சாரு.. தன் மொபைலில் விடியற்காலையில் மிஸ்டு கால் வந்ததை பார்த்ததும், ஏதேதோ உணர்வுகள் அவளுள் வந்தன.
இரண்டு நாளா இப்படி அடிக்கடி நடக்குது. கட்டானதும் மெஸெஜ் வரும் ‘ப்ளீஸ் கால் மீ ‘ ஆர் மெஸெஜ், என்று.
அப்பா, அம்மாவும் யாரும்மா இந்த நேரத்திலே என கேட்கத் தொடங்கிவிட்டனர். என்னச் சொல்வது எதைச் சொல்வது என்ற குழப்பம்.
திரும்ப மிஸ்டு கால் வரட்டும், இந்தத் தடவை பேசிடனும், ஏன் இப்படி பண்றீங்க? உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டிடனும், அப்பத்தான் மனசு நிம்மதியாக இருக்கும். நினைத்தது போல் வந்தது.
எடுத்துப் பேசினாள்.
“என்ன வேணும் ? உங்களுக்கு இப்படி ஓயாம கால் பண்றீங்க?. இங்க இருக்கிறவங்க எல்லாம் யாரு யாருனு கேட்கிறாங்க!”, எனப் பொறிந்தாள்.
“சாரிங்க, நான் வெளியூரிலே இருக்கிறதினாலேதான், இன்றைக்கு காலையிலே ஊருக்கு வந்துட்டேன், இன்று மாலை 5.00 மணிக்கு நாம நேரு பார்க்குல சந்திப்போமா?. உங்ககிட்டே தனியா நேரிலே பார்த்து பேசனுமே, இன்றைக்கு காதலர் தினம் வேறே”, எனக் கெஞ்சினான் பாலா.
“அதெல்லாம் முடியாது, எனக்கு காலேஜ் இருக்கு”.
“ப்ளீஸ், இன்றைக்கு மட்டும் வந்துடுங்க. நாளை முதல் நான் போன் பண்ணி தொல்லை பண்ணவே மாட்டேன்”.
“அப்படின்னா, நான் வருகிறேன்”, என்றாள் சாரு.
நேரு பார்க்..மாலைநேரம்.
கூட்டமே இல்லை, காதலர் தினம் என்பதால்,ஒரு சில காதல் ஜோடிகள் ஆங்காங்கே பேசிக்கொண்டும், பரிசு பொருளுடனும் நின்றுக்கொண்டு இருந்தனர், அத்தனை பேரும் அலுவலகத்திலிருந்தும், கல்லூரியிலிருந்தும் நேரடியாக வந்தது போல தெரிந்தது.
நடைப்பயிற்சி செய்பவர்கள்கூட இன்று குறைவுதான், அவர்களும் காதலர்களுக்காக இடம் விட்டு கொடுத்து இருப்பார்களோ? என எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
காத்திருக்கும் நேரமெல்லாம் வேகமாய் கழியக்கூடாதா என்று ஏங்கினாள்..
சீய்! காலேஜ் பக்கத்திலே இருந்ததால் சீக்கிரம் வந்து விட்டோம், நாம ஏதோ ஆர்வமா இருக்கோம்னு நினைச்சுடப் போறார், கொஞ்சம் லேட்டா வந்து தவிக்க விட்டு இருக்கலாமோ? என யோசித்தாள்.
“ஹலோ,சாரு! எப்படி இருக்கே?”, என தன் நண்பனுடன் வந்தான் பாலா.
“நீ பேசிட்டு வாடா, நான் போய் ஒரு தம்மை போட்டு வர்றேன்”, எனக் கிளம்பினான் நண்பன்.
கையில் உள்ள பரிசு பொருளை அவளிடம் தந்து மண்டியிட்டு, “சாரு! ஐ லவ் யூ” என்றான் பாலா.
இதை சற்றும் எதிர்பாராத சாரு, வெட்கத்தில் நகர்ந்துக் கொண்டாள்.
அந்த சமயம் தனது தெருவில் வசிக்கும் கண்ணன் மாமா, “நடக்கட்டும், நடக்கட்டும்” என சிரித்தபடி கூறியவாறே கடந்து போனார்.
இவளோ பயந்து வெட்கி நின்றாள், நிச்சயம் இன்றைக்கு வீட்டுக்கு செய்தி போயிடும்.
“நீ சொல்லு ,என்னைப் பிடிச்சிருந்தா?”, என்றார் பாலா.
“ஐ லவ் யூ டூ!”, என்றாள் சாரு
“உங்க வீட்டில் நம்ம கல்யாணத்துக்கு இப்போதைக்கு ஒத்துக் கொள்ள மாட்டாங்கன்னு தெரியும், நான் இந்த வருடம் வெயிட் பண்ணுகிறேன், அடுத்த வருடம் அவங்க ஒத்துக்கலைன்னாலும், யார் தடுத்தாலும் உன்னை தூக்கிட்டுப் போய் கோயில்லே திருமணம் செய்வேன், அதுக்கெல்லாம் ஆளு இருக்கு”, என்றான் தைரியமாக.
ரொம்ப தைரியம்தான்!
“எத்தனை வாட்டித்தான் தூக்குவீங்க? அனுமதி பெற்று திருமணம் செய்கிற ஐடியாவே இல்லையா?”.
முப்பத்துமூன்று வருட காதல் வாழ்க்கையை நினைத்து வாய் விட்டுச் சிரித்து மகிழ்ந்தனர் இனிய காதல் ஜோடிகள் சாருவும் பாலாவும்.
“நீ எப்போ என் வீட்டிற்கு சாரி, நம்ம வீட்டிற்கு வருகிறாய்?” என்றான் பாலா என்கிற பாலசுப்ரமணியன்.
ஓய்வுப்பெற்ற கல்லூரி பேராசிரியர், ஆய்வுக்காக வெளியூர் சென்று இருந்தார்.
அடுத்த வருடம் அறுபதாம் கல்யாணம் செய்துக்கொள்ள இருப்பவர்.
“நாளைக்கு கட்டின புடவையோடு வந்து விடுகிறேன்”, என்றாள், அடுத்த வருடம் ஓய்வு பெறப்போகிற பேராசிரியை.
பாலா ஊரில் இல்லாததால் பாதுகாப்பிற்காக தன் தாய் வீட்டில் இருந்த சாரு என்கிற சாருமதி.
உங்கள் பாராட்டுக்கு நன்றி
எத்தனையோ காதல் கதை படித்துஇருக்கிறேன் அனால் இந்த கதை என் வாழ்வில் நிகழ வேண்டும் என்று …மிகவும் ஆசையாக உள்ளது .. கதையின் உரிமையாளருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.