கசப்பான காதல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 7,170 
 
 

வர்ஷினி நிர்ச்சலனமாய் இருந்தாள். ஆயிரம் முறை சொன்னாலும் என்னை எதுவும் பாதிக்காது என்னும் விதமாய் இருந்தாள். அந்த நிர்ச்சலனத்தில் அடுத்தவர் பற்றிய அலட்சியம் தெரியவில்லை; தன்னைப் பற்றிய அக்கறை தெரிந்தது. எடுத்தெறியும் விதமான அகம்பாவம் தெரியவில்லை; என்னைக் குறித்து யோசித்துவிட்டேன் என்ற அமைதி தெரிந்தது.

“நீங்க கடைசியா ஒரு சான்ஸ் கொடுக்கக்கூடாதா? உங்க நன்மைக்காகவும்தான் இதைச் சொல்கிறேன்” என்று வழக்கறிஞர் சுதர்சன் சொன்னபோது அவரைச் சற்று இகழ்ச்சியுடன் பார்த்தாள் வர்ஷினி.

“உங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி சார். உங்களுக்கு என் அப்பா வயசு இருக்கும். இதில் நான் அவசரப்படுவதாகவோ ‘விமன்ஸ் லிப்’ என்று பொய்யாய் அலைவதாகவோ நீங்கள் நினைத்தால், உங்கள் வயசுக்கு மரியாதை கொடுத்து ‘ஐயாம் ஸாரி’ என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனக்காக நீங்கள் உதவி செய்ய நினைத்தால் அவரை எப்படியாவது இந்த விவாகரத்துக்கு சம்மதிக்கச் செய்யுங்க ஸார. நான் கிளம்பறேன்.” என்று கைகுவித்து எழுந்தாள்.

இந்த விவாகரத்து குறித்து தனக்கு ஒரு துளியும் சந்தோஷமில்லை என்பதை வர்ஷினியின் தோற்றம் தெளிவாக்கிற்று. தனக்குச் சுதந்திரம் வேண்டும்; தன் விருப்பங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்ற சராசரி ஆசைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு ஏக்கம் அவளிடம் தெரிந்தது. அந்த ஏக்கத்தினூடே இந்த விவாகரத்து வாங்குதல் அவசியமானதாக வர்ஷினிக்குத் தோன்றியதே என்பதுதான் வழக்கறிஞர் சுதர்சனின் விசாரத்துக்கு உரிய பொருளாயிற்று.

“ஏன் வர்ஷினி அடம் பிடிக்கிறாய்? கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகக்கூடாதா?” என்று சுதர்சன் கேட்டும் பார்த்தார். வர்ஷினி பொறுமையாகவும் நிதானமாகவும் “கொஞ்சம் என்றால் என்ன சுதர்சன் சார்?” என்று கேட்டாள். அதன் ஆழத்தையும், அகலத்தையும், கனத்தையும் தனக்குள் வாங்கிக்கொண்ட சுதர்சன், இனி மேற்கொண்டு பேசுவதில் பயனில்லை என்று முடிவு செய்தார்.

மறுநாள் காலை வர்ஷினியின் கணவன் கணேசன் வந்தபோது, “நீங்கள் பிரிவது தவிர வேறு வழியில்லை” என்று சொன்னார். மேலும், “நான் நிறையப் பேசிப் பார்த்துவிட்டேன்… அவள் உறுதியாய் இருக்கிறாள். சண்டை போடாமல் பிரிந்துகொள்; புழுதிவாரி இறைத்துக் கொள்வதில் பயன் இல்லை; வேறு எதுவும் செய்யாவிட்டாலும், அவளை கோர்ட்டுக்கு அலைக்கழிக்காதே, அவளை விட்டுவிடு…” என்று எடுத்துச் சொன்னார்.

சுதர்சன் இப்படிச் சொல்லவும், கடைசியாய் வைத்திருந்த நம்பிக்கை இழைகளும் அறுந்துபோய் கணேசன் விரக்தியடைந்தான். “யோசிக்கிறேன் சார், வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன்…” என்று சொல்லிவிட்டுப் போனான்.

வர்ஷினி-கணேசன் விவாகரத்து ஏன்? விருப்பப்பட்டு விலகிப் போகாமல், நிர்ப்பந்தத்தில் விலகிப்போக வர்ஷினி முடிவெடுத்தது ஏன்? அதைத் தடுக்க முயன்றும், தன்னால் அது இயலாது என்று தெரிந்து, விரக்தியுடன் தற்போது கணேசன் திரும்பக் காரணம் என்ன? அவர்கள் பிரிய வர்ஷினி சொல்லும் காரணம்தான் என்ன?

வர்ஷினி பார்க்க இனிமையாய் இருந்தாள். ஆடம்பரமில்லாது தூய்மையாய் உடுத்தி, ரம்மியமாய் இருந்தாள். ‘தாட் பூட்’ என்று அலட்டாமல், அளவாய், அழகாய், பிழையில்லாது ஆங்கிலம் பேசினாள். மரியாதையாய் பழகினாள். தனியார் பள்ளியில் ஆங்கில டீச்சராக மாதம் பத்தாயிரம் சம்பாதித்தாள். அடிப்படைக் கல்வியாய் பி.எஸ்.ஸி படித்திருந்த வர்ஷினி, இன்று படிப்படியாய் முன்னேறி எம்.பில் படித்துக் கொண்டிருக்கிறாள். அதுபோக, மாலை வேளையில் இரண்டு ‘பாட்ச்’ என்று வைத்து ட்யூஷன் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

மொத்தத்தில் அந்த வீட்டில் வர்ஷினியின் வருமானம் மாதம் இருபதாயிரம் ரூபாய். அதற்கென்ன இப்போது என்று கேட்பீர்களானால் – அங்குதான் பிரச்னையே தொடங்கியது.

வர்ஷினி-கணேசன் பெற்றோர்களால் சபிக்கப்பட்டு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். வர்ஷினி பிஎஸ்ஸி படிக்கையில் கணேசன் பிஏ படித்தான். அதற்குப்பின் வர்ஷினி தொடர்ந்து எம்எஸ்ஸி படிக்கவும், கணேசன் வேலைக்குப் போகிறேன் என்று தனியார் கம்பெனி ஒன்றைத் தேடி ஓடினான். எட்டாயிரம் ரூபாய் சம்பளம். “இதை வைத்துக்கொண்டு நாம் கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த முடியாது… எனக்கும் வேலை சீக்கிரம் கிடைக்கும், பொறுங்கள்” என்று கணேசனை அமைதிப் படுத்தினாள்.

டீச்சராய் வேலை கிடைக்கவும், “நீங்க இன்னும் மேற்கொண்டு நிறையப் படியுங்கள்” என்றாள். இதோ, அதோ என்று கணேசனும் போக்குக் காட்டினான். ஆனால் வர்ஷினியாலும் தன் திருமணத்தைத் தள்ளிப்போட முடியவில்லை. தான் ஏழை என்பதால் தன்னை வர்ஷினி ஒதுக்குகிறாளோ என்ற சந்தேகம் கணேசனுக்கு வந்தது. அவனின் சந்தேகம் வலுக்கக் கூடாது; தான் அவ்விதம் இல்லை என்பதை வர்ஷினி எத்தனை முயற்சி செய்தும் அவனுக்குப் புரியவைக்க முடியவில்லை. தன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தாது, கணேசனிடம் தன் எண்ணத்தைப் புரியவைப்பது இனி இயலாது என்று வர்ஷினி உணர்ந்தாள்.

“எதை நம்பிப் போகிறாய்?” என்று வீடு கேட்டபோது, “என்னை நம்பி” என்றே அவளால் பதில் சொல்ல முடிந்தது. வீடுகள் ஒதுக்க, வாழ்க்கை ஒரு சவால், சபதம் என்று வர்ஷினி முடிவு செய்தாள். ஆனால் அவள் மட்டுமே அப்படி முடிவு செய்ததுதான் துரதிர்ஷ்டம்…

கணேசன் தான் படித்த பிஏவில் சந்தோஷப்பட்டான். எட்டாயிரம் ரூபாயில் நிறைவடைந்தான். ‘நீ நிறைய சம்பாதிப்பதில் எனக்கு ஒன்றும் ‘ஈகோ’ இல்லையென்று சும்மா இருந்தான். வாழ்க்கையில் எது விரக்தியை ஏற்படுத்துமோ இல்லையோ, தேக்கநிலை என்பது மட்டும் கண்டிப்பாக விரக்தியை தெளிவாய் ஏற்படுத்தும்.

நினைத்த போதெல்லாம் லீவு, அது குறித்து கேட்கப்பட்டால் வேலையை விடுதல், கம்பெனி மாற்றுதல்… அடுத்த மாறுதல் கிடைக்கும்வரை லஜ்ஜையற்று வீட்டில் வெறுமனே சோம்பேறித்தனமாய் படுத்திருத்தல்; வர்ஷினியிடம் செலவுக்கு என்று அவ்வப்போது நூறு, இருநூறு என்று பணம் கேட்டல்… இவைகள் வர்ஷினியை மனசு விடச்செய்தது.

பெண் எட்டரை மணிக்கு அரக்கப் பறக்க வேலைக்குக் கிளம்பும் வேளையில், நிதானமாய் எழுந்து சோம்பல் முறித்து, பல் தேய்த்து, லுங்கியை வழித்துக்கொண்டு காபிக்கு காத்து நிற்கும் எந்த ஆண் பிள்ளையையும், எந்தப் பெண்ணாலும், சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணாலும், தாங்கிக் கொள்ள முடியாது. வர்ஷினிக்கும் இந்தத் துக்கம் நிகழ்ந்தது.

‘மடிப்புக் கலையாத சட்டை, சரியாய் சீவப்பட்ட தலை, தினமும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட முகச்சவரம், அழகான புன்னகை இவற்றோடு காதலிக்கும் ஒருவன், ஒருமுறைக்கு பலமுறை சொல்லும் ‘ஐ லவ் யூ’ தரும் சந்தோஷம்… இதற்கும் கல்யாணத்துக்குப் பிறகு அவனோடு குடும்பம் நடத்துவதற்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளி ஏராளம்.

குடும்பம் என்பது வெறும் ‘ஐ லவ் யூ’ போதை அல்ல. இன்றைய சூழ்நிலையில் குடும்பம் என்பது வருமானம, வசதி, முயற்சி, போட்டி, தீவிர முனைப்பு, சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இருக்கக்கூடிய முன்னேற்றத்தின் தரம் – இவை வாழ்க்கை.

சரி, இவைதான் வாழ்க்கையா? அன்பும் காதலும் வாழ்க்கை இல்லையா? நேசமும், நட்பும் வாழ்க்கை இல்லையா? பசிக்கிறவனால் பகவானை மட்டுமல்ல காதலையும் கட்டாயம் காட்டமுடியாது. அப்படியென்றால் ஏழை காதலிக்கக்கூடாதா? ஏழை காதலிக்கலாம். ஆனால் சோம்பேறி காதலிக்கக் கூடாது. காதலிக்கவும் முடியாது.

ஏழ்மையை விரட்டும் முயற்சியோ, உத்வேகமோ கிஞ்சித்தும் இல்லாது, ‘நான் ஏழை, அதனால்தானே என்னை வெறுக்கிறாய்?’ என்று வெற்றாய் புலம்புபவன் மேல் வெறுப்பும், வேதனையும் வருமேயன்றி, இரக்கம் எப்படி வரமுடியும்? எப்படி காதலாகி கசிந்துருக முடியும்?

கஞ்சியானாலும் பரவாயில்லை என்பது, காசுக்காய் அலைந்து களைத்தவனோடு சொல்லத் தோன்றுமே அல்லாது, காலாட்டி உட்கார்ந்திருப்பவனிடம் சொல்லத் தோன்றாது.

‘காலம் நமக்குத் தோழன்; காற்றும் மழையும் நண்பன்’ இதுஒரு சினிமாப் பாடல். காற்றும், மழையும் நண்பன் என்று வாழ்தல் சாத்தியமா? இப்படி நடைமுறைக்கு ஏற்காத செய்திகளை கலர் கலராய் சொல்வது எத்தனை பெரிய அழிவு? எத்தனை பெரிய சமுதாய வீழ்ச்சிக்கு வித்து?

கணேசன் காதலித்தது தவறில்லை. எட்டாயிரம் மட்டும் சம்பாதித்தது குற்றமில்லை. மனைவி அதிகம் சம்பாதித்தால் என்ன? என்று நினைத்தது பிழையில்லை. பின் தவறு எங்கே ஏற்பட்டது? ‘ஓடு, ஓடு’ என்று மூச்சிரைக்க ஓடினாலும்; போட்டி, போட்டி என்று அன்றாடம் பெருகிக்கொண்டு வரும் பந்தயம் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், வெறும் பிஏ என்ற தன் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளும் முயற்சியோ, உத்வேகமோ ஒரு துளியும் இல்லாமல், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு, தன் குடும்பத்தையும் ஏமாற்றி, வர்ஷினியையும் சிதைத்து விட்டதுதான் அவனுடைய மன்னிக்க முடியாத தவறாகப் போய்விட்டது.

‘நின்று ஜெயிப்போம்’ என்று சொல்லிவந்த தன் சவாலையும், சபதத்தையும் மதிக்கத் தெரியாதவனாய் கணேசன் நடந்து கொண்டதுதான்; அவர்களிடையே நிறைந்திருந்த காதல், நேசம், காமம், நட்பு என்ற சகலவிதமான உணர்ச்சிப் பின்னலையும் பிரித்துப் போட்டது. ஊர் சிரிக்கச் செய்து விட்டானே என்ற உண்மை ஊமையாய் வலித்தது.

இரண்டு, மூன்று என்று வருடங்கள் ஓடியும், தொடங்கிய இடத்திலேயே கணேசன் நின்றிருக்க, வர்ஷினி தான் மட்டும் மூச்சிரைக்க ஓடி திரும்பிப் பார்க்கையில், இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளி; அதுவரை ஓடும்போது இருந்த தெம்பையும், தைரியத்தையும் குலைத்தது. அடுத்தவர் தன் வாழ்க்கை கண்டு நகைப்பது போய், தன் முடிவு பற்றியும், தான் தேர்ந்தெடுத்ததில் செய்த தவறு பற்றியும் அவளின் அடிமனமே கிடந்து சிரிக்கத் தொடங்கியது. அந்தச் சிரிப்பு எழுப்பிய கேள்வியில் பிறந்ததுதான் ‘இனி இவனிடமிருந்து பிரிந்திருப்பது’ என்ற வர்ஷினியின் இன்றைய கசப்பான முடிவு.

வர்ஷினி சினிமாக் கதாநாயகி அல்ல. ஏழையை மணந்து அவன் சோம்பலைச் சுமந்தாலும், காதல் மாறாது வாழும் கனவுப் பெண் அல்ல. லட்சியமும், எதிர்பார்ப்பும், பணம் குறித்து அவசியமாகவும், அளவாகவும் திட்டமிட்டு ஆசைப்படும் ஒரு யதார்த்தவாதி. அந்த யதார்த்தவாதிக்கு கணேசன் போன்ற ஒரு முயற்சியற்றவன் கணவன் என்று ஆனால், அந்த வாழ்க்கையில் ‘மன’முறிவும், ‘மண’முறிவும் ஏற்படுவதை யாரும் தடுக்க முடியாது.

காதல் என்றால் என்ன என்று சுற்றிச்சுற்றி கேள்வி கேட்பீர்களானால், வர்ஷினியும் அவள் வாழ்க்கையும் நமக்குச் சொல்லித் தந்தது இதுதான்.

காதல் என்பது எதிர்பார்ப்பு இல்லாத நேசம் இல்லை; காதல் என்பது பொருளாதாரம் பற்றிய பிரச்னை இல்லாத உணர்வு இல்லை; காதல் என்பது தன்னை மறந்து சுயநலமின்றி அடுத்தவர் மேல் வைக்கும் அன்பு இல்லை; காதல் என்பது, தான் உயரத் துணை தேடுதல், அவர் உயரத் துணை நிற்றல்.

இந்த இரண்டில் எது அடிபட்டாலும், அங்கு காதல் கொச்சையாகும். அந்தக் காதலால் கட்டப்பட்ட குடும்பம் கலையும். அது காதலித்தோருக்குள்ளேயே சபித்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தைத் தரும்.

வரிஷினி-கணேசன் சேர்ந்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்லவில்லை. நம்மில் யாரேனும் கணேசன் போல் நசுங்கிவிடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் இதைச் சொல்கிறேன்…

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *