பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார். எனவே இவரது கதைகளை படிக்கும் போது, நம் இயல்பு வாழ்க்கையில் எதிர் படும் மனிதர்களையே அதிகம் காணமுடியும். அந்த அனுபவங்களை மறுபடி உணரமுடியும்.
தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றிக் கொண்டு, இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வரும் இவர், வளர்ந்து வரும் முன்னணி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். 2007 விகடன் தீபாவளி மலரில் இவர் எழுதிய 12 ஒரு பக்க கதைகள் ‘நட்சத்திர கதைகளாக’ வெளியானதும், 2008ல் திலமலர்-வாரமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சொந்த ஊர் : மெலட்டூர்
படித்த பள்ளிகள் : அரசினர் உயர் நிலைப் பள்ளி, மெலட்டூர்; தூய பேதுரு உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் கல்லூரி : புஷ்பம் கல்லூரி, பூண்டி;
வேலை பார்த்த ஊர்கள்: மும்பை, குவஹாட்டி, சென்னை
மெலட்டூர் இரா நடராஜன், இந்தியா
mrn62@rediffmail.com
என்னுரை – மெலட்டூர் இரா நடராஜன்
ஒரு எழுத்தாளனின் ஒவ்வொரு ஆக்கமும் கிட்டத்தட்ட பிரசவம் மாதிரிதான். அவன் மூளையில் மின்னலென கதையின் கரு உதயமாகிவிட, அதன் பிறகு அவன் படும் அவஸ்தைகள் ஏராளம். விறுவிறுப்பான தொடக்க வார்த்தைகள், தெளிந்த நீரோடை மாதிரி வளைந்து நெளிந்து செல்லும் மையப்பகுதி, நெத்தியடியான கடைசி வாக்கியம் என்று அவனுக்குள் எண்ணங்கள் கூழாங்கற்களை போல உருண்டு கொண்டே இருக்கும். எல்லாம் சரியாக அமைந்துவிட்ட வேளையில் அது எழுத்து வடிவம் பெற்றுவிடும். அதை அவன் வாசகர்கள் பாராட்டிச் சொல்லும்போது ஒரு தாயைப்போல அவன் மகிழ்ந்து போகிறான்.
எனது ஒவ்வொரு கதையையும் என் கைபிடித்து நடந்து வரும் குழந்தையாகவே பாவிக்கிறேன்.
என் கல்லூரி காலத்தில் (1982) எனது முதல் பிரசவம் நிகழ்ந்தது. என் அன்பிற்குறிய தமிழ் பேராசிரியர் திரு மெய்ப்பொருள்தான் எனக்கு வழிகாட்டினார்.
1995ல் ‘இதயம் பேசுகிறது’ வார இதழில் இரண்டு கதைகள் வந்தன. கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு கல்கியிலும், குங்குமத்திலும் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போது குங்குமத்தில் பொறுப்பாசிரியராக இருந்த கவிஞர் சுகுமாரன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக மீண்டும் கதைகள் பக்கம் திரும்பினேன். குங்குமத்தில் ஒரு சில கதைகள் வெளிவந்தன.
அதன் பிறகு எழுத்தை ஏறகட்டிவிட்டு மேடை நாடகத்தில் என்னை ஈடுபத்திக் கொண்டேன். அந்த சமயத்தில் திரு சுஜாதா அவர்களை ஏதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. வார இதழ்கள் மீது எனக்குள்ள கோபத்தை கொட்டினேன்.
அப்போது அவர் ஒரு சில டிப்ஸ் கொடுத்தார். அது எனக்கு வேதமாகவே தோன்றியது.
“நடராஜன், ஒரு பத்திரிக்கை உங்கள் கதையை திருப்பியனுப்பிவிட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன மாதிரி எதிர்பார்க்கிறார்கள் என்பதை நுட்பமாக கவனியுங்கள். அதற்கு ஏற்றமாதிரி உங்கள் கதைகளை அமையுங்கள். சோம்பல் படாமல் அடித்து, திருத்தி, மாற்றியமையுங்கள். உங்கள் சிந்தனை முற்றிலும் புதிய கோணத்தில், வித்தியாசமான களன்களில் இருந்தால் நல்லது. பளிச்சென்று தொடங்குங்கள். தொய்வில்லாமல் விறுவிறுவென சொல்லுங்கள். முடிவை வாசகன் நெருங்கும் போது ‘அட’ என்று அவன் வியக்கும்படி செய்ய வேண்டும். அதுதான் உங்கள் வெற்றி” என்றார்.
மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு கல்கியின் கதவு திறந்தது. அதை தொடர்ந்து, விகடனிலும் எனது கதைகள் வெளிவர ஆரம்பித்ததும் எனக்குள் புது ரத்தம் பாய்ந்த மாதிரி உணர்ந்தேன்.
எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஒரு சில நகைச்சுவை கதைகளும் எழுதினேன். கால மாற்றத்துக்கு ஏற்றாற் போல் எனது படைப்புகளை இணையதளங்களிலும் பதிக்க ஆரம்பித்தேன். உலகளாவிய வாசகர் வட்டம் எனக்கு கிடைத்தது.
நான் சாதிப்பின் ஆரம்பக் கட்டங்களில் இருக்கிறேன். இன்னும் போக வேண்டியது வெகு தூரம். இன்றைய சூழலில், ஒரு சிறுகதை எழுத்தாளனாக உருபெற எவ்வளவு கடின முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது என்பதை பதிவு செய்ய விரும்பியே எனது சுய விமர்சனம் அமைந்துள்ளது.
எனது எழுத்துக்களுக்கு மேடையமைத்து கொடுத்து வரும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும், உந்து சக்தியாக இருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
அணிந்துரை – பாக்கியம் ராமசாமி
நான் வியந்த பல எழுத்தாளர்களில் மெலட்டூர் நடராஜனும் ஒருவர். இப்பவும் காலேஜ் படித்துக்கொண்டிக்கும் ஜாலி மாணவன் போன்ற தோற்றம் கொண்டவர். ஆனால் அவரது நட்பு வட்டம், இலக்கிய வட்டம், தத்துவ வட்டம் ரொம்ப பெரியது. அவர் எங்கள் ‘அக்கறை’ கூட்டத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். சென்னைவாசியாக இருந்தவரையில் தவறாது ‘அக்கறை’ கூட்டத்தில் கலந்து கொள்வார். தூத்துக்குடியில் தற்போது வேலை நிமித்தமாக வசித்து வந்தாலும் அவ்வப்போது திடீர் தீடீரென ‘அக்கறையுடன்’ தலை காட்டுவார். தகவல் களஞ்சியமாக, அனுபவப் பெட்டகமாகப் பல நாட்டு நடப்பு விஷயங்களைக் கூறுவார். அந்தச் செய்திகளைப் பத்திரிகையில் படித்துவிட முடியாது. பின்னணிகளும் inside information களும் சுவையான திகைப்புகளாக மலரும்.
அஸ்ஸாமில் போலிங் பூத் ஆபீசராக இருந்த போது, நடந்த திகில் அனுபவங்களை சொல்லி, எப்படி நம் மின்னனு வாக்கு இயந்திரம் மிக சிறப்பானது என்று விளக்கி சொல்வார். படித்தது, பார்த்தது, கேட்டது என்று அவரின் பேச்சு ஒரு பத்திரிக்கையாளனின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கும்
இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அத்தனையையுமே தமது அனுபவங்களால் பின்னியிருக்கிறார். எல்லாக் கதைகளிலுமே அவரது சொடுக்கு நடையைக் காணலாம். விறுவிறுப்பும் சிறுகதைக் களத்துக்கான கச்சிதமும் சகல கதைகளிலும் இருப்பதால் தனியன்கள் சாத்தியமில்லை. ஆழ்ந்த தத்துவங்களை அனாயாசமாக மனத்தில் பதிய வைக்கிறார்.
சுஜாதாவை வழிபட்டு வழிபட்டு அரை சுஜாதாவாக ஆகிவிட்டார். பத்திரிகாசிரியர்கள் வழி வகுத்துத் தந்தால் குறைந்த பட்சம் ‘முக்கால் சுஜாதாவாக முற்றுவதற்கு’ வாய்ப்பு உண்டு.
என்றைக்கும் உங்கள் பிரியத்துக்கு உரிய,
பாக்கியம் ராமசாமி