உதட்டோடு முத்தமிட்டவன்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 16,741 
 
 

யாரிடமாவது பேசி, மனசிலுள்ளதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்று பரிதவித்தாள் ரேணுகா. ஒருத்தரும் கிடைக்கவில்லை. எல்லாரிடமும் ‘இதை’ப் பேசிவிட முடியாது. தன்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். வீட்டில் பத்த வைப்பார்கள். புகையுமா குப்பென பற்றி எரியுமா என்றும் அனுமானிக்க முடியாது. அந்த வெப்பம் தன்னைச் சுடும்போது ஒருவேளை தானும் ‘அவளை’ப் போல எதுனாச்சும் செய்ய வேண்டி வரலாம்.

சட்டென ஒரு கீற்று ரேணுகா மனசில். இதே போலத் தான் அவளுக்கும் நடந்திருக்குமோ… அந்த புழுக்கம் தான் அவளை மருந்து குடிக்க வச்சிருக்குமோ…

“செத்த கழுத…” கொஞ்சம் வெளிலவந்து புழுக்கத்த ஆத்தீருக்களாம். அவசரப்பட்டுட்டாளே… எவ்வளவு ரகசியமா இருந்த விசயம்…! எத்தன நாளா பூட்டி வச்சிருந்த காதல, இப்பிடி தெருவுல பேச விட்டுட்டாளே…

ரேணுகாவுக்கே வெளியில் போக அச்சமாய் இருந்தது. புட்பால் பந்துபோல கண்டவர்கள் காலில் உதைப்பட்டுக் கொண்டிருந்தது அந்த ‘விசயம்’.

“இடுப்புக்கு கீழ உடெப்பெடுத்ததும், கண்டாரோலிகளுக்கு ஒடம்பு ஒரசல் தேட ஆரம்பிச்சிருது… ஊரு வெளங்குமா… தாவணி போட்டதும் தரையப் பார்க்க வேண்டிய தட்டுவாணிக நிமித்தி விட்டுத்தான அலயிறாளுக…”

எந்த வீதியில் நடந்தாலும் அவளைப் பத்தித்தான் பேச்சு. யாருமே பச்சாதாபப் படவே இல்லை. அதிலும் பெண்கள் தான் அக்குரும அக்குருமமாய் பேசுகிறார்கள். அதைக் கேட்க அழுகை தான் வருகிறது. எல்லோரும் தன்னையே பேசுகிறாப் போல ஒரு உணர்வு.

அவள் ஒரு வார்த்தை தன்னிடம் பேசி இருக்கலாம். என்ன நடந்தது என்பதாவது தெரிந்திருந்தால் இத்தனை அவதி கூட இருக்காது. ஒருவேளை அவளை இந்த நிலையிலிருந்து கூட மீட்டிருக்கலாம். அவளோடு பேசி மூன்று நாளைக்கு மேல் ஆகி விட்டது.

செவ்வாயா, புதனா என்று தெரியவில்லை. பிரதோசம் என்று பிள்ளையார் கோயில் பூசாரி வீட்டில் வந்து காசு வாங்கிப் போயிருந்தார். அம்மாவோடு கோயிலுக்கு வந்திருந்தபோது, அவளும் ரோஸ்கலர் தாவணி உடுத்தி வந்திருந்தாள். உண்மையிலேயே அந்த தாவணி அவளை சிநேகா போல மொழு மொழுவெனக் காட்டியது. பூசை முடியும் முன் அம்மா, அப்பாவை வேலைக்கு அனுப்ப வேணுமென கிளம்பியது.

“பத்துபேர் வந்துட்டாளே, இந்த பூசாரிக கடவுளுக்கு முதுகு தேச்சி, மூக்கு சீந்தி குளிப்பாட்ற மாதிரி இழுத்து ஒருபொழுத கழிச்சிருவானுக… வந்தமா நீராட்டு பாத்தமா, அலங்காரம் கண்டமா… அபிசேகம் முடிச்சமான்னு முடிக்க மாட்டாங்ஙெ…” என்று புலம்பியபடி அம்மா போனது. இவர்கள் இருவரும் பேசுவதற்கு தோதுவாய் இருந்தது.

“சொன்னா கோச்சுக்க மாட்டியே…” – இப்படித்தான் ஆரம்பித்தாள் அவள்.

“உண்மையிலேயே தாவணி சூப்பர்டீ…” – இவள் தன்னுடைய கருத்தை பட்டென சொல்லி விட்டாள். அவளுக்கு பதிலாய் “என்னாவாம்…?” என்று கேட்டால் ரெம்பத்தான் பிகு பண்ணிப் பேசுவாள். சில சமயம் எரிச்சலாய் இருக்கும். கோபமாய்க் கூட வரும். ஆனால் வேறு யாருமே இதுபோல ‘லவ்’ மேட்டரை சொல்லவே மாட்டார்கள். அதற்காகவே கொஞ்சம் கிறுக்குத்தனமாக இருந்தாலும் சகித்துக் கொள்வாள்.

“நேத்து… அது… அது…” கண்கள் தரை தாழ வார்த்தைகளை மென்று மென்று பேசினாள். “அது… ஒருக்கா கிஸ் குடுத்துருச்சுடீ…” – கடைசி வார்த்தை வாய்க்குள் அமிழ்ந்து போய் காற்று மட்டும் வந்தது. சொல்லும் போதே அவளுக்கு வாய் வரண்டிருக்க வேண்டும். சொல்லி முடித்ததும் கப்பென வாய் அடைத்துக் கொண்டது.

கேட்ட ரேணுகாவுக்கே உடம்பில் சூடு கண்டது. உள்ளங்காலில் பூச்சி ஊர்வது போன்ற உணர்வு. திடுமென உச்சந்தலையும் சுள்ளிட்டது.

“எங்க… கன்னத்துலயா…” – கேட்கும் போதே அனலாய் மூச்சு வெளிப்பட்டது.

பதில் சொல்ல அவளுக்கு இன்னும் வாயில் உமிழ்நீர் ஊறவில்லை. அத்தனை வறட்சி. விரலால் உதடு தொட்டுக் காண்பித்தாள்.

“ஒதட்டுலயா…?”

“ம்…” – தலையை மட்டும் ஆட்டினாள். கண்களில் கூச்சம்.

திடுமென ரேணுகா பெரிய மனுசியாய் ஆகி விட்டாள் உடம்பில் விரைப்பேறியது. கண்களில் மட்டும் லேசாய்க் காந்தல் நின்றது.

“வேணாம் பிள்ள… நா… இதுக்காகச் சொல்லல… இதெல்லாம் ஓவரு… தப்பு. எத்தினி படத்துல… என்னன்னா மாதிரி நடந்துருக்கு… கொஞ்சம் ஜாக்ரதயா இரு… அப்பறம் எதுனாச்சும் வேற மாதிரி ஆகிப் போகும்…”

“நா கேக்கல ரேணு… அதுவாத்தேம் பேசிட்டே இருந்துச்சு… அதுபாட்டுக்கு செஞ்சிருச்சு…”

“கட்டிப் பிடிக்கலீல்ல…”

“சேச்சே… அதெல்லா மில்ல…”

“ஆமா… ஒண்ணொண்ணா வந்துருவாங்கெ…” அப்படியே பேச ஆரம்பித்தவள், அவன் முதலில் தன்னை லவ் பண்ண முயற்சித்ததை ஆயிரத்து பன்னன்டாம் முறையாய்ச் சொல்ல ஆரம்பித்தாள்.

“பயலுகள ரெம்ப ஆடவிடக்குடாது… விட்டம்…?”

“யோ… திடுப்னு மூஞ்சிய வச்சிடுச்சுடீன்னா…”

“அப்பிடித்தே வருவாங்கெ…” – ரெம்ப அனுபவசாலி போல பேசியவள், “எங்கிட்டயே லவ்யூ சொன்னவனே… ஓங்கிட்ட அதப்பத்திச் சொன்னானா…”

“இல்ல…”

“ம்… சொல்ல மாட்டான். பெரம்படி வாங்கிருவடான்னு எங்கண்ணெ பிடிச்ச பிடில… பயபிள்ள திரும்பிப் பாக்கலீல்ல…”

அவள் வேறே எதோ சொல்ல வந்திருப்பாள் போலிருக்கிறது, தன்னுடைய அந்தப் பேச்சு அவளை இடைமறித்து விட்டது. கொஞ்சம் அவளைப் பேச விட்டிருந்தால் இன்றைய நிலை அன்றைக்கே தெரிய வந்திருக்கும். எதுக்காக அந்த மாதிரி துக்கிரித்தனமாக நடந்து கொண்டோம். பொறாமையா… காழ்ப்புணர்ச்சியா… உண்மையிலேயே அவனது துள்ளலும், சிரிப்பும், சேட்டைகளும் ரேணுவுக்கும் ஈர்ப்பாகத்தான் இருந்தது. யாரையும் சிரிக்க வைத்து விடுவான்.

ஆனால் வீட்டில் அண்ணனின் ஆதிக்கம் ஜாஸ்தி. அவனுக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது. அப்பாவும் நொய் நொய்யயன ஆயிரம் கேள்வி கேட்பார். ஒரு வேளை அவளுக்கு அப்படிப்பட்ட அப்பாவும், அண்ணனும் இல்லைங்கறதால இருக்குமோ… எது நல்லது..? இருக்கறதா… இல்லாததா…

அவளுக்கும் அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்களே… அண்ணன் இல்லைதான். அம்மா பெரிய லவுண்டி… பெருத்த குரல்… மைக் வைக்காமலேயே அடுத்த தெருவுக்கு எட்டுகிற தொண்டை. அதுக்குப் பயந்தோ என்னமோ வீட்டில் தங்காத அப்பா. அவளுக்கு பிறகு இன்னும் ரெண்டு பொட்டப்பிள்ளைகளும் ஒரு சின்னப்பயலும்.

அடிக்கடி வீட்டுக்கு வருவான் போலிருக்கிறது. பிள்ளைகள் பூராவும் அவன் பக்கம் சாய்த்து விட்டான். மாமா மாமா என்று உரிமை கொண்டாட வைத்திருக்கிறான். சின்னப்பிள்ளைகள் தானே. தின்பண்டமும், வளையல், மாட்டலு, ரிங்… பயலுக்கு விளையாட சாமான்கள்… ஒருநாள் அவளது அம்மாவுக்கு சேலை எடுத்து வந்தானாம். அவள்கூட பயந்திருக்கிறாள். தரவேணாம் என சொன்னாலாம்.

நேரடியாய் அவளது அம்மாவிடமே தந்துவிட்டாளாம். “எங்கம்மாவுக்கு லைட் கலர்தே வேணுமாம்… ஒங்கள மாதிரி செவத்தவங்களுக்கு இது நல்லாருக்கும்… நீங்க வேணா உடுத்திப் பாருங்களேன், சூட்டா இருக்கும்…”

யார்ரா நீ என தன் வீட்டைப் போல கேட்டிருந்தால் ஒதுங்கி இருப்பான். ஒரு தெருவுக்காரன் என்றோ… சொந்த சாதிசனப் பயதான என்ற மிதப்போ… ஓசி என்ற களிப்போ சேலையை உடுத்தச் செய்திருக்கிறது. ரெம்பச் சுதந்திரமாய் வீட்டுக்குள் வர ஆரம்பித்து விட்டான். அவளும் அவனை ‘மாமா’ என அழைக்க வேண்டி வந்தது. சமயத்தில் சோறு தண்ணி புழக்கம் கூட இருந்திருக்கிறது.

ரேணுகாவுக்கு உடம்பு வியர்த்தது. சட்டென முழித்துப் பார்த்தாள். கரண்ட் போயிருக்கிறது. காத்தாடி தனது சுழற்சியை நிறுத்திக் கொண்டிருந்தது. படுக்கையை விட்டு எழுந்து கதவு திறந்தாள். மதிய வெளிச்சம் பளாரென வீட்டுக்குள் புகுந்து வீடு நிரம்பியது. வீதி வெறிச்சோடிக் கிடந்தது. வீட்டிலே அம்மாவும் அனேகமாய் அவளைப் பார்க்கத்தான் போயிருக்கும். போகும் போதே “நீ வந்துராதடீ…” என உத்தரவிட்டுப் போயிருந்தது.

“சினேகிதில்ல… வராம எப்பிடி இருப்பா…” – அம்மாவோடு இணைந்திருந்த வனஜாக்கா வக்காலத்து வாங்கியது.

“அதெல்லாஞ் சரித்தே. எந்திரிச்சான்னா சரி… ஏதும் எசகுபெசகா ஆயிருச்சுன்னா… எடவெளிச்சாவு… எவளடா தொத்துவம்னு அலையும்…”

“ஆமாமா… சடங்கான பிள்ளைக மேலதான தொத்தும். எதுக்கு வெலகிப் போற சனியன வெரட்டிப்பிடிக்கணும்… கதவ சாத்திட்டு இருத்தா ரேணு… என்னான்டு பாத்துட்டு வந்திர்ரம்…”
சரி என்று சொல்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் இதுவே ஆம்பிளப்பயலாக இருந்தால்… பேசுகிற வரைக்குமா இருப்பான். பேசினாலும் இங்கிட்டுப் போகவிட்டு அங்கிட்டு வந்திருவான்.

ரேணுவுக்கும் அப்படி ஒரு எண்ணம் உதித்தது. யாருக்கும் தெரியாமல் போய் எட்டிப் பார்த்து வந்து விடுவமா என்று. சின்ன வயசிலருந்து சேந்து பழகிய சிநேகிதி… சாகக் கிடக்கிறாள். சாதாரண காச்ச மண்டவலின்னாலும் நாளபின்ன பாத்துக்க எடமுண்டு. அவள நாள பாக்க முடியுமா…

துக்கம் நினைப்பை நிறுத்தி கண்ணில் நீரைத் தேக்கியது மடமடவென தண்ணீர்த் துளிகள் சரிந்து விழ கன்னங்களில் இறங்கி தாவணியை நனைத்தன. மூக்கில் நீர் ஊறி முணுமுணுக்க செய்தது.

வந்த அழுகையை கொஞ்சநேரம் அனுமதித்து கண்களைத் துடைத்துக் கொண்டு, கதவைத் திறந்து சாக்கடையில் மூக்கு சீந்தினாள். வீதியில் சைக்கிள் டயரை மரக்குச்சி துணைகொண்டு இரண்டு சிறு பையன்கள் ஒட்டிக் கொண்டிருந்தனர். டயர் அவனுகளின் தோள்பட்டை உயரம் இருந்தது. மெதுவாய் அடித்துத் தள்ளியும் வளைகிற இடத்தில் டயரின் பக்கவாட்டில் குச்சியை உரசவிட்டும் லாவகமாய் திருப்பியும் வீதியை அளந்து கொண்டிருந்தார்கள். இதில் போட்டி வேறு. ஒருத்தனை ஒருத்தன் தோற்கடிக்கிற மாதிரி ஓடியதில் டயர்கள் அவர்களை விடவும் வேகமாய் உருண்டு அவர்களின் கட்டுப்பாட்டைக் கடந்து முன்னால் ஓடி வீதியின் முட்டுச்சந்தில் முட்டி வட்டமடித்து கீழே விழுந்தது. ஓடுகிறபோது தனித்தனியாய் ஓடிய டயர்கள். விழுகிறபோது ஒன்றின்மேல் ஒன்றாய் விழுந்தன.

“ஹேய்… புட்றா… புட்றா…” என்று ஓடி வந்தவன்கள் “என்னதுதே ஸ்பீடு…” – என்று இரண்டு பேருமே புளகாங்கிதமடைந்தனர். பிறகு தங்களது டயர் வண்டியை மாற்றிக் கொண்டனர்.

“இந்தவாட்டி ஒன்னத ஓட்றேன்…” “செரி…”

ரேணுவுக்கு திடுமென ஒரு யோசனை வர. வண்டிக்காரப் பயல்களைக் கூப்பிட்டான்… “தம்பீஸ்… டேய்…” கேட்கவில்லை போலிருக்கிறது.

“லேய்…” – கொஞ்சம் உரக்க கூப்பிட்டாள்.

“அட்ஜேய்… கூப்ட்றாங்கடி…” – பனியன் மட்டும் போட்டிருந்த சிறுவன், மற்றொருவனையும் நிறுத்தினான்.

“என்னாக்கா…” – ஓடிய டயரை நிறுத்தி தரதரவென இழுத்தபடி ரேணுவின் வீட்டுக்கு வந்தனர்.

எப்படி துவக்குவது என்று தெரியவில்லை… “ம்… இன்னிக்கு ஸ்கூல் லீவா…”

“எனக்கு லீவுக்கா… இவனுக்கு ஸ்டெடி கிளாஸ் வச்சிருக்காங்க… போக மாட்டேன்னுட்டான்” – பனியன் போட்டவனைக் காட்டிக் கொடுத்தான் இன்னொருவன்.

“ஏன்டா… போகலாம்ல…”

பனியன்காரன் தலைகுனிந்தான் “ப்ச்… போல”

“இவெ எப்பவுமே ஸ்டெடி கிளாஸ் போகமாட்டான்க்க… திங்கக் கெழம.. டெய்லி சாரு… மொழிங்கால் போட வப்பாரு… ஏண்டா…” – சொன்னவனுக்கு சிரிப்பு வந்தது.

“கொஞ்ச நேரந்தானடா கிளாஸ் இருக்கும்…” – ரேணு மேலுக்குப் பேசினாலும் எப்படி அவனுகளிடம் விசயத்தை கறப்பது என உள்ளுக்குள் யோசித்தபடி இருந்தாள்.

“ஒண்ணும் சொல்லித்தர மாட்டாங்கக்கா… போரு…” – பனியன் போட்டவன் உண்மை பேசினான்.

“பக்கத்து தெருவுல என்னமோ கூட்டமா இருக்காம்லடா…” மெதுவாக வி¬யத்தை விரித்தாள்.

சட்டை போட்டவன் பனியன்காரனைப் பார்த்தான். “எங்கக்கா?”

“கீரக்கல் பக்கம்…”

“கீ…ரக்கல் பக்கமா…” – மறுபடி அவனைப் பார்க்க பனியன்காரன், “லே நம்ம ‘சூலி’ வீட்டச் சொல்றாங்கடா… யேங்க்கா”

“சூலி வீடா…” – ரேணுவுக்குப் புரியவில்லை. சின்னப் பயல்களின் பாஷைக்கு எப்படி அர்த்தம் கண்டுபிடிக்க.

“லேய்… அது வடக்குத் தெருவுடா… அது பாவதியம்மெங்கோயில் கிட்டக்கக்கா…”

“அதத்தாண்டா பக்கத்து தெருவுன்னாகள்ல… அதானக்கா…”

“ஆமா…”

“மருந்து குடிச்சவங்கதான…”

“ம்ம்ம்…” – பரபரத்தாள்

“எதோ லவ்வாம்க்கா… ஒரு அக்கா மருந்த கரச்சு குடிச்சுப் புடுச்சாம்…”

“இல்லடா… ஊத்திவிட்டுட்டாகளாம்…”

“ஜே…எங்கம்மாச்சி சொல்லுச்சு… அவுங்க வீட்டுக்கே போயி, அந்தக்காட்ட பேசிட்டு வந்துச்சு…”

“போடா…” என்றவன், “ஏங்க்கா… மருந்து குடிச்சவங்க கிட்டப் போய்ப் பேசமுடிமா…”

“டேய் நெசம்மாடா… யக்கா எம் படிப்புதானக்கா…” ஒருத்தனை ஒருத்தன் தமது கூற்றை நிரூபிப்பதில் தீவிரம் காட்டினார்கள்.

“சரி..சரி… இப்பென்னா ஆச்சு…”

“அதேங்க்கா அந்த வீட்டுக்கு ஒரு மாமா வருவார்க்கா… அவங்கரெண்டு பேர்க்கும் லவ்வுக்கா. அவரு அந்தக்காவ கெடுத்துட்டாராம். அதனால மருந்து குடிச்சிருச்சு. ஆஸ்பத்திரிக்கு ஆட்டாவுல போறாங்க…”

“இல்லக்கா…” – உடனடியாய் மறுத்தான் பனியன் போட்டவன், “லேய் அந்தண்ணே நல்லண்ணன்டா நாம் பாத்துருக்கே… ஆடலும் பாடலும்லாம் ஆடும். அந்த அக்காவோட அப்பாதே கெட்டவரு, அவருதே ஆஸ்பத்திரிக்குப் போகவேணா இங்கியே சாகட்டும்னு சண்ட போட்டாரே…”

இரண்டு பேருக்குள்ளும் மறுபடி நிரூபணத்திற்கான வாக்குவாதம் துவங்க ரேணுவுக்கு பதைபதைப்பு அதிகமானது. இவனுகளை சமாதானப்படுத்தினால்தான் அடுத்த செய்தி கிடைக்கும் என்ற நிலைக்கு ஆளானாள். ஆனாலும் அவர்கள் சென்ன செய்தியால் இதயம் ரெம்பவும் பலமிழந்து போனது. நிச்சயமாக அவள் உயிர் பிழைப்பாள் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டு வந்தது. இது விசயமாய் எதோ அவளது வீட்டில் பெரியதாய் நடந்திருக்கிறது. பாவம் அவள் ஒருத்தியாய் எப்படி அதை சமாளித்தாலோ… பையன்கள் சொல்வதைப் போல, அவளா வி¬ம் குடித்தாளா… வீட்டாளுகள் ஊத்திவிட்டார்களா… அய்யோ…

“என்னாடி ரேணுக… இவெங்கள மல்லுக்கட்ட விட்டு பஞ்சாயத்து பாத்துகிட்டிருக்க…” – என்றபடி வந்தார் மச்சுவீட்டு அம்மாவின் மகள் அம்சவல்லி. “ஒன் சிநேகிதி பாய்சன் அடிச்சு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறாக… பாக்கலியா…” – என்றபடி வந்தார்.

“யக்கா… அவுங்கள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்களாக்கா…” – பனியன் போட்டவனை தள்ளிவிட்டு இன்னொருத்தன் அம்சாவின் முன்னால் வந்து கேட்டான்.
அம்சவல்லி, “ஆமா…” என்றாள்.

“பார்ரா… என்னமோ அவுக அப்பா அங்கியே சாகட்டும்னு மல்லுகட்றாராம்…”

“யே… எங்கவ்வா சொல்லுச்சுறீ…” மறுபடி சண்டையிட ஆரம்பிக்க அம்சாக்கா… “போங்கடா அங்கிட்டு… ஒங்க வயசுக்கு தக்கன பேசுங்கடா… ஒட்றா…” – விரட்டிவிட, மறுபடி டயர்கள் உருண்டன.

“நல்லாருக்காளா…”

“ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போய்ட்டாங்க… நல்லாத்தே இருப்பா…”

“அவுகப்பா பெரச்சனயா…”

“ஆமா… நேத்துவரைக்கும் ரெண்டுவேரையும் கொஞ்சவிட்டு இன்னிக்கு வந்து சாதி இடிக்கிதாம்…”

“சாதியா… ரெண்டுவேறும் பிள்ளமார்க தான…”

“எந்த வெளக்கமாறா இருக்கட்டும். இத்தன நாள் வீட்ல வந்து ஆட்டம் போட்டானுகள்ல… ஒரு வயசுப்பிள்ள இருக்க வீட்ல ஆம்பளப்பயல நொழைய விடலாமா… நானெல்லாம் எந்தம்பியவே லிமிட்டாத்தே வச்சிருக்கெ. தாய் மாமென்னாலும் தள்ளித்தாண்டா நிக்கணும்னு எம்புட்டு வெனாவா இருக்கம். இதுக… புதுப்பவுசு.. கவடு நொளைய விட்டுப்புட்டு காச்பூச்னு கத்துனா…”

அம்சாக்காவின் பேச்சு சரியாய் பிடிபடவில்லை. ஒன்றைத் தொட்டு ஒன்றில் நிலைக்காமல் இருந்தது. விடை கிடைக்காமல் ரேணுகாவுக்கு தவிப்பு அதிகமாகியது.
“ரெண்டு பேரையும் கட்டி வக்கிறதா அவுக அம்மாவே சொல்லுச்சாமே…” – ரேணு ஒரு சரடு உருவி விட்டாள்.

“அவக ஆத்தாளுக்கு சம்மதந்தே… எங்குட்டாச்சும் கரசேத்தா போதும்னு… அப்பெங்காரெந்தே துள்ளுறான், சாரயத்த குடிச்சுப்புட்டு வந்து சலம்புறான். ரெண்டு நாளா ஒரே பெரச்சன போலருக்கு. பாத்தா… அசிங்கப்பட்டு சாகறதுக்கு அல்ப்பாய்சுல போயிரலாம்னு அரளிக் கொட்டய அரச்சிட்டா…”

“அரளிக் கொட்டயா… மூட்டப்பூச்சி மருந்துங்கிறாக…”

“எதோ ஒண்ணு….”

“சாதின்னு எதோ சொன்னீக…”

“ஆமாடி… இவக வெள்ளாள பிள்ளமாராம், அவெ கொடிக்கா பிள்ளமாராம்…”

“அதுனால…”

“அதுனால… கட்டிக்குடுக்க மாட்டாராம்”

“பாவம்… எம்புட்டு ஆசையா இருந்தா… அதுதே மனசு வெந்து போயிட்டாளோ… மாப்ளகாரெ வர்லியாக்கா…”

“பொண்ண பெத்தவுகளுக்கே இம்புட்டு வீம்புன்னா அவெ எம்புட்டு ரப்புல இருக்கானோ… எட்டிப் பாக்கல போல… அதே மருந்தடிச்சிட்டா…”

“ஒரு வேள தாக்கல் தெரியுமோ தெரியாதோ…”

“ஓர் நாளக்கி ஏழுதரம் எட்டிப்பாக்குறவனுக்கு விசயம் எட்டாமயா இருக்கும். வந்து என்னா செய்யப் போறான்… மதுரவீரெம் மாதிரி செற எடுத்துட்டா போகப் போறான்… வேலயப் பார்ரீ…” என்றபடி முந்தானையால் வியர்வை துடைத்துக் கொண்டே தன் வீடு நோக்கி நடந்தாள் அம்சவல்லி.

ரேணுகாவிற்கு வீட்டுக்குள் நுழைய மனசில்லை. அவளைப் போய் பார்த்து வரவேணும். மண்ணாகிக் கிடக்கிற அவளது மனசுக்கு இதமாக தைரியப்படுத்தக்கூடிய மாதிரி ரெண்டு வார்த்தை சொல்லிவிட்டு வந்தால் நல்லதே போல தோன்றியது. ஆஸ்பத்திரிக்கு போக முடியுமென தெரியவில்லை. அவ்வளவு தூரம் போவது தன்னை பாதிக்கலாம்.
லவ்யூ சொன்னவனை பார்த்தால் என்ன என தோன்றியது.

அப்படி நினைத்ததுமே நெஞ்சில் ஆவேசம் பொங்கியது. பொம்பளைன்னா சாதாரணமா…? தேவப்படுறப்ப சிரிச்சுப் பேசுறதும், பிரச்சன வாரப்ப தெரியாம ஒளிச்சுக்கறதும் தான் லவ்வா…? போடா..! அவளத் தூக்கிட்டுப் போடா…ன்னு கத்தணும் போல இருந்தது ரேணுவுக்கு.

சாமி வந்தவளைப் போல அந்த ஆவேசத்தை குறையவிடாமல் வளர்த்தாள். கதவைப் பூட்டாமல் நாதங்கியை மட்டும் தாழ் போட்டு விட்டு அவனது வீடு நோக்கி நடந்தாள். தரையில் படும் பாதத்தின் மிதி ஓசை தடங் தடங்கென ரேணுகாவின் நெஞ்சில் எதிரொலித்தது. அந்த அதிர்வின் கனம் குறைவுபடாமலிருக்க நிமிர்ந்தபடி நடந்தாள்.

(ம.காமுத்துரையின் ‘பூமணி‘ சிறுகதைத் தொகுதியின் முதல் கதை)

– May 2010

Print Friendly, PDF & Email

5 thoughts on “உதட்டோடு முத்தமிட்டவன்

 1. வட்டார சொல்வழக்கு எல்லோருக்கும் அத்துபடி ஆகறதில்லை.புரிந்துக் கொள்ளவும், அங்கொன்றும் இங்கொன்றுமான எழுத்து பிழையை நேர் செய்து அர்த்தம் புரிந்துக் கொள்ள மறுக்கா மறுக்கா படித்தாலும் மனதில் நின்ற கதை.

 2. எப்போதும் பலி ஆடுகளாக, பிரச்சினைகளை தீர்க்க முடியாத போது சாவை நோக்கி துரத்தப்படும் துரதிஷ்டவசமான வாழ்க்கை தான் பெரும்பாலான பெண்களின் நிலை. காதல் மட்டும் விதிவிலக்கா என்ன? அதுவும் சாபக்கேடு தான் போலும்….தன் நிலையை எடுத்துரைக்க முடியாத நிலையில் உள்ள பெண்களின் பிரதிநிதி தான் சிறுகதையின் நாயகி ‘அவள்’.

  நான் வாசித்த காமுத்துரை அவர்களின் கதைகளில் கதாநாயகிக்கு பெயர் கிடையாது. ஒருவேளை அவள் என்பது பொதுப்பெயர் தானே யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், இல்லை யாரையும் நேரிடையாக குறிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்ற எண்ணமோ ? எது சரியான காரணம் என தெரியவில்லை. எனினும் ‘அவள்’ என்று அவர் குறிப்பிடும் ஒருவர் நம் வாழ்வில் கடந்து வந்த நபர் என்பதை மறுக்க முடியாது.
  அப்படி கடந்து வந்த நிகழ்வை வாசிப்பவரின் கண்முன் மறுபடியும் நிறுத்தக் கூடிய மாயம் அறிந்தவர் எழுத்தாளர் காமுத்துரை.

  அவருடைய படைப்பான ‘உதட்டோடு முத்தமிட்டான்’ சிறுகதையில் அவரது கைவண்ணத்தை காண முடிகிறது.

 3. இந்தக் கால இளசுகளின் கதை. அவர்கள் எண்ண ஓட்டத்தை அழகாக வெளிப் படுத்தியிருக்கிறார். ஒரு பெண் தவறு செய்தால் எப்படி எல்லாம் பேசுவார்கள் என்று விலாவாரியாக விவரித்து எழுதி உள்ளார். மிக அருமை.

 4. சாதி,மதம்,இனம்,மொழி வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருப்பது நட்பு மட்டுமே. எந்தச் சூழலிலும் உற்ற தோழனாய் ,பிரதிபலனை எதிர்பாராமல் தோழனுக்குத் “தோள்”கொடுப்பது நட்பு மட்டுமே.
  இரு தோழிகளின் நட்பின் ஆழத்தை மிக எளிமையானநடையில் வெளிப்படுத்தி இருக்கிறார் தோழர் காமுத்துரை அவர்கள்.தோழியின் நிலையை அறிய முடியாமல் தவிக்கும் ரேணுவின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதம் அருமை. தன் தோழியை நேரில் காண முடியாவிட்டாலும் அவளுக்காக நியாயம் கேட்கப் புறப்படும் ரேணுவின் நட்பின் ஆழம் அளவிடற்கரியது.
  நாவல் அல்லது சிறுகதை எதுவாக இருப்பினும் வட்டார மொழியில் கதையை நகர்த்துவதால் நாம் அக்கதையின் உள்ளே பயணிப்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

 5. இளம் தோழியர் இருவரின் காதல் பற்றிய பேசாசுப் பரிவர்த்தனைகளை அவ்வளவு இயல்பான வார்த்தைகளில் வாசிக்கும் போது நாமும் அவர்களுடன் அங்கே மூன்றாவது நபராய் நிற்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறது கதாசிரியரின் சொல்லாடல்.காதல் என்ற பெயரில் என்னென்னவோ அபத்தங்களும், வக்கிரங்களும் நடந்தேறிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் முத்தம் என்ற ஒரு விஷயம் சிறுநகர மாந்தர் வாழ்வில் எவ்வளவு கிளர்ச்சி ஊட்டக் கூடியதாக
  இருக்கிறது என்ற வியப்பை ஏற்படுத்துகிறது.

  ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு வித மனப்பதற்றத்திலேயே நம்மை வைத்த எழுத்து, கிரைம் கதை போல கடகடவென்று வாசித்து முடித்த பின்னரும் அவள் பிழைத்துக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறதா இல்லையா என்று சஸ்பென்ஸ் வைத்து முடிக்கும் போது கதை முடிந்த பிறகும் நாம் அவளுக்காகக்
  கவலைப் பட்டு மனதளவில் பின் தொடரும் நிலையை உருவாக்கிவிட்டார் ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *