக்கும் அதரங்கள்….சங்குக் கழுத்து…முந்தானை விலகல்….பளிச்சிடும் இடை…பாதக் கமலங்கள்.!

ரஞ்சி என்னை மனதில் இருத்தியே அந்த இளைஞனுக்கு சாட்டுப் போக்கு கூறியிருப்பாள்.

அவனது நிர்ப்பந்தங்களுக்கு அவள் இறங்கிப் போகமாட்டாள். அவனை விரட்டி விடுவாள் என்று நான் பெரிதும் நம்பியிருந்தேன்.

மற்றவர்கள் அப்படிக் கதைக்கவில்லை. அந்த இளைஞன் அவளது முடிவைக்கோரி மூன்று நாட்கள் தவணை கொடுத்திருப்பதாகக் கூறினார்கள்.

என்மீது ரஞ்சிக்கு உள்ள உண்மையான ஆசை காரணமாக அவள் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பாள் என்று நம்பினேன். மூன்று தினங்கள் கழிந்ததும் ரஞ்சி தனது மறுப்பினைத் தெரிவிப்பாள். அவன் விலகிச் செல்வான். அப்போது நான் ரஞ்சியைச் சந்தித்து எனது தீராக் காதலை வெளிப்படுத்துவேன் என முடிவு செய்து கொண்டேன்.

எனது பலவீனத்திற்கு அதைத்தவிர வேறு முடிவினை எடுத்திருக்க முடியாதென்பதை இப்போ உணர்கின்றேன். புகையிரதம் பல நிலையங்களைக் கடந்தும் தரித்தும் சென்று கொண்டிருந்தது. ஒரு நிலையத்தில் இளம் தாயொருத்தி துடுக்கான பெண் குழந்தையுடன் ஏறினாள். பின் வெற்றிடமாக இருந்த எங்கள் ஆசனத்தில் வந்து அமர்ந்தாள்.

ரசிகாவுக்கு அந்தக் குழந்தையை நன்கு பிடித்து விட்டது. தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சினாள். கேள்விகள் பல கேட்டாள். குழந்தை சிரித்தது. தாய் பதில் கூறினாள்.

“உங்களுக்குக் குழந்தைகள் என்றால் உயிரோ? நான் வெறுமனே சந்தர்ப்பத்தை முன்னிறுத்திக் கேட்டேன்.

“ஏன்…உயிர் என்றால் பெற்றுத் தருவீர்களோ?” என்று அவள் துடுக்காகக் கேட்டாள். பின் நாக்கைக் கடித்துக் கொண்டாள். சிரித்தாள்; இமைகளைத் திரும்பத் திரும்ப வெட்டினாள். ‘சாறி பிளீற்ஸை’ தொடையில் வைத்து நீவிச் சீர்படுத்தினாள்.

பல்லாயிரம் மின்னலைகள் என்னுள் பாய்ந்தன. இவள் என்ன கூறுகிறாள்? ஒரு பெண்ணுக்கு குழந்தை கிடைப்பது ஆண்மகனால் தானே. அதற்கிடையில் உள்ள அன்பு…பாசம்…நெருக்கம்..பரித்தியாகம் எல்லாவற்றையும் அந்த ஒரு கேள்வியால் உணர்த்தி விட்டாளே….. நான் தலையைத் தாழ்த்திக் கொண்டேன்.

ரஞ்சியின் விசயத்திலும் நான் இப்படித்தான் அவளைத் தயக்கத்துடன் நெருங்கியுள்ளேன்.

அவளது ஒரு விழி வீச்சு பல்லாயிரம் மின்னலைகளை என்னுள் பாய்ச்சியிருக்கிறது…நான் விளக்க மற்றிருந்தேன்.

ஒரு முடிவுக்கும் வராமல் அவள் வாழாவெட்டியாக இருந்திருந்தால் நானும் அவளை எட்ட இருந்தபடியே இரசித்துக்கொண்டு காலத்தை ஓட்டியிருக்கக்கூடும்.

அப்படி நடக்கவில்லை. அந்த இளைஞனை திருமணம் செய்து கொள்வதற்கு தனது மேலான சம்மதத்தைக் கொடுத்து விட்டாள்!

ஆயிரம் சம்மட்டிகள் எனது தலைமீது விழுந்தன. நானும் ஒரு ஆணா என்று எனது மனமே என்னைக் கேலி செய்தது. பல பெண்களுக்குப் பின்னால் அலைந்து ‘ஐலவ்யூ’ சொல்லும் இளவட்டங்களின் தைரியம்….மனத் துணிவு என்னிடம் இல்லாமல் போனதே!

ரஞ்சி எனது கோழைத்தனத்தை நன்கு புரிந்து கொண்ட பின்னர் தான் அந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும் என்று எண்ணி மறுகினேன்.

அவள் என்னை மனதார நேசித்தாள். நாளும் பொழுதும் என்னை நினைத்திருந்தாள். எனக்காக அலங்கரித்தாள். என்னை நினைத்து நிலைக்கண்ணாடி

முன்பாக அதிக நேரத்தைச் செலவு செய்தாள். என்னை எதிர்பார்த்துத் தனது வீட்டு வாயில் கதவைத் திறந்து வைத்துப் பார்த்திருந்தாள். என்னை எண்ணி கட்டிலில் பல கனவுகள் கண்டாள். மானசீகமாக . என்னுடன் தாம்பத்திய சுகம் கண்டாள்…

ரஞ்சி… என்னை மன்னித்து விடு…உன்னை நான் சுமக்கா விட்டாலும் எனதுயிர் இருக்கும் வரையில் உன் மேலான நினைவை நான் சுமப்பேன். இது உறுதி… உறுதியின் மேல் உறுதி.

எனது கண்க ளிலிருந்து நீர் பெருகியது…

“என்ன கண்ணுக்கை துாசி ஏதும் விழுந்துட்டுதோ?’ ரசிகா வினவியதுடன் கைக்குட்டையையும் நீட்டினாள்.

நான் சகஜநிலைக்குத் திரும்பினேன். சமாளித்தேன்.

பொழுது செல்லச் செல்ல குழந்தை ரசிகாவில் நன்றாக இடம் கண்டு கொண்டது. மடியில் இருந்து குதித்தது. சேலைத் தலைப்பை இழுத்து “ஆன்ரி….ஆன்ரி” என்று அழைத்தும் முத்தம் கொடுத்தும் எப்படி அந்தக் குழந்தை அவள் மீதான தனது அன்பைத் தெரிவிக்கின்றது.

ரசிகாவை நன்கு கவர்ந்த பின் குழந்தை எனது பக்கம் தாவியது. “அங்கிள்….. அங்கிள்….” என்று அழைத்து எனது கைவிரல்களை இழுத்து ரசிகாவின் கைவிரல்களுடன் இணைக்க முயன்றது.

அதனது பார்வையில் நானும் ரசிகாவும் கணவனும் மனைவியும். அந்த இளம் தாய் கூட அப்படித்தான் நினைத்து வினவினாள்.

“ஏன் உங்களுக்கு குழந்தைகள் இல்லையோ?’

நான் ரசிகாவைப் பார்த்தேன். சில சமயங்களில் விளக்கங்கள் கூறுவதைக் காட்டிலும் பேசாமல் இருந்து விடுவதே உசிதமானதாக இருக்கும். அவளும் மௌனத்தையே தெரிந்தெடுத்தாள்.

அடுத்த நிலையத்தில் வண்டி நிற்கவும் தாய் மகளுடன் இறங்கிக் கொண்டாள்.

ரசிகாவின் கண்கள் பிரிவினால் கலங்கின. அந்த நேரத்தில் அக்குழந்தையால் அவளது அன்பைப் பெற்று விட முடிந்தது. உயிரினங்கள் எல்லாமே அன்பைச் சொரியவும் அதைப் பெற்றுக் கொள்ளவும் . தெரிந்திருக்கின்றன. நான்? நான்?…

ரசிகா நீர் திரையிட்ட விழிகளால் என்னைப் பார்த்தாள். இமைகளை மீண்டும் மீண்டும் வெட்டினாள். எனக்கு ஆயிரம் கதைகள் புரிந்தன.

அந்தத் தாயும் குழந்தையும் அவளை என்னுடன் சோடி சேர்த்து வைத்துப் பார்த்தமை அவள் மனத்தில் இனம் புரியாத கிளர்ச்சியொன்றினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அவர்கள் இருக்கும் வரை இல்லாத கூச்சமும், அச்சமும் அவளது மருளும் விழிகளில் பட்டெனத் தெரிந்தன.

எதுவோ சம்பவித்து விடும் என்றும் அவள் பயந்தாள்…

எதுவோ நடந்துவிடவேண்டும் என்றும் அவள் விரும்பினாள்…

அந்தக் குழந்தை தன்னில் காட்டிய கரிசனையை நானும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவள் பரிதவித்தாளோ…?

அவளது விழியோரம் அரும்பும் நீர் எப்போதும் கரைதட்டி விடலாம்…

நான் இறங்கிக் கொள்ள வேண்டிய நிலையமும் இதோ அண்மித்துக் கொண்டிருக்கின்றது. அவளும் அதனைப் புரிந்து கொண்டு என்னையே நோக்குகின்றாள். அந்தப் பார்வை என்னிடம் அன்பை யாசிக்கின்றது…

எனது அதைரியம்… எனது கோழைத்தனங்கள்…எனது இயலாமைகள்…அத்தனையும் ஒரு கணம் செயலிழந்து போக கூறுகின்றேன்…

“ரசிகா…நான் உங்களை நேசிக்கின்றேன்”

அக்கணம் அவளது விழிநீர் கரை புரண்டோடு கின்றது. நன்றியுடன் என்னைப் பார்க்கின்றாள்…

இதோ…நான் இறங்க வேண்டிய நிலையம்…

பிரயாணப் பையை எடுத்துக் கொள்கின்றேன்…விடைபெறுகின்றேன்…ரசிகா எனது முகத்திற்கு நேரே தனது வலது கரத்தை நீட்டுகின்றாள் அவளது புறங்கையில் அன்பு முத்தம் பதிக்கின்றேன்…

“மீண்டும்….?” வினவுகின்றாள் “சந்திப்போம்” முடித்து வைக்கின்றேன்.

வண்டியின் நடைபாதையால் வாசலுக்கு திரும்பி அவளைப் பார்க்கின்றேன். முழங்கால்களுக்கிடையே முகம் புதைத்திருக்கின்றாள்..

என் வாழ்க்கை பூராகவும் என் அடி மனதில் பதிந்திருந்த துன்பச் சுமை விலகுகின்றது…

என்னாலும் அன்பு செலுத்த முடியும்…என்னாலும் ஒரு பெண்ணைக் கவர முடியும்….என்னாலும் எனதன்பை வெளிகாட்ட முடியும்..!

மனதில் குதுாகலம் குமுறி எழுகின்றது…ஆயிரம் உணர்வுகள் என் மனத்தில் சிலர்த்துப் பூக்கின்றன…

வண்டியிலிருந்து மேடைக்கு ஒரே தாவலாகத் துள்ளிப் பாய்கின்றேன்…

எனது மனைவி பிள்ளைகளுக்காக நான் வாங்கி சேகரித்த பரிசுப் பொருட்கள் உள்ளடங்கிய பிரயாணப்பை மட்டும் தோள்களை அழுத்துகின்றது!

– ஞானம் ஏப்ரல் 2002, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *