காதலுக்குத் தேவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 5,482 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சித்ரா! என் கனவில் ஒளி வீசும் நினைவே! நினைவில் சிரிக்கும் கனவே! விழிகளுக்கு விருந்தாக விளங்கிய அழகே! உள்ளத்தில் சதா இனிக்கும் அமுதே! என் அன்பே!…

எழுதுவதை நிறுத்திவிட்டு நம்பி ராஜன் எண்ணம் சென்ற போக்கில் லயித்தான்.

“சித்ராவைப்பார்த்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவள் ஒரு தடவை கூட வந்து பார்க்கவில்லை. வருவாள், அவசியம் வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாறுவதில் என் மனம் இன்னும் அலுப்பு அடையவில்லை. இனிமேல் அவள் இங்கே வராவிட்டாலும் பரவாயில்லை. நாளை நானே அவளைக் காண அவள் வீடு தேடிச் செல்ல முடியுமே!”

இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் உவகைக் கிளுகிளுப்பு உண்டாக்கியது. அவளைப் பார்த்தால்…..

அவன் கைவிரல்கள் அவன் முன்னே கிடந்த நோட்டில் சில தாள்களைப் புரட்டின. அவன் எழுதி வைத்திருந்த வரிகள் இப்போதும் அவனுக்கு இனித்தன.

“அசைந்து வரும் அழகே மயக்கம் போல் என் அகம் புகுந்து விட்ட சுந்தரி என் அருமைச் சித்ரா. உள்ளத்தில் உணர்ச்சிப் புயலைக் கிளப்பும் நீ தென்றலென வருகிறாய். அழகு மலர்த்தோட்டம் என விளங்கும் நீ அடி எடுத்து வருகையில் மலர்களிடையே சஞ்சரிக்கும் வண்ணப்பூச்சி போலும் காட்சி தருகிறாய். உன் மீது பதித்த கண்களை மீட்க முடிவதில்லை. முழு நிலவு போன்ற உன் எழில் முகத்தில் அரும்பும் புன்னகை தனியொரு புது நிலவாய் ஒளிர்கிறது. என் உள்ளத்தில் எண்ணற்ற அலைகள் பொங்கி எழச் செய்யும் முழுமதியே… !

சித்ராவின் தோற்றம் இவ்விதமான எண்ணக் கிளர்ச்சிகளை உண்டாக்கி விடும் தான். அவள் தினம்தோறும் அவன் வாழ்வில் இனிமை சேர்த்த அன்பின் வடிவம். இந்த மூன்று மாதங்களாக அவளைக் காண முடியாதவாறு காலம் சதி செய்து விட்டது.

கவிதைகளால் வர்ணித்து, கற்பனையில் மிதக்கச் செய்து ஒரு பெண்ணைத் தன் காதலுக்கு அடிமையாக்கிக் கொள்வது மிகச் சுலபம். ஆனால் அக்காதல் வளர்ந்து, தளர்ந்து, வேரூன்றிக் கொள்ளத் தேவையானது “பணம்தான். பணம் இன்றேல் காதல் காற்றில் பறக்கும்” என்கிறார் இக்கதாசிரியர்.

நம்பிராஜன் நெடுமூச்சு உயிர்த்தான். கவி உள்ளம் படைத்தவன் அவன். முழுக்கவி ஆகிவிடவில்லை இன்னும். கவிஞன் ஆகவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அவன் எண்ணங்களையும் கனவுகளையும் அவ்வப்போது இஷ்டம் போல் எழுதி வைக்கத் தவறியதில்லை. அவனது நண்பர்கள் அவனை “அரைக்கவிஞர்” என்று கேலியாகக் குறிப்பிடுவது வழக்கம். அரைக்கிறுக்கு” என்று சிலர் சொல்வது உண்டு.

கவிஞர் என்றால் அவர் கவிதைகள் எழுதினாலும் எழுதா விட்டாலும் அவருக்குக் காதலி என்று ஒருத்தி அவசியம் இருக்க வேண்டும். அவர் அவளால் காதலிக்கப்படா விட்டாலும், அவளை அவர் காதலித்து, உணர்ச்சி வசப்பட்டு சதா கவிதைப் புலம்பல்களைக் கொட்டிக் கொண்டு இருக்க வேண்டியது அவசியம்!

இப்படி ஒரு நண்பர் சொன்னார். அவர் பரிகாசமாகத்தான் பேசினார். ஆனால் அதில் உண்மை இருக்கிறது. உலக மகா கவிகளின் வரலாறுகளும் இதைச் சுட்டிக் காட்டுகின்றன என்று நம்பிராஜனின் கவியுள்ளம் உறுதிப்படுத்தியது. “காதல் உதயத்தின் பொன் ரேகைகள் எட்டிப் பார்க்கும் என்று என் விழிச் சாளரங்களைத் திறந்து வைத்து நான் காத்துக் கிடந்த காலத்தின் அளவு தான் எவ்வளவு!

செம்பட்டு உடுத்து, செம்மலர்சூடி, செவ்விய கன்னங்கள் தனி ஒளி காட்ட, வந்த அழகு மகளே! உஷை நிகர்த்த பெண்ணே! உன் கண்ணின் சுழற்சி என்னை வெற்றி கொண்டது. உன் மாதுளை மொக்கு உதடுகளில் மலர்ந்த முறுவல், ஆகா, நீ தான் அவள்! எவளுக்காக நான் காத்திருந்தேனோ அவளே தான் நீ எனும் சத்தியம் என்னுள் பொறி தெறிக்க வைத்தது…. .”

அவனால் காதலிக்கப்பட வேண்டிய பெண் அவன் முன்னால் வந்து தோன்றிய போது நம்பி எழுதி வைத்த வரிகள் இவை. அதை எத்தனை தடவைகள் அவன் படிததுப படிததுச சுவைத்துவிட்டான். இப்போதும் படித்தான். அந்த சந்தர்ப்பம் பசுமையாய் அவன் நினைவில் நிழலிட்டது.

ஒருநாள் அவன், அழகான ரஸ்தா என்று அவன்கருதிய ஒரு இடத்தில், பாதை ஒரத்தில் அமர்ந்த, விண்ணையும் மண்ணையும் கண்டு வியந்து கொண்டிருந்தான். மனசில் அலை மோதிய எண்ணங்கள் காரணமாக அவன் முகம் மலர்ச்சியுற்றிருந்தது. எதையோ எண்ணி அவன் சிரித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவள் வந்தாள்.

வழியோடு போனவள், தன்னைப் பாராமல் வெறும் வெளியைப் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கும் கலைஞன். அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்தாள், அவன் கவனத்தை கவர்வதற்காக அவள் கைவளைகளை கலகலக்கச் செய்தாள். அப்போது தான் அவளுக்குத் திடீர் தொண்டைப் புகைச்சல் வந்தது! தொண்டையைச் செருமிச் சரிப்படுத்தினாள்.

நம்பி கவனிக்காமல் இருப்பானா? பளிச்சிடும் தக்காளிப்பழ வர்ண ஆடையும் நாகரீக உருவமுமாய் மெதுநடை நடந்த யுவதியைக் கண்ட உடனேயே, கவிதையாய் வந்த காதலி என்ற சொல் உதயமாயிற்று. அவன் உள்ளத்திலே, “காதலாய் வந்த கவிதையே! கவிதையாய் அசையும் சுந்தரி!” என்றும் அவன் நோட்டில் குறித்துக் கொண்டான்.

அவனும் அவன் செயலும் அவளுக்கு விசித்திரமாகப் பட்டிருக்க வேண்டும். திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துக் கொணடே நடந்தாள்.

“காந்தம் ஒளிருது சுழல் விழியில்! சுந்தரம் சிரிக்குது உன் இதழ் கடையில்” என்ற வரிகளும் அவனுக்கு உதயமாயின. ஆகா, இவள் தான் என் கவித்திறனை வளர்க்கக் கூடிய காவியமகள் என்று அவன் முடிவு கட்டாது எவ்வாறு இருத்தல் கூடும்?

“எவனோ. பைத்தியம்.”

மறுநாள். அவள் அவ்வழியே வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தோடு, வர வேண்டும் எனும் ஆசையோடு – அவசியம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் அவன் அதே இடத்தில் காத்திருந்தான். ஏமாறவில்லை. அவள் வந்தாள். மறுநாளும், அதற்கு மறுநாளும், தினந்தோறும்!

அந்நேரத்தில் அவ்வழியே தினசரி போயாக வேண்டிய வேலை அவளுக்கு உண்டு என்பதை புரிந்து கொண்ட நம்பிராஜன் நாள்தோறும் அங்கே வந்து காதிருப்பதைத் தனது முக்கிய வேலையாக ஏற்றுக் கொண்டான்.

பார்வைப் பழக்கம் பேச்சுத் தொடர்புக்கும், சேர்ந்து நடந்து போகும் பழக்கத்துக்கும் வழி அமைத்துக் கொடுத்தது. அதற்கு அவளும் செயலூக்கத்தோடு உற்சாகம் காட்டினாள். அவனுக்குத் துணிச்சல் தந்தாள். அவளைப் பற்றி அவன் எழுதிய கவிதை வரிகளை அவளுக்குப் படித்துக் காட்டினான். அவள் மிக மகிழ்ந்து போனாள்.

நம்பிராஜன் அவளைச் சந்திக்க சில சமயம் அவள் வீட்டுக்குப் போவதும் உண்டு. அதை அவள் ஆட்சேபிக்கவும் இல்லை; அடிக்கடி வரவேண்டும் என்று விரும்பி அழைக்கவு மில்லை. அவள் வீதியிலும், கடலோரத்திலும் சந்தித்துப் பொழுது போக்குவதைத்தான் பெரிதும் ரசித்தாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அதனால் இயற்கை இனிமை களையும் அவளது இயற்கை மோகத்தையும் இணைத்து அநேக பக்கங்கள் எழுதி வைத்தான்.

அவன், காதல் வளர்க்கும் பலரையும் போல அவளை ஒட்டலுக்கும் சினிமாவுக்கும் அழைத்துப் போக வில்லை. அவன் அழைத்துச்செல்வான், அப்படி அழைத்துப் போக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனிடம் கோரிக்கை விடுக்கவில்லை.

ஒரு சமயம். வெகு தூரம் நடந்து அலுத்த பிறகு, பெரிய ஓட்டல் ஒன்று தென்படவும், “உள்ளே போகலாமா? ஏதாவது சாப்பிடணும் போல் இல்லை?” என்று அவள் தூண்டினாள். அவனும் “ரெடியாக அவளோடு சென்றான். இரண்டு பேருக்கும் நல்ல பசி, ஸ்வீட், டிபன், காப்பி என்று சுவைத்துச் சாப்பிட்டார்கள். சுவையான பேச்சுகள் பரிமாறிக் களித்தார்கள். அவள் என்ன எண்ணத்தில் அவனை ஒட்டலுக்கு அழைத்தாளோ? அவன் “பில் பணம் நான் தருகிறேனே!” என்று சொல்லுக்குக் கூட சொல்லவில்லை. அவள் தான் பணம் கொடுக்க நேர்ந்தது.

கவிஞரிடம் கற்பனையும் கவிதையும் நிறையக் கிடைக்கும். காசுக்கு வழி ஏது? சித்ரா புத்திசாலி. அதனால் அவள் மறுபடி ஒட்டல் சமீபமாக அடி எடுத்து வைக்கவில்லை, அவனோடு போகும் சமயங்களில்.

நம்பிராஜன் பேச்சும், அவளைப் புகழ்ந்து அவன் எழுதும் வரிகளும் அவளது செவிகளுக்கும் மனசுக்கும் மிகுதியும் இனித்தன. அவற்றை அவள் வரவேற்றாள்!

அவள் பெயர் சித்ரா என அறிந்ததும் அவன் உற்சாகத்தோடு பல வரிகள் எழுதினான்.

“சித்திரை, வசந்தத்தின் பண்ணை. அழகிய காலம், என் வசந்தம், இனிமையின் கொலு, அருமைச் சித்ரா. எனது வாழ்வில் பசுமை புகுத்த வசந்தம் என வந்தவளே! உனக்குப் பெயர் சித்ரா ஆகா, என்ன அழகான, அருமையான பெயர் நீ அழகுகளின் கொலுமண்டபம். அன்பின் உறைவிடம்.”

இந்த ரீதியில் அடுக்கியிருந்தான். அவளுக்கு ஆனந்தம் அளித்தது அது.

நாட்கள் ஜோராக ஓடின. திடீரென்று ஒரு நாள் நம்பிராஜனுக்கு ஒரு வியாதி வந்தது. பலக்குறைவு. போதிய போஷாக்கு இல்லை; வீணான அலைச்சல், மனக்கவலை இப்படி எத்தனையோ காரணங்கள். வியாதி வருவதற்குக் கேட்பானேன்?

வந்த வியாதி லேசில் போகவில்லை. அவன் தர்ம ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். நல்ல கவனிப்பு கிடைத்தது. மூன்று மாத காலம் அங்கேயே தங்கியிருக்க நேர்ந்தது.

சிறிது குணமான உடனேயே அவன் சித்ராவைப் பற்றி எண்ணுவதைத் தொடர்ந்தான். அவனது எண்ணமாய், ஏக்கமாய், ஆசையாய், கனவாய், காதலாய் உருப் பெற்றிருந்தாள் அவள். அவளுக்குக் கடிதங்கள் எழுதினான். நோட்டில் அவளைப் பற்றி எழுதிக் கொண்டே இருந்தான்.

அவள் கடைசிநாள் வரை வரவே இல்லை. அவளுக்கு ஏதேனும் அலுவல் அல்லது அசெளகரியம் ஏற்பட்டிருக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

நம்பிராஜன் சித்ராவைக் காணச் செல்வதில் கால தாமதம் செய்யவில்லை. அவன் போனபோது அவள் வீட்டில் இல்லை.

சித்ராவின் தாய் அவனை வெறுப்புடன் நோக்கினாள், “இத்தனை நாளாக இல்லாமல் இப்போ நீ எங்கிருந்து வந்தே?” என்று அவன் முகத்தில் அறைந்த மாதிரி கேட்டாள். தனக்கு வந்த வியாதியின் கொடுமை பற்றி அவன் சொன்ன பிறகு கூட அவள் அனுதாபம் கொண்டதாகத் தெரியவில்லை.

நம்பி அங்கே கிடந்த மேஜையின் முன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்த போது அவள் அதை விரும்பாதவளாய், அவனை சீக்கிரம் அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு, பேசினாள். “சித்ரா வர நேரம் ஆகும். நீ ஏன் அவளுக்காகக் காத்திருக்கிறே! அவள் யாருடனோ போயிருக்கிறாள்.”

நம்பியின் கண்கள் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல கவர்களையும், அருகில் கிடந்த திருமண அழைப்பு இதழ்களையும் கவனித்தன. மேலோட்டமாகப் பார்த்ததிலேயே, சித்ராவுக்குத்தான் கல்யாணம் என்பது தெரிந்துவிட்டது. மணமகன் பெயர் ராமநாதன் என்றிருந்தது.

நம்பிராஜனுக்கு அது ஒரு அதிர்ச்சியாகத்தான் அமைந்தது. எனினும் அவன் சித்ராவின் தாயாரிடம் எதுவும் பேசவிரும்ப வில்லை. அவன் உள்ளம் திடீரென வறண்டு விட்டது போல் தோன்றியது. தனது நோட்டில் எதையும் எழுதி வேண்டும் என்ற எண்ணம் இனி அவனுக்கு என்றுமே எழாது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.

கடைசியாக அவனுக்கு ஒளிவெட்டுப் போல் எண்ணம் பிறந்தது. அவன் தன்னோடு கொண்டு வந்திருந்த நோட்டில் முகப்பில் எழுதினான். “என் வாழ்வில் சிறு நேர வசந்தமாக வந்து வறண்ட கோடையாகி விட்ட சித்ராவுக்கு அன்புக் காணிக்கை – நம்பிராஜன்” இதை எழுதியதும், அந்த நோட்டை மேஜைமீது, கல்யாண அழைப்புகளோடு சேர்த்து வைத்து விட்டு அவன் புறப்பட்டான்.

அவன் வெளியே வந்ததும், வீட்டின் முன் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. மிடுக்காக உடை அணிந்திருந்த நவயுவன் ஒருவன் ஒட்டி வந்த அதில் அவன்மீது சாய்ந்தபடி காட்சி அளித்தது சித்ரா தான். அவள் அவன் பக்கம் பார்வையைத் திருப்பிய போதிலும், அவனைப் பாராதது போலவே நடந்து கொண்டாள். அவசியமில்லாமல் கலகலச் சிரிப்பு சிதறியவாறே கீழே குதித்தாள். அந்த வாலிபன் மீது சாய்ந்து ஒட்டிக் கொண்டே நடந்தாள், அவன் தான் மாப்பிள்ளை என்று தோன்றியது.

அவள் மிகவும் சந்தோஷம் பெற்றவளாகவே காட்சி அளித்தாள். அது நம்பிராஜன் இதயத்தில் வேதனை உணர்வையே கிளறியது. அவளை கூப்பிடாமலே நகர்ந்து விடலாமா என்று எண்ணினான் அவன். அதற்கும் மனம் வரவில்லை. “சித்ரா” என்று கூவினான்.

சித்ரா திரும்பிபி பார்த்தாள். அவனை அறியாதவள் போல் துணைவனோடு போனாள்.

“சித்ரா! எனது அன்புப் பரிசு மேஜை மீது இருக்கிறது!” என்று வேண்டுமென்றே உரக்கக் கத்தினான் அவன். மெதுவாக தன் வழியே நடக்கத் தொடங்கிய அவன் காதில் இந்த உரையாடல் தெளிவாக விழுந்தது.

“யாரது?”அந்த வாலிபன் கேட்டான்.

“எவனோ பைத்தியம்! கவிதையெழுதுவதாகச் சொல்லி ஏதாவது உளறிக் கொண்டே இருப்பான்” என்று அறிவித்தாள் சித்ரா.

நம்பிராஜன் பெருமூச் செறிந்தான். “கவிதையும் கற்பனை யும் காதலை உண்டாக்கலாம். ஆனால் அது கொழுத்து வளாநது இனிய பலனைத் தருவதற்கு பணமும் வேறு பல வசதிகளும் அவசியம் தேவை யென்ற எண்ணம் அவனுள் அலை யிட்டது.

– குண்டூசி – தீபாவளி மலர்

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *