ஓரு ஒற்றனின் காதல்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 21,006 
 
 

வெனிஸ்,இத்தாலி—2007 பெப்ருவரி

வெனிஸ் நகரக் கால்வாயில் உல்லாசப் பிரயாணம் செய்ய வந்திருந்தவர்களுடன், ராகவனும் அவனது சில சினேகிதர்களும் வந்;திருந்தார்கள். கல கலவென்ற பிரயாணிகளின் சந்தடியில வெனிஸ்நகரக் கால்வாய்களில் பல தரப்பட்ட, அழகிய வேலைப் பாடுகளுள்ள படகுகளான ‘கொண்டோலாக்கள்’ நகர்ந்து கொண்டிருந்தன.ராகவனுக்குத் தனக்கு முன்னால் வந்திருந்த குடும்பத்தைக் கண்டதும் ஒரு கணம் தனக்குத் தெரிந்த யாரோ அங்கு அவர்களுடன் வந்திருப்பது போன்ற உணர்வு வந்தது.

பல நாடுகளைச் சேர்ந்த பல மொழிகளைப் பேசும் அந்த இடத்தில். ஆங்கிலம் பேசியவர்களைக் கண்டதும் தன்னையறியாமல் அவன் நிமிர்ந்து பார்த்தான். அதே வேளையில், அந்தக் குடும்பத்தின் தலைவனாகத்தெரிந்த, நன்கு உயர்ந்து வளர்ந்த ஒரு மனிதன் தனது குடும்பத்தினர் வசதியாக உட்காரச் சொல்லிக் கொண்டு தலை நிமிர்ந்தபோது, ராகவனில் அவன் பார்வை மோதியது.. இருவர் கண்களும் ஒருவினாடி ஆச்சரியத்தில் விரிந்தததை ராகவன் கவனிக்கத் தவறவில்லை.

‘ மார்க் பிளிஸ் அந்தப் பெட்டியை என்னிடம் கொடு’ குடும்பத்துத் தலைவி மாதிரித் தெரிந்த அந்தப் பெண் அவனைக் கேட்டதும் அவன் பார்வையை,ராகவனிலிருந்து திருப்பிக் கொண்டான்.

மார்க் என்ற இவனை எனக்கு நன்றாகத் தெரியுமே, ராகவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

மார்க்? மார்க்? இவனின் பெயர் மார்க்?

அச்செடுத்த பிரதி மாதிரி, ஒரு காலத்தில் ராகவனுக்குத் தெரிந்த டேமியன் வில்லியம் என்ற ஆங்கிலேயன் மாதியே இவனும் இருக்கிறானே?

இந்த உலகத்தில் ஒருத்தரைப்போல் ஏழுபேர் இருப்பதாகச் சொல்வார்கள்- அப்படித்தான் இந்த ‘மார்க்’ என்பவனும் டேமியன் மாதிரி இருக்கிறானா, டேமியன் பொன்னிறத்தலையும் ஆழ்கடலை ஞாபகப்படுத்தும் நீலக் கண்களுடனுமிருப்பான்.கலகலவென்று பழகுவான். ஆனால், இப்போது மார்க் என்றழைக்கப் பட்டவன் கறுப்புத் தலையுடனிருந்தான்.தலை சானையாக நரைத்துக் கொண்டிருந்தது. ராகவனால் அவன்pன் கண்களை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை.

அவனது குழப்பம் அவனுடன் வந்த சினேகிதர்களின் ஆரவாரத்தில் மறைந்து விட்டது.

வேலை விடயமான மகாநாட்டுக்கு இத்தாலியிலுள்ள மிலான் நகருக்கு லண்டனிலிருந்து வந்தபோது,ராகவனுக்கு வெனிஸ் நகருக்குப் போகவேண்டும் என்ற யோசனை எதுவுமிருக்கவில்லை. ஆனால் அவனுடன் வந்த சில சினேகிதர்கள் ‘ஆபிஸ் விடயமாகவந்திருக்கிறோம் போரடிக்கும் மகாநாட்டில் சில நாட்களைக் கழித்தாயிற்று.லண்டன் திரும்பமுதல் ஒன்றிரண்டு நாட்கள் ரோம், வெனிஸ் என்று சுற்றிப் பார்த்தால் என்ன?’ என்று தங்களுக்குள் விவாதித்தார்கள்.

அவர்களிற் பெரும்பாலோர்கள் இளைஞர்கள். ராகவனும் மற்ற இருவரும் குடும்பஸ்தர்கள். லண்டனுக்குப் போன் ;பண்ணி,வீட்டில் ‘பெர்மிஷன்’ எடுக்கத் தேவையானவர்கள்.

ராகவன் வீட்டுக்குப் போன்பண்ணியதும் அவனின் மகன்கள் வில்லியமும் விஷ்ணுவும் மறுதலிப்பு ஒன்றும் சொல்லவில்லை.
‘ என்ஜோய் டாடி, ஆனால் அங்கெல்லாம் பிக்பாக்கெட்காரர் மிகக் கெட்டிக்காரர்கள்.கவனமாக இருக்க வேணும்’ எனறு தகப்பனுக்குப் புத்தி சொன்னார்கள்;.

மிலானிருந்து,ட்;ரெயினில் வெனிஸ் போய்க் கொண்டிருந்தபோது, அவனின் மறைந்து விட்ட மனைவி சித்ரா தனது முதற்காதல் டேமியன் என்பவனை அவ்விடத்தில் 1984ம் ஆண்டு சந்தித்த கதையை அவனுக்குச் சொன்னது ஞாபகம் வந்தது.அதை இப்போது நினைத்ததும்; அவனுக்கு மனதுக்குள் ஏதோ செய்கிறது.. சித்ராவுயுடன் அவன் வாழ்ந்தகாலத்தின் இனிய நினைவுகளுக்குள் அவளின் பழைய காதலனின் நினைவுகளை ஏன் எடுக்கவேண்டும்? அவன் தன்னைத் தானே கடிந்துகொண்டான்.

வெனிஸ் நகர்!

சித்ராவின் வாழ்க்கையில் முக்கியமான இத்தாலிய நகர்.இத்தாலியின் வடகிழக்கில் உள்ள நூற்றிப் பதினேழு சிறுதீவுகளைப் பாலங்களால் இணைத்தும் கால்வாய்களால் தொடுத்து, ஒரு தெய்வீக அழகைத் தரும் கால்வாய் நகர்.

உலகிலுள்ள பல நாடுகளிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான உல்லாசப் பிரயாணிகள்,பெரும்பாலும் காதலர்கள், வெனிஸ் நகரின் ‘.கொண்டோலா’ என்றழைக்கப்படும் அழகிய படகுகளில் ஒருத்தரை ஒருத்தர் அணைத்துக்கொண்டு செல்வதைப் பார்க்கும்போது, சித்ராவும் அன்றொருநாள் தனது காதலனான, டேமியனை அணைத்தபடி சென்றிருப்பாள் என்ற உணர்வு வந்ததும் அவனுக்கு அந்த நினைவைத் தன் மனதிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும்போலிருந்தது. வெனிஸ் நகரின் கவர்ச்சியில் பழைய நினைவுகள் அவனையுமறியாமல் வருவது அவனுக்குத் தர்மசங்கடமாகவிருக்கிறது.

ராகவன் பெருமூச்சுவிடுகிறான்.இந்த அழகிய நகரின் மாயையான ஒருதோற்றத்தில் இளம் மனதில் காதல் வருவதைத் தடுக்கமுடியாது என்பதை நாற்பது வயது தாண்டிய அவனது முதிர்ச்சி அறிவுரை சொல்கிறது.

சித்ராவை அவன் திருமணம் செய்த நாட்களில்,’ உன்னை நான் வெனிசுக்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன்’ என்றாள். அது ராகவனுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.அவள் தனது முதற்காதலனை அங்கு சந்தித்ததை இன்னொரு தரம் ஞாபகப்படுத்த விரும்புகிறாளா என்று ராகவனுக்குப் புரியவில்லை. ஆனாலும், ஏதோ சாட்டுப் போக்குச் சொல்லி அந்த மாதிரி சம்பாஷணைகளை ஒதுக்கிவிட்டான்.

அவள் முதற்தரம் இத்தாலிக்கு வந்த கால கட்டத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்யும் நல்ல சினேகிதர்கள். சித்ராவின்அளப்பரிய அழகுத்தன்மைகளுக்கப்பால் அவளடைய தாய்மையான அன்ப அவனைக் கவர்ந்தது. கள்ளங்கபடமற்ற நேர்மையான அவளின் அன்பில் அவன் தன்னையிழந்த விட்டதை அவள் கவனிக்கவில்லை என்பதும் அவனுக்குத் தெரியும்.

அவளும் அவள் குடும்பத்தினரும் அவனில் வைத்திருக்கும் பாசத்தைத் தாண்டி அவன் வேலி பாயத் தயாராகவில்லை. இலங்கையில் தமிழனாகப் பிறந்த பாவத்தால் அவன் அனுபவித்துக் கொண்டிருந்த துன்பம்,அக்கால கட்டத்தில்அவனை ஒரு ‘ஞானி’ ஆக்கியிருந்தது.தன்னை ஒரு ‘நல்ல’ சினேகிதனாகச் சித்ரா நடத்துவதை அவன் அறிவான்.

அவள் தனது கள்ளங் கபடமற்ற போக்கால்,அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனாலும் சித்ராவின் தாயான ஷோபனா, சித்ராவைப் பற்றிய விடயத்தில்,ராகவனை முழுக்கப்புரிந்து கொண்டவள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.ராகவனின் கண்ணியமான போக்கும் அவன் சித்ராவில் வைத்திருக்கும் காதலையும் மிக நன்றாக அவள் புரிந்திருந்தாள்.

‘ராகவன், நீயும் சித்ராவும் திருமணம் செய்தால் நான் மிகவும் சந்தோசப் படுவேன்.’ தனது மகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்ற அந்தத் தாயின் வேண்டுகோள் அவனுக்கு ஆச்சரியம் தரவில்லை.ஏனென்றால் அவள் ராகவனை மிக மிக அன்புடன் வரவேற்பதும் சித்ராவுடன் அவன் பழகுவதை ஷோபனா மகிழ்ச்சியுடன் அவதானிப்பதையும் அவன் தெரிந்து வைத்திருந்தான்.சித்ராவும் அவள் தங்கை ஆரதியும் அவனைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக மதித்ததும் அவனுக்குத் தெரியும்

சித்ராவின் தாய்,ஷோபனா கிழக்கு ஆபிரிக்காவிலிந்து லண்டனுக்கு வந்த இந்திய பரம்பரையைச் சேர்ந்ததவள். படிக்கப் போன இடத்தில்,இனவாதத்துக்கு எதிரான ஊர்வலம் ஒன்றில் தன்னுடன் இணைந்த சக மாணவனான மத்தியூ ஹில் என்ற ஒரு ஆங்கிலேயனைக் காதல் திருமணம் செய்து கொண்டது ஷோபனாவின் குடும்பத்திற்குப் பிடிக்கவில்லை என்று சித்ரா ராகவனுக்குச் சொல்லியிருக்கிறாள்.

ராகவன் இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள ஒரு மத்தியதரத் தமிழ்க் குடும்பத்திலிருந்து.1982ம் ஆண்டு லண்டனுக்குப் .படிக்கவந்த தமிழ் இளைஞன்.அடுத்த வருடம் 1983ம் ஆண்டில் இலங்கையில் தமிழருக்கெதிராக நடந்த கலவரத்தில் தனது குடும்பத்தில் பாதிப்பேரையும், கொழும்பில் வாழ்ந்த அவர்களின் பரம்பரையின் சொத்துக்களையும் ஒரு நாளில் இழந்தவன்.

சட்டென்று நடந்த வாழ்க்கை மாற்றத்தில் எல்லாவற்றையும் இழந்ததால், பட்டப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு ஏதோ ஒரு வேலை செய்த கொண்டிருந்தான். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த கூட்டமொன்றில் சித்ராவை ராகவன் சந்தித்தான்.அவளுடைய ஆதரவினால் அவள் வேலை செய்யுமிடத்தில் அவனுக்கு ஒரு பரவாயில்லாத வேலையும் கிடைத்தது.

சித்ரா,அவளின் தந்தையுடன் லண்டனிலுள்ள மனித உரிமை ஸ்தாபனங்களில் மிகவும் அக்கறையாக ஈடுபட்டகாலமது. பிரித்தானியாவில் நடந்த சுரங்கத் தொழிலாளர் போராட்டம் தொடங்கி தென்னாபிரிக்க கறுப்பு மக்களின் தலைவர் நெல்ஸன் மண்டேலாவை விடுதலை செய் என்ற போராட்டம் தொடங்கி இங்கிலாந்திலுள்ள இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இடதுசாரிக் குழுக்களில் சித்ராவின் தகப்பன் மத்தியூ முக்கிய இடம் வகித்தார்.

அக்கால கட்டத்தில்,இங்கிலாந்தின் பல இடங்களிலும். இரஷ்யாவுக்கு எதிரான அணுஆயதங்களை அமெரிக்கா குவித்ததை எதிர்த்த ஒரு ஆங்கிலயக் குடும்பப் பெண்ணின் ஆவேசக் குரலைத் தொடர்ந்து, அணுஆயுதங்களுக்கு எதிராகப்பல பிரித்தானியர் மறுப்புக் குரல் எழுப்பினார்கள்.’அமெரிக்காவின் அணு ஆயதம் இங்கிலாந்தின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது’ என்று பரிட்டிஷ் அரசு நினைத்தது.

ஆணுஆயதத்தை எதிர்தவர்களை ‘நாட்டுத் துரோகிகள்போல்’அரசு கடுமையாகப் பார்த்தது.அதிலும் சித்ரா ஆங்கிலத் தகப்பனுக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவள்.

இலங்கைத் தமிழருக்கு எதிராக இலங்கை அரசு எடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்த போராட்டங்களில்,ராகவனுடன் தன்னை முற்று முழுதாக ஈடுபடுத்திக்கொண்டு தமிழரின் மனித உரிமைக் கூட்டங்களில் கலந்துகொண்டாள்.அப்போது, மார்க்கிரட் தச்சரைப் பிரதமராகக் கொண்ட பிரித்தானிய அரசு இலங்கை அரசை ஆதரித்துக் கொண்டிருந்தது.லண்டனில் இலங்கைத் தமிழர்களுக்காக நடக்கும் போராட்டங்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது.

சித்ராவும் அவளின் தந்தை மத்தியூ போன்றவர்கள், அணுஆயுதத்துக்கும் எதிராகப் போராடுவதால்,நாட்டின் பாதுகாப்புக்கைச் சாட்டாக வைத்துக்கொண்டு, அரசு எடுக்கும் முன்னெடுப்புக்களுக்கு எதிராக இருப்பவர்களை அரசு கண்காணித்துக்கொண்டிருப்பார்கள் என்பதின்; முழு தாத்பரியத்தையும் அறியாத சித்ரா போன்ற இளம் தலைமுறையினர் பல தெருப் போராட்டங்களை நடத்தினார்கள். அதில், ‘போலிசாருக்கு இடைஞ்சல் விளைவிக்கும் முறையில் நடந்து கொண்டதாகப் பல சாட்டுக்களை வைத்துக்கொண்டு, சில இளம் தலைமுறையினரைப் போலிசார் கைது பண்ணப்படுவது வழக்கமாகவிருந்தது.

இலங்கையில்,தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளால் தாய்நாட்டுக்குத் திரும்பிப் போகமுடியாமல் லண்டனில் அகதி நிலைக்கு விண்ணப்பித்து விட்டு அரசின் பதிலுக்குக் காத்திருந்ததால். தமிழருக்குச் சார்பான போராட்டங்களற்ற, மற்ற எந்த பிரித்தானியஅரசியற் போராட்டங்களிலும் சித்ரா மாதிரி அவன் ஈடுபடவில்லை.

ஷோபனாவும் அவள் கணவர் மத்தியூவும் அவர்களின் குழந்தைகளான ஆரதியும் சித்ராவும் ராகவனை அவர்களின் குடும்ப அங்கத்தவனாகவே ஏற்றுக் கொண்டார்கள்.மகிழ்ச்சியான அந்தக் குடு;ம்பம் அவனின் துன்பத்தைப் போக்க உதவியது.ஆனால் அவர்களின் பிரித்தானிய சம்பந்தப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து அவன் பெரும்பாலும் விலகியிருந்தான்.பிரித்தானியாவில் விசா இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தபோது, பிரித்தானிய அரசியற் போராட்ட அரசியலிலிருந்து ஒதுங்குவது அவனுக்கு இன்றியமையாததாகவிருந்தது.

1984ல்,சித்ராவும்; சில சினேகிதிகளும் இத்தாலி நாட்டின் மிலானில் நடக்கும் இடதுசாரிகள் மகாநாட்டுக்கு போகத் திட்டமிட்டிருந்தாள்.ராகவனையும் வரச்சொல்லி அவள் கேட்கவில்லை. அவன் விசா இல்லாமல் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த காலமது.

சித்ராவும் சினேகிதிகளும் மிலானில் ஓரு கிழமை தங்கியகாலத்தில் வெனிஸ் நகருக்குப் போனபோது அங்கு உல்லாசப் பிரயாணிகளாக வந்த ஆங்கிலச் சுற்றுலாப் பயணிகளில்; ஒருத்தனான டேமியனைச் சந்தித்ததை அவள் சொன்ன விதத்தில் அவள் சொல்லாத பல விடயங்கள் ராகவனக்குப் புரிந்தது. ஆரதி,ராகவனைச் சோகத்துடன் பார்த்தாள். ‘உனது அன்புக்குரியவளை எங்கிருந்தோ வந்தவன் கவர்ந்து விட்டானே’ என்ற சோகப் பார்வையது.

சில கிழமைகளில் சித்ரா தனது ‘நண்பனான’ டேமியனைத் தனது பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்யக் கூட்டிக்கொண்டு வந்தாள்.’அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?’ ஷோபனா தனது மகளைத் துருவித் துருவிக் கேள்வி கேட்டாள்.

ஷோபனா, தன்னுடன் மூன்ற வருடம் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப்படித்த மத்தியூ ஹில் என்பனைக் காதலித்துக் கல்யாணம் செய்தவள். தனது மகள் ஒரு கிழமை விடுமுறையிற் சந்தித்த டேமியன் வில்லியம் என்பனை அவளின் ‘சினேகிதன்’என்று கூட்டிக்கொண்டு வந்தபோது அவர்களால் அவளைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. டேமியன் மிகவும் ஸ்மார்ட்டாக இருந்தான். அவன் ஒரு ஆணழகன் என்று எந்தப் பெண்ணும் காதல் கொள்ளுமளவுக்குக் கவர்ச்சியாகவிருந்தான். பொன்னிறத் தலையும், ஆழமான நீலக்; கண்களும், அவனின் தலைமுறையினர் எந்த இனத்துடனும் கலந்து கொள்ளாமல் வாழ்ந்தவர்கள் என்பதைப் பறைசாற்றியது.தாடி மீசைவைத்துக் கொண்டு இடதுசாரித் தத்துவங்களை அள்ளிக் கொட்டினான்.சித்ராவுக்கு இருபத்திரண்டு வயது,டேமியனுக்கு இருபத்திஎட்டு வயது.

நேரம் கிடைத்தபோதெல்லாம் சித்ராவை அணைத்து,’இவள் என்னுடையவள்’ என்பதை இறுமாப்பாக மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டான்.சித்ராவம் அவனது அணைப்பில் துவண்டு சரிந்தாள்.

‘அவனது பூர்வீகம் என்ன?’ஷோபனா மகளை, ராகவனுக்கு முன்னால் விசாரித்தாள். ஷோபனாவுக்கு டேமியனை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்பதை ராகவன் உணர்ந்து கொண்டான்..

‘அம்மா, டேமியனுக்குத் தாய் தகப்பன் கிடையாது.தாய் டேமியனின் இளவயதில் இறந்து விட்டாளாம். தகப்பன் போனவருடம்தான் கான்ஸர் வந்து இறந்துபோனார். இரு சகோதரிகளும் வெளிநாட்டில் வாழ்கிறார்களாம்.அவனது பாட்டியார் மிகவும் வயதானவர் முதியோர் விடுதியில் இருக்கிறாளாம்’

‘இங்கிலாந்தில் அதிக குடும்ப உறவற்ற ஒரு சுதந்திர மனிதனா?’ ஷோபனாவின் குரலிருந்த நையாண்டியை சித்ரா விளங்கிக் கொள்ளவில்லை என்பதை ராகவன் புரிந்துகொண்டாலும் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.சித்ரா, டேமியனின் முற்போக்குக் கருத்துக்களில மட்டுமல்லாது அவனது கவர்ச்சியான போக்குகளிலும் ;,மிகவும் ஆழமாகக் கவரப்பட்டிருக்கிறாள். டேமியன்,சித்ரா செல்லும் போராட்டங்களில் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான்.எங்கிருந்Nதொ வந்தான், எனது காதலைப் பிடுங்கி எறிந்து விட்டான் என்று ராகவன் மனம் விட்டுக் குமுறக்கூடமுடியாது.

ராகவன் லண்டனில் ஒரு அரசியல் அகதி! இருபத்தி மூன்றுவயதில் ஒரு நீண்டவாழ்க்கையின் துன்பங்களை இலங்கையில் நடக்கும் இனத்துவேஷத்தால் அனுபவித்துக்கொண்டிருப்பவன்.

நாளைக்கு அவனுக்கு என்ன நடக்கும் என்று அவனுக்கே தெரியாத வாழ்வு. எந்த நேரமும் லண்டனில் விசா இன்றி வாழ்வதாகக் கைது செய்யப் பட்ட நாடு கடத்தப்படலாம். இந்த நிலையில் சித்ரா இதுவரை அவள் வாழ்வில் ஒரு வெளிச்ச வீடாகவிருந்தாள். சித்ராவின் அன்பு. கருணையான பாசம் என்பதை ராகவன் ‘காதல்’ என்று நினைத்துக் கொண்டானா?

அவன் தனக்குள் குமுறிய வேதனைகளை யாரிடமும் சொல்ல முடியாது. சித்ரா அவனிடம் ஒடிவந்து, அவளின் காதல் மயக்கத்தில், டேமியன் புராணம் பாடும் போதெல்லாம் அவன் தனது வேதனையை மறைத்துக் கொண்டு அவளின் சந்தோசத்தில் பங்கு கொள்வான்.

சித்ராவின் தங்கையான,ஆரதி தனது பல்கலைக்கழகப் படிப்பு விடயமாக ஸ்காட்லாந்துக்குச் சென்றுவிட்டாள். தங்கையுடன் தனது காதலனைப் பற்றிப் பீற்றிக் கொள்ளமுடியாததால் சித்ரா டேமியன் பற்றி ராகவனிடம் அடிக்கடி ஏதோ சொல்லி மகிழ்ந்து கொண்டிருப்பாள்.’இப்படி நெருக்கமான காதலிற் திளைப்பவர்கள் விரைவில் கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்று ராகவன் தனக்குள்ச் சொல்லிக் கொண்டான்.

காலம் சிறகு கட்டிக் கொண்டு பறந்தது. டேமியனும் சித்ராவும்,மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். ‘அவனுக்கு உன்னில் இவ்வளவு காதல் இருந்தால் அவன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளலாமே’ ஷோபனா முணுமுணுத்தாள். டேமியன் அடிக்கடி தனது வேலை விடயமாக வெளியிடங்களுக்குச் செல்பவன். அவன் லண்டனில் தங்கும்போது, சித்ரா அவன் வீட்டிலேயே தங்குவதை ஷோபனா அடியோடு வெறுத்தாள்.

பிரித்தானியாவில் பல அரசியல் போராட்டங்கள் உச்சநிலையில் கனன்றன.

டேமியன் வழக்கம்போல் சித்ராவுடன் இரவும் பகலும் ஒன்றாகத் திரிந்தான். ‘ ஒடுக்கப் பட்ட மக்களின்’ குரலுக்கெதிரான போராட்டங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டான். சித்ராவின் கொள்கைகளை, அவளின் சினேகிதர்களை, அவள் போடும் திட்டங்களையெல்லாம் மிகவும் ஊக்கமாக வரவேற்றான்.

அவனது ஆதரவு அவளை அவனுடன் மிக மிக நெருக்கமாக்கியது. ஓருகாலத்தில் ராகவனின் மனதில் காதற்கனலைத் தூண்டிவிட்ட சித்ரா, இன்று டேமியனின் அணைப்பில் ஒருநிமிடமும் பிரியாமற் திரிந்தாள்.

தனது உணர்வுகளின் தவிப்பை மறைத்துக்கொண்டு போலியாகப் பழக விரும்பாத ராகவன் சித்ராவின் நினைவிற் தவித்துக் கொண்டிருக்காமல்,தனது வாழ்க்கையில் முன்னேறத் துடித்தான். அவனுக்கு அகதி விண்ணப்பம் அங்கிகரிக்கப் பட்டுவிட்டது. பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இனிக் கிடைத்துவிடும்.தனது பட்டப் படிப்பை மீண்டும் ஆரம்பித்தான். ‘எங்கிருந்தாலும் வாழ்க ‘என்று சித்ராவை மனதார வாழ்த்தினான்.

சித்ராவுடனான காதலின் நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மனதிலிருந்து நீக்குவது அத்தியாவசியமாகப் பட்டது. நேற்று நடந்தது சரித்திரம், இன்று நடப்பது நிஜம், நாளை நடப்பது எதிர்பாராத விடயமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் விதத்தில் அவன் முதிர்ச்சி பெற்றுக் கொண்டுவந்தான்.

ஓருநாள் அவள் கலங்கிய கண்களும் பீதி கலந்த முகத்துடனும் ராகவனிடம் ஓடிவந்தாள்.’அம்மா என்னைக் கொலை செய்யப் போகிறாள்’ சித்ராவின் குரல் நடுங்கியது. ராகவனின் தோளிற் தலைசாய்ந்து விம்மி அழத் தொடங்கி விட்டாள்.அவன் பதறி விட்டான். சித்ரா மிகவும் அறிவான, அழகான பெண்மட்டுமல்ல மிகவும் துணிவானவள் என்றும் அவனுக்குத் தெரியும். அந்தத் துணிவே தகர்ந்து விழுந்ததுபோல் பதறியழும் சித்ராவின் துயரை அவனாற் தாங்க முடியாதிருந்தது.

‘என்னம்மா நடந்தது. போராட்டங்களில் ஈடுபடும் பலரின் வீடுகளைப் போலிசார் அதிரடி சோதனை போடுவதாச் சொல்கிறார்கள். உனக்கும் டேமியனுக்கும் அப்படி எதும் பிரச்சினையா?’ அவளைப் பரிவுடன் அணைத்தபடி கேட்டான்.

சித்ரா,ராகவனை ஏறிடடுப் பார்த்தாள்.எதையோ அவனிடம் சொல்லத் துடிக்கிறாள் என்று புரிந்தது. என்னவென்று கேட்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.

‘ராகவன்..ராகவன்.’ சித்ராவின் கண்கள் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தன.

‘தயவு செய்து என்ன நடந்தது என்ற சொல்லு சித்ரா’ அவன் அவளது கண்ணீரைத் துடைத்தபடி சொன்னான்.

‘ராகவன் ..நான் இரண்டுமாதம்..’ அவள் மேலே சொல்லவில்லை. குமுறியழுதாள்.

‘முட்டாள்ப் பெண்ணே, நீயும் டேமியனும் ஒன்றடியாகத் திரிகிறீர்கள். விரைவில் கல்யாணம் செய்யப் போகிறீர்கள். இது என்ன பெரிய விடயம். உனது வீட்டார் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறாயா?’ ராகவன் வஞ்சகமற்ற முறையில் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அவள் சட்டென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு,’ டேமியனுக்கு இப்போது பிள்ளை ஒன்றும் வேண்டாமாம்’ அவள் குரல் கரகரத்தது.

‘அதாவது..’ அவன் கேட்டு முடிக்க முதல் அவள் தொடர்ந்தாள்’ பிள்ளையை நான் அழித்துவிடவேண்டுமென்று நினைக்கிறான்’

‘ ஓ மனித உரிமை என்பது மாற்றாருக்கு மட்டுமா,அவனது கருவுக்குக் கிடையாதா?’ராகவன் ஆத்திரத்தில் வெடித்தான்.

ராகவன் மிகவும் கௌரவமான குடும்பத்திலிருந்து வந்தவன்.பிரித்தானிய வாழ்க்கை முறைகளை இப்போதுதான் புரியத் தொடங்கியிருக்கிறான். காதலால்க்; கனிந்து கலவியும் செய்யும்போது கரு வரும் என்று தெரியாமலா இப்படி இணைந்து திரிந்தார்கள். இப்போது இவள் கர்ப்பமாகவிருக்கிறாள்.டேமியன்; தற்போது தானொரு தகப்பனாக இருக்கப் போவதில்லையாம்? அவன் தனக்குள் குழம்பி விட்டான்.

‘அம்மாவுக்குத் தெரிந்தால்..’ சித்ரா பயத்தில் நடுங்கிளாள்.

‘சித்ரா, டேமியனுக்குச் சொல்லிச் சீக்கிரமாகக் கல்யாண ஏற்பாடுகளைச் செய்.அதன் பிறகு அவன் மனம் மாறுவான்’ ராகவன் நம்பிக்கையுடன் சொன்னான்.

‘அப்படி ஒன்றும் உடனடியாகச் செய்யமுடியாமலிருக்கிறது’.அவள் தொடர்ந்தழுதாள்.

‘ ஏன் அவன் உன்னைத் திருமணம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டானா?’ ராகவன் பொருமினான்.

‘ ஓ,நோ அப்படி ஒன்றுமில்லை…அவன் தனது சகோதரிகளைப் பார்க்க உடனடியாகத் தென்னமெரிக்கா போகவேண்டியிருக்கிறது என்று சொல்லி ஒரு கிழமைக்கு முன் சென்று விட்டான்..அவன் எப்போது வருவான் என்று தெரியாது’ அவளின் குரலிலிருந்த சோகத்தை அவனால் தாங்கமுடியாதிருந்தது.

‘சித்ரா, இப்போது அழுது ஒன்றும் பிரயோசனமில்லை.அவன் லண்டனுக்குத் திரும்பி வந்ததும் உனது தாய்தகப்பனிடம் அவனைக் கூட்டிக்கொண்டுபோய்ச் சொன்னால் எல்லாம் தன்பாட்டுக்கு நன்றாக நடக்கும்.பயப்படாதே சித்ரா நீ நல்ல பெண். எல்லாம் சரியாக நடக்கும்’ அவன் அன்புடன் ஆறுதல் சொன்னான்.

அதன்பின் சில நாட்களில் நடந்தவை சினிமாப் படங்களில் வரும் திடுக்கிடும் திருப்பங்கள் மாதியாகவிருந்தன. ராகவன் சித்ராவைச் சந்தித்த சில நாட்களில் சித்ராவின் வாழ்க்கையில் பேரடிவிழுந்தது.

1986ம்; ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் திகதி தென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றான எக்குவடோரில் நடந்த பூமியதிர்வில் இறந்த நூற்றுக்கணக்கானவரில் டேமியனும் ஒருத்தன் என்ற செய்தி வந்தபின் சித்ரா நடைப் பிணமாகிவிட்டாள்.

வந்த செய்தி உண்மையாக இருக்கமுடியாது என்று அவள் கதறினாள்.அவளின் தந்தை உண்மையை அறியப் பலமுயற்சிகள் செய்தும் டேமியன் இறந்தது உண்மையே என்ற தகவல்தான் திரும்பத் திரும்ப வந்தது.

சித்ரா,அவளின் அன்பனான டேமியன் நினைவாகத் தன் வயிற்றில் வளரும் குழந்தையை அழித்துக் கொள்ளவில்லை. தாய் தகப்பனுக்கு அவள் கர்ப்பவதி என்ற உண்மையைச் சொன்னாள். டேமியனுக்குப் பிள்ளை வந்தது பிடிக்கவில்லை என்பதையும் அவன் பிள்ளையை அழித்து விடச் சொன்னதையும் அவள் சொல்லவில்லை. டேமியனும் அவளும் விரைவில் திருமணம் செய்ய உத்தேசித்திருந்ததாகப் படுபொய்யைத் தாய் தகப்பனுக்குச் சொன்னாள்.

திருமணம் செய்யாமல் தனது மகள் தாயானதை, இந்தியத் தாயான ஷோபானா விரும்பவில்லை. அவள் ஒரு நல்ல தாய். எந்த உயிரையும் அழிக்க அவள் விரும்பமாட்டாள் ஆனால் தனது குடும்பமும் சமுதாயமும் தன்னைக் கிண்டல் செய்வதை அவளாற் தாங்கமுடியாதிருந்தது. தனது மகளின் கௌரவத்தை, தங்கள் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றச் சொல்லி ராகவனின் காலடியில் ஷோபனா வீழ்ந்தாள்.

‘ராகவன் நீ சித்ராவை எவ்வளவு தூரம் விரும்பியிரு;தாய். ஏன்று எனக்குத் தெரியும்.இன்று அவள் நிலை பரிதாபமாகவிருக்கிறது. தகப்பனில்லாத குழந்தையைவளர்க்கும் பாரமும் டேமியனை இழந்த சோகமும் அவளை உருக்குலைத்து விடும். தயவு செய்து சித்ராவுக்கு வாழ்வு கொடு’ஷோபனா ராகவனைக் கெஞ்சினாள்.

‘சித்ராவின் வயிற்றி வளரும் குழந்தை ஒரு ஆங்கிலேயனுடையது.அந்தக் குழந்தை பொன்னிறத்தலையும் நீலக் கண்களுடனும் பிறந்தால் ராகவனை மற்றவர்கள் கிண்டலடிக்க மாட்டார்களா?’ ஆரதி,தனது தாயின் வேண்டுகோளை எதிர்த்துக் குரல் கொடுத்தாள்.

‘ சித்ராவின் குழந்தை முழுக்க முழுக்க ஆங்கிலத் தன்மையுடன் பிறக்காது.உங்களுக்கு எனது தலைமயிரின் நிறமும் உங்கள் அப்பாவின் உடல் நிறமும் இருப்பதுபோல் சித்ராவின் குழந்தையும் பிறக்கலாம்’ ஷோபனா விரக்தியில் விம்மினாள். எப்படியும் தனது குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் தவிப்பு அவளுக்கு.

இதெல்லாம் வேறு யாருக்கோ நடப்பதுபோல் சித்ரா வெளியுலகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டேமியனை இழந்த அவளின் அதிர்ச்சியால் சித்ரா பைத்தியமாகாமல் இருக்க அவள் வயிற்றில் வளரும் குழந்தையைக் காரணம் காட்டித் தன் மகளைத் தேற்றினாள் ஷோபனா.

விதியின் கோரவிளையாட்டை ராகவனால் கிரகிக்க முடியாமல் தவித்தான் யாருடைய பிள்ளையையோ தாங்கும் சித்ராவை ஏற்றுக் கொள்வதை அவன் வெறுக்கவில்லை.ஆனால் விதி செய்த சதியால் பித்தம் பிடித்தழும் சித்ராவின் துயரை அவனாற் தாங்கமுடியாதிருந்தது.அவளை அணைத்துக் கொண்டான். அவளில் அவன் எவ்வளவு காதலை வைத்திருந்தான்-வைத்திருக்கிறான் என்பதையோ அவளுக்கு அவன் விளங்கப் படுத்திக் கொள்ளும் அவசியமில்லை என்ற அவனுக்குத் தெரியும்..
அவனில் சித்ராவுக்கு அளவுக்கு மிறிய மரியாதையும் உண்டென்றும் அவனுக்குத் தெரியும்.

சித்ரா டேமியனின் நினைவாக அவர்கள் இருவருக்கும் பிடித்த சிவப்பு மலர்களைத் தரும்,’கமலியாச்’ செடி ஒன்றைத் தோட்டத்தில் நட்டாள்.அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தாள்.

ராகவனுக்கும் சித்ராவுக்கும், டேமியன் இறந்து இருகிழமைகளில் பதிவுத் திருமணமும் பெரிய விதத்தில் வரவேற்பும்; நடந்தது. சித்ரா போலிப் புன்னiயுடன் வளையவந்தாள். அவள் ராகவனை நேரே பார்ப்பதைத் தவிர்த்தாள்.
ஷோபனாவின் உறவினர்களுக்கு டேமியன்-சித்ராவின் உறவு அதிகமாகத் தெரியாது. சித்ராவின் வாழ்க்கையில் டேமியனுக்கு முன் ராகவன் நுழைந்திருந்ததாலும் அவனை ஷோபனா வீட்டார் மிக மிக அன்புடன் நடத்தியதையும் சொந்தக்காரர்கள் கண்டிருந்தபடியால் சித்ரா-ராகவன் திருமணத்தைச் சொந்தக்காரர்கள் மனதார வாழ்த்தினார்கள்.

சித்ரா கல்யாணத்திற்குப் பின்னும் பித்துப் பிடித்தவள் போலிருந்தாள். ராகவனை நெருங்கிப் பழகத்; தயங்கினாள்.
அவளது வயிற்றில் வளரும் டேமியனின் குழந்தை சித்ராவின் வயிற்றை உதைத்தபோது கேவிக் கேவியழுதாள்.

‘இப்படி அழுவது குழந்தைக்குக் கூடாது சித்ராக் கண்ணு’ ராகவன் தனது மனைவியின் வயிற்றை-டேமியனின் குழந்தை வளரும் வயிற்றைத் தடவி விட்டான்.

‘ராகவன் என்னில் நீங்கள் வைத்திருக்கும் பரிதாபம் என்னை வதைக்கிறது’ அவள் அவனைப் பார்க்காமல் அழுதாள்.

‘சித்ரா உனது நிலைக்கு நான் பரிதாபப்படுவது தவிர்க்க முடியாது. ஆனால் அதற்கு மேலால் நான் உன்னை எனது மனதார நேசிக்கிறேன் என்பதை நீ உணர்வாய் என்று நம்புகிறேன்.’

‘டேமியனும் என்னை மனதார நேசித்தான்’ கனவில் பேசிக்கொள்வதுபொல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் சித்ரா.அவள் இன்னும் டேமியனின் நினைவில் வாழ்கிறாள் என்பதை ராகவன் உணர்ந்து கொண்டான்.

குழந்தை பிறக்கும் வரைக்கும் இருவரும் ஒரு படுக்கையை இரு சினேகிதர்கள்மாதிரி பகிர்ந்து கொண்டார்கள்.

சித்ராவுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஷோபனாவின் பிரார்த்தனையோ என்னவோ குழந்தை ஷோபனாவின் பரம்பரையிலுள்ள நல்ல கறுப்புத் தலையுடன் பிறந்தது. கண்கள் சாடையான நீலக் கண்கள். டேமியனின் கண்கள். குழந்தையை மிகவும் உற்றுப் பார்த்தால் டேமியனின் சாயல் அப்படியே தெரியும்.

‘ சித்ராவின் அப்பாவின் தகப்பனுக்கும்,அதாவது சித்ராவின் பாட்டனாருக்கும் நீலக்கணகள்;தான். அதுதான் அவரின் பேத்தியின் குழந்தைக்கும் வந்திருக்கிறது’ ஷோபனா புழுகித்தள்ளனாள்.சொந்தக்காரர் நம்பி விட்டார்கள். குழந்தையின் வாய் ராகவனின் வாய்மாதிரியிருக்கிறது என்று சொந்தக்காரர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள்.ராகவன் தனக்குள் பெருமூச்சு விட்டுக்;கொண்டான்.

‘டேமியனுடனான எனது வாழ்க்கையை ஞாபகப் படுத்த. என்னுடைய குழந்தைக்கு வில்லியம் என்று பெயர் வைக்கப் போகிறேன்’ சித்ரா முணுமுணுத்தாள்.

‘உன்னுடைய குழந்தை?’ராகவன் சித்ராவை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டான். இந்தக் குழந்தைக்குத் தந்தையாக இருக்கச் சொல்லித்தானே ஷோபனா ராகவனின் காலில் வீழ்ந்தாள்?

‘சித்ரா, நீ; டேமியன் வில்லியத்தை ஞாபகார்த்தமாக இந்தக் குழந்தைக்கு வில்லியம் என்று பெயர் வைப்பதை நான் ஆடசேபிக்கவில்லை. ஆனால் இந்தக் குழந்தைக்கு நாங்கள் இருவரும் பெற்றோர்கள். அவன் வளர்ந்த பின் ஒருகாலத்தில் தேவையானால் அவனுக்கு நீ உண்மையைச் சொல் ஆனால் ஆரம்பத்திலேயே அவன் உன்னுடைய குழந்தை என்று சொல்லி என்னைஅவனிடமிருந்து வேறுபடுத்தாதே,அது வளரும் குழந்தையின் மனவளர்ச்சிக்குக் கூடாது’அவன் குரலில் அக்கினி.

நீண்ட நாட்கள் நித்திரையிலிருந்து விழித்ததுபோல் சித்ரா ராகவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘ என்னை மன்னித்துக்கொள் ராகவன்’ முதற்தரம் சித்ரா ராகவனை முழுக்க முழுக்க நேரிற்; பார்த்தாள். இருவர் கண்களும் இணைந்து கொண்டன. ஏதோ ஒரு புதிய வெளிச்சம் வந்தது போன்றதொரு உணர்ச்சி ராகவனை ஆட்கொண்டது.

‘ராகவன் நீ என்னை மனதார விரும்பியது எனக்குத் தெரியும். ஆனால் அரசியலில் ஒரு அக்கறையுமற்றமனிதனாக நீ இருந்ததால்..-‘ அவள் பேசிமுடிக்கவில்லை.

அவன் தொடர்ந்தான். ‘அரசியல் விடயங்களில் கவர்ச்சியாகப் பேசிய டேமியனில் உனக்குக் காதல் வந்தது’ ராகவனின் குரலில் தொனித்த தாங்கமுடியாத வேதனையையுணர்ந்த சித்ரா அவனை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்.கல்யாணமாகி இவ்வளவு நாட்கள் கடந்தபின் சித்ரா அவனின் மனைவியாக அவனை முதற்தரம் அணைத்துக் கொண்டாள்.

‘ராகவன் தயவு செய்து என்னை வதைக்காதே. நான் டேமியனை எனது உயிருக்கும் மேலாக நேசித்தேன். அது வெறும் கவர்ச்சியில் வந்தது என்ற நீ நினைத்தால் நான் ஒன்றும் உன்னுடன் சண்டை பிடிக்க முடியாது’ அவள் உறுதியாகச் சொன்னாள்.

அவள் ராகவனை நேசிப்பதை அவன் உணர்ந்தான்.தனது குழந்தைக்கும் தனக்கும் அவன் வாழ்வு கொடுத்தவன் என்ற நன்றியில் அந்த அன்பு வளரலாம். ஆனால் கழந்தை வில்லியம் கிட்டத்தட்ட டேமியன் சாயலையே கொண்டிருக்கிறாள்.சித்ராவிற்கு டேமியனை வாழ்க்கை முழுக்க வில்லியம் ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கப் போகிறான்.

வில்லியம் வளர்ந்துகொண்டிருப்பதபோல் தோட்டத்தில் அவள் நட்ட ‘கமலியாச்’ செடியும் அவளின் மிகவும் கவனமான பாதுகாப்பில் திமு திமு என வளர்ந்தது.

வில்லியத்துக்கு, ஒரு வயதானபோது,’நாங்கள் வெனிஸ் நகருக்கு ஒருதரம் போவோமா’ என்று சித்ரா கேட்டாள்.அவனக்கு அவள் கேட்ட கேள்வி தர்ம சங்கடத்தைத் தந்தது.

‘ தயவு செய்து என்னைக் கேட்காதே. நீ வேண்டுமானால் டேமியனின் நினைவுக்காக வெனிஸ் போய்வர நான் தடையாக இருக்கப் போவதில்லை.’ அவனின் குரலில் தெரிந்த கடுமையான தொனியில் நீ அடிக்கடி டேமியனைப் பற்றிப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் சொல்வது வெளிப் படையாகத் தெரிந்தது.

வில்லியத்துக்கு இரண்டு வயதானபோது சித்ரா ராகவனின் குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்தாள்.அவள் கர்ப்பமாகி நான்கு மாத நடுப்பகுதியில் குழந்தை அவள் வயிற்றில் துடிக்கத் தொடங்கியதும் கணவனும் மனைவியும் சந்தோசத்தின் உச்சிக்கே போய்விட்டார்கள்.

ஆண்குழந்தை பிறந்தது. அவளின் ஆசைப்படி விஷ்ணு என்று பெயர் வைத்தார்கள்.வாழ்க்கையில் இப்படி சந்தோசமாக இருக்க முடியுமா என்று ராகவன் தன்னையே கேள்வி கேட்டுக் கொள்ளுமளவுக்கு அவர்கள் சந்தோசமாகவிருந்தார்கள். வில்லியமும் விஷ்ணுவும் சித்ராவின் பழைய வாழ்க்கையை மறக்கப் பண்ணினார்கள்.

பதினைந்து வருடங்கள் பறந்தன. குழந்தைகள் வளர்ந்தார்கள். பதினாறு வயது வில்லியம் அவளின் தகப்பன் டேமியன் மாதிரி உயர்ந்து வளர்ந்து மிக மிக அழகாகவிருந்தான்.அவனைப் பார்த்து சித்ரா பெருமூச்சு விடுவதை ராகவன் அவதானிக்காமலில்லை.விஷ்ணு, இனக் கலவரத்தில் இறந்து விட்ட ராகவனின் தகப்பனை ஞாபகப்படுத்தினான்.

நீண்டகாலத்தின் பின் சித்ரா மிகவும் சந்தோசமாகவிருந்தாள்.

ரகவனுக்கும் வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைத்து வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது.

அந்த அமைதியில் ஒரு சட்டென்ற திருப்பம் ஏற்பட்டது.

சித்ரா தனது பழைய சினேகிதியான மைரா என்ற பெண்ணைத்; தற்செயலாகச் சந்தித்தாக ஒரு நாள் சொன்னாள்.மைராவும்,டேமியன் வில்லியமும் சித்ராவும் ஒருகாலத்தில் நெருக்கமான சினேகிதர்களாகவிருந்தார்கள். மைராவைச் சந்தித்து விட்டு வந்த அன்று சித்ரா மிகவும் சோகமாவிருந்தாள்.பழைய சினேகிதியைக் கண்டதும் டேமியனின் நினைவுகள் வந்திருக்கலாம் என்று ராகவன் தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.

அடுத்தநாள் தோட்டத்தில் கடந்த பதினாறுவருடங்களுக்கு மேலாக அவள் மிகக்கவனமாக வளர்த்த பிரமாண்டமாக வளர்ந்து சிவப்பு மலர்களுடன் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் கமலியாச் செடியைப் பிடுங்கி எறிந்து விட்டாள்.

‘ஏன் திடிரென்று அப்படிச் செய்தாய்’ என்று ராகவன் கேட்டதும்,

‘ பழையதுகளை மாற்றிப் புதுச் செடிகளை நடுவோம் என்று சொன்னாள். ஆனால் அதைத் தொடர்ந்து அவளுக்கு விருப்பமான விடயமான தோட்டத்திற்குப் போவதையே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டாள். அவள் போக்கில் பல மாற்றங்கள். சரியாகச் சாப்பிpடாமல், சாயாகத் தூங்காமல் தவித்தாள்.

சித்ரா அடிக்கடி வில்லியத்துடன்; தர்க்கப்படத் தொடங்கினாள். வில்லியத்துக்கு வயது வரத் தொடங்கியதும் சாதாரணமான இளம் ஆண்கள் மாதிரி வில்லியமும்; தாயுடன் தர்க்கம் பண்ணத் தொடங்கினான்;.விஷ்ணு அவனின தகப்பன் ராகவன் மாதிரி மிகவும் அமைதியானவன். வில்லியம் அவனின் தந்தை டேமியன் மாதிரி மிகவும் சுறுசுறுப்பானவன். தர்க்கங்களை வலிய உண்டாக்கி வேடிக்கைபார்ப்பவன்.

ராகவனுக்கு,வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் தலையிடியைத் தந்தது. ‘ வளரும் குழந்தைகளுடன் கவனமாகப் பழகவேண்டும்’ அவன் அவளிடம் அன்பாகச் சொன்னான்.

;வில்லியம் அவனின் தகப்பன் மாதிரி மிகவும் கர்வம் பிடித்தவனாக இருக்கிறான்’ சித்ரா முணுமுணுத்தாள். ராகவன் திடுக்கிட்டான். டேமியன் கர்வமானவன் என்று இதுவரை,சித்ரா ஒருநாளும் சொல்லவில்லை.

டேமியன் ஒரு கௌரவமான- மிகவும் கெட்டிக்காரனானவன் என்றுதான் அவள் சொல்லியிருக்கிறாள்.ராகவன் சித்ராவைக் கேள்விக் குறியுடன் பார்த்தான்.அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டழுதாள்.

அதைத் தொடர்ந நாட்களில் சித்ரா அடிக்கடி சோர்வாகப் படுத்துக் கொண்டாள்.’வாழ்க்கை என்னைப் படுமோசமாக எமாற்றி விட்டது’ என்றழுதுவிட்டுச் சாப்பிடாமல் துவண்டு படுப்பாள். பல வருடங்களாக ஒரு தொடர்புமில்லாமலிருந்த அவள் சினேகிதி மைரா அடிக்கடி வந்து அவளைத் தேற்றினாள்.

வாழ்க்கை நகர்ந்துகொண்டேயிருந்தது. சித்ரா அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள்.அவளுக்கு என்ன நோய் என்று கண்டு பிடிக்கமுடியாமல் வைத்தியர்கள் திணறினார்கள்.அவளுக்கு கான்சர் என்று கண்டு பிடித்தபோது அவள் நிலை மிக மோசமாகவிருந்தது.

‘ராகவன் நீ மிகவும் நல்லவன்’ ஏதோ ஒரு ஸ்டேட்மென்டைப ;படிப்பதுபோல் அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தபடி சொன்னாள்.அவன் பதில் சொல்லாமல் அவளை அணைத்துக்கொண்டான்.

‘ராகவன் வாழ்க்கை என்னை எமாற்றி விட்டது@ சித்ரா ஒருநாள் மிகவும் மனமுடைந்த நிலையில் ராகவனிடம் விம்மினாள்.
மூன்று வருடங்களின் பின்,2006ம் ஆண்டு, வில்லியத்தின் பத்தொன்பதாவது வயதில் சித்ரா இறந்துவிட்டாள்.

அவள் அழைத்தபோது வெனிஸ் நகருக்கு வராத ராகவன் இன்று வந்திருக்கிறான்.அவளின் காதலனான டேமியன் மாதிரி ஒருத்தசை; சந்தித்திருக்கிறான்.

வெனிஸ் நகர் சுற்றிப் பார்த்த களைப்பில் காலாற நடக்க ராகவனும் அவனது நண்பர்களும் வெனிஸ் நகரத்தின் பிரபல தேவாலய சதுக்கத்துக்கச் சென்றபோது, படகில் ஏறும்;போது கண்ட ‘மார்க்’ என்பவனும் அவனது குடும்பமும் மற்றைய உல்லாசப் பிரயாணிகள்போல் அங்கும் வந்திருந்தார்கள்.

ராகவன் நண்பர்களுக்காக ஐஸ்கிறிம் வாங்கச் சென்றபோது மார்க் என்பவன்; தனது குழந்தைகளுடன் நின்றிருப்பது தெரிந்தது.ராகவன் மார்க்கை உற்றுப் பார்த்தான்.

‘வட் டு யு வான்ட்?’ என்று ‘மார்க் மிகவும் இறுக்கமான குரலிற் ராகவனைக் கேட்டான். அதன் அர்த்தம்’என்ன என்னைத் தொடர்கிறாயா? என்ற கேள்வி என்று ராகவன் புரிந்துகொண்டான்.மார்க் ராகவனை முறைத்துப் பார்த்தான்.

‘மன்னிக்கவும் எனக்குத் தெரிந்த டேமியன் வில்லியம் என்ற நண்பன் மாதிரியே நீங்களும் இருக்கிறிர்கள்..’ என்று தொடங்கிய ராகவன் ஏதோவெல்லாம் தன்னையறியமல் சொல்லிக் கொண்டிருந்தான். ராகவன் சொல்லி முடித்த விடயத்தால் டேமியனின் முகம் பேயடித்ததுபோல் மாறியதை ராகவன்கவனிக்க முதல்,ராகவனின் நண்பர்களின் வருகை ராகவனின் கவனத்தைத் திருப்ப அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

லண்டன் 2007.

வெனிஸ் நகரத்திலிருந்து வந்த ராகவனின் மனம் கடந்த சில வாரங்களாக,மிகவும் குழம்பிப் போயிருந்தது.

‘ஹலோ டாடி’ என்றோடி வந்து ராகவனைக் கட்டிப் பிடித்த வில்லியத்தின் குரல் அவனை நிலை குலையப் பண்ணியது. ஓரு வித்தியாசமும் இல்லாமல் ராகவன் வெனிஸ் நகரில் சந்தித்த மார்க்கின் குரல் போலிருந்தது.அதைத் தொடாந்து, வில்லியத்தின் நடை, வில்லியம் தனது தலையைத் திருப்பி மற்றவர்களைப் பார்க்கும் விதம் அத்தனையும் ராகவன் வெனிஸ் நகரிற் கண்ட ‘மார்க்’ என்பனையே ஞாபகப் படுத்தின.

அதைத் தொடர்ந்து பல நாட்கள் ராகவன் நிம்மதியின்றித் துடித்தான். வில்லியத்துக்கு இன்னும் சில மாதங்களில், இருபத்தியோராவது வயது வரப்போகிறது;. கூண்டை விட்டுப் பறக்கும் பறவைபோல், அவனின் பல்கலைக் கழகப் படிப்பு முடிய வில்லியமும் விட்டை விட்டு வெளியுலகத்தில் காலடி எடுத்து வைக்கப்போகிறான்.

அவனினி பிறப்பு பற்றிய உண்மையை அவன் அறிந்து கொள்ளவேண்டும் என்று ராகவன் மிகவும் உறுதியாக நம்புகிறான்.எப்படி அந்த விடயத்தை எடுப்பது? வெனிஸ் நகரில் கண்ட ஒரு ஆங்கிலேயன் உனது தகப்பனை ஞாபகப் படுத்தியதால் இந்த விடயத்தைத் தொடுகிறேன் என்றாரம்பிப்பதா அல்லது, உனக்கு இருபத்தியோராவது வயது வரைக்கும் இதுபற்றிச் சொல்லி உனது மனதைக் குழப்ப விரும்பவில்லை என்று சொல்வதா?

இந்த சிக்கலான விடயம் பற்றி யாருடனாவது கலந்து பேசவேண்டும் போலிருந்தது. டேமியன், சித்ரா உறவு பற்றி நிறையத் தெரிந்தவள் சித்ராவின் சினேகிதி மைரா ஒருத்திதான். அவள் சித்ரா நோய்வாய்ப் பட்டிருந்தபோது மிகவும் அன்புடன் சித்ராவைக் கவனித்துக் கொண்டவள்.

‘மைரா நான் உன்னைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று ராகவன் போன் பண்ணியபோது,அவள் உடனடியாக, ‘ஆஹா அது மிகவும் நல்ல விடயம்’ என்று சந்தோசத்துடன் சொல்லவில்லை.

‘என்ன விடயம்’ என்று மிகவும் தாழ்ந்த குரலிற் கேட்டாள் மைரா.

‘ மைரா,சித்ரா இறந்தபின் எனக்கு ஏற்பட்ட விரக்தியில் பல நண்பர்களுடன் பேசுவதையே தவிர்த்தேன்.இப்போதுதான் வாழ்க்கை பழைய நிலைமைக்குத் திரும்புகிறது..’ என்று அவன் சொன்னபோது சித்ராவின் நினைவில் அவன் குரல் கரகரத்தது.

மிக நீண்ட அமைதிக்குப் பின்,’ சரி எதிர் வரும் சனிக்கிழமை என்னை வந்து பார்’ என்றாள் மைரா.

ராகவன் சென்றபோது,அவன் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறானா என்று ஆச்சரியப்படும்படி மைராவின் வீடு மட்டுமல்ல அவளும் மாறியிருந்தாள். வீடெங்கும் இயேசுவின், புனித மேரியின் என்ற பல படங்களும் சிலைகளும் நிறைந்திருந்தன. மைரா ஒரு சமயவாதி என்று அவனுக்குத் தெரியாது. 1984;ம் ஆண்டில் அவளைச் சித்ராவுடன் ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது மைராவுக்கு இருபது வயது; முதலாவது வருட பல்கலைக்கழக மாணவி;. உலகத்திலுள்ள ஒடுக்குமுறைகளை அழிக்கவேண்டும் என்ற இலட்சியம் கொண்ட பல்லாயிரம் இளம் தலைமுறைகளில் ஒருத்தி.சமயத்தைக் கேள்வி கேட்ட முற்போக்குவாதி.

ராகவன் அவள் வீட்டிலுள்ள படங்களில் பார்வையைப் பதித்ததால் வந்த ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் அவன் அங்கு ஏன் வந்தான் என்பதையே மறந்துவிட்டான்.

‘ஏதும் குடிக்கிறாயா அல்லது ஏதும் சாப்பிடுகிறாயா’அவள் குரல் மிகவும் அமைதியாகவிருந்தது.

அவன் தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று கையாற் சொன்னதும் அவள் கொஞ்சநேரம் பேசாமலிருந்தாள்.

அவன் சித்ராவின் மறைவுக்குப்பின் எப்படியிருக்கிறான், பையன்கள் எப்படியிருக்கிறார்கள் என்றெல்லாம் அவள் அவனிடம் கேட்கவில்லை.அதுவும் அவனுக்கு ஆச்சரியமாகவிருந்தது..

தான் அங்கு வந்தததை அவள் விரும்பவில்லையா என்று தனக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டான்.

‘மைரா நான் உன்னைக் குழப்புகிறேன் என்றால் நான் புறப்படுகிறேன்’ அவன் மெல்லமாக எழுந்தான்.

‘ கொஞ்சம் பொறு ராகவன், நீ போன் பண்ணிய சில நாட்களாக நான் குழம்பிப்போயிருக்கிறேன்.’ அவள் அழதுவிடுவாள்போற் தோன்றினாள்.

அவன் மௌனமாக இருந்தான்.

‘ மார்க் ஹான்ஸன், அதுதான்; டேமியன் வில்லியம உன்னை வெனிஸ் நகரில் கண்டதாகச் சொன்னான்.; மைரா ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகத் தெளிவாகச் சொன்னாள்.

ராகவனக்குத் தலைசுற்றியது.; டேமியன் வில்லியம் 1986 ம்; ஆண்டு எக்குவடோர் பூமியதிர்வில் இறந்ததாக இவள்தானே சித்ராவுக்குச் சொன்னாள்?

வெனிஸ் நகரில் ராகவன் கண்ட ‘மாhக்’ என்பவன் உண்மையாகவே டேமியனா?அவன் இறக்கவில்லையா? அவன் இறந்ததாக நினைத்து சித்ரா பட்ட துயரை அவனைத் தவிர யாரறிவார்கள்?

‘சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, புத்தகங்களில் வராத பல ரகசியங்களை உள்ளடக்கியது ராகவன்’ மைரா இப்போது வாய்விட்டழுதாள்.ராகவனால் ஒன்றும் பேசமுடியவில்லை.

‘நான்தான், சித்ராவை வெனிஸ் நகரில் டேமியனுக்கு அறிமுகம் செய்தேன்’ அவள் குரல் மிகவும் உடைந்திருந்தது.

‘ அப்படிச் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டேன்’அவள் தனது கண்ணீரைத் துடைத்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் சொல்லும் தகவல்களாற் திகைத்து விட்ட ராகவன்,; அடித்து வைத்த சிலைபோல் அசையாமலிருந்தான்.

‘நான் செய்த பாவங்களைக் கழுவ இப்போது கர்த்தரின் கருணையைத் தேடுகிறேன். நான் சித்ராவுக்கும் அவளை உயிருக்குயிராகக் காதலித்த உனக்கும் அவளின் குழந்தைகளுக்கும் செய்த கொடுமைகளுக்கு எனக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்குமோ தெரியாது’

அவள் தொடர்ந்தாள்:

மைரா ராகவனுக்குச் சொன்ன தகவல்கள்@

1984ம் ஆண்டில் லண்டனில் பல தரப்பட்ட அரசியற்போராட்டங்களில் நடந்தன. மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் மத்தியூவும் அவர் மகளான சித்;ராவும், சுரங்கத் தொழிளாளர் போராட்டம்,பாலஸ்தினியருக்கான சமத்துவம், நெல்ஸன் மண்டேலாவை விடுதலை செய், இங்கிலாந்து மண்ணிலிருந்து அமெரிக்க அணுஆயதங்களை அகற்று,போன்ற போராட்டங்களில் முழுக்க முழுக்கக் கலந்து கொண்டார்கள்.

அந்தப் போராட்டங்களில்,ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.மைராவும் அவளது சகமாணவர்களும் அவர்களிற் சிலர். ஓரு நாள், லண்டன் மத்தியில் நடந்த ஊர்வலத்தில் நடந்த பிரச்சினையில்,போலிசாரின் கடமையைத் தடுத்ததான குற்றச் சாட்டில் மைராவும் அவளது சினேகிதனும் கைது செய்யப் பட்டார்கள்.போலிசாரின் கடமையைத் தடுப்பது பாரதூரமான குற்றம் அதைத் தடுப்பவர்கள் சிறை செல்லலாம்.அதற்குப் பயந்து மைரா போலிசார் கேட்ட உதவியைச் செய்ய ஒப்புக் கொண்டாள். அதாவது, போராட்டத்தில் முக்கிய பங்கெடுக்கும் மத்தியூ, சித்ரா போன்றவர்களின் நடவடிக்கைகளை அவர்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதாகும். அப்படித் தொடங்கிய விடயம், பாதுகாப்புப் புலனாய்வுத் துறையிலுள்ளவர்கள், போராட்டக்காரரை உளவு பார்க்க உதவியது.

உளவுத் துறையினர்,சித்ராவும் அவளது இடதுசாரி நண்பர்களும் இத்தாலி நாட்டின் மிலான் நகருக்குப் போவதையறிந்து அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

‘அப்படியான ஒரு உத்தியோகத்தர்தான் மார்க் ஹான்ஸன் ; என்ற உண்மைப் பெயர் கொண்டவன் அதுவும் அவன் உண்மைப் பெயரோ எனக்குத் தெரியாது. டேமியன வில்லியம் என்ற பெயரில் சித்ராவுக்கு அறிமுகம் செய்யப் பட்டான்.அக்கால கட்டத்தில் சித்ராவின் மனம், உன்னில் பதிந்திருந்தது. மிகவும் அமைதியான உன்னுடைய போக்கு சித்ராவுக்குப் பிடித்திருந்தது’. மைரா தொடர்ந்தாள்

‘ஆனால் சித்ரா மூலம் அவளின் தகப்பனைப் பற்றிய தகவல் அறிய சித்ராவுடன் பழக மைராவின் உதவியைக் கேட்டான் டேமியன். அவன்; சித்ராவுக்கு அறிமுகமானான்.ஆணழகனான டேமியனின் கவர்ச்சியான தோற்றமும் அவன் அள்ளிக் கொட்டிய மனித உரிமைக் கருத்துக்களும்.இடதுசாரித் தத்துவங்களும், கள்ளங் கபடமற்ற சித்ராவுக்கு அவனில் ஈர்ப்பையுண்டாக்கியது.அதுபற்றி அவள் தனது சினேகிதி மைராவுக்குச் சொன்னபோது, இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த மைரா, சித்ராவில் மனதில் குடியிருக்கும் ‘ராகவன் அரசியல் ஒன்றிலும் அக்கறையற்ற சுயநலவாதி,விசா இல்லாமல் லண்டனில் வாழ்பவன். அவன் எப்போதும் நாடு கடத்தப் படலாம்’. போன்ற கருத்துக்களைச் சித்ராவின் மனதில் மைரா இரவும் பகலும் திணித்தாள்;.

அதைத் தொடர்ந்த,ஓரு சில குறுகிய காலத்தில் டேமியன் சித்ரா காதல் மலர்ந்தது. டேமியன் தன்னை ஒரு முற்போக்குவாதியாக, மனித உரிமைப் போராளியாகக் காட்டிக் கொண்டான்.நேரம் கிடைத்த போதெல்லாம் டேமியன் சித்ரா வீட்டுக்கு வந்தான் பழகினான். மத்தியூவின் அரசியல் பற்றி, அவரின் தொடர்புகள் பற்றி, அவரின் சினேகிதர்கள்பற்றிப் பல விடயங்களைச் சேகரித்துக் கொண்டான். .ராகவன் ஒதுங்கிக் கொண்டான்.

அவனில் உயிரை வைத்திருந்த சித்ரா கர்ப்பமானபோது, அதை அழிக்கச் சொன்னான். அவள் தயங்குவதைக் கண்டதும்,வெளிநாடு போவதாகச் சொல்லிக் கொண்டு சித்ராவின் வாழ்க்கையிலிருந்து மறைந்தான். அந்தநேரத்தில் தென் அமெரிக்க நாடான எக்குவடோரில் நடந்த பூமியதிர்வில் அவன் இறந்து விட்டதாகச் சித்ராவுக்கு, மைரா மூலம் தெரிவிக்கப் பண்ணினான்.அதை நம்பிய சித்ரா நடைப் பிணமானாள்.

தனது உண்மையான காதலால்,அவளின் எதிர்காலத்தை ராகவன் மலர்ச்சியாக்கினான்.அவர்கள் வாழ்க்கை பதினைந்து வருடம் சந்தோசமாகப் பறந்தது.

மைராவின் வாழ்க்கையிலும்; பல மாற்றங்கள். மைராவின் படித்து முடித்ததும் கனடா போய்விட்டாள்.ஒரு நேர்மையான ஆசிரியரைத் திருமணம் செய்தாள்.அவளின் அன்பான கணவருக்குத் தான் செய்த தவறை மறைக்க விரும்பாத மைரா,சித்ரா பற்றிய விடயத்தைச் சொன்னதும் அவர் கோபத்தில் வெடித்தார். ‘உன்னை நம்பிய ஒரு உத்தம சினேகிதியின் வாழ்வு நாசமாக இருந்த உன்னை நான் எப்படி நம்புவேன்’ என்று இரைந்தார்.அவர்களின் திருமண வாழ்வு கடைசியில் விவாகரத்தில் முடிந்ததும் அவள் லண்டனுக்குத் திரும்பி வந்தாள். தற்செயலாக ஒரு நாள் சித்ராவைக் கண்டதும் அவளிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டாள்.

ராகவனில் வைத்திருந்த அன்பைத் தள்ளிவிட்டு அவள் நம்பிப்போன டேமியனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்காத அதிர்ச்சியில்,சித்ரா நோய்வாய்ப் பட்டு இறந்து விட்டாள்.

இவ்வளவு விடயங்களையும் கேட்ட ராகவன் அதிர்ந்து போனான் அழகும் திறமையும் கொண்ட சித்ராவின் வாழ்க்கை நாசமாகி விட்டது. ராகவன் ஏனோ மைராவில் கோபப்படவில்லை. அவளின் மிகவும் இளவயதில்,போராட்டத்தில் குதித்ததால் வந்த பிரச்சினையை மைராவைப் பாவித்து, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் சித்ரா போன்ற அருமையான பெண்களின் வாழ்க்கையை அழிக்கும் அரசியல் சதிராட்டத்தை வெறுத்தான்.
அவன் அவளிடம்,டேமியன் பற்றி மேலதிக விளக்கம் கேட்கக்கூடத் தென்பில்லாமல் உட்கார்ந்திருந்தான்.

அந்த வீட்டில் பல மணித்தியாலங்களைக் கழித்தபின் வெளியே வந்தவனுக்குத் தலைசுற்றியது. வாந்தி வந்தது. தன்னைச் சுற்றிய உலகை,பொய்மையும் குரூரமும் கொண்ட உலகை அழித்தொழிக்கவேண்டும் போல வெறி வந்தது.

மைரா,சித்ரா போன்ற எத்தனை பெண்கள் இந்த அரசியல் சதுராட்டத்தில் பகடைக் காய்களாகிறார்கள்?

ஆரம்பத்திலிருந்தே தனது மகள் டேமியனுடன் உறவாக இருப்பதை வெறுத்த ஷோபனா,அவன் எப்படித் தன் மகளின் வாழ்க்கையைச் சூறையாடிவிட்டான் என்பதையறிந்தால் எப்படித் துடித்துப் போவாள்?

உலகத்துக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய தன்னைத் தன் மகள் மூலம் வேவுபார்த்து அவள் வாழ்க்கையை டேமியன் நிர்மூலமாக்கியமை அறிந்தால் சித்ராவின் தந்தை மத்தியூ தாங்குவானா?

தனது தகப்பன், ‘டேமியன்’ தனது தாயைத் தனது அரசியற் சதுரங்க விளையாட்டில் பாவித்து அழித்து முடித்தவன் என்பதை வில்லியம் தெரிந்து கொண்டால் என்ன நடக்கும்?

உலகம் இருண்டு வந்து கொண்டிருந்த நேரத்தில், அவன் மனதில் குதித்து வரும் பல கேள்விகளுடன் ஒரு பார்க்கில் உட்கார்ந்து விம்மியழுதான் ராகவன்.

இறப்பதற்கு முன் அடிக்கடி சித்ரா சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தன.

‘இந்த உலகம், எல்லா மக்களின் சமத்துவத்துக்காகப் போராடிய என்னை ஏமாற்றி விட்டது’

அவளின் வார்த்தைகளை நினைத்து அவன் தனியே இருந்து விம்மினான்;.

‘ சித்ரா, என் கண்மணியே, நேர்மையையும் கௌரவமான மனிதர்களையம் நம்பிய என்னையும்தான் இந்தப் பொல்லாத உலகம் ஏமாற்றி விட்டது,ஆனால் எங்கள் குழந்தைகள் யாரையும் ஏமாற்றாத நல்ல மனிதர்களாக நான் வளர்த்தெடுப்பேன்’ அவன் நடசத்திரங்கள் மிதக்கும் வானைப் பாhத்ததபடி தனக்குள் சத்தியம் செய்துகொண்டான்..

,வெனிஸ்நகரில் ‘மார்க்’ என்பனுக்குக் கடைசியாக ராகவன் சொன்ன வார்த்தைகள் அப்போது சட்டென்று ஞாபகம் வந்தது. டேமியன் என்ற முகமூடிக்குப் பின்னாலுள்ள ஒரு மாயாவியின் மனச் சாட்சியை ராகவன் சொன்ன விடயம் பயங்கரமாக உலுக்கியது என்பது இரவின் இருளில் இருந்து யோசித்தபோது ராகவனுக்கு அப்பட்டமாக நினைவு வந்தது.

அன்று, வெனிஸ்நகரில் மார்க்கிடம் பேசும்போது,’உங்களை ஞாபகப்படுத்தும் டேமியனுக்கு வில்லியம் என்றொரு மகன் இருக்கிறான். அவன் உங்களைக் கண்டால் அவன் மாதிரியே நீங்கள் இருப்பதைப் பார்த்து திகைத்துப் போவீர்கள்’.

(யாவும் கற்ப்னையே)

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஓரு ஒற்றனின் காதல்

  1. அருமையான கதை தத்ரூபமாக இருந்தது…வாழ்த்துக்கள் ஆசிரியரே..

  2. அருமையான கதை ஒரு முழு படம் பார்ப்பது போல் இருந்தது , கதாபாத்திரத்தின் வலியை உணர முடிந்தது , உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *