கண்மணி அன்போடு காதலன்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 4,818 
 

வருடம்: 2022, இடம்: சென்னை

பாடியில் பிரபல ஈஸ்வரர் கோயில் அருகில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து.ராஜி என்னும் ராஜேஸ்வரி. கணவர் சித்தார்த் அண்ணாநகர் கிளையில் உள்ள ஒரு அரசு வங்கியின் கிளை மேலாளர். இரண்டு மகன்கள் அங்குள்ள ஒரு பிரபல பள்ளியில், பெரியவன் இவ்வாண்டு பன்னிரெண்டாம்,வகுப்பும். இளையவன் ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். அழகிய குடும்பம். வழக்கம் போல பிள்ளைகளை பள்ளிக்கும், கணவரை வேலைக்கும் அனுப்பிட்டு, ஓய்வாக சோஃபாவில் அமர்ந்து,தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில தொடர்களை மட்டும் சேனல்கள் மாற்றாமல்,பார்ப்பவள். இன்று மட்டும் சிறுவிளம்பர இடைவெளியில்,ஏனோ,சேனல் மாற்ற…ஒரு தனியார் சேனலில், 80,90,களில் ஹிட்டாகியிருந்த இளையராஜாவின் பாடல்கள்களை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தனர். அதில்,தற்போது உதயகீதம் படத்திலிருந்து சங்கீத மேகம் என்னும் அருமையான பாடல் முடியும் தருவாயில் இருந்தது. அக்காலக்கட்டத்தில் இளையராஜா பாடல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதே போல் கமல், ரஜினி, மோகன், பிரபு, கார்த்திக், விஜயகாந்த் படங்களில் இளையராஜா இசை அமைத்திருந்தால், அந்தந்த நடிகரின் ரசிகர்களுக்கு, (ஆண்கள் மட்டும்) தங்கள் தலைவனுக்காகவே இந்த பாடல் உருவாக்கப்பட்டதாகவும், இதை வேறு நடிகர்கள் நடித்திருந்தால் நன்றாக இருக்காது என்பதை போல் அவர்கள் நினைக்கும் அளவுக்கு ஒரு பிம்பத்தை, தன் பாடலில் ஏற்படுத்தி இருப்பார். மற்ற பெண்களை போல் ராஜிக்கும், என்ன தான் இளையராஜா பாடல்களை பிடித்திருந்தாலும்,அதிலேயே லயித்திருக்காமல், லேசாக மட்டுமே எடுத்துக்கொள்வாள். பாடலை பார்த்துக்கொண்டிருக்கும் போது. யாரோ காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்கவே, எழுந்து கதவை திறக்க, சமையல் எரிவாயு சிலிண்டர் வந்திருந்தது. அதை பணம் கொடுத்து வாங்கியதும், ஒடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை காண திரும்பவும் சோஃபாவில் வந்து அமர்ந்த நொடியில்.

“கண்மணி அன்போடு காதலன், நான்… நான்” – என குணா படத்திலிருந்து, கமல்ஹாசன் பாட ஆரம்பிக்க.வெறித்து பார்த்தவள். சட்டென்று, தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு. பிரம்மை பிடித்தது போல்,மனதும் இறுக்கமாக ஆகியது,சோகமாகவும், மௌனித்தும், அமர்ந்து,தலையை மட்டும் சோஃபாவின் சாய்வு விளிம்பில் சாய்த்து கண்கள் மூடுகிறாள்.,

கண்களிலிருந்து,கண்ணீர் மெல்ல கசிந்ததுக்கொண்டிருந்தது.(?)

நினைவுகள் மீட்பாக…

வருடம் : 1990 ம் ஆண்டு, இடம் : சென்னை

மயிலாப்பூர். மாதவபெருமாள் கோயில் தெருவில் சொத்துக்கள்,பிரிக்கப்பட்டும்,அண்ணன் தம்பி என இரண்டு நபர்களுக்கும் சொந்தமான,ஒரு பொது சந்தில் அமைந்திருக்கும்,”கற்பகம் இல்லம்” இதில் முன் பகுதியில் அண்ணன் ஐந்து குடித்தனத்தையும்,பின் பகுதியில் தம்பி ஐந்து குடித்தனத்தையும் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

இதில் அண்ணன் வீட்டில் குடித்தனம் இருக்கும் ஒரு குடும்பம் தான் கதையின் நாயகன் சுந்தர் வீடு.

அம்மா,அப்பா,தம்பி, தங்கை, என மிடில் கிளாஸ் அசைவ குடும்பம்.

‘சுந்தர்’ பயங்கரமான கமல்ஹாசன் ரசிகன்.இல்லை…வெறியன்.என சொல்லலாம்.

என்ன தான் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவன் என்றாலும், கமல்ஹாசன் ரசிகர் மன்றம் வைத்து,படங்கள் வெளிவந்தால், வீட்டிற்கு பயந்து (!) நேரடியாக களத்தில் இறங்காமல்,நண்பர்கள் மூலம் தியேட்டரில் ஸ்டார் கட்டுவது,பள்ளியை கட் அடித்து விட்டு,சினிமா பார்ப்பது.என திரிந்து பன்னிரெண்டாம் வகுப்பில் தோல்வியுற்று, அக்டோபரில் மறு தேர்வு எழுத தயாராகிக்கொண்டிருந்தாலும், இவனை போல் தேர்வில் தோல்வி கண்ட இவனது பள்ளி நண்பர்களுடன்,சேர்ந்து படிப்பதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு ஊர் சுற்றுவதே பிரதான வேலையாக இருந்தது.

தினம் நண்பர்கள் கூடும் இடமாக மயிலாப்பூர் கிழக்கு மாடவீதியில் இருக்கும் சேகர் டீ கடை வாசலில், இல்லையெனில் மவுண்ட் ரோடு தேவி தியேட்டர் வாசலில். அதிகபட்சமாக சேகர் டீக்கடை தான். ஏனெனில் இவனது நண்பர்களில் ஒருவனான ரமேஷ், டீக்கடை எதிர்புறம் இருக்கும் பிரபலமான ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு பெண் மீது லவ் கொண்டிருந்ததால்,(அந்த பெண் இவனை இப்போது காதலிக்கவில்லை என்பது வேறு விஷயம்) அவனுக்கு துணையாக, அடியாளாக(!).சுந்தர் பொழுதை கழித்து கொண்டிருந்தான். இவனுக்கு காதல், பெண்கள், மீது எந்த மோகமும் இதுவரை ஏற்படாமல் தான் இருக்கிறது.

இவன் குடியிருப்பு பின் பகுதியில் புதியதாக சைவ குடும்பம் ஒன்று குடிவருகிறார்கள்.

கணவர், மனைவி,பதினெட்டு வயதுடைய ஒரு பெண்ணும், பதினைந்து வயதுடைய ஒரு பெண்ணுமாக அந்த வீட்டில்.

பணிமாற்றம் கிடைக்க பெற்று, வெளியூரிலிருந்து வந்த குடும்பம் போல தெரிகிறது.

பெண்கள் இருவரையும், இவன் நண்பன் ரமேஷ் காதலிக்கும் அந்த பெண் படிக்கும், மற்றும் அதே சேகர் டீக்கடை எதிர்புறம் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் சேர்த்து விட்டுள்ளனர், போலும்.அந்த பள்ளியின் யூனிபார்ம்ல் செல்வதை கவனிக்கிறான் சுந்தர்.

ஒருநாள் வழக்கம் போல மாலை நான்கு மணியளவில், தனது நண்பனுக்காக, நண்பனுடன் டீக்கடை வாசலில் கதைத்துக்கொண்டிருந்த நேரத்தில், பள்ளி விட்டு, நண்பனின் காதலியும் (?), அந்த புதிய குடித்தன பெரிய பெண்ணும், சிரித்து பேசி, ஒன்றாக வருவதை கவனிக்கிறார்கள்.

நண்பன் ரமேஷ் “சுந்தரிடம்”

மச்சான்…. யாருடா அது? என் ஆள் கூட வர பிஃகர். புதுசா,சூப்பரா இருக்கு- என்றவனிடம்.

தூரத்தில் அடையாளம் கண்டு

மாமு, இது… எங்கள் சந்தில் புதுசா குடித்தனம் வந்திருக்க பொண்ணுன்னு நினைக்கிறேன். சொல்லியபடியே

(‘தானாகவே’) ஓ…இவள் பிளஸ் டு படிக்கிறாளா? – என முனுமுனுக்கிறான்.

அவள் புதுசா குடித்தனம் வந்திருக்கா- ன்னு , சொல்ற… உனக்கு எப்படிடா தெரியும்? அவள் பிளஸ் டு படிக்கிறாள்னு.

டேய்… நீ தானே சொன்னே, என் ஆளு! பிளஸ் டு படிக்கிறா-னு,

ஆமா… சொன்னேன்.

அப்ப… அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டே வந்தால், ஒரே வகுப்புன்னு தானே அர்த்தம்.

ஒ… நீ அதை வெச்சு தான் சொல்றீயா, அப்ப சரி என்கிறான் ரமேஷ்.

அதற்குள் பெண்கள் இருவரும்,தங்களுக்குள் விடைபெற்று, கையசைத்து வெவ்வேறு வழியாக வீட்டுக்கு கிளம்புகிறார்கள்.

வழக்கம் போல, ரமேஷ் அந்த பெண்ணை (ஜொள்ளிக்கொண்டே) வீடு வரைக்கும் கொண்டு விட,சுந்தரும் அவனுடன் பின் தொடர்கிறான்.

சுந்தர் வழக்கம் போல அதே டீக்கடையில், அரட்டை அடிப்பதையும், இதை வழக்கமாகிக்

கொண்டுள்ளதையும், இவனுடைய நண்பன் தன் சக வகுப்பு தோழியை காதல் தூது விட்டுக்கொண்டிருப்பதையும், அதற்கு இவனும் உடந்தையாக இருப்பதையும் பள்ளி விட்டு வரும் போதெல்லாம், அவ்வப்போது கவனிக்கிறாள் ராஜேஸ்வரி.

சில வாரங்களுக்கு பின்…

இவன் நண்பன் ரமேஷூக்கு, அவன் ஜொள்ளுவிட்ட அந்த பெண்,லவ்வாகிட, சுந்தரை கழட்டி விட்டு, அந்த பெண்ணுடன் தனியாக சுத்த ஆரம்பித்து விட்டான். இதனால் டீக்கடையிலிருந்து விடைபெற்றான் சுந்தர். இதனால் ராஜேஸ்வரிக்கு சுந்தர் சில நாட்களாக அங்கு கண்ணில்படவே இல்லை.

சுந்தரின் மற்றொரு நெருங்கிய நண்பன், மேலே படிக்க விருப்பமில்லாமல்,அவன் அப்பா வைத்துக்கொடுத்த பரம்பரை தொழிலான மளிகை கடையை, ஸ்டோராக மாற்றி கச்சேரி சாலையில், நடத்தி வருவதால், சுந்தர் சில நேரம் காலையிலும், பல நேரங்கள் மாலையிலும், விடுமுறை நாட்களிலும், அங்கு சென்று, அவனுடன் அரட்டை அடிக்க வழக்கமாக்கி கொண்டான்.

மேலும் ! இந்த அக்டோபர் தேர்விலும், தோல்வியை தழுவ, பேப்பர் விளம்பரம் பார்த்து, இவனை மாம்பலத்தில் உள்ள ஒரு பிரபல டுடோரியல் காலேஜில் சேர்த்து விடுகின்றனர். பையன் எப்படியாவது பன்னிரெண்டாவது பாஸாகி, காலேஜ் போய் எதாவது ஒரு டிகிரியாவது(!)வாங்கட்டுமே என நப்பாசை பெற்றோருக்கு.

‘ஒருநாள் மாலை’ சுமார் ஏழு மணியளவில், தன் வீட்டு சந்து நுழைவில், சுந்தர் தன்னுடன் படிக்கும், டுடோரியல் நண்பர்கள் இருவருடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது பதினெட்டு வயதுடைய ஒரு பெண் அருகில் வந்து.

“இவர்களிடத்தில்”

இங்கே…ராஜேஸ்வரின்னு ஒரு பொண்ணு புதுசா குடித்தனம் வந்திருக்காளாமே? அவ வீடு எங்கிருக்கு? – என்றவளிடம்.

ராஜேஸ்வரியா…? பேரெல்லாம் தெரியல, ஆனால்… உள்ளே போங்க இரண்டாவது பிளாக்கில் கொஞ்சம் மாதம் முன்னாடி புதுசா குடித்தனம் வந்திருக்காங்க, போய் கேட்டு பாருங்க, என சுந்தர் அனுப்பி வைத்தான்.

அரைமணி நேரத்துக்கு பிறகு முகவரி கேட்ட பெண்ணை வாசல் வரை வந்து வழி அனுப்ப,புதிதாக குடித்தனம் வந்த பெண் வரவே.

சுந்தரின் நண்பர்களில்…

மச்சான்… சொல்லவே இல்ல, உங்க வீட்டு சந்தில் இப்படி ஒரு பிஃகர் இருப்பதை. சூப்பராக இருக்குடா, என ஒருவன் சொல்ல, மற்றொருவன் கவுதமி போல இருக்குடா, என்றான்.

டேய்.. டேய்… இதுவெல்லாம் இந்த பார்டர் ல, வேணான்டா, எங்கள் வீட்டுக்கு தெரிஞ்சது. என்னை பொலி போட்டுருவாங்க, அப்புறம் உங்க இரண்டு பேரையும், உண்டு,இல்லாம, பண்ணிடுவாங்க, கொஞ்சம் அடக்கி வாசிங்க, என்றான் சுந்தர் பதட்டமாக.

ராஜேஸ்வரியை கேட்டு வந்த பெண் அருகில் வந்து, “சுந்தரிடம்”

ரொம்ப தாங்க்ஸ்… இவள் தான் நான் தேடி வந்த ராஜேஸ்வரி. என அவளை காட்ட, மிக அருகில் நேருக்கு, நேராக, பார்த்துக்கொண்டனர். சுந்தரும், ராஜேஸ்வரியும்.

அவள்…. புன்முறுவல் செய்கிறாள்,பதிலுக்கு தலையாட்டி இவனும் புன்முறுவல் செய்கிறான்.

சில நாட்களுக்கு பிறகு…

ஒருநாள் மாலை, ராஜேஸ்வரி வீட்டு சந்திலிருந்து, வெளியே எங்கோ செல்ல, இவளை எதிர்வீட்டில் இருக்கும் குமார் அவன் மாடியிலிருந்து, கையசைத்து, சமிக்ஞை செய்ய, அவளும் வெட்கி புன்னகைத்து செல்கிறாள். இதை எதேச்சையாக பார்க்க நேரிடுகிறது சுந்தருக்கு.

நம்ம சந்தில் இருக்கும் பெண்ணை எதிர்வீட்டு பையன், அவன் எதோ ஜாடை செய்றான், இவளும் சிரிச்சிக்கிட்டே போறாளே, என்னவாக இருக்கும்? என கொஞ்சம் மனசு பொறாமைப்பட வைக்கிறது.

எவ்வளவு நாளா இது நடக்குதுன்னு தெரியல, இதை தொடர்ந்து கவனிக்க வேண்டும், என உள்மனதும் சொல்லியது.

யார் எக்கேடுக்கெட்டால் நமக்கென்ன என இருந்துவிட முடியாமலும், எதற்காக கண்காணிக்க வேண்டும் என புரிதல் இல்லாமலும்,ஒருவித

அங்கலாய்ப்பு ஆரம்பமாகியது இவனுக்கு.

இவனை கண்காணிக்க,…

நினைத்தது போலவே குமார் தினம், தினம் மாலை வேளையில்,தன் வீட்டு மொட்டை மாடியில் இவளுக்காக காத்திருந்து, நிற்பதும், வந்ததும், கைகாட்டுவதுமாக தொடர, சுந்தரின் உள் மனசிலிருந்த கோபம் கொஞ்சம் அதிகமாகியது.

(குமார் மேல் கோபம் அதிகரிக்க மற்றொரு காரணமும் இருக்கிறது. சக வயதுடையவனாக இருந்தாலும், குமார் ரஜினி ரசிகன் என்பது முன்னமே தெரியும் என்பதாலும் ஒரு தீபாவளிக்கு, கமல் படமும், ரஜினி படமும் ஒரே நேரத்தில், ஒரே தியேட்டரில் வந்ததால், ஸ்டார் கட்டும் விஷயத்துக்காக இருவரும் மோதிக்கொண்டு, கீரியும், பாம்புமாக இருந்து வந்துள்ளனர்.)

எப்படியும் இதற்கு ஒரு வழிப்பண்ண வேண்டும் என்னும் முடிவால், தன்னுடன் டுட்டோரியல் காலேஜில் படிக்கும் அரசியல் பிரமுகரின் மகனான, நண்பனிடம் இவன் விஷயத்தை சொல்ல, அன்று இரவே விஷேச பூஜை குமாருக்கு கிடைத்தது. அன்றிலிருந்து அவன் வீட்டு மாடிக்கு வருவதில்லை.

அரசியல் பிரமுகரின் மகனான நண்பன்,

ராஜேஸ்வரியை பற்றி விசாரித்து, ஆளை காட்ட சொல்கிறான். சுந்தரும் ஒருநாள் அவள் வரும் போது தூரத்தில் இருந்து அடையாளம் காட்ட.

மச்சான்… பிஃகர் சூப்பரா இருக்குடா, ஒரே சந்துல இருக்க, கரெக்ட் பண்ணிக்க வேண்டியது தானே.? ஏதாவது பிரச்சினைனாலும், யாராவது பிரச்சனை பண்ணினாலும், என்கிட்டே சொல்லு, நான் பார்த்துக்கறேன். என உசுப்பி விடவும், நிறைய நண்பர்கள் இவளை சூப்பரா இருக்காள்-னு சொன்னதை கேட்டதாலும், இவன் எதிரி குமார் நூல் விட்டதை நினைத்து பார்க்கவும். ராஜேஸ்வரி மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, அவள் மேல் காதல் வயப்படுகிறான்.

காதலை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல், “யோசிக்க”

நம்ம வீட்டு சந்திலேயே,அவள் தனியாக வெளியே வரும் சமயம் பார்த்து .தனது காதலை தெரிவித்து விடலாமா? அப்படி சொல்ல போகும்போது, ஒருவேளை நம்ம சந்தில் இருக்கிற மத்த குடித்தனக்காரர்கள் யாராவது இதை பார்த்திட்டு, வீட்டில் சொல்லிவிட்டால் பெரிய பிரச்சினை ஆகிவிடுமே,என்ன செய்வது? என பெருங்குழப்பத்துடன், அவனுக்குள்ளே கேள்வி கேட்டு,

இவன் நண்பன் ரமேஷ் செய்த அதே பாணியில், டீக்கடை வாசலில் நின்று இவள் பள்ளியை விட்டு வெளியே வந்ததும், சாலையிலேயே சொல்லிவிடலாம்., என முடிவோடு சென்று காத்திருக்க. பள்ளி முடிந்ததும் ராஜேஸ்வரி தனது தங்கையுடனே ஒன்றாக வீட்டுக்கு செல்ல வெளியே வருகிறாள். இதை கண்டதும், இப்போது வாய்ப்பில்லாமல் போகிறது.

வீட்டிலிருந்து அவள் வாசலில் குப்பைகள் கொட்ட வரும் போதோ, ஏதோ கடைகளுக்கும், தோழிகள் வீட்டுக்கும், தனியாக செல்லும் போதெல்லாம்

பின்னாடியே சென்று வலிய பேசுவதும். இதற்கு அவள் சட்டை செய்யாமல் போவதுமாக சில மாதங்களாகவே தொடர்கிறது. சுந்தர் தன்னை நேசிக்கிறான், என்பதை மட்டும் அவளால் யூகிக்க முடிகிறது.

ஒரு மாலை வேளையில்…

எப்படியும் இன்று சம்மதம் வாங்கியே ஆக வேண்டும் என்னும் முனைப்புடன் சுந்தர் ராஜேஸ்வரியின் வருகைக்காக வீட்டு சந்து முனையில் காத்திருந்தான்.

காத்திருந்ததும் வீண்போகவில்லை, இவள் தனக்காகவே வருகிறாள் என்பதையும் நம்பினான். வந்ததும் அவள் இவனை பார்த்து

ஹலோ… என சொன்னதும், (குழந்தைகளுக்கு எதிர்பாராமல் பலூடா ஐஸ்கிரீம் கிடைத்த உணர்வு)

பதிலுக்கு, இவனும்.

ஹலோ… நீ வருவேன்னு எனக்கு தெரியும் என்கிறான்.

எப்படி தெரியும்…?

தெரியும்…

எதுக்கு நான் வரணும்.

(நான் உன் பின்னாலயே சுத்துறேன். உன் சம்மதத்தை சொல்ல தான் என சொல்ல வருவதற்குள்) .

கையை காட்டு… என்கிறாள்.

லவ் லெட்டர் கொடுக்க தான் கையை நீட்ட சொல்கிறாளோ, என்னவோ என நினைத்து.( “தேகம் யாவும், தீயின் தாகம். தாகம் தீர நீ தான் மேகம்) – என மன பிராந்தியத்தில் இவன் தலைவர் கமல்ஹாசன் பாட ஆரம்பித்தார்.

அவள் உள்ளங்கையில் மூடி வைத்திருந்த ஒரு கயிற்றை காட்டியதும். தாலியை தான் கட்ட சொல்ல போறாளோ என 240 வோல்ட் மின்சாரம் பாய்ந்த உணர்வுடன் பயந்து

என்ன இது…? என்றான்.

இன்னிக்கு என்ன நாள்…?

(கேட்டதுக்கு பதில் சொல்லாமல், இவள் வேற, என்னென்னமோ கேட்குறாளே. என மனதில் முனுமுனுத்து)

தெரியல… என்றான்.

இன்னிக்கு…. ரக்க்ஷா பந்தன்.

அப்படின்னா…

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தற புனித நாள்…

இன்னும் புரியல…

புரியற மாதிரி சொல்லனும்னா, இந்த கயிற்றை, ஒரு பெண், ஒரு ஆணுக்கு கையில் கட்டி விட்டால், அவனுக்கு அவள் சகோதரி முறை ஆயிடுவாள்.

அது சரி… இது மார்வாடிங்க தான் செய்வாங்க, அதை… நீ ஏன் எனக்கு செய்ய போறே?

மார்வாடிங்க மட்டும் இல்லை, எந்த பெண் வேண்டுமானாலும், ஒரு சகோதரனுக்கு கட்டி விடலாம். – என்றதும்.

ர்ரா….. ஜி – (ராஜேஸ்வரி என்னும் முழு பெயரை, வீட்டினர் கூப்பிடுவது போல் ராஜி என்பதை தான் கோபமாகவும், அழுத்தியும், கத்தினான்). நான் உன் மேலே எவ்வளவு காதல் வெச்சிருக்கேன். எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?

உனக்கும் தெரியும்… ஆனால், தெரியாத மாதிரி நடிக்கிற. உன்னை பார்க்காமல், என்னால இருக்க முடியல ராஜி,

கொஞ்ச நாளாவே…. நீ ! தான் என் உலகம்னு,நினைக்க தோணுது. நீ! கிடைக்கலைன்னா… நான் செத்துருவேன் ராஜி, சத்தியமா செத்துருவேன். என உணர்ச்சி பொங்க பேசியதை கேட்டவள்.

இவன் தன் மீது இவ்வளவு காதல் வெச்சுருக்கானா. எவ்வளவு வீரியமாக இருக்கு., என மனம் இறங்கி சொல்கிறாள்

இந்த வருஷம் நான் பிளஸ் டூ எழுத போறேன். முக்கியமான பரிட்சை, அதனால வேற எதிலேயும் என்னால கவனம் செலுத்த முடியாது. வெயிட் பண்ணுங்க. நீங்க உண்மையாக என்னை விரும்புவதாக இருந்தால், நானே நேரடியாக வந்து சம்மதம் சொல்லும் வரையில் என்னை தொந்திரவு செய்ய கூடாது. என கூறிவிட்டு விருட்டென்று அவள் வீட்டிற்கு செல்கிறாள்.

இவள் சொல்வதும் சரியென, உணர்ந்தவன் மௌனித்து அந்த இடத்தை நகரும் முன், கீழேயிருந்த சிறு செங்கல்லை எடுத்து சுவற்றில் ஆர்டின் வரைந்து, அதன் உள்ளே இவன் பெயரையும், அவள் பெயரை சுருக்கி, “சுந்தர் ராஜ்” என எழுதி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவ்வப்போது… இருவரும் பார்த்துக்கொள்ளும் போது புன் முறுவலோடு நிறுத்திக்கொள்வதுமாக, நாட்கள் நகர்கிறது. அவளை பார்க்கும் போதெல்லாம் இவன் மனசுக்குள் கமல்ஹாசன் பாடிக்கொண்டே இருப்பார் “சுந்தரி நீயும், சுந்தரன் ஞானும், சேர்ந்திருந்தால் திருவோணம்” – என்று

சில மாதங்களுக்கு பின்னர், தோல்வியுற்ற பாடத்தை தேர்வெழுதி விட்டு, கல்லூரி சேரும் வரையில், தனது நண்பனின் யோசனையிலும், சிபாரிசிலும். கோடம்பாக்கத்திலுள்ள, ஒரு சீட்டு கம்பெனியில் வேலைக்கு செல்கிறான். அவளும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்து, நான்கு கல்லூரிக்கு விண்ணப்பம் செய்து,கடைசியில் கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்கிறாள்.

இவன் கோடம்பாக்கத்தில் வேலைக்கு சேர்ந்தது, இவளுக்கும், இவள் கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் சேர்ந்தது இவனுக்கும் தெரியாமல் தான் இருந்தது.

வேலைக்கு செல்வதாலும், சிறிது நாட்களாக நண்பனை பார்க்கமுடியாமல் இருந்த காரணத்தாலும், இன்று விடுப்பு எடுத்திருந்ததாலும், கச்சேரி சாலையில், உள்ள நண்பனை சந்திக்க அவனுடைய மளிகை ஸ்டோருக்கு சென்றிருந்தான். அப்போது,,, கல்லூரி செல்வதற்காக, கச்சேரி சாலையில், செல்வி சலூன் பஸ் ஸ்டாப்பில் வடபழனி வரை செல்லும்12பி பஸ் ஏறி கோடம்பாக்கத்தில் இறங்கி கொள்ள ராஜேஸ்வரி பஸ்ஸூக்காக காத்து நிற்பதை கவனித்து விட்டான்.

போய் பேசலாமா, வேண்டாமா, என ஒரு பதட்டம், நண்பனிடம் தான் காதலிக்கும் விஷயத்தையும், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் தனது காதலியையும்,காட்டுகிறான்.

மச்சி… இந்த பொண்ணை எனக்கு நல்லாவே தெரியும் டா, உங்க வீட்டு சந்தில் தான் இருக்குன்னு தெரியும். இவங்க வீட்டுக்கு மளிகை சாமான்களை நான் தான் சப்ளை செய்றேன். இவங்க என் கஸ்டமர் தான். இவங்க அப்பா bsnl ல வேலை செய்யுறார். இந்த பொண்ணு பிளஸ் டூ- ல, நல்ல மார்க் எடுத்திருக்கு

அப்ளிக்கேஷன் போட்ட எல்லா காலேஜ்லேயும் சீட் கிடைச்சும், இவள் பிரெண்ட் கோடம்பாக்கத்தில் மீனாட்சி காலேஜ் ல சேர்ந்திட்டாள்னு, இவளும் அங்கேயே தான் சேரணும்-னு, அடம்புடிச்சு சேர்ந்திட்டதாக, அவங்க அம்மா என் கிட்ட சொன்னாங்க.

ஆமா…அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணுதா ?

இல்லை…

ஓ… ஒன் சைடு லவ்வா…?

இல்லை…ஆனால் அப்படியும் வெச்சுக்கலாம்

என்னடா மச்சி புதிர் போடுற, விளக்கமா சொல்லு… – என கேட்க

சுந்தர் நடந்த விஷயங்களையும், அவள் காத்திருக்க சொன்ன விஷயத்தையும் சொல்ல.

மச்சி… இப்போ தான் காலேஜ் போக ஆரம்பிச்சுட்டா இல்ல, இப்போ திரும்பவும் போய் கேளு. கண்டிப்பா சம்மதிப்பாள் என நம்பிக்கை சொன்னான். இவன் சொன்னபடி நேரே பஸ் ஸடாப்பில் அவளை நோக்கி,சுந்தர் செல்வதற்குள், அவளது தோழியை யாரோ அவள் அருகில் வண்டியில் இறக்கிவிட்டதும், தோழிகள் இருவரும் புன்னகைத்து பேச ஆரம்பித்து, பஸ் வந்ததும் ஏறி சென்று விட்டனர்.

மறு நாள்…

தினமும் வேலைக்கு சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தவன். இன்றிலிருந்து,ராஜேஸ்வரி செல்லும் பேருந்திலேயே பயணிப்பது என முடிவெடுத்து, அவள் வருகைக்காக கச்சேரி சாலையில் உள்ள தனது நண்பனின் ஸ்டோர் வாசலில் காத்திருந்தான்.

இவன் மளிகை ஸ்டோர் வாசலில் நிற்பதை,கல்லூரி செல்ல, பஸ் பிடிக்க வீட்டில் இருந்து நடந்து வரும் போது தூரத்திலிருந்து பார்த்து விடுகிறாள். இவள் தன்னை பார்ப்பதை சுந்தரும் பார்க்கிறான்.

அவள் கண்டுக்காதது போல் 12 பி பஸ் ஸ்டாப்பில் போய் நிற்கிறாள்.சுந்தரும் அங்கே சென்று பேச முயல்கிறான். எடுத்த உடனேயே சம்மதம் சொல்லுன்னு கேட்கலாமா? இல்லை கொஞ்ச நேரம் ஏதாவது பேசிட்டு, கேட்கலாமா? ஒரே குழப்பத்துடன்

ஹலோ…ராஜி,

ஹலோ…சுந்தர்.

காலேஜ் சேர்ந்துட்டியா? எந்த காலேஜ்? – (என ஒன்றும் தெரியாதது போல் விசாரிக்கிறான்)

பதிலுக்கு அவள்

…ம்…மீனாட்சி காலேஜ்.

எது அந்த கோடம்பாக்கத்தில் இருக்கிறதா?

ஆமாம்…

சொல்லவே இல்லையே!

எதுக்கு சொல்லணும்?

இல்லை… தெரிஞ்சுக்கலாமேன்னு. என அசடு வழிகிறான்.

ஏன்… தெரிஞ்சு, என் பின்னாடியே வருவதற்கா?

வந்தால் என்ன?

எதுக்கு வரணும்.

நான் உன் காதலன், உனக்கு பாதுகாப்பா வரேன்.

பாதுக்காப்பா.. (சிரிக்கிறாள்).. எனக்கெதுக்கு நான் என்ன மந்திரியா?

பாதுக்காப்புன்னு இல்ல… நீ வேற அழகாயிருக்கீயா, குமார் மாதிரியான பயலுங்க, உன்னை கரெக்ட் பண்ணிட்டாங்கன்னா, காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போயிட கூடாது பாரு. அதுக்காக தான். – இதை கேட்டதும் கலகலவென சிரித்தாள்.

சரி… சரி… என் பிரெண்ட் வருகிறாள். அப்புறம் பேசுவோம் என நகர்ந்துக்கொள்ள, வழக்கம் போல் அவளது தோழியை யாரோ பஸ் ஸ்டாப்பில் இவள் அருகே விட்டு செல்கிறார்.அவர்கள் பேசிக்கொள்ள, இவன் மட்டும் பக்கத்தில் இருக்கும் செந்தில் ஐஸ் க்ரீம் கடையில், ப்ரூட் மிக்ஸர் வாங்கியதும், அவளிடம் வேண்டுமா என ஜாடை செய்ய, எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் பஸ் வந்ததும் ஏறிவிடுகிறாள். இவனும் அதே பஸ்ஸில் ஏறி பின் படி பக்கம் நின்று , அவளை பார்த்தபடியே வந்து, சிரித்த அழகையும் நினைத்து, கற்பனையில் மிதக்கிறான். கமல்ஹாசன் இந்த பஸ்சில் திரும்பவும் பாட வருகிறார். “வலையோசை கலகலவென, கவிதைகள் படிக்குது, குளு குளு தென்றல் காற்றும் வீசுது”.

கண்டக்டர் குரல் கொடுக்கிறார், தம்பி உன்னை தான் கொஞ்சம் முன்னாடி நகரு என்றதால் பாடல் முடிந்து போனது.

சுந்தர் மறுநாளும், தொடர்ந்து, எல்லா நாட்களும் பஸ் ஸ்டாப்பில் இவளுக்காக காத்திருப்பதும், வந்ததும்,பேசுவதும், தோழி வந்ததும் நகர்ந்து கொள்வதுமாக, இருக்க, இரண்டு மாதங்களுக்கு பிறகு தோழியும் கல்லூரிக்கு சென்று வர புதியதாக ஸ்கூட்டி வாங்கி விட்டதால்., ராஜியை அழைத்தாள். அதில் செல்ல ஏனோ இவள் தயங்கி மறுத்து.,வழக்கம் போல் பஸ்ஸில் செல்லவே. சுந்தருக்கும் இடையூறு குறைந்து, சுதந்திரம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.

சுந்தர் இன்று ராஜி யிடம் கோரிக்கை ஒன்று வைக்கிறான்.

இதோ…பார். ராஜி…

நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன், காதலிக்கிறேன்னு, உனக்கு நல்லாவே தெரியும். இன்னும் அதை நம்பலைன்னா, நான் என்ன பண்ணனும்னு சொல்லு, அதை செய்து காட்றேன். அதை விட்டுட்டு என்னை பைத்தியக்காரன் மாதிரி இப்படி அலைய விடாதே. கொஞ்ச நாள் பொறுத்தக்க, நான் முக்கியமான பரிட்சை எழுதணும், தொந்திரவு செய்யாதே, நானே சொல்றேன்னு, சொன்னே.

நானும்… நீ சொன்னதை மதிச்சு, அமைதியா தானே இருந்து வந்தேன், இன்னும் என்ன? இன்னும் எவ்வளவு நாள் தான் காத்திட்டு இருக்கிறது

நீ..இல்லாமல் என்னால வாழ முடியாது, நான் செத்துருவேன். உன் பதிலை இப்போ கூட வேண்டாம் நாளைக்கே சொல்லு.

சம்மதம்-னா, நாளைக்கு பச்சை கலர் சுடிதார் போட்டுட்டு வா, நீ ! என் காதலை ஏத்துக்கிட்டதா உணர்ந்துக்குறேன். என்று சொல்லி விட்டு எங்கோ நடந்து போகிறான்.

மறுநாள்…

காலை தனது நண்பன் ஸ்டோர் வாசலில் காத்து நின்றான். இவன் எதிர்பார்த்தபடி கல்லூரி செல்ல, பஸ் ஸ்டாப்புக்கு, நடந்து வருகிறாள். இரண்டு மாத கோரிக்கை,இன்று நிறைவேறியது. ராஜேஸ்வரி என்னும் ராஜி, சுந்தரிடம் தனது காதலையும் வெளிப்படுத்தும் விதமாக, அவன் சொன்னது போல் பச்சை சுடிதாரில் வருகிறாள்.

இவன் துள்ளி குதிக்காத குறையாக, மகிழ்ச்சியுடன். திளைக்க (கமல்ஹாசன் பாடி செல்கிறார். “அந்தி மழை மேகம், தங்க மழை தூவும்,திருநாளாம்”.)

சம்மதம் சொன்னது போல் பச்சை கலர் சுடிதார் அணிந்து வந்து, பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பதால்.சுந்தர் தனது நண்பர் ஸ்டோரில் ‘டெய்ரி மில்க்’ – சாக்லெட் ஒன்று வாங்கி கொண்டு போய் அவளிடம் நீட்டுகிறான், அவளும் புன்னகைத்து அதை வாங்கி, கவரை பிரித்து, ஒரு கடி, கடித்து, அவனிடம் தருகிறாள், அவனும் தன் பங்குக்கு ஒரு கடி, கடித்து அவளிடம் தந்து காதலையும் பரிமாறிக்கொண்டனர்.

வருடம் 1991

பனகல் பார்க், எலியட்ஸ் பீச், கூட்டம் குறைவாக வரும் சபையர் தியேட்டர் கேசவ பெருமாள் கோயில், இப்படி பல இடங்களுக்கு சென்று, காதலை பலமாக்கிக்கொண்டனர்.

ஒருமுறை உனக்கு எந்த நடிகரை பிடிக்கும் என சுந்தரிடம் ராஜி கேட்க, கமல் என்கிறான். பதிலுக்கு ஐயோ எனக்கும். கமல்-ன்னா, உயிர் என்கிறாள்.

இரு… தலைவர் படம் வரும்போது நாம ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம். என்று சொன்ன சில நாட்களில்.

“குணா” – தன் தலைவர் படம் ரிலீசாகிறது. இம்முறை ஸ்டார், பேனர், இப்படி எதுவும் கட்ட போகாமல், தனது காதலியை படம் பார்க்க அழைத்து ச்செல்கிறான். தியேட்டரில் இவள் அப்பாவின் நண்பரும், அவரது குடும்பமும் படம் பார்க்க வந்திருந்தனர். இவளை அடையாளமும் கண்டும் விட்டனர். ஆனால் இவர்களை ராஜி காதல் போதையால் கவனிக்கவில்லை.

இவ்விஷயம் அவளின் தந்தைக்கு தெரியப்படுத்தினார்., அவரது நண்பர்.

வீட்டில், அவசரப்பட வேண்டாம், வயசு பொண்ணு, பக்குவமாக கேட்டுக்கலாம். என அமைதியாய் இருந்து விடுகின்றனர்.

சுந்தர் நேரில் பேசுவது பத்தாது, என்பது போல் குணா படத்தில் வருவது மாதிரி தலைவர் காதலியை கூடவே வைத்துக்கொண்டு, தனது மானசீக காதலிக்கு காதல் கடிதம் கொடுப்பது போல். சுந்தரும் ராஜேஸ்வரிக்கு, கடிதம் எழுதுகிறான் “கண்மணி அன்போடு காதலன், நான்… நான்” – சுந்தர். கொடுத்ததை பொக்கிஷமாக தனது புத்தக பையில் பத்திரப்படுத்தி வைத்திருக்க, ஒரு நாள் இவளது சகோதரி, தனது அக்காள் பேக்கில் பேனாவோ, எதுவோ எடுக்கும் போது.சுந்தர் எழுதிக்கொடுத்த கடிதத்தை கண்டு, தனது பெற்றோரிடம் தந்து விட, பெரிய பூகம்பமே வெடிக்கிறது. இவ்விஷயத்தை சுந்தர் வீட்டில் ராஜியின் பெற்றோர்கள், தெரிவித்து, சண்டையிட, அவனது வீட்டிலும் கபளீகரம் ஆகிறது. இரண்டு பேர் வீட்டிலும், தத்தமது பிள்ளைகளுக்கு, இருவரும் சந்தித்துக்கொள்ளாதவாறு முட்டுக்கட்டை ஏற்படுத்தினர்.

சில நாட்களில் ராஜி குடும்பத்தினர் வீடு மாற்றி எங்கோ சென்று விட்டனர். இருவரும் தொடர்புக்கொள்ள முடியவில்லை.

சில நாட்களுக்கு பிறகு…

ராஜி சுந்தரை இன்னும் மறக்காமல் இருப்பதால்,கல்லூரியிலிருந்து நிறுத்தி விட்டு, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவளும் சுந்தரை தான் திருமணம் செய்வேன் என சொல்வதால், சாதி, அந்தஸ்தை காரணம் காட்டி, கடுமையாக எதிர்த்து, ஒரு மாப்பிள்ளையை நிச்சயித்து, ஆறு மாதத்துக்கு பின்னர் திருமணம் என ஏற்பாடாகிறது.

சுந்தரும், ராஜேஸ்வரி படிக்கும் கல்லூரி, பல பஸ் ஸ்டாப்,என அலைந்தும், அவளது தோழிகளிடம் கேட்டும் அவள் இருக்கும் இடம் தெரியாமல் போனதால் பிரம்மை பிடித்தவன் போல் ஆகி விடுகிறான்.

ராஜியை மறக்க முடியாமலும், பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தாலும், இருந்தவன். வீட்டில் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு, குணா படத்தில் அவனது தலைவர், மலையிலிருந்து குதிப்பது போல். இவனும் கோடம்பாக்கத்திலிருந்து புறநகர் செல்லும் ஒரு மின்சார ரயிலில் ஏறி, ஒடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து ராஜீ… என கத்தியபடி குதித்து தற்கொலை செய்துக்கொள்கிறான்.

இந்த விஷயம், நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் வர. ராஜியும் இதை அறிந்து பேச்சும், மூச்சும் இல்லாமல் வீழ்ந்து, வீட்டினர் முயற்சியால் காப்பாற்றப்படுகிறாள்.

சுந்தர் ஞாபகம் வந்துக்கொண்டே இருப்பதால், இனி கமல் படங்களும், பாடல்களும் பார்க்கவும், கேட்கவும் போவதில்லை,என முடிவெடுத்து, மனசுக்குள் அவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்.

உன் உடல் மட்டும்,என்னை விட்டு, பிரிந்தது, எனது உயிர் எப்போதும் உன்னோடு தான் தொடர்கிறது.

ஒரு மாதம் அழுதாள், அடுத்த மாதமே சித்தார்ததின் கரம் பிடித்தாள்.

எதோ காலிங் பெல் சத்தம் கேட்கவே, திடுக்கிட்டு எழுந்து, கதவை திறந்தாள். இளைய மகன் பள்ளியில் இருந்து வந்து,

அம்மாவை கட்டி அணைத்தான். மனசு லேசாகியது. இப்போது ராஜி என்னும் ராஜேஸ்வரிக்கு.

Print Friendly, PDF & Email

1 thought on “கண்மணி அன்போடு காதலன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *