ஆச்சர்யம் காத்திருக்கிறது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 31,745 
 
 

இந்தக் கதையை உங்களுக்கு சொல்லப்போகும் நான் ஒரு அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்களைப் போன்றே சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். உங்களைப் போலவே புகை கக்கும் டி.வி.எஸ்-50 ஒன்றை வைத்துக்கொண்டு, அல்லும்பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போதேனும் அது கிளம்ப மாட்டேன் என்று அடம்பிடிக்கும்போது, ‘லட்சுமி கிளம்பிடு’ என்று ‘படிக்காதவன்’ ரஜினிபோல கெஞ்சிக்கொண்டு சாலையோரத்தில் நின்றிருப்பேன். கெஞ்சல் என் வண்டியிடம் எடுபடாது; உருட்டல்தான். வழக்கமான என் மோட்டார் மெக்கானிக்கிடம் கொண்டுசென்றால், வழக்கமாக அவன் சொல்வது ‘பேரீச்சம்பழக்காரனுக்குத்தான் தேறும்’.

என் அப்பா அரசாங்கப் பேருந்து ஓட்டுநர். வீட்டில் என் மீது கொஞ்சம் பாசமாக இருந்த ஒரே ஜீவனான அக்காவையும், சேலத்தில் கல்யாணம் கட்டிக்கொடுத்து போன வருடம் அனுப்பிவிட்டோம். வழக்கமாக இப்படியான குடும்பத்தில் ஆஸ்துமா தொந்தரவுள்ள அம்மா இருப்பார். எனக்கும் அப்படித்தான். ஓரளவு என் நிலைமை உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஆச்சர்யம் காத்திருக்கிறது1குறுநகரம் என்று ஒன்று இருந்தால், அங்கு செல்போன் கடைகள் எப்படியும் 10 இருக்கும். நான், சென்னிமலை குறுநகரத்தின் வண்டிப்பேட்டை அருகில், ஜீவன் காம்ப்ளெக்ஸில் ‘பன்னீர் செல் ஷாப்’ என்று போர்டு மாட்டி அமர்ந்து, வருடம் ஒன்று ஆகிவிட்டது. பன்னீர்செல்வம் என்பது முழுப் பெயர். பெயரை வைத்த அப்பாவும், அதை ஆமோதித்த அம்மாவும் பன்னீர் என்றே கூப்பிட்டுப் பழகிவிட்டதால், மற்றவர்களுக்கும் நான் பன்னீர் ஆகிவிட்டேன். எங்கேயாவது கையெழுத்துப் போடும்போது மட்டும் முழுதாக என் பெயர் எழுதுகிறேன்.

அறிந்தவர் திருமண வைபவங்களுக்குச் செல்கையில் நண்பர்களை முன்னால் அனுப்பிவிட்டு, பின்னராக மண்டபத்தில் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தேன். இதற்கும் என் பெயர்தான் காரணம் ஆகிவிட்டது பாருங்களேன். ஆமாம்… வரவேற்பில் நிற்கும் பெண்கள் பன்னீர் தூவி வரவேற்கும்போது இந்த நண்பர்கள், ‘பன்னீருக்கே பன்னீரு… ம்…’ என்று கிண்டல் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

உங்களுக்கு தினசரி காலண்டரில் தாள் கிழிக்கும் பழக்கம் இருக்கிறதா? அதைக் கிழிக்கையில் அவரவர் ராசிக்கு இன்று ‘என்ன போட்டிருக்கான்?’ என்று பார்ப்பீர்களா? பன்னீர்செல்வமாகிய எனக்கு அந்தப் பழக்கம் பள்ளி செல்லும் காலத்தில் இருந்தே இருக்கிறது. இன்று காலையில் கிழிக்கையில்கூட என் ராசிக்கு ‘ஆச்சர்யம் காத்திருக்கிறது’ என்று போட்டிருந்தது. இப்போது, சாயந்திரம் ஆகிவிட்டது. காலையில் இருந்து ‘அது என்ன ஆச்சர்யம்?’ என்று காத்துக்கொண்டே கடையில் அமர்ந்திருக்கிறேன்.

வெளியே மழைத் தூறல் சற்று பெரிதாகிவிட்டது. மழை, மூன்று நாட்களாகவே மாலையில் எப்படியும் ஓர் உழவு பெய்துவிட்டுப் போய்விடுகிறது. துளி ஒவ்வொன்றும் என் பெருவிரல் அளவுக்குப் பொத்… பொத்… என விழுகிறது. சாலையில் திடீர் என வாகனங்களின் நடமாட்டமும், ஜனங்களின் நடமாட்டமும் காணாமல் போய்விட்டன. நல்ல லோடு ஏற்றிய லாரி ஒன்று முனகிக்கொண்டு மழையில் குளித்துச் சென்றது. வடக்கே பெருந்துறையில் நல்ல மழைபோல. லாரியை சர்வீஸுக்கு விட்டு எடுத்து வந்ததுபோல அவ்வளவு சுத்தம்.

சமயம் பார்த்து நான் காத்திருந்த அந்த ‘ஆச்சர்யம்’ என் கண் முன்னே நடந்தேவிட்டது. என் கடை முன் வேகமாக வந்து ஒரு சிவப்பு வண்ண ஸ்கூட்டி நின்றது. அதில் இருந்து அவசரமாக அம்பிகா இறங்கி, தன் தோள்பையை எடுத்துக்கொண்டு என் கடையின் ஓரத்துக்கு வந்தாள். முக்காத்திட்டம் முன்புறம் நனைந்திருந்தாள். பின்புறம் மழைத்துளியே படாததால் சுத்தமாக இருந்தது. அம்பிகா டேபிளின் மீது தன் பையை வைத்துவிட்டு என் முகம் பார்த்தாள். நான் என்ன செய்ய வேண்டும்? அவளை உள்ளே கூப்பிட வேண்டும். ஏனென்றால் சாரல், கடை முகப்புக்கே அடித்தது. தவிர, காற்று வேறு பட்டாசு கிளப்பியது.

”உள்ளார வந்துடுங்க அம்பிகா… மழை நின்ன பொறவு போனாப்போவுது” – அவள் முகம் பார்த்ததால் இதயம் படக் படக் என அடிக்க, ஆனாலும் எப்படியோ சொல்லிவிட்டேன். அவளும் அதற்காகவே காத்திருந்தவள்போல பலகையை மேலே உயர்த்தி கடையினுள் வந்துவிட்டாள். நான் டிராவில் இருந்து என் உபயோகத்துக்காக வைத்திருந்த தேங்காப்பூத் துண்டை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அவள் மறுக்காமல் வாங்கி முகத்தின் ஈரத்தைத் துடைத்துவிட்டு, சுடிதாரில் இருந்த ஈரத்தையும் ஏதோ பேருக்குத் துடைத்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தாள்.

‘இனி, நான் இதைத் துவைக்காமல் பொக்கிஷம்போல காலம் முழுக்க வைத்திருப்பேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன். கடையினுள் இருந்த இன்னொரு சேரில் அமர்ந்துகொள்ளும்படி சொன்னேன். அவள் வெளியே மழையை வேடிக்கைபார்க்க வசதியாக இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.

எனக்கு அவள் ஏதேனும் பழைய விஷயம் பற்றி பேசிவிடுவாளோ என்று பயம். நான் சொல்லும் அந்தப் பழைய விஷயம் மிக மோசமானது. படிப்பு விஷயத்தில் நான் ஒன்றும் சூரப்புலி கிடையாது. 10-ம் வகுப்பில் கோட்டைவிட்டு, பின்னர் டுட்டோரியல் போய், மீண்டும் அந்த ஆங்கிலப் பாடத்தில் ஃபெயிலாகி, மீண்டும் எழுதி ஒருவழியாக ஐந்து பாடங்களிலும் சேர்த்து 333 மார்க் வாங்குவதற்குள், பிறந்த நாள் கண்டுவிட்டது எனக்கு.

போக அரும்பு மீசையும், தாவாங்கட்டையில் அவத்திக்கி அவத்திக்கி கோரைப்புல் முளைத்த மாதிரி சுருண்டு சுருண்டு வந்த நிலையில், என் குரல் வளமும் சற்று தடித்த நிலையில், உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். தலைமை ஆசிரியரின் தயவும், அன்றைய தினசரி காலண்டரில் என் ராசிக்குப் போட்டிருந்த வெற்றியும் அதற்குக் காரணமாகிவிட்டன. என் வகுப்பில் முதல் பெஞ்சில் இருந்த நான்கு பெண்களில் அம்பிகாவும் ஒருத்தி.

அம்பிகாவுக்கு வலசுதான் சொந்த ஊர். எனக்கு அவள் ஊருக்குச் செல்லும் குளத்துப்பாளையம் பிரிவில்தான் வீடு. நான் பள்ளிக்குப் போக வர ஒரு லொடக்லொடக் ஹெர்குலிஸ் சைக்கிள் இருந்தது. அதில் ‘கிணிங் கிணிங்’ பெல்லுக்குப் பதிலாக பீப்பி வைத்திருந்தேன். அது பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் பெண்களைக் கடந்து செல்லும்போதும் அடித்து ஒதுங்கச் செய்வதற்காகத்தான். அம்பிகாவுக்கு சைக்கிள் ஏதேனும் இருக்குமா என்று பார்த்தால், அவள் சித்தப்பன் ‘டுபுடுபு’ பைக்கில் காலையில் கொண்டுவந்து அவளை பள்ளி முகப்பில் இறக்கி விடுவதும், மாலையில் டுபுடுபு என வந்து அங்கே நின்று கூட்டிப் போவதுமாக இருந்தார். இவருக்கு வேறு வேலையே இல்லையா என்ன?

பள்ளியில் பாடங்களைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இருந்ததே இல்லை. என் ஒரே கவலை, அம்பிகாவிடம் என் காதலை எப்படிச் சொல்வது? அம்பிகாவிடம் என்ன பிடித்திருந்தது என்று எனக்கு அப்போது சரியாகத் தெரியவில்லை. சும்மா பிடித்திருந்தது. அந்தச் சும்மாவுக்கு காதல் என்று பெயரிட்டுக்கொண்டேன். அவளின் கூடவே அமர்ந்திருந்த மீனாட்சி, குமார் நகரில் இருந்து நடந்தே படிக்க வந்துகொண்டிருந்தாள். குமார் நகர், அரை பர்லாங் தூரம்தான். அவளுக்கு என்னிடம் என்ன பிடித்திருக்கிறது என்று அவளுக்கும் சரியாகத் தெரியாமல், காதல் என்று அதற்குப் பெயரிட்டுக்கொண்டு என்னைச் சீண்டிக்கொண்டே இருந்தாள். நான் அம்பிகா பின்னும், மீனாட்சி என் பின்னும் என்று வாழ்க்கை விடை தெரியாத பாதையில் ஓடியது. ‘மீனாட்சி அழகா?’ என்று என் காதுக்குள் குசுகுசுக்காதீர்கள். மீனாட்சி, அம்பிகாவைவிட ஒரு படி உசத்திதான். என்ன செய்வது? அவரவர், அவரவர் மனசுக்கு உகந்த ஜோடியைத்தானே தேடிக்கொள்கிறார்கள். அதுவும்போக, மீனாட்சி உச்ச நட்சத்திரம். நமக்கு ஆவாது!

பள்ளிக்குப் பதனமாக நான் போய்வந்துகொண்டிருந்த நான்கு மாதங்களுக்குப் பிற்பாடு அம்பிகாவுக்கு ‘பூப்புனித நன்னீராட்டு விழா’, சென்னிமலை காவேரியம்மா மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடந்தது. அந்த விழாவுக்கு எங்கள் வீட்டுக்கும் அழைப்பு வந்தது. விழா, பள்ளி நாள் ஒன்றின் மதியத்தில் நடந்ததால் அம்மாதான் போய் வந்தது. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அம்மா மண்டையை இட-வலமாக ஆட்டி ‘கூடாது’ என்று சொல்லிவிட்டது. சாதாரணப் பள்ளி யூனிபாஃர்மிலேயே அம்பிகா எனக்கு தேவதை. அவள் பட்டுச்சேலை எல்லாம் கட்டி, நகைநட்டு எல்லாம் பூட்டி ‘அப்படி இருப்பாள்… இப்படி இருப்பாள்…’ என நான் வகுப்பறையில் இருந்தாலும் கற்பனையில் மிதந்தேன்.

இந்த மீனாட்சி பிள்ளையும் விழாவைச் சிறப்பிக்கப் போய்விட்டாள்போல. அவள் விடுப்பு எடுத்திருந்தாள். இந்த மீனாட்சி பிள்ளையை அப்பம்சுப்பமாக நினைத்துவிடாதீர்கள். முந்தின தினம் அவள் உள்ளத்தைத் திறந்து எனக்குக் கடிதம் கொடுத்துவிட்டாள். ‘அன்புள்ள பான்னீரு! நான் உங்காளை நினைத்தே ஒவ்வொரு இராவிலும் துங்கமால் தாலகாணியைக் காட்டிக்கொண்டு பாடுத்துக் கிடாக்கிறேன்! ’ – கடிதத்தை நான் கிழித்து காற்றில் பறக்கவிட்டேன் அவள் கண் எதிரிலேயே. அவள் அழுவாச்சியோடு சென்றாள்.

மேலும் இரண்டு நாட்கள் விடுப்புக்குப் பிறகு, அம்பிகா மறுபடியும் பள்ளிக்கு வந்தபோதுதான் எனக்கு உயிர் வந்தது. கையில் கேமராபோன் ஒன்றை உள்ளங்கை அளவு வைத்துக்கொண்டு, சிலருக்குப் படம் காட்டிக்கொண்டிருந்தாள். அது அவளின் பூப்பு நன்னீராட்டு விழா படங்கள். நான் எப்படி அவற்றைப் பார்ப்பது? ஆனால் பார்த்தே ஆகவேண்டுமே! அவள் போனை எந்த நேரமும் கையில் வைத்துக்கொண்டு, பசங்க முன்பாக பந்தா காட்டிக்கொண்டேயிருந்தாள். மாலையில் இன்டர்வெலில் வகுப்பறையில் எல்லோரும் கிளம்பும்போது, நான் பம்மிப் பம்மி கடைசியாக எழுந்து, அவள் புத்தக பேக்கில் கையைவிட்டு போனை எடுத்துவிட்டேன்.

பின்னர் செல்போன் பூட்டை நகர்த்திப் பார்க்கத் தெரியாமல் இரவில் நோண்டி, நொங்கெடுத்து, உள்சென்று அம்பிகாவின் 50 போட்டோக்களையும் பார்த்தேவிட்டேன். அப்பாடா… ஜென்மசாபல்யம். இனி காலையில் அவளிடமே கொடுத்துவிட வேண்டியதுதான்… ‘போட்டோல தேவதை மாதிரி இருக்கே அம்பிகா’ என்று சொல்லி! அதுதான் நான் முதன்முதலாகக் கையால் தொட்டு, தடவி மேய்ந்த செல்போன்.

அடுத்த நாள் பிரேயரில் தலைமைஆசிரியர்தான் அதை அறிவித்தார். ‘அம்பிகாவின் விலை உயர்ந்த போன் திருடுபோய்விட்டது. பள்ளிக்குள் இதுவரை காவல் துறை வந்தது இல்லை. அவர்களை வரவழைத்துவிட வேண்டாம். எடுத்த பயல் இப்போது கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்’ என்றார். வரிசையில் நின்றுகொண்டிருந்த மீனாட்சி, தலைமை ஆசிரியரிடம் சென்றாள். அவர் காதில் எதையோ சொல்லிவிட்டு வந்தாள். அதன் பின் தலைமை ஆசிரியர் கோபமானக் குரலில் என் பெயரை உச்சரித்தார். ‘பன்னீர்செல்வம்’! அன்றே என் உயர்நிலைப் படிப்பு முடிவுக்கு வந்துவிட்டதைச் சொன்னால், உங்களுக்கு சோகம் வந்துவிடும்தானே. அன்றைய தினசரி காலண்டரில் ‘ஆச்சர்யம் காத்திருக்கிறது’ என்று என் ராசிக்குப் போட்டிருந்தது. அது அம்பிகா தரும் முத்தமாக இருக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

என் தந்தையார் தனக்கான வரை தலைமை ஆசிரியரிடம் என் வருங்காலத்தைப் பற்றி பேசிப் பார்த்தார். ஆனால், கடைசி வரை தலைமைஆசிரியர் மசியவே இல்லை. நான் என் சிவப்பு மையிட்ட டி.சி-யை வாங்கிக்கொண்டு கிளம்பும் வரை, ஒரு தீவிரவாதியை நாடு கடத்துவதுபோல அவர் நடந்துகொண்டார். அப்பா என்னை அம்பிகாவின் சித்தப்பாவிடமே கொண்டுபோய்ச் சேர்த்தார். அவர் ஏதோ அம்பிகாவை வீடு கொண்டுபோய் சேர்க்கும் வேலையில் இருப்பதாக அத்தனை நாட்கள் நினைத்திருந்தேன்.

ஆச்சர்யம் காத்திருக்கிறது2அவருக்கு காங்கேயத்தில் அரிசி ஆலை இருக்கிறது. கூடவே அங்கே பேருந்து நிலையத்தில் செல்போன் கடையும். அட சாமீ… என்னை செல்போன் கடையில் இருந்த இன்னொருவனோடு தொழில் கற்றுக்கொள்ள சேர்த்துக்கொண்டார். தினமும் பேருந்து ஏறி அங்குதான் சென்று வந்துகொண்டிருந்தேன். அப்படி இப்படி என்று மூன்று வருடங்கள் ஓட்டிய எனக்கு, என் தந்தையார் சென்னிமலையிலேயே பொட்டாட்டம் இருக்கும்படி சொல்லி, கடன் உடன் வாங்கி ‘பன்னீர் செல் ஷாப்’பில் அமரவைத்து இதோ வருடம் ஒன்று ஓடிவிட்டது. என் திருப்புக்கதை இவ்வளவுதான் பாருங்களேன்.

அம்பிகாவை நான் பின்னர் மனதில் இருந்து தள்ளிவைத்து மறந்துவிட்டேன். என் பழைய நண்பர்கள் எல்லாம் தறிக் குடோனுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒரு செல்போன் என் வாழ்க்கையைப் புதுப்பித்துவிட்டது பாருங்கள். நான் இப்போது எஜமான். என் நண்பர்கள் சிலரைப்போல வாரக் கூலிக்குச் செல்வது இல்லை. அம்பிகா தினமும் ஸ்கூட்டியில் இந்த வழியாகச் செல்லும்போதுதான், மீண்டும் என் மனதுக்குள் பழைய குருடி கதவைத் திறந்துவிட்டாள்.

அவள் ஈரோடு காலேஜுக்குச் சென்றுகொண்டிருப் பதாகத் தெரிந்துகொண்டிருந்தேன். ஸ்கூட்டியை பேருந்து நிறுத்த ஸ்டாண்டில் போட்டுவிட்டு, பேருந்தில் போய் வந்துகொண்டிருந்தாள். இன்றைய ஆச்சர்யம்… என் அருகிலேயே அம்பிகா!

மழை வெளியே தட்டி லேப்பிக்கொண்டிருந்தது. இப்போதைக்குக் கொஞ்சம் ஓய்ந்தால் போதும்… இவள் கிளம்பிவிடுவாள்.

அது நடக்க வேண்டும் என்று மனதில் சென்னிமலை முருகனை வேண்டிக்கொண்டேன். பழைய விஷயத்தை திருட்டு என்றுதானே இன்னும் நினைத்துக்கொண்டிருப்பாள் அம்பிகா. திருட்டுக் களவாணிப் பயல் அருகில் அமர்ந்திருக்கிறோம் என்றுதானே நினைத்துக்கொண்டிருப்பாள்?

‘யாவாரம் எல்லாம் பரவாயில்லிங்களா பன்னீர்?’ – அவள்தான் என்னைப் பார்த்துக் கேட்டாள். வழக்கமாக இந்தக் கேள்விக்கு எல்லா வியாபாரிகளைப் போலவே பதிலும் சொன்னேன். ‘ஏதோ கொஞ்சம் பரவாயில்லீங்க. இன்னம் கொஞ்சம் சரக்கு இறக்கி, பெருசா விளம்பரப்படுத்தினா தொழில் பிச்சுக்கும். இப்போதைக்கு ரீ-சார்ஜ் பண்றது, கை மாத்திவிடுறது, சிம் விக்கிறதுனு நிதானமா ஓடுதுங்க” என்றேன். ”செல்போனை ஏன் திருடுனீங்க’னு மட்டும் கேட்கக் கூடாது முருகா’ என்று மலையைப் பார்த்துக்கொண்டேன்.

அவள் அதைப் பற்றி நினைக்கவே இல்லைபோல. வெளியே மழை ஓய்ந்தது. ஜனங்களின் நடமாட்டம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. அம்பிகா புன்னகைத்தபடி என்னிடம் விடைபெற்றுச் சென்றாள். நான் கொஞ்சமில்லை… சிறப்பாகவே சந்தோஷமாக இருந்தேன். ‘தேவதைகளின் பொழுதுபோக்கு ஸ்கூட்டி ஓட்டுவது!’ என்று கவிதை பாடினேன்.

அடுத்த நாள் மழை எதுவும் பெய்யாமலேயே, அவள் ஸ்கூட்டி என் கடை முன் நின்றது. நான் பார்ட்டிகள் இருவருக்கு ரீ-சார்ஜ் செய்து அனுப்பும் வரை பொறுமையாக ஓரம் நின்றிருந்தவள், அவர்கள் அகன்றதும் அதே புன்னகையை வீசினாள். அவள் புன்னகைக்கும்போது எல்லாம் எனக்கு வயிற்றில் மூவர் சம்மணமிட்டு அமர்ந்து புளியைக் கரைத்தார்கள்…. ‘திருடா… திருடா’ என்று! அம்பிகா என்னிடம் ‘ஃபேன்ஸி நம்பரில் ஒரு சிம் வேண்டும்’ என்றாள். ‘ஏன் இப்போது இருக்கும் நம்பருக்கு ஏதேனும் கேடுகள் வந்துவிட்டனவா?’ என்று கேட்காமலேயே நான் சந்தோஷமாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்.

தன் செல்போனில் இருந்து பழைய சிம்மை உருவி எடுத்தவள், அதைத் தரையில் போட்டு நாலு உரசு உரசி, கடையோரத்தில் இருந்த குப்பைத்தொட்டிக்குள் எறிந்தாள். ‘என்னாச்சு?’ என்று நான் கேட்காமலே அவளே பதிலும் சொன்னாள். ”ஒரு லூஸு மூஞ்சூரு ஒண்ணு, எப்பவும் மெசேஜ் விட்டுட்டே இருக்குதுங்க, அதான் சிம்மை மாத்துறேன். நைட் ஆக்டிவேஷன் ஆயிடும்ல?” என்று தொகை, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், போட்டோ… எல்லாம் கொடுத்துவிட்டுப் போனாள்.

அவள் சென்ற 10-வது நிமிடத்தில் என் உள்ளூர் நண்பன் சுரேஷ், டிஸ்கவரில் வந்து கடை முன் நிறுத்தி, ”மாப்ள…” என்றான். ”வா மாப்ள… காபி ஒண்ணு போட்டுட்டு அப்புறம் யாவாரத்தைப் பார்ப்போம்” என்று வலுக்கட்டாயமாக இழுத்துப்போய், காபி வாங்கிக்கொடுத்து கடைக்கு வந்தான். அவன் போன் எந்த நேரமும் பிஸியாகவே இருந்தது. எல்லாரும் அவன் நண்பர்கள்போல் இருந்தது. எல்லோருக்கும் இலவசமாகக் கடை விளம்பரம் செய்தான். ”இங்கதான் பன்னீர் செல் ஷாப்ல இருக்கேன். அது நம்ம மாப்ள கடைதான்! வர்றியா?” என்று சொல்லிக்கொண்டே கடைசியாக விஷயத்துக்கு வந்தான். அந்த விஷயம் அவ்வளவு அற்புதம் போங்களேன். மீண்டும் என் வயிற்றில் அந்த மூவரும் புளியைக் கரைக்கத் தொடங்கினார்கள்!

”மாப்ள… அம்பிகா கடைக்கு வந்துட்டுப் போனது மாதிரி இருந்துச்சு. என்ன மாப்ள விஷயம்… வேற புது சிம் குடுத்தியா?” என்றவனுக்கு ”ஆமாம்” எனத் தலையை மேலும் கீழுமாக ஆட்டினேன். அவன் தன் காதல் படலத்தை விலாவாரியாகச் சொன்னான். அதாவது, இரண்டு வருட காலமாக அம்பிகாவின் பின்னால் லோலோவென அலைந்துகொண்டிருக்கிறானாம். அவளின் கடைக்கண் பார்வை அவன் மீது விழுவதே இல்லையாம். ‘கட்டினால் அவளைத்தான் கல்யாணம் கட்டுவேன்’ என்றான். ‘இல்லையென்றால், கட்டினவனைக் கொன்றுவிட்டுக் கட்டிக்கொள்வேன்’ என்றான்.

அட… அம்பிகா சொன்ன மெசேஜ் பார்ட்டி இவன்தானா!? என்ன இருந்தாலும் பணம் பணத்தோடுதானே சேரும். இந்த சினிமாப் படங்களில் வருவதுபோல ஒருவேளை மோதலில் ஆரம்பித்து, பின்னர் காதலில் இவன் ஜெயித்துவிடுவான். நல்ல தம் பார்ட்டி; அம்பிகாவும் தம் பார்ட்டி. நான் ஸ்லோமோஷனில் சென்னிமலை மலைக்கும் பின்னால் பறந்து, சிவன்மலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். அதாவது என் கடையைச் சோகமாகப் பார்த்த வண்ணம்.

‘அம்பிகாவின் புது சிம் நம்பர் இது’ என்று விற்காமல் இருந்த இன்னொரு ஃபேன்ஸி நம்பரை சுரேஷ§க்குக் கொடுத்து அவனை மகிழ்ச்சிப்படுத்தினேன். அவன் எனக்கு முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, ”இதுக்குத்தான் மாப்ள வேணுங்கிறது” என்று சொல்லிப் போய்விட்டான். புளி கரைப்பவர்கள் இப்போதைக்கு வயிற்றில் தங்கள் வேலையை நிறுத்தியிருந்தார்கள். இரண்டு சிம்கள் வசதி கொண்ட என் போனில், அவனுக்குக் கொடுத்த எண்ணின் சிம்மைப் போட்டுக்கொண்டேன்.

அடுத்த நாள் கடைக்கு வந்த அம்பிகா, ‘தன் நம்பரை யார் கேட்டாலும் கொடுத்துவிட வேண்டாம் என்றும், ஒரு மூஞ்சூரு எப்படியோ கண்டுபிடிச்சுடுது…’ என்றும் சொல்லி என்னை எச்சரித்துவிட்டுச் சென்றாள். அவள் சென்றதுமே சுரேஷ் தன் நண்பர்களுடன் கடைக்கு வந்து விட்டான். ”என்ன மாப்ள… அம்பிகா கடைக்கு வந்து என்னமோ சொல்லிட்டுப் போனமாதிரி இருந்துச்சு? நம்பர் இன்னும் ஆக்டிவேஷன் ஆகலியாட்டம் இருக்கு மாப்ள. ஒரு சத்தமும் இல்லாம இருக்குது” என்றான். அவன் நண்பர்கள், கடையில் இருந்த சாம்ஸங் போன் இரண்டை முழு விலையும் கொடுத்து வாங்கிச் சென்றார்கள். எனக்கு சுரேஷால் பல வகையிலும் லாபம்தான்.

அன்று இரவு, ‘அன்பே… மௌனம் திறப்பது எப்போது?’ என்று சுரேஷிடம் இருந்து மெசேஜ் வந்தது என்னிடம் இருக்கும் ‘அந்த ஃபேன்ஸி நம்பருக்கு’. தொடர்ந்து ஐந்தாறு வந்த வண்ணம் இருந்தன. ஒரு நாளைக்கு 55 மெசேஜ்கள் சுரேஷ் அனுப்பினான். இதில் சின்னதாக காதல் கவிதைகள் வேறு. அது, அவன் சொந்த கற்பனையா என்று தெரியவில்லை எனக்கு. ‘கவிதைகள் எழுதினது யார்?’ என்று டைப்படித்து நான் அனுப்பினேன். அவன் என்ன அனுப்புவான் என்று ஆவலாக இருந்தேன். ஒருகணம் நான் ‘அம்பிகா’ என்றே உணர்ந்தேன். ‘நிஜமா… நீதான் பதில் தந்ததா? கிள்ளிக்கொள்கிறேன். ஆம்… நீயேதான்! கவிதைகள் உனை நினைத்து எழுதியதுதான்!’ என்று மெசேஜ் வந்தது. பின்னர் நான் இந்த விளையாட்டு பிடிக்காமல், சும்மா இருந்துவிட்டேன். அது பாவம் என்று மனதுக்குப் பட்டது.

அன்று மாலை வந்தவன், எனக்கு ஒரு கைக்கடிகாரத்தைப் பரிசு அளித்தான். மெசேஜ் வந்ததில் மிக சந்தோஷமாக இருந்தான். ஒரு வருடக் காலமாகப் பதில் மெசேஜ் அவள் கொடுத்ததே இல்லையாம். அதைக் கொண்டாட முனியாண்டி விலாஸுக்குக் கூட்டிப் போனான். எந்த விளையாட்டுக்கும் முடிவு என்று ஒன்று இருக்குமில்லையா? இரண்டாவது வாரத்தில் முகத்தில் கடுப்புடன் கடைக்கு வந்தவன், ”வா வந்து உக்காரு மாப்ள வண்டில… 10 நிமிஷத்துல வந்துடலாம்” என்றான்.

சுரேஷால் எனக்குப் பல வியாபாரங்கள் சமீப நாட்களில் நடந்துவிட்டன. அவன் நண்பர்கள் பலர், என் கடைக்கு நேரே வந்து ரீ-சார்ஜ் செய்தனர். மறு பேச்சின்றி அவன் வண்டியில் போய் அமர்ந்தேன். பக்கத்து ஜெராக்ஸ் கடைப்பெண்ணிடம் ”சித்தே பாத்துக்கங்க” என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அவனிடம் இருந்து குடிகாரர்களிடம் வீசும் வாசம் வீசிற்று. வண்டி நேராக சென்னிமலை மலையடிவாரத்தில் வந்து நின்றது.

‘மாப்ள… மெசேஜ் திருப்பி அனுப்புறாளேனு நெனச்சு நானும் ஒரு வாரமாப் பார்த்துட்டு இருக்கேன். ஆனா, முன்ன மாதிரியே மூஞ்சியைத் தூக்கிவெச்சுட்டே போறானு கவலையா இருந்துச்சு. இன்னிக்கி பஸ் ஸ்டாண்டுல கிட்டக்க போய் நின்னேன். ஒதுங்கிக் கீழாற எச்சியைத் துப்பிட்டா மாப்ள. அதான் ரெண்டுல ஒண்ணு கேட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் சொல்றது சரியா மாப்ள?” என்றான். நான் என்ன சொல்வேன்? இது அவன் காதல்! அவன்தானே முடிவெடுக்க வேண்டும்!

நானும் சும்மா இருக்காமல், ”ஆமா மாப்ளே கேட்டுட்டா… நாம நம்ம வழியில போயிடலாம். அவ அவ வழியில போகட்டும்” என்றேன். அவன் தன் செல்போனை எடுத்து, ”இதுவரைக்கும் போன்ல அவளை நான் கூப்பிட்டதே இல்ல மாப்ள. இன்னிக்கித்தான் ஃபர்ஸ்ட். அதும் ரெண்டுல ஒண்ணு கேக்கத்தான். எச்சி துப்பிட்டா மாப்ள!” என்றபோதுதான், என் வயிற்றில் மீண்டும் மூவரும் புளியைக் கரைக்கத் தொடங்கினார்கள்… இந்த முறை சற்று வேகமாக!

அவன் கால் பண்ண, என் பாக்கெட்டில் இருந்த செல் சிணுங்கியது. நான் வியர்த்துப்போய் அவன் முன் நின்றேன். ”உனக்குப் போனு வருமாட்ட இருக்கு. எடுத்துப் பேசு மாப்ள” என்றான். அவன் தொடர்ந்து கூப்பிடக் கூப்பிட, என் பாக்கெட்டில் இருந்த செல்போன் கத்தவே, சந்தேகமாக என் போனை எடுத்துப் பார்த்தான். அதில் அவன் நம்பர் ஒளிர்ந்தது. ‘அப்புறம் என்ன… ஆரம்பிக்க வேண்டிதுதானே’ என்று நின்றேன். ஏற்கனவே கொஞ்சம் போதையில் இருந்தவன், என் கன்னத்தில் நாலு அப்பு அப்பினான். என்ன செய்ய? தப்பு என்னிடம்தானே!

அன்றிரவு அப்பா, ”நீ எப்போதான் உருப்படப் போறே?” என்றார். எனக்கு ஒன்றும் புரியாமல் அவர் முகம் பார்த்தேன். யாரேனும் அல்லது சுரேஷே அப்பாவைப் பார்த்து, ‘உன் பையனை ஒழுக்கமா இருந்துக்கச் சொல்லு என்று சொல்லிவிட்டானோ’ என்று பார்த்தேன். ”அடிக்கடி கடையை உட்டுட்டு, அந்த சுரேஷ் பயக்கூடப் போறியாமா? அவன் சாவகாசம் உனக்கு எதுக்குடா? பாத்து நடந்துக்கோ” என்று சொல்லி முடித்துக்கொண்டார். அவர் அவ்வளவுதான் பேசுவார். ‘அதான் முடிஞ்சிடுச்சே’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் தேதி காலண்டரில் கிழித்த போதும் என் ராசிக்கு, ‘ஆச்சர்யம் காத்திருக்கிறது’ என்று இருந்தது. ‘என்ன எப்போ பார்த்தாலும் எனக்கு மட்டும் ஆச்சர்யமே காத்துக் கொண்டிருக்கிறது?’ என்று நினைத்தேன். அன்று காலையிலேயே சுரேஷின் டிஸ்கவர் என் கடைமுன் வந்து நின்றது. ‘டேய் மாப்ள… வந்து வண்டில உக்காரு!’ என்றான். என்ன இது வம்பாக இருக்கிறது? நேற்றுத்தானே கோபத்தில் ஒரு பூசையைப் போட் டான். இன்று வந்த கோபத்துக்கு இன்னும் ஒரு பூசையா? எதுக்கு வம்பு என்று, எதுவும் பேசாமல் அவன் டிஸ்கவர் பின்புறம் தொற்றிக்கொண்டேன்.

இவர்கள் வேறு… வயிற்றுக்குள் சர் சர் என புளியைக் கரைக்கத் தொடங்கிவிடுவார்கள். வேலைவெட்டி எதுவும் இவர்களுக்கு இல்லைபோல. சுரேஷ் வண்டியை நேற்று போலவே மலையடிவாரத்தில் கொண்டுபோய் நிறுத்தினான். இவனுக்கு இந்த இடம் வசதிபோல என்னை மிதிக்க. பொது இடத்தில் வைத்து நாலு அப்பினால் யாரேனும் வந்து, ‘ஏன் தம்பி?’ என்று கேட்டுவிடுவார்கள் என மிரளுகிறானா!

‘மாப்ள… இன்னிக்கி அம்பிகாகிட்ட நான் பேசிட்டேன். சுத்தி வளைச்சு அவ எனக்கு தங்கச்சி முறை ஆகுதுனு விளக்கிச் சொல்றா. பார்த்தா அப்படித்தான் வருது. இது தெரியாம நானும் தப்புப் பண்ணிட்டேன். கடைசில அவகிட்ட நான் உன்னை அப்புன விசயத்தையும் ‘சிம் வெச்சு ஏமாத்திட்டான்’னு சொன்னேன். அவ என்னை லூஸுனு திட்டுறா… மாப்ள. அவ உன்னைத்தான் ப்ளஸ் டூ படிச்ச காலத்துல இருந்து விரும்புறாளாம். எனக்குத் தலையே சுத்தி நின்னுச்சுப் பாத்துக்குவேன். அவ போட்டோவைப் பார்க்க ஆசைப்பட்டுத்தான் அவ போனையே நீ தூக்கிட்ட… அப்படிங்கறா! இப்ப நெசமாலுமே நீ எனக்கு மாப்பிள்ளை ஆயிட்டே பன்னீரு” என்றான்.

நான் சென்னிமலை உச்சிக்குப் பறந்துகொண்டிருந்தேன், இறக்கை முளைத்து. ஆச்சர்யம் காத்திருந்து தூள் கிளப்பிவிட்டது. நீங்களும் பார்த்து வைக்கலாம், தேதி காலண்டரைக் கிழிக்கும்போது சில விஷயங்களை இனிமேல்!

– ஆகஸ்ட் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *