அக்னி நட்சத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 11,081 
 
 

பத்தரை ; இப்போது கிளம்பினால் சரியாய் இருக்கும். பன்னிரண்டு மணிக்கோ என்னவோ அந்த ஸ்கூல் விடுகிறார்கள். முன்னாலேயே போய் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தாலும் பரவாயில்லை. இத்தனை நாள் இல்லையா ? ஒன்றரை மாதமாகிறது. இன்னும் அவளிடமிருந்து ஒரு வரி கூட இல்லை.

படியில் வந்து நின்றான். மேலே நகர கால்கள் தயங்கின. எத்தனையோ முறை இப்படிக் கிளம்பி, பின் நொடியில் ஷு லேஸை முடிந்து கொள்ளும்போது, சட்டையின் கடைசிப் பித்தானை மாட்டிக் கொள்ளும்போது சில சமயம் வாசல்வரை வந்த பின்னர், பிடிவாதம் கெட்டிப்பட்டு, இந்தப் பிரயாணம், துவங்காமலே முடிந்திருக்கிறது.

ஆனால், இன்று அப்படி ஏதும் நடக்கப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டான். இந்த ஒன்றரை மாத மௌனம் இவனை நிறைய கேள்வி கேட்டிருக்கிறது. ஏன் தன்னால், இன்னும், தன் arrogance – ஐ உதற முடியவில்லை ? ஈகோவை வழித்தெறிந்துவிட்டு ஒரு முறுவலுடன், எதனுடனும் கை குலுக்க முடியதில்லை ?

இன்னும் இவனையே இவனுக்குப் புரியவில்லை. இவன் பார்த்துக் கொண்டு இருக்கும்போது மழை தூவானமாய் அதிர்ந்தது. ஆனால் இருட்டவில்லை. இது வெறும் சூட்டைப் கிளப்பி விட்டுப் போகும் கோடை மழை. இவனுக்கு, இத்தனை வயதிற்குப் பின்னும், இந்த மாதிரி வெயில் மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் விநோதமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த மாதிரி எத்தனை விநோதங்கள் ; திடுமென்று ஒரு நாள் ராத்திரியில் முளைத்து விடும் நாய்க்குடை ; ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாய் சுருளும் அலை ; கார் விளக்கொளியில் நட்சத்திரமாய் மினுக்கும் மாட்டின் கண்கள்.

அவளின் காதலும் கூடத்தான்.

மண் வாசனை கிளம்பியது. கருப்பு ரோட்டில், யாரோ கோலம் போடப் போவது மாதிரி அவசரமாய் புள்ளிகள் விழுந்தன. அவளைப் பார்க்கப் போனாலும், போகாவிட்டாலும், இந்த மழையில் நடக்கலாம் என்று கீழறங்கினான். அம்மா இருந்தால் மழையில் நனையாதேயேண்டா என்று இரைவாள். அவள் இப்போது ஸ்ரீவில்லிப்புத்தூரில், பக்கத்து வீட்டு மாமியிடம் ‘ என்ன தளிகை இன்னிக்கு உங்காத்திலே ’ என்று கேட்டுக் கொண்டிருப்பாள்.

பஸ் மெல்ல ஊர்ந்து, இரண்டு ஸ்டாப் தள்ளியதும், ஓரமாய் விலகி நின்றுகொண்டது. இது ஸ்டாப் இல்லை ; ஒரு வேளை டிக்கெட் போடுவதற்காக இருக்கலாம். இவனுக்கு எரிச்சலாய் வந்தது. எப்படியாவது பன்னிரண்டு மணிக்கு முன்னால் போய்விட்டால் சரிதான். அவள் தம்பியின் நர்ஸரி ஸ்கூல் அப்போதுதான் விடுகிறது. வீடு எதிர்த்தாற் போல்தான் என்றாலும் காலையைக் கடத்திக் கூட்டிக் கொண்டு போவதற்காக அவள் வீட்டில் இருக்கும் நாளெல்லாம் ; அந்தப் பள்ளிக்கூட வாசலில் காத்திருப்பாள். பின்னர் அதற்காகவே அந்த நேரத்தில் வீட்டில் இருந்திருக்கிறாள்.

அவள் ஒரு நல்ல அக்கா. ஏன் அவள் அம்மாவிற்கு நல்ல பெண்ணும்கூட. ஆனால் அவளால், இவனுக்குத்தான் நல்ல துணையாய் இருக்க முடியவில்லை. இந்த ஒன்றரை மாதத்தில் அவளால் ஒரு வரி எழுத முடியவில்லை. முப்பது பைசா போட்டு டெலிபோனைச் சுழற்றி ஒரு ஹலோ சொல்ல முடியவில்லை. என்ன ?

வன்மம் ! ஆச்சிரியந்தான் .. . ஒருவருக்கொருவர் உருகிய அந்தக் காதலில், இந்த மௌனம் ஆச்சரியந்தான் ; ஒரு வேளை, அந்தக் காதல்தான் ஆச்சரியமோ என்னவோ?

பஸ் உறுமி, ஒருவர் ஓடிவந்து ஏறிக் கொண்டார். இதற்குத்தான் காத்திருந்தாற்போல், பஸ் சீறிக் கொண்டு புறப்பட்டது. படியில் கொஞ்சம் தடுமாறி, பின் இவன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். ‘ ஸ்… அப்பாடா !… என்ன வெயில்… தம்பி, அக்னி நட்சத்திரம் ஆரம்பிச்சிட்டாப்லேயே இருக்கு…’ இவர் தன்னிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது புரிய இவனுக்குக் கொஞ்சம் நேரமாயிற்று. நிமிர்ந்து பார்த்தான்.

முதலில் என்னைப்பார் என்னும் மூக்கு சிரிப்பதற்கில்லை. இது சாப்பிடமட்டும் என்பது போல் சிறிதாய கீறின உதடுகள். மரத்தில் செதுக்கினாற்போல், இறுகிய முகம், முகத்தில்தான் எத்தனை வகை ! உழுது பாத்தி கட்டின மாதிரி ; திருஷ்டிப் பூசணி மாதிரி ; தோய்த்து உலர்த்தின மாதிரி ; எண்ணெய்யில் பொறித்த மாதிரி ; செடியில் பூத்த மாதிரி ; ஆனால், இவை ஒவ்வொன்றிற்குப் பின்னும், எல்லோருக்குள்ளேயும் ஒரு முகம் இருக்கிறது. கோபமாய் ; அன்பாய் ; சிலருக்குத் திமிராய்… அவளுக்கு என்ன முகம்?

இவன் இறங்குமிடத்திற்குச் சற்று முன்னதாகவே எழுந்து கொண்டான். கம்பியைப் பற்றி மெல்ல நடந்து முன்னேறி படிக்கருகாக நின்று கொண்டான். மணியில் ஒரு தட்டு தட்டினான். டிரைவர் திரும்பிப் பார்த்து ஏதோ முணுமுணுத்தான். முழுதும் நிற்காமல், பஸ் வேகம் குறைந்து ஒதுங்கிக் கொண்டபோது, இவன் மெல்லக் குதித்தான்.

இங்கெல்லாம் மழை பெய்த சுவடே இல்லை. நல்ல வெய்யில். அந்தக் குளிர்ச்சி பாதியிலேயே போய்விட்டது. அக்னிநட்சத்திரம் கொளுத்தியது. திடீரென்று அரவை மிஷின் சப்தம் பின்னணியாய்க் கேட்க, காபி ப்வுடர் வாசனை பரவியது.

இவனுக்கு இந்தப் பாதை மிக நன்றாகத் தெரியும். தெரு திடீரென்று வலதுபக்கம் திரும்பி, குறுக்கும் ஒரு அகலமான ரோட்டில் போய் முடியும். இடையில் ஒரு போஸ்ட் ஆபீஸ், லயன்ஸ் கிளப்பின் ஆஸ்பத்திரி. ஒரு சலூன். இவன் வீட்டருகே ஒரு TUCS. மற்றதெல்லாம் வீடுகள். மஞ்சளாய் நீலமாய், உள்ளிருந்து தென்னை மரம் எட்டிப் பார்க்கும் வீடுகள்.

ஸ்கூலுக்கெதிரே, இவன் வீட்டு மரம், ராட்சஸப் பூவாய் தரையில் விரித்திருந்த, நிழலில் நின்று கொண்டான். பன்னிரண்டாக ஐந்து நிமிஷம் இருந்தது. பக்கத்தில் சர்க்கரைக்கோ, கோதுமைக்கோ, ரேஷன் கார்டிற்கோ நின்றுகொண்டிருந்த க்யூ, சளசள என்று இரைந்து கொண்டிருந்தது. வாராந்திரத் தொடர்கதைகள், நடிகையின் மறுமணங்கள், வெய்யிலில், க்யூவில் நிற்காமல், சௌகரியமாய் ஆபீஸ் நிழலுக்குப் போய்விட்ட ஆண்கள் மீதான வசவுகள், அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், எல்லாம் தங்கள் உரு இழந்து சங்கமித்த இரைச்சல்.

அவள் ஸ்கூலுக்கு வந்தால் என்ன பேசுவது என்று யோசித்தான். ‘எப்படியிருக்க தேவி? கைஸா ஹை? இன்னும் கோபம் தீரலையா, மேடம்? நான் யாருன்னு தெரியறதா?’ இல்லை. இதெல்லாம் முடியாது. ஒரு கல்லூரி வாசலில், ஒரு பார்ட்டியில் பார்த்துவிட்டு, அடுத்த பிரேமில் சிம்லாவில், மெரினாவில் டூயட் பாட முடிகிற இந்தி, தமிழ் சினிமாக்களில்தான் இது முடியும். ம்ஹும். இவன் பேசப் போவதில்லை. சிரிக்கக்கூடப் போவதில்லை ; அவள்தான் முதலில் ஆரம்பிக்க வேண்டும்.

மெல்லத் தாகமெடுத்தது. வியர்வை மேலெல்லாம் கசிந்து பிசுபிசுத்தது. மணியைப் பார்த்தான், பன்னிரெண்டேகால், சில பள்ளிக்கூடங்கள் பன்னிரண்டரைக்குக்கூட விடும்.

தான் நின்று கொண்டிருப்பதில் ஏதாவது அர்த்தம் உண்டா என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. இவ்வளவு தூரம் வந்தவன் அவள் வீட்டுக் கதவைப் போய்த் தட்டலாம். ஆனால், ஒரு முறுவலுக்குக் கூட சம்மதியாத தன் ஈகோ, அதை நிச்சயம் அனுமதிக்காது. பின் எதற்கு நின்று கொண்டிருக்கிறான்? அவளைப் பார்க்கவா? ஒரு வேளை இவனைப் பார்த்தால் அவள் பேசாவிட்டாலும், முறுவலிக்கக்கூடும் என்று எதிர்பார்த்தா?

நிழல் குறுகிக் கொண்டே வந்தது. தாகம் இப்போது தொண்டை பூரா பரவியிருந்தது. நாவால் உதடுகளை நீவி விட்டுக் கொண்டான். எல்லா ஸ்கூல் வாசலிலும் நின்று கொண்டிருக்கும், வெள்ளரிப்பத்தைக்காரனையும், ஐஸ் கிரீம்காரனையும், கூட இங்கே காணோம். ஒரு வேளை அவர்களும் இவனை மாதிரி எங்கேயாவது, யாருக்காவது காத்துக் கொண்டிருக்கலாம் ; அல்லது, ரேஷன் கார்டு வாங்க TUCS போயிருக்கலாம்.

மீண்டும் ஒரு முறை க்யூவைப் பார்த்தான். மஞ்சளாய், வெள்ளையாய், வெள்ளையில் சிகப்பு எழுத்துக்கள் கொண்டதாய், பழைய ஈஸி சேர் துணியிலிருந்து, புடவையிலிருந்து, ஜன்னல் திரையிலிருந்து, பிறந்த பைகள். வெய்யிலுக்கெதிராய் தலைமீது கவிழ்ந்த முந்தானைகள் ; நேசமாய் தோளைச் சுற்றிப் போர்த்தியவை ; வரிந்து இடுப்பில் கட்டிக் கொண்டவை ; குட்டையாய் தோளிலிருந்து இறங்காதவை, இன்னொரு கை மாதிரி நீளமாய், ஒற்றைப் பின்னின் பலத்தில் தோளிலிருந்து தொங்கியவை ; இத்தனை வயசுக்கு மேல, இனி மேல் என்ன, என்று விலகிக் கொண்டவை.

இவர்கள் காத்திருப்பதில், ஒரு பயன் இருக்கிறது. தான் எதற்காக நின்று கொண்டிருக்கிறோம் ? தன்னை இந்த வெய்யிலில் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது அவளுக்கு, அவளின் ஒன்றரை மாத மௌனத்திற்கு, எத்தனை பெரிய வெற்றி என்று தோன்றியபோது, இவனுள் தகிப்பாக இறங்கியது. ம்ஸும். இவன் தோற்க மாட்டான். அதுவும் அவளிடம். அவ்வளவு சுலபம் இல்லை அது. தோல்விக்குப் பின்னும் தலைநிமிர்ந்து சிரிப்பது ; ஈகோவை வழித்தெறிந்துவிட்டு, முறுவலுடன் கை குலுக்கியது.

கண்களை இடுக்கிக்கொண்டு. புருவத்தின் மேல் கையை வைத்துக் கொண்டு பார்த்தான். தொலைவில் ஒரு கடை தெரிந்தது. நடந்து போய் நின்றான்.

‘ ஒரு ஃபேன்டா. ’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *