ரயில் நின்றது , சாமி உங்க ஊரு வந்தாச்சு, எழுப்பி விட்ட சக பயணிக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்கினேன். சுற்றும் முற்றும் பார்வை போச்சு, அதே ஆலமரம் அதன் கீழே சிறுவர்கள் பள்ளி சீருடையில், மதிய சாப்பாட்டு கூடையுடன் வேலைக்கு போகும் ஆண்களும் பெண்களும், எல்லோரும் ஓடிகொண்டிருந்தனர், பணத்தில் பின்னல். மனம் ஒரு இருபதியிந்து வருடங்களுக்கு பின்னல் சென்றது . அப்போது இவ்வளவு பரபப்பு இல்லை. இந்த ரயில் நிலையம் மிகவும் அமைதியாக இருக்கும், வேலைக்கு போகும் ஆண்கள் , மற்றும் அடுத்த ஊருக்கு சென்று படிக்கும் கல்லூரி வயதுடையோர், மற்றபடி சிறுவர் சிறுமியர் உள்ளூர் பள்ளி கூடத்திலும், பெண்கள் காய்கறி வாங்க மட்டும் ரயில் நிலையம் தாண்டி மறுபக்கம் போய் வருவர், மக்கள் போய் வர ரயில் நிலையம் மேல், நடை மேடை வேண்டும் என்றும் என் அம்மா தானே அவர் உதவி சேர்மனாக இருந்த போது பிரத்தியேகமாக முயன்று இந்த ஊருக்காக கொண்டுவந்தார்.
இரண்டே நிமிடத்தில் எவ்வளவு எண்ண அலைகள் , திரும்பவும் இன்றைய நிலைக்கு வரை, நடை மேடையில் ஏறி வலது பக்கம் இறங்கினேன். குதிரை லாயம் இப்பொழுது ஆட்டோ ஸ்டெண்டாக மாறி இருந்தது. அய்யா ஆட்டோ வேணுமா என்ற குரல் காதில் விழ, ஆமாம் என்று அனிச்சையாய் வாய் சொன்னது. எங்க போகணும் சாமி என்ற குரலுக்கு கை தனிச்சையை பைக்குள் கை விட்டு போக வேண்டிய விலாசத்தை குடுக்க, ஒ இங்கேயா என்று ஆட்டோகாரர் கேட்ட பொழுது தான், குரல் பரிச்சியமாய் இருக்கிறதே ! என்று முகம் பார்க்க தோன்றியது, நீங்கள் நீ நீ கோவிந்தன் தானே?, முகத்தில் ஒரு சின்ன கேள்விக்குறியுடன் பழைய நண்பனின் முகம் தேடியது நெஞ்சம், ஆமாம், அவனே தான், அந்த கோவிந்தனையே பார்த்தது போல ஒரு சந்தோஷம் மனதில், இருந்தும் ஒரு டிப்ளோமா இஞ்சினீயர் எப்படி ஆட்டோகாரராக?, மனதின் குழப்பம் முகத்தில் தெரிய, அதற்குள் கோவிந்தன், சாமி வாங்க போகலாம் என்றது தான் அவனும் என்னை கவனித்திருக்க வேண்டும், டேய் நீ விஷ்ணு தானே, என்று சத்தமாகவே கேட்க என்னுடைய பெயரை வெகுநாள் கழித்து இப்போது தான் நானே கேட்கிறேன், ஆயிற்று இன்றோடு பன்னிரண்டு வருடங்கள், சமீபகாலமாக எல்லோரும் சாமி சாமி என்றே அழைத்து பழக்கபட்டிருந்த காது இப்போது தான் தன் பெயரை கேட்டது, ஆசையாக அம்மாவும் அப்பாவும் விஷ்ணுன்னு கூப்பிடும் அந்த வாஞ்சையான குரல் காதில் மறுபடியும் ஒலித்தது.
அதற்குள் கோவிந்தன், இத்தனை நாள் எங்கடா போனே?, என்னா இது கோலம்?, எப்போ சாமியார் ஆனே? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க திரும்பவும் மனது நிலைக்கு திரும்ப, முதலில் கோவிந்தனை கட்டி பிடிக்க வேண்டும் என்ற அவாவில் கிட்டே சென்றபோது சற்று தள்ளி நின்றான் , நான் இன்னும் குளிக்கலே என்று என் சாமியார் உடைக்கு மரியாதை கொடுத்தான் அவன், முதல்ல வண்டில ஏறு வீட்டுக்கு போகலாம் என்றான், சரி போகும்போது பேசிக்கொள்ளலாம் என்று வண்டியில் ஏறியவுடன், ஆட்டோ கிளம்பியது , ஊரே மாறிவிட்டது கண் கண்ட இடம் எல்லாம் மக்கள் வெள்ளம் கடைகளின் தாக்கம் , இது என் ஊரா ?!!! என்ற சந்தேகமே வந்துவிட்டது, அகலமாய் இருந்த பாதைகள் எல்லாம் சுருங்கிபோய் இருந்தது, மக்களின் மனம் போலதானே மாநிலமும் இருக்கும் என்று மனதிற்குள் சிரித்துகொண்டேன். எண்ணங்களை கலயவைத்தது அந்த காட்சி .
ஆம், அந்த வீடு, அதே வீடு, நான் பிறந்தது முதல், படிக்கும் நாட்களில் வாழ்ந்த வீடு, இந்த வீட்டில் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள், எத்தனை எத்தனை நிகழ்சிகள், இன்பம், துன்பம், சந்தோசம், வருத்தம், ஒவ்வொரு மூலைக்கும் தனித்தனி சரித்திரமே உண்டே.
முதலில் கண்ணில் பட்டது அம்மாவின் அந்த பெயர் பலகை, சற்று புகை படிந்தார்போல ஒருபுறம் மட்டும் ஆணியுடன் தன் உயிரை பிடித்து தொங்கி கொண்டிருந்தது. ஓரமாக இருந்தது என் அழகிய புல்லெட், முற்றிலுமாக துரு பிடித்த நிலையில், எவ்வளவு இடத்திற்கு போய் இருப்போம். என்னுள் ஒன்றாக இருந்ததல்லவா.
அதற்குள் கோவிந்தன் வீட்டின் உள்ளே போய் விஷயத்தை சொல்லி இருக்க வேண்டும், வாப்பா வா என்று உள்இருந்து வந்த குரல், பரிச்சியமாய் உள்ளதே!!, அத்தை, இது என் அத்தை, இவர் எப்படி இங்கே!!!!?
அத்தை உள்ளே கூட்டிகிட்டு போயி பத்திரமா பார்த்துகோங்க நான் ஸ்கூல் சவாரி எல்லாம் முடிச்சிட்டு இதோ வந்துடறேன், வரும்போது ஏதாவது வேணும்ன்னா சொல்லுங்க வாங்கிட்டு வரேன் நீங்க வெளில போயி கஷ்டப்பட வேண்டாம் என்றவன், டேய் எங்கயும் போயிடாதே, குளிச்சிட்டு சாப்டுட்டு இங்கயே இரு, நான் வந்துடறேன் என்று சொல்லிவிட்டு, அத்தை விமலா காலேஜ் போயாச்சா என்றான், இல்லேப்பா அவள் நடந்து தான் போவாள் நீ போயிட்டு வா என்று அத்தை சொல்ல, ஓ விமலாவும் இங்கே தான் இருக்கிறாளா!!!!!, ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் நிகழ் காலம் மனதில் விரிந்து கொண்டே சென்றது. சரிடா நான் வந்துடறேன் என்று சொல்லிய மறு நிமிடம் அவன் போயே விட்டான்.
ஏன் வெளிலே நிக்கறே உள்ளே வாப்பா இது உன் வீடு என்ற அத்தை, அண்ணா என் மருமான் வந்துட்டான், உங்க பிள்ளை வந்துட்டான் என்று உரக்க சொல்லிக்கொண்டே கூடம் வரை சென்றார், கால்கள் அனிச்சையாய் உள்ளே நுழைய கூடத்தில் ஒரு ஓரத்தில் ஒடுங்கிய நிலையில் அந்த உருவம் – அப்பா ????!!!! அதே ஈசிசேரில், அத்தை சொன்ன விஷயம் காதில் கேட்டிருக்க வேண்டும், அப்பா தன் ஈசிசேரய் விட்டு எழ முயல, எதுக்கு அண்ணா கஷ்டபடறேள், இதோ இங்க தான் இருக்கான் என்று நான் இருந்த என் பக்கம் அத்தை காண்பிக்க, வந்துட்டியாடா நீ வந்துட்டியா, நீ வந்துடுவேன்னு எனக்கு தெரியும் என்ற உருக்குலைந்த குரல் என் அப்பாவிடம் இருந்து, இவரா இவரா என் அப்பா, கம்பீரமாய் ஒலிக்குமே அவர் குரல், வயது ஒருவரை இவ்வளவா மாற்றிவிடும்???, தேகம் என்னமோ ஒல்லி தான் அனால் அவர் குரலில் மட்டும் அத்தனை கம்பீரம் இருக்கும், இருந்தும் மனதளவில் ரொம்ப வாஞ்சைனவர், முற்போக்கு எண்ணம் உள்ளவர், இல்லாவிட்டால் அந்த காலத்தில் என் அம்மா உதவி நகரமன்ற தலைவி ஆகியிருக்க முடியுமா!!!???, அம்மாவிற்கு ஊக்கம் அளித்து அவரை அந்த பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர் அவர் தானே, அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அந்த காலத்திலேயே அப்படி ஒரு பந்தம், அம்மா இல்லாமல் அப்பா எங்கும் செல்ல மாட்டார் அதே போல தான் அம்மாவும், பதவியில் அமர வைக்கும் வரை கூடவே இருந்தவர், அம்மா நகரில் மக்கள் குறை களைய செல்லும் போது கூடவே செல்லும் அவர், கோப்புகளை பார்க்கும் பொழுதோ, அம்மா அதிகாரிகளுடன் பேசும் பொழுதோ, அப்பா ஒருபோதும் பேசி நான் பார்த்ததே இல்லை. கேட்டால் பொறுப்பில் இருப்பது அவள் தானே, நான், என்னுடைய கருத்தை திணிப்பது தவறு என்பார், இவ்வளவு எண்ண அலைகள் ஓடிய பின்பு தான் அம்மாவை தேடியது நெஞ்சம், அம்மா எங்கே ? , பதில் வந்தது அப்பாவின் குரல் மூலமாக, போடா போயி பூஜை!
அறைல பாரு என்று, கால்கள் தானாக நகர்ந்து பூஜை அறைக்கு செல்ல அங்கே அம்மா – படமாக, பத்து வருஷம் ஆச்சிப்பா மன்னி நம்மை விட்டுட்டு போய் என்ற அத்தையின் குரல் என் காதில் விழ, என் கண்களில் நீர் , பன்னிரண்டு வருடங்களாக காய்ந்து உறைந்து போயிருந்த கண்களில் இருந்து கண்ணீர், இருக்காதா பின்னே அம்மா ஆயிற்றே, அவள் என் அம்மா ஆயிற்றே, அப்போது தான் புரிந்தது நான் இந்த வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போன இரண்டு வருடங்களில் அவர் இந்த உலகை விட்டு பிரிந்தார் என்று, இதற்கு நானே காரணமோ??
அதற்குள், அம்மா நான் காலேஜ் போயிட்டு வரேன், வாங்கோ, நான் காலேஜ் போயிட்டு வந்துடறேன், என்று என்னிடம் சொல்லிவிட்டு, மாமா நான் காலேஜ் போயிட்டு வந்துடறேன், வந்ததும் சாயந்திரம் டாக்டர் கிட்டே போகலாம் சரியா என்று யார் பதிலுக்கும் காத்திராமல் சென்றால் அவள் , அவள் – அவள் தான் விமலா, எப்படி இவளால் இந்த வீட்டில் இருக்க முடிகிறது?, இவள் ஏன் இங்கே? இவள் கல்யாணம் ஆகி அவள் குடும்பத்தோடு அல்லவா இருக்க வேண்டும், பதில் அத்தை ரூபத்தில், விமலா இங்கே தான் காலேஜுல வேலை பாக்குறா. ஹும்ம் அவளுக்கும் கல்யாணம் நடக்கலே, பண்ணிக்கவும் மாட்டேனுட்டா, நல்ல இடம்னு நெனச்சுதான் கல்யாணம் ஏற்பாடு செஞ்சேன் கல்யாணத்துக்கு முன் நாள் தான் தெரிஞ்சுது அவனுக்கு ஏற்கனவே ஒரு பொண்டாட்டி இருக்கான்னு, கல்யாணம் நின்னு போச்சு, அத்திம்பேரும் அந்த அதிர்ச்சியிலேயே மாரடைப்பில் போயிட்டார், உன் அப்பா தன் எங்களை இங்கே கூட்டிண்டு வந்து விமலாவுக்கும் வேலை வாங்கி வெச்சார். சரி நடந்ததெல்லாம் நடந்து போச்சு, அது தான் நீ இப்போ வந்துட்டியே அதுவே போறும், போயி சீக்கிரம் குளிச்சிட்டு வாப்பா நான் சமையலை சீக்கிரம் முடிச்சிடறேன் என்ற அத்தை, திரும்பவும் எங்கேயும் போயிடாதப்பா என்று கெஞ்சலான குரலுடன் சற்றே என் மேல் நம்பிக்கை இல்லாமல் வாசலை பூட்டிவிட்டு சமையல் அறைக்கு போனார், அத்தை கவலை படாதீங்கோ நான் இன்னும் ஒருவாரம் இங்கே தான் இருப்பேன் என்று சொல்ல தோன்றியது ஆனால் சொல்ல வாய் எழவில்லை. ஜில் என்று கிணற்றிலிருந்து தண்ணீர் செந்தி குளிக்கலாம் என்று கிணற்றடிக்கு போனால் பக்கெட்டும் காணோம் கயிறையும் காணோம் எட்டி பார்த்தால் கிணற்றில் குப்பை மட்டுமே இருந்தது. புதிதாக போர் குழாய் இருந்தது, பக்கத்திலே இருந்த குழாயை திறந்து அதில் வந்த தண்ணீரை கொண்டு அம்மாவை நினைததுண்டே மூன்று சொம்பு தலைக்கு குளித்துவிட்டு உள்ளே வருவதற்குள் தட்டில் சூடாக உப்புமாவுடன் வந்தார் அத்தை , கொஞ்சமா டிபன் சாப்பிடுப்பா, இதோ சமையலை முடிச்சிடறேன் அப்படியே அப்பா கிட்டே கொஞ்சம் பேசிண்டிரு, பாவம் உன்னை நெனச்சு நெனச்சு உடம்பையும் மனசையும் ரொம்ப கெடுந்துட்டார், உப்புமா சூடாக இருந்ததால், கொஞ்சம் நேரம் அப்பாவிடம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று சென்று கையை பிடித்துகொண்டேன் , அதே சூடு , நான் ஸ்பரிசித்த அதே சூடு, எத்தனை நாள் அந்த கைகளிலேயே தூங்கி போயிருக்கிறேன். முதன்முதலாக அவர் கையை பிடித்து நடந்தது முதல், பழக்கப்பட்ட கை , நான் பார்மசி கல்லூரி முடித்து பாஸ் செய்தபோது எவ்வளவு கம்பீரத்துடன் என் கையை குலுக்கினார். அந்த கை இப்போது எவ்வளவு மாறிப்போயிருந்தது, மெல்ல விழித்தார் அப்பா, அசதியால் அவரால் பேசக்கூட முடியவில்லை, கண்களில் இருந்து கண்ணீர மடடுமே, என்னை புரிந்து கொண்டார் என்று எனக்கு புரிய வைத்தது.
ஆச்சு, வருஷம் நாலு ஆச்சு, இப்படி அண்ணா படுத்த படுக்கை ஆகி என்று அத்தை சொல்லி கொண்டிருக்கும் போதே உப்புமாவை தின்றுவிட்டு தட்டை அலம்பி அதன் இடத்தில் வைத்தேன், கையை துடைத்து கொண்டு காலில் செருப்பை போட்டு கொண்டேன், அதற்குள் பதறிய அத்தை, எங்கப்பா கிளம்பறே என்று கேட்க, சாப்பாடிற்கு நான் திரும்ப வந்துடுவேன் கவலை படாதீங்கோ என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினேன். கால்கள் மறுபடியும் ஆட்டோ ஸ்டாண்டை நோக்கியே சென்றது, மனம் மட்டும் நிலை கொள்ளாமல் பல கேள்விகளுக்கு பதில் தேடியது ? அத்தையும் விமலாவும் எப்படி இங்கேயே இருக்க முடிகிறது. ஏன் விமலா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளவில்லை ? பதிலை தேடிக்கொண்டே போகையில் ஆட்டோவில் கடந்த தூரத்தை நடந்தே கடந்தேன். ஆட்டோ ஸ்டாண்டில் கோவிந்தனை தேடியது கண்கள். என்னா சாமி யாரை தேடுறீங்க என்ற குரல் கேட்க, இங்கே கோவிந்தன்னு என்று சொல்லி முடிப்பதற்குள், ஒ அண்ணனா?, அவரு இப்போ தான் ஒரு அவசர சவாரிக்கு போயிருக்கார், எப்பவுமே இப்படிதான், இது பிரசவ கேஸ் ஆச்சா, புள்ள பொறந்ததும் கைல காசு குடுத்துட்டு தான் வருவார், இப்படி உக்காருங்க சாமி, நீங்க அண்ணனுக்கு என்னா வேணும்?, தெரிஞ்சவரா?, டீ சாப்பிடரீங்களா?, என்ற எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலாக மௌனத்தையே பதிலாக குடுத்து, கோவிந்தன் வரும் வரை இங்கயே இருக்கலாமா என்று அவரை கேட்டுக்கொண்டே அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். ஒரு முக்கால் மணி நேரம் சென்றிருக்க வேண்டும், சரேல் என்று வந்து நின்றது ஒரு ஆட்டோ, ஏண்டா வீட்டிலே இரு வரேன்னு தானே சொன்னேன், நீ எதுக்கு அதுக்குள்ளே இங்கே வந்தே? என்று சற்று கோபத்துடன் வந்த கோவிந்தன், சரி வா வீட்டுக்கு போகலாம் அங்கே உன் அத்தை கவலையோடு இருப்பாங்க என்றான், அவனை சற்றே நிறுத்தி, வாடா பெருமாள் கோவில் வரை போகலாம் என்றேன். ஆம் எனக்கும் அவனுக்கும் அந்த பெருமாள் கோவில் தான் அன்றைய நாட்களில் புகலிடம். வீட்டில் என்ன பிரச்சினை ஆனாலும் இரண்டு பேரும் கிளம்பி அங்கே தான் போவோம், பேசிகொண்டிருக்கும் போதே பெருமாள் ஏதாவது ரூபத்தில் வந்து எங்களுடைய அதனை சந்தேகங்களையும் தீர்த்து வைத்திருக்கிறார், இன்றைக்கும் என் மனதில் கேள்விகள் இருக்கத்தானே செய்கிறது. தீர்த்து மாட்டாரா அந்த கேசவன் என்று ஒரு எதிர்பார்ப்பு தான். சரி வா போகலாம் என்றவனுடன் கோவிலுக்கு சென்றேன். அதிக மாற்றம் ஒன்றும் இல்லை, அதே படிகட்டுகள் மூலையில் குடை, இந்த பக்கம் மரத்தால் ஆன வாகனங்கள், அனால் யாரோ மகானுபாவன் வாகங்களுக்கு எல்லாம் வர்ணம் பூசி புதிதாய் வைத்திருக்கிறார், எங்களுடைய படிக்கட்டு வந்தவுடன் கால் தானாக நின்றது. இது தான் எங்களின் ஆஸ்தான படிக்கட்டு. உட்கார்ந்தவுடன் சொல்லுடா மாப்ளே என்ற என் வார்த்தையை கேட்டவுடன் தான் கோவிந்தனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை வந்தது. அப்படியே என்னை கட்டி பிடித்து கொண்டு அழுதே விட்டான். மாமா எங்கடா போனே? இதை நாள் எங்கே இருந்தே? உனக்கென்ன தலை எழுத்தாடா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல சற்றே பின்னல் சென்றேன். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் ………………..
அன்று தான் முதல் மாத சம்பள நாள்
மனது நிறைய சந்தோஷத்துடன் கை நிறைய பணத்துடன் வீடு நோக்கி சந்தோஷமாக வந்தேன் ,
என் புல்லெட் அப்போது இந்த ஊரில் மிக பிரசித்தம்
வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்ற போது தான் வீட்டில் இன்னும் இரண்டு ஜோடி செருப்புகள் இருந்தது தெரித்தது
உள்ளே யார் என்று பார்த்த பின்பு தான் தெரிந்தது
வெகுநாளைக்கு பின் அத்தை என் வீட்டுக்கு வந்திருக்கிறார்
கூடவே…….இவள்-இவள்-இவள் ??? !!! விமலாவா ??? !!!
என் மனதில் இருந்த சந்தோஷத்தை விட, வளர்ந்து நின்ற விமலாவே ஆச்சரியமாய் நின்றாள்
ஏனப்பா அப்படி பாக்குறே, பொண்ணுனா அப்படி தான்
வளர்ந்து இருக்காளே ஒழிய எப்பவும் படிப்பு படிப்புன்னு இருந்து, ஒரு வழியா காலேஜ் முடிச்சிட்டா, வீட்டு வேலை ஒண்ணும் தெரியாது, என்று அங்கலாய்க்க
அதற்கு என் அம்மா, இருகட்டுமே, சொல்லி குடுத்தா தெரிஞ்சிக்க போறா, கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்புடி இருந்தியாம் என்று கேலியும் கிண்டலுமாய் கேட்க – அன்றைய பொழுது கழிந்தது
வெகு நேரம் இரவு அம்மாவும் அத்தையும் அப்பாவும் அந்த கால அரட்டையில் மூழ்கினர், எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது, அன்று ஏனோ தூக்கம் வர மறுத்தது.
போயி தூங்கேண்டா நாளைக்கு வேலைக்கு போகணுமா இல்லையா என்ற அப்பா,
நீ நாளைக்கு வேலைக்கு போகும் போது அப்படியே விமலாவையும் பக்கத்துக்கு ஊரு காலேஜ்ல கொண்டு விட்டுட்டு போடா
அங்கே அவளுக்கு ஒரு வேலைக்கு இன்டெர்வியு வந்து இருக்கு, என்ற போது தான் அத்தையும் விமலாவும் இங்கே வந்திருப்பதன் காரணமே புரிந்தது.
ஒ – இது தானா விஷயம், இவளுக்காவது படித்த உடனே வேலை கிடைக்கிறதே.
எனக்கு, அரசாங்க உத்தியோகம் தான் வேண்டும் என்று இரண்டு வருடம் வீணா போய் போன மாதம் தான் வேலை கிடைத்து மானத்தை காப்பாற்றியது.
நல்ல வேளை இவர்கள் வரும் முன்பே ஒரு வேலையில் சேர்ந்துவிட்டோம், மானம் பிழைத்தது,என்று மனதிற்குள் ஒரு நிம்மதி பிறந்தது.
இருந்தாலும் மனதுக்குள் இனம் புரியாத ஒரு உணர்ச்சி, அப்பாவால் நிச்சயமாய் நாளை விமலாவை காலேஜூக்கு கொண்டு விட முடியாது
நான் தான் கொண்டு விட வேண்டும், சரி காலை வேலையை, காலையில் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்த படியே எப்போது தூங்கி போனேனோ தெரியவில்லை,
காலையும் வந்தது, வேளையும் வந்தது
மாமா, மாமி, வந்து நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பறேன், என்று விமலா சொன்ன போது தான் நான் உணர்ந்தேன்.
அம்மா நேத்து சம்பளம் வந்தது, அப்பா நீயும் வந்து நில்லு நானும் நமஸ்காரம் பண்ணிக்கிறேன் என்றேன் .
அத்தையை பார்த்த சந்தோஷத்துல சம்பளம் வாங்கினத கூட மறந்துட்டியக்கும் என்ற அம்மாவின் கிண்டலுடன், சம்பள பணத்தை அப்பாவிடம் குடுக்க அதை வாங்கி அம்மாவிடம் அவர் குடுக்க அதை மறுபடி அம்மா என்னிடமே குடுத்து, சௌக்கியமா இருடா கொழந்தே, போஸ்ட் ஆபீஸ்ல ஒரு அக்கௌன்ட் ஆரம்பிச்சு பத்திரமா சேர்த்து வெச்சுக்கோ, பின்னாடி தேவை படும் என்று என்னிடமே திரும்பி வந்தது என் சம்பளம்.
இருவரும் கிளம்ப, வாசல் வரை வந்து, இருவரையும் வழி அனுப்பினார்கள், என் அப்பாவும் அம்மாவும் அத்தையும்.
புல்லட்டின் சத்தம் கேட்கவா வேண்டும், கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத நடுவாந்திர ஊர் அல்லவா,
நாலு ஜோடி கண்கள் பார்க்காமலா இருக்கும், முதுகுக்கு பின்னல் அதனை கண்களும் எங்கள் மேலே இருப்பது நன்றாகவே தெரிந்தது.
எனக்கும் கொஞ்சம் உதறல் தான், தங்கையோ, அக்காவோ யாராவது இருந்திருந்தால் ஒரு வித்தியாசம் தெரிந்திருகாதோ என்னவோ, அம்மாவை மட்டுமே வண்டியில் ஏற்றி சென்றவனுக்கு இது புதிது தானே போகும் வழி அத்தனையும் ஒன்றும் பேசி கொள்ளவில்லை இறங்கும்போது தான் ஓர் சின்ன சிரிப்பு சிரித்தாள்
நன்றி என்று சொல்ல நினதிருப்ப்பளோ?
இங்கேருந்து வீட்டுக்கு போக வண்டி வசதி நேரடியா கிடையாது, சாயந்திரம் ரயிலுக்கு தான் போகணும், அதுனால வேலை முடிஞ்சவுடன் இங்கயே இரு மதிய சாப்பாட்டு நேரத்துல வந்து நானே வீட்டிற்கு கூட்டிண்டு போறேன்,
என்று நான் சொன்னதற்கு மெலிதாக தலையை மட்டும் ஆட்டினாள்.
அதில் ஒரு நளினம் தெரிந்தது.
இங்கிருந்து தான் நான் மயங்க ஆரம்பித்தேனோ????!!!!!!
இன்றளவும் நினைத்து பார்த்தால், விளங்கவில்லை.
ஆயிற்று, அவளும் வேலைக்கு போக ஆரம்பித்து பத்து நாட்கள். அத்தையும் ஊரில் வேலை இருப்பதால், ஒரு வாரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி, ஊருக்கும் போயாச்சு.
விமலாவோ, அம்மாவிடமும் அப்பாவிடமும் நன்றாகவே ஒட்டி கொண்டாள், இப்போதெல்லாம் நான் அவர்களுக்கு தேவையே இல்லை,
அரட்டை என்ன, சிரிப்பு என்ன, நன்றாகத்தான் இருந்தது அந்த நாட்கள். புதிய அனுபவம் கூட.
ஒரு மூன்று மாதம் சென்றிருக்க வேண்டும், அப்போது தான் ஆரம்பித்தது அந்த படலம் யாரோ விமலாவை பெண் கேட்டு வந்திருக்கிறார்களாம், ஊருக்கு வரச்சொல்லி அத்தை செய்தி சொல்ல, அப்பா தான் ஊருக்கு கொண்டு விட போனார்.
இதுவரை என்னிடம் நேரடியாக எதுவும் பேசாத விமலா, ஊருக்கு போயிட்டு வந்துடறேன் என்று என்னை பார்த்து சொல்லிவிட்டு தான் போனாள்.
பிரிவு வந்தால் தான் உறவின் அருமை தெரியுமோ?
கொஞ்சம் வெறுமையாய் உணர்ந்தேன்,
மனதில் ஏன் இந்த வெறுமை ??? , இதுநாள் வரை இதை அனுபவித்ததில்லையே.
இது என்ன உணர்வு?
சரி, எதற்கு மனதை போட்டு அலட்டிக் கொள்ளவேண்டும் என்று இரண்டு மூன்று நாட்கள் என்னயே நான் சமாதான படுத்திகொண்டு என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
மூன்றோ அல்லது நான்கு நாட்களோ போயிருக்கும் மலர்ந்த முகத்தோடு திரும்பவும் வந்தாள் விமலா, கல்யாணம் ஆயிற்றே மனதில் உண்டான மினுமினுப்பு முகத்தில் வராதா என்ன.
ஆனால் கூடவே வந்த அத்தை தான் சொன்னாள், விமலா பையனை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாளாம்.
அப்புறம் ஏன் இந்த சந்தோஷம் ?
மன்னி நீங்களாவது நல்ல புத்தி சொல்லுங்கோ, பையன் பெரிய படிப்பு படிச்சிருக்கான், நல்ல இடம், நிறைய சொத்தும் இருக்கு, இவ தான் பிடிவாதமாய் இருக்கா, அவர் ரிடைர் ஆறதுக்கு முன்னாடி, இவளை எவன் கையிலாவது பிடிச்சி குடுக்க வேண்டாமா, இவ அண்ணாவும் அவளுக்கு பிடிக்கலேன்னா பண்ண கூடாது, என்று ஒத்த கால்ல நின்னு தடுத்துட்டான், அடுத்து வரவன் எங்கேருந்து வரானோ என்னவோ? எனக்கு ரயிலுக்கு நேரமாகிறது நான் ஊருக்கு கிளம்புறேன், கொஞ்சம் புத்தி சொல்லுங்கோ மன்னி, நீங்க சொன்னாலாவது கேக்கராளான்னு பார்போம் என்று தன் மனதின் குறையை சொல்லிய படியே விமலாவை மட்டும் விட்டுட்டு அத்தை ஊருக்கு சென்றார்.
அந்த வாரம் பூராவும் எப்படி போயிற்று என்றே தெரியவில்லை .
மனதில் இருந்த வெறுமை எங்கே போயிற்று, எப்படி போயிற்று, அது இருந்த நினைவே இல்லாமல் மறுபடியும் மனதில் சந்தோசம் எங்கிருந்து வந்தது?
அனைத்திற்கும் பதில் தெரியாமல் நாட்கள் மட்டும் நகர்ந்தன.
அத்தை சொன்ன வாக்கை தட்ட முடியுமா, அம்மா நேரம் கிடைக்கும் போது விமலாவுக்கு தன் பங்கிற்கு நல்லது சொல்கிறேன் என்று பேச ஆரம்பிக்க அம்மாவிற்கு பதில் பேச முடியாமல் பின் கட்டில் உட்கார்ந்து விமலா விசும்பியது என் காதுகளுக்கு மட்டும் விழுந்தது.
நான் அந்த பக்கம் போன போது சட்டென்று தனது விசும்பலை நிறுத்தி கொண்டாள்.
அம்மாவிடம் நான் மெதுவாக, நீ ஏம்மா அவ விஷயத்துல தலை இடரே, பாவம் அவள், என்று நான் சொன்னது, அவளுக்கும் கேட்டிருக்க வேண்டும்,
அடுத்த முறை பார்க்கும் போது ஒரு சிறு புன்முறுவல் பரிசாய் தந்தாள்.
அன்று தான் முதன் முறையாய் என் அம்மாவிடம் அவள், மாமி கோயிலுக்கு போகணும் கூட்டிண்டு போறேளா என்றாள்.
அம்மாவோ, அவ்வளோ தூரம் என்னால நடந்து போக முடியாதும்மா, அதையும் தவிர ஊர் வேலை தலைக்கு மேல இருக்கு, அம்மா தான் அன்றைய உதவி நகரமன்ற தலைவர், வேலை இருக்காதா பின்னே, அம்மாவே – வேணும்னா விஷ்ணுவை கூட்டிண்டு போயேன் என்றாள்.
விஷ்ணு இவளுக்கு கோயிலுக்கு போகணுமாம், கொஞ்சம் சாயந்திரம் வேலைக்கு போயிட்டு வந்ததும் கூட்டிண்டு போயேன் என்று சிபாரிசும் செய்தார்.
அவளும் எதிர்பார்போடு என்னை பார்க்க, சரி என்ற என் ஒத்தை வார்த்தையில், அவள் முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்த்தேன்.
வண்டியில் உட்காரும்போது கூட சற்று தள்ளி உட்கார்ந்து வந்த அவள் நளினம் எனக்கு பிடிக்க தான் செய்தது.
அன்றிலிருந்து தான் எங்களுக்குள் ஒரு புரிதல் வந்திருக்க வேண்டும்.
இன்று நான் உட்கார்ந்திருக்கும் அதே படியில் தான் அன்றும் உட்கார்ந்தோம்.
ஆறு வாரம் வருகிறேன் என்று வேண்டி கொண்டாளாம்.
என்னை கேட்காமல் அவளே, வாரா வாரம் கூட்டிண்டு வருவேள் என்று நம்பி வேண்டிக்கொண்டேன் என்றாள்.
கோயிலுக்கு தானே என்று நானும் தலை அசைத்தேன்.
ஏன் என்னால் இவள் கேட்டவுடன் முடியாது என்று சொல்ல முடியவில்லை ?
பதில் தெரியவில்லை.
அன்றிலிருந்து என்னுடனும் சகஜமாய் பேச ஆரம்பித்தாள்.
வேலை முடித்து வீடு வந்தால் நான் வரும் வரை சாபிடாமல் உட்கார்ந்து இருப்பாள்.
எல்லோரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்.
அப்புறம் அரட்டை ஆரம்பிக்கும்.
சில சமயம், பினிரவு வரை எங்கள் அரட்டை போக, அம்மா, போதும் தூங்குங்கோ, நாளைக்கு வேலைக்கு போக வேண்டாமா என்று அதட்டல் போட்ட பின்பு தான் தூங்குவோம்.
ஆச்சு இன்னும் ஐந்து வாரம் ஓடிற்று, இப்போது நாங்கள் வெளியில் போவதை யாரும் பெரிதாய் வேடிக்கை பார்ப்பது இல்லை.
மறுபடியும் ஒரு வரன் வந்தது.
பெண் இருந்தால், கேட்டு வரத்தானே செய்வார்கள், அதை தடுக்க முடியுமா.
இந்த முறையும் விமலா முரண்டு பிடிக்கவே, வீட்டில் ஏக ரகளை. இந்த முறை அப்பாவிடம் வந்தது பஞ்சயத்து.
அப்பா பேசி பார்த்தார், ஒன்றும் பிடி படாமல் போகவே, என்னிடம் கேட்டனர்.
விமலாதான் உன்கிட்டே நன்னா பழகறாளே, நீயாவது என்னன்னு கேட்டு சொல்லேன் என்று.
இதற்கு இடையில் அவள் அண்ணனும் வந்து போனான்.
வந்தவன் என்னிடம் நிறையவே பேசினான்.
என் சம்பள விவரம் கேட்டான்.
அடுத்த உத்தியோக உயர்வு பற்றி கேட்டான்.
அவன் டாக்டர், நானோ பார்மசிஸ்ட்.
தனியே ஒரு மருந்து கம்பெனி தொடங்கினால் என்ன என்று யோசனை கேட்டான்.
பொறுமையாக எனக்கு தெரிந்ததை சொன்னேன்.
ஆறாவது வார கோயிலுக்கு போகும் நாளும் வந்தது.
அம்மா என்னிடம் சன்னமாக, கோயிலுக்கு போறியே அப்படியே அவளிடம் பேச்சு குடு, என்ன தான் அவ மனசுல இருக்குன்னு தெரிஞ்சு சொல்லு. இன்னொரு வரன் வேற வந்திருக்காம் என்றார்.
சரி பேசிவிட்டு சொல்கிறேன் என்றேன்.
கோயிலில் தரிசனம் முடித்து கீழே, இறங்கி வந்து எங்கள் ஆஸ்தான படியில் உட்கார்ந்தோம்.
மெல்ல பேச்சு கொடுத்தேன்.
அப்புறம் எப்போ கல்யாணம் ???.
அவள் கண்களில் களுக்கென்று கண்ணீர்.
என்னடா இது வம்பா போச்சு, நான் தப்பா எதுவும் கேக்கலியே என்றதற்கு.
இதை விட்டுட்டு வேற எது வேணும்னாலும் பேசலாமே என்றாள்.
எங்களை தாண்டி சென்ற பட்டாச்சாரியார்.
ஆறு வாரம் வந்தா போறாது, அடுத்த வாரமும் கூட்டிண்டு வா.
ஒரு அர்ச்சனை செஞ்சு முடித்து வைக்கிறேன் என்று சொல்லி கொண்டே எங்களை கடந்து போனார்.
ஒ, அடுத்த வாரமும் வரவேண்டுமோ? சரி அப்போது பேசிக்கொள்ளலாம் என்று வீடிற்கு வந்து சேர்ந்தோம்.
அத்தை இன்னொரு முறை வந்தாள், பெண்ணை தனியே விட்டு ஊரிலேயே இருக்க முடியுமா என்ன.
அத்தைக்கு அவள் வேலை முக்கியமாச்சே.
இங்கு தான் ஆரம்பித்தது போறாத வேளை .
அத்தை என்னிடம், ஏதாவது சொன்னாளா ஏதாவது சொன்னாளா என்று கேட்க , நான் இல்லை என்றவுடன், ரெண்டு பேரும் தான் நன்றாக பழகுகிறீர்களே, அப்படியே எதுவா இருந்தாலும் கேட்டு சொல்லு என்று அத்தை சொன்னது தான் , என் நெஞ்சில் ஒரு சிறு பூ பூத்தாய் உணர்ந்தது .
விமலா அழுததும், வேண்டாம் என்று சொன்னதும் இப்படி இருக்குமோ? மனம் சற்று குழம்பியது.
சரி கேட்டே விடுவோம் என்று, இந்த முறை, தைரியத்துடன் கோவிலுக்கு கூட்டி சென்றேன்.
போகும் வழியில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை.
பரவால்லையே ஏழு வாரமும் தவறாது வந்துட்டியே என்று பட்டச்சரியார் பாராட்ட அர்ச்சனை முடிந்ததும் படிக்கட்டில் உட்கார்ந்த உடன் என்ன ஆச்சர்யம் அவளே பேச ஆரம்பித்தாள்.
சொல்லுங்கோ அம்மா ஏதாவது சொல்லி அனுப்பினாளா ?,
கேள்விக்கு பதில் சொல்லாமல் நான் பார்க்க, அவளே தொடர்ந்தாள் .
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு நன்னாவே தெரியும்.
இது அவளா ? !! , இது நானா ? !! , என் காதிலா இந்த வார்த்தை விழுகிறது? !!!!
அடுத்த நொடியே அந்த கனவு கலைந்தது.
ஆனா இதற்கு முன்னாலேயே இன்னொருவரையும் எனக்கு இதே மாதிரி பிடிச்சி இருந்தது.
என் அண்ணாவுக்கு மட்டும் தெரியும், என் அண்ணாவோட பிரண்டு தான் அவர். அண்ணாவும் அப்பாவும் முடியாதுன்னு சொல்லிட்டா. குடும்பத்தோட சம்மதம் இல்லாம என்னால எந்த விஷயத்தையும் முடிவெடுக்க முடியாது.
நான் வேணும்னா உனக்காக பேசி பார்க்கட்டுமா என்றேன்.
சும்மா இரு என்று மனசு சொன்னாலும் வாய் எங்கே சும்மா இருக்கிறது .
வேண்டாம், அவருக்கு இப்போ கல்யாணம் ஆயாச்சு,
ஒ, இவள் மட்டும் தான் விரும்பி இருப்பா போலிருக்கு, என்று சொல்லி முடிக்கும் முன், என் அண்ணாவிற்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதத்திற்கு பின், எங்க அண்ணாவிற்கு அவர் குடுத்த வாக்கு படி, என் வாழ்க்கைல குறுக்க நிக்க கூடாதுன்னு அவரோட சொந்ததுலையே கல்யாணம் பண்ணிண்டுட்டார். என்னோட மனசு மாறிடும்னு என் அண்ணா எதிர்பார்த்தார். இன்னும் என்னால மறக்க முடியல, என் மனசுல யாருக்கும் இடம் குடுக்கவும் முடியல.
உங்க கிட்ட மறைச்சு வெக்க எனக்கு இஷ்டம் இல்லை,
( இங்கிருந்து தான் அவளை எனக்கு இன்னும் பிடிக்க ஆரம்பித்ததோ ??? !!! )
அப்பாவும் அண்ணாவும் சேர்ந்து முடிவெடுக்காம யாருக்கும் இனிமே நான் கழுத்தை நீட்ட போறதில்லை.
அம்மா இப்போ உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி குடுக்கலாம்ம்னு பேச ஆரம்பிச்சிருக்கா அது எவ்வளவு தூரம் சாத்தியம்னு தெரியலை.
( திரும்பவும் தலையில் இடியா )
எனக்கு இவளை பிடித்திருக்கிறது என்று, எனக்கு தெரியும் முன்பே, இவளுக்கு எப்படி தெரிந்தது ???? !!!!!
இது தான் பெண்ணின் சாமர்த்தியமோ !!!!!
இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் ?,
குழப்பம் தான் மிஞ்சியது,
காதல் என்றால் குழப்பமும் சேர்ந்தே வருமோ ??? !!!
அன்றையிலிருந்து தான் காதல் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது போலும்.
என்னுடைய பாசத்தால் அவளை என் பக்கம் ஏழுக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை பிறந்தது.
இது வரை என் ஆளுமையில் இருந்த என் மனம் என்னிலிருந்து தூரம் போவதை உணர்ந்தேன்.
எதுவும் பேசாமல் வீடிற்கு வந்தோம், அம்மாவுக்கு மனதில் இருந்த ஒரே கேள்வி ?
இவர்கள் பேசி இருப்பார்களா இல்லையா ?
அம்மா தான் என்னிடம் மெள்ளமாக கேட்டாள்.
நடந்தவற்றை கேட்டவுடன், பெண்களுக்கு வாழ்கைல இதெல்லாம் சகஜம் டா, உனக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லே.
மனசுல நெனச்சவனையே தான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னு ஒவ்வொரு பொண்ணும் நெனச்சா இங்கே பாதி பொண்ணுக்கு கல்யாணமே ஆகாது.
அவ உன்னை புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா இல்லையா, விடு கவலையை, அப்பாகிட்டே சொல்லி மிச்சத்தை நான் பார்த்துக்குறேன்.
உனக்கு குடுக்கறதுக்கு உங்க அத்தைக்கும் அத்திம்பேருக்கும் கசக்குமா என்ன, என்றார்.
எனக்கும் அந்த கல்யாண ஆசை மனதுக்குள் எழ தான் செய்தது.
மனதிற்கு பிடித்தவளை கை பிடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.
யாருக்கு கிடைக்கும் இதுபோல அம்மாவும் அப்பாவும்.
அப்பாவும் அம்மாவும் அத்தையும் கூடி கூடி பேசினார்கள்,
அப்பாவும், அம்மாவும், அத்தையும், விமலாவும் ஒன்றாக ஊருக்கு போனார்கள்.
திரும்பி வரும் போது அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் வந்தார்கள்.
இரண்டு நாள் வரை ஒன்றும் புரியவில்லை.
மூன்றாவது நாள் அத்தை மட்டும் வந்தார், விமலாவுக்கு ஹாஸ்டல்ல இடம் கெடைசாச்சாம்.
அதனால் விமலாவோட பெட்டியை எடுத்து போக வந்தாங்களாம்.
அப்போதுதான் அம்மா சொன்னாள்.
அத்திம்பேருக்கு கூட புடிசிருந்துதாம்.
ஆனால் அவள் அண்ணாவுக்கு தான்,
இன்னும் பெரிய படிப்பு படித்த மாப்பிள்ளை தான் வேண்டுமாம்,
ஒரு டாக்டரோ இஞ்சிநீயரோ தான் மாபிள்ளையா வரணுமாம். நான் வெறும் டிப்ளோமா தானே அதுவும் டாக்டர் மருந்து எழுதி தந்தால் அதை எடுத்து குடுக்கும் வேலை.
அத்திம்பேரோ பிள்ளை தாண்டி ஒரு வார்த்தை பேசலையாம்.
விடுடா அவளுக்கு நம்மாத்துக்கு வர குடுத்து வெக்கல, நமக்கும் அவளை நம்மாத்துக்கு கூட்டிண்டு வர குடுத்து வெக்கல என்றார்.
அவ என்ன தான் சொன்னா கடைசியா, என்று கேட்டதற்கு, அவ தான் வாயே திறக்கலியே, அவ வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தா விஷயத்தை நம்ம பக்கம் திருப்பி இருக்க மாட்டேனா என்றார் அம்மா.
அம்மாவிற்கு நான் உடைந்து பொய் விடுவேனோ என்று பயம், அதை பற்றி பேசினாலே, வேறு பக்கம் பேச்சை திருப்ப முயன்றாள் அம்மா.
சரி இனி அம்மாவிடம் பேசி பயன் இல்லை என்று நேரே அவள் வேளை செய்த காலேஜுக்கே போனேன்.
முதலில் பார்க்க மறுத்தவள், பின்பு என்னை கோயிலில் வழக்கம் போல் பார்கிறேன், என்று சொன்னதும் தான் நகர்ந்தேன்.
சொன்ன வாக்கை காப்பாற்றுவது போல நேரம் தவறாது வந்தாள்.
அதே படிக்கட்டு மறுபடியும்……………
ஆனால் இப்போது கோவிந்தனின் குரல் என் நினைவலைகளை கலைத்தது.
என்னடா இன்னும் பிரம்மை பிடிச்சா மாதிரி உட்கார்ந்து இருக்கே.
சரி வா பெருமாளை தரிசனம் பண்ணிட்டு, உன் தங்கையை போயி பார்க்கலாம் என்றான்.
நீ வந்திருக்கேன்னு சொன்னேன்
உடனே கூட்டிண்டு வர சொன்னாள்.
ஆமாம், அவனுக்கு தங்கை என்றல் எனக்கும் தங்கை தானே.
அப்போது தான் ஞாபகம் வந்தது.
ஆமாம் நீ எப்படிடா இருக்கே, ஏன் துபாயிலிருந்து வந்தே ? என்று கேட்டவுடன்.
அதுவா, தங்கைக்கு நன்னா கல்யாணம் பண்ணனுமேன்னு துபாய் வரை போனேன்.
நன்னா கல்யாணமும் நடந்தது.
மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வேலைல பிரச்னை.
ஒரு வியாபாரமும் வெச்சு குடுத்தேன், அதுலேயும் நஷ்டம்.
வியாபாரம் நொடிச்சி போனதுல மனசு வெறுத்து குடிக்க ஆரம்பித்து, ஒரு நாள் தவறிப்போய் நடுரோட்டில் விழ தலையில் அடிபட்டு ஒரு கையும் காலும் விழுந்து போச்சு, அதனால தங்கைக்கு கஷ்டம்.
ஒரே பிரசவத்துல ரெண்டு பெண் குழந்தையோட, துணைக்கு யாருமே இல்லாம தங்கை கஷ்ட படும்போது நான் எப்படிடா துபாய்ல நிம்மதியா வேலை பார்க்க முடியும்?
அது தான் கூடவே இருந்து பார்த்துக்க வசதியா, இங்கேயே வந்துட்டேன்.
ஊருக்கு வந்து நாலு ஆட்டோ வாங்கி வாடகைக்கு குடுத்து, அதுல வர சம்பாதியத்துல தங்கச்சியையும், குடும்பத்தையும் பார்த்துக்குறேன்.
ஏண்டா நீயும் கல்யாணம் பண்ணிகவேல்லியா என்ற கேள்விக்கு, புன்னகை மட்டுமே பதிலாய் தந்தான்.
அண்ணா வாங்கண்ணா, ரெண்டு போரையும் சேர்ந்து பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு.
என் கல்யாணத்துக்கு கூட நீங்க இல்லே.
இது தான் அண்ணா உங்க மருமகள்கள் என்று, என் கையில் குழந்தைகளை திணித்து விட்டு,
இருங்க அண்ணா, சின்னதா டிபன் பண்ணிடறேன், என் கையால நீங்க சாப்பிட்டு எவ்வளோ நாள் ஆச்சு, என்றபடியே சமையலறைக்குள் சென்றாள்.
கொஞ்சம் இருடா மாப்பிள்ளைக்கு ஒரு அரை மணிநேரம் கையை காலை மடக்கி நிமிர்த்தி உடற்பயிற்சி குடுக்கணும்ன்னு டாக்டர் சொல்லி இருக்கார், கூட இருந்து ஒத்தாசை பண்ணிட்டு வந்துடறேன். என்று சொல்லி பக்கத்துக்கு ரூமுக்கு போனான்.
மனம், கோயில் படிக்கட்டுக்கே போனது.
திரும்பவும் நினைத்து பார்த்தேன் அவள் என்ன சொன்னாள் என்று. மறக்குமா அந்த வார்த்தைகள்?
நான் தான் சொன்னேனே என் அண்ணாவை மீறி எதையும் செய்ய மாட்டேன்னு, இன்னைக்கு நான் உயிரோடு இருக்கேன்னா அதற்கு அம்மா அப்பாவை விட அண்ணாவே காரணம், பத்து வருஷம் எனக்கும் அண்ணாவுக்கும் வயசு வித்யாசம், அண்ணா என்பதை விட அப்பா என்கிற ஸ்தானத்துல இருந்து தான் சின்ன வயசுலேருந்து என்னை வளர்த்திருக்கார். சின்ன வயசுல எனக்கு ஜுரம் வந்து சாக கிடக்க இருந்த போது பக்கத்துலேருந்து கவனிச்சு என்னை அவர் தான் காப்பாற்றினார், ஒரு முறை ரோட்டில் அடிபட இருந்த என்னை, காப்பாற்ற போய் அவர் கால் உடைஞ்சு, ரெண்டு மாசம் படுத்து கிடந்தார். எனக்கு எது வேண்டும் என்றாலும் நான் கேட்கும் முன்பே எனக்கு கொண்டு வந்து குடுப்பார். என்னை விட எனக்கு என்ன புடிக்கும்னு அவருக்கு தான் நல்லா தெரியும், நான் மேலே படிக்க நெனச்ச போதும், எனக்கு அவர் தான் அப்பா கிட்டே பேசி, என்னை இந்த அளவு படிக்க வெச்சார். என் பப்பு கல்யாணம் முடியும் வரை தன் கல்யாணத்தை பற்றி நினைக்காமல் தன் வாழ்க்கையையே தள்ளி போட்டவர். இவ்வளவு அன்போடு இருக்கும் என் அண்ணாவுக்கு நான் குடுக்க நினைக்கிற ஒரே மரியாதை அவருக்கு புடித்தார் போல என் வாழ்கையை அமைத்து கொள்வது தான். இதையும் மீறி தான் நான் என் மனதை அண்ணாவோட பிரண்டு கிட்டே இழந்தேன். அண்ணாவை போலவே முதன் முதலா, பாசத்தை இவர் கிட்டே உணர்ந்தேனோ என்னவோ, ஆனால் அண்ணாவுக்கு என்மேலும் அவர் மேலும் ரொம்ப கோவம், நண்பன் என்று நம்பி வீடு வரைக்கும் கூட்டிண்டு வந்தா, அந்த நம்பிக்கையை தகர்த்து விட்டாறேன்னு, கோவம் அவர் மேலயும், எதுவா இருந்தாலும் என்கிட்ட கேட்டு முடிவெடுக்குற தங்கை நம்மை மீறி போய்விட்டாளே என்ற வருத்தம் என் மேலயும், அண்ணாவின் உடம்பை பாதித்து, வலிப்பு வரும் நிலை வரை போய் விட்டது. டாக்டர், அண்ணாவுக்கு இனிமேல் எந்த அதிர்ச்சியும் கொடுக்ககூடாது என்று சொல்லி இருக்கார், அண்ணாவே டாக்டர் என்பதால் அவருக்கும் தன் உடம்பை பற்றி தெரியும், இப்போதான் அண்ணா பழைய நிலைக்கு திரும்பி இருக்கார், தனக்கு உடம்பு நல்லா இருக்கும் போதே எனக்கு ஒரு நல்ல இடம் பார்த்து கல்யாணம் பண்ணி முடுசுடணும்னு அவர் ஆசை. என்னவோ தெரியல, என் கல்யாண விஷயத்தில் மட்டும் எனக்கு என்ன புடிக்கிறதோ, அது அவருக்கு புடிக்காம போறது. அதனால என்னை மன்னிச்சுடுங்கோ.
எனக்கு உங்களை புடிச்சிருந்தாலும், என் அண்ணாவை மீறி, நான் ஒரு முடிவும் எடுக்குறதா இல்லே என்றாள்.
ஒரே மூச்சில் அவள் சொன்னதை எல்லாம் கேட்ட எனக்கு காலின் கீழே பூமி சற்று பிடி இல்லாமல் போனது போல தான் இருந்தது.
இப்போது தான் குழப்பமே ஆரம்பமாகியது.
இவள் இல்லாமல் என்னால் வேறு வாழ்கையை அமைத்து கொள்ள முடியுமா இல்லையா என்று எனக்கே சந்தேகம் வர ஆரம்பித்தது.
சரி போகும் வரை போகட்டும், இன்னும் நாள் போனால், எல்லாம் சரி ஆகும், என்னை அவள் அண்ணன் புரிந்து கொள்ளாமலா போவான், என்று ஒரு மனமும், இல்லை இதே போல போனால் நான் நானாக இருக்க மாட்டேன் என்று என்று இன்னொரு மனமும் என்னை எச்சரித்தது.
சரி கல்யாண பேச்சு என்றால் இதெல்லாம் சகஜம் தான், சிறிது நாள் போனால் திரும்பவும் பேசி பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் அவளை அவளது ஹாஸ்டலில் விட்டு விட்டு வீடு திரும்பினேன்.
ஒரே வாரத்தில் அந்த நம்பிக்கையும் தகர்ந்தது. அவளுக்கு கல்யாணம் கூடி விட்டதாம், அவள் அண்ணன் எதிர்பார்த்தது போலவே மாப்பிள்ளை டாக்டராம்.
அன்று தான் என்னுள் அவள் எவ்வளவு நிரம்பி இருந்தாள் என்று எனக்கே தெரிந்தது.
வாழ்கையே முடிந்தது போல உணர்ந்தேன்.
அம்மா , அப்பா, எல்லாம் மறந்து போனது.
வேலைக்கு மட்டும் ஒரு ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டு கால் போன போக்கிலே போய் பத்து வருடமாய் ஒரு ஆசிரமத்தில் இருந்தேன்.
போய் சேர்ந்த நாளில் இருந்து சன்யாச தர்மத்தின்படி வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சியவனை சாந்தப்படுத்தி எனக்கு குருவாய் இருந்து என் மனதின் காயத்தை ஆற்றி, அங்கு எனக்கு ஒரு வேலையும் குடுத்து என்னை மீண்டும் மனிதன் ஆக்கினார்.
அவரிடம் சன்யாச தர்மத்தில் சேர்ந்தே தீருவேன் என்று விடாமல் அடம் பிடித்த என்னை, ஒரு இரண்டு நாள் சொந்த ஊரிலே போய் தங்கி வா, திரும்பி வந்தவுடன் நிச்சயமாய் நீ சன்யாச தர்மத்தில் சேரலாம். என்று அனுப்பிய என் குருவின் வாக்கிற்கு மரியாதை குடுத்து தானே இங்கே வந்திருக்கிறேன்.
அண்ணா, அண்ண்ணா, சற்றே உரக்க குரல் கேட்டவுடன் தான் எதிரில் தட்டு இருப்பதை உணர்ந்தேன்,
சூடாக அரிசி உப்புமா இருந்தது.
மன்னிச்சிகோங்க, தோசை மாவு தீர்ந்து போச்சு அண்ணா. அது தான் உப்புமா பண்ணினேன் என்றவளுக்கு பதில் ஏதும் பேசாமல், இருந்த பசிக்கு, தட்டை காலி செய்தேன்.
அண்ணா நாளைக்கு இங்கையே சாப்பிட வாங்கண்ணா என்றவளுக்கு தலையை மட்டும் ஆட்டி விட்டு, கோவிந்தனுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
ராத்திரிக்கு என்னப்பா சமையல் பண்ணட்டும் என்று கேட்ட அத்தைக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுக்கையை எடுத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றேன்.
மனம் மெல்ல, அன்று நடந்த அனைத்தையும் அசை போட்டது.
அண்ணனுக்காக தான் ஆசை பட்ட வாழ்கையை விட்டு, அவன் மனம் கோணாமல் நடந்து, அதுவும் கை கூடாமல் போன பிறகும், இன்றளவும் தடம் மாறாமல் குடும்பத்திற்கு உழைக்கும் விமலாவும்,
தான் பெற்ற பிள்ளை வீட்டை விட்டு போக,காரணமாய் இருந்த தங்கையையும் தங்கையின் பெண்ணையும், வீட்டிற்கே கூட்டி வந்து, மறுபடி வேலையும் வாங்கி கொடுத்து, அரவணைத்த அப்பாவும், அம்மாவும்,
தங்கைக்காக தன் நலத்தை பாராமல் வெளிநாட்டு வேலையை கூட விட்டு வந்த கோவிந்தனும், கை கால் விழுந்த பின்பும், கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்கையை இன்னும் விடாது வாழ்ந்து கொண்டிருக்கும் ( கோவிந்தனின்) என் தங்கை,
இப்படி என்னை சுற்றி இருந்த அனைவரும், அவர் அவர் வாழ்கையில், தடைகளை மீறி வாழ்கையை எதிர் கொண்டு இருக்கும் போது நான் மட்டும் என்ன செய்திருக்கிறேன்?
வாழ்கையை விட்டு ஓடி போக நினைத்திருக்கிறேன். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் செய்ய வேண்டிய கடைமையை மறந்து ஓடி போயிருக்கிறேன்.
எனக்கே என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வெட்கமாய் இருக்கிறது.
சன்யாசம் என்னும் தடத்தில் போய் என் கடமையிலிருந்து விலகி உலகத்தை விட்டு தள்ளி போக நினைத்திருக்கிறேன்.
கஷ்டம் என்று வரும் போது கடைமையை மறந்து வாழ்கையை வெறுத்து வாழ நினைப்பதா சன்யாச தர்மம்?
“//ஒருவன் கர்மங்களை செய்யாமல் இருப்பதாலேயே, செயலற்ற நிலையை அடைவதில்லை, துறவி ஆவதால் மட்டுமே உலகில் பிறந்த எவனும் பரம்பொருளை அடைவதும் இல்லை, இயற்கை கணப்பொழுதும் கூட இயங்காமல் இருப்பதில்லை. குணமே அவனை இயங்க தூண்டுகிறது. எவன் ஒருவன் உணர்சிகளை அடக்கி கொண்டு மனத்தால் நினைத்துகொண்டிருக்கிரானோ அவனே மகா மூடன், ஒழுக்கமற்றவன், வேஷக்காரன், கட்டுக்குள் உணர்வுகளை வைத்து கொண்டு கர்மயோக கார்யங்களில் ஈடுபடுபவனே என்றும் உயர்ந்தவன் அதனால் உனக்கு விதிக்கப்பட்ட கடைமையை செய்வாயாக //
எங்கோ தூரத்தில் இருந்து வந்த, பகவத் கீதை உபன்யாசகரின் குரல், காற்றலையில் காதுக்கு வந்து கர்ம யோகத்தின் சிறப்பு, காதில் விழ, மனதிற்கு ஒரு தெளிவு பிறந்தது.
இதற்கு தான் என் குரு என்னை இங்கே திருப்பி அனுப்பினாரோ ?
இங்கேயே ஒரு வேலையை தேடி கொண்டு,
விட்டு போன கடைமையை இன்றிலிருந்து தொடர வேண்டும், அப்பாவையாவது, இருக்கும் வரை நல்ல படியாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
அது தான் உண்மையான யோகம்,
இதை உணர்த்ததான், என் குரு என்னை இங்கே திருப்பி அனுப்பினாரோ ?
மனதில் பிறந்த தெளிவை கடிதத்தில் எழுதி, குருவிற்கு அனுப்பி விட்டு, நாளை முதல் வேலை தேட ஆரம்பிக்க வேண்டும்.
நான் கர்மயோகி ஆனதை உணர்ந்தேன்.
ஆமாம் அனைவரையும் பார்த்தோம் , விமலாவின் அண்ணா எங்கே போனார். ??? !!!!!
ஆசிரமம் :
ஆசிரமத்து சிப்பந்தி, கதவை திறந்து, அன்று வந்த கடிதங்களை எடுக்க வந்த போது தான் பார்த்தார்.
யாருங்க நீங்க ???
நான் ஒரு டாக்டர், இங்கே ஆசிரமத்துல தங்கி மனசுக்கு அமைதி தேடிக்க்கலாம்னு வந்திருக்கேன்.
சன்யாசம் வாங்கிக்கலாம்னு இருக்கேன்.
சுவாமிஜி கிட்ட சொல்லி தங்க இடம் கேட்கணும்.
அதற்குள் ஸ்வாமிஜியும் வெளியே வர, பார்த்தவுடனே புரிந்து கொண்டு விட்டார்.
சுவாமிஜி புன்முறுவலுடன், டாக்டர் இங்கயே இருங்க, வேளை வரும் போது நானே சொல்லறேன் என்றார்.
கேட்ட உடனே இடம் கிடைத்து விட்ட சந்தோஷம் டாக்டருக்கு.
இன்னொரு கர்மயோகியை உருவாக்க வேண்டிய பணியை கடவுள் தனக்கு கொடுத்ததை எண்ணி மனதிற்குள் சிறிது கொண்டார் சுவாமிஜி.
அட இப்போ புரிஞ்சிருக்குமே அந்த டாக்டர் யாருன்னு .