அவன் மிகவும் சந்தோஷத்துடன் குளியலறையில் சீட்டியடித்தவாறு குளித்துக் கொண்டிருந்தான். சந்தோஷத்துக்குக் காரணம் நேற்று ஒரு நிறுவனத்திலிருந்து அவனுக்கு வந்த கெமிஸ்ட் வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர். மறுதினம் தூத்துக்குடி சென்று வேலைய ஒப்புக் கொள்ள முடிவு செய்திருந்தான்.
குளியறையிலிருந்து வெளிவரும்போது அவனுக்கு காஞ்சனாவின் நினைவு வந்தது.
தான் அவளை நாளையிலிருந்து பார்க்க முடியாது, தன்னுடைய எட்டு மாதப் பழக்கம் இன்றுடன் சரி என்கிற நினைப்பு அவனுக்கு மிகவும் கசந்தது.
வறுமையான குடும்பத்தில் பிறந்த அவன் பி.எஸ்ஸி. கெமிஸ்ட்ரி முதல் வகுப்பில் பாஸ் செய்துவிட்டு, வேலை தேடிக்கொண்டே, ஷார்ட் ஹாண்ட் டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டிருந்தான். வருமானத்திற்காக ‘சர்குலேட்டிங் லைப்ரரி’ ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான். அதில் மாதம் முன்னூறு ரூபாய் வந்து கொண்டிருந்தது.
காலையில் இன்ஸ்டிடியூட்டிற்குச் சென்று விட்டு, மாலையில் சுமார் நூறு வீடுகளுக்குச் சென்று அந்த வார, மாத இதழ்களை சர்குலேட் பண்ணிவிட்டு, வீடு திரும்ப இரவு மணி எட்டரையாகிவிடும்.
அப்போது அறிமுகமானவள்தான் காஞ்சனா. அவளது அழகும், கவர்ச்சியான தோற்றமும் அவனைக் கிறங்கச் செய்தன. பல இரவுகள் தூங்காமல் அவளுடைய நினைப்பிலேயே புரண்டான்.
புத்தகங்களைக் கொடுப்பதற்கு அவள் வீட்டுக்கு இவன் சென்ற சில சமயங்களில், அங்கு வந்து போகும் அரசாங்க ஊர்திகளைப் பார்த்து அவள் தந்தை பெரிய அரசாங்க அதிகாரியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். மேலும், அவள் வீட்டில் தெரிந்த பணக்காரத் தன்மை இவனை அவளிடத்திலிருந்து சற்று ஒதுங்கியே இருக்கச் செய்தது. அவளைக் காதலிக்கவோ, திருமணம் செய்து கொள்ளவோ தனக்குத் தகுதி கிடையாது என்ற உண்மை நன்கு புரிந்திருந்தது. இருப்பினும், அவளைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களை இவன் தன்னுள் வளர்த்துக் கொண்டே வந்தான். அவளுடைய நினைப்பே இவனுக்கு மிகவும் இனித்தது. ஒரு பெரிய மனுஷத்தனமான மன முதிர்ச்சியுடன் அவளை மானசீகமாகக் காதலித்தான்.
காஞ்சனாவிற்கு அன்றைய பத்திரிக்கைகள் அன்றன்றைக்கே அவளிடத்தில் வந்துவிட வேண்டும்.
பத்திரிக்கைகளை மேற்கொண்டு ஒரு நாள்கூடத் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ளாது, மறு நாளே சா¢யாகத் திருப்பித் தந்துவிடும் அவளது நாகா£கப் பாங்கினை இவன் மிகவும் ரசித்து, மதித்து மகிழ்ந்தான்.
ஒருமுறை அப்படித்தான் ஒரு வெள்ளியன்று மாலையில் இவன் அவள் வீட்டிற்குச் சென்றபோது, காஞ்சனாவிற்குப் பதிலாக அவளுடைய தாயார் வெளியே வந்து, அன்றைக்கு வந்திருந்த பத்திரிகைக்குப் பதிலாக வேறு ஏதோவொரு பழைய வார இதழை வாங்கிக்கொண்டு போனாள். இவனும் மெத்தனமாக வந்துவிட்டான்.
மறு நாள் மாலையில் இவன் சென்றிருந்தபோது, காஞ்சனா தன் தாயிடம் அவள் சரியாகப் பத்திரிகை வாங்காதது குறித்துக் கோபத்துடன் இரைந்து கொண்டிருந்தாள். அவளது நியாயமான கோபத்தை மனத்துக்குள் ரசித்தவாறே ஒன்றுக்கு இரண்டாகப் பத்திரிகைகளைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
இன்று மாலை, கடைசியாக அவளைப் பார்க்க வேண்டும். போகும்போது சாக்லேட் வாங்கிப்போக வேண்டும், அன்றைக்கு வந்த பத்திரிகைகளைக் கொடுத்துவிட்டு, தனக்கு நல்ல வேலை கிடைத்த விஷயத்தையும், நாளை முதல் தான் புத்தகங்கள் போடுவதிலிருந்து நின்று கொள்ளப் போவதையும் அவளிடத்தில் சொல்ல வேண்டும், தான் என்றும் இதே மாதிரி சர்குலேட்டிங்கில் இருக்கப் போவதில்லை என்ற உண்மையைப் பெருமிதத்துடன் அவளுக்கு உணர்த்த வேண்டும்…
‘கங்கிராட்ஸ்’ சொல்வாள். ‘என்ன வேலை? எந்த ஊரில்? என்று கண்கள் படபடக்கக் கேட்பாள். அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, சாக்லேட்டைக் கொடுத்துவிட்டு, பிரியா விடை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தன்னுள் சந்தோஷமாக நினைத்துக் கொண்டான்.
மாலையில் மழமழவென்று ‘ஷேவ்’ பண்ணிக் கொண்டான். மிக நேர்த்தியாக உடையணிந்து கொண்டான். புத்தகக் கடைக்குச் சென்று புதிதாக வந்திருந்த வார இதழ்களை வாங்கிக்கொண்டான்.
மறக்காமல் ரெட்டியார் கடையில் கடன் சொல்லி இரண்டு காட்பரீஸ் சாக்லேட் வாங்கிக்கொண்டு, காஞ்சனாவின் வீட்டை நோக்கி சைக்கிளைச் செலுத்தினான்.
அவள் வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தி மணி அடித்தான். பால்கனியில் ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவள், இவனைப் பார்த்ததும் விரைந்து இறங்கி வந்தாள்.
பத்திரிகையை எடுத்துக் கொண்டு, தோட்டத்துக் கதவை திறந்து உள்ளே சென்றான்.
மயில் கழுத்து நிறப் புடவையும், அதே நிறத்தில் ஜாக்கெட்டும், இந்த அழகுக்கெல்லாம் அழகு செய்ய அப்போது அவள் மீது அடித்துக் கொண்டிருந்த மாலை நேர வெய்யிலும், இவனை மெய்ம்மறக்கச் செய்தன.
சிறு புன்னகையுடன் பத்திரிகயை அவளிடத்தில் நீட்டினான்.
வாங்கிக் கொண்டு திரும்ப எத்தனித்தவளை, “மேடம்” என்று அன்பொழுக அழைத்தான். அவள் இவனை நோக்கி ‘என்ன?’ என்பதுபோல் புருவத்தை வில்லாக உயர்த்தினாள்.
“எனக்கு தூத்துக்குடியிலே கெமிஸ்ட் வேலை கிடைச்சிடுச்சுங்க… நாளையிலிருந்து நான் புத்தகம் தர வரமாட்டேன்… நாளை காலையில் தூத்துக்குடி சென்று வேலையை ஒப்புக் கொள்ளப் போகிறேன்” என்று குரலில் பெருமிதத்துடன் மகிழ்ச்சி பொங்கச் சொல்லி நிறுத்தினான்.
அவள் இவனைச் சிறிது நேரம் முறைத்துவிட்டு, “என்ன இது? முன்னபின்ன ஒன்றும் சொல்லாமல் இப்படி திடீர்னு வரமாட்டேன்னு சொன்னால் என்ன அர்த்தம்…? வேற யாரையாவது ஏற்பாடு செய்துவிட்டுப் போங்க” என்றவள், “அம்மா, நாளையிலேர்ந்து இந்த லைப்ரரிக்காரன் வரமாட்டானாம்..” என்று குரலில் வெறுப்பு தொனிக்க கத்திச் சொல்லியபடியே வீட்டினுள் சென்றாள்.
அவளது இந்தச் செய்கையினால் இவன் மிகவும் அடிபட்டுப் போனான்.
தனக்கு வேலை கிடைத்திருக்கும் நல்ல செய்தியை வெகு அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, நாளையிலிருந்து வேறு ஆளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டது மட்டுமின்றி, “நாளையிலிருந்து இந்த லைப்ரரிக்காரன் வரமாட்டானாம்..” என்று தன்னை ஒருமையில் குறிப்பிட்டது இவ்னை மிகவும் நோகச் செய்தது.
செய்வதறியாமல் சிறிது நேரம் நின்றவன் தோட்டத்துக் கதவை திறந்து கொண்டு, வெளியே வந்து சைக்கிளில் ஏறினான்.
கடன் சொல்லி வாங்கிய ‘காட்பரீஸ்’ தொடையை உறுத்திக் கொண்டிருந்தது.
இந்த எட்டு மாதப் பழக்கத்தில் ஒரு சராசரி சிநேக பாவத்துடன் கூடத் தன்னை அவள் மதிக்கவில்லை; தன்னை விட தான் அன்றாடம் தரும் பத்திரிகைகளைத்தான் அவள் மிகவும் விரும்பி மதித்தாள் என்ற அப்பட்டமான உண்மையை உணர்ந்தபோது அவன் மனம் மிகவும் கஷ்டப் பட்டது.
அவளைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயங்கள் தன்னால் மட்டுமே தன்னுள் வளர்க்கப்பட்டு, அந்த அபிப்பிராயங்கள் வெறும் கானல் நீராகிப் போனது குறித்து மிகவும் வெட்கிப் போனான்.
வேலை கிடைத்த சந்தோஷம் அடிபட்டுப் போய், இந்த சம்பவம் இவனைப் பெரிதும் சுட்டது.
இனந்தெரியாத வேதனை இவனுள் பீரிட்டது.
சைக்கிளை நிறுத்திவிட்டு, மைல் கல் ஒன்றில் அமர்ந்து, ஜன நடமாட்டமில்லாத அந்த மாலை நேர அரையிருட்டில் ‘ஓ’ வென்று சிறிது நேரம் வாய்விட்டு அழுதான்.
– ஆனந்த விகடன் (7-12-1980)