கனவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 5,757 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இளையராணிக்கு இருப்பு கொள்ளவில்லை. வாழ்வு குறித்து அவள் கண்ட கனவுகள் இனிமேல் நிலைத்திருக்க வேண்டும் இறைவா. மானசீகமாக கடவுளை வேண்டினாள். இன்று அவர் வரப் போகிறார். வந்த பின் குளித்து சாப்பிட்டு குழந்தையை கொஞ்சும் அழகை அவள் இன்று தானே முதன் முதலாகப் பார்த்து ரசிப்பாள்? 

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள்?? 

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்ததோ? எந்த ஜாதிமத பேதம் ஒழிய வேண்டும் என நினைத்தாளோ, அதே ஜாதிப் பிரச்சனை இந்தளவுக்கு விசுவரூபம் எடுத்து தன்னையும் தன் கணவனையும் ஏழு வருடங்கள் பிரித்து விட்டிருக்கிறதே? இத்தனை வருடங்களிலும் வேட்கை மிகுந்து திரியும் கயவர்களை சமாளிக்க எத்தனை போராட்டங்களை நடாத்த வேண்டியிருந்தது. தாலியிருந்தும் வேலியில்லாத பயிர் போல் தன்னைத் தானே எண்ணி அந்தரப்பட்டாளே. தத்தமது மனைவியருடனேயே வந்து பிள்ளையை தூக்கும் சாட்டில் இவளை திருட்டுத்தனமாக ரசிக்கும் எத்தனை பேர்? இளமை வாட்டத்தில் கணவனது படம் பார்த்து எத்தனை இரவுகள் ஏக்கமாய் இருந்திருப்பாள்? 


இளையராணி இளம் பராயத்தில் இருந்தபோது பசு தோலுரிக்கப்பட்ட மனிதர்களின் முகங்களை முழுமையாகக் கண்டு அதிர்ந்து போனாள். உலகத்தில் யாருமே செய்யாத ஒன்றை அவள் செய்தாளா? இல்லையே. ஆனால் உலகத்தில் அரங்கேறும் மிகப் பிரதான குற்றமும் இதுதானே? 

காதல்! 

இந்த மந்திர வார்த்தையின் சுகத்தை முழுமையாய் உணருமுன்பே காலம் அதன் கை வரிசையை எப்படியெல்லாம் காட்டிப் போயிற்று? ஊருக்குள்ளேயே எப்பேர்ப்பட்ட அவமானங்கள்? உண்மையில் இவற்றுக்கெல்லாம் காரணம் அவளுடைய காதலா? காலம் தொட்டு பேசப்பட்டு வரும் ஜாதிகளுக்கிடையிலான வேறுபாடா? 

பாடசாலை காலத்திலிருந்தே வாளிப்பான அவளது உடலமைப்பு மேல் மையல் கொண்டிருந்தவன் சரவணன். காதலை காரணம் காட்டி அவளை அடையும் அவனது நோக்கம் புரியாதளவுக்கு இவளென்ன முட்டாளா? எக்காரணம் கொண்டும் அவனது காதலை ஏற்க அவள் தயாரில்லை. அதையும் விட அவளுக்குள் ஓர் உணர்வு சதாவும் ஓடி ஓடி உயிரை வதைத்துக் கொண்டிருந்ததே? மனசுக்குள் போட்டு பூட்டி வைத்திருந்த காதல் புகையை மறைக்க அவளால் சாடைமாடையாக குமரனிடம் முடியாமல் போன போது ஒப்பேற்றினாள். அவன் வரும்போது நாணிச் சிவந்தாள். 

ஆதிகால சமூகம் தொட்டு குலம் கோத்திரம் பார்த்து மக்கள் தங்களுக்குள் பிரிவினைப்பட்டுப் போவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரே இறைவனின் படைப்பு, ஒரே நிற இரத்தம். இது தான் மனித இனம் என்று அவள் எண்ணினாள். 

வண்ணாண் அழுக்ககற்றி கழுவும் ஆடையை ஆடம்பரமாய் உடுத்தும் அவளது தந்தை, வீட்டு வாசலுக்குத் தானும் அவர்களை வரவிடாது படலை வரை மட்டுமே அனுமதித்து காசு கொடுப்பதை பார்த்து மனம் வெதும்பியிருக்கிறாள். மா இடிக்க வருகிற கூலிக்காரியையும் கொல்லைப் புறத்தில் நிற்க வைத்து வேலை வாங்குவதைப் பார்த்துப் பொறுக்காமல் பெற்றோரிடம் வாதாடியிருக்கிறாள். தமது இனங்களுக்கு இடையிலேயே ஏன் இத்தகைய வேறுபாடுகள் என எதிர்வாதம் புரிந்து இருக்கிறாள். 

அப்போதெல்லாம் ‘நீ சின்னப் பொண்ணு இதையெல்லாம் பற்றி நீ பேசக்கூடாது’ என்று அதட்டப்பட்டாள். இயற்கையிலேயே இரக்க குணம் கொண்ட அவள் இப்படிப்பட்ட அரக்க குணங்களை அடியோடு வெறுத்தாள். அதன் காரணமாகவோ என்னவோ குமரனை விரும்பினாள். ஆனால் அவனோ தப்பித் தவறியேனும் அவள் பக்கம் பார்ப்பதேயில்லை. எதேச்சையாக கண்டுகொண்டாலும் கூட திரும்பிக் கொண்டு போய்விடுவான். அப்போதெல்லாம் பச்சைப் புண்ணில் மிளகாய்பட்டது போல அவளது உள்ளம் துடிக்கும். 

எனினும் இளையராணி தளர்ந்து போய்விடவில்லை. புற்றீசல் போல் வெளிப்பட்ட அவள் காதல், குமரனின் இதயத்தில் புற்றை அமைக்க அவா கொண்டது. காலம் அதன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. நான்கு மாதங்களின் பின் அவளது முயற்சிக்கு பலன் கிடைத்தது போல் அவனது புன்னகை கிட்டியது. விட்டில் தானாய் வலிய வலம் வந்தால் எந்த விளக்கு விரட்டியடிக்கும்? என்றாலும் வேண்டுமென்று அவள் விழுந்து அல்லல் படுவதை குமரன் விரும்பவில்லை. பக்குவமாக எடுத்துச் சொன்னான். அவளும் அவன் மட்டுமே வேண்டும் என்று உறுதியாகவே நின்றாள். 

ஆறு மாதங்கள் ஆனந்தமாய் கழிந்தன. அதற்குப் பிறகு புயலடிக்கும் என்று யார் கண்டது? இந்த விவகாரத்தை முதலில் எதிர்த்த சரவணன் குமரனை மிரட்டினான். அவளை இனி சந்திக்கவே கூடாது என்றான். ஆனால் இளையராணியின் அன்பு நதியில் நீச்சலடித்துக்கொண்டிருந்த குமரன் இவற்றையெல்லாம் துளியளவும் பொருட்படுத்தவில்லை. எதற்காகவும் இந்த காதல் ஜோடி அஞ்சவில்லை. 

தம் காதல் மூலமாகவேனும் சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து போகட்டும் அல்லது நம்முடன் சேர்ந்தே இந்த ஜாதிப் பிரச்சனைகள் அழிந்து சாகட்டும் என சபதம் எடுத்துக் கொண்டனர். எதிர்ப்புகள் காதலை மேலும் வலுவடையத்தானே செய்கின்றன. இவர்களும் தம் காதலில் இன்னும் உறுதியானார்கள். 

இது இளையராணியின் பெற்றோரின் காதுகளுக்கு எட்டிய போது பதை பதைத்துப் போனார்கள். சமூக கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் என்றுமே விலகி நடந்ததில்லை. அப்படி ஏடாகூடமாய் எதுவும் நடந்தால் ஊர் தம்மை தள்ளி வைத்துவிடுமே எனப் பயந்தார்கள். முழு ஊருக்கும் தெரியும் முன்பே இளைய ராணியையும் அழைத்துக் கொண்டு எங்காவது கண்காணாத தேசத்துக்கு ஓடிவிட அவர்கள் முடிவெடுத்தார்கள். 

இருபது வருடமாய் வளத்த வளர்ப்புக்கு அவள் தேடித்தந்த வெகுமதியா இது? ஒரே பெண் என்று எப்படியெல்லாம் பாசத்தை ஊட்டி வளர்த்தார்கள் அவளது பெற்றோர். அவளுக்கு குறை வைக்கக் கூடாதென்று இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று கூட 

கூட அவர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தார்களே. அத்தகைய அன்பிற்கு இந்த தண்டணை போதுமா? எத்தனை பெற்றோர்கள் இன்று இந்த பாட்டைப் படுகிறார்கள்? காரணமென்ன காதலா? சாதி மத பேதமா? 

அவளாவது யோசித்திருக்கலாமே? தன்னைக் கேட்காமல் படிக்க வைத்து, தன்னைக் கேட்காமல் சாப்பிடத் தந்து, தன்னைக் கேட்காமல் ஆடை அணிகலன் தந்த பெற்றோர் தனக்குத் தேவையான வயதில் வரன் தேடித்தராமல் இருப்பார்களா? காதல் இவ்வளவு வலிமையானதா? எப்படியோ ஊரை விட்டு போகும் முடிவை இளைய ராணியே நிறைவேற்றிவிட்டாள். ஆம்! அவள் குமரனுடன் ஓடிப் போனாள். ஊரார்களுக்கு முன்னே நின்று தலைவிரி கோலமாய் அவளது அம்மா அவளை திட்டிக்கொண்டிருந்தாள். தான் பெற்ற பிள்ளையை ஒரு தாய் இப்படி திட்டுவாளா என்று ஊர் வம்பை அவல் தின்னும் பெண்களே மனம் கலங்கினர். ஆனால் அதன் உள்நோக்கம் மற்றவர்கள் திட்டுவதைவிட தானே திட்டுவது போல நடித்ததுதான் என்பது யாருக்குத் தெரியப் போகிறது? 

இந்த சம்பவம் சரவணனை மிருகமாக்கி விட்டிருக்கும் என்று யாருமே நம்பியிருக்கமாட்டார்கள். சாதி வெறி பிடித்தலையும் ஒருவன் என்றே இளையராணி போன்றோர் நினைப்பார்கள். சமூக கட்டுப்பாடு மீறாதவன் என ஊரார் எண்ணுவார்கள். தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனுடன் போய்விட்ட அந்த அவமானத்தை அவன் ஏற்றுக் கொள்ள திக்கித் திணறினான். நண்பர்களிடம் கேலிக்காளானான். இவனைப் போன்றே அவள் மீது காதல் கொண்டவர்கள் ‘அவங்களை சும்மா விடக் கூடாது’ என கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய்விட்டு வேடிக்கை பார்த்தனர். ஒரு குழுவாக இயங்கி அவர்களை கண்டுபிடித்துத் தருவதாக அவள் பெற்றோரிடம் வாக்களித்தனர். இனிமேலும் இந்த ஊரில் இப்படிப்பட்ட தவறுகள் இடம் பெறக் கூடாதென்று மேடை அமைத்துப் பேசினர். 

எதுவுமே தெரியாமல் குமரனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள் இளையராணி. தாய் தகப்பனை விட்டுவிட்டு வந்த சோகம் குடிகொண்டிருந்தாலும், குமரனின் அணைப்பில் அவளது கவலைகள் கட்டுப்பட்டிருந்தன. இல்லற வாழ்வின் இனிமை இத்தனை சுகமா என அவள் எண்ணியிருந்தாள். அதற்கு கண் வைத்தாற் போல இவர்களின் வாழ்க்கையில் மீண்டும் பேரிடியாக வந்தான் சரவணன். 

தான் மணமுடிக்க இருந்த பெண்ணை கூட்டிக் கொண்டு வந்ததற்காக முதலில் சரவணன் வசை பாடினான். பிறகு கையோங்கினான். கீழ் சாதியான் தனக்கு பயப்படுவான் என்று எண்ணியே அவன் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும். முதலில் செய்வதறியாமல் பின்னே நகர்ந்தான் குமரன். அதை கண்ட சரவணன் உடனே இளையராணியை நெருங்கி பிள்ளை வயிற்றுக்காரி என்று கூட பாராமல் சட்டையை கிழித்து மானபங்கப்படுத்தினான். 

காதல் தந்த தைரியமோ என்னவோ வெறி கொண்டவனாய் எழுந்து சரவணனை தாக்கினான் குமரன். இந்த திடீர் தாக்குதலால் சரவணன் நிலை குலைந்து போனான். 

ஒரு நிமிடத்துக்குள் தனக்கு நடக்கவிருந்த அவமானத்தை எண்ணி உயிர் நடுங்கிய இளையராணி குமரனின் வெறியைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். எல்லாவற்றிற்கும் அவள் தான் முதலில் அத்திவாரம் போடுவாள். அவன் திறமையாக கட்டி முடிப்பான். அவனாக ராகமிசைத்து அவளை வழிக்கு எடுப்பதில்லை. 

அப்படிப்பட்டவன் இவ்வாறு வெறித்தனமாக நடந்துகொண்டால் யாருக்கு ஆச்சரியமிருக்காது? ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம் ஆனந்தப்பட்டவளுக்கு தன் கண் முன்னே நொடிப் பொழுதில் அரங்கேறிய அந்தக் கோரக் காட்சி ஈரலை குளிரச் செய்தது. கடவுளே.. கத்தியில் இரத்தம் சொட்டச் சொட்ட அவள் கணவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தான். அருகில் சரவணண் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தான். 


ஏழு வருடங்களின் பின் இன்று குமரன் விடுதலையாகி வருகிறான். நீண்ட காலமாக குமரனைப் பிரிந்திருந்த இளையராணி அவனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறாள்!!!

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email
தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (பிறப்பு: சனவரி 8) கவிதாயினி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சிநிலா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இலங்கை படைப்பாளியாவார். ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்தி வரும் இவர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *