நா.பார்த்தசாரதி

 

‘நா. பா’ என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ‘பண்டிதர்’ பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர்.

இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல குறு நாவல், நெடுங்கதைகளையும் படைத்தார். கவிதை, கட்டுரை, பயண நூல், நாடகம், இலக்கணம் என்று பல துறைப் படைப்புக் களில் முத்திரை பதித்தார். மணிவண்ணன், பொன்முடி, வளவன், கூடலழகன், இளம் பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்று பல புனை பெயர்களில் எழுதியவர்.

பள்ளியாசிரியர், மதுரைத் தமிழ்ச் சங்கப் பணி, ‘தீபம்’, தினமணிக்கதிர் ஆசிரியப் பணி, ‘கல்கி’ துணையாசிரியப் பணி என்று இவர் எழுத்தையும், பேச்சையும் தம் வாழ்வாகக் கொண்டார். சாகித்ய அகாதமி விருது (சமுதாய வீதி) ராஜா சர் அண்ணாமலை இலக்கியப் பரிசு (துளசி மாடம்) தமிழ்நாடு அரசின் பரிசு (சாயங்கால மேகங்கள்) ஆகியவற்றைப் பெற்றார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்பு வகித்தார். சாகித்ய அகாதமி கமிட்டி உறுப்பினராகவும், திரைப்பட நிதிக் குழுமத்தின் உறுப்பினராகவும், தேசிய திரைப்பட பரிசுத் தேர்வுக்குழு நடுவராகவும் பணியாற்றினார்.

1976ல் இந்திய அரசின் கலாசாரத் தூதராக, சோவியத் யூனியன், போலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ரோம், எகிப்து, குவைத் நாடுகளுக்குப் பயணம் சென்றார். சிங்கப்பூர், இலங்கைக்கும் பலமுறை சென்று வந்தார். மலேயாவில் நடந்த 6வது உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்றுப் பயணம் மேற்கொண்டு உடல் நலம் குன்றினார்.

இவர் உலகின் முக்கியமான தமிழ் வானொலிகள் அனைத்திலும் உரையாற்றிய தோடு இந்தியாவெங்கும் சொற்பொழிவாற்றியுள்ளார். இவரது பல படைப்புக்கள் வானொலி, தொலைக்காட்சிகளிலும் வெளிவந்துள்ளன. ‘ ஆங்கிலம், இந்தி, உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன.

பல அரசியல் கட்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் தேசிய அரசியலில் நாட்டம் கொண்டவரிவர். இவரது படைப்புக்கள் குறித்துப் பலர் ஆய்வுகள் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

நா. பா தமது ‘தீபம்’ இதழை தமிழகத்தில் நடுநிலையான இலக்கிய இதழாகத் திகழச் செய்து பல படைப்பாளிகளை அறிமுகம் செய்ததோடு பல் நோக்கு இலக்கியப் போக்குகளுக்கும் சிறந்த மேடையமைத்துத் தந்தார்.

– நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (முதல் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *