மூன்றாம் தலாக்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 3,923 
 

(2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஸேர். போஸ்ட்…”

வீட்டினுள்ளே அன்றைய தினசரிகளை படித்துக் கொண்டிருந்த ஆக்கில் ஹாஜியார்…. – வெளியே வந்து கையொப்பமிட்டு நீண்ட கடித உறையொன்றைப் பெற்றுக் கொள்கிறார்…

அது வெளிநாட்டுக் கடிதம்…. தன் மகள் கமரிய்யாவின் பெயரில் அவள் கணவன் இயாஸ் அனுப்பியுள்ள பதிவுத் தபால்….

“கமரிய்யா. மகள் கமரிய்யா…”

“ஓம் வாப்பா, இதோ வந்திட்டன்”.

குசினியினுள் வேலையாயிருந்த கமரிய்யா, கைகளைத் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

“இந்தா புள்ள.. உன் மாப்பிள்ளை கடிதம் அனுப்பியுள்ளார்… ” அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை; உள்ளம் பூரிக்க கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கமரிய்யா, அப்பொழுதே அதை உடைத்துப் பார்க்கிறாள்…

அவளுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது… பல இடிகள் ஒன்றாய் இணைந்து அவள் தலையில் விழுவது போன்ற உணர்வு! – அப்படியே பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலியில் சாய்கிறாள்.. கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. கையிலிருந்த கடிதம் கீழே விழுகிறது….

ஆக்கில் ஹாஜியாருக்கு எதுவும் புரியவில்லை ; அமைதியாக வந்து கடிதத்தை எடுத்துப் பிரித்து படிக்கிறார். அவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது….. அமைதியாக மகளின் முகத்தைப் பார்க்கிறார். – மீண்டும் கடிதத்தை வாசிக்கிறார்….

அன்புள்ள கமரிய்யா அறிவது…

இக்கடிதத்தை வாசித்தவுடன் உனக்கு கவலை வரலாம்… அதற்காக என் முடிவை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. தான் உன்னை இங்கே ஒருவர் சாகிதாக தலாக் கூறிவிட்டேன்… உன்னை விட அழகான… ஒரு பணக்காரப் பெண்ணை விரும்புகிறேன். உன்னைப் போல் ஹிஜாப் போட்டு உடம்பை மறைக்கும் பெண்ணல்ல. நவ நாகரிகமான அழகான பெண். எனக்கேற்றவள்!… உன்னை விவகாரத்து செய்தால் என்னை கலியாணம் முடிப்பாள் …. ஆகவே உன்னை நான் விவகாரத்து செய்து கொள்கிறேன். என்னை நாடவேண்டாம். உனக்கு வர வேண்டிய இத்தாப்பணம், உனக்குரிய செலவுப் பணம், அத்துடன் உனது வாப்பாவிடம் வெளிநாடு போக நான் பெற்ற கடன் பணம் எல்லாவற்றையும் அனுப்பி வைக்க தயாராகி உள்ளேன். காழியார் வசம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்…. காழியாருக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன்…. நான் மூன்று தலாக்கையும் கூறியுள்ளதாக அறிவித்துள்ளேன்.

இப்படிக்கு,
உன் மாஜி கணவன்,
இயாஸ்.

கடிதத்தைப் படித்து முடித்த ஆக்கில் ஹாஜி…மீண்டும் மகள் முகத்தைப் பார்க்கிறார்…கமரிய்யா முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து நிற்கிறாள்…

“வாப்பா… வாங்க… காழியார் வீடு போவோம்…” என்றாள்.

“கொஞ்சம் பொறு மகளே! இதன் உண்மை நிலை அறிய வேண்டும்” என்கிறார்…

“எது வாப்பா உண்மை நிலை? செய்வதெல்லாம் செய்பவர்கள் இன்னும் என்ன செய்வார்கள் என்பதை அறிய வேண்டும்; எதற்கும் ஒரு முடிவு உண்டு வாப்பா” என கமரிய்யா பொரிந்து தள்ளுகிறாள்.

“உண்மை … நீ சொல்வதெல்லாம் உண்மை …. என்றாலும் தீர விசாரித்து முடிவு காணவேண்டும்…. கொஞ்சம் பொறு…. நான் சாலிம் ஹாஜிக்கு போன் செய்து தகவல் அறிந்து அதன் பின் போவோம்” எனக் கூறியபடியே தொலைபேசியின் பக்கத்தில் சென்று இலக்கங்களை கழற்றுகிறார் ஆக்கில் ஹாஜி…

சிறிது நேரத்துக்குப் பிறகு தொடர்பு கிடைக்கிறது….

“அஸ்ஸலாமு அலைக்கும்… சாலிம் ஹாஜி தானே கதைகிறது? நான் ஆக்கில் பேசுகிறேன்… எப்படி சுகம்…?”

“வஅலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ் நானும் இங்கே நல்ல சுகமாக உள்ளேன்…. ஏதும் அலுவல் இல்லாமல் கதைக்க மாட்டீர்களே! ம்… சொல்லுங்க… எனக்கு ஃப்ரீ டைம் தான்….”

“மாஷா அல்லாஹ் சந்தோஷம்… நான் என் மருமகனின் செய்திகளை அறிந்து கொள்ளத்தான் உங்களுக்கு கோல் பண்ணினேன்…”

“ஹாஜி…. நானும் உங்கள் மருமகனின் செய்திகளை உங்களுக்கு ஃபெக்ஸ் மூலம் அனுப்ப எண்ணிய நேரந்தான் இந்த கோல் கிடைத்தது… நான் இரண்டு கிழமையாய் இங்கிருந்து கொன்பிரன்ஸ் ஒன்றுக்கு வேறொரு ஊருக்கு சென்று நேற்றுதான் வந்தேன்… – இன்று பள்ளிவாசலுக்கு தொழச் சென்ற போதுதான் பள்ளிவாசலில் கதீப் விபரங்களைக் கூறினார். நான் உடனே இயாஸைப் பார்க்கச் சென்றேன்…. சந்தித்தேன். அவர் என்னிடம் இப்படி கூறினார்… நீங்கள் இதை என் மாமருக்கு அறிவிக்கவும்… என் மாமனாரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் எனக்கு வேண்டியதில்லை; நான் அதை விட பெரிய இடத்துப் பெண் ஒருத்தியை கைபிடிக்கப் போகிறேன்…அவளும் என்னை விரும்புகிறாள். நாகரிகமாக நடக்கிறாள்….உடலை மூடிக்கொண்டு… வெட்கப்பட்டுக்கொண்டு…..சே… எவ்வளவு நாளைக்கு நாகரிக வாசமே இல்லாதவர்களோடு வாழமுடியும்… நான் இங்கே மௌலவியின் முன் “தலாக் கூறிவிட்டேன்…. அவர்கள் கேட்பதை விட இருமடங்கு பணம் அனுப்புவேன்…. என இறுமாப்புடன் கூறிமுடித்தார். நான் எவ்வளவோ கூறினேன்; கேட்கவில்லை. கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே” எனக் கூறுவார்கள். இதுதான் உங்கள் மருமகனுக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று சொல்கிறேன்…. இங்கு வரும் எல்லாரும் உங்கள் மருமகன் போலில்லை. மன வருதப்பட வேண்டாம் ஹாஜி” என சாலிம் ஹாஜி சொல்லி முடித்தார்…

“சரி ஹாஜி…. அஸ்ஸலாமு அலைக்கும்…” போனை கீழே வைக்கும் அவர் மகள் காணாமல் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

“வாப்பா என்ன செய்தி?” என கமரிய்யா வினவுகிறாள்…

”காழியார் வீடு போவோம். போகும் வழியில் சொல்கிறேன்”

இருவரும் காழி நீதிமன்ற காரியாலயம் நோக்கி செல்கின்றனர்…. காழி நீதிவானை சந்தித்த அவர்கள்… இயாஸிடம் இருந்து வந்த கடிதத்தை கொடுக்கின்றனர்… காழியார் அதைப் படித்துவிட்டு…

“இப்பொழுதுதான் உங்க மருமகன் குடும்பத்தார் வந்து எனக்கு இயாஸ் எழுதிய கடிதம் ஒன்றை தந்து விட்டு செல்கின்றனர்…” என்றார்.

“அவர் குடும்பத்தார் இங்கு வந்தார்களா…?” இருவரும் ஒரே வேளையில் ஆச்சரியத்துடன் கேட்டனர்…

“ஏன் அப்படி கேட்கிறீர்கள்?”

“ஒன்றுமில்லை …… குடும்ப விவகாரம்… எங்கள் வீட்டுக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும்…அதைப்பற்றி ஒன்றுமில்லை…. நாங்கள் உங்களுக்கு அவர் கடிதம் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டுள்ளதால் உங்களிடம் அபிப்பிராயம் கேட்டு வந்தோம்” என்றாள் கமரிய்யா.

“எவ்வளவு அபிப்பிராயம் கேட்டு யார்வந்தாலும் வழக்கொன்றை தாக்கல் செய்யும் பொழுது வழக்காளி வந்து விண்ணப்பிக்க வேண்டும்… இல்லை என்றால் வழக்கு தாக்கல் செய்ய மாட்டேன்… இதை வந்தவர்களிடம் கூறி அனுப்பியுள்ளேன்.” என்றார் காழி நீதிவான்.

சிறிது நேரம் சிந்தனையில் இருந்த கமரிய்யா… “ஹாஜியார்… நான் சொல்வதை கவனமாகக் கேட்டு எழுதிக் கொள்ளுங்கள். இதை அதிகப் பிரசங்கிதனம் என்றோ….. விதண்டா வாதம் என்றோ எண்ண வேண்டாம்… எனது கணவர் – ஒருவர் சாட்சியாக அங்குள்ள பள்ளி ஹஸரத் முன்னிலையில் தலாக் என உறுதியாகக் கூறியுள்ளார். அதுவும் மூன்று தடவைகள் கூறியுள்ளார் எனவும் எழுதியுள்ளார். அத்துடன் எங்கள் வாப்பாவின் கூட்டாளியிடம் கூறியுள்ளார்… எனவே மூன்று தடவைகள் ஒரே முறையில் அல்ல பல தடவை கூறியுள்ளது நிச்சயமாகிறது. இதனால் ஷரீஆ சட்டப்படி அவர் என்னை தலாக் கூறிவிட்டார். நான் இத்தா இருக்க வேண்டும். இது கடமை என்பதால் சட்டப்படி அவர் உங்கள் முன் வந்து தலாக் வழக்கு பதிவு செய்தால் என் சம்பூர்ண விருப்பத்தை சத்தியத்துடன் குறித்துக் கொள்ளுங்கள். இத்தா இருக்கும் என்னால் வர முடியாது. மேலும் அவர் தருவதாகக் கூறியுள்ள செலவினங்களை – நான் பெற்றுக்கொள்ள என் வாப்பாவை நியமித்துக் கொள்ள விருப்புகிறேன். அத்துடன் அப்பணத்தை இந்த தர் பாடசாலைக்கோ அல்லது ஏதும் தர்ம காரியங்களுக்கோ செலவு செய்யுங்கள் என ஹாஜியாரை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்….”

“கொஞ்சம் பொறுங்கள். இதுவரை கூறியது சரிதான். ஆனால் பணவிடயத்தை என்னிடம் பொறுப்பு சொல்ல வேண்டாம்….. நான் உங்கள் வாப்பாவிடம் கொடுக்க பணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்… என்றார் காழி.

“அப்படியே ஆகட்டும்…. நான் ஒப்பமிடுகிறேன்… சரிதானே ஹாஜி” என்கிறாள்…

காழியார் எல்லா விபரங்களையும் ஒரு தாளில் எழுதி கமரிய்யா விடமிருந்து சத்தியத்தை உறுதிப்படுத்தி கையொப்பம் பெற்றுக் கொண்டார்.

ஒரு மாதகாலத்துக் கிடையில் இயாஸ் வருகை தந்து காழி நீதவான் மூலம் வழக்கு தாக்கல் செய்து தலாக்கை சட்டப்படி பெற்றுக் கொண்டான்.

சிறிது காலஞ் செல்கிறது. ஒரு நாள் அதிகாலை கமரிய்யா வீட்டு கோலிங்பெல் அடிக்கப்படுகிறது. குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த கமரிய்யா மேல் மாடியிலிருந்து கீழே நோக்குகிறாள்… வாசலில் இயாஸ் இருப்பதை காண்கிறாள்..

உடன் கீழே வந்த கமரிய்யா… வாப்பாவை அழைத்து இயாஸ் வந்திருப்பதை அறியச் செய்து… காரணத்தை விளக்கும்படியும் கூறி நிற்கிறாள்….

ஆக்கில் ஹாஜி சென்று வாசல் கதவை திறக்கிறார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் மாமா….”

“வஅலைக்குமுஸ்ஸலாம். உள்ளே வாருங்கள் இயாஸ்…”

“இப்படி உட்காருங்கள் ” வந்தவரை வரவேற்று உள்ளே அமரச் செய்து “வந்த விபரத்தை அறியலாமா?” என வினவுகிறார் ஆக்கில் ஹாஜி…

“மாமா.. நா… நா… நான் வந்து…” என திக்கு வாய் வந்தவன் போல ராகத்துடன் பேச்சை மென்று விழுங்குகிறான்.

“சொல்லுங்கள் இயாஸ்… ஏதோ ஒரு செய்தி சொல்ல வந்திருப்பீர்கள்….இனி….சொல்லுங்கள்….”

“இல்லை மாமா….. நான் கமரிய்யாவுடன் கதைக்க வேண்டும்…” என்கிறான்…

“அதெப்படி…? தலாக் சொல்லப்பட்ட பெண்ணுடன் கதைக்க முடியாதே..”

“இல்லை மாமா…. நான் தலாக்கை வாபஸ் பெற்றுவிட்டேன். நான் இனிமேல் கமரிய்யாவுடன் கடைசிவரை சேர்ந்து வாழ்வேன்.. என்னை மன்னித்து விடுங்கள்…” – அழுதபடி ஆக்கில் ஹாஜியின் காலை தொட்டு மண்டியிடுகிறான் இயாஸ்….

“எழுந்திருங்கள் இயாஸ்…என்னால் ஒரு முடிவும் சொல்ல முடியாது. கமரிய்யாதான் முடிவெடுக்க வேணும்”

“அதனால் தான் நான் இங்கு வந்தேன்…. அவளை அழைக்க முடியுமா?”

“சரி… கொஞ்சம் பொறுங்கள்…” எனக் கறிய ஆக்கில் ஹாஜி நேராக வீட்டினுள் செல்கிறார்… சிறிது நேரம் கழித்து வெளியே வருகிறார்…

“இதோ பாருங்க இயாஸ், எனக்கிருப்பதோ ஒரே மகள். இந்த சொத்து எல்லாவற்றிற்கும் அவள் தான் என் வாரிசு… அவளால் எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும். இதனால் தான் ஊரிலே நல்லதொரு மாப்பிள்ளை தேடினேன். எல்லாரும் உங்களை சிபாரிசு செய்தனர். எனக்கும் நல்லதாகப்பட்டது. உங்களை மருமகன் ஆக்கினேன்…. ஆனால் என் எண்ணத்தில் நீங்கள் மண்ணைத் தூவி விட்டீர்கள்…. ஒரு மனிதனுக்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்பது பொய்யாகவில்லை… உங்களை வெளிநாடு அனுப்பியது உங்களில் மறைந்திருக்கும் பொறுப்புகளை உணர்த்தவே அன்றி பணம் சம்பாதிக்க அல்ல. ஆனால் நீங்கள் உங்களிடம் மறைந்திருக்கும் ஆசைகளை – வெளிநாட்டு நவநாகரிகங்களை – கற்றுக் கொண்டீர்கள். புடைவையை மாற்றுவது போல காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் என மாப்பிள்ளைகளை மாற்றும் நாகரிகத்துக்கு அடிமையாகி கடைசியில் எல்லாம் இழந்து, இப்பொழுது பொறுப்புடன் வந்திருக்கிறீர்கள். என் வம்சம் தழைக்க என் மகளுக்கு ஒரு துணை தேவை… எப்படி அவளிடம் இதைக் கதைப்பேன் என எண்ணிய நேரம் நீங்கள் வந்திருக்கிறீர்கள்; ஆனால் என் மகள் உங்களிடம் ஒரு கோரிக்கை விடுகிறாள்…. அதன்படி நடந்தால் ஒரு வேளை உங்கள் விருப்பம் நிறைவேறுமாம்…” என்றார்…

“என்ன… என்ன…. சொல்லுங்கோ மாமா” ஒரு வித நப்பாசையுடன் தடுமாறிக்கொண்டே இயாஸ் கேட்டான்.

“பாருங்க இயாஸ், என்மகள் அந்தக் காலத்திலிருந்து குர்ஆன் ஹதீஸ் இவைகளை ஓதி வருபவள்….அவள் இப்பொழுது சொன்னது ஒரு வார்த்தைதான்…அது….சூறத்துல் பகறாவின் இருநூற்றி முப்பதாவது வசனத்தை தெளிவாக விளங்கி அதன்படி நடக்கும்படி கூறினாள்….நானும் அதையே விரும்புகிறேன்” என்றார் ஆக்கில் ஹாஜி.

“சரி மாமா, நான் பள்ளிவாசலில் இமாமிடம் கேட்டு…அதன்படி நடக்கின்றேன்”

“அதுசரி… நானும் விளங்கிக் கொள்ள வேண்டும்; வாங்க போவோம்”

இருவரும் பள்ளிவாசல் இமாமிடம் சென்றனர். அவர் விபரங்களை அறிந்து கொண்டார். குர்ஆனை எடுத்து நேரடி மொழி பெயர்ப்பை வாசித்தார்…

‘(இரண்டு தடவை தலாக் சொன்ன) பின்னர் (மூன்றாம் தடவை மீண்டும்) அவளை அவன் சொல்லி விட்டால் பிறகு அவனுக்கு அனுமதிக்கப்பட்டவள் (ஹலால்) அல்ல; வேறு ஓர் ஆணை அவள் மணந்து அவனும் தலாக் சொல்லும் வரை’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹஸ்ரத், இந்த வசனத்தையும் அதன் பின்னுள்ள வசனத்தையும் வாசித்துவிட்டு இருவரையும் பார்த்து கண்டிப்பாகக் கூறினார்:

“ஹாஜியார்…உங்கள் மகள் தெளிவான பதிலை நல்லவிதமாகக் கூறியுள்ளார். மூன்றாம் தலாக் தொடர்பான கட்டளைகள் மிகவும் கண்டிப்பானவை. இதனை அரபி மொழி வழக்கில் தலாக் முகல்லழா பயினா என்பார்கள்…இந்த மூன்றாவது தலாக் ஆனது திரும்பி பெறவோ…அல்லது ரத்து செய்யவோ முடியாது. இயாஸ் மூன்று தடவைக்கு மேல் தலாக் சொல்லியுள்ளளார்…இறைகட்டளை; சொன்னது சொன்னதுதான். மாற்றவோ….மீறவோ…எவராலும் முடியாது. உங்கள் மகள் இன்னொருவரை கலியாணம் முடிக்க வேண்டும். இரண்டாவது கணவரோடு சர்வசாதாரணமாக வாழ்வை ஆரம்பித்து அவன் அவளை ஒரு வேளை விவாகரத்து செய்ய நேர்ந்தாலோ, அல்லது அவள் அவனை விவாகரத்து செய்தாலோ, அல்லது அவன் மரணித்து விட்டாலோ குறிப்பிட்ட காலம் இத்தா இருந்துவிட்டு அதன் பின்னர் அந்தப் பெண் தன் முன்னால் கணவனிடம் திரும்பி செல்ல விரும்பினால் அவளை திருமணம் செய்து கொள்ளலாம். இதை நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும்” என நீண்ட பிரசங்கமொன்றையே நிகழ்த்தினார் ஹஸ்ரத்.

இயாஸ் இதைக் கேட்டு திடுக்கிட்டான். நேரத்துக்கு நேரம் கணவனையோ, அல்லது மனைவியையோ மாற்றும் மேலைதேச நாகரிகத்தை போல இஸ்லாத்திலும் இடம் இருக்கும் என்ற தப்பெண்ணம் மாறிவிட்டது. என்ன செய்வான்? காலம் கடந்துவிட்டது… சிலை போல ஆடாது அசையாது நின்றான்.

“ஹஸ்ரத் அவர்களே.. நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம்…. என் மருமகன் திருந்தி வந்துள்ளார்… சாதாரண ஒருவரை என் மகளுக்கு நிக்காஹ் செய்து கொடுத்து அடுத்த நாள் அவரை தலாக் சொல்ல வைத்து அதன் பின் இவரை மறுமணம் செய்து கொள்ளலாம் அல்லவா…?” என ஆக்கில் ஹாஜி இமாமைப் பார்த்துக் கேட்டார்…

“தாராளமாக…ஆனால் உங்கள் பெண் விருப்பப்பட வேண்டும். உங்கள் பெண் அவனுடன் வாழவும் வேண்டும்.”

“சரி ஹஸ்ரத்…” இருவரும் எழுந்து நின்றனர்…”அஸ்ஸ லாமு அலைக்கும். நாங்கள் வருகிறோம்….”

“வஅலைக்குமுஸ்ஸலாம்” என இமாம் விடை கொடுத்தார்.

இருவரும் நீண்ட நேரம் கதைத்து விட்டு பிரிந்து சென்றனர். ஆக்கில் ஹாஜி நேராக தன் மகளிடம் சென்று விபரங்களைக் கூறினார். இப்படியான முடிவுடன்தான் வாப்பா வருவார் என்பதை முன்பே அறிந்திருந்த கமரிய்யா “வாப்பா, வருபவர் தலாக் கூற மறுத்தால்…?” என வினவினாள்.

“ம்… அப்படி ஒன்றும் நடக்காது!” என்றார் ஆக்கில் ஹாஜி.

*சரி வாப்பா… ஆனால் ஒன்று…. நீங்கள் யாரை திருமணம் செய்து வைக்கப் போகிறீர்களோ…அவரை நான் பார்க்க வேண்டும்….கதைக்க வேண்டும்…” என்றாள்..

“ஒழுங்கு படுத்துகிறேன்”

அடுத்த நாள்… மறைவிலிருந்து பார்த்தாள்…தூக்கி வாரிப் போடுகிறது! அவளுடன் கல்லூரியில் படித்த மாரிப் நின்று கொண்டிருந்தான்! வாப்பாவை அழைத்த அவள் மாரிபை உள்ளே அனுப்பும் படி கூறினாள்.

உள்ளே வந்த மாரிபைப் பார்த்து… “ஒரு நாள் மாப்பிள்ளையாக வர ஏன் சம்மதித்தீர்கள்?” என அவள் கேட்டாள்…

போன அவன் கண்கள் கலங்குகின்றன…. “என்னைத் தவறாக எண்ண வேண்டாம். நான் பணக்காசை பிடித்தவனும் அல்ல, பணத்திற்காக எதையும் செய்கிறவனும் அல்ல; என் நிலைமை இப்படியாகிவிட்டது. என் தங்கச்சியை திருமணம் செய்து வைக்க வழியில்லை. எனவே இப்படி செய்ய வேண்டிய நிலை எனக்கேற்பட்டது….”

“அப்படி என்றால்… உங்கள் வாப்பா… உம்மா…” ஆச்சரியத்துடன் கேட்டாள்….

“என் பாடசாலை வாழ்க்கை மட்டுந்தான் உங்களுக்குத் தெரியும். என் மறுபக்க வாழ்க்கை உங்களுக்கு தெரிய நியாயமில்லை …. கமரிய்யா … எங்கள் வாப்பா இருக்கும் பொழுது நாங்கள் நன்றாக இருந்தோம். நான் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலஷிப் பரீட்சையில் திறமையான சித்தி பெற்றும் எங்கள் வாப்பாவுக்கு வருமானம் கூட என்பதால் அரசாங்க புலமைப் பணம் கிடைக்கவில்லை; ஆனால்…. வசதியான பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் படிக்க இடம் கிடைத்தது. எங்கட வாப்பா எதிர்பாராமல் ஏற்பட்ட நோயினால் வபாத்தானார். அவர் நோய் நீங்க பெரிதாக பணம் செலவழிக்க நேரிட்டது. வாப்பாவின் மௌத்துக்குப் பின் உம்மாவின் அதிர்ச்சி அவரையும் நோயாளியாக்கி விட்டது. வாப்பாவின் புரவிடன் பண்ட்” கிடைத்தும் பிரயோசனப்படவில்லை; உம்மாவும் மௌத்தாகிவிட்டார்கள்…. நானும் தங்கச்சியும் தனிமரமானோம். நிழல் கொடுக்கவும் எவரும் இல்லை …. வீடு சொந்தமாக இல்லை; தாய் பிள்ளைகள், அசல்வாசிகள் அனுதாபத்தை இலவசமாக கொட்டினார்களே தவிர உதவிக்கு வரவில்லை. நான் ஒன்பதாவது படிக்கும் போதே இளம் தொழிலாளியாக மாறவேண்டிய நிலை ஏற்பட்டது…. பெக்டரியில் வேலைக்கு சேர்ந்தேன்…. தங்கச்சியை நன்றாக கவனித்தேன். உம்மாவின் காணித் துண்டொன்று கிடைத்தது. பலகையால் வீடுகட்டி நானும் தங்கச்சியும் இருக்கிறோம். தங்கச்சி இப்பொழுது ஒரு டீச்சர். அவளுக்கேற்ற ஒரு கணவனை என்னால் தேட முடியவில்லை . எவ்வளவு படித்திருந்தாலும் ஏன் ஒரு டொக்டராக இருந்தாலும் பெண் என்பவளுக்கு சீதனம், வீடு இப்படி கொடுத்தால்தான் மாப்பிள்ளை கிடைப்பான்…. இன்று எத்தனையோ பட்டதாரிப் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடி அலைகிறார்கள்… பீ.ஏ, எம்.ஏ படித்த பெண்கள், டீச்சர்மார்கள், சேல்ஸ்மேன்களையும், டிரைவர் மார்களையும், ஆட்டோ ஓட்டுபவர்களையும், பேமண்ட் வியாபாரிகளையும் கலியாணம் செய்துள்ளனர்… ஏன் இந்த அவலம்…?”

“பள்ளிவாசல்களில் பயானுக்கு குறைவில்லை; நீண்ட ஜுப்பா,முகம் நிறைய தாடி….. இவர்களில் எத்தனை பேர் சீதனம் இல்லாமல் கலியாணம் முடித்துள்ளனர்…? வசதிபடைத்தவர்களில் எத்தனை பேர் ஏழைக் குமரிகளை கலியாணம் முடித்துள்ளனர்…? நான் இன்று முஸ்லிம்களை காண்கிறேன்… ஆனால் உண்மையான முத்தகங்களை காணவில்லை…ஏதோ எம் சமூகத்தில் ஒரு சில நல்ல மணம் படைத்தவர்கள் இருப்பதால் நாங்களும் வாழ்கின்றோம்…” என தன் உள்ளத்து ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தான் மாரிப்.

கமரிய்யா மௌனமாக இருந்தாள்.

நிக்காஹ் மஜ்லிஸ் நடைபெற்றது… புதுமணத் தம்பதிகள் அன்று சுபஹுக்கு முன் எழுந்து குளித்து விட்டு சுபஹுக்குப் பின், முன் வராந்தாவில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நேரம் இயாஸும் ஆக்கில் ஹாஜியாரும் வருவதைக் கண்டு இருவரும் உள்ளே சென்றனர்…

“மகள் கமரிய்யா, இங்கே வாங்க….”வாப்பாவின் அழைப்பைக் கேட்டு கமரிய்யா வருகிறாள்…

“என்ன வாப்பா ….?”

“மாப்பிள்ளையை கொஞ்சம் கூப்பிடுங்க!”

“சரி வாப்பா….. ஆனால் ஒன்று… வாப்பா, இதுவரைக்கும் நான் உங்கள் பேச்சை மீறியதில்லை; இன்று என் பேச்சை நீங்கள் கேட்க வேண்டும்….இது வெறும் பேச்சல்ல; ஒருவனின் ஏழ்மையை விலைபேசி இந்நிகாஹை எனக்கு முடித்து வைத்துள்ளீர்கள்…அவர் பணத்தில் ஏழையே தவிர, பண்பிலும், நடத்தையிலும் நல்லவர்…எனக்கு முன்பே அவரைத் தெரியும்…எனக்கு அவரை முடித்துத் தந்து நீங்கள் எனக்கு நல்லதையே செய்துள்ளீர்கள்….என் கணவரின் மானத்தை விலைபேச என்னால் முடியது. இனி மௌத்து வரைக்கும் அவர்தான் என் கணவர்….மேற்கொண்டு அவருடன் நீங்கள் பேச என்னால் அனுமதிக்க முடியது. உங்கள் மாஜி மருமகனை வந்த வழியே….வழி அனுப்பி விட்டு வாருங்கள்..” என பெண் வேங்கையாக நின்றாள்.

இதுவரைக்கு தன் மகள் இப்படி கதைத்ததில்லை; திகைத்து நிற்கிறார் ஆக்கில் ஹாஜி…மறுபேச்சின்றி வெளியேறினான் இயாஸ்.

காலங் கடந்தது..

மாரியும், கமரியாவும் கைக்குழந்தையுடன் காரில் செல்வதை ஜவுளிக் கடையில் சேல்ஸ்மேன் வேலை பார்க்கும் இரு கண்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.

– மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *