அவள் பெயர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 12,115 
 
 

ஒரு ஆணின் மொத்த காதலையும் முதல் காதலி பெற்றுக் கொள்கிறாள்.ஆனால் சிலருக்கு அந்த காதல் சக்சஸானது இல்ல,பலர் தன் காதலை காதலிகிட்ட சொல்லாமலே ஒருதலை காதலவே வாழ்ந்திருக்காங்க.

அப்படியான ஒரு காதல் பயணம் தான்.

யாரோ, யாரையோ பெயர் சொல்லி அழைக்கும் போது “அவ தான் நம்மள கூப்பிடுறா அப்படின்னு” நினைச்சு திரும்பி பார்த்த அனுபவம் அவனுக்கு இருக்கு.படிக்கிற புத்தகத்திலயோ, கடையிலேயோ,வேற எங்கேயோ காதலியோட பெயரை பார்த்தா அவனுக்கு மனசுல ஒரு சின்ன சந்தோஷம். இப்படி ஒரு சுகமான அனுபவம் எல்லாருக்குமே இருக்கும்.

90’s கிட்ஸ் ஒருதலைகாதல் சுகமான காதல்.

அப்ப அவன் ஒன்பதாம் வகுப்பு,புது ஸ்கூல்ல சேர்ந்தான். அப்ப தான் அவனோட காதல் பயணமும் தொடங்குச்சு. அப்ப அவ ஆறாவது படிச்சா.

முதல்முதலா அவள ஸ்கூலுக்கு போற ஆட்டோவுல தான் பார்த்தான்.

அன்னைக்கு ஆட்டோவுக்கு புதுவரவா பொண்ணும் வந்தா.
“ஏற்கனவே ஆட்டோவுல 12 பேரு.இதுல இன்னொரு ஆள் வேறயா அப்படின்னு” கடுகடுப்பாவே இருந்தான்.

அந்த ஆட்டோவை பொருத்தவரைக்கும் அந்த ஸ்கூல் டிரிப்ல இவன் தான் பெரிய பையன். மத்தவங்க எல்லாம் குழந்தைகள்.அதாவது நாலாவது, அஞ்சாவது படிக்கிறவங்கதான்.

அந்த பொண்ணு ஆட்டோவுல வர்றப்ப எல்லாம் சிடுசிடுன்னு இருப்பான். அவளை பாத்தாலே புடிக்காது.

“ஆட்டோவுல உட்கார கூட முடியல, அதனால வேற ஆட்டோவுல போறேன். அப்படின்னு” அவன் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தான். அவன் அம்மாவும் “சரிப்பா வேற ஆட்டோ மாத்திவிடுறோம் அப்படின்னு” சொன்னாங்க.

அதுவும் புதுசா வந்த அந்த பொண்ணு அவன் கூட ஆட்டோவுல ஸ்கூலுக்கு போறப்ப,வர்றப்ப பக்கத்துல உட்கார்ந்தாலும், பேசினாலும் இவனுக்கு புடிக்கிறதில்ல.முகத்தை காட்டி கூட பேசமாட்டேன். கோபப்பட்டு தலையை திருப்பிக்குவான்.

அப்படி ஒரு நாள் அந்த பொண்ணு இவன் பக்கத்துல உட்கார்ந்தா.இவனைப் பார்த்தும் சிரிச்சா. அப்ப உடனே கோபப்பட்டு “ப்பே”…அப்படின்னு சொல்லிட்டு மூஞ்சியை திருப்பிட்டான். உடனே அந்த பொண்ணுக்கு முகமே வாடி போச்சு. ஸ்கூல் வந்ததும் இறங்க போறப்ப, இவன் அவள் முகத்தைப் பார்த்தான். “ஏன் என்னை வெறுக்கிறங்க ?,நான் அப்படி உங்களை என்ன பண்ணேன்னு ?” அவனுக்கு கேட்ட மாதிரி இருந்தது அவளோட பிஞ்சு முகம்.

எதுவும் பேசாமல் கிளாசுக்கு போனான்.

“ஏன் இவ்வளவு வெறுப்பா நடந்துக்குறேன் ?, அவளை ஏன் எனக்கு பிடிக்கல?, அவ அப்படி எனக்கு என்ன பண்ண?, இப்படின்னு” அன்னைக்கு முழுசும் அவன் யோசனை பண்ணிகிட்டே இருந்தான்.

சாயந்தரம் ஸ்கூல் முடிஞ்சு ஆட்டோவுல ஏற வந்தான். அப்ப அந்த பொண்ணும் வந்தா.

“அந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்டு, அவ கிட்ட பேசலாம் அப்படின்னு” முடிவு பண்ணி ஆட்டோவுல அவ பக்கத்துல உட்கார்ந்தான். “அவகிட்ட பேசலாம்னு” அவளையே பார்த்தான்.ஆனா அவ திரும்பி கூட பாக்கல.

“என்னடா, இவ திரும்பி கூட பாக்க மாட்டேங்கற ?, ‘கொழுப்பு’ அதான் அப்படின்னு” நெனச்சுக்கிட்டு பேசாம இருந்தான்.

“அடுத்த நாளும் பேசலாம்”னு நினைச்சு அவ பக்கத்திலே உட்கார்ந்தான். ஆனா அவ இவனை கண்டுக்கக் கூட இல்ல.

அன்னைக்கு சாயந்தரம் நல்ல மழை. ஸ்கூல் விட்டும், யாரும் கிளாஸை விட்டு வெளியில வரல. வெளிய அவ்ளோ பெரிய கனமழை.

கொஞ்ச நேரத்துல மழையோடு வேகம் குறைந்தது. எல்லாம் கிளாஸ் விட்டு கிளம்பினாங்க. ஸ்கூலுக்கு வெளியே ஆட்டோ ரெடியா இருந்துச்சு. எல்லா குழந்தைகளும் வந்துட்டாங்க. மழை மறுபடியும் வேகமாக ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது.

“எல்லாரும் வந்துட்டாங்க, இந்த கார்த்தி பயல மட்டும் காணோம்னு” கோபப்பட்டார் ஆட்டோ டிரைவர்.

“மழை அதிகமாக வரும்னு” ஆட்டோ ரெண்டுபக்கமும் கவர் போட்டு மூடிவிட்டு, ஆட்டோவை கிளப்பினார் டிரைவர்.

“இன்னும் கொஞ்ச நேரம் இருங்க அண்ணே. கார்த்தி வந்துருவாரு அப்படின்னு” அந்த பொண்ணு ஆட்டோ டிரைவர் கிட்ட சொன்னா.

அதே மாதிரி வேகமாக ஓடிவந்து ஆட்டோவுல ஏறினான் கார்த்தி.

” ஏண்டா லேட்டு மழை இப்ப அதிகமாயிடுச்சு பாரு.சீக்கிரம் வந்திருந்தா நனையாமல் வீட்டுக்கு போய் இருக்கலாம்ல்லன்னு” திட்டிகிட்டே, இரண்டு பக்கமும் கவர்ல மூடி வண்டியை எடுத்தார் ஆட்டோ டிரைவர்.

கார்த்தி எதுவும் பேசாமல் உட்கார்ந்தான். அவன் பக்கத்துல அவ உட்கார்ந்திருந்தாள். ஆனா இவனுக்கு நினைப்பு வேற எங்கேயோ இருந்தது. அந்த பொண்ணு இவனைப் பார்த்து “ஏங்க லேட்டுன்னு” கேட்டா.

டக்குனு திரும்பி அவளைப்பார்த்தான். என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. “பிரண்ட்ஸ் கூட கிளாஸ்ல பேசிக்கிட்டே நின்னுட்டேன் அப்படின்னு” பதில் சொன்னான்.

“ம்..ன்னு” சிரிச்சுகிட்டே திரும்புனா அந்த பொண்ணு.

அவ பேசின குரல் இவனுக்கு என்னமோ பண்ணுச்சு. ஆட்டோவுல மத்தவங்க எல்லாம் பக்கத்துல ஏதோ பேசி சிரிச்சிட்டு வந்தாங்க. ஆனா இவனுக்கு மறுபடியும் இவ கிட்ட பேசணும்ன்னு தோணுச்சு.

அவளைத் திரும்பிப் பார்த்து “என் பேரு கார்த்தி,உன் பெயர் என்ன ? அப்படின்னு” கேட்டான். அவ சிரிச்சிக்கிட்டே “இத்தன நாளா வறீங்க, என் பேரு தெரியாதா? அப்படின்னு” கேட்டா. இவனுக்கும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. அமைதியா இருந்தான். அவ மறுபடியும் சிரிச்சுகிட்டே “என் பேரு சிவ சுந்தரி” ன்னு சொன்னா.

இவனும் சிரிச்சு கிட்டே பேச ஆரம்பிச்சான். வெளியில மழையும் நின்னது. ஒவ்வொருத்தரா ஸ்டாப் வரவும் எல்லாரும் இறங்குனாங்க.ஆனா நேரம் போறது கூட தெரியாம ரெண்டு பேரும் பேசிகிட்டே வந்தாங்க. அவ அவனை பேர் சொல்லியே கூப்பிட ஆரம்பிச்சா. இவனும் கண்டுக்கல.

“நீங்க பேச்சுப்போட்டியில் பேசறப்ப,நா கேட்டுருக்கேன்னு” அவ சொன்னா.

உடனே இவனும் தன்னை பத்தி பெருசா பில்டப் கொடுத்துகிட்டு வந்தான். அவ வீட்டுக்கு முன்னாடி ஆட்டோ நின்னது.

“சரி நான் போயிட்டு வரேன். நாளைக்கு பாக்கலாம்ன்னு” சொல்லிவிட்டு இறங்கிப் போனா. ஆனா இவனுக்கு மனசு இல்ல. “இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம்ன்னு” தோணுச்சு.

“அடுத்தநாள் எப்படா வரும் அவகிட்ட என்ன பேசலாம்னு” மனசுக்குள்ளே ஃப்ரிபேர் பண்ண ஆரம்பிச்சான். தினமும் ஸ்கூலுக்கு போறப்ப, வர்றப்ப அவ கூட பேசிக்கிட்டே போவான். கிளாஸ் இன்டர்வல் டைம்ல அவர் கிளாஸ் பக்கம் போய் சுத்துவான். அவனுக்கு “இது என்னனு” அர்த்தம் தெரியல. ஆனா இது ஒரு புது சந்தோஷமா இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் எடுத்துகிட்டு அவ வீட்டு பக்கம் போவான். அந்த நேரம் அவ வெளிய வந்து நிக்குறப்ப, சைக்கிள்ல கைய விட்டு ஓட்டுவான்.

அந்த அறியாத வயசுலயும் பல அலும்பு பண்ண ஆரம்பிச்சான்.

பல நேரங்கள்ல ரொம்ப ஜாலியாக அவகிட்ட பேசி, அவளை கிண்டல் பண்ணுனான்.

அவளும் “ஏன் இப்படி பண்றீங்க அப்படின்னு” சிரிச்சுக்கிட்டே பேசுவா.

“வேற ஆட்டோவுல போறியான்னு” அம்மா கேட்டப்ப.

“வேணாம்மா.எனக்கு இதுல ஸ்கூலுக்கு போகதான் புடிச்சிருக்குன்னு” சந்தோஷமா பதில் சொன்னான்.

ஆட்டோவுல வறப்ப அவக்கூட பேசுறதும்,ஸ்கூல்ல கலர் டிரஸ் போட்டு வரப்ப,அவளும் இவனும் ஒரே கலர டிரஸ் போட்டுருந்தா ! அப்ப அவளுக்கு சாக்லேட் வாங்கி குடுக்குறதுமா இருந்தான்.

ஒரு நாள் சாயந்தரம் வர்றப்ப அவ கழுத்துல ஐடி கார்டு தொங்குறதைப் பார்த்தான். “வழக்கமா ஸ்கூல் முடிஞ்சதும் ஐடி கார்டை கழட்டி பேக்ல வச்சுடுவா, ஆனா இன்னைக்கு மறந்துட்டா போலன்னு” இவன் நெனச்சுக்கிட்டான். அவ பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டே வந்தான். அப்ப அவளுக்கே தெரியாமல் அவள் கழுத்தில் இருந்த ஐடி கார்டை உருவி அதை வேகமாக பாக்கெட்டில் போட்டுக்கிட்டான். வெறும் ரோப் மட்டும் தான் அவ கழுத்துல தொங்குச்சு. அவ வீடு வரவும் இறங்கி போனா.

கடைசி ஸ்டாப் இவன் வீடு வந்தது. வீட்டுக்கு போயி பேக்கை வச்சுட்டு, யாருக்கும் தெரியாமல் அவ ஐடி கார்டை எடுத்து பார்த்தான்.அந்த ஐடி போட்டோவை பார்த்தவுடனே அவனுக்கு சிரிப்பா வந்தது. மனசுக்குள்ள இனம்புரியாத ஏதோ சந்தோஷம். அவ போட்டோவுல அவ்ளோ அழகா இருந்தா.அவ பிறந்தநாள் எப்போ,அவ வீட்டு டெலிபோன் நம்பர்ன்னு எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தான்.

அப்பதான் அவனுக்கு ஒரு ஆச்சரியம். என்னான்னா! அவ உண்மையான பேரு வேற. ஒரே ஷாக்கா இருந்தது. ” அப்போ உண்மையான பேரு வேற, அப்புறம் ஏன் நம்மகிட்ட பேர மாத்தி சொன்னா ? அப்படின்னு” அவனுக்கு தோணுச்சு. அப்புறம் தான் அவனுக்கு புரிஞ்சது, “அவ உண்மையான பெயரைச் சொன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கன்னு” பேரை மாத்தி எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்திருக்கா அப்படின்னு” தோணுச்சு.

“ஆனா அது சாமி பேரு அதை சொல்லி கிண்டல் பண்ணி சிரிக்க கூடாது. அப்படின்னு” நினைச்சுகிட்டு, “அவ கிட்ட இதபத்தி கேட்க வேண்டாம்ன்னு” முடிவு பண்ணுனான்.

ஆனா அந்த பேர பார்த்தா அவனுக்கு சிரிப்புதான் வந்தது. அடுத்த நாள்ல இருந்து அவ ஸ்கூலுக்கு ஆட்டோல வரல. ஏன்னு அவனுக்கு தெரியல. ஆட்டோ டிரைவர் கிட்ட கேட்டான். “எனக்கு தெரியலடா தம்பி. நாளையிலிருந்து வர மாட்டா அப்படின்னு அவ அப்பா எனக்கு சொன்னாரு அப்படின்னு” ஆட்டோ டிரைவர் சொன்னாரு.

அவ வீட்டு பக்கத்துல இருக்க சின்னப் பையன் கிட்ட போய் கேட்டான். “அவ ஏன் வரல அப்படின்னு”

“இல்லன்னா அந்த அக்கா ஐடி கார்டு தொலைஞ்சு போச்சு. அதுக்காக அழுதாங்க. அவங்க அப்பாவும் அடிச்சுட்டாங்க. அப்பறம் அந்த அக்காவுக்கு காய்ச்சல் வந்திருச்சு. அதான் வரல அப்படின்னு” சொன்னான்.

இதைக் கேட்டவுடனே, “ஐயையோ நம்மளால அவ அடிவாங்கி இருக்காளேன்னு” அவனுக்கு மனசுக்குள்ள ஃபீல் ஆச்சு.

அப்புறம் ஸ்கூல்ல இறுதி தேர்வு தொடங்குச்சு. அந்த நேரத்துல அவளைப் பார்த்தான். ஆனா போய் பேசல,அவளும் இவன் கிட்ட பேசல. எக்ஸாம் முடிஞ்சு மே மாசம் லீவு விட்டாங்க. சைக்கிள் எடுத்துக்கிட்டு அவ வீட்டு பக்கம் போயி சுத்துவான். ஆனா அவளை பாக்கவே முடியல.மறுபடியும் ஜூன் மாசம் ஸ்கூல் திறந்தது. ஆனா அப்ப அந்த ஸ்கூல்ல அவளைப் பார்க்கவே இல்லை. அவங்க வீட்லயும் யாரும் இல்ல. “வேற எங்கேயோ குடி போயிட்டாங்கன்னு” பக்கத்து வீட்டு பையன் மூலம் தெரிஞ்சுகிட்டான்.” இனம்புரியாத கவலை, அவ கிட்ட பேச முடியலன்னு, அவளைப் பார்க்காமல் இருக்க முடியலையேன்னு வருத்தம். இந்த பீலிங்கு பெயர் என்னன்னு கூட அவனுக்கு அப்ப தெரியல.

ரொம்ப வருஷம் கழிச்சு இப்ப அவ ஐடி கார்டை எடுத்து பார்த்தான்.கண் கலங்குச்சு.ஆனாலும் இப்பவும் அவ பேரை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது. “ஆனா அது சாமி பேரு சிரிக்க கூடாது”…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *