அழகான அப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 13,467 
 
 

“என்னப்பா வண்டி கெடைக்குமா” என்றார் டிராவல்ஸ் கடைக்குள் நுழைந்த நடராஜன்.

தடித்த உருவம். பெரிய தொப்பை. இந்திய கருப்பு நிறம். மூக்கு மட்டும் கொஞ்சம் பெரியது. இளவயதில் வந்த அம்மை நோயின் மிச்சமாக உடல் முழுவதும் ஆங்காங்கே மிளகு அளவு புள்ளிகள்.

சராசரியை விட குறைந்த உயரம்.. தலையில் கருப்புமுடியும் நரைச்ச முடியும் சமபங்கில் இருந்தது. தாடியிலும் மீசையிலும் கூட நரைமுடி படர்ந்த்திருந்தது. இடது காதுக்கு கீழே கண்ணத்தில்
புளியங்கொட்டை அளவில் ஒரு மரு.

ஆங்…காலைல போன் பண்ணது நீங்கதானா. இருக்குன்னா..பத்தாந்தேதி தானன்னா. என்றவாறு விசிட்டிங் கார்டை கொடுத்தான். அட்வாண்ஸ் கொடுத்துட்டு போன்னா.

நடராஜன் ஐநூறு ரூபாயை அவனிடம் கொடுத்தார்.

இரண்டு மாதத்துக்கு முன்னால் திடீர் ஜுரத்தால் பாதிக்கப்பட்ட மகள் பார்வதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது குணமான பின் திருத்தணிக்கு வந்து மொட்டை போடுவதாக நேர்ந்து கொண்டார். பி.எஸ்.சி படித்துக்கொண்டிருந்த அவளுக்கு பரிட்சை நேரம். இரண்டு மாதமாய் தாடி வளர்ந்த நடராஜனின் முகம் வித்தியாசமாக இருந்தது. அடுத்த வாரம் திருத்தணி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

மறுநாள் உறவினர் வீட்டு கல்யாணத்தில் கூட்டத்தாரோடு நாற்காலியில் அமர்ந்திருந்தார். “என்ன மச்சான் அரப்படி எப்பிடி இருக்கீரு. வயித்தில என்ன ரெட்டப்பிள்ளயா” என விசாரித்து சிரித்தார் ஒருவர்.

நல்லாருக்கேன் மச்சான், ஒம்ம மாறி இருக்க முடியுமா என்றார் நடராஜன் சிரித்தவாறே அக்கா வரலயா வருவா. புள்ளைகல பள்ளிகுடத்துக்கு அனுப்சிட்டு வருவா

அரப்படி” என்பது நடராஜனின் பட்டப்பெயர். சிறுவயதில் பருத்த உடம்பும் தொப்பையுமாய் உருளையாய் இருப்பார்.. நடக்க முடியாமல் நடப்பார். வஞ்சனையில்லாமல் சாப்பிடுவார்.

குடித்து விட்டு கால்கள் தெருவை அளந்து நடக்கும் போது பார்ப்பதற்கு வேடிக்கையாய் இருக்கும். உறவினர் ஒருவர் அவரை “யோவ் அரப்படி” என கேலியாய் அழைக்க நாளடைவில் அதுவே நிலைத்து விட்டது.

திருமண மண்டபத்தில் நாதஸ்வரம் இரைந்து இசைத்துக் கொண்டிருந்தது. வண்ண வண்ண உடைகளில் பெண்களும் ஆண்களும் பேசி சிரித்துக்கொண்டும் மணமக்களோடு நின்று போட்டோ
எடுத்துக்கொண்டும் இருந்தார்கள். ‘அரப்படி’ யும் நின்று மன்னிக்க… நடராஜனும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது தான் அந்த பெண்மணி இடுப்பில் ஒரு குழந்தையுடன் நடந்து போனார். பேத்தியாக இருக்கலாம். பூசினாற் போல உடம்பு. நெற்றிக்கு மேலே நரைத்த முடி. மஞ்சள் பூசும் பழக்கத்தால் அது பொன்னிறமாகியிருந்தது. புருவ மத்தியிலும் நெற்றி வகிடிலும் குங்குமம். மலர்ந்த முகம். பின்னால் அவள் மகளோ.. மருமகளோ தொடர்ந்து போனாள்.

நடராஜன் அந்த பெண்மணியை பார்த்தபோது அனிச்சையாய் கண்கள் விரிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை பார்த்த சந்தோஷம். மனம் பூங்கொடி.. பூங்கொடி என சிலமுறை சொல்லிக்கொண்டது. ஆனாலும் ஏதோ அச்சம். குற்ற உணர்வோ.. உறுத்தலோ…முகத்தை திருப்பிக்கொண்டார். அந்த பெண்மணியின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும் ஆற்றல் தனக்கில்லை என்பதை உணர்ந்தார். ஆனால் பார்க்க ஆசை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அதே முகம். வயோதிகம் அவள் முக அழகை கூட்டியிருப்பதாகவே பட்டது நடராஜனுக்கு.

சிரித்த துறுதுறுவென முகம் அவளுக்கு. எத்தனையோ முறை சிரித்து பேசிய பேச்சுக்கள். இன்னமும் காதில் கேட்கிறது. இப்போது ஒருமுறை தன்னை பார்த்து புன்னகை செய்ய மாட்டாளா என மனம் ஏங்கியது. அப்படியே ஒரு வேளை பார்த்தால் அந்த பார்வையில் புன்னகை இருக்குமா? அல்லது சினம் இருக்குமா? சினேகம் இருக்குமா? அல்லது வெறுப்பு இருக்குமா? அவருக்கு
தெரியவில்லை. சற்று தூரத்தில் பூங்கொடியின் கணவர் உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் அவளுக்கேற்ற உயரம் பருவமாய் இருந்தார். அவரை பார்த்த பிறகு பூங்கொடி தன்னை நிராகரித்தது சரிதான் என சங்கோஜத்துடன் தலையை திருப்பி அருகிலிருந்த ஒருவரிடம் செய்தி தாளை வாங்கி கண்களை மேயவிட்டார்.

நடராஜனின் சிறுவயதுகளில் பூங்கொடிதான் நெருங்கிய தோழி. பூங்கொடியின் அண்ணன் ரமேசும் நடராஜனிடம் நட்புடன் இருந்தான். மேலும் அவர்கள் உறவினர்கள். ஒரே தெருவில் வசித்தார்கள்.

சிறுவயதில் திருடன் போலிஸ், பரமபதம், தாயம், மூக்கு கிள்ளி, கண்ணாமூச்சி என ஆண்பெண் பேதமின்றி விளையாடினார்கள். பதின்வயதுகளில் பெண்பிள்ளைகள் பல்லாங்குழி, தட்டாங்கல் என
வும் ஆண்பிள்ளைகள் கில்லி, கோலி, ஏழுகல், பம்பரம், அம்பால் என விளையாட்டுகளும் மாறின. ஆனால் தங்கள் பதின் வயதின் இறுதியில் அவர்கள் கிண்டல் கேலி செய்து கொண்டார்கள். சினிமா கதைகள் பேசிகக்கொண்டார்கள்.

இளமை தந்த சீதனமாய் முக களையும் உடல் பொலிவும் அமைந்தவாளாய் இருந்தாள் பூங்கொடி. துறுதுறுப்பான பார்வை. எல்லோரிடமும் தைரியமான பேச்சு. அவள் எட்டாவது பெயிலான பிறகு படிப்பை நிறுத்திவிட்டனர். நடராஜன் அவளை விட ஒரிரு வயது சிறியவன். தடித்த உருவமாயிருந்ததால் பூங்கொடியை விட பெரியவனாய் எண்ணத்தோன்றும். எந்த வகுப்பிலும் பெயிலாகாமல் பன்னெண்டு பாஸாகிவிட்டு பீ.ஏ சேர்ந்திருந்தான். சுற்றியிருந்த சொந்தங்களில் அப்போதைக்கு அதுதான் பெரிய படிப்பு. அதனால் அவன் மீது ஒரு “இது” இருந்தது.

ஒருமுறை நடராஜன் தெருவில் நடந்து போகும்போது பூங்கொடி வாசல் தெளித்து கொண்டிருந்தாள். வீட்டில் அவளுடைய அம்மா இருந்தார். அவள் நடராஜன் மீது தண்ணீரை தெளித்து சிரித்தாள்.

“யோவ், என்ன திரும்பி பாக்காம போறிங்க” என்றாள். அவனுக்கு அவளை பார்க்கவும் பேசவும் ஆசைதான். ஆனாலும் கூச்சம் சங்கோஜம். வீட்டில் அந்த அத்தை வேறு இருந்தார்.

அவளே பேசும் போது பேசாமல் வர முடியுமா? நனைந்த சட்டையை தட்டிக்கொண்டே சிரித்தபடி சொன்னான்.

“ம்..ம்.. இருங்க ஒரு நாளைக்கு ஒரு கொடந் தண்ணிய ஊத்துறேன்” அவள் அழகாய் சிரித்தாள்.

ஏய்.. ஆம்பிளை பிள்ளைங்க கூட இப்டி வெளாட கூடாது பூங்கொடி என்றாள் தாயார்

ம்..மா நட்ராஜு அப்படியெல்லாம் நெனைக்காதும்மா என்றாள் பூங்கொடி.

அந்த தெருக் கோடியில் பொதுக்கிணறு ஒன்று இருக்கிறது. அதற்கு அருகில் காலி இடம். அங்கு இளைஞர்கள் கபடியோ கிரிக்கெட்டோ இறகுபந்தோ விளையாடுவது வழக்கம். ஒருமுறை நடராஜன் கையில் இறகு பந்து பேட் டுடன் அங்கு நின்று கொண்டிருந்தான். கிணற்றில் நீர் இறைக்க வந்த பூங்கொடி கேட்டாள், என்னய்யா கூட விளையாட யாரும் இல்லையா..? நா வரட்டுமா..? ஒங்க கூடன்னா கபடிதான் விளையாடனும்… வர்ரிங்களா?
ஏன் விளையாட மாட்டீங்க” என சிரித்தாள். நடராஜனும் சிரித்தான்.

இப்பொதெல்லாம் பூங்கொடியை ஒரு முறையாவது பார்க்காவிட்டால் அவனுக்கு ஏதோ இழந்ததைப் போல் இருந்தது. தற்செயலாக தெருவில் நடப்பது போல் நடந்து அவள் வீட்டில் பார்ப்பான்

எப்போதாவது அவள் பக்கத்து ஊருக்கு உறவினர் வீட்டுக்கு போவது தெரிந்தால் ஏதோ காரணம் கொண்டு அவனும் அங்கு போவான். கவிதை என எதேதோ கிறுக்கினான்.

ஆனால் அச்சத்தால் அவளிடம் எதையும் படிக்கதரவில்லை.

ஒருநாள் எதற்காகவோ நடராஜன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு வந்திருந்தாள். அங்கிருந்து பார்த்த போது நடராஜன் தன் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது.

“யோவ்” என குரல் கொடுத்தாள். நடராஜன் ஸ்பூனில் எடுத்து அரிசி புட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். வீட்டில் வேறு யாரும் இல்லை. பூங்கொடியை பார்த்து அவனுக்கு சந்தோஷம் பொங்கியது. இன்னொரு ஸ்பூனை தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

புட்டு சாப்டுங்க” என்றான்

இப்பதான் சாப்ட்டேன். சாப்டுங்க என்றாள்… அவளே தொடர்ந்து அது எதுக்கு ரெண்டு ஸ்பூனு.. என்றாள்

ஒன்னு எனக்கு ஒன்னு ஒங்களுக்கு.. என்றான்

ஏன் ஒரே ஸ்பூன்ல ரெண்டு பேரும் சாப்ட கூடாதா..என்றாள். நடராஜன் உருகி போனான்.

இவர்களுடைய பழக்கம் பெரியவர்கள் அறிந்து வைத்திருந்து அவர்கள் நடராஜன் பூங்கொடியை வைத்து கேலியாய் பேசிக்கொண்டார்கள்.

ஒருநாள்…”யோவ், ஒங்களுக்கும் எனக்கும் கல்யாணமாமில்ல” என்றாள் பூங்கொடி வழக்கமான கிண்டலுடன். திருமண விசயத்தைப்பற்றி பேசும் போது அந்த வெட்கம் அவள் குரலில் இல்லை.

யார் சொன்னா.. கண்கள் ஒளிர கேட்டான் நடராஜன்

ஒங்க அம்மா தான்.

நடராஜன் மனம் பூரித்து சொன்னான், இப்பதான் நிம்மதியாயிருக்கு என்றான்.
தன் மனதில் அரும்பி விட்ட காதல் அவளுக்குள்ளும் இருப்பதால் மனம் துள்ளியது. கண்கள் நன்றியால் பனித்தது.

அந்த கண்களை ஊடுருவி பார்த்து அவன் மனதை பூங்கொடி புரிந்து கொண்டாள். அவளுக்கு தன்னையறியாமல் தான் தப்பு செய்வதாகப்பட்டது. ஆனால் அவன் மீதுள்ள அன்பால் அவனை ஒதுக்கவும் தைரியமில்லை. அதன் பிறகு அவனுடன் பழகுவதை குறைத்துகொண்டாள். அந்த வேதனை கொடுமையாய் உணர்ந்தான் நடராஜன்.

சில நாட்களுக்கு பிறகு பூங்கொடிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக கேள்விப்பட்டான். மதியம் ரமேசை பார்க்க பூங்கொடியின் வீட்டுக்கு போனான்.
பூங்கொடி காய்கறி அரிந்து கொண்டிருந்தாள். உள்ளே அடுப்பில் சோறு கொதித்து கொண்டிருந்தது. “அண்ணன் இங்க பக்கத்தில தான் போயிருக்கு, வர்ற நேரந்தான். உட்காருங்க என திண்ணயை காட்டினாள். நடராஜன் அமர்ந்தான்.

என்னய்யா மோகினி அடிச்சா மாறி இருக்கீங்க ஒண்ணுமில்ல.. அவன் குரலில் கவலை தொனித்தது. ஒங்களுக்கு தெரியாதா..? அந்த மோகினி இந்த தெருவிலதான் இருக்காங்க.

…………….. சிறிது நேரம் மவுனம் நிலவியது.

இருங்க சோற கமத்திட்டு வர்றேன். உள்ளே போனாள். சில நிமிடங்களில் திரும்ப வந்து காய்கறி நறுக்கினாள்.

எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவளாக கேட்பாள் என நினைத்தான் நடராஜன். ஆனால் அவள் கேட்கவில்லை. இருவரின் உள்ளமும் எதேதோ நினைத்தது. ஆனால் பேசாமல் இருப்பதே உத்தமம் என இருந்தார்கள்.

ஒங்களுக்கு தெரியாதான்னு கேட்டேன்… நடராஜன் ஞாபகப்படுத்தினான்.

யோவ்… ஏந்தலையில கல்ல தூக்கி போட்றாதிங்க.. என்றாள். அவள் கண்களில் நீர் கோர்த்தது.

மீண்டும் மெளனம் நிலவியது. வார்த்தையால் சொல்லாவிட்டாலும் இருவருக்கும் நிலைமை புரிந்தது.

இவ்வளவு தூரம் வந்து சொல்லாமல் போக நடராஜனுக்கு மனமில்லை. சொல்லட்டுமா,, என்றான்.

சரி.. சொல்லுங்க. இந்த நாடகத்தை முடிக்கும் எண்ணத்துடன் கேட்டாள்.
ஒங்களத்தான் நான் விரும்புறேன். என்னால தூங்க முடியல… சாப்ட முடியல… படிக்க முடியல. மனதை தைரியப்படுத்திக்கொண்டு சொன்னான்.
பூங்கொடி கண்கள் குளமாகி சொன்னாள். “யோவ் ஒங்க கூட தம்பியா நெனச்சு தான் பழகுனேன். “என்ன அப்டியெல்லாம் நெனைக்காதிங்கய்யா”
நடராஜன் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்.

நாட்கள் நகர்ந்தது. இப்போதெல்லாம் பூங்கொடி முற்றிலுமாக நடராஜனை பார்ப்பதை தவிர்த்து விட்டாள். ஒருநாள் சாலையில் இருவரும் சந்தித்தபோது “கொஞ்சம் நில்லுங்க” என்றான்.

என்னெ ஒங்களுக்கு பிடிக்கலயா

யோவ் புரிஞ்சுகோங்க எங்க அப்பா-ம்மா எனக்கு அழகான மாப்பிளயா பாக்குறாங்க.

நடராஜனுக்கு இப்போது தான் அழகாயில்லை என்பதாய் உணர்ந்தான். உடம்பு கூசியது.

எங்கூட இத்தன நாள் பழகினப்பல்லாம் நா அழகாயிருந்தனா?

“யோவ், நா எல்லார்கூடயுந்தான் பழகுறேன் ஒன்னப்போல எனக்கு நெறயபேரு” அவள் ஒருமையில் பேசுவது அவனுக்கு கோபமூட்டியது

ஆனா எனக்கு நீ மட்டுந்தான்

அவள் தாக்கப்பட்டது போல் உணர்ந்து அங்கிருந்து சென்றாள்

கல்லூரியிலே வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது ஒரு நண்பன் வந்து சொன்னான்.

“ஹே.. நீ இங்க இருக்கியா.. கிரவுண்ட்ல ஒன்னப்போலவே ஒருத்தன் விளையாடுறாண்டா. நா நீதான் வெளாட்றன்னு நெனச்சேன். போய் பாரேன்.”
நடராஜனுக்கு அவனை பார்க்க ஆர்வம் ஏற்ப்பட்டது. நடராஜன் போனான். கிரவுண்டில் எட்டு பேர் வாலிபால் விளையாடிகொண்டிருந்தார்கள். உற்று பார்த்தான். அதில் யார் தன்னைப்போல இருக்கிறான் என தெரியவில்லை. வகுப்பறைக்கு வந்தான். அங்கிருந்த நண்பனிடம் கேட்டான். “ஏ.. யார்ரா அதில என்ன மாறியே இருக்கிறது. எனக்கு தெரியல” என்றான்

ஹே…ரெட் கலர் ட்ரவுசரும், ப்லூ பனியனும் போட்டிருப்பான் பாரு என்றான் நண்பன்

நடராஜ் மறுபடி கிரவுண்டுக்கு வந்தான். அந்த குறிப்பிட்ட பையனை பார்த்தான். அங்கு விளையாடிவர்களிலேயே அந்த பையன் தான் குண்டாகவும்,சற்று குள்ளமாகவும், நடராஜன் பார்வைக்கு
ஜோக்கர் மாதிரியும் இருந்தான். ஒரு விதத்தில் பார்த்தால் தானும் அதே மாதிரி இருப்பதை உணர்ந்தான். காதல் உணர்வில் இத்தனை நாள் தன்னை ஹீரோ மாதிரி அழகானவனாய் நினைத்து கொண்டிருந்தது தவறு என்பதை உணர்ந்தான். அந்த பையனோடு பூங்கொடி அருகில் நிற்பது போல் நினைத்து பார்த்த போது அவனாலேயே அதை ஏற்க முடியவில்லை. தான் அழகில்லை என அவமானம் அடைந்தான்.

அழகு என்பது உருவத்தில் இல்லை பார்ப்பவர் கண்களில் இருக்கிறது. என்னதான் உலக அழகிகளும் ஆணழகனும் இருந்தாலும், பெற்றவர்களுக்கு தங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளுக்கு தங்கள் தாய் தந்தை உருவமும் தான் அழகு என்பதும் அவர்களை காணும் திருப்தியும் மகிழ்ச்சியும் வேறெதிலும் இல்லை என்பதை அவன் அறியவில்லை.

ஒருநாள் தன்னுடன் படிக்கும் நண்பன் ஒருவன் சீரியஸாகி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அங்கு போனான். அவசர சிகிச்சை பிரிவில் ஒவ்வொருவராக அனுமதித்தனர். அந்த பையனின் கண்களில் பஞ்சு வைத்து கூட்டல் குறி போல டேப் ஒட்டியிருந்தனர். உயிர் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அங்கிருந்த எந்திரங்களில் பச்சைநிற ஒளிக்கோடு ஓடிக்கொண்டிருந்தது. அழுகையை அடக்க வாயை கையால் மூடிக்கொண்டு வெளியில் வந்தான். அவனுடைய குடும்பத்தினர் வராந்தாவில் அழுது கொண்டிருந்தனர். ஒருதலை காதல் தோல்வி. தாழ்வு மனப்பான்மை.
ஆசிடை குடித்து விட்டானாம். அன்று மாலை அவன் இறந்து விட்டான்.

சம்பந்த பட்ட அந்த பெண் சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள்.

“எத்தனையோ பேர் என்னெ லவ் பண்றேன்னு சொல்றாங்க. நா எல்லாரையும் லவ் பண்ண முடியுமா..?

அடுத்த வாரம் பூங்கொடியை நிச்சயம் செய்ய மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். இடையில் ஒருநாள் அவளை தெருவில் சந்தித்தபோது
“கொஞ்சம் நில்லுங்க” என்றான் நடராஜன் கெஞ்சலாய்
என்னப்பா.. என்றாள் கோபமாய். அவள் தன்னை ஒருமையில் பேசியது அவனுக்கு கோபமூட்டியது. வாய் தடுமாறியது

இங்கப்.. பாரு.. நீ இல்லன்னா நானு..

என்ன… செத்துப்போவியா.. செத்துப்போ.. ஒருத்தன் செத்துட்டா ஒலகத்துக்கு ஒன்னும் குடிமுழுகி போயிடாது. ஒன்னு தெரிஞ்சுக்கோ.. ஒனக்கும் ரெண்டு தங்கச்சி இருக்கா. அவளுங்களுக்கு இந்த மாதிரி நெலம வந்தா அப்ப தெரியும் ஒனக்கு. அவளுடைய கண்கள் நீரால் நிரம்பியது.

நடராஜன் பேச்சில்லாமல் நின்றான். கண்களில் நீர் கசிந்தது.

காலம் ஓடியது. பூங்கொடி திருமணமாகி வேறு ஊருக்கு சென்று விட்டாள். செத்துப்போகும் அளவுக்கு நடராஜன் தைரியசாலியோ அல்லது கோழையோ இல்லை. ஆனால் தான் அழகில்லை என்ற உணர்வு மட்டும் பலவருடங்களாய் மனதில் பதிந்து விட்டது. போதை பானம் சாப்பிடும் பழக்கம் ஏற்ப்பட்டுவிட்டது. அவனுக்கும் திருமணமானது. இரண்டு பெண் பிள்ளைகள். ஒருத்தி பி.எஸ்.சி படிக்கிறாள். இன்னொருத்தி ஒன்பதாவது படிக்கிறாள்.

சில நாட்களுக்கு பிறகு…

நடராஜன் மொட்டை அடித்திருந்தார். பார்வதி ஒரு போட்டோவை கொண்டு வந்தாள்.

“அப்பா எப்ப எடுத்திங்க இந்த போட்டோவை.. செம சூப்பராயிருக்கிங்க”. என போட்டோவை காட்டினாள் மகள் பார்வதி.

பின்னால் பசுமையாய் செடிகொடிகள் நிறைந்திருக்க வெள்ளை சட்டையணிந்து தாடியுடன் சிரித்த முகமாய் இருந்தார்.

“எப்ப இந்த மாறி புடிச்சேன்” என அவருக்கே தெரியவில்லை. குழப்பத்துடன் பார்த்தார்.

“அப்பா திருத்தணியில புடிச்ச போட்டோவ சி.டியில காப்பி பண்ண எடுத்துட்டு போனேன். அங்க கெளரி அண்ணன் கல்யாண போட்டோவ வாங்க வந்திருந்தார். எல்லா போட்டோவயும் பாத்தேன். பாத்தா ஒங்க போட்டோ. சூப்பராயிருந்துச்சு. கடைக்கார்கிட்ட சொல்லி ஒங்கள மட்டும் வச்சு பேக்ல இயற்கை காட்சி போட்டு தரச்சொல்லி வாங்கினேன்.”

ஏதோ உலகப்புகழ் பெற்ற புகைப்படத்தை எடுத்தது போல் விவரித்தாள் பார்வதி. அவள் சொல்வதை கேட்டபோது நடராஜனுக்கு உடம்பெல்லாம் சந்தோஷம் பரவியது. தான் கூட அழகாயிருப்பதாய் நெஞ்சு நிறைந்தது. மனதுக்குள் சிரித்தார். இதற்கு முன். பலமுறை போட்டோ எடுத்திருந்தாலும் ஒருமுறையும் திருப்தி ஏற்ப்பட்டதில்லை.

ஒருமுறை நண்பன் கூட கிண்டலாய் சொன்னான் “விடு நட்ராஜு, இருக்கிறதுதான போட்டோவில வுளும்”.

சமயலறையிலிருந்து நடராஜனின் மனைவி குரல் கொடுத்தாள். “ஆமா ஒங்க அப்பா அழக நீதான் மெச்சிக்கனும்”. கிண்டலாய் சொன்னாள்.

ஏம்மா எங்க அப்பாக்கு என்னம்மா கொறை…இந்த போட்டோவை பாருங்க.. என பார்வதி நீட்டினாள்.

ஏ, ஆமா நல்லாருக்கே எனக்கு தெரியாம எப்பங்க எடுத்தீங்க. மனைவி விசாரணையை ஆரம்பித்தாள்.

நடராஜன் புன்சிரிப்போடு மகளை பார்த்தார். பார்வதி மறுபடி அந்த போட்டோ வரலாற்றை விவரித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *