எம்மை ஆளுடையாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 27,053 
 
 

தலைக்குமேல் மத்தாப்பாய் பொரியும் அக்கினி நட்சத்திர சூரியன்.

தனா என்கிற தனசேகரன் கிழக்கு மேற்காய் விரிக்கப்பட்டதுபோல் கிடந்த ஒழுங்கையில் நின்று ஆயா வீ்ட்டைப்பார்த்தார். ஒழுங்கைமணல் சூட்டில் பழுத்துக் கொண்டிருந்தது.

சடைச்சி மடியில் படுத்திருப்பதுபோல் அந்த புளியமரத்தின் முன்னால் அகலம் நீண்டு கிடந்தது ஆயாவீடு.

பாதி மண்டைவரை நெற்றி வளர்ந்து விரிந்ததுபோன்ற வழுக்கை. கிருதாவில் தொடங்கி பின் தலை முழுவதும் பஞ்சு ஒட்டியிருப்பது போன்ற முடி. மெல்லிய தங்கபிரேமில் பதிந்த மூக்கு கண்ணாடி. பிடித்து முறுக்கமுடியாதளவு வெட்டப்பட்ட வெள்ளைமீசை. நெஞ்சு விரிந்த சிவந்த உயர்ந்த உடம்பு. எட்டுமுழவேட்டியை சுருட்டாமல் கட்டும் அளவு நீளமான கால்கள். காலில் பாட்டா தோல்செருப்பு. முட்டியை தொட்ட இடதுகையில் உள்பக்கமாய் பார்க்கும் கடுகுவண்ண தோல்கடிகாரம். கையில் வாளோ கதையோ கொடுத்தாள் கங்கைகொண்ட சோழபுரம் துவாரபாலகர் சிலை உயிர்பெற்று எழுந்துவந்து கண்முன் நிற்கும் கம்பீரம்.

தலையில் இருந்து வழிந்த வேர்வை இமைகளில் தேங்கியதில், இமை தண்ணீரில் ஊறிய பஞ்சுபோல் மெதுமெதுவென்றிருந்தது. ஆவியில் குளித்து வெளிவந்தது போன்று ஈரம்கசியும் உடல். நீளவாட்டில் சிறிய கோடுகள் உள்ள பச்சை முழுகை சட்டையில் வெள்ளை குறுக்கு கோடுகளாய் பூத்திருந்தது உப்பு.

பொன்மின்னும் மூக்கு கண்ணாடியை கழட்டி வேட்டியில் துடைத்துக்கொண்டு வாசல்படியில் ஏறினார்.

செருப்பில் ஏறிய ஒழுங்கை மணல் நெருப்பு துகள்போல் சுட்டது. அவசரமாய் செருப்பை உதறியபடியே நடந்தார்.

ஒழுங்கையின் கரையில் நின்ற இளம்பச்சை சூடிய வேம்பு, கரும்பச்சை மிகுந்த பூவரசு, வெண்பச்சை வழியும் வம்பரம், அடர்பச்சை தேங்கிய பாலை, சிறுசிறு இலைகொண்ட துணிஞ்சி, பாசி பச்சை வாதநாரயணமரம், முள்கொண்ட இளந்தை எதுவும் அசையவில்லை. சூரியஒளி குடித்து இலைகள் எரிந்துவிடுவதுபோல் இருந்தது. வேலியாக இருந்த திருகு கள்ளி கோவேறு கள்ளியில் பச்சை பளபளத்தது. முட்கள் மின்னின.

பூமி வானம் முழுவதும் வெயில்மலர் வெடிப்பு அனல் விதைகளின் சிதறல்.

செம்மண் சுவர் வைத்து சீமையோடு வேயப்பட்ட ஆயாவீடு பூட்டிக்கிடந்தது.

“ஆயாவுக்கு என்ன?, ஆயா எங்க?“. ஆயாவைத்தேடிய விழிக்கோலங்கள் ஈரத்தில் மிதந்தன.

“முப்பது வருஷமாச்சி பொறந்த ஊருக்கு வந்து, எந்த நல்லது கெட்டதும் கிடையாது. நா யேன் போனேன்னு ஊருக்கே தெரியும். இன்னைக்கு மட்டும் என்ன? யேன் அவசரமா வரச்சொல்லி போன்செஞ்சிச்சி அத்த, ஆயா எங்க?“ மூச்சுவாங்கியது அவருக்கு.

உலர்ந்த உதட்டை நாக்கால் தடவி ஈரப்படுத்தினார் உப்பு கரித்தது.

தண்ணீர் குழாயிக்கு அருகில் வாழைமரத்தடியில் படுத்திருந்த சாம்பல்நிற பெட்டைக்கோழி அலகுதிறந்து இடைவிடாமல் தாடை அசைய சிவந்த சிறுநாக்கு துடிக்க இரைப்பு வாங்கியது.

“ஆயாவை தூக்கிக்கிட்டு மருத்துவமனைக்கு போயிருப்பாங்களோ? ஒருத்தருடைய செல்போனுக்கும் சிக்னல் கிடைக்கமாட்டேங்குது“ வெறுப்பில் அவர்முகம் சுருங்கி, “ என்ன நடந்திருக்குமோ?“ என்ற பயம் துளிர்க்க மனம் பதறினார். குனிந்து விழியோரத்தை வேட்டி முனையால் துடைத்துக்கொண்டார். கண்களில் சிவப்பு ஏறியது.

நீண்ட வரண்டாவில் ஆயா தனியடுப்பு வைத்து சமைப்பதால், ஆயாவின் அடுப்பு மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டு தனிஅறையாகிவிட்டது.

இந்த வீடு கட்டி குடிபோனபோதுகூட தனா இங்கு வரவில்லை. தனா இங்கிருந்துபோவதற்கு முன்பு இருந்தது வரகுவைக்கோல் வேய்ந்த சிறிய கூறைவீடுதான். அந்த வீடு இந்த வீ்ட்டிற்கும் மேற்கே இப்போது மாட்டுக்கொட்டாய் இருக்கும் இடத்தில் இருந்தது.

ஆயா மூங்கில்தட்டி கதவை புடவையை கிழித்த துணியால் கட்டிப்போட்டிருந்தது. தட்டிக்கும்மேலே முட்டையிடும் கோழி உட்கார்ந்திருந்தது.

கதவுக்கும் முன்னால் இருந்த கறுத்த மண்பானையை திறந்துப்பார்த்தார்.கோயில் கேணி தண்ணீர். கோயில்கேணி தண்ணீரைப் பார்த்ததும் அவர் முகத்தில் வெளிச்சப்பூ. விழிகள் பிரகாசித்து விரிய இமைகள் படபடத்தன. கண்ணீர் மணி கீழ் இமையில் உருண்டு தேங்கியது. கால்கள் லேசாக நடுங்க நெஞ்சு அடித்துக்கொண்டது. உதடு துடித்து வாய் இழுப்பட்டது. கண்ணீர் துளி கன்னத்தைதாண்டி கால்விரலில் விழுந்து சிதறியது.

பானைக்கு அருகில் இருந்த சவுக்கு குச்சி தட்டுக்கூடையில் கொட்டைத்திருகிய முந்தரிப்பழம் மஞ்சலும் சிவப்புமாக மினுப்பும் வழவழப்புமாக தழுவிகிடந்தன. அதன்மேலிருந்த சில்வர்சொம்பை எடுத்து தண்ணீர் மொண்டு குடித்தார். மண்பானை தண்ணீர் உள்ளே ஐஸ்போல் குளிர்ந்து இறங்கி புதுதெம்பைக்கொடுத்தது. உடம்பு முழுவதும் குளிர்தென்றலின் சுழல் ஓட்டம். தனா செம்பில் மீதியிருந்த குளிர்ந்த தண்ணீரை தலையில் தூறலாக தெளித்து தலையை உதரி வரண்டா முனையில் கால்களை நீட்டி உட்கார்ந்தார். காலில் செம்மண் புழுதி. தண்ணீர் துளிகள் பட்டு திட்டுதிட்டாக காட்சிக்கொடுத்தது.

“ஆயா முந்திரி பழம் பறித்துவிட்டுவந்து குளத்திற்கு குளிக்க போயிருக்குமோ? ஆயா நல்லா இருக்கணும்” வாழைமரத்தில் ஏறும் நத்தைபோல் அவர் முகத்தில் சோகம் ஊரும் வலி.

ஆயாவிட்டிற்கு மேற்கே இருந்த அந்தோணியார் கோயில் தெருவில் இருந்து பட்டுத்தறி நெய்யும் ஓசை இடைவெளியோடு இடைவிடாமல் ஒலித்தது. ஏதோ ஒரு வீட்டில் கைக்குழந்தை தாயை கதறி அழைக்கும் அவசர அழுகுரல் ஒலி.

தெப்பக்குளக்காட்டில் இருந்து முந்தரிபழம் பறித்து சுமந்துவந்த ரோஸ்லின்மேரி அக்கா “யாரு பாப்பா மவனா?“ எப்பப்பா வந்த?“ நல்லா இருக்கியா?. எங்களை எல்லாம் மறந்துட்டியேப்பா“ என்று தலைசுமையோடு நின்று சிரித்தது. வெற்றிலைகாவி படிந்த பழுப்பு பற்கள். கையில் பிடித்திருந்த கயிற்றில் சிவப்பு வெள்ளாடு, அக்கா தொடையில் தன் கழுத்தை தேய்த்து அங்கும் இங்கும் பார்த்தது. “மே“என்றது. அதன் பால் மடி சுரந்து கனத்து இருந்தது.

அக்காவின் பின்னால் நடந்துவந்த அக்கா புருஷன் இருதயம் அண்ணன் அதன் வலது பக்கத்தில்வந்து நின்றார். அக்காவின் மார்பு உயரத்திற்கு வளர்ந்து நிற்கும் குழந்தைபோல் தோன்றினார். முண்டா பனியனும் கத்தரிப்பூ வண்ண கட்டம்போட்ட கால்சட்டையும் தொளதொளவென்று இருந்தது. இடது தோளில் முந்தரிபழம் பறிக்கும் தொரட்டி அவரைபோல் இரண்டாள் உயரம். வலது தோளில் பிஞ்சு ஆட்டுக்குட்டி துண்டுபோல் கிடந்தது. இடது கையால் தனது பெரியமீசையை நீவிக்கொண்டு தொண்டையை கணைத்து “வாப்பா“ என்றார். உடம்பைவிட இரண்டுமடங்கு பெரிய குரல்.

“வரேண்ணா, வரேங்க்கா” நல்ல இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா? இப்பதான் வந்தேன். “ உட்கார்ந்திருந்த தனா எழுந்தார்.

“நல்ல இருக்கோம்ப்பா. வாரோம். அந்தோணியார் அருளால நல்லா இருக்கனும். சேசுவே” என்று தனாவின் முன்பு காற்றில் சிலுவைப்போட்டு தொடுவதுபோல் கைகாட்டி நடந்தது.

இருதயம் அண்ணன் தனது பெரிய வெள்ளைமீசையை இடது கையால்நீவிகொண்டே சிரித்தபடி சென்றார். சில மனைவிகள் கணவனுக்கும் தாயாகிவிடுகிறார்கள். அக்கா இல்லாமல் அவரை தனியாக பார்த்த நாளில்லை.

“ஆயாவுக்கு என்ன? ஆயா எப்படி இருக்கு? “ போகும் அவர்களை கேட்க நினைத்தார். அக்கா அண்ணனிடம் தனாவைப்பற்றி ஏதோ மெதுவாக சொல்லிக்கொண்டு போனார்கள். காதில் விழவில்லை என்றாலும் தனாவுக்கு புரிந்தது, பெருமூச்சு விட்டபடி வரண்டா மரத்தூணை பிடித்துக்கொண்டு மௌனமாக நின்றார்.

அவர்கள் வேதக்காரர்கள். தனா குடும்பத்திற்கு வயது மூத்த எல்லோருமே அண்ணன் அக்காதான், வயது குறைந்த எல்லோருமே தம்பி, பாப்பாதான். புருஷன் பொண்டாட்டியாக இருந்தாலும் அப்படிதான். அது ஒரு எழுதாநீதி.

“ஆயாவை பார்க்கணும், அவளைப்பார்கணும்“, கொதித்த பாலுக்குமேல் ஆடைபோல அவளைப்பற்றிய நினைப்பும் தவிப்பும். அவள் என்றால் ஜான்சி. அவளையும் தனாவையும் பற்றிதான் அக்காவும் அண்ணனும் மெதுவாக பேசிக்கொண்டு போனார்கள்.

“எப்படி இருக்கிறாளோ?“

படபடப்பாக வந்தது.மூங்கில் தட்டியில் கிடந்த ஆயாவின் புடவையை இழுத்து தரையில்போட்டு படுத்துக்கொண்டார். கால்கள் இரண்டும் வரண்டாவிற்கு வெளியே வாசலில் நீண்டு கிடந்தது, வெயில் கால்களை சுட்டது.

அறைமுழுவதும் முறுகிய பால்வாசம், விளக்கெண்ணெயில் தாலித்த புளிச்சகீரை மணம். தலைக்குமேல் தொங்கிய உறியில் இருந்த மோர்பானையை எடுத்து நீந்தும் வெண்ணை வாயிக்குள் நுழைந்துவிடாமல் மோரை மட்டும் குடித்தார். நாசியில் புதுமோர்வாசம், நாவில் புளிக்காதமோரின் மென்தித்திப்பு, தொண்டைக்குள் வெள்ளைரோஜா இதழ் இறங்கும் அனுபவம்

“பால் காய்ச்சுவதில் உள்ளது மோர்சுவையின் சூத்திரம். ஆயவுக்கும் அம்மாவிற்கும் மட்டுமே வசப்படும் மோர்சுவை“. மோர்பானையை உறியில் வைத்துவிட்டு மீண்டும் பாட்டியின் புடவையில் மல்லாந்து படுத்தார்.

கூடையில் கிடந்த முந்தரிபழவாசம் மூக்கில் கனமாக ஊர்ந்தது. தலைமாட்டில் இருந்த மண்குருதில் இருந்து தவுட்டு வாசம். மூக்கை தேய்த்து உறிஞ்சிக்கொண்டார்.

படுத்திருந்தவர் கண்கள் நிலைக்குத்திய இடத்தில் பழுப்பேறிய ஓலைச்சிலுவை. நெஞ்சு விம்மி விரிந்து ஒருகணம் நின்று துடித்தது. படபடப்பில் அனல் முச்சு எழுந்து நாசி முனையை சுட்டது. கண்களின் இமையில் தேங்கிய கண்ணீர் முத்துக்கள் பார்வையை மறைத்து கண்ணின் கடையில் உடைந்து வழிந்தோடியது. கன்னத்தில் சுடுநீர் கோடு. தனாவிற்கு துடைக்க தோன்றவில்லை. கைகள் செயலற்றுப்போய் அவர் உடலைவிட்டு தனியாக கழன்று கிடப்பதுபோல் உணர்ந்தார். உடலைவிட்டு உயிர் மட்டும் மேலே ஏறி அலைவதுபோல் அந்த ஓலைச்சிலுவையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஓலைச்சிலுவை ஊர்வல விழாவில் யாருக்கும் தெரியாமல் ஜான்சியிடமிருந்து பிடிங்கிவந்த ஓலைச்சிலுவை. பிடிங்கிவரும்போது அரிசி வெண்மையாக இருந்தது. முப்பது வருஷம் ஓடிபோய்விட்டது. கூரைவீட்டு எறவானத்தில் குத்திவைத்திருந்தான்.

ஜான்சியின் கதைதெரியாதபோது “ எந்த வேதக்காரசிறுக்கி என் பேரன வளைக்க கொடுத்தது.தூக்கி குப்பையில போடபோறேன்“ என்ற ஆயா மறக்காமல் எடுத்துவந்து தன் அறையில் வைத்திருப்பதைப் பார்த்தபோது ஆயாவை கட்டி அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற பரவசம். ஓலைச்சிலுவையை நெகிழ்ச்சியோடு பார்த்தார். தொட்டால் உதிர்ந்துவிடும் பழுப்பு.

தனாதான் அந்த ஊரிலேயே முதன் முதலில் கல்லூரிக்கு படிக்கபோனவன். தனா கும்பகோணம் கல்லூரிக்கு போவதும் வருவதும் பேருந்தில்தான், வீட்டில் இருந்து ஜெயங்கொண்டம்வரை மிதிவண்டி.

தனாவின் மிதி வண்டி அந்தோணியார் கோயிலை நெருங்கும்போது கோயில் கேணியில் ஜான்சி தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பாள். தூரத்தில் உள்ள சாலை வளைவிலிருந்தே அவளைப் பார்த்துவிடுவான்.

ஆட்கள் இல்லாதபோது சாக்கு வைத்து பேசச்சொல்லி மிதிவண்டியை திருப்பச்சொல்லும் துள்ளும்மனம், வண்டியை திருப்பிய உடன் திரும்பிவிடு என்று நொண்டியடித்து இழுக்கும். அவன் திரும்பி வந்ததையோ திரும்பிப்போவதையோ அவள் பார்த்ததாக தெரியவில்லை. நித்தம் அவள் தரும் தரிசனம் மட்டும் ஒய்ந்ததில்லை.

கேணிக்கட்டையில் நின்று குனிந்து வலக்கை இடக்கை என்று மாறி மாறி அவள் கயிற்றை இழுத்து தண்ணீர் இறைக்கும் வேகத்தைப்பார்த்தால் எங்கே கேணிக்குள் குப்புற விழுந்துவிடுவாளோ என்று பயமாக இருக்கும். போயி செவுளில் நாலு அறையவேண்டும்போல் கோபவம் வரும். குடத்தை இழுத்து கையில் பிடித்த பின்புதான் மூச்சுவிடுவாள். ஊருக்கே தண்ணீர் இறைத்துவிடுவாள்.

வடக்கு கட்டையில் ஒருகால், கிழக்கு கட்டையில் ஒருகால் வைத்து வடகிழக்கு மூலையில் நின்று குனிந்து அன்றும் அவள் கேணியில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டான். ஆள் உயர பட்டாம் பூச்சி பறப்பதுபோல் இருந்தது

அவளைத்தவிர வேறு யாரும் இல்லை. மிதிவண்டியை திருப்பலாமா? என்று நினைத்தபோது பெரும் சுழல்காற்று அள்ளிவந்த செம்மண் முகத்தில் அறைந்தது. வடக்கே இருக்கும் முந்திரிகாட்டில் இருந்து முந்திரி செத்தைகள் காடை கவுதாரிகூட்டம்போல தலைக்குமேலே பறந்து போகின்றன. இன்னும் நாலுமிதிதான் வீட்டிற்கு போய்விடலாம். மிதிவண்டி இருக்கையில் இருந்து எழுந்து கம்பிக்கு நடுவில் நின்று குனிந்து மிதிவண்டியை வேகமாக மிதித்தான். தொடையில் ஏறிய டைட்ஸ்பேண்ட் அவனை கீழே இழுத்தது. ஒருகையால் பேண்ட்டை இழுத்துவிட்டுகொண்டு மிதித்தான். .

அந்தோணியார்கோயில் கிணற்றில் “தொப்“ என்று ஏதோவிழும் பெரிய சத்தம்.

“ஐயோ!, கேணிக்குள் விழுந்துவிட்டாளோ?“ சடேன் பிரேக் பிடித்து, செருப்புதேய காலைஊன்றி திரும்பிப்பார்த்தான்.

ஜான்சி கோயில்கிணற்று செங்கல் கட்டையில் கேணியை குனிந்து பார்த்தப்படி நின்றிருந்தாள். காற்றில் தாவணி பாவடை பறந்து அவளை கீழே தள்ள முயற்சி செய்துகொண்டிருந்தது. குடமில்லாத ஈர கேணிக்கயிற்றை சுருட்டியபடி நிமிர்ந்து தனாவைப் பார்த்தாள்.

வேகம்கூடி இரைந்து வந்துகொண்டிருந்த காற்றில் செம்மண்பொடியும் புளியம்செத்தையும் முந்திரிசருகும் பறந்தது. முகத்தை நிமிர்த்தி விழிகளை விரித்துப் பார்க்க முடியவில்லை

தனா மிதிவண்டியை திருப்பி கோயில் கிணற்று அடியில் சென்று நிறுத்தினான். பாவாடை பறந்துவிடாமல் கையில் சுருட்டி பிடித்துக்கொண்டு இடுப்பளவு உயரமுள்ள கிணற்று கட்டையில் இருந்து ஜான்சி கீழே குதித்து மண்குடத்திற்கு அருகில் போய் நின்றாள். கைவளையலும் கால்கொளுசும் ஒலித்து அடங்கியது. அவள் காலடியில் இருந்த மண்குடத்தில் இளநீரி்ல் பால்கலந்த தடிப்போடு பாதி அளவு கிணற்று தண்ணீர்.

தனா ஜான்சியைப் பார்த்தான். சிறுசிறு பூபோட்ட நீலவண்ண பாவாடை. பச்சை தாவணி. கழுத்தில் கிடந்த வெள்ளைபாசிமணிமாலை மார்பு மேட்டில் ஏறி கீழே இறங்கி நெஞ்சுக்குழியில் சிலுவையோடு ஆடியது. கலாப்பழ வண்ண முகம் புன்னகையில் பூத்தது. நேர்வகிடு எடுத்து பின்னப்பட்ட இரட்டைசடை காற்றில் ஆடி நெஞ்சில் விழுந்து புறண்டது. வகுடோரத்தில் இருந்து விலகிய முடிச்சுருள் நெற்றில் அசைந்தது அழகின் அழகு. காதில் கவரிங் வளையம். அவள் ஆடையில் ஆட்டுப்பால் வாசம்.

தலையை குனிந்துக்கொண்டு “குடம் விழுந்துடிச்சி“ என்று கையில் இருந்த கேணிக்கயிற்றை இரண்டு கையாலும் கூச்சத்தோடு முறுக்கினாள். பளிங்குகல்லில் கறுப்புமணி பதிந்த விழிமலர்கள். இமை சிறகில் உலவியது.

தனா கட்டையில் ஏறி நின்று கிணற்றில் குதிக்கப்போனான்.

”ஐயோ! குடிக்கிற தண்ணி! யாராவது பார்த்தா பஞ்சாயத்தில் நிப்பாட்டிடுவாங்க, வேண்டாம்.” இமைகள் படபடக்க பார்த்தாள்.

“பழகிய குரல்தான். இதுவரை அறியாத இனிமை? சொற்கள் ஒலியால் ஆனவையா? தேனால் ஆனவையா? எங்கிருந்து பேசுகிறாள்? உதட்டிலிருந்தா? இதயத்தில் இருந்தா?“

தனா அவள் உதட்டைப்பார்த்தான். எடுத்து வாயில் போட்டுக்கொள் என்று சொல்லும் நாவல்பழம். அவளை குழந்தை என்று நம்பச்சொல்லும் சின்னஞ்சிறு வாய். நீண்ட நாசி. வலது புறம் பூ மூக்குத்தி. மேடுபள்ளம் இல்லாமல் இழைத்து செய்ததுபோன்ற கன்னம். எலும்பே இல்லாமல் உருவான உடம்போ? தொட்டு எடுத்து திருஷ்டிப்பொட்டு வைத்துக்கொள்ளும் மைவண்ண மேனி. வெட்கத்தில் வலது பக்க கீழ் உதட்டை வாயுக்குள் இழுத்துக்கொண்டாள். பவுச்சு காட்டுவதுபோல் அழகு.

காற்று மேலும் மேலும் சத்தத்தோடு உக்கிரத்தோடு அவளை அவன் பக்கம் தள்ளியது. அவள் பறந்து துடிக்கும் பாவாடையை இழுத்து துடைகளுக்கு இடையில் சொறுகிக்கொண்டு கட்டையை பிடித்துக்கொண்டு ஒசிந்து நின்றாள். பின்னழகு கற்சிலை செதுக்கு. அவனின் பார்வையை விளக்கிக்கொள்ள கேணியை குனிந்துப்பார்த்தாள். கேணி தண்ணீர் முழுவதும் செத்தைகள் மிதந்தன.

எந்த பெண்ணையும் இப்படி விழிவிரித்துப்பார்த்தவன் இல்லை. அவனும் சங்கோஜத்துடன் முகம்திருப்பினான். வேகமாய் பறந்துவந்த முந்தரி சருகுகள் அவன் முகத்தில் அறைய தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தான்.

“ஐயோ“ என்று பாய்ந்து அவளும் கிணற்குள் குதித்தாள். எப்படி அவ்வளவு உயர கட்டையை நின்ற இடத்தில் இருந்து தாண்டி குதித்தாள். கிணற்றுநீர் முக்கால்கிணறுக்கு உயர்ந்து மீண்டும் அவர்கள் மேலேயே விழுந்து அவர்களை அபிஷேகம் செய்து மறைத்துக்கொண்டது.

இருவரும் கிணற்றுக்குள் விழுந்த சத்தம் காற்றின் வேகத்தில் ஊருக்குள் கேட்கவில்லை. இரண்டு மூன்று முறை நீர் அலை குதிப்பில் துள்ளி அமிழ்ந்து தண்ணிருக்குள் மூழ்கி தண்ணீர் குடித்தவளைப் பார்த்தபோதுதான்அவளுக்கு நீந்த தெரியாது என்பது தனாவுக்கு புரிந்தது.

பரபரப்பாய் அவளை அள்ளி அணைத்து தூக்கி கிணற்றுப் படிக்கட்டில் உட்கார வைத்தான். தண்ணீர் மூக்கில் ஏறியதில் புறையேறி மூச்சுதடுமாறி விழிபிதுங்கி முகம் வெளிறினாள். பயத்தில் மிரண்டு அவள் உடம்பு நெல்நாற்று நுனிப்போல் மெல்ல நடுங்கியது. அவன் அவள் தலையை மெல்லத்தட்டி தண்ணீரை கக்க வைத்தான். ஆவாரம் குழையில் தலைதேய்த்து குளித்த வாசம் அவள் தலைமுடியில்.

கிணற்று தண்ணிருக்குள் கால்களை இலகுவாக மிதிவண்டியை மிதிப்பதுபோல மிதித்துக்கொண்டு கைகளால் தண்ணீரை லேசாக தள்ளியபடி மிதந்துக்கொண்டு இருந்தவன் தண்ணீரை அள்ளி அவள் முகத்தில் அடித்தான். அவள் முகம் சிலுப்பி குழந்தைபோல இரண்டு கைகளாலும் முகத்தை துடைத்துக்கொண்டாள்.

தண்ணீரில் வெள்ளைஜாக்கெட் நினைந்து உடம்போடு ஒட்டியதில் அது உடம்புபோலவே ஆகியிருந்தது. அங்கங்கள் துளங்கியதில் வெட்கப்பட்டு இரண்டு கைகளாலும் நெஞ்சை மறைத்துக்கொண்டு சுவர் பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள். தண்ணீரை செதுக்கி எடுத்த சிலைபோல் இருந்தாள். உடம்பில் இருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவள் தலையில் ஒட்டியிருந்த செத்தையை எடுத்து தண்ணீரில் போட்டான்.

தனாவிற்கு அவள் பெண் என்பதும், அவளை அணைத்து தூக்கினோம் என்பதும் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. தலையை உதறிக்கொண்டு கூச்சத்தில் முகம் திருப்பினான். அவனையும்மீறி கண்கள் அவனை அவளிடமே இழுத்துப்போனது. கல்லூரிபெண்கள் வலியவந்து பேசும்போதும் சாதாரணமாய் பார்த்துபேசிவிட்டுபோகும் கண்ணுக்கு என்ன ஆகவிட்டது?

முகத்தை திருப்பாமல் விழியோரத்தால் அவன் தண்ணீரில் மிதப்பதை ஆச்சரியமாய் பார்த்தாள்.

“பைத்தியம்! நீந்த தெரியாம ஏங் கெணத்துல குதிச்ச?” தனா தனது சட்டையை கழட்டி அவள்மேல் எறிந்து “போட்டுக்க“ என்றான்.

அவள் தனாவின் சட்டையை ஒதறிப்போட்டபடியே “நீங்க விழுந்துட்டிங்கல்ல“ அவள் முகம் திருப்பவில்லை.இன்னும் அவள் உடல் நடுங்கிக்கொண்டு இருந்தது.

அவன் சிரித்தான்

“நீ மேலே ஏறிப்போ, நான் குடத்தை தேடி எடுத்துட்டுவறேன்“

“வேண்டாம், நீங்களும் வாங்க. அப்பதான் மேலே போவேன்“ என்று கெஞ்சினாள். மார்பு ஏறி இறங்கியது. வாய்விட்டு அழுதுவிடுவாள்போல் முகம் வெளிரியது. அவன் உதடுபிரிக்காமல் சிரித்தான்.

“கரோலின் ஊட்டுல பாதாளகரண்டி இருக்கு, எடுத்துட்டு வந்து தேடிக்கிறேன்” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினாள். தண்ணீருக்குள் கிடந்த அவளின் கால்கள் நடுங்கியதில் சிறு சிறு அலைகள் நூல்போல் பிரிந்தது. நடுங்கும் அவள் பாதத்தை மெல்ல அழுத்தி “பயப்படாத, நான் இருக்கேன்ல“ என்றவன் அப்படியே தண்ணீரில் பின்னால் சாய்ந்து “ஒருதரம் மூழ்குறேன், கிடைத்தால் எடுத்துடலாம்“ என்று மூழ்கிவிட்டான்.

உதடு துடிக்க தவித்து அவனை தேடினாள்.. அவன் எழுந்து வரவில்லை. பயம் கூடியது. கண்கள் கலங்கி நெஞ்சு உடைந்து அழுகை பீறிடும்போல் இருந்தது. மீண்டும் குதித்துவிடலாமா? என்று உட்கார்ந்து இருந்த படிக்கல்லில் இருந்து அதன் முனைக்கு நகர்ந்தாள். பாதத்தில் இருந்த நடுக்கம் தொடைவரை ஏறியது.

அவன் ஆவேசத்துடன் தண்ணீரை கிழித்து வெளிவந்தான். அந்த வேகத்தில் எழுந்த அலைஅவள் மார்பில் மோதி வழிந்து அவன் முகத்தில் அடித்தது. நழுவிகீழே விழப்போனாள் அவன் மார்பில் தனது வலது காலை ஊன்றி. சுவற்றை பற்றிக்கொண்டாள்.

ஆழத்தில் இருந்து வெளிவந்த ஆவேசத்தில் “ஆ“ என்று வாயையும் திறந்து மூச்சுவிட்டு மூச்சை இழுத்தான். தலைமுடி நெற்றில் வழிந்து கண் இரண்டையும் மறைத்து இருந்தது. அவனால் பார்க்கமுடியவில்லை.

அவள் விழிவிரித்து அவனை ஆர்வமாய் பார்த்தாள். அவனை மிதித்ததில் நாணினாள். அத்தனை நெருக்கத்தில் அவனை பார்த்ததும் நெஞ்சு துடித்தது.கைகள் நடுங்கியது. அவன் தன்னை கட்டிப்பிடித்து தூக்கினான் என்ற நினைப்பு வர நெஞ்சு படபடக்க மூச்சுதிணறியது. இமைகளை மூடித்திறந்தபோது கண்கள் கலங்கி இருந்தன. தொடை நடுக்கத்தை போக்க கைகளை கோர்த்து மடியில் தொடையிடுக்கில் வைத்து இருக்கிக்கொண்டாள்..

இரண்டு மூன்று முறை மூச்சு வாங்கியபின்பு தலைமுடியை நெற்றி தெரிய ஒதுக்கி அவன் அவளைப்பார்த்தான்.

அவள் தன் கண்ணீரை மறைக்க முகத்தை திருப்பிக்கொண்டாள். அவள் குலுங்கி அழுவதை முதுகு காட்டியது. அவனுடைய சட்டையில் அவள் இளைஞன்போல் இருந்தாள்.

தனா தண்ணீரை அள்ளி அவள் முதுகில் அடித்து “ஏய் அழுமூஞ்சி, நீ மேலபோ நான் எடுத்துட்டு வந்துடுவேன்” என்று தண்ணீரில் மிதந்த அவளின் கருப்புவெள்ளை பாதத்தை தனது இரண்டு கைகளில் ஏந்தினான். அவள் கால்களை வெடுக்கென்று இழுத்துக்கொண்டு “வேண்டாம்,மூழ்க வேண்டாம், போவலாம், எனக்கு பயமா இருக்கு“ என்று குழந்தைபோல் பேசி மீண்டும் அழ தயாரானாள்.

“சரி சரி. அழுது வைக்காத. சுரம்வந்து படுத்தபோவுது“ என்று கூறியவன் “இன்னும் ஒரே முறை“ என்று மூழ்கி, மூழ்கிய வட்ட அலைத் தடம் முடிவதற்குள் சில்வர் குடத்துடன் எழுந்து வந்தான்.

குடம் கிடைத்த சந்தோஷத்தைவிட அவன் எழுந்துவிட்ட சந்தோஷத்தின் மலர்ச்சி. கண்களில் பட்டாம்பூச்சி. கையை நீட்டி அவன் பனியனை இழுத்தாள். குழந்தைபோல் கலங்கிய கண்ணோடு சிரித்தாள்.

“போகலாம் யாராவது பார்த்தால் ரெண்டுபேரும் ஒண்ணா பஞ்சாயத்துல நிக்கணும்” மூக்கை உறிஞ்சினாள். குமரியில் ஒரு குழந்தை துளிர்த்தது.

“ஒண்ணான்னா நான் தயார்“ என்று அவள் கால் கொளுசில் தனது வலது கை ஆள்காட்டிவிரலை கோத்து பாதத்தை தூக்கினான்..

“காலை இழுத்துக்கொண்டவள்,இது என்ன பழக்கம் பொம்பள புள்ளைய தொடறது“ என்று பொய்கோபம் காட்டினாள். .

“நாங்கதான் ஆம்பள குதிச்ச கிணத்துல துள்ளி ஆம்பள மேல குதிச்சதா?“ என்று தண்ணீரை அள்ளி அவள்மேல தெளிக்கபோனவன். திட்டுவாள் என்று அள்ளிய தண்ணியை தனது வாயில் நிரப்பிக்கொண்டான்.

“குதிச்சிருந்தா குதிச்சிருக்க மாட்டோம், விழுந்ததாலதான் பதறிபோய் குதிச்சோம்” என்று அவள் வெட்கத்துடன் குனிந்து தண்ணீரைஅள்ளி அவன் முகத்தில் அடித்து படிக்கட்டு கல்மேல் எழுந்து நின்றாள். அவன் காலுக்கு கீழே அண்ணாந்து பார்த்து நின்றதை பார்த்தவள், அவசரமாய் பாவாடையை சுருட்டி துடையில் இடுக்கிக்கொண்டு வயிற்றை சுருக்கி வெடுக்கென்று உட்கார்ந்து கொண்டாள்.

அவசரமாய் வாயிக்குள் நிரம்பி இருந்த நீரை அவளுக்கு அருகில் சுவற்றில் பீச்சி அடித்தவன். “என்ன. என்ன” என்று பதறினான்.

“நீங்கள் தள்ளி அந்த முனைக்கு போங்க,அப்பதான் நான் மேலே ஏறி போவேன்“ என்று முறைத்தவள் “ஒவ்வொரு படிக்கல்லும் காலை தூக்கி வைக்கற தூரத்திலா இருக்கு?” என்று முனுகினாள்.

“நான் இங்க நின்னா என்ன?“ என்று நெற்றிய சுருக்கி அவளைப்பார்த்தவன். சட்டென்று முகம் பிரகாசிக்க அவள் பார்க்காமல் சிரித்துக்கொண்டு நீந்தி அடுத்த ஒரத்திற்கு சென்று தண்ணீரில் மல்லாக்க வானம்பார்த்து சிரித்தபடி மிதந்தான். அவன் தண்ணீர் இல்லாத சில்வர் குடம் தலைகீழாய் கவிந்து மிதந்தது.

அவள் எழுந்து ஒவ்வொரு படியாக மேலே ஏறினாள். தனாவிற்கு நாசியில் ஏதேதோ பூவாசம். தனக்குள் ஆழ்ந்தவன் தலையை உதறி படியேறும் அவளைப் பார்த்தான் ஒரு படியில் குழந்தையாய் மறுபடியில் குமரியாய் அவள் மேலே மேலே ஏறுவது வானத்தை நோக்கி ஏறுவதுபோல் அவனை பறக்கவைத்தது. அவள் அவனை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே ஏறினாள். முகம் முழுவதும் ஆனந்த ஜொளிப்பு.

அவன் மீண்டும் தண்ணீரை வாரி தன் வாயுக்குள் நிரப்பி வானத்தை நோக்கி பீச்சி அடித்தான்.

மேல்படியில் நின்று “குடிக்கிற தண்ணிய எச்சி படுத்தாதிங்க“ என்றாள் சத்தமாக. அவன் ஏதோ சைகை செய்ய “இச்சி“ என்று சிணுங்கினாள்.

தனாவின் சைக்கில் காற்றால் உந்தப்பட்டு தூரத்தில்போய் முன்சக்கரம் வானம்பார்க்க விழுந்து கிடந்து. தனாவின் செருப்பு தண்ணீரில் மிதந்துசென்று புளியமரத்தின் வேரில் சிக்கி நின்றது.

மல்லாந்து நீந்திக்கொண்டு இருந்த தனா நெற்றியில் சிறுகல்லொன்று விழுந்து சிதறியது. சுரீர் என்று வலிக்க வானத்தைப்பார்த்தான். என்ன என்று சுதரிப்பதற்குள் சுரீர் படீர் சுரீர். தண்ணீரில் மூழ்கி எழுந்தான். நீர்நூல் தறியை வானம் பூமிவரை விரித்துவிட்டது. கட்டையில் நின்ற ஜான்சியை காணவில்லை. மேககூட்டத்திற்கு மேலே ஏறி வானத்தில் மறைந்துவிட்டாளோ? அவன் விழிகள் தவித்து தேடின.

பின்னால் நின்று அவன் தலைக்குமேலே எட்டிப்பார்த்தவள். அவன் தவிப்பதைப்பார்த்து “இங்க நிக்கிறேன், சீக்கிரம் மேல ஏறிவாங்க” என்றாள் சிரித்தப்படி. நீந்தியபடியே அவன் அண்ணாந்துப்பார்த்தான் அவள்மீது பொழிந்த மழைத்துளிகள் அவன் வாயில் வழிந்து தித்தித்தது.

“நீ்ங்க வந்தாதான் ஏறுவேன்ன, விட்டுட்டு போயிட்டியே“ அவன் கத்தியது மழையில் சிதறியது.

“அப்புறம் குதிச்சுறுவேன்” என்று கிணற்று கட்டையில் ஏற முயன்றாள்.

“ஏய்..இரு இரு“ என்று குடத்தை எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாக படியேறி மேலே வந்தான். அவன் செருப்பை எடுத்துவந்து காலடியில் போட்டாள். காற்றில் கீழே விழுந்து கிடந்த தனாவின் சைக்களை நிமிர்த்திக் கொடுத்தாள். அவன் சட்டையை கழட்டி பிழிந்து நீட்டினாள். அவன் அவள் கையை தொடாமல் வாங்கிக்கொண்டே “நீயே போட்டுகிட்டுபோ“ என்றான்.

“நீங்க போட்டுகிட்டுபோங்க, வீட்டில சட்டை எங்கன்னு கேட்டா என்ன சொல்லுவிங்க” என்றபடி நெருங்கி அவன் முகத்தில் வழிந்த மழைநீரை தனது தாவணி முந்தானையாள் துடைத்தாள். சீற்றத்தோடு சுழன்றடிக்கும் மழைதிரை அவர்களை மறைத்திருந்தது.

“நீ மட்டும் ஆம்பளைய தொடலாமா?“ என்று முறைத்தப்படி அவள் கையை தட்டிவிட்டிவிட்டான்.

அவள் கையை உதறியப்படி “அப்பா! கோவத்தபாறு” என்று முகத்தில் வழிந்து வாயிக்குள் புகுந்த மழைநீரை விழுங்கினாள். தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

நெருங்கி அவன் அருகில் வந்து “நான் எங்க ஆம்பளைய தொட்டேன். என் உசுறல்ல தொட்டேன்” என்று பரவசமாய் அவள் பாதம்பட்ட அவன் நெஞ்சில் ஒத்தடம்கொடுப்பதுபோல் சாய்ந்தாள்.

அவன் கண்கள் கலங்கிவிட்டது. நெஞ்சு வெடிப்பதுபோல் இருந்தது. இதயம் நழுவி நழுவி வயிற்றுக்குள் இறங்குகிறதா? வயிறு ஏறி ஏறி நெஞ்சை நிறைக்கிறதா? கால்களுக்கு கீழே பூமி இல்லை. தலைக்குமேல வானம் இல்லை. மழையில்தான் நிற்கிறான் ஆனால் மழையில்லை. எங்கும் சுகந்தத்தின் மலர்மணம். உடல் கரைந்துவிட்ட கணம். உயிரின் திருநடனம். அவளை இறுக்கி நெஞ்சுஉடையும் அளவுக்கு அணைத்து பூமியில் விழுந்து உருளவேண்டும் என்ற வெறி. தாங்கமுடியாமல் அவளை விலக்கி தள்ளிவிட்டு ஓங்கி கிணற்று சுவற்றில் குத்தினான். செங்கல் ஒன்று பெயர்ந்து கிணற்று தண்ணீரில் விழுந்து சத்தத்தோடு அலை எழுப்பி மறைந்தது. உணர்ச்சி கொந்தளிப்பில் காற்றில் பறந்து வந்து பக்கத்தில் கிடந்த இலந்தைமுள்ளில் காலை தூக்கி அழுந்த வைத்து தேய்த்தான்.

தண்ணீரில் ஊறியிருந்த பாதம் சிகப்பாகி மழைநீரில் கரைந்து சிகப்பு கோடுகளாக பிரிந்து ஓடியது. முகம்கோண சிரித்தான்.

பாய்ந்து மூச்சு வாங்க “உனக்கு என்ன பைத்தியமா?“ என்று அவனை பிடித்து தள்ளினாள். கிணற்று கட்டையில் மோதி தடுமாறி நின்றான்.

அவன் அருகில் சென்றவள் தரையில் அப்படியே சேற்றில் பாவாடை தாவணி அழுந்த உட்கார்ந்து அவன் காலை தூக்கி மடியில் வைத்து நீட்டிக்கொண்டு இருந்த முட்களை புடுங்கி எறிந்தாள். பாதத்தில் மழைநீரை அள்ளி ஊற்றி கழுவி முறிந்த முட்களை பல்லால் கடித்து இழுத்தாள். அவள் வாயெல்லாம் ரத்தம்.

“போதும் விட்டுடு, நீ இங்கிருந்து போயிடு. என்னால் முடியல“ என்று கத்தி காலை உதறியபடி அவளை இழுத்து அணைக்க நீட்டிய கையை மடக்கி தன் நெஞ்சில் ஓங்கி அறைந்தான்.

அவள் துள்ளி எழுந்து அவன் இரண்டுகாலிலும் தனது காலை வைத்து அழுத்தி ஏறி எக்கி அவன் உதட்டில் வெறிகொண்டவள்போல் முத்தமிட்டாள். மழை பொழிந்துக்கொண்டே இருந்தது.

மூச்சுவிடுவதற்காக வாயை எடுத்தவள் “உங்களை இங்க வரவைக்கதான் குடத்தை கேணிக்குள்ள வேணுமின்னே போட்டேன். “ என்று அவன் மார்பு சதை கையில் வரும் அளவு கிள்ளினாள். “நீங்க பத்தாவது பாஸானப்ப மிட்டாய் கொடுக்க வந்தப்ப பரிகொடுத்த மனசு, எத்தனை வருஷமா காத்திருக்கிறது?” என்று அவன் நெஞ்சை தடவி அதில் மீண்டும் சாய்ந்துக்கொண்டாள். அவன் அவளை அணைக்க தோன்றாமல் சிலைபோல் நின்றான். இருவருக்கும் மழைபெய்கிறது என்ற நினைப்பே இ்ல்லை.

அவனால் பேசமுடியவில்லை ஆழ்ந்த மௌனத்தில் அமிழ்ந்து இருந்தான். கொட்டும் மழைக்குள்ளும் அவன் நாசியில் ரோஜா மல்லிகை மரிக்கொழுந்து மணம். எங்கோ ஆழத்தில் யாரோ நருமணத்தைலத்தை கவிழ்க்கிறார்கள்.

அவன் தவித்து மிரண்டு விழித்து யாரையோ பார்ப்பதுபோல் இலக்கின்றி அவளைப் பார்த்தான்.

அவள் அவனை உலுக்கினாள். “ஆம்பளையாம்” என்று பவிச்ச காட்டி சிரித்து நெஞ்சில் குத்தினாள். பஞ்சில் குத்துவதுபோல் இருந்தது அவளுக்கு. உடம்பு முழுவதும் எடை கூடிவி்ட்டதுபோல் உணர்ந்தாள்.

ஆட்டுப்பால்வீச்சம் அடிக்கும் அவளின் ஒவ்வொரு நொடிப்பும் ஒரு மலரென மலர்ந்து மணத்தது. வெறும் முள்ளும் தழையும் மண்டிய இந்த ரோஜாசெடியில்தான் எத்தனை வாசமிக்க அழகுபூக்கள். இது என்ன மாயம்?

மழையில் நனையும்போதும் உடல்சுட்டது. உடல் சுடும்போதும் உள்ளே பெரும் பனிக்கட்டி நழுவும் குளிர். அவனுக்கு நெருப்பை அள்ளி திங்கவேண்டும்போல் இருந்தது. அவளே பெரும் நெருப்பென எரிவதாய் பதரிப்பார்த்தான். அவள் கருப்பு கனல். விழுங்கிவிட நினைத்தான். தலையை உதறிக்கொண்டு ஒரு கையில் மட்டும் சட்டையை மாட்டி தொங்கவிட்டுக்கொண்டு இனி அங்கு நிற்கக்கூடாது என்று சைக்கிளை தள்ளிக்கொண்டு வீட்டுக்கு மெல்ல நடந்தான். அவளிடம் எதுவும் சொல்லவில்லை.

மழை நீர் காலுக்குகீழே மண்ணை அரித்துக்கொண்டு காலை இழுப்பதுபோல் ஓடியது. அவள் அவன்போவதை விழி இமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள். நெஞ்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. அதில் அவன் முகத்தை ஏற்றி வைத்து ஊஞ்சல் ஆட்டவேண்டும்போல் பரிதவிப்பு. இதழ் இழுபடாமல் சிரித்தாள். மழையைதாண்டி கண்ணில் நீர் முட்டியது.

அவள் பானையை எடுத்துக்கொண்டு வேறுவழியாக வீட்டிற்கு நடந்தாள். தொடைகள் இறுகி கனத்திருந்தன. காலை தூக்கி தூக்கி வைக்கவேண்டும்போல் இருந்தது. யானை நடப்பதுபோன்று குழைவும் மதர்ப்பும். அவனுடைய வாசம் மழையில் கரையாமல் அவள் உதட்டின் மேலேயே உட்கார்ந்து வருவதுபோல் சுவாச சுழற்சி. அடிக்கடி மூக்கு நுனியை பார்த்துக்கொண்டாள். வானத்தையும் பூமியையும் அடைத்து வளர்ந்துவிட்டது போன்ற பூரிப்பு. பெரும் பாரத்தை இழுப்பதுபோன்ற உடல்கனம். தூரத்தில்போகும் அவனை ஒரு குழந்தைபோல் அள்ளி நெஞ்சில் போட்டு தாலாட்ட முடியும் என்ற காதல் கர்வம். சிரிக்கிறோம் என்பதே தெரியாமல் சிரித்தபடி மழையில் துள்ளிக் குதித்தோடினாள்.

அவள் ஒட்டத்திற்கு மழையும் கொளுசும் வளையலும் நனைந்த பாவாடையின் சரசரப்பும் இசைகோலம் போட்டது.

எங்கிருந்தாலும் அவன் கல்லூரி போகும்போதும் வரும்போதும் தண்ணீர் எடுக்க கோயில்கேணிக்கு வந்துவிடுவாள். ஆட்கள் இருந்தாள் கண்களால் பேசுவாள். ஆட்கள் இல்லாவிட்டாள் உதட்டாள்பேசுவாள். சிலநேரம் காதினிக்கும் சிலநேரம் வாயினிக்கும். அவர்கள் பேசுவதும் பழகுவதும் ஊருக்கும் உறவுக்கும் தெரிந்துவிடும் என்று நினைத்தபோதெல்லாம் தெரியாமல் ஒன்று திரையிட்டு காத்தது. அது காதல் தேவதையா?

காதலிக்கும்போது காதலியை தவிர உலகம் முழுவதும் ஜடமாகிவிடவேண்டும் என்று நினைக்காத காதலர்கள் யார்? அவளோடு யார் இருந்தாலும் அவனுக்கு வெறுப்பாக இருந்தது. எப்போதும் அவள் தனித்திருக்கவேண்டும் என்று மனம் ஏங்கியது.

கல்லூரி இல்லாத நாட்களில் ஆடுதேடுவதுபோல அவன் வீட்டுக்கே வந்துவிடுவாள். அம்மாவிற்கு கைவேலை உதவிசெய்வாள். அவன் அம்மாவை அக்கா என்று அழைப்பாள். அதுதானே அந்த ஊரின் வழக்கம்.

அவன் சிலநேரம் அந்த உறவு முரணைச்சொல்லி பரிகசிக்கும்போது சீறுவாள் கோபிப்பாள் சிணுங்குவாள் சிலநேரம் காரணமே இல்லாமல் எதையோ நினைத்து அழுவாள். மென்மையை கிள்ளிப்பார்ப்பதுதானே மனித இயல்பு. அதை அவன் ரசித்தான்.

வேதக்காரதெரு முடிந்து கிழக்கே அவன்வீடு தனியாக புளியந்தோப்பில் இருந்தது. மற்ற இந்துக்கள் வீடு குளதிற்கு கிழக்கேயும் தெற்கேயும் தூரத்தில் உள்ளது. .

காலை மழைபேய்ந்து ஓய்ந்தால் மாலை வாசலில் பாய்போட்டு படுத்து தூங்கலாம், மணல் கலந்த செம்மண் பூமி.

மழைபேய்ந்து ஒய்ந்த ஒருநாள் தனா இரவு சாப்பாடு முடிந்து வாசலில் கயிற்றுகட்டிலில் உட்கார்ந்து படித்துக்கொண்டு இருந்தான். தலைக்குமேலே ஈசல்கள் பறந்து விளக்கை தேடிபோய் விழுந்து சிறகுகளை இழந்து நடந்துகொண்டிருந்தன.

“ஒருநாள் வாழ்க்கை“.

புளியம்பூக்கள் சிந்துவதுபோல பறந்து வந்துக்கொண்டே இருந்த ஈசல்களை அவன் ரசித்துக்கொண்டு இருந்தன்.

ஒழுங்கையில் ஆணும் பெண்ணும் தலையில் கூடையை கவிழ்த்துக்கொண்டு மண்ணெண்ணெய் விளக்கு எடுத்துக்கொண்டு கிழக்கே காட்டுப்பக்கம் போனார்கள்.

“முயல் நரி வேட்டையாக இருக்கும்“

விடுமுறை நாட்களில் தன்னுடன் வந்து விளையாடிக்கொண்டு இருக்கும் லூர்துமகன் மைக்கேலை அழைத்து “எங்கடா இந்தநேரத்தில போறீங்க?“ என்று கேட்டான்.

கையில் கண்ணாடி மண்ணெண்ணெய் விளக்கை எந்திக்கொண்டு,தலையில் கூடையை கவிழ்த்து நடந்து கொண்டிருந்த மைக்கேல் ஒழுங்கையில் இருந்து ஓடிவந்து “ஈசல் புடிக்கப்போறோம் நீயும் வாண்ணா” என்று அவன் கையை பிடித்து இழுத்தான்.

படித்த புத்தகத்தை அப்படியே கட்டிலில் எறிந்துவிட்டு ஈசல் பிடிப்பதைப் பார்க்க தனாவும் போனான். ஈசல்பிடிக்கபோவது ஒரு சாக்குதான். அவன் கண்கள் தேடி தவித்து அலைந்தன.

செம்மண்ணில் கறையான் புற்று வளர்ந்துள்ள இடங்களையும், சாணிக்கொட்டி இருக்கும் குப்பைகுழிகளையும் பார்த்து ஆளாளுக்கு ஒரு விளக்குடன் புற்றுக்கு முன்னால் உட்கார்ந்தார்கள். ஒரு புற்று முன்னால் விளக்கைவைத்து தனாவை அங்கு உட்காரவைத்த மைக்கேல் புற்றுக்கு முன்னல் ஒரு குழிதோண்டினான். குழிக்கு முன்னால் ஒரு விளக்கு. பக்கத்தில் குழிக்குள் வந்துவிழும் ஈசலை அள்ளிப்போட கூடை.

நிலா மேகமூட்டத்தில் மறைந்து நீந்தியது. வானில் ஒரு சாம்பல் சீலை அசைவதுபோன்ற நிழல்வெள்ளம். கண்காணும் இருட்டு, உருவங்கள் தெரிந்தது. வண்ணங்கள் தெரியவில்லை. மரம் செடிகொடி ஆண்பெண் அனைவரும் நிழல் வடிவங்களாய் உருகி உட்கார்ந்து இருந்தார்கள். அனைவருக்கும் ஒரே வண்ணம். விளக்கிற்கு முன்னால் உள்ள முகத்தில் மட்டும் தழல் நடம் . புகைபோன்ற வெளியும் நிழல் உலக அழகும் அவ்விடம் சூழ்ந்து இரவாகிக்கொண்டு இருந்தது.

மைக்கல் நடந்தபடி குழிக்குள் காகிதத்தில் இருந்த ஈசல்கொட்டை பொடியை தூவினான். “இந்த பொடி வாசத்துக்கு ஈசல் நிறைய வரும்ண்ணா“ என்று கூறியபடி அவனுக்கு உரிய குழியை நோக்கிப்போனான்.

தலைக்குமேல் ஈசல்கள் பறந்துக்கொண்டு இருந்தான. சில ஈசல்கள் அவன் தலையிலும் தோளிலும் விழுந்து நடந்தன. கூச்சமாக இருந்தது. நிறைய ஈசல்களின் சிறகுகள் புற்றை சுற்றி கொட்டிக்கிடந்தது.

தனாவிற்கு ஏக்கம் கூடியது. தூர தூரத்தில் உள்ள ஒவ்வொரு புற்றையும் அதன் விளக்குக்கு முன்னால் உள்ள முகங்களையும் கூர்ந்துப்பார்த்தான். அவன் கண்கள் வெறுமையில் களைத்து ஏமாந்தன.

“அவளுக்கு ஈசல் பிடிக்காதோ? அவள் அம்மா வந்திருக்கிறதா?

“ ஊகூம்“ முனுமுனுத்து தனா தலைகவிழ்ந்து கொண்டான்.

மனதில் சுமை ஏறியது. அவன் குழியில் எப்பவாது ஒன்று இரண்டு ஈசல் வந்து விழுந்தது அதுவும் கரையேறி போனது. கால்குழிகூட நிரம்பவி்ல்லை. தனாவுக்கு வியர்த்து மூச்சு வாங்கியது. எழுந்து போய்விடலாமா? என்று நினைத்து மைக்கேலை கண்களால் தேடினான்.

புற்றுகள் எல்லாம் நாககூட்டங்கள்போல நிழலாகி நின்றன. மைக்கேல் தூரத்தில் கள்ளிப்புதருக்கு அருகில் இருந்த புற்றுமுன் சம்பளம்போட்டு ஆடாமல் உட்கார்ந்து இருந்தான். மண்பொம்மைபோல் தோன்றினான். அவன் தலையை சுற்றி நிறைய ஈசல்கள் பறந்தன. அவன் முன்னால் உள்ள குழியில் ஈசல் நிறைந்து துள்ளி வழிவது நிழல் அலையாக தெரிந்தது.

தனா மெல்ல சிரித்தபடி மைக்கேலை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

தேன்கூடொன்று பிய்ந்து நெஞ்சில் விழுந்ததுபோல் ஒரு ஈசல் உருண்டை அவன்மீது மோதி சிதறியது. தனா திடுக்கிட்டு கூசி திரும்பி அண்ணாந்துப் பார்த்து மரக்கிளை எதுவும் அசையாததால் எதிரில் இருந்த புற்றைப் பார்த்தான். விளக்குக்கு முன்னால் ஜான்சி சத்தம்மில்லாமல் பச்சரிசிபல்லில் விளக்கொளி மின்ன சிரித்துக்கொண்டு இருந்தாள். தனாவிற்குள் பொன்னொளி பூக்கும் மின்னல்.

விளக்கொளியில் அவள் முகம்மட்டும் சிவந்த பனிக்கல்போல ஒளி சொட்டியது. இளங்காலை அருணன் எழுந்ததுபோல் அந்த இடத்தில் மட்டும் ஒளிஓவியம். தனாவிற்கு எல்லா விளக்குகளும் நட்சத்திரங்களாகி அந்த இடத்தை வானமாக்கிவிட்ட பரவசம்.

கைவளையல் ஒலிக்காமல் இருக்க வளையலை முழங்கையில் ஏற்றி திருகி உயர்த்தி நிறுத்திவிட்டு அவனை கைக்காட்டி அருகில் அழைத்தாள். அவள் முகத்தில் முடிசுருள் வழிந்து சிறு நாகக்குழவிபோல் அசைந்து நெளிந்தது. அவன் கண்களில் அழகும் தவிப்பும் கலந்த நடனம்.

அவன் யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றிப்பார்த்தான். அடுத்த ஈசல் உருண்டை வந்து கன்னத்தில் அடித்தது. அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் பக்கத்தில் இருந்த ஆவரம்பூங்கொத்தை ஒடித்து வீசினாள்.

நெஞ்சில் அடித்துவிட்டு சிதறி விழுந்த ஆவரம்பூ மணத்தது. பொன்மணி குண்டுகள். கைநீட்டி ஒரு பூவை மட்டும் எடுத்து முகர்ந்துப்பார்த்தான்..

“யாரும் பார்ப்பார்கள் என்ற பயமே அவளுக்கு கிடையாது“ மேலே ஊர்ந்த ஈசலை தட்டிய தனாவிற்கு வியர்த்தது.

தூர தூரத்தில் அவரவர் அவரவர் விளக்கின் முன் ஈசல்குழியைப்பார்த்து தவமிருந்தார்கள்.

தனா எழுந்திருக்காமல் உட்கார்ந்து இருந்தான். ஒற்றைக்காலில் குத்திட்டு உட்கார்ந்து இருந்த ஜான்சி மூக்கை ஆள்காட்டி விரலால் தேய்த்தாள். மூக்கு சிவந்து புடைத்தது. கண்கள் ஒளிகூடி விரிய முறைத்துக்கொண்டு எழுந்தாள். அருகில் வந்தாள் என்றால் யார் இருக்கிறார்கள் என்று பார்க்கமாட்டாள் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தாளோ அதை செய்துவிட்டே போவாள். நெஞ்சில் கைவைத்து மல்லாக்க தள்ளி மேலே விழுந்து உதட்டில் முத்தமிட்டாலும் இடுவாள். தனா அவசரமாக எழுந்து கைலியை இருக்கி கட்டிக்கொண்டே அவள் அருகில் போய் யாரும் பார்க்காமல் புற்றில் மறைந்து முட்டிக்காளில் உட்கார்ந்து “என்ன?“ என்றான் குழைவாய்.

அருகில் கிடந்த காய்ந்த ஆவரம் கொம்பை அவசரமாக இழுத்து, இழுத்த வேகத்திலேயே அவன் இரண்டு தொடையிலும் அடிபட வீசினாள். இரும்பு கம்பியை பழுக்க காச்சி இழுத்ததுபோல் தொடை துடித்தது. புற்றில் சாய்ந்துவிட்டான். அவன் எதிர்பார்க்கவில்லை. வீல் என்று அலற தோன்றியது. திறந்தவாயை அழுத்தி மூடிக்கொண்டான். கண்கள் கசிந்தது. இன்னும் அடிப்பட்ட இடம் உப்பி துடித்துக்கொண்டிருந்தது. மகாபலியின் தலையில் கால் வைத்து அதலபாதளத்தில் புதைத்த திரிவிக்கரமன்போல துள்ளி எழுந்து அவள் தலையில் கால்வைத்து புதைத்துவிட மனம் எழுந்தோடியது. நெஞ்சு அடிக்கும் ஓசை காதுக்கு கேட்டது.

கண்கள் சிவக்க கோபத்தோடு எழ நினைத்தவனை “உட்காரு” என்று கண்களாலேயே கட்டளை இட்டாள். துதிக்கை துழாவும் அழகைப்பார்த்து குழந்தைபோல என்று நினைத்து முன்னால்போய் தொட நெருங்கும் போது மத்தகம் உயர்த்தி துதிக்கை நீட்டி உயிருறைய பிளிறும் மதயானைபோல் தெரிந்தாள்.

தனா தாவாங்கட்டை நெஞ்சில் இடிக்க முட்டிக்காலிலேயே உட்கார்ந்து இருந்தான். அவன் அம்மா விளையாட்டாககூட அவனை இதுவரை அடித்ததில்லை. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்திரம் அகங்காரம் கண்களை சிவக்கவைத்து கண்ணீராக மாறி சொட்டியது. வார்த்தை வரமறுத்தது. கைகள் எழவில்லை. கழுத்து நரம்பு புடைத்து ரத்தம் ஏறி சிவந்தது.

“நாளைக்கு பரிட்சை இன்னைக்கு ஈச புடிக்கிறியா?. நேத்து ராத்திரி செவுத்தியார்கோயில் முன்னாடி பாய்தறிபோடுற பசங்களோடு சேந்து கபடி விளையாடுறத பார்த்தேன், ஓணா அடித்து விளையாண்டு, அணி சுட்டு தின்னு, வேட்டநாயோடு சுத்துற ஊர்ல, உன்ன ஒங்காத்தா என்ன பாடுபட்டு படிக்கவைக்குது ஞாபகமிருக்கா. போய் படி“ அவனுக்கு மட்டும்கேட்கும் குரலில் சொன்னாள். பிசிறு தட்டவில்லை. உயிர்வரை பாய்ந்து உலுக்கி குத்தியது அந்த தொணியும் முகவெட்டும் விழிவீச்சும். அவனால் அவள் முகம் நோக்கமுடியவில்லை. கால்களை சுற்றி படர்ந்து கிடந்த கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு எழுந்தான்

“ஈசலை உருண்டையாக்கி அடித்த அந்த குழந்தை எங்கே? அருகில்தான் இருக்கிறாள், தொடமுடியாத தூரத்தில் உயரத்தில் அமர்ந்திருக்கும் இந்த ரணகுலகாரி யார்?“ மனம் தேடி துழாவியது.

வானில் நுழைய துடிக்கும் வெளிச்சப் பாம்புகள்போல் அவசரத்தோடு ஒரு மின்னல் வெட்டியது. மண் மரம் மனிதர் என்று கண்ணுக்குள் நிழற்படங்கள் நுழைந்து நிறைந்தன. வம்பரமரத்தில் அமர்ந்திருந்த பறவை சிறகு உதறி தாவி அடுத்தகிளையில் உட்கார்ந்தது. லூர்துசாமியின் ராஜபாளையம் சிகப்பி நாய் ஜான்சியை வந்து முகர்ந்துப்பார்த்து கன்னத்தை நக்கிச்சென்றது. கழுத்தை நொடித்து வெட்கத்தோடு சிரித்தாள்.

அவனுக்கு அடிப்பட்ட இடத்தை தடவிக்கொடுக்க கையை நீட்டினாள். அவன் உயிர்வந்ததுபோல் துள்ளி நகர்ந்து திரும்பி நடக்க காலை தூக்கினான். அவள் அவன் தூக்கிய பாதத்தில் தனது பூவிரலால் தடவி தனது விரலுக்கு முத்தமிட்டாள். அவன் மெதுவாக தலையை மட்டும் திருப்பி பார்த்தான்.

“என்செல்லமில்ல போய்படி” தாய் முலைக்காம்பு சப்பிய குழந்தையின் உதட்டு சுழிப்பில் வழியும் சிரிப்பு. கனிவை சொட்டத்தொடங்கிய முகம். பொன்வழியும் பிரகாசம்.

வலிமறைந்து தனாவின் உதட்டில் புன்னகை குமிழ். . நெற்றியில் வழிந்த முடியை விரல்களால்கோதி ஏற்றிவிட்டு கண்களால் விடைப்பெற்றுக்கொண்டு படிக்க நடந்தான். அவன் நடந்துபோகையில் காலில் மிதிப்பட்ட தும்பைச்செடிகளின் வாசம் பரவியது.

மூக்கை உறிஞ்சி தும்பைச்செடி வாசத்தை இழுத்தாள். துள்ளி ஓடிவந்து “பூச்சிப்பொட்டு இருக்கபோவுது, நல்ல வழியில போ“ கையை பிடித்து இழுத்து நல்ல பாதையில் விட்டாள். அவன் யாராவது தங்களை பார்க்கிறார்களா? என்று தவித்துப் பார்த்தான். அருகில் இருந்த விளக்கு காற்றில் அணைய அவர்களை இரவு மறைத்துக்கொண்டது. அவன் நெஞ்சில் முத்தமிட்டாள்.

அவன் வீட்டுக்கு போகும்வரை கிளைதாவும் கொடிபோல் துடித்து இருட்டில் நின்றாள். கண்கள் கலங்கி மார்பு நனைந்தது. தும்பைச் செடியில் அவன் பாதம் பதிந்த இடத்தை குனிந்து மெல்லத்தடவினாள். அவள் விழி முடியில் நழுவிய கண்ணீர்த்துளி அவள் கன்னத்தில் ஓடாமல் முலைமுகட்டை நனைக்காமல் அவன் பாதச்சுவட்டில் விழுந்து நனைத்தது. ஏக்க மூச்சு இதயத்தை விம்மவைக்க ஈர்ப்பே இல்லாமல் திரும்பி வந்து விளக்கை ஏற்றி ஈசல் பிடிக்க தொடங்கினாள்.

காலை கஞ்சிகுடித்துவிட்டு காட்டுக்கு உழைக்கபோகும் சனங்கள் அந்திசாயும்போதுதான் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். வயதானவர்கள் வீட்டுக்கும் ஊருக்கும் காவல். நாய்கள்கூட சனங்களோடு சனங்களாக வயக்காட்டுக்கு போய்விடும்.

விடியற்காலை நாலரைமணி பிராத்தனைக்கும், மாலை ஐந்தரை மணி பிராத்தனைக்கும் அடிக்கப்படும் அந்தோணியார்கோயில் மணி மற்றநேரத்தில் மௌனத்தில் மூழ்கி திளைக்கும். காலம்நேரம் இல்லாமல் இந்த மணி ஒலித்தால் ஊரில் ஏதோ அசம்பாவிதம் என்று வயல்காட்டில் உள்ள மக்கள் எல்லாம் ஓடிவந்துவிடுவார்கள்.

அந்த செமஸ்டரில் தனா எம்.எஸ்.சி பிசிக்ஸ் தேர்வில் நினைத்ததோடு அதிக மதிப்பெண் எடுத்தான். ஜான்சி அந்தோணியார்கோவிலில் மெழுகுதிரி ஏற்றி முட்டிக்காலில் நின்று பிராத்தனை செய்து நன்றி சொன்னாள்.

மதுரைவீரன் கோயில் ஓடைக்கொல்லையில் வெண்டை கத்தரி ஊன்றும்வேலை அவளை தனியாக சந்திக்க முடியவில்லை. மூன்றுநாள் கழித்து அந்தோணியார் கோவில் மணிக்கூண்டுக்கு பின்னால் அவளை வரவழைத்து அணைத்துக்கொண்டான். . ஜான்சியை மடியில்போட்டு தாலாட்டி தான் குழந்தையாகிக்கொண்டு இருந்தான்.

சிறகு நீங்க காயவைத்து சிவக்க வறுத்த ஈசலோடு வறுத்த உளுந்து பச்சைபயிறு பொரியரிசி பனைவெல்லம் கலந்து வைத்திருந்த ஈசல் வறுவலை முந்தானையில் முடிந்துவந்து ஊட்டிவிட்டாள்.

முதன்முதலில் ஈசல் சாப்பிடுகிறான். வாயுக்குள் வறுபட்ட ஈசல் குத்தியது. குமட்டிவிடுமோ என்று பயந்தான். மனம் அடித்துக்கொண்டது பயந்தபடியே கண்களை மூடி அழுத்தி மென்றான்.

உளுந்து பயறு பனைவெல்லம் வறுபட்டஈசலின் பால்மணம் எல்லாம் கலந்து நாக்கில் பெரும்சுவையை உண்டாக்கியதில் மனம் மகிழ்ந்தான். அவள் கையில் இருந்த கடைசிப்புடி ஈசலையும் மென்று கொண்டு இருக்கும்போது அவள் கையை நீ்ட்டச்சொல்லி அதில் ஒட்டியிருந்த பனைவெல்லத்தை நுனிநாக்கால் நக்கியபடியே “ஆகா. அற்புதமான சுவை. நீ ஏன் முதல்லேயே சொல்லல? இன்னும் இருக்கா?“ என்று தன் மூக்கால் அவள் மூக்கை உரசியபடி கொஞ்சினான். அவள் மேனியில் ஆட்டுப்பால் வாசம். கூந்தலில் துணிஞ்சி இலை அரப்பு வாசம்.

அவன் முகத்தில் தோன்றிய பரவசம் அவளுக்குள் உருகி சொட்டி ஊர்வலம்போனது. முகம் சிவக்க சுண்டுவிரல் நுனியால் அவன் கன்னத்தில் கோடிழுத்தபடி “நீங்க தின்ன பிறகுதான் நான் திங்கனுமுன்னு ஒரு துணுக்கு வாயில போடல“ என்று அவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்து செல்லமாக சிணுங்கி “நாளைக்கு வறுத்து எடுத்துவரேன்” என்றாள்.

“ஒரு துணுக்கு வாயில போடல“ என்று அவள் சொல்லும்போதுதான் அவன் கடைசி மிடரையும் சுவைத்து விழுங்கினான். அது அவன் தொண்டைக்குள் நெருப்பு குழம்பாய் சுட்டபடி இறங்கியது. அவளை வாரி அழுந்த இருக்கிக்கொண்டான்.

“இச்சி என்ன ஜென்மம் நான்?, சாப்பிடுன்னு ஒரு பிடி ஊட்டலையே” என்று நினைத்தபோது அவன் கண்ணீர் அவள் தலை வகுட்டை நனைத்தது.

அவள் தலைதூக்கி அவனைப்பார்க்கும்போது கோயில்மணி நேரம் கெட்ட நேரத்தில் “டங்.டங்.டங்“ என்று ஒலித்தது. பதறியபடி அவன் அவளை அள்ளிக்கொண்டு எழுந்தான். மணி அடித்துக் கொண்டிருந்த அவன் அம்மாவிற்கு ஜன்னல் கட்டைக்கு அப்புறம் நிற்கும் அவன் முகமும் அவள் முகமும் மட்டும் ஒரு கழுத்தில் மலர்ந்திருப்பதுபோல் தெரிந்தது.

மணி அடிக்கிறோம் என்பதை மறந்து மனம்வெடித்து பாய்ந்துவந்த அம்மா ஓங்கி அறைந்தாள். முன்னால் நின்ற தனாவைத்தாண்டி ஜான்சியின் கன்னதில் விழுந்தது அந்த அடி. அவன் என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவித்து திறும்ப ஜான்சியின் கன்னத்தில் ஐந்துவிரல்கள் பதிந்த தடம். வலது காதில் போட்டிருந்த கவரிங் வளையம் தெறித்து எங்கோபோனது. ஜான்சி அழவில்லை, அவளிடம் மாறாத குமிழ்சிரிப்பு.

அம்மாவின் முகம் இரத்தம்ஏறி விழிவிரிந்து வாய்கோணி பறப்பதுபோல் தவித்து தாவி கழுத்து நரம்பு புடைக்க “அண்ணன் தம்பி ……………..யா” என்று காரிதுப்பினாள். அம்மா என்ன சொன்னால் என்று தனாவிற்கு புரிவதற்குள் அவன் கழுத்தில் கையை வைத்து நெம்பி தள்ளி “போடா நாயே“ என்று நடக்கிறாளா பறக்கிறாளா என்று நினைக்கமுடியாத அளவுக்கு மகனை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

முகம்வெளிரி ஜான்சி தனாவைப்பார்த்தாள். தனா ஒன்றும் சொல்லவிலை.தனா ஒன்றுமே சொல்லவில்லை.

அம்மா அதண்டு பேசக்கூடியவள் இல்லையே. என்ன பேசினாள்? எப்படி பேசினாள்? அவன் வார்த்தைகள் வற்றிவிட்டன.

நேரம்கெட்ட நேரத்தில் மணி அடித்ததில் வயக்காட்டில் இருந்து ஒடிவந்த ஊர்மக்கள். ஹாக்கின்ஸ் வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அணைக்க அல்லாடியது.

கால்கள் தல்லாட கண்கள் கலங்க நடுங்கி தவித்துவிழபோன ஜான்சி மணிக்கூண்டை அணைத்து முகம் புதைத்து சாய்ந்துக்கொண்டாள். அவளால் நகரமுடியவில்லை. எப்போது அங்கிருந்துபோனாள் என்பது அவளுக்குகூட தெரியவில்லை.

இரவு முழுவதும் தூங்காமல் அழுத தனாவின் முகம்வீங்கி கண்கள் சிவந்துகிடந்தது. காலையில் எழுந்ததும் வெளியில் கிளம்பியவன் முன்னால் வந்து நின்ற அம்மா “எங்கே?“ என்று சீறினாள்.

“ஜான்சிய பார்க்க. அவதான் என் பொண்டாட்டி“ என்று அவன் சத்தத்தோடு எறவானத்தை ஓங்கி குத்த கூரையில் சொருகி இருந்த முகம் பார்க்கும் கண்ணாடி துள்ளி விழுந்து உடைந்து ஒவ்வொரு சில்லுலிம் அவன் முகத்தை கோரமாக காட்டியது.

மாமா ஆயா அத்த சின்னம்மா எல்லோரும் செய்தவேலையை போட்டுவிட்டு ஓடிவந்து வாசலுக்கு முன்பு சிலையாகி நின்றார்கள். பால்கறந்துக்கொண்டு இருந்த மாமாவின் மகள் தனாவைப்பார்த்து அழுதுக்கொண்டு அடுப்பங்கரைக்கு ஓடினாள் அம்மாவின் கால்கள் தானாக பின்னுக்கு நகர்ந்தது. கைகள் நடுங்கியது. தனா எதுவும் நடக்காததுபோல் ஜான்சியை பார்க்க நடந்தான்.

ஜான்சி ஆட்டுதறியை காசம்பூ மிளாரால் கூட்டிக்கொண்டு இருந்தாள். தனாவைப்பார்த்ததும் ஜான்சியின் நெற்றிசுட்டி வெள்ளையாடு கடித்து்க்கொண்டிருந்த இலையோடு அவனைப்பார்த்து “மே“ என்றது. ஓடிவந்த குட்டிகள் அதன் மடியை முட்டி பால்குடித்தது. ஆட்டுமூத்திர நாற்றம் நாசிக்குள் ஏறி நெருடியது. பச்சை ஆட்டுப்புழுக்கை மணம். ஆடுகடித்துப்போட்ட தழைகளின் வாசம்.

வலது காதை இழுத்து நீவிக்கொண்டு அவள் முன்னால் சென்று பணிவாக நின்றான். நெஞ்சுக்கூடு ஆடிக்கொண்டிருந்தது. எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. வார்த்தைகளை மனதிற்குள் தேடினான்.

அவன் பாதத்தைநோக்கி சென்ற விலக்குமாற்றை நகர்த்தி தலைஉயர்த்தி பார்த்தாள். பார்வையில் இலக்கில்லை. கண்கள் சிவந்து முகம் வீங்கி மெலிந்து இருந்தாள். எரிந்து அணைந்த கரிகட்டைபோல் உடல்மாற்றம். விழி மயக்கா?.

அவன் மன்னித்துவிட சொன்னான்.

அவளுக்கு கேட்கிறதா?

அவள் பேசவில்லை.

ஒவ்வொரு நாளும் அவளைப்போய்பார்த்து மன்னிப்பு கேட்டான்.

அவள் பேசவில்லை.

நாளுக்கு நாள் முகம் கல்லாகிக்கொண்டே போனது.

அந்தஆண்டு அந்தோணியார்கோயில் பொங்கல் தேர்திருவிழா. உருண்டுவரும் தேரில்நின்று அருள்பாலித்துவரும் அந்தோணியாருக்கு மெழுகுதிரி ஏற்றி வைத்து நின்று கொண்டிருந்தவள் முன்னால்போய் நடுத்தெருவில் ஊர்பார்க்க அவள் முன் கைகுவித்து நின்றான். கண்ணீர் வழிந்துக்கொண்டு இருந்தது.

அவள் பேசவில்லை.

காத்திருந்த மாமா மகளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது, அம்மாவும் ஒருநாள் அவள் வீட்டுக்கே சென்று அவளை அணைத்துக்கொண்டு “மன்னிச்சுடுடி, உன்னைவிட்டா என்பிள்ளைக்கு கதியில்லடி“ என்றது.

அவள் பேசவில்லை

யாருடனும் அவள் பேசுவதில்லை.

அவள் பேசுவாள் என்பதே ஊருக்கு மறந்துவிட்டது.

அதன் பின்பு அம்மாவும் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்துவிட்டு மறைந்தபின்பு தனா ஊரைவிட்டே போய்விட்டான். அவன் ஊருக்கு திரும்பி வரவே இல்லை. சிதம்பரத்தில் ஒரு பள்ளியில் வாத்தியாராக இருந்தான். தானே சமைத்து தானே உண்டு தனக்கு தானே தனியாக கிடந்தான்.

அவள் எங்கும்போகவில்லை,ஆடு மேய்த்தாள். அதே வீ்ட்டில்தான் எல்லோருடனும் இருந்தாள் ஆனால் தனித்து இருந்தாள்.

அவள் வீட்டுக்கு மட்டும் புதுபெயர் வந்துவிட்டது ஊமை பாட்டி வீடு.

“வாப்பா தனா“ .

அத்தையோடுபோயி குளத்தில் குளித்துவிட்டு ஈரபுடவையை தோளில் சுற்றிக்கொண்டுவரும் ஆயாவின் குரல்கேட்டு தனா எழுந்து உட்கார்ந்து கண்களை துடைத்துக்கொண்டு சிரித்தான். குழந்தைபோன்ற சிரிப்பு

ஈரப்புடவையோடு வந்து பாட்டி அணைத்துக்கொண்டது. பாட்டியின் உரமேறிய கையெலும்பு உடம்பில் அழுந்தியது. அத்தை காலடியில் வந்து உட்கார்ந்து கால்களை தொட்டப்படி அழுதது.

“யேன் ஆயா அவசரமா வரசொன்ன. உடம்புக்கு என்ன?“

ஆயா கண்கள் கலங்கியது. ஈரமுந்தானையில் மூக்கை உறிஞ்சி துடைத்துக்கொண்டு “நான் நல்லதான் இருக்கேன். அந்த பாதகத்திதான்“ என்று மூக்கை சிந்திவிட்டு “ஒருவாரமா இழுத்துகிட்டு கிடக்கா. நெஞ்சுக்கூட்டுள உசுருகிடந்து தவிக்குது, போயி பாத்துட்டு வந்தேன். ஒருவாட்டி நீயும் போய் பாத்துட்டுவந்துடு. ஆங்காரம் புடிச்சி உன்னயும் தனிமரம் ஆக்கிட்டாளே“ பாட்டி நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தது.

உட்கார்ந்து இருந்த தனாவின் மடியில் கண்ணீர் கொட்டியது. துடைக்க மனம் இல்லாமல் எழுந்து ஜான்சி வீடு நோக்கி குப்புற விழுந்துவிடுவதுபோல் நடக்கும் குழந்தையாக காலில் செருப்பில்லை என்பது கூட தெரியாமல் நடந்தார். செருப்பில்லாத பாதத்தில் ஒழுங்கை மணல் கொப்புலம் தோன்ற சுட்டது.

ஜான்சி வீ்ட்டில் யார்யாரோ புதுமுகங்கள். தனாவிற்கு தெரியவில்லை. அவர்களுக்கும் தனாவை தெரியவில்லை. யார்? என்ன? என்பதுபோல் பார்த்தார்கள்.

பெரிய தொப்பையோடு பக்கத்து வீட்டில் மாட்டுக்கு தண்ணீர்காட்டிக்கொண்டு இருந்த மைக்கல் கண்டுகொண்டு ஓடிவந்து “வாண்ணா” என்று கைபிடித்து உள்ளே அழைத்துபோனான். அவன் குரல் தழுதழுத்தது. வரகுவைக்கோல் வேய்ந்தவீடு.தனாவீட்டுக்குள் குனிந்து நுழைந்தார். ஜான்சியை சுற்றி கண்கலங்கிக்கொண்டிருந்த பெண்கள் விலகிக்கொண்டார்கள்.

பின்வாசல்வழியாக ஒரு ஆட்டுக்குட்டி உள்ளே ஒடிவந்து ஜான்சியின் கால்மாட்டில்வந்து நின்று தனது இளம்குரலால் “மே“ என்று கத்தி அவள் பாதத்தை மோந்தது.

கண்ணீர்வழியும் கண்களோடு தனா அவளைப்பார்த்தார். “இவள் ஜான்சிதானா? இத்தனை வயது எப்படி ஆகியிருக்கும்? ஒவ்வொரு நாளிலும் இவளுக்கு ஒரு வயது கூடிவிட்டதா?“ நெஞ்சு அடித்துக்கொண்டது.

அவளுக்கு முலையிருந்த இடத்தில்கூட சதையில்லை.

தன் நெஞ்சில்பட்ட அந்த பாதத்தை மெல்ல வருடினார். அவள் கால்கள் சிலிர்த்து அசைந்தது. அவள் இமைகள் திறந்தது. விழிமணிகள் அசைந்து அலைந்தன. தேடின தவித்தன.

கண்ணீர் வழியும் கண்களோடு குழந்தைபோல அவள் முகம்பார்த்து உட்கார்ந்து ஏங்கினார். அவரை கண்டுகொண்டாள். கையை ஊன்றி ஆவேசமாக எழுந்தவள் தடுமாறி முன்னால் மடிந்து விழுந்துவிட போனாள். தனா தாவிப்பிடித்துக் கொண்டார்.நெஞ்சு தவிக்க கைகள் நடுங்க மெல்ல மெல்ல இடுப்பை தடவி முந்தானையை பிரித்து எதையோ எடுத்து அவரிடம் நடுங்கும் கைகளால் கொடுத்தபடியே அவர் நெஞ்சில் சாய்ந்தாள். அவள்மீது ஆட்டுப்பால்வாசம்.

அவளை அணைத்தபடியே ஒரு கையால் அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்டார். அது வறுத்த ஈசல்.

அவள் உதடுகள் அவர் நெஞ்சில் பதிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *