விந்தன்

 

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 – ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

VindhanPicமாசிலாமணி முதலியார் நடத்திய “தமிழரசு” மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, “கல்கி” இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) “விஜி” என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை “விந்தன்” என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் “கல்கி” கிருஷ்ணமூர்த்தி தான்.

1946 இல் விந்தன் எழுதிய “முல்லைக் கொடியாள்” என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், “பொன்னி” மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

“கண் திறக்குமா?” என்ற கதையை 1947இல் “நக்கீரன்” என்ற புனைப்பெயரில் எழுதினார். “பாலும் பாவையும்” என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். “பாலும் பாவையும்” விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், “பாலும் பாவை”யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி.

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், “அன்பு” என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு “புத்தகப் பூங்கா” என்ற பதிப்பகமும் “மனிதன்” என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். “அன்பு அலறுகிறது”, “மனிதன் மாறவில்லை” என்ற இரு நாவல்களை எழுதினார்.

பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விந்தன் எழுதிய நூல்கள்

  • அன்பு அலறுகிறது
  • இந்திய இலக்கியச் சிற்பிகள்
  • இலக்கியப்பீடம் 2005
  • எம்.கே.டி.பாகவதர் கதை
  • ஒரே உரிமை
  • ஓ, மனிதா
  • கண் திறக்குமா?
  • காதலும் கல்யாணமும்
  • சுயம்வரம்
  • திரையுலகில் விந்தன்
  • நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
  • பசிகோவிந்தம்
  • பாலும் பாவையும்
  • பெரியார் அறிவுச் சுவடி
  • மனிதன் இதழ் தொகுப்பு
  • மனிதன் மாறவில்லை
  • மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
  • விந்தன் இலக்கியத் தடம்
  • விந்தன் கட்டுரைகள்
  • விந்தன் கதைகள் – 1
  • விந்தன் கதைகள் -2
  • விந்தன் குட்டிக் கதைகள்
  • வேலை நிறுத்தம் ஏன்?

“மக்கள் எழுத்தாளர்” விந்தன் By கலைமாமணி விக்கிரமன் – 20th September 2012

எழுத்துலகில் “விந்தன்’ என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வேதாசலம்-ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம். சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும் வேறு சிறு சிறு தொழிலையும் செய்ய வேண்டிய கட்டாயம். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை . ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சுக் கோக்கும் தொழில் அவருக்கு உதவியது. இயற்கையிலேயே தமிழ்ப் பற்றும் புத்திக் கூர்மையும் உடைய விந்தன், அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அச்சுத் தொழிலாளியாக இருந்து, மேதையாக மாறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு அடுத்து விந்தனைக் கூறலாம். மாசிலாமணி முதலியார் நடத்திய “தமிழரசு’ மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். அப்போது பாரதிதாசனாரின் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவிதையை அச்சுக் கோத்ததைப் பெருமையாகச் சொல்வார் கோவிந்தன்.

“தமிழரசு’க்குப் பிறகு “ஆனந்த விகடன்’ அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. அச்சகத்தின் நுணுக்கம் அறிந்த டி.எம்.ராஜாபாதர் என்பவர் கோவிந்தனுக்கு நண்பரானார்.

கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது. இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்த “விந்தன்’ என்ற கோவிந்தன் வாழ்க்கையோடு போரிடும் சமூகப் போராளிகளைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கவலைப்படுவதில் வியப்பில்லை. 1938-ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

“கல்கி’யால் 1941-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “கல்கி’ இதழ், விந்தன் வாழ்க்கையில் புது வெளிச்சமும் திருப்பமும் ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.ராஜாபாதர், விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார்.

தன் கையெழுத்தைப் பற்றி “எனக்கும் கடவுளுக்கும்தான் புரியும்’ என்று அடிக்கடி “கல்கி’ சொல்வார். கல்கியின் கையெழுத்தைப் புரிந்து கொண்ட விந்தன், பிழையே இல்லாமல் அச்சுக் கோத்தார். “காலி’ புரூப்பில் பிழைகளைத் திருத்துவதுடன் புதிதாகவே கதை எழுதும் அளவுக்கு வாக்கியங்களைச் சேர்க்கும் விந்தனின் திறமையைக் கண்டு கல்கிக்கு வியப்புத் தாங்கவில்லை. “வீணை பவானி’யை அச்சுக் கோப்பவர் யார் என்று ராஜாபாதரை கேட்க, ராஜாபாதர் நிஜமாகவே அச்சம் கொண்டார். கதையில் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று பயந்து விந்தனை “கல்கி’யின் முன் கொண்டு நிறுத்தினார்.

கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, விந்தன் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, “கல்கி’ இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) “விஜி’ என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை “விந்தன்’ என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் “கல்கி’ கிருஷ்ணமூர்த்திதான்.

1946-இல் விந்தன் எழுதிய “முல்லைக் கொடியாள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. சிறுகதை நூலுக்கு முதன் முதலாக வழங்கிய பரிசு அதுதான்.

விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், “பொன்னி’ மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார். “கண் திறக்குமா?’ என்ற கதையை 1947-இல் “நக்கீரன்’ என்ற புனைப்பெயரில் எழுதினார்.

“பாலும் பாவையும்’ என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். “பாலும் பாவையும்’ விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், பாலும் பாவையும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த “வாழப் பிறந்தவள்’ படத்துக்கு வசனமும், “அன்பு’ படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், “கூண்டுக்கிளி’ என்ற படத்துக்கு வசனமும் எழுதினார்.

“குழந்தைகள் கண்ட குடியரசு’, “பார்த்திபன் கனவு’ திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

அவர் ஒருமுறை தன் வாழ்க்கையைப் பற்றி அமைதியாக சிந்தித்துக் கூறினார்.

“”என் வாழ்க்கையில் 1946-ஆம் ஆண்டை நான் சிறப்பான ஆண்டு என்று சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் தமிழ்நாடு அரசு முதன் முதலாக அளிக்க முன்வந்த சிறுகதைகளுக்கான பரிசை நான் முதன் முதலாகப் பெற்றேன். அதைத் தொடர்ந்து வெளியான “பாலும் பாவையும்’ என்ற நாவல் மக்களின் பேராதரவைப் பெற்று, அந்த ஆதரவு வேறு எந்த நாவலுக்கும் இல்லாத அளவுக்கு இன்றுவரை நீடித்து நின்று வருகிறது. இந்த நிலையில், “பாலும் பாவையும்’ நாவலைத் தொடர்ந்து பல நாவல்கள், சிறுகதைகள், பல கட்டுரைத் திரட்டுகள் வெளி வந்திருக்க வேண்டும். வரவில்லை ஏன்? காரணம் வேறு யாருமல்ல; நானே!”

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு “புத்தகப் பூங்கா’ என்ற பதிப்பகமும் “மனிதன்’ என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன்.

“பாலும் பாவையும்’ போன்ற புதுமைக் கருத்துடன் கூடிய நாவலையும் “வேலை நிறுத்தம் ஏன்?’ என்ற கட்டுரையும் மற்ற கட்டுரைகளும் எழுதிய விந்தன், “அன்பு அலறுகிறது’, “மனிதன் மாறவில்லை’ என்ற இரு நாவல்களை எழுதியதால், பாதிக்கப்பட்டவர்களின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளானேன்” என்று ஒரு சமயம் எழுதியது சுயமரியாதையை விரும்புபவர் அனைவரையும் கலங்க வைக்கிறது.

விந்தனின் இறுதிக் காலத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழில் ஏழை எளியவர்களை, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்தித்துச் சிறுகதைகள் எழுதிய ஒரே எழுத்தாளர். தனது எட்டுக் குழந்தைகளைக் காப்பாற்ற வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

பிரபல எழுத்தாளர் “சாவி’ ஆசிரியராக இருந்த “தினமணி கதிர்’ இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் விந்தனை உதவி ஆசிரியராக நியமித்து கதிர் பத்திரிகைக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தார்.

“”எதை எழுதினாலும் அதை நாலு பேர் பாராட்டவாவது வேண்டும் அல்லது திட்டவாவது வேண்டும்.

இரண்டும் இல்லையென்றால் எழுதுவதை விட எழுதாமல் இருப்பது நன்று” – அமரர் கல்கி, விந்தனுக்கு வழங்கிய அறிவுரை இது. விந்தன் எழுதி எழுதியே பாராட்டுகளை, திட்டுகளை அதிகம் பெற்றவர்.

மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி காலமானார். அவரின் 60வது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட நண்பர்கள் குழுவினர் திட்டமிட்டது நிறைவேறவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

அவர் வாழ்ந்த தெருவான ஹாரிங்டன் சாலையின் ஒரு பகுதிக்கு “மக்கள் எழுத்தாளர் விந்தன் சாலை’ எனப் பெயரிட வேண்டும் என்று எழுத்தாளர்கள் குரல் கொடுத்து ஓய்ந்து விட்டார்கள். கட்சித் தியாகிகள் பலரின் பெயரை இடும் அரசு, இந்த நற்பணியைச் செய்து உழைப்பால், ஊக்கத்தால் உயர்ந்த ஓர் எழுத்தாளனின் பெயரை என்றும் நினைவிருக்கச் செய்யுமா?

விந்தன் வாழ்க்கைக் குறிப்புகள்

1916- செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் என்னும் சிற்றூரில் வேதாசலம் – ஜானகியம்மாள் தம்பதிகளுக்குத் தலைமகனாகப் பிறந்தார். இயற்பெயர் கோவிந்தன். உடன் பிறந்தவர் சாமிநாதன் என்கிற இளவல் ஒருவர் மட்டுமே ஆகும்.

1921- சென்னை சூளை பட்டாளம் பகுதியில் உள்ள பி.அண்ட்சி பஞ்சாலையின் புகழ் எவ்வளவு பெரியதோ அதைவிடப் பன்டமங்கு பெரியது அநதப் பகுதியில் வாழும் தொழிலாளர்களின் போராட்ட உணர்வுகள் வர்க்கப் போராட்டங்கள் நிகழ்வதற்குக் களமாக அமைந்த அம் மண்ணையே தமது வாழும் இடமாகவும் கொண்டு இளமைக் கல்வியைத் துவக்கினார் கோவிந்தன்.

1931- வசதியும் வருவாயும் ஓரளவிற்கு இருந்த போதிலும், கல்வி அறிவு இல்லாமையும் மூடப்பழக்க வழக்கங்களும் கொண்ட பெற்றோர்கள் அவர் படிப்பில் கவனம் செலுத்தத் தவறினார்கள். எனினும் விழிப்பும், வெளிச்சமும் எதிர் கால வாழ்க்கைக்குத் தேவையென்பதை உணர்ந்த கோவிந்தன் இரவுப் பள்ளிகளில் படித்துத் தம் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். அதனுடே ஒவியம் கற்க விரும்பி ஓவியப் பள்ளியில் சேர்ந்தார்.

1936- ‘கருவிலே திரு’வுடைய கோவிந்தன் ஜெமினி ஸ்டுடியோ விளம்பரப் பகுதியில் ஓவியராகப் பணியாற்றிய போது, அவர் பாட்டனார் ‘படைக்கும் தொழில் தரித்திரத்தின் ஊற்று’ என்று கோவிந்தனின் படைப்பாற்றலை முடக்கினார். அதன் பிறகே நண்பன் இராஜபாதர் உதவியால் டாக்டர் மாசிலாமணி முதலியார் நடத்தி வந்த ‘தமிழரசு’ என்னும் திங்கள் இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார்.

1939- ‘தமிழரசு’ இதழில் பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழ் மேல் பற்றும் எழுத்தார்வமும் கொண்டிருந்த கோவிந்தன் அவர்களோடு பழகும் வாய்ப்பினைப் பெறாத போதிலும் அவர்கள் எழுத்தினை அச்சுக்கோர்க்கும் வாய்ப்பினைப் பெற்றார். சான்றாக பாவேந்தர் பாரதிதாசன் எழுதியுள்ள ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்னும் கவிதை வரிகளை முதன்முதலில் அச்சுக் கோர்த்தவர் கோவிந்தன். அவர்களே ‘தமிழரசு’ இதழை விட்டு விலகி ஆனந்தப் போதினி, தாருல் இஸ்லாம், போன்ற இதழ்களில் பணியாற்றி தேர்ச்சி மிக்க அச்சுக் கோப்பாளராக ஆனந்த விகடனில் சேர்ந்தார்.

1939- ஏப்ரல் மாதம் 30ஆம் நாள் லீலாவதி என்னும் பெண்மணியை மணந்தார். 1940- தலைமகன் வரதராசன் பிறப்பு.

1941- சென்னை சூளை பட்டாளத்தில் ‘ராயல் ஓட்டல்’ என்னும் பெயரில் மிலிட்டரி ஓட்டல் ஒன்றை நடத்தினார்.

1942-இராஜாபாதர் உதவியால் கல்கி அச்சகத்தில் அச்சுக் கோப்பவராக சேர்ந்தார். ஏற்கெனவே சுதேசமித்திரன் ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வி.ஜி. என்னும் பெயரில் கல்கி இதழில் பாப்பா மலர் பகுதியில் கதைகள் எழுத ஆரம்பித்தார்.

1943 -பேராசிரியர் கல்கி அவர்களால் ‘விந்தன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ‘கல்கி’ இதழின் ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

1944- பாட்டனாரும், தந்தையும் இருதாரங்களை மணந்தது போலவே விந்தனும் சரஸ்வதி அம்மையாரை 13-7-44 அன்று மணந்தார்.

1946-விந்தன் எழுதிய ‘முல்லைக் கொடியாள்’ என்னும் சிறுகதை தொகுப்பிற்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் முதற்பரிசு வழங்கிப் பாராட்டியது.

1948- முற்போக்காளர் முருகு சுப்பிரமணியம் நடத்திய ‘பொன்னி’ இதழில் கண்திறக்குமா? என்ற தொடர்கதையை – முதல் நாவலை எழுதினார்

1950- கண் திறக்குமா? என்ற தொடர்கதையை எழுதி பலரின் பாராட்டுக்கும் பாதிப்புக்கும் ஆளான விந்தன் பேராசிரியர் கல்கியின் விருப்பத்துக்கு ஏற்ப கல்கி இதழில் ‘பாலும் பாவையும்’ என்ற தொடர்கதையை எழுதினார்.

1951- கல்கி இதழை விட்டு விலகி ஏ.வி.எம் கதை இலாகாவில் சேர்ந்தார். ‘ஒரே உரிமை’ என்னும் சிறுகதை தொகுப்பு டாக்டர் மு.வ. முன்னுரையுடன் வெளிவந்தது.

1953- ‘சமுதாய விரோதி’ என்னும் சிறுகதைத் தொகுப்பு கி. சந்திரசேகரன் முன்னுரையுடன் வெளிவந்தது. அதே ஆண்டில் விந்தன் வசனம் எழுதிய ‘வாழப் பிறந்தவள்’ என்ற திரைப்படமும் வெளிவந்தது.

1954- ஆகஸ்டு திங்கள் 15ஆம் நாள் ‘மனிதன்’ என்னும் மாத இதழை வெளியிட்டார். விலை நாலணா. இவ்விதழ் பத்து இதழ்களே வெளி வந்தன.

1957- ‘அமுதசுரபி’ மாத இதழில் ‘அன்பு அலறுகிறது’ என்னும் பெயரில் தொடர்கதை எழுதினார் அக்கதை தன்னுடைய ‘சிநேகிதி’ நாவலலைத் தழுவியிருப்பதாக- விமர்சனம் செய்வதாக எழுத்தாளர் அகிலன் விந்தன் பேரில் வழக்குத் தொடுத்தார்.

1959- புத்தகப் பூங்கா என்ற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்து தோழர் ஜெயகாந்தனின் ‘ஒரு பிடி சோறு’ என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்புதான் ஜெயகாந்தனை ஆனந்த விகடனுக்கு அடையாளம் காட்டியது

1960- ‘அமுதசுரபி’ இதழில் ‘மனிதன் மாறவில்லை’ என்னும் தொடர்கதையை எழுதினார் இதே ஆண்டில் சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்க எண்ணி மல்லிகா புரொடக்ஷன் என்னும் பெயரில் திரைப்படக் கம்பெனியைத் துவக்கினார்

1961- ‘கனவிலே வந்த கன்னி’ என்னும் தலைப்பில் ராணி வார இதழில் தொடர்கதை எழுதினார் இக்கதையே பின்னால் ‘காதலும் கல்யாணமும்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தபோது க.நா சுப்பிரமணியம் முன்னுரை எழுதினார்.
கண்ணதாசன் நாடகமாக்க விரும்பினார். பின்னால் இக்கதை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1964- ஜூலை திங்கள் 15ஆம் நாள் ‘பாலும் பாவையும்’ நாவல் மு. பரமசிவம் அவர்களால் நாடகமாக்கப்பட்டு சென்னை இராஜ அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றப்பட்டது.

1967- டிசம்பர் திங்கள் 17ஆம் நாள் சென்னை வானொலியிலும், அனைத்து இந்திய மொழிகளிலும் ‘பாலும் பாவையும்’ நாவல் நாடகமாக ஒலிபரப்பப்பட்டது. அதே ஆண்டில் விந்தன் ‘தினமணி’ கதிர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

1974- ‘கதிர்’ பத்திரிகையில் சில சோதனைகளுக்கிடையே இலக்கியப் பணியாற்றி வந்தவர் ஒருநாள் எதிர்பாராமல் ஓய்வு பெற்றார்.

1975- ‘வாழ்ந்தாலும் லோ சர்க்கிளோடு வாழ்வேன்; செத்தாலும் லோ சர்க்கிளோடு சாவேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் தமது குடும்பத்துக்கு தம் படைப்புகளையே சொத்தாக்கி விட்டு ஜூன் திங்கள் 30ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மார்புவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

விந்தன் வாழ்ந்த ஆண்டுகள் ஐம்பத்தொன்பதற்கு எண்பத்திரெண்டு நாள்கள் குறைவாகும்.

விந்தன் படைப்புகள்: சிறுகதைகள் முல்லைக்கொடியாள் (தமிழ் வளர்ச்சி கழகத்தின் முதல் பரிசு பெற்ற நூல்), ஒரே உரிமை, சமுதாய விரோதி, விந்தன் கதைகள், இரண்டு ரூபாய், ஏமாந்துதான் கொடுப்பீர்களா?, நாளை நம்முடையது, இதோ ஒரு மக்கள் பிரதிநிதி, நவீன விக்கிரமாதித்தன்

நாவல்கள்: கண்திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம், தெருவிளக்கு (நிறைவு பெறவில்லை),

வரலாறுகள்: எம்.கே. டி. பாகதர் கதை, சிறைச்சாலை சிந்தனைகள் (நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு),

கவிதை: பாட்டினில் பாரதம்

புடைநூல்: டசிகோவிந்தம்

குட்டிக் கதைகள்: மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இன்னும் சில கதைகள் விரைவில் வெளிவரும்

புதிய சிந்தனை: ஒ. மனிதா, புதிய ஆத்திச்சூடி – பெரியார் அடிச்சுவட்டில்

கட்டுரைகள்: வேலை நிறுத்தம் ஏன்?, விந்தன் கட்டுரைகள் (விரைவில் பல கட்டுரைகள் நூலாக வெளிவர உள்ளன.)

திரைப்படங்கள்: வாழப்பிறந்தவள். வசனம் , அன்பு கதை-வசனம் – சில பாடல்கள், கூண்டுக்கிளி – கதை வசனம் – சில பாடல்கள், கல்கியின் பார்த்திபன் கனவு – வசனம், குழந்தைகள் கண்ட குடியரசு – வசனம், சொல்லு தம்பி சொல்லு – வசனம் , மணமாலை – வசனம், குலேபகாவலி சில பாடல்கள்.

1962- ‘முன்னணி’ மாத இதழில் ஏமாந்துதான் கொடுப்பீர்களா? என்று ஒரு சிறுகதையை விந்தன் எழுதிய போது இக்கதையைக் கவிஞர்

முன்னுரை – மு. வரதராசன்

‘பொழுது’ என்ற ஒன்று இருப்பதை என்றைக்கு மனிதன் தெரிந்து கொண்டானோ, அன்றைக்கே பொழுது போக்கும் வழிகளையும் தெரிந்து கொண்டான். கலை என்று சொல்லப் படுகின்றவையெல்லாம் முதலில் பொழுது போக்குக்காகத் தோன்றியவைகளே. கலைகளில் சிறந்த கதையும் இப்படித் தோன்றியதே. கதை சொல்லிக் குழந்தையைத் தூங்கவைக்கும் தாயார், கதை சொல்லிக் குழந்தையின் மனத்தைத் திருத்தி வாழ்க்கையைப் பண்படுத்தவும் முயல்வதுபோல், பொழுது போக்குக்காகத் தோன்றிய கலைகளையே வாழ்க்கைப் பண்பாட்டுக்காகவும் சான்றோர் கையாளத் தொடங்கினார்கள். அது முதற்கொண்டே, புற்றீசல் போல் பொழுது போக்குக்காகத் தோன்றிய கலைகள், விண்மீன்கள் போல் அழியாத வாழ்வு பெறலாயின. கல்லிலும் சொல்லிலும் பிறவற்றிலும் நிலைத்து நின்று தலைமுறை தலைமுறையாக நூற்றாண்டு நூற்றாண்டாக வாழ்வு பெற்றன.

சொல் வடிவாக வாழும் கலைகளுக்குத் தனிப்பட்ட பெரிய ஆற்றல் உண்டு. வாழ்வுக்காகக் கொண்ட வில்லையும், வாழ்க்கைப் பண்பாட்டுக்காகக் கொண்ட சொல்லையும் ஒப்பிட்டுத் திருவள்ளுவர் ஒரு சிறந்த உண்மையை உணர்த்துகிறார். வில்லைக் கருவியாகக் கொண்டவர்கள் பகையானாலும் கவலை இல்லை; சொல்லைக் கருவியாகக் கொண்டவர்களின் பகை பொல்லாதது என்கிறார்.

“வில்லேருழவர் பகைகொளினும், கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.”

என்று அறிவுரை கூறுகிறார். இந்த அறிவுரை அரசனுக்குக் கூறப்பட்டது என்று விட்டுவிடக் கூடாது. அரசன் என்று ஒருவன் இல்லாத குடியரசு முறைக்கும் இந்த அறிவுரை பொருந்தும். சமூகம் என்ற அமைப்புக்கும் இந்த அறிவுரை பொருத்தமுடையதே. கவிதையாலும் கதையாலும் கலைத்தொண்டு செய்யும் சொல்லாளரின் – எழுத்தாளரின் – பகையைக் கொண்ட அரசன் அழிவது போலவே, அவர்களின் பகையைத் தேடிக் கொண்ட சமூக அமைப்பும் அழியும். இன்றுள்ள சமூக அமைப்பு நீடிக்காது, விரைவில் மாறிவிடும் என்பதற்குச் சோதிடம் கேட்க வேண்டியதில்லை;

சொல்லேருழவராகிய இன்றைய தமிழ் எழுத்தாளரின் கவிதைகளையும் கதைகளையும் படித்தால் போதும். “திருவள்ளுவரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்தாத சமூக அமைப்பே நீ நிலைகுலைந்து அழியப் போகிறாயே!” என்று இரக்கம் பிறக்கிறது.

“விந்தன்” எய்யும் சொல்லம்புகள் குறிதவறாமல் பாய்கின்றன. சமூகத்தை அவர் சிற்சில இடங்களில் தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக் காட்டி, பேசாமல் கதை சொல்கிறார். அவர் படைக்கும் பாத்திரங்களும் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதே இல்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது; நாயோடு போட்டி போட்டுப் பிழைக்கும் சோலையப்பன், மாம்பழம் விற்று வயிறு வளர்க்கும் அம்மாயி, விளக்கெண்ணெய் வியாபாரம் செய்யாத நாடார் கடை மாணிக்கம் பிள்ளை – இவர்களுடைய மனங்கள் எல்லாம் அமைதியான நல்ல மனங்கள். ஆனால் அவர்களைப் பற்றிப் படிக்கும் மனங்கள் புரட்சி மனங்களாக மாறுகின்றன.

சில இடங்களில் ஆசிரியர் கையாளும் உவமைகளும் சமூகக் கேட்டுக்குக் காரணமானவர்களை வம்புக்கு இழுப்பதைப் பாருங்கள்.

தோதலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்து விட்டவர்களைப்போல் “போடா, போ!” என்று எரிச்சலுடன் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் சங்கர்.

அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது – சூரியனைக் கண்ட தாமரையைப்போல் அல்ல. சோற்றைக் கண்ட ஏழையைப் போல.

அவர் தம்முடைய காரியங்களையெல்லாம் முடித்துக் கொண்டு நைவேத்தியத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கல்லுப் பிள்ளையாரைப் போல் உட்கார்ந்திருப்பார்.

ஆசிரியரின் கதைகளில் கறவை மாடு குடும்பத்துக்குக் ‘கார்டியன்’ ஆகிறது; கிளி ‘கைது’ செய்யப்படுகிறது; குப்பைத் தொட்டிக்கும் வேலைக்காரியின் வயிற்றுக்கும் உள்ள வேற்றுமை மறைந்து போகிறது; சந்தர்ப்பங்களைத் தானே ஏற்படுத்திக் கொள்வதில் தமிழ் நாட்டு மாமியார் நெப்போலியனுக்கு நிகர் ஆகிறாள்; வாழ்வதற்காகப் பிரார்த்தனை செய்வதை விடச் சாவதற்குப் பிரார்த்தனை செய்வது கட்டாயமாகிறது; கூடைக்காரியாக வியாபாரம் செய்கிறவள் அரிச்சந்திரனைப் பின்பற்ற விரும்பித் தோல்வி அடைந்த பின் புதிய வழி காண்கிறாள்.

பொருளாதார ஏற்றத் தாழ்வு என்ன என்ன தீமை செய்கிறது என்பதை ஆசிரியர் பல இடங்களில் படம் பிடித்துக் காட்டுகிறார். குழந்தைகளின் வாழ்க்கை முதல் காதலர்களின் வாழ்க்கை வரையில் எல்லோருடைய வாழ்க்கையையும் பொருளாதார நிலைமை எப்படி எப்படி ஆட்டிவைக்கிறது என்பதை அவருடைய கதைகள் தெளிவாக்குகின்றன. காதல் எதன்மேல், எதுவரையில் என்றெல்லாம் கதைகள் விளக்குகின்றன. கவிதையிலே காவியத்திலே கதைகளிலே சாகாத காதல் வாழ்க்கையிலே பணப் போரில் சாவதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவது போற்றத்தக்கது. வாழ்க்கையில் உள்ள இத்தகைய உண்மைகளை மறைப்பது குற்றம் என்று ஆசிரியர் உணர்ந்து எழுதுவதற்காக, உலகம் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

இப்படிப்பட்ட சிறந்த கதைகளைத் தெளிவான எளிய தமிழில் உணர்ச்சி வேகத்துடன் எழுதிக் கலைத்தொண்டு புரியும் “விந்தன்” முயற்சி மேன்மேலும் வளரவேண்டும். அவர் ஓயாமல் படித்துவரும் இந்த ‘உலகம்’ என்னும் புத்தகம் நாள்தோறும் புதிய புதிய உண்மைகளை அவருக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.

சென்னை
2-1–50

முன்னுரை – ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி

இந்தப் புத்தகத்திலடங்கிய சிறுகதைகளை ஏற்கெனவே அவை பத்திரிகையில் வெளியான காலத்தில் அவ்வப்போது நான் படித்திருக்கிறேன்.

முன்னுரை எழுதும் அவசியத்தை முன்னிட்டு இப்போது இன்னும் பல தடவை படிக்கலாமென்று எண்ணினேன். ஆனால், அதற்கு யோசனைகளும் புனராலோசனைகளும் செய்து பெரிதும் தயங்கினேன்.

‘விந்தன்’ கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு எப்போதும் மனதிலே பயம் உண்டாகும். படித்தால், மனதிலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான் பயம்!

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு ஜாதியரைப் பற்றியே வந்து கொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாயிருந்தபடியால் அந்தச் சாதியாரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ்நடை பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது.

மற்ற சாதிக்காரர்களில் அதிகமானபோது பிராமணக் கதை, பிராமணத் தமிழ் ஆகியவற்றைக் குறித்து வாசகர்களிடையே புகார்கள் எழுந்தன.

இதன்பேரில், மற்ற சாதியாரைப் பற்றிய கதைகள் பல வரத் தொடங்கின. பிராமண எழுத்தாளர் கஷ்டப்பட்டு வேறு சாதியாரைப் பற்றிக் கதைகள் எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை உடை பாவனைகள் அவ்வளவு சரியாயிருப்பதில்லை. மிகச்சிரமம் எடுத்துக் கவனித்து எழுதினாலும் சில சமயம் ‘ராபணா’ என்று குட்டை உடைக்கும்படியான தவறுகள் நேர்ந்துவிடும்.

இன்னொரு அபாயமும் அதில் ஏற்படுவதாயிற்று.

கதை என்றால், அதில் நல்ல பாத்திரங்களும் வருவார்கள், துஷ்ட பாத்திரங்களும் வருவார்கள். பிராமணர்களைப் பற்றி யார் என்ன எழுதினாலும் அதைப் பற்றிச் சாதாரணமாக ஆட்சேபம் ஏற்படுவதில்லை. அவர்களை என்னபாடு படுத்தி எப்படி வதைத்து எடுத்தாலும் கேள்வி முறையிராது. ஒரு பிராமண கதாபாத்திரத்தைத் தலை மொட்டை யடித்துக் கழுதை மேலேற்றி வைத்து ஊர்வலம் விட்டால், கதை படிப்பவர்களில் சிலர் அருவருப்படைவார்கள்; சிலர் சிரிப்பார்கள்; ஆனால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள்.

ஆனால், ஒரு செங்குந்தரையோ, ஒரு வன்னிய குலத்தாரையோ, ஒரு கவுண்டரையோ, ஒரு விசுவ குலத்தாரையோ, ஒரு ஹரிஜன சகோதரரையோ கதையில் பொல்லாதவனாகச் செய்திருந்தாலும், பரிகாசம் செய்திருந்தாலும் வந்தது மோசம்; அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் கதையைப் படிக்க நேர்ந்து விட்டால் ஆசிரியரோடு துவந்த யுத்தம் செய்ய வந்து விடுவார்கள்.

இதன் காரணமாக மற்ற சாதிகளைச்சேர்ந்த எழுத்தாளர்கள்கூடத் தத்தம் சமூகக் குடும்ப வாழ்க்கைகளைப் பற்றிக் கதை எழுதத் தயங்கிப் பிராமண தமிழில் பிராமணக் குடும்பங்களைப் பற்றிய கதைகளை எழுதினார்கள்.

அதெல்லாம் ஒரு காலம். அந்தக் காலம் போய் தமிழ் நாட்டு இலக்கிய உலகத்தில் சாதிப் பிரச்சனை ஒருவாறு தொலைந்தது. எந்தச் சாதியாரையும் பற்றிப் பயமில்லாமல் கதை எழுதலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் நவயுக மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷியக் கதைகளையும், மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிக் கதை எழுதத் தொடங்கினார்கள்.

மிராசுதார்களையும், தாசில்தார்களையும், ஐ.சி.எஸ் காரர்களையும், வக்கீல்மார்களையும் கைவிட்டுவிட்டு, ஏழைக் குடியானவனையும், ஆலைத் தொழிலாளியையும், ரிக்ஷா வண்டிக்காரனையும், சுமைகூலிக்காரனையும் பற்றிக் கதை எழுதத் தொடங்கினார்கள். ஆனால், எவ்வளவுதான் அநுதாபத்துடனும் இலக்கியப் பண்புடனும் எழுதினாலும் அந்தக் கதைகள் கதை என்ற முறையில் நன்றாயிருக்குமே தவிர, அவற்றின் உண்மை ஒளி தோன்றுவதில்லை.

பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் தோய்த்துக்கொண்டு எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலட்சணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியான இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை.

அப்படிப்பட்ட உண்மை ஒளிவீசும் சிறுகதைகளை எழுதுவதற்கு ஏழை எளியவர்களிடையேயிருந்தும், உழைப்பாளி மக்களிடையே யிருந்தும் ஆசிரியர்கள் தோன்ற வேண்டும்; அவர்களுடைய எழுத்தில் இலக்கியப் பண்பும் பொருந்தியிருக்க வேண்டும்.

மேற்கூறிய இலட்சணங்கள் பொருந்திய கதை ஆசிரியர்களில் ஒருவர் ஸ்ரீ வி. கோவிந்தன்; உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகளின் சுகதுக்கங்களை இதயம் ஒன்றி அநுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர்.

அந்த உணர்ச்சிகளை உயிருள்ள தமிழ்நடையில் சித்திரித்து இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றை அவர் திறம்பட எழுதியிருக்கிறார்.

ஏழை எளியவர்களின் வாழ்க்கையிலுள்ள சுகசந்தோஷங்களைப் பற்றியும் அவர் எழுதுகிறார்; அவர்களுடைய துன்பவேதனைகளைப் பற்றியும் எழுதுகிறார்.

ஆனால், படிப்பவர்களின் உள்ளத்தில் துன்பமும். வேதனையும்தான் அதிகமாக நிலைபெற்று உறுத்திக் கொண்டிருக்கும்.

அவருடைய கதா பாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணித் துக்கமில்லாமல் தவிக்க நேரும்.

அவ்விதம் வாசகர்களின் மன அமைதியைக் குலைக்கக் கூடிய இயல்பு வாய்ந்த கதைகள்தான் உண்மையான இலக்கியம் என்று தற்காலத்து இலட்சிய புருஷர்களும் இலக்கிய மேதாவிகளும் சொல்கிறார்கள்.

இது உண்மையானால் “விந்த”னுடைய சிறுகதைகள் உண்மையான இலக்கியம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

“விந்தன்” கையாளும் தமிழ்நடை மிகவும் எளிமையான நடை; ஆனால் பெரிதும் சக்தி வாய்ந்த நடை.

பொருள் விளங்காத பழைய சங்கத் தமிழ்ச் சொற்களையோ பொருள் இல்லாத புதிய மறுமலர்ச்சிச் சொற்களையோ உபயோகித்து அவர் வாசகர்களைத் துன்புறுத்துவதில்லை. வரிக்கு வரி, வாக்கியத்துக்கு வாக்கியம் எதுகை மோனைகளைப் போட்டு நம்மைத் திணற அடிப்பதில்லை. ‘பேச்சுத் தமிழ்’ என்ற பெயரால் படிக்க முடியாத கொச்சைத் தமிழைக் கையாண்டு நம்மைக் கொல்லுவதுமில்லை.

தாம் எழுதுவது படிப்பவர்களுக்கு விளங்கவேண்டுமென்னும் நோக்கத்தையே பிரதானமாகக் கொண்டு நடுநிலைமையான பேச்சுத் தமிழ் நடையைக் கையாளுகிறார்.

மனிதனுக்கு மனிதன் செய்யும் அநீதியையும் கொடுமையையும் எடுத்துக்காட்டும்போது, “விந்த”னுடைய தமிழ் நடையின் சக்தி உச்ச நிலையை அடைகிறது.

உதாரணமாக இதைப் பாருங்கள்:

செட்டியார் கடைக்கு வந்து இறங்கும் அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை முதலியவைகளை யெல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடைக்குள் அடுக்குவான். மூட்டைக்குக் காலணா வீதம், எந்தக் காலமாயிருந்தாலும் சரிதான்; சமாதான காலமாயிருந்தாலும் சரிதான் – எண்ணிக் கொடுத்துவிடுவார் செட்டியார். ஆனால், என்றைக்காவது ஒருநாள் சின்னசாமி அறுபத்து நாலு மூட்டைகளுக்குமேல் தூக்கி அடுக்கிவிட்டு, ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்க வந்துவிட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டு கண்ணீர் கீழே விழும்.

இந்தத் துக்க நிவர்த்திக்காக, அவன் கூலியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம உண்டிக்கென்று செட்டியார் இரண்டணாவைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வார். ‘இகலோகத்தில், தான் அவன் தன்னுடன் சமத்துவமாக வாழாவிட்டாலும், பரலோகத்திலாவது வாழட்டுமே!’ என்பது செட்டியாரின் பரந்த நோக்கம்!

செட்டியாருக்குக் கண்ணீர் வருகிறது; நமக்கோ கோபம் கோபமாய் வருகிறது; ஆத்திரம் பொங்கி வருகிறது.

“விந்தன்” கதைகளைத் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றுப் படித்து மேலும் மேலும் கோபமும் ஆத்திரமும் அடைவார்க ளென்றும், அதன் பலனாகச் சமூகத்திலுள்ள அநீதிகளையும் கொடுமைகளையும் ஒழிக்க ஊக்கங் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *